பைத்தியம் சும்மா வாடி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 3, 2024
பார்வையிட்டோர்: 3,449 
 
 

தொடர்ந்து பெய்த அடை மழைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அன்று காலை 11 மணிக்கு சூரியன் சுள்ளென்று அடித்தது. வழக்கம்போல் மழையின் காரணமாக அரசு அறிவித்த பள்ளி விடுமுறை அந்தக் குழந்தைக்கு சாதகமாகவே இருந்தது. அரசுப் பணியாளர் குடியிருப்பு வளாகத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டின் காம்பவுண்ட் சுவருக்குள் உள்ள சிறிய தோட்டத்தில் அந்த ஏழு வயது குழந்தை பட்டாம்பூச்சி பிடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள். சின்னஞ்சிறு பட்டாம்பூச்சியை அச்சிறுமி பிடிக்க முயல்வதும் அப்பட்டாம்பூச்சி அவளுக்குப் பிடிபடாமல் ஒவ்வொரு செடியாய் மாறி மாறி உட்கார்ந்து போக்குக் காட்டுவதும், பார்ப்பதற்கு அழகிய கவிதை போலவே இருந்தது. ஆனால் எனக்கு என்னவோ அது பட்டாம்பூச்சி போல் தோணவில்லை. நான் சிறுவனாக இருக்கும்போது அழகான கருப்பு நிற சிறகில் ஆரஞ்சு நிற புள்ளிகளோடு பிடிப்பதற்கு ஏதுவாக கொழுத்த வாளோடு இருந்த பட்டாம்பூச்சியைப் பிடித்து அதன் இடுப்பிற்கும் வாலுக்கும் இடையில் நூலினைக் கட்டி பறக்க வைத்துப் பார்த்த அனுபவமுள்ள எனக்கு, அந்தச் சிறுமி தற்பொழுது பிடிக்க முயற்சித்துக்கொண்டிருக்கும் பழைய காலத்து பத்து பைசா அளவிலான அந்தப் பட்டாம்பூச்சி எனக்குப் பட்டாம்பூச்சி போலவே தோன்றவில்லை.

“ஏய் பைத்தியம் அங்கு என்னடி பண்ற உள்ள வாடி”

என்ற அவளின் பாட்டியின் குரலுக்குச் செவி சாய்க்காமல் தொடர்ந்து பட்டாம்பூச்சி பிடிக்க முயன்றாள் அந்தச் சிறுமி.

நான் சிறுவனாக இருந்தபொழுது பட்டாம்பூச்சி பிடிக்க பல்வேறு தொழில்நுட்பங்கள் இருந்தன. அதில் முக்கியமான ஒன்று ஒரு சிறிய செடியினை வேரோடு பிடுங்கி பறந்து கொண்டிருக்கும் பட்டாம்பூச்சியின் மீது

மெதுவாகத் தரையை நோக்கி அடிக்க வேண்டும். சரியாக அடித்துவிட்டால் மண்ணுக்கும் நம் கையில் இருக்கும் செடிக்கும் இடையில் பட்டாம்பூச்சி இருக்கும். இத்தொழில்நுட்பத்தை அவளுக்குச் சொல்லிக் கொடுக்கலாம் என்று நான் அவளைத் தேடியபொழுது அவள் தோட்டத்தில் இல்லை. ஜெயித்தது அவளா? பட்டாம்பூச்சியா? என்றும் தெரியவில்லை. நான் எனது அறைக்குச் சென்று வழக்கம்போல சமைப்பதற்கு தக்காளியை எடுத்து நறுக்கலாம் என முயன்றபோது மெத்து மெத்தென்று சிகப்பு நிறத்தில் இருந்த அந்த தக்காளிப் பழத்தைப் பார்க்கும் பொழுது எனக்குத் தம்பலம் பூச்சி நினைவுக்கு வந்தது.

