சென்னை பழவந்தாங்கல் ஸ்டேஷனை ஒட்டி ஒரு பெரிய வீடு. அதில் மனைவி மரகதம் மற்றும் மூன்று மகன்களுடன் கோதண்டராமன் வசித்து வருகிறார்.
முதல் இரண்டு மகன்களுக்கும் நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்தார். அனைவரும் கூட்டுக் குடும்பத்தில் ஒற்றுமையுடன் இருக்கிறார்கள்.
ஆனால் மூன்றாவது மகன் அனந்து என்கிற அனந்தராமனுக்கு வயது முப்பது ஆனாலும் அவனுக்குப் பெண் தேடத் தயங்கினார்கள். காரணம் அவன் ஒரு பைத்தியம்.
அனந்து பார்க்க ஆறு அடி உயரத்தில் திடகாத்திரமாக ஒரு குதிர் மாதிரி இருப்பான். அடிக்கடி மற்றவர்களை முறைத்துப் பார்ப்பான். திடீர் திடீரென சிரிப்பான். எச்சில் துப்புவான். ஊளையிடுவான்…
ஆனால் சமீப காலங்களாக டாய்லெட்டின் கதவுகளை திறந்து வைத்தபடியே முண்டக் கட்டையாக அமர்ந்து வெளிக்கி இருகிறான். அவனுடைய மூத்த அண்ணன் அவனை கோபத்துடன் மிரட்டினார், அடித்தும் பார்த்தார். ஆனால் அனந்து மாறவில்லை.
அவனை சென்னையின் ஒரு பிரபல மனநல டாக்டரிடம் அழைத்துப் போய்க் காண்பித்தார்கள். மருந்து மாத்திரைகளுடன் அனந்துவுக்கு சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டன. அவ்வப்போது மின்சார அதிர்ச்சியும் கொடுக்கப் பட்டது.
இரண்டுமாத சிகிச்சையில் சற்று முன்னேற்றம் இருந்த மாதிரி தோன்றினாலும், அனந்து தொடர்ந்து வருடக்கணக்கில் மாத்திரைகள் சாப்பிட்டு வரவேண்டும், என்ன காரணத்தைக் கொண்டும் மருந்து சாப்பிடுவது நின்று விடக்கூடாது என்று டாக்டர் அறிவுரை வழங்கினார்.
ஆனால் அனந்து மருந்து மாத்திரைகள் தொடர்ந்து சாப்பிடாமல் அவ்வப்போது அடம் பிடித்தான். அனந்துவின் அண்ணன்களுக்கு பல சமயங்களில் எரிச்சலாகக்கூட இருந்தது. எத்தனை நாட்களுக்கு இன்னும் இந்தப் பைத்தியக்காரனை கட்டி மாரடித்துக் கொண்டிருப்பது என்று அலுப்பாகவும் இருந்தது. அந்தக் குடும்பத்திற்கு அனந்து தீராத தலைவலியாகிப் போனான்.
அனந்துவின் அம்மா மரகதம்தான் மிகவும் பொறுமையோடு சலிக்காமல் மகனை மாத்திரைகள் சாப்பிடும்படி கெஞ்சுவாள். மாத்திரைகளை தொடர்ந்து சப்பிட்டேயாக வேண்டும் என்று டாக்டர் படித்து படித்துச் சொன்னாலும், அதை செயல் படுத்தத்தான் யாராலும் முடியவில்லை. நாளடைவில் அவனைக் கவனிப்பதை நிறுத்திக் கொண்டார்கள்.
அனந்துவின் அம்மாதான் மனதிற்குள் கிடந்து அலை மோதினாள். அவனின் மனநிலை மோசமாகி விடக்கூடாதே என்று தவித்தாள்.
ஆனால் அனந்து மிகவும் மோசமாகிவிட்டான். அடுத்த சில வாரங்களிலேயே மனநலக் குறைவின் எல்லா தன்மைகளும் மீண்டும் அவனிடம் தோன்றிவிட்டன.
ஒருநாள் மதியம் அம்மாவிடம் போய், “எனக்கும் கல்யாணம் செஞ்சிவை…” என்றான். மரகதம் அவன் சொன்னதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் தொடர்ந்து அம்மாவை நச்சரித்துக் கொண்டிருந்தான். மரகதத்திற்கு அவனுடைய கல்யாண ஆசையின் வேகம் புரிந்து அதிர்ச்சியாக இருந்தது.
ஒரு கட்டத்தில் அனந்துவின் நச்சரிப்பை மரகதத்தால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எரிச்சலுடன், “சும்மா என்னைப்போட்டு ஏண்டா பிடுங்கி எடுக்கிற? ஒங்க அப்பாகிட்ட போய்ச் சொல்லு… கல்யாணம் பண்ணி வைக்கச்சொல்லி.” என்றாள்.
உடனே அனந்து தொப்பையைத் தடவிக்கொண்டே அப்பாவிடம் சென்று, “அப்பா, எனக்கு கல்யாணம் செஞ்சு வையுங்க” என்றான்.
கோதண்டராமன் மகனை மேலும் கீழும் எரிச்சலுடன் பார்த்துவிட்டு பதில் சொல்லாமல் தலையைத் திருப்பிக்கொண்டார்.
அனந்து குரலை உயர்த்தி “எனக்குக் கல்யாணம் செஞ்சு வையுங்க” என்றான்.
பன்னிரண்டு வருடங்களுக்கும் மேலாக அவனின் பைத்தியக்காரத்தனமான செய்கைகளைப் பார்த்து பார்த்து மனதிற்குள் வெதும்பிப் போயிருந்த கோதண்டராமனுக்கு கோபம் பற்றிக்கொண்டது.
“மருந்து மாத்திரை சாப்பிடாம, கிறுக்குச் சனியனா ஊரைச்சுத்தி உதவாக்கரையா அலைஞ்சிகிட்டு கல்யாணமாடா பண்ணிவைக்கச் சொல்றே பரதேசிப்பய மவனே… ஒன்ன மாதிரி எவளாவது கிறுக்கச்சி இருந்தா கூட்டிகிட்டு வா கல்யாணம் பண்ணி வைக்கிறேன். மூஞ்சியையும், முகரையையும் பாரு, உனக்கு எவண்டா பொண்ணு கொடுப்பான்? இன்னொரு தடவ கல்யாணப் பேச்சை எடுத்தே உன்னை பைத்தியக்கார ஆஸ்பத்ரியில சேர்த்துடுவேன் ஜாக்கிரதை…”
அனந்துவின் முகம் அஷ்ட கோணலானது… கண்களில் உக்கிரம் தெறிக்க, பளீரென்று அவர்மேல் கனத்த வெளவ்வால் மாதிரி மோதினான். பின் குனிந்து அலேக்காக கோதண்டராமனைத் தூக்கி வராந்தாவின் நீண்ட படிகளில் எறிந்து உருட்டி விட்டான்.
கோதண்டராமன் வலியில் கதறினார். “எனக்கு மட்டும் கல்யாணம் செஞ்சு வைக்கலை… கொலை விழும் இந்த வீட்ல..” உறுமினான்.
வீட்டில் இருந்த அனைவரும் அனந்துவைப் பார்த்து மிரண்டு விட்டனர்.
உடனே வீட்டின் முக்கிய உறவினர்கள் வரவழைக்கப்பட்டு ஆலோசனை நடத்தப் பட்டது.
அனந்துவின் மாமா, “கல்யாணம் செஞ்சி வச்சா, புத்தி தெளிஞ்சு பைத்தியம் தெளிவாகவும் வாய்ப்பு உண்டு… ஏழைப் பெண்ணாகப் பார்த்து அனந்துவைப் பற்றிய எல்லா உண்மைகளையும் சொல்லியே பெண் தேடலாம். அதுக்குமேல கடவுள் சித்தப்படி நடக்கட்டும்” என்றார்.
அனந்துவுக்கு பெண் தேடும் படலத்தை உடனே ஆரம்பித்தனர்.
தீவிர தேடலில் சரோஜா என்ற இருபத்திரண்டு வயது ஏழைப்பெண் சிக்கினாள். அப்பா இல்லாத அந்தப்பெண்ணுக்கு மூன்று தங்கச்சிகள். ஏழ்மையில் அழுந்திக்கிடந்த குடும்பம் என்பதால் உடனே சரியென்று சொல்லிவிட்டார்கள்.
ஆனால் சரோஜாவின் அம்மாதான் எல்லாவற்றுக்கும் சம்மதம் சொன்னாளே தவிர, சரோஜா வாயையே திறக்கவில்லை. பயம் கலந்த மிரட்சியுடன் காணப்பட்டாள்.
கல்யாணநாள் நெருங்கிக்கொண்டிருந்தது…
அனந்துவை அண்ணன்கள் அழைத்துப்போய் புதிய வேஷ்டிகளும், நிறைய சட்டைகளும் வாங்கிக் கொடுத்தனர். அனந்துவின் முகத்தில் வெற்றிப் பெருமிதம் தெரிந்தது.
கல்யாணப் பத்திரிக்கையும் அச்சடித்து வந்தது. சரோஜா என்ற பெயர் தனக்குப் பொருத்தமாய் இருப்பதாக அனந்து சொல்லி சொல்லி இளித்தான். பத்திரிக்கையை அடிக்கடி படித்துப் பார்த்தான்.
அனந்துவின் கல்யாணம் ஒரு வழியாக நடந்து முடிந்தது.
சரோஜாவையே கண் இமைக்காமல் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
கல்யாண அன்றைக்கே சாந்தி முகூர்த்தம். வீட்டு ஹாலில் வலக் கோடி அறை அதற்காக அலங்கரிக்கப்பட்டது.
அனந்து கட்டிலின் விளிம்பில் உட்கார்ந்தபடி வேறு எதோ புதிதாக நடக்கப் போகிறது என்பது போன்ற திருட்டு முழி முழித்துக்கொண்டு குறுகிப்போய் உட்கார்ந்திருந்தான்.
அவனுடைய மூத்த அண்ணன் அவனிடம், “இன்னும் கொஞ்ச நேரத்துல மதினி சரோஜாவைக் கூட்டிக்கிட்டு வருவா… நீயும் அவளும் இந்த ரூமுக்குள்ளயே பேசிட்டு அப்புறமா படுத்து தூங்குங்க… பார்த்து நடந்துக்க” என்றார்.
அனந்து தலையை பெரிதாக ஆட்டினான்.
சற்று நேரத்தில் அறைக்கு வெளியில் வளையல் சத்தமும், கொலுசின் ஓசையும் கேட்டன. அனந்து நிமிர்ந்து உட்கார்ந்தான். சரோஜா உள்ளே வந்து கதவைச் சாத்தினாள்.
குடும்பத்தார் அனைவரும் அவரவர் அறைகளில் படுத்து விட்டாலும் யாருக்குமே தூக்கம் வரவில்லை. அனந்துவுக்கும் கல்யாணமாகி விட்டது என்ற திருப்தி யாரிடத்திலும் இல்லை. மாறாக ஒரு பீதிதான் அனைவரின் மனத்திலும் இருந்தது. மறுபடியும் வெளவ்வால் மாதிரி சரோஜா மீது பாய்ந்து விடுவானோ என்கிற பயம் இருந்தது. மனசு அறிந்தே ஒரு ஏழைப் பெண்ணுக்கு அநியாயம் இழைத்திருப்பதாகத்தான் தோன்றியது.
காலை மணி ஐந்து….
அனந்துவின் அம்மா மரகதம் முதலில் எழுந்தாள். ஹாலுக்குப் போன மரகதம், அங்கு அனந்து மின்சார விசிறியின் கீழே தரையில் தொப்பையைத் தடவியவாறு படுத்திருந்ததைப் பார்த்து அதிர்ந்தாள். அது விகற்பமாகத் தோன்றியது.
‘இவன் எப்போது இங்கே வந்து படுத்தான்?’ என்ற யோசனையுடன் சரோஜா இருந்த அறைக்கதவை மெதுவாக தள்ளிப் பார்த்தாள். கதவு உள்பக்கம் தாழிடப்பட்டிருந்தது.
“சரோஜா…. சரோஜா” என்று கூப்பிட்டாள். பதிலும் இல்லை, கதவும் திறக்கப் படவில்லை.
அனந்துவிடம் சென்று, “நீ எப்படா வெளியில வந்து படுத்தே?” அதட்டினாள்.
அனந்து பதில் பேசாமல், மூக்குத் துவாரத்தை விரலால் நோண்டிக் கொண்டிருந்தான்.
அரவம் கேட்டு வீட்டிலுள்ள அனைவரும் எழுந்து வந்தார்கள். அவர்களும் ஒருவர் மாற்றி ஒருவராக கதவைத் தட்டிப் பார்த்தார்கள்.
சரோஜாவிடமிருந்து பதிலே இல்லை. எல்லோருக்கும் பயமாகிவிட்டது.
கடைசியில் அனந்துவின் அண்ணன்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அங்கு தான் கட்டியிருந்த சேலையால் சரோஜா தூக்குப்போட்டு தொங்கிக் கொண்டிருந்தாள்.
அவசர அவசரமாக உடலை தரையில் கிடத்தினார்கள். அனந்து மிரண்டு விழித்தான். ரொம்பத் தள்ளிப் போய் நின்றுகொண்டான். காரியங்கள் விரைந்து நடந்தன. கோதண்டராமன் பெரிய பணக்காரர் என்பதால் போலீஸ் பிரச்னை வராமல் பார்த்துக் கொண்டார்.
சரோஜாவின் அம்மா வந்து அழுத அழுகைதான் எல்லோருடைய மனங்களையும் உலுக்கியது.
கல்யாணமான அன்று இரவே பெண்டாட்டி செத்துப்போனது அனந்துவை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. ஆனால் அவன் குடும்பத்தினர் எதோ ஒரு சபலத்தில் பைத்தியக்காரனுக்கு கல்யாணம் செய்துவைத்த தங்களின் முட்டாள்தனத்தை எண்ணி வெட்கினார்கள். ஊராரின் மத்தியில் தங்கள் குடும்ப கெளரவமே நாசமாகிப் போய்விட்டதை நினைத்து வருந்தினார்கள்.
ஏழைப்பெண் ஒருத்தியின் உயிரையே கோதண்டராமனின் குடும்பம் குடித்து விட்டதாக ஊர் குற்றம் சாட்டியது.
கோதண்டராமன் தன் மனைவியிடம், “ஒரு பைத்தியத்துக்கு கல்யாணம் செய்துவைத்த பைத்தியக்காரி நீ” என்று புகைந்தார்.
எல்லாப் பழியும் கடைசியில் அனந்துவின் அம்மா மீதுதான் விழுந்தது. அவள் மிகுந்த துயரத்தில் எதுவும் சாப்பிடாமல் படுத்துக் கிடந்தாள். ஒருநாள் ஆத்திரம் வெடிக்க அனந்துவிடம், “கல்யானத்தன்னிக்கி ராத்திரி அவளை என்னடா செஞ்ச? பாவி, நீயேன் வெளில வந்து படுத்த? என்னடா நடந்தது? உண்மையைச் சொல்லுடா…” என்று பொருமினாள்.
அனந்துவின் முகம் கோணலாக ஒருபக்கம் திரும்பி கண்கள் உற்சாகமாக விரிந்தன. அதிசயமான ரகசியம் ஒன்றை மறைத்து வைத்திருக்கின்ற குதூகலமான பாவனையில் பல்லை இளித்துக்கொண்டு, “எனக்கு வேற ஒரு கல்யாணம் செஞ்சி வை… அதைச் சொல்றேன். இல்லேன்னா சொல்ல மாட்டேன். ஹி…ஹி.”
“அடி செருப்பால…. சனியனே.”
அனந்துவின் முகம் கன்றிச் சிவந்தது. உதடுகளை மடித்து மடித்து விழித்தான். ஆள்காட்டி விரலை நீட்டி எச்சரித்படி, “இன்னொரு கல்யாணம் நீ எனக்கு செஞ்சி வைக்கலை, வீட்ல கொலை விழும.”
அப்போது அங்கு வந்த மூத்த அண்ணன் கோபத்தில், “அதான் ஒரு கொலை பண்ணிட்டியேடா பாவி… இனிமே இந்த வீட்ல கல்யாணமும் கிடையாது கருமாதியும் கிடையாது. நம்ம வீட்ல சட்டி சட்டியா சோறு இருக்கு, அதத் தின்னுட்டு வாயை மூடிகிட்டு கெட…” – கத்தினார்.
“இன்னொரு கல்யாணம் செஞ்சி வைக்கலை… கொலை விழும் சொல்லிட்டேன்.”
“அதக்கு முந்தி ஒன்னைக் கொன்னு குழி வெட்டிப் புதைச்சிட்டுத்தாண்டா மறுவேலை பார்ப்பேன்… நாயே என்னையேவா பயம் காட்டற?”
“டாய்…” அனந்து ஆக்ரோஷத்துடன் உறுமினான். அவனுடைய கண்கள் சிவாந்து நிலை குத்தி நின்றன. அமானுஷ்யமாக குரலெழுப்பி குரோதத்துடன் அண்ணனின் மேல் பாய்ந்து கீழே தள்ளிவிட்டு, அவரை அடிக்க கையில் ஏதாவது கிடைக்கிறதா என சற்றும் முற்றும் பார்த்தான்.
அதற்குள் இரண்டாவது அண்ணனும் சேர்ந்துகொண்டு அனந்துவை தாக்க முற்பட்டார்கள்.
அனந்து சரலென வீட்டிலிருந்து வெளியேறி தெருவில் இறங்கி தலை தெறிக்க ஓடினான். அண்ணன்கள் இருவரும் அவனைத் துரத்திக்கொண்டு ஓடினார்கள்.
அனந்து வெறி பிடித்த மாதிரி அருகேயிருந்த ரயில்வே ட்ராக்கில் ஓட, எதிரே விரைந்து வந்து கொண்டிருந்த வைகை எக்ஸ்பிரஸ் அவனை ஓங்கி அடித்துத் தூக்கி எறிந்தது.
அனந்து துடி துடித்து அடுத்த கணம் அடங்கிப்போனான்.
அவன் முற்றிலுமாக அடங்கிப் போனதைப் பார்த்த அண்ணன்கள் இருவரும் நிம்மதியடைந்தனர்.
அனந்துவின் அம்மா மரகதம் மட்டும் பாவம் அழுது கொண்டேயிருந்தாள்.