வருகிற பொங்கலன்று அயல் நாட்டில் தொழிற் பயிற்சி பெற்ற மகனிடமும் மருமகளிடமும் கம்பெனிப் பொறுப்பை கொடுத்துவிட தீர்மானித்துவிட்டார் தொழிலதிபர் மோகனசுந்தரம்.
தென்னகத்திலேயே சிறந்த ‘ஆர்க்கிடெக்ட்’டை வரவழைத்து பழைய மோஸ்த்தரில் இருந்த வீட்டை ‘மாடர்ன்’ ஆக்கும் பணி விறுவிறுப்பாய் நடந்துகொண்டிருந்தது.
வீட்டின் முன் பகுதியில் இருந்த வேம்பு, பன்னீர், விருட்சி, இருவாட்சி, மல்லிகை, முல்லை என்ற வழக்கமான மரங்கள் கொடிகள் எல்லாம் இருந்த இடத்தை போன்சாய் ரகத் தாவரங்களால் நிறைத்தார்.
தாத்தா காலத்திலிருந்து இருந்து வந்த தேக்கு, பூவரசிலும் கிழங்கு போல் செய்யப்பட்ட மேசை நாற்காலிகள் எல்லாம் அகற்றப்பட்டு, மரீன் ப்ளைவுட் பலகையால் வீட்டின் அலுவலக அறையை அலங்கரித்தார்.
அவர் சொன்ன அந்த இளைஞன் ‘வாட்ச் மேன்’க் கான சீருடையில் வந்து மோகன சுந்தரத்தின் முன் வந்து வணக்கம் சொல்லி நின்றான்.
“வா..என்னோட வா”
அந்த இளைஞன் அவரைத் தொடர்ந்தான்.
“அருணாசலம்…அருணாசலம்…” என அவுட் ஹவுஸ் முன்னே நின்று அழைத்தார்.
“வந்துட்டேங்கய்யா…” என்று தீனமாகக் குரல் கொடுத்தபடியே வெளியே வந்தார் 70 வயது அருணாச்சலம்.
“இவர் இன்று முதல் வாட்ச்மேன் வேலைக்கு வருவார். நீங்க இனி வரவேண்டாம். உங்க கணக்கு செட்டில் பண்ணி உங்க அக்கவுண்டுக்கு அனுப்பிட்டேன். இன்னிக்கோ, நாளைக்கோ எப்ப வேணாக் கிளம்பலாம்.” என்றார்.
நான்கு தலைமுறையாக அந்த வீட்டில் வேலை பார்த்த அருணாச்சலம் தன் ஒரே கைப் பையுடன் புகலிடம் தேடி முதியோர் இல்லம் நோக்கி நடந்தார்.
வரவேற்பறையில் ஆளே இல்லாமல் டிவி ஓடிக்கொண்டிருந்த தொலைக் காட்சியில்; பண்டிதர் புலவேந்திரனார் “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல…!” என்று இலக்கியச் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார்.
அயல் நாட்டிலிருந்து மகன் செய்த ஃபோனுக்கு மாடி பால்கனியில் நின்றபடி “அப்பா பொங்க வேலைல பிசியா இருக்காரு.. பிறகு பேசுவாரு..!” என்று சொல்லிக் கொண்டிருந்தாள் அம்மா.
(கதிர்ஸ் – ஜனவரி 16 – 31, 2022)