“ஏறக்குறைய முப்பது வருஷத்துக்கு முன்னாடி எனக்கு அப்ப பத்து வயசு இருக்கும். நல்ல மழை பெய்து முடிந்த பின்னாடி மண்ணு ஏர் ஓட்ட பதமா இருக்கும். அப்ப என்னோட அப்பா ஏறு மாட்டோட, ஏறு ஓட்ட காட்டுக்கு போவாரு. அவரு கூட நானும் போவேன். என்னோட அப்பா ஏறுல மாட்டப் பூட்டி ஓட்ட ஆரம்பிக்கவும் கிழக்குத் திசையில் சூரியன் உதித்து லேசா மேல வரத்துக்கும் சரியா இருக்கும். ஏறு கலப்பை மண்ணில் ஆழ பதித்து மாடு இழுக்க இழுக்க ரெண்டு பக்கமும் மண்ணைக் கிளறி போட்டபடி நேர கோடு போட்ட மாதிரி போய்கிட்டே இருக்கும். கால் பாதத்துல படுற நிலத்தோட ஈரம், கண்ணுல படுற அதிகாலை சூரியனின் ஒலி, காதில் கேட்கும் சிறு குருவிகளின் ஓசை, மண்ணில் இருந்து கிளம்பி வரும் மண் வாசனை. இது எல்லாத்தையும் தாண்டி என்னோட கண்கள் தம்பலம் பூச்சியைத் தேடும். தம்பலாம் பூச்சி எல்லா காலங்களிலும் எல்லா மண்ணிலும் பார்க்க முடியாது. தண்ணி பாயிற வயல்ல இருக்காது. மேட்டாங் காட்டுல மட்டும் தான் இருக்கும். அதுவும் குறிப்பா மழை பெய்து முடிந்த பின்னாடி முதல் உழவு ஓட்டும் போதுதான் தம்பலாம் பூச்சியைப் பார்க்க முடியும். நம்ம சுண்டு விரல் நகம் அளவுல பஞ்சு முட்டாய் கலருல மெத்து மெத்துனு பாக்க அழகா இருக்கும். அதை எடுத்து கையில வச்சுகலாமன்னு தோணும். ஆனா எங் கூட வர என் பாட்டி அதை எடுக்க விட மாட்டாங்க”.

தம்பலம் பூச்சிக்கு வெல்வெட் பூச்சியினு பேரு வச்ச பெருமை என்னுடைய அக்காவையே சாரும். ஏன்னா அந்தக் காலத்துல நாங்க அஞ்சாவது படிக்கும்போது பள்ளிக்கூடம் போக மட்டுமல்ல கல்யாணம், காதுகுத்து எல்லாத்துக்கும் நாங்க போட்டுகிற ஒரே துணி பள்ளி சீருடைதான். கொஞ்சம் பணக்கார குழந்தைங்க எதாவது கோவில் திருவிழா பண்டிக்கை நாட்கள்ல சீருடைக்கு பதிலா கலர் துணி போட்டுகிட்டு வருவாங்க. அது பெரும்பாலும் வெல்வெட் துணியா இருக்கும். நாங்க அத ஆச்சர்யமா பாப்போம். அந்த வெல்வெட் துணி மாதிரியே பாக்கறதுக்கு அழகாகவும் மெத்து மெத்துன்னு இருந்ததுனால, அக்கா அதுக்கு வெல்வட் பூச்சின்னு பேரு வச்சாங்க. நாம வாழற மண்ணு விஷமா மாறி போனதால தம்பலம் பூச்சி நான் இந்த மண்ணுல இனிமே வாழ மாட்டேன் அப்படின்னு கர்வத்தோடு அழிஞ்சு போய்விட்டதாக, ஒருசில ஆய்வாளர்களும் ஏம்பா எவ்வளவு பெரிய டைனோசர் இன்னிக்கு இல்ல. ஆனா ஒரு சின்னச் சித்து எறும்பு இன்னைக்கு இருக்கு. அதுக்கு என்ன காரணம் சூழலுக்கேற்ற மாதிரி தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் உயிரினங்கள் தான் இந்த மண்ணில் வாழும். மற்றது மறைந்துபோகும் என்று ஒருசில ஆய்வாளர்களும் தங்களது கருத்தினை முன்வைக்கின்றனர். நான் என்னுடைய சின்ன வயசுல பார்த்து இப்ப பார்க்க முடியாம இருக்கற ஒவ்வொன்னும் அப்படி அப்படியே என் கண்ணு முன்னால கனவு மாதிரி தெரியுது. அதுல ஒன்னு தான் பொன்வண்டு. பொன்வண்டு ஒன்னு புளியமரம் இல்லன்னா கோண புளியங்கா மரம் இந்த ரெண்டு மரத்துல மட்டும் தான் இருக்கும். கட்ட விரல் சைஸ்சுல கருப்பு கலரு தலையும் சிவப்பு கலரு றெக்கையும் இருக்கும். தலைக்கும் றெக்கைக்கும் இடையில் ஒரு சின்ன கேப் இருக்கும். அங்க கைய வச்சா தன்னுடைய தலைய உடம்போடு சேர்த்து இழுக்கும். அப்ப நம்ம கையில வெட்டு விழும். அதனால பொன்வண்டு பிடிக்கும்போது மட்டும் ரொம்ப கேர்ஃபுல்லா இருக்கனும்.

பொன்வண்டைப் புடிச்சி அதோட கழுத்துக்கும் ரெக்கைக்கும் இடையில் நூல போட்டு கட்டி சுத்தனா பொன்வண்டு பறக்கும். அடுத்த நாள் பள்ளிக்குப் போகும்போது ஒரு தீ பெட்டில பொன்வண்டையும் அது சாப்பிட, புளியம் தலையும் போட்டு எடுத்துகிட்டு போவோம்.

மதியானம் பள்ளிக்கூட சாப்பாடு முடிந்த பின்னாடி தீபெட்டிய திறந்து அது முட்ட போட்டுருக்கான்னு பாப்போம். அத எஞ்சோட்டு பசங்ககிட்ட காட்டும்போது ஒரே பெருமையா இருக்கும். அந்த வகையில நான் சின்ன வயசுல பாத்து இப்ப பாக்க முடியாம இருக்கற குள்ளான் பூச்சியும் என்னுடைய ஞாபகத்துக்கு வருகின்றது.

“குள்ளான் பூச்சி உண்மையாகவே பூச்சி இல்லை. ஏன்னா நம்ம பொதுப்புத்தியில் சொன்னவரைக்கும் பூச்சின்னா அதுக்கு றக்க இருக்கணும். அந்த அளவுகோல் படி பார்த்தா குள்ளான் பூச்சியும் தம்பலம் பூச்சியும் பூச்சி வகையில வராது. ஏன்னா ரெண்டுக்கும் றெக்கை கிடையாது. அதனால அது பூச்சி வகைல வராது. அது ஊர்வன வகையில தான் வரும். எனக்கு என்னவோ கரையானோட அடுத்தகட்ட வளர்ச்சி தான் ஈசல் ங்கர மாதிரி. இந்தக் குள்ளானோட நீட்சிதான் தம்பலம் பூச்சுன்னு தோணுச்சு. சரி…. அதை உறுதிப்படுத்தலாம்னு நான் இருக்கும் இடத்திலிருந்து 300 கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கின்ற என் பெரியப்பா, சித்தப்பா அத்த அப்படின்னு எல்லாருக்கும் போன் பண்ணி கேட்டேன். யாரோட பதிலும் எனக்குத் திருப்தி அளிக்காதனால, கடைசியா என்னோட உறவுகளின் உச்சம் அதான் என்னோட பாட்டி. அவங்கதான் மண்ணும் மனுசியும்மா வாழ்ந்தவங்க அவங்கள கேக்கலாம்னு அவங்களுக்குப் போன் பண்ணுனேன். அவங்களுக்குப் போன் போட்டப்ப கேட்ட ரிங் சத்தத்தோட பெரிய சத்தமா என்னுடைய வீட்டோட ஹால்ல இருந்து சத்தம் வந்துச்சு. பயந்துபோன நான் போன கட் பண்ணிட்டு ஹாலுக்குப் போனேன். அங்க போனா இந்தச் சிறுமியோட அக்கா என்ன அவளுக்கு ஒரு பத்து வயசு இருக்கும். அவ அந்தச் சிறுமியை “பைத்தியம்…. பைத்தியம்”னு திட்டிக் கொண்டிருந்தாள்.

திட்டுகின்ற பெரிய குழந்தையின் குரல், உடல்மொழி அனைத்தும் பார்ப்பதற்குச் சற்று அச்சமாகவே இருந்தது. ஏன்னா அந்தச் சிறுமியின் அக்காவாகிய அந்தப் பெரிய குழந்தை ஒருமுறையும் இப்படி நடந்து கொண்டவள் இல்லை. நான் சொல்லி இங்கு எதுவும் மாறியது இல்லை. இருந்தாலும் என் மனசு கேட்கவில்லை. அதனால் பெரிய குழந்தையிடம் “தங்கச்சிய பைத்தியம்னு” சொல்லக்கூடாது. அவள மட்டுமில்ல யாரையுமே பைத்தியன்னு சொல்லக் கூடாது சொன்னேன்.

வழக்கம் போலவே நான் கூறியதைப் பொருட்படுத்தாத பெரிய குழந்தை தன் தரப்பு நியாயத்தை எடுத்து வைத்தாள். இதனை எதையும் பொருட்படுத்தாத சின்னக் குழந்தை வழக்கம்போல அவளுக்குப் பிடித்த ஓவியம் வரையும் வேலைகளில் ஈடுபட்டு இருந்தாள். இந்த வீட்டில் கவனிக்கப்படாமல் கட்டிலுக்குக் கீழே இருக்கும் குப்பை தான் நான் என்பது எனக்கு நன்கு தெரிந்திருந்தபோதிலும், ஏதோ ஒரு பெரிய தத்துவத்தைப் பேசிவிட்டு, வந்த மமதையில் என் அறைக்கு வந்து அமர்ந்து மீண்டும் தக்காளியை நறுக்கும் போதுதான் எனக்குள் அந்தக் கேள்வி எழுந்தது. இதுவரை எத்தனையோ முறை பெரிய குழந்தைக்கும் சின்ன குழந்தைக்கும் சண்டை வந்துள்ளது. ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வார்கள். திட்டிக் கொள்வார்கள். ஆனால் இதுவரை ‘பைத்தியம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை.

“எப்படி இந்தப் பெரிய குழந்தைக்குப் பைத்தியம் என்ற வார்த்தை பயன்பாட்டுக்கு வந்தது” என்ற கேள்வி என் மனதில் எழுந்தது. யோசித்துப் பார்க்கும்பொழுது அதற்கான விடையும் கிடைத்தது. பொதுவாக, குழந்தைகள் நாம் என்ன செய்ய சொல்கிறோமோ அதைச் செய்ய மாட்டார்கள். ஆனால் நாம என்ன பேசுறமோ…. என்ன செய்கிறோமோ…..

அது அப்படியே பேசுவாங்க…. செய்வாங்க. ஒரு வருஷத்துக்கு முன்னாடி என் மனைவியோட தங்கச்சிக்குக் கல்யாணம் ஆயிடுச்சு. வீட்டோட முதல் மருமகன் அக்காவோட கணவன் என்ற பல்வேறு சிறப்புத் தகுதிகள் எனக்கு இருந்ததால் மனைவின் தங்கை அவளுடைய பிரச்சினையை என்கிட்ட அடிக்கடிச் சொல்லுவார்கள்.

“அப்படித்தான் ஒருமுறை என்கிட்ட சொன்னா…”

“மாமா நான் என் புருஷன அடிச்சுட்டேன்னு… அதுக்கு ஏன்மா உன் புருஷன அடிச்சன்னு? கேட்டேன். அதுக்கு என் மனைவியின் தங்கை சொன்னாள் என் புருசன் என்ன அடிச்சான் நானும் திருப்பி அடிச்சுட்டன்”னு. உண்மையாகவே எனக்குப் பெண்ணியத்தின் மீது பெருமையாக இருந்தது. சரிமா என்னதான் உனக்கும் உன் புருஷனுக்கும் பிரச்சினை என்று மனைவியின் தங்கையிடம் நான் கேட்டேன். அதுக்கு என் மனைவியின் தங்கை மாமா எத்தனையோ முறை என் புருஷன்கிட்ட சொல்லிட்டேன்.

என்னைத் திட்டும்போது, பைத்தியம்….. பைத்தியம்….. சொல்லாதன்னு. ஆனா அவன் திரும்பத் திரும்ப என்னைத் திட்டும் போதெல்லாம் பைத்தியம்…. பைத்தியம்…..ன்னு என்னை திட்றான். எனக்கு அந்த வார்த்தை பிடிக்கல. இனிமேல் அப்படிக் கூப்பிடாதன்னு அவன்கிட்ட நான் பலமுற சொன்னாலும் திரும்பத் திரும்ப என்னைப் பைத்தியம்….. பைத்தியம்…..ன்னே சொல்றாம் மாமா என்று என் மனைவியின் தங்கை என்னைடம் கூறினாள்.

போன மாசம் பள்ளி விடுமுறைக்கு சித்தி வீட்டிற்குச் சென்று ஒரு மாதம் தங்கி வந்த பெரிய குழந்தைக்கு ‘பைத்தியம்’ எனும் வார்த்தை தொத்திக் கொண்டது என்பது எனக்கு புரிந்துவிட்டது. என் அறைக்கு வந்து தான் வரைந்த ஓவியத்தைக் காட்டி எப்படி இருக்கு என்று கேட்ட சின்னக் குழந்தைக்கு, அவள் வரைந்த பட்டாம்பூச்சி ஓவியத்தின் கீழ் 5 ஸ்டார் போட்டு நல்லா இருக்கு சீமாட்டி என்றேன். உண்மையாகவே சின்னக் குழந்தையின் பெயர் அழகியத் தமிழ்ப்பெயர். ஆனால், சீமாட்டி என்பதுதான் பொதுவாக எல்லாரும் வீட்டில் அழைக்கும் பெயர். அதற்கு ஒரு சிறப்புக் காரணம் உண்டு.

“அந்தக் குட்டிக்கு, அப்போ ஒரு மூணு வயசு இருக்கும். ஒருநாள் கடைக்குப் போகும்போது ஒரு சின்னக் கைப்பையை அடம்பிடித்து வாங்கிக் கொண்டது. அது எப்படி இருக்கும்னா ஒரு சின்னப் புத்தகம் சைஸ்ல பிங்க் கலர்ல இருக்கும். அதுல கைப்பிடி கருப்பு கலர்ல இருக்கும். அந்தக் கைப்பிடிக்குள்ள பெரியவங்க யாரும் கைவிட முடியாது. அவ கை மட்டும்தான் நுழையும். அப்படி இருக்கும் அந்த கைப்பை. அது வாங்கின பின்னாடி எப்ப வெளியில போனாலும் சீமாட்டி லிப்ஸ்டிக் போட்டுக்குவாங்க”.

அந்தக் கைப்பையை எடுத்துத் தன்னோட இடது கையில் மணிக்கட்டுக்கும் கைக்கும் இடையில் மாட்டிக்கொண்டு, தனது கையை ‘L’ வடிவத்தில் வைத்துக்கொண்டு நடமாடும் அவளை எல்லோரும் சீமாட்டி என்று அழைப்பார்கள். சீமாட்டி வெளியில் செல்லாத நேரங்களில் அவளுடைய கைப்பை அவளின் படுக்கை அறையில் அவளுக்கு எட்டுகின்ற உயரத்திலுள்ள ஓர் ஆணியில் தொங்கிக் கொண்டிருக்கும். அடுத்த நாள் காலையில் பெரிய குழந்தை எழுந்துவிட்டாள். சின்னக் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. அவளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டிய கடமை அவளது பாட்டிக்கு இருந்தது. இரண்டு முறை அவளின் பெயர்ச்சொல்லி அழைத்தபோது, எழாத குழந்தையைப் பைத்தியமே என்று கூறி அவளது பாட்டி அச்சின்ன குழந்தையின் தொடை மீது இரண்டு அடி போட்டவுடன் துள்ளி எழுந்தது. அவசர அவசரமாய் குளித்து, அரைகுறையாய் சாப்பிட்டு குருவி தலையில் பனங்காய் போல் முதுகில் சுமக்க முடியாத புத்தகப் பையுடன் பள்ளிச் சீருடையில் தயாராக நின்ற சின்னக் குழந்தையின் கண்களில் தூக்கமும் துக்கமும் தெரிந்தது.

அந்தக் குடியிருப்பு வளாகத்தின் உள்ளே பள்ளி வாகனம் வராது. அவளது பாட்டி தான் 500 மீட்டர் நடந்து சென்று, பின்பு வரும் ஒரு இருவழி முக்கிய சாலையைக் கடந்து வாகனத்தில் ஏற்ற வேண்டும். இதுதான் அவளின் முக்கியமான பணி 500 மீட்டர் கடந்து பின்பு இந்தச் சிறிய சாலையும் இருவழிச் சாலையும் சந்திக்கும் புள்ளியில் ஒரு பெரிய மருத்துவமனை வளாகம் இருக்கும்.

இச்சின்ன குழந்தைக்கு அவ்வப்போது ஏற்படும் காய்ச்சலுக்காக அம்மருத்துவ வளாகத்திற்குச் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அது மட்டுமல்லாமல் அவளுக்குப் பள்ளி செல்ல விருப்பம் இல்லை என்றால், அவள் கூறும் பொய்யான காரணங்கள் ‘வயிற்று வலி’, ‘தலைவலி’, ‘பல்லு வலி’ என எல்லாவற்றுக்கும் அந்த மருத்துவமனை வளாகம்தான் அவளுக்கு உதவுவது. அதனால் அவளுக்கு அந்த மருத்துவமனையின் அனைத்துப் பிரிவுகளும் அத்துபடி. ஆனால் வழக்கத்திற்கு மாறாக எப்பொழுதும் அம்மருத்துவ வளாகத்தில் பூட்டியிருக்கும் முதல் அறை திறந்திருந்தது. மேலும், அதில் மனநல மருத்துவர் என்ற பெயரும் இருந்தது. அதில் விபூதி சந்தனம் பூசி வாழை கம்பு கட்டி இருந்தார்கள். அவள் எழுத்துக்கூட்டி மனநல மருத்துவமனை என்று படித்துவிட்டாள். ஆனால் அதற்கு அர்த்தம் புரியவில்லை.

அந்த இருவழிச் சாலையின் மறுபுறம் அவருடைய பள்ளி வாகனம் நின்று கொண்டிருந்தது. ஒரு கையில் இரண்டு குழந்தைகளைப் பிடித்துக்கொண்டு மற்றொரு கையில் இரண்டு குழந்தைகளின் சாப்பாட்டு பையையும் தூக்கிக்கொண்டு சாலையின் இந்தப் புறமிருந்து அந்தப்புறம் கடப்பதற்குச் சிரமப்பட்டுக் கொண்டிருந்த அவளின் பாட்டியிடம் அச்சின்ன குழந்தை மனநல மருத்துவர்ன்னா என்ன பாட்டின்னு கேட்டதற்கு ம்.… பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்குற ஆஸ்பத்திரி இது. பைத்தியம் சும்மா வாடி…” என்று கூறிச் சாலையைக் கடந்து வேனில் ஏற்றினார்கள். அன்று மாலை பள்ளி முடிந்துவரும் குழந்தைகளைக் கூட்டிச் செல்வதற்காக அந்த மருத்துவமனை வளாகத்தில் காலியாக இருந்து இன்று மனநல மருத்துவமனையாக மாறியிருந்த அந்த மருத்துவமனையின் அருகில்தான் சீமாட்டியின் பாட்டி குழந்தைகளுக்காகக் காத்துக் கொண்டிருந்தார். பள்ளி வாகனத்தில் இருந்து சீமாட்டியும் அவரது அக்காவும் இறங்கினர். சீமாட்டியின் அக்காவின் புத்தகப் பையை வாங்கிக்கொண்டு சீமாட்டியின் புத்தகப் பையைக் கேட்ட அவரது பாட்டியிடம் சீமாட்டி,

“நான் வரமாட்டேன். என்ன இந்த ஆக்குபத்தரிக்கு கூட்டிட்டு போ” என்று அடம்பிடித்தாள். ஆக்கு பத்திரி என்பது சீமாட்டியின் பாசை. “ஏய் சும்மா இரு” என்று அவளது புத்தகப் பையைக் பிடுங்கிக்கொண்டு அவளது பாட்டி சின்னப்பிள்ளையை யாராவது பைத்தியகார ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போவாங்களா என்று கூறிக்கொண்டு பைத்திய மாதிரி வல வலன்னு பேசாத.. கம்முன்னு வா என்று. அவளது கையைப் பிடித்து இழுத்தார். அவரின் இழுப்புக்கு ஒப்புக்கொடுத்து நடக்க ஆரம்பித்த சீமாட்டி ஏன் பாட்டி எனக்கு,

“காய்ச்சல், வயிற்றுவலி, தலைவலின்னா மட்டும் ஆக்குபத்திரிக்கு கூட்டிட்டு போறீங்க. ஆனா நீதான் என்ன பைத்தியம்… பைத்தியம்னு சொல்ற. என்ன பைத்தியம் சொல்ற நீங்க என்ன ஏன் பாட்டி பைத்தியக்கார ஆக்குபத்திரிக்கி கூட்டிட்டுப் போகமாட்டங்கிறீங்க” என்ற அவளின் கேள்விக்கு ‘ஏய் பைத்தியம் சும்மா வாடி’ என்று முற்றுப்புள்ளி வைத்தாள் அவருடைய பாட்டி. அன்று இரவு வழக்கம்போல அவள் ஏதோ வரைய முற்பட்டாள். ஆனால் அவளால் அதை முடிக்க முடியவில்லை. அவளது அக்கா, பாட்டி, சித்தி அனைவரும் அவளைப் பைத்தியம் என்று கூறியபொழுதும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் அன்று அவளது வகுப்பு ஆசிரியர் வர நேரமானதால் சத்தம்போட்டு விளையாடி கொண்டிருந்த அனைத்து குழந்தைகளையும்…. நீங்கள் என்ன பைத்தியமா என்று அவளுடைய வக்குப்பு ஆசிரியர் கேட்ட கேள்வி அவள் நினைவுக்கு வர அவளால் வரைய முடியவில்லை.

அன்றிரவு தூக்கம் வராமல் தவித்துக்கொண்டிருந்த அந்தச் சின்னக் குழந்தைக்கு ஒரு வழியாகத் தூங்கிப்போனது. தூக்கத்தில் அன்றைய நிகழ்வு அச்சின்னக் குழந்தைக்குக் கனவாக விரிந்தது. பள்ளியிலிருந்து வீட்டுக்கு வரும்பொழுது வேன் டிரைவர் பின் இருக்கையில் அமர்ந்திருந்தாள் அந்தச் சின்னக் குழந்தை. சட்டென்று டிரைவர் பிரேக் அடிக்க என்னவென்று பார்த்தாள். நீண்ட தலைமுடியுடன் ஆடை இல்லாத ஒரு மனிதன் அந்த வண்டியின் குறுக்கே வந்துவிட்டான். கோபத்தோடு கீழே இறங்கிய வேன் டிரைவர் அவனை அடிக்க கை ஓங்கிப் பின் ஏதோ யோசித்தவனாக அவனை அடிக்காமல் அமைதியாக வண்டியில் ஏறி, அவரது இருக்கையில் அமர்ந்து பாவம் பைத்தியம் என்று கூறுவதைக்கேட்ட நிகழ்வைக் கனவாய் கண்டச் சிறுமி அதிர்ந்து எழுந்தாள்.

அந்த அதிர்வு கட்டிலில் ஏற்படுத்திய சத்தத்தைக்கேட்டு எழுந்த அவளது பாட்டி, கனவு கண்டு பயத்தில் விழித்திருக்கும் அந்தச் சிறுமியின் கண்களைப் பார்த்து அச்சமுற்று ஏய் பைத்தியம் தூங்கு என்று கூறிவிட்டு புரண்டு படுத்தாள். அதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை எந்த ஒரு சிறப்பும் இல்லாமல் வழக்கம்போல் கழிந்தது. திங்கட்கிழமை அதிகாலை என் தூக்கத்தைக் கலைத்தது எனது அலைபேசி. யார் என்று பார்த்தால் என்னை அழைத்தது என்னுடைய பாட்டி. அப்பொழுது தான் என் நினைவுக்கு வந்தது இரண்டு நாளைக்கு முன்பு பாட்டிக்கு போன் செய்து கட் பண்ணியது. குற்ற உணர்வோடு பாட்டி கிட்ட குள்ளான் பூச்சி பத்திக் கேட்டேன். என்னோட பாட்டி சொன்னதை அப்படியே உங்கிட்ட சொல்றேன்.

“குள்ளான் பூச்சி மண்ணுல வாழக்கூடிய ஒரு புழு ராசா. அது எறும்பு தின்னு வாழக்கூடிய ஒரு ஜீவன். நல்லா மண்ணு பவுடர் மாதிரி இருக்கணும். அங்க ஒரு கூம்பு மாதிரி நம்ம மண்ணெண்ணெய் ஊத்துற புனலை அப்படியே மண்ணுல புதைச்ச மாறி ஒரு குழி தோண்டி வச்சிருக்கும். அதுக்குக் கீழ தான் குள்ளான் பூச்சி இருக்கும். ஏதாவது எறும்பு அந்தப் பக்கம் வந்துச்சுன்னா அந்தக் குளியல வழுக்கி விழுந்து விடும். உடனே குள்ளான் மண்ணிலிருந்து மேல வந்து எறும்பை உள்ளே இழுத்துச் சாப்பிடும். குள்ளான் பூச்சியை அவ்வளவு சீக்கிரமா நம்மள பிடிக்க முடியாது”.

“ஏன்னா குள்ளானோட குளியல நம்ம கைய வச்சா அதுக்கு நம்ம கையோடு அழுத்தத்துக்கும் எறும்புக்கும் வித்தியாசம் தெரியும் உடனே மண்ணுல போயி மறைந்துவிடும். இந்த மனுச பையன் தான் சொல்லிக்கிறான். எங்களுக்குத் தான் ஆறறிவுன்னு. இந்தக் குள்ளானோட நம்ம எல்லாம் ஒப்பிடவே முடியாது. அது பாரு எவ்வளவு அழகா தனக்கான இரையைப் பிடிக்க ஓர் அமைப்பை ஏற்படுத்தி நிச்சயமாக எறும்பு வரும் என்று காத்துக் கொண்டிருக்கின்றது. அது போன்ற தன்னம்பிக்கை நமக்கு இருக்கா ராசா” என்று கேட்ட பாட்டி அதைப் பிடிக்கும் ரகசியத்தையும் சொல்லிக் கொடுத்தாள்.

“ஒரு எறும்பைப் பிடித்து குள்ளானின் குளியல் போட்டால் எறும்பைப் பிடிப்பதற்காக குள்ளான் மேலே வரும். அச்சமயம் ஒரு சிறிய குச்சியை வைத்துத் தோண்டினால் குள்ளானை நாம் பிடித்துவிடலாம்” என்று கூறி முடித்து போனை வைத்தாள் பாட்டி. குள்ளானின் செயற்கை நுண்ணறிவு நினைத்து ஆச்சரியப்பட்டு என் அறையிலிருந்து வெளியே வந்தேன்.

என் அறைக்கு எதிரே இருக்கும் சீமாட்டியின் அறையில் வழக்கம்போல அவளது பாட்டி பைத்தியமே எந்திரி என்று எழுப்பி கொண்டிருந்தார்கள்.

வீட்டிற்கு வெளியே 10 பேர் கொண்ட கும்பல் இருந்தது. என்ன என்று விசாரித்த போது நேற்று மதியம் அருகிலுள்ள மனநல மருத்துவ மனையிலிருந்து ஒரு தீவிர மனநோயாளிக்கு வழங்கப்பட்ட ஒரு மாதத்திற்கான மாத்திரையை அந்த நோயாளியின் தாய் ஏமாந்த நேரத்தில் சீமாட்டி எடுத்துக்கொண்டு வந்துவிட்டதாகவும், அதற்கான ஆதாரம் சிசிடிவியில் பதிவில் இருப்பதாகவும் கூறினார்கள். நான் அது குறித்து சீமாட்டியிடம் கேட்கலாம் என அவளது அறைக்குச் சென்றேன். வழக்கம்போல அவளது பாட்டி ‘ஏய் பைத்தியம்’ எந்திரி என்று எழுப்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால் சீமாட்டி எழுந்திருக்கவில்லை. அந்தச் சுவரில் சீமாட்டியின் கைப்பை மட்டும், ‘இனி என்னை யார் பயன்படுத்த போகின்றார்கள்’ என்பதுபோல் தொங்கிக்கொண்டிருந்தது.

அதனுள்ளே மனநல மருத்துவமனையிலிருந்து எடுக்கப்பட்ட மாத்திரைகளில் பாதி மாத்திரை மட்டும் சீமாட்டி போலவே உறங்கிக் கொண்டிருந்தது. நான் வீட்டுக்கு வெளியே வந்தேன். அந்தக் கும்பல் கலைந்து சென்றுவிட்டது. தோட்டத்தைப் பார்த்தேன். அந்தப் பத்து பைசா அளவுள்ள பட்டாம்பூச்சி ஒவ்வொரு செடியாக அமர்ந்து பறந்து சென்றுகொண்டிருந்தது. ஆனால் அதனைத் தொடர்ந்து செல்ல சீமாட்டி அங்கில்லை.

– திணை டிசம்பர்-பிப்ரவரி 2024 இதழில் வெளியாகியுள்ளது

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *