பைத்தியம் மீண்டும் பைத்தியம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 29, 2024
பார்வையிட்டோர்: 645 
 
 

(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“ஏங்க எப்பப்பபார்த்தாலும் வீட்டிலேயே அடைஞ்சி கிடக்கிறீங்களே! என் ஆபீஸ் பிரண்ட், அவுங்க குடும்பம், அவுங்களுக்கு வேண்டியவங் கள்ளாம் யூரோப் டூர் போறாங்களாம். மொத்தம் நாப்பது பேர். பேக்கேஜூக்கு ஆயிரம் வெள்ளிதானாம். என்னையும் கூப்பிட்டாங்க. ஏழு நாளாம்.”

“இப்ப என்னை என்ன செய்யச் சொல்றே!”

“நீங்களும் வாங்க போயிட்டு வருவோம்” வரமாட்டான் என்பது அவளுக்குத் தெரிந்த ஒன்றுதானே.

“அம்மாடியோ… ஏழு நாளா? நமக்குத் தாங்காதுப்பா… ஒரு புது கம்பெனி வரும்போல இருக்கு. ஒன் பை ஒன் ஆர்டர் வர்றப்ப விட்டுட்டு எப்படியம்மா வரமுடியும்? நீ வேணும்னா போயிட்டு வா. பணம் தர்றேன்.” இதைச் சொல்வார் என்றுதான் அவளுக்குத் தெரியுமே.

“சரி நீங்க சொல்லிட்டீங்க… இந்த மாதம் 29 தேதி புறப்படுறாங்களாம். போயிட்டு வந்துடுறேன்.” என்று சொல்லிவிட்டு அவள் அறைக்குள் சென்று விட்டாள்.

உமாவுக்குப் பிறந்தது ஒரே பெண். அவளைத் திருமணம் செய்து கொடுத்து இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. அதற்கிடையில் இரண்டு நாள்களுக்குச் சுற்றுப் பயணம் சென்று வந்துவிட்டாள். இப்போது போகப் போவது மூன்றாவது முறை. அவள் மட்டும் தான் தனியே இரண்டு முறையும் சென்று வந்தாள்.

கணவர் சங்கரன் ஓர் ஓவியர். அரிசியில், பருப்பில், கடுகில்கூட ஓவியம் வரையக்கூடிய கூர்மையான பார்வை உடையவர். அரிசியில், சிங்கப்பூர் தேசியக் கொடியை வரைந்து, அதிபர் அவர்களிடம் அளித்துப் புகைப்படம் எடுத்துத் தொலைக்காட்சி, தமிழ் முரசு எல்லாவற்றிலும் பிரசுரமாயின.

ஒருமுறை ஆர்சர்டு சாலை தக்காஷிமாயாவின் வெளியே உட்கார்ந்து கொண்டு தன்னை மனிதர்கள் உருவத்தை அரை மணிநேரத்தில் தத்ரூபமாக வரைந்துகொண்டிருந்தார் சங்கரன். அப்போது அங்கே உமா தன் தோழிகளுடன் வந்தாள். முதலில் உமாவே முன்வந்து தன்னை வரைந்து தரும்படி கேட்டாள்.

அவ்வளவு அழகாக எழுதியதை வாங்கிப் பார்த்து மலைத்துப் போய்விட்டாள். அந்தப் படத்தைக் கையில் வைத்துக் கொண்டாள். அதுவரை அவரைப் பார்த்த பார்வை சாதாரணமானது. ஆனால், வரைந்தவரின் திறமையைப் பாராட்டிகொண்டே புகழ்ந்து கொண்டே வந்தாள். உடனிருந்த தோழிகள் கிண்டலுடன் கேட்டார்கள்.

“உமா!… ராகேஷ்சர்மா… என்னாச்சுது அவன் அம்போதனா? கட்சி மாறிவிட்டாயா?”

“ஏய் அவன் சாதாரண கிளார்க்குதான் இவனோ கையிலே உன்னதமான கலையை வைத்திருப்பவன்டி. அப்போ இன்னொருவன் இவனைவிட ஒசத்தியா கிடைச்சா… இவனை விட்டுடுவியா?”

“சீ… போங்கடி…” என்றாள் உமா.

சங்கரன் எங்கிருக்கிறார் என்று தேடிப்பிடித்து விட்டாள். உமாவைத் திருமணம் செய்துகொள்ளச் சங்கரனின் ஒப்புதலைப் பெறப் பெற்றோர்களை அனுப்பி வைத்தாள்.

இப்படியாகக் திருமணம் நடந்த பின்பு சங்கரன் ‘நுண்கலை மட்டும் சோறு போடாது’ என்று நினைத்தார். ஒரு பெண் குழந்தைக்குத் தந்தையாகி விட்டதாலும், காலத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப, கணினியைக் கற்றார். அதில்,வியாபார நோக்கில், தேவையான பட மாதிரிகளை வரைதல் அச்சுக் கோத்தல், போன்ற புதிய தொழில் நுட்பத்தை யெல்லாம் கற்றார். ஓர் அறையை அலுவலகமாக்கி, அதற்கான அனைத்துத் தளவாடங்களையும் வாங்கி நிரப்பிவிட்டார்.

ஆண்டுகள் நகர நகரப் பெற்ற பெண்ணிடம் கொஞ்சுவதைவிட, அவளுடைய படிப்பில் காட்டுவதைவிடக் கணினியிலேயே அதிக அக்கறை காட்டி அதிலேயே மூழ்கிவிடுவார்.

உணவு உண்ணுதல், குறித்தலைச் செய்வதுகூடக் கணினிக்குப் பிறகுதான்.

தொழில் திறமை இருந்ததால், இவரைத் தேடி நிறைய வாய்ப்புகள் வந்தன. நிறையவும் சம்பாதித்தார். ஐந்தறை வீடு வாங்கினார்.

நல்ல அழகியான தன் மனைவி மீது மிகுந்த பிரியத்தை வைத்திருந்தார். ஆனால், நாளடைவில் தொழிலுக்கு முக்கியத்தும் கொடுத்து வந்ததனால், உமாவை; குழந்தையைக் கவனிப்பதில்லை; வீட்டு வேலைகளில் கவனம் செலுத்துவதில்லை என்கிற குற்றச்சாட்டுக்கு ஆளானார். உல்லாசம் பொழுது போக்கு, மகிழ்ச்சியாகச் சேர்ந்து வெளியில் செல்வது போன்றவைகளில் உள்ள ஈடுபாட்டைக் குறைத்துக் கொண்டார்.

உமா இதற்கு மாறான போக்கைக் கொண்டவள். அவளை மகிழ்விக்க இவர் எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், அப்படியொரு முயற்சியை எடுக்கவேண்டும் என்றே அவருக்குத் தோன்றவில்லை.

அதனால் சங்கரனை விட்டுவிட்டு உமா வெளியில் அடிக்கடி கிளம்பிவிடுவாள். அவர் அனுமதியைப் பெறுவது என்பது, அவரிடம் செலவுக்குரிய பணத்தைப் பெறுவதற்குத்தான். அவள் பெயரிலும் நிறைவான தொகையை வைப்புத் தொகையாக வங்கியில் வைத்திருந்தார்.

இப்படிக் கடந்த இருபத்திரண்டு ஆண்டுகள் வாழ்கையை நினைத்துக்கொண்டே ஐரோப்பியப் பயணத்தை உமா மேற்கொண்டாள்.

பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் சுற்றிப் பார்க்கும்போது, தோழிகளிடம் அவர்களுடன் வந்த ஆண்களிடம் எல்லாம் உமா சகஜமாகப் பேசிப் பழகினாள். நகைச்சுவையாகப் பேசுவாள். கிண்டல் கேலி செய்து கொண்டே வருவாள். அவள் அந்தப் பயணத் திலிருந்ததால் எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். வெளியில் புறப்பட ஆயத்தமானால், எல்லாரும் உமாவைத் தேட ஆரம்பித்து விடுவார்கள். அந்த அளவுக்கு எல்லாரையும் கவர்ந்தவளாகிவிட்டாள் ஐரோப்பிய நாடுகளை விட்டுப் புறப்பட மனமில்லாமல் பயணத்தை நிறைவு செய்துவிட்டுச் சிங்கப்பூருக்குப் புறப்பட்டாள்.

சங்கரனிடம் ஐரோப்பாவில் தான் பார்த்த நாடுகளைப் பற்றி யெல்லாம் விளக்கினாள் உமா.

அவள் ஆர்வத்துடன் சொல்வதைக் கேட்பதற்கு அவருக்கு நேரமும் இல்லை; ஆர்வமும் இல்லை. அவருக்குச் சளிக்காய்ச்சல் தொந்தரவு வேறு ‘சார்ஸ்நோய்’ பற்றிய விளம்பரங்கள் நிறைய வெளி வந்து சிங்கப்பூரையே உலுக்கிகொண்டிருந்தன. யாருக்காவது சளிக்காய்ச்சல் என்றால் உடனே மருத்துவரைப் பார்க்க வேண்டுமென்று அறிவுறுத்தப் பட்டது.

உமா தன் அலுவலகத்திலிருந்து தொலைபேசி வழி மருத்துவமனையுடன் தொடர்பு கொண்டு தெரிவித்துவிட்டாள்.

மின்னல் வேகத்தில் வந்து, சங்கரனை ‘தான் தோக் செங்’ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விட்டார்கள். ‘அறையிலேயே ஓய்வு எடுத்து வருகிறேன். எனக்கு நிறைய வேலையிருக்கிறது என்னை விட்டு விடுங்கள்” எனக் கேட்டுப் பயனில்லை.

இருபது நாள் சிகிச்சைக்குப் பின்பு அனுப்பி வைக்கப்பட்டார். அந்த இருபது நாள்களிலும், உமா மகிழ்ச்சியாகவே இருந்தாள். பயணம் சென்ற நண்பர்களிடம் தொலைபேசியில் பேசுவது; வீட்டுக்கு வரவழைப்பது; விருந்து வைப்பது என்று எந்தத் தடையும் இல்லாமல், கொண்டாடினாள். சங்கரன் இல்லாதது அவளுக்கு ஒரு வசதியாகப்பட்டது.

சிகிச்சை முடிந்து வீட்டுக்குச் சங்கர் திரும்பியவுடன்,

“உமா! நீ ஏன் எனக்கு சார்ஸுக்கு மருத்துவ மனைக்குப் போன் பண்ணினே? இடையிலே ஒருநாள் கூட என்னை வந்து பார்க்கலே… என்ன ஆச்சுது உனக்கு?”

“போன் செஞ்சி சொல்லலைன்னா, அது குற்றம்னு ஆபீஸ்லே எல்லாரும் சொன்னாங்க. அதனாலதான் போன் பண்ணினேன். இப்ப என்ன ஆயிட்டது. நல்லதுதானே… சார்ஸா இருந்தா எனக்கும் வரும்லே… உங்களால நானும் சாகணுமா?….

“ஏன் இப்படிப் பேசுறே. நான் பாட்டுக்கு ரூமிலேயே இருந்துகிட்டு என் வேலையெல் லாத்தையும் முடிச்சிருப்பேன்ல, அதுக்காகச் சொன்னேன். வரவர நீ எதுக்கும் கட்டுப்படறாப்பலே தெரியலை. ஒரு கணவன்கிற மரியாதையே இல்லாமப் போயிட்டு…”

மரியாதைக் குடுக்கிறதுக்கு முதல்லே நீங்க ஒரு கணவனா நடந்துக்கணும் என் பிரண்ட்ஸயெல்லாம் கணவன்களோட வந்தாங்க நீங்க என்கூட வந்தீங்களா? எனக்கு எப்படியிருந்திருக்கும்.”

“என்னடி சொல்றே? எனக்கு எவ்வளவு வேலைகள் கிடந்தது. அதை விட்டுட்டு ஒன்னோட ஊர் சுத்த முடியுமா? உனக்குத்தான் பைத்தியம் புடிச் சிருக்குன்னா என்னை என்ன செய்யச் சொல்றே… வெறும் சளிக்காய்ச்சலை சார்ஸ்ஸுன்னு சொல்லி மருத்துவமனையில் சேத்துட்டியே இது சரியான்னு கேட்டா என்னையும் சாகச் சொல்றீங்களான்னு கேட்கிறீயே? இதுக்கு என்ன அர்த்தம். உடன்கட்டை ஏர்ற கலாச்சாரம்டி நம்ம கலாச்சாரம்.”

“ஆமாம். ஆமாம்… கலாச்சாரம். காலத்துக்கு ஒத்துவராத கலாச்சாரத்தைக் கடல்ல கொண்டு போய்ப் போடுங்க. எம்.ஜி.ஆர். இறந்தவுடன் ஜெயலலிதா உடன்கட்டை ஏறணும்னுதான் நெனைச் சாங்களாம். அப்படி ஏறியிருந்தா இப்படியொரு யாருக்கும், எதுக்கும் பயப்படாத துணிச்சலான முதலமைச்சர் தமிழ்நாட்டுக்குக் கிடைத்திருப் பாங்களா?”

“ஆமாம். அப்படி அறிவில்லாத துணிச்சலால தான் நாலு இலட்சம் அரசாங்க ஊழியர்களையும், அவுங்க குடும்பங்களையும் நடுத்தெருவிலே நிக்க வச்சிருக்காங்க. அவளுக்கு அதிகாரப் பைத்தியம்”

“எல்லோருக்கும் பைத்தியம்தான். உங்களுக்கு அந்த ரூம் பைத்தியம், வேல பைத்தியம், எந்தப் பைத்தியம் ஜெயிக்குதுன்னு பார்ப்போம்.” என்று சொல்லிவிட்டுக் கோபமாக உமா தன் அறைக்குள் சென்று, கண்கள் சிவக்க உடல் விம்ம, கண்ணாடியின் முன் உட்கார்ந்து இவரைப் பழி வாங்கியே ஆகணும்” என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.

ஒருநாள், திடீரென்று, மருத்துவமனையைச் சேர்ந்த சிலர் வந்து, கதவைத் தட்டிச் சங்கரனை அழைத்தார்கள். “எதற்காக…” “சும்மா ஒரு செக்கப்தான்…. உடனே வந்துடலாம்” என்றார்கள்.

“மனைவி ஆபீஸ் போயிருக்கிறா. அவ வந்துடட்டுமே… அவகிட்ட சொல்லிக்காம்…”

“அவுங்க சொல்லித்தானே வந்திருக்கிறோம். ஒரு வாரமா சொல்லிக்கிட்டேயிருக்காங்க. எங்க பாஸ்தான் தயங்கிக்கிட்டேயிருந்தாங்க. பிரஷர் அதிகமானதுக்கப் புறம்தான் வந்திருக்கோம்.

“சரி புறப்படுங்க” என்று வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றார்கள்.

வித்தியாசமான மருத்துவமனையாக இருப்பதாக உணர்ந்தார். “ஓரியண்ட் தனியார் மனநல மருத்துவமனை ” பெயர்ப் பலகையைப் பார்த்தவுடன் சங்கரன் வியப்பும் அதிர்ச்சியும் அடைந்தார்.

“ஏங்க! எனக்குப் பைத்தியமா புடிச்சிருக்கு! ஏன் என்னை இங்கே கொண்டாந்தீங்க?” என்று சொல்லிக் கொண்டிருந்த போதே, ஒரு மருத்துவர் வந்து, சங்கரன் கையில் ஒரு எண் போட்ட பட்டையைக் கட்டி விட்டார்.

“ஏன் டாக்டர்? நான் பைத்தியம் இல்ல….. நான் பைத்தியம் இல்லை” என்று கத்தினார் சங்கரன்.

“எந்தப் பைத்தியம்தான் தன்னைப் பைத்தியம்னு ஒத்துக்கிட்டுது… வாங்க…” என்று பழக்கப்பட்ட ஒரு வசனத்தை எடுத்து வீசிவிட்டு உள்ளே அழைத்துச் சென்றுவிட்டார்கள்.

சோதனைகள் முடிந்தன. பெரிதாகக் கோளாறு தெரியவில்லை. மருத்துவர்கள் தனியாக வைத்து, தொழில், குடும்பம் பற்றிக் கேள்விமேல் கேள்வி கேட்டுத் துளைத்தெடுத்தார்கள். நச்சரிப்புத் தாங்க முடியாமல் எரிச்சலாகக் கொடுத்த பதிலையே ஆதாரமாக வைத்துச் சிகிச்சை செய்ய ஆரம்பித்தார்கள்.

சங்கரனும் ஒத்துழைத்தார். வேறு வழியின்றி அமைதியாகவே இருப்பதென முடிவெடுத்தார். நன்றாகத் தூங்கினார். வேளைக்குச் சாப்பிட்டார்.

ஒருநாள், தலைமைச் சீன மருத்துவரைச் சந்திக்கக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. மெதுவாக ஆரம்பித்தார்.

“டாக்டர்! என் குடும்ப சூழ்நிலை இப்படி ஆக்கப்பட்டுவிட்டேன். நான் பைத்தியம் இல்லைன்னா நீங்க ஒத்துக்கப் போறதில்லை. எனக்குப் போரடிக் கிறது. ஒரு உதவி செய்யுங்க… என்னை உங்க ஆபீஸ்லே உள்ள அக்கவுண்ஸ் செக்ஷன்லே விடுங்க. ஒரு வாரம் கழித்துப் பார்த்துட்டு நான் பைத்தியமான்னு முடிவு எடுங்க. இந்த ஒரு உதவியைச் செய்ய முடியுமா… டாக்டர்…” என்று அவர் சொன்ன தன்மை டாக்டருக்கு மிகவும் பிடித்திருந்தது. ஏற்றுக் கொண்டு அப்படியே செய்ய உதவி டாக்டருக்கு உத்தரவிட்டுச் சென்றார்.

ஒரு வாரம் கழித்து அதே தலைமை மருத்துவர், வரவு செலவைக் கணக்கிடும் கம்ப்யூட்டர் அறைக்குச் சென்று, சங்கரன் செய்த பணிகளைப் பார்வை யிட்டார். மிகவும் மன நிறைவெய்தினார். அத்துடன், அதற்கு முன்பு வரவு செலவுக் கணக்குகளைக் கவனித்து வந்தவர் செய்த சிறிய தவறுகளைக் கண்டு பிடித்ததோடு புதிய முறையில், கணக்கிடும் யுக்திகளையும் சொல்லிக் கொடுத்தார் சங்கரன்.

கவனித்த எல்லா மருத்துவர்களும் ஒரு முடிவுக்கு வந்தனர். பைத்தியமாக்கப்பட்ட சங்கரனை வீட்டிற்கு அனுப்புவது என்று முடிவெடுத்தார்கள்.

மறுநாள் சங்கரன் எல்லா மருத்துவர்கள் உதவியாளர்கள், தாதிகளிடம் நன்றி சொல்லிக் கொண்டு வீட்டிற்குப் புறப்பட்டார்.

நேராக வீட்டிற்குச் சென்றார் தன்னிடம் சாவியிருந்ததால், திறந்து கொண்டு உள்ளே சென்றார்.

கதவு திறக்கும் சத்தம் கேட்ட, உமா தன் படுக்கையிலிருந்து எழுந்து வந்தாள். பின்னாலேயே ஐரோப்பாவிற்கு அவளுடன் சென்ற ஆடவரும் வந்தார்.

இருவரையும் சங்கரன் பார்த்தார். அவருக்கு இப்போதுதான், தான் பைத்தியமாக்கப்பட்டதன் காரணம் புரிந்தது. ஒன்றும் பேசாமல் அப்படியே திரும்பினார். நேராக அதே மருத்துவமனைக்குப் போனார்.

டாக்டர்கள் கேட்டார்கள்.

“ஏன் சங்கரன்? என்ன ஆனது. ஏன் திரும்பி வந்துவிட்டீர்கள்?” – “வெளியிலிருப்பவர்களில் பலர் உள்ளேயிருக்க வேண்டியவர்கள். உள்ளே இருப்பவர்கள் சிலர் வெளியே இருக்க வேண்டியவர்கள். இருந்தாலும் இந்தக் கள்ளமில்லா உள்ளங்களுடன் பழகும்போது மனசு இலேசாகிறது; மகிழ்ச்சி கிடைக்கிறது.”

ஏற்கெனவே நான் பைத்தியம் இல்லை என்று சொல்லிக் கொண்டு வந்தேன். என்னை நம்பவில்லை. இப்போது பைத்தியமாகவே வந்துள்ளேன். நம்பி ஏற்றுக் கொள்ளுங்கள். அதே வேலையை நிரந்தரமாகச் செய்கிறேன்” என்றார்.

டாக்டர்களும் மனமுவந்து ஏற்றுக் கொண் டார்கள். பைத்தியமாக அல்ல; அலுவலக ஊழியராக!

படித்தவர் பார்வையில்

வை.கலைச் செல்வி
Blk 119; #11-105)
Mc. Nair Road
Singapore – 320119.

எதிர்பார்ப்புகள் நிறைந்த ஒரு சராசரிப் பெண். அதீத பொறுப்புணர்வு கொண்டவள்; தன் வழியே சரி என்ற கடிவாளக் குதிரையாய் ஒரு கலைஞன். இவ்விருவரின் இல்லறம் எப்படிச் சீரழிகிறது என்பதை ஆசிரியர் காட்டுகிறார்.

இருபதாண்டுகளுக்கும் மேலாக அப்பெண் அடுக்கி வைக்கும் ஒவ்வொரு ஏமாற்றச் செங்கல்லும், கடைசியில் அவர்கள் இல்லற மாளிகையை அழிக்கும் வெடிகுண்டுகளாயினவை ரசவாதமா? ரசாயன மாற்றமா? பொதுவாகவே எழுத்தாளர்கள் ஏதாவது கங்கணம் கட்டியுள்ளார்களா என்ன? ஏன் எப்போதும் பெண்மைக்கு எதிரான போக்கு? ஒரு பக்கம் ஆண் என்ன கொடுமை செய்தாலும் அடிபணிந்து போகும் ‘தெய்வப் பெண்மையைச் சித்திரிக்கிறார்கள். அல்லது சுயநலமே உருவான வரம்புகளை மீறும் ‘துரோகி’யாய்ச் சித்திரிக்கிறார்கள்.

இந்த இரண்டு உச்சங்களிலுமே ‘பெண்மை’ தொலைந்துவிடும் என்பது உறுதி. நம்மிடையே வாழும் நிஜமான பெண்மையைக் கதைகளில் கையாள வேண்டியது கதாசிரியர்களின் தார்மீகக் கடமை.

வெறும் பணம் சம்பாதிக்கும் இயந்திரமாய்த் தன் தரத்தை மாற்றிக்கொண்ட சங்கர், இருபதாண்டு களாக மனைவி, மகளின் சின்னச் சின்ன சுக துக்கங்களை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்த சங்கர், உமாவை இந்த இழிநிலைக்குத் தூண்டிய சங்கர், கதையின் இறுதியில் தியாகி இடத்துக்குத் தன்னை உயர்த்திக் கொள்ள நினைப்பது எந்த வகையில் நியாயம்?

– விடியல் விளக்குகள், முதற்பதிப்பு: அக்டோபர் 2007, சீதை பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *