பேருந்து நிற்குமிடம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 16, 2022
பார்வையிட்டோர்: 2,721 
 
 

போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து இன்றோடு நாற்பது வருடங்கள் கடந்து விட்டன. மாலையில் ஓய்வுபெற்று கழுத்து மாலையோடு வீடு திரும்பும்போது என்னோடு பணிபுரிந்த நண்பர்களும் கூடவே வந்தனர். அவர்களுக்கு மனைவி சங்கீதா எளிமையான ஒரு சிற்றுண்டியை ஏற்பாடு செய்து வைத்திருந்தாள். எல்லோரும் சேர்ந்து சாப்பிடத் தொடங்கினார்கள். அவர்களுக்கு வேண்டியதைக் கேட்டு சங்கீதாவும் மகள் கலையரசியும் அன்போடு பரிமாறிக் கொண்டிருந்தார்கள். எனக்குத்தான் ஒன்றுமே புரியவில்லை. விசாரிக்க வந்த நண்பர்களிடம் கையைக் கொடுப்பதும், விடுவிப்பதுமாக நேரம் ஓடிக் கொண்டிருந்தது. நெருங்கிய நண்பர்களில் சிலர் மட்டும் தோளைத் தட்டிக் கொடுத்துவிட்டு நாளைக்கு வந்து பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டுப் போனார்கள். அந்த வார்த்தைகூட சம்பிரதாயமா அல்லது உண்மையானதா என்று தெரிந்துகொள்ளும் மனநிலையில்கூட நானில்லை.

ஏதோவொரு இடத்தில் நான் மட்டுமே தனியாக நிற்பதுபோலத் தோன்றியது. தூரத்தில் ஒரு ரயில் வண்டி போகிறது. அந்த வண்டியிலிருந்து யாரோ சிலர் எனக்கு மட்டும் கையசைக்கிறார்கள். பதிலுக்கு நானும் அவர்களுக்கு கைகளை அசைக்க முயற்சி செய்கிறேன். ஆனால், வலது கை அசையாமல் மரத்துப் போய்விட்டது. மீண்டும் ஒருமுறை மூட்டோடு சேர்த்து அசைத்துப் பார்க்கிறேன். ஒரு அசைவும் நிகழவில்லை. நான் நின்றுகொண்டிருந்த மணல் மேட்டின் விளிம்பிலிருந்து சரிந்து விழுகிறேன்.

ஏறக்குறைய நான் கீழே விழும் நேரத்தில்தான், மாதவன் வந்து தோளைப்பிடித்து உலுக்கினான். ‘என்ன செல்வராஜ் உனக்குக் கவலை? சந்தோசமாக இரு. இனிமேல் உனக்கு எந்தக் கஷ்டமும் இல்லை. வருகிற செட்டில்மெண்ட் பணத்தில் மகளுக்கு நல்ல இடமாகப் பார்த்துக் கட்டிக் கொடுத்து விட்டால் போதும். பிறகென்ன உனக்குக் கவலை. இன்னும் இரண்டு வருஷம் போனால் போதும், உன் மகனும் நல்ல வேலைக்குப் போய்விடுவான். வருகிற பென்ஷன் பணம் உன் வாழ்நாள் முழுக்க உட்கார்ந்து சாப்பிடலாம். எதையும் மனதில் நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்காதே!’ என்று மாதவன் தனது வாயை நிறுத்தாமல் ஓயாது உளறிக் கொண்டிருந்தான். உண்மையில் மாதவனின் சுபாவமே அதுதான். யாரிடமும் எளிதில் நெருங்கி விடுவான். கூட வேலை செய்பவர்களின் குடும்பச் சூழ்நிலையை அவனைவிடப் புரிந்து கொண்டவர்கள் யாருமில்லை. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவர்களது வீட்டிற்கு அழையாத விருந்தாளியாகச் சென்று அவர்களிடையே ஒன்றி விடுவான். அவர்களது வீட்டுப் பெரியவர்கள், குழந்தைகள் என ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக தின்பண்டங்களை வாங்கிச் சென்று அவர்களைத் திக்குமுக்காடச் செய்து விடுவான். அப்படியான மாதவன்தான் ‘கவலைப்படாதே செல்வராஜ். யாரும் வரவில்லையென்றாலும் நான் வந்து உன்னை அடிக்கடி பார்த்துக் கொள்கிறேன். உனக்கேதும் உதவியென்றால் என்னிடம் தயங்காமல் கேள், நான் வந்து செய்து கொடுக்கிறேன்’ என்று விடாமல் பேசிக்கொண்டிருக்கிறான்.

மாலையில் தொடங்கிய விருந்து உபசரிப்பு இரவு ஒன்பது மணிக்குத்தான் முடிந்தது. சங்கீதாவின் தம்பியும் அவனது நண்பர்களைத் தவிர மற்ற எல்லோரும் சென்றுவிட்டனர். பசியெடுப்பதுபோலத் தோன்றவும் ஒரு கூஜாவிலிருந்த தண்ணீரை முழுவதுமாகக் குடித்து முடித்தேன்.

மலையிலிருந்து வேகமாக இறங்கத் தொடங்கி விட்டேன். இருள் வேகமாகச் சூழத் தொடங்கிவிட்டது. சூரியன் அகல்வதற்குள் சமவெளியை அடைந்துவிட்டால் போதும். அதற்குப் பிறகு எளிதாக நடந்து வீட்டிற்குச் சென்று விடலாம் என்ற எண்ணமே என்னை வேகமாக நடக்கத் தூண்டியது. இப்போதும் நான் வேகமாக நடந்து விடலாம் என்றால் கால்கள் இரண்டும் ஒத்துழைக்க மறுக்கின்றன. இடது காலின் முட்டியிலிருந்து வலியெடுக்கத் தொடங்கிவிட்டது. வேகமாக நடந்ததால் காலே இரண்டு துண்டாக உடைந்து விடும் அளவிற்குப் போய்விட்டது. வலதுகாலை வேகமாக ஊன்றியும் இடதுகாலை இழுத்துக்கொண்டும் சரிவினை நோக்கி ஊர்ந்து செல்லத் தொடங்கினேன். பெருத்த இடிகளோடு தோன்றிய மழை சடசடவெனக் கொட்டத் தொடங்கி விட்டது. வெள்ளமாகப் பெருகிய மழையில் நான் எங்கே விழுந்தேன் என்றே தெரியவில்லை. இரண்டு கால்களிலும் அசைவில்லை. இரண்டு கைகளை உயரத் தூக்கி ஓசையெழுப்பிக் கொண்டே உதவி கேட்கிறேன். என் சத்தம் யாருடைய காதுகளிலும் விழவில்லை. எல்லோரும் தத்தமது வீடுகளை நோக்கி ஓடிக் கொண்டிருந்தனர். நான் மெல்ல மெல்ல சேற்றில் புதையத் தொடங்கினேன்.

மறுநாள் ஆறுமணிக்குத்தான் கண்விழித்தேன். கூரையின் குறுக்காகக் கட்டப்பட்டிருந்த விட்டத்தின் நடுவே ஓடிக்கொண்டிருந்த மின் விசிறியை இன்றுதான் முழுமையாகப் பார்க்கிறேன். அதன் சீரான வேகத்தில் எவ்விதமான தடுமாற்றமும் இல்லை. தன்னால் இயன்ற அளவிற்கு காற்றை அள்ளி வீசியது. பயணிகள் இறங்குவதற்காகவோ அல்லது ஏறுவதற்காகவே நின்று போகும் பேருந்துகளின் இரைச்சல் வீடுவரை கேட்டது. படுக்கையிலிருந்து எழுந்து வெளியே வந்தேன். கொடி முல்லை பூத்துக் கொட்டியிருந்தது. தென்னங்கன்று குருத்துவிடத் தொடங்கி விட்டது. வாசலில் தெளிக்கப்பட்டிருந்த தண்ணீரின் ஈரம் காய்ந்திருந்தது. சிறிய வரிசையிலான எறும்புக் கூட்டமொன்று முள்வேலியின் குறுக்காக ஊர்ந்துகொண்டிருந்தது. மகள் கலையரசி பள்ளிக்கூடம் செல்ல முன்தயாரிப்பு வேலைகளில் இருந்தாள். மனைவி வைத்து விட்டுப்போன தேநீர் மாம்பலகைப் பெஞ்சில் ஆறிக் கொண்டிருந்தது. மனம் எதன் மீதும் ருசியற்றுக் கிடக்கிறது. யார்பொருட்டும் கவலைப்பட ஒன்றுமில்லாத ஒரு வாழ்விற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறேன் என்பது மட்டும் எனக்கு த்தெளிவாகத் துலங்குகிறது.

வேலையின் பொருட்டு ஓடிக்கொண்டிருந்த நாட்களில் குடும்பம் மட்டுமே நினைவில் இருந்தது. கலையரசி அப்போது பிறக்கவில்லை. வேலை முடிந்தால் வீடுதான். வேறெங்கும் செல்வதில்லை. டெப்போவிலிருந்து வருகிற வழியில் தென்படும் நண்பர்கள் விருப்பத்தோடு குடிப்பதற்கு அழைப்பார்கள். ஆனாலும், நான் குடியை நாடியதில்லை. கைநிறைய கலெக்சன் படிக்காசு இருந்தாலும் குடிப்பதில் ஆர்வம் ஏற்பட்டதேயில்லை. ஹோட்டலில் சாப்பிடும் பழக்கம்கூட இதுவரையில்லை. மணி இரண்டானாலும் வீட்டிற்கு வந்துதான் மதிய சாப்பாடு. சங்கீதாவும் நன்றாகச் சமைக்கக் கூடியவள்தான். ஒருநாள் மதியம் வண்டியேறினால் மறுநாள் மதியம்தான் இறங்க முடியும். அதுபோன்ற நாட்களிலும் வீட்டிற்கு அருகே வருகிற நகரப் பேருந்துகளில் கேரியரில் சாப்பாட்டினைக் கொடுத்து விடுவாள். மதியம் சாப்பிட்டது போக இரவிற்கும் அதே சாப்பாட்டினையே சாப்பிட்டுப் பழகி விட்டது. வருடங்கள் ஓடின. கலையரசி பிறந்தாள். திருமணத்தில் பிரிந்துபோன இரண்டு குடும்பமும் ஒன்று சேர்ந்து கலையரசியைக் கொண்டாடினார்கள். கலையரசியின் பாட்டி ஊரான பாலக்காட்டில் வைத்துத்தான் அவளுக்கு முடியிறக்கி காது குத்தினோம். மகள் வளரத் தொடங்கினாள். பொறுப்புகள் கூடிவிட்டதாக ஒரு நினைப்பு தானாகவே வந்து சேர்ந்து கொண்டது. இரண்டாவதாக மகனும் பிறந்தான். மேலும் செலவு கூடியது. ஓய்வு கிடைக்கும் நாட்களில்கூட டூட்டி கிடைத்தால் ஓட்டத் தொடங்கினேன். உடல் சோர்ந்தாலும் மனம் சோர்ந்துவிடாமல் பார்த்துக் கொண்டேன். மகளும் மகனும் வளர்ந்து கொண்டே இருந்தார்கள். என்னுடைய சம்பளம் மட்டும் போதுமானதா? என்பதும் தெரியவில்லை. ஆனாலும் குடும்பம் சீராகவே ஓடிக் கொண்டிருந்தது.

சங்கீதாவைப் பற்றி நண்பர்கள் கிசுகிசுப்பாக பேசிக்கொள்வது காதில் விழுந்த அன்று மனதில் எதுவோ சுறுக்கென்று தைத்தது. சீராகப் போய்க்கொண்டிருந்த குடும்ப உறவில் விரிசல் விழுமோ எனப் பதறினேன். நண்பர்கள் பேசியது புரிந்தாலும், நான் அதை நம்பவில்லை. இதுபோன்ற பேச்சுகளையே அடிக்கடி பேசிக்கொள்ளும் அவர்களிடமிருந்து விலகத் தொடங்கினேன். சங்கீதாவிடம் இதுபற்றிக் கேட்கத் தோணவில்லை.

இத்தனை வருடங்களாக சங்கீதா எப்போதும் போல்தான் பேசிக்கொண்டிருக்கிறாள். அவளது நடவடிக்கையில் எவ்வித மாற்றமும் தென்படவில்லை. நண்பர்கள் சொன்னது ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மனதில் பதிந்து விட்டதால், எப்போதாவது அது மேலெழுந்து வருகிறது. இன்றுகூட நான் டூட்டி முடிந்து வீட்டிற்கு வந்து வெகுநேரமாகிவிட்டது. அவளைக் காணவில்லை. சாப்பாடு அனைத்தையும் தனித்தனியாக மூடி கூடத்தில் வைத்திருந்தாள். மகனும், மகளும் கல்லூரிக்குச் சென்றுவிட்டார்கள். சாப்பிடத் தோணவில்லை. ஆனால் பசி விடவில்லை. சாப்பிட்டுவிட்டுப் படுத்தவன்தான் மாலைதான் எழுந்தேன். சங்கீதாவும் மகளும் அடுப்படியில் நின்றுகொண்டிருந்தார்கள். மகனைக் காணவில்லை.

வாசலுக்கு வந்தேன். தீபாவளிக் கூட்டம் பேருந்துகளில் நிரம்பி வழிந்தது. இருசக்கர வாகனங்களும் நகரத்தை நோக்கி ஓடிக்கொண்டிருந்தன. அடுத்த வாரம் போனஸ் வந்துவிடும். பிறகுதான் நானும் குடும்பத்தோடு நகரம் செல்ல முடியும். இந்த வருடமாவது நல்லதாக இரண்டு சட்டைகள் வாங்க வேண்டும். காக்கி உடையினை உடுத்தியே வெகுகாலம் ஓடிவிட்டது. விசேஷங்களுக்குப் போய் வர நல்லதாக ஒரு சட்டையுமில்லை. சங்கீதாவும் அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பாள். நான்தான் அடுத்தமுறை எடுத்துக்கொள்ளலாம் என்று வந்துவிடுவதுண்டு. மகள் டீ கொண்டு வந்து கொடுத்தாள். இந்தக் குளிருக்கு இதமாக இருந்தது. அம்மா எங்கே போனாள்? எனக் கேட்க நினைத்து அப்படியே நிறுத்திக்கொண்டேன். பகலில் தூங்கிவிட்டதால் இரவில் வெகுநேரமாகியும் உறக்கமில்லாமல் புரண்டுகொண்டிருந்தேன். சங்கீதாவைப் பார்த்தேன். நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தாள். கூரையின் மீது எலியும், பூனையும் ஓடிக்கொண்டிருந்தன.

மகனுக்கு கோயம்புத்தூர்ப் பக்கம் என்ஜினியரிங் காலேஜில் வாய்ப்பு கிடைத்தது. வீட்டில் எல்லோருக்கும் மகிழ்ச்சிதான். நான்குவருடம் முடித்துவிட்டால் நான் பணிபுரியும் கார்ப்பரேஷனில் அவனும் ஒரு அதிகாரியாகிவிடுவான். கல்லூரிச் செலவும் குறைவுதான். மகனும் நன்றாகப் படிக்கக் கூடியவன். எல்லோருக்குமான சந்தோஷத்தில் அவனும் என்ஜினியரிங் படிக்கத் தொடங்கிவிட்டான். போகவும் வரவுமான போக்குவரத்துச் செலவினை நான் வேலைபார்க்கும் கார்ப்பரேஷனே ஏற்றுக்கொண்டுவிட்டது. அதனால் ஓரளவு சிரமம் குறைந்தது.

வேளாங்கன்னி திருவிழாவிற்காக பத்து நாட்கள் நாகப்பட்டினம் டெப்போவில் தங்க வேண்டியிருந்தது. இரவும் பகலும் தூக்கமில்லை. பயணிகள் கூடும் போதெல்லாம் வண்டி எடுக்க வேண்டும். நேரம் காலமில்லாமல் ஓட்ட வேண்டியிருந்தது. மனைவியோ குடும்பமோ ஞாபகத்திற்கு வரவில்லை. போதுமான உணவும் இல்லை. எப்படியோ சமாளித்துவிட்டு வீடு சேர்ந்தேன். நான் இல்லாமலே பழகிவிட்ட வீட்டிற்கு நானே அந்நியமாகத் தோன்றினேன். மனைவி சங்கீதாவின் உடல் இளைத்துப் போனதாகத் தோன்றியது. உடம்புக்கு என்ன? எனக் கேட்டேன். நீங்க என்ன புதுசாக் கேட்கிறீங்க?’ என்று சிரித்துக்கொண்டே சோற்றினைப் பரிமாறினாள். கலையரசியைக் காணவில்லை. மகள் எங்கே? என்று கேட்டவுடன் வந்து நின்றாள். பத்து நாள் வேலை உடம்பைப் புரட்டிப் போட்டுவிட்டது. சாப்பிட்ட கையைக் கழுவியதுகூடத் தெரியவில்லை. உறங்கிவிட்டேன்.

சங்கீதாவின் உடலுக்கு ஏதோ பிரச்சினை; அடிக்கடி மருத்துவமனை செல்கிறாள் என்பதுதான் நான் அறிந்த சேதி. என்னிடம் ஏதும் சொல்லிக்கொண்டதில்லை. தானாகவே சிகிச்சை எடுத்துக்கொள்கிறாள். அவளைக் கூட்டிக்கொண்டு மருத்துவமனை செல்ல எனக்கும் ஓய்வில்லை. வாரத்திற்கு ஒருமுறை மருத்துவமனை சென்றவள் அடிக்கடி செல்ல ஆரம்பித்துவிட்டாள். மகள் கலையரசியை வைத்துக்கொண்டு அவளிடம் பேச விருப்பமில்லை. ஏதோ தவறு நடக்கிறது என்ற எண்ணம் மட்டும் உறுதியானது. ஆனால், சங்கீதாவை நேரில் பார்த்தால் இருந்த சந்தேகமெல்லாம் தவிடுபொடியாகிவிடும். அவளும் என்னிடம் தன் குறையாக இதுவரை எதையும் பேசியதில்லை. எப்போதாவது இரவில் அணைத்துக்கொள்வோம்.

மகனுக்கு ட்ரெயினிங் முடிந்து வேலை கிடைத்துவிட்டால் என் சுமையெல்லாம் இறங்கிவிடும். முப்பது வருடக் கஷ்டத்திற்குத் தற்காலிகமான ஓய்வாவது கிடைக்கும். முன்புபோல் பேருந்து ஓட்ட முடியவில்லை. வேலை முடிந்து வீட்டிற்கு வந்து படுத்தால் போதும் என்ற அளவிற்கு உடல் சோர்ந்துவிடுகிறது குழந்தைகளிடம் நெருங்கிப் பழகவோ, விளையாடவோ முடியாத ஒரு வேலையில் சேர்ந்தது என்னுடைய மிகப்பெரிய தவறுகளில் ஒன்றாகவே நினைத்து இப்போதும் வருத்தப்படுவதுண்டு. இரண்டு குழந்தைகளையும் பள்ளியில் சேர்த்ததோடு சரி. பிறகு அந்தப் பக்கமே நான் திரும்பியதில்லை. அதைப்போல்தான் கல்லூரியிலும், பொறியியல் கல்லூரியிலும் சேர்த்ததோடு சரி. மறுபடியும் அங்கே செல்லவேயில்லை. இடைப்பட்ட நாட்களில் கல்வி நிறுவனங்களிடமிருந்து பெற்றோர் வருகை அவசியம் என்ற பட்சத்தில் சங்கீதான் போய் வருவாள். பட்டமளிப்பு விழாவிற்கு கலையரசி அழைத்தபோதும்கூட உரிய நேரத்தில் என்னால் செல்ல முடியவில்லை. இரண்டு நாட்கள் பேசாமலே இருந்தாள். இப்போதும்கூட கல்லூரி முடிந்து என்ன செய்யப் போகிறாய்? என்று அவளிடம் கேட்கவில்லை. அவளும் என்னிடம் எதுவும் சொல்வதில்லை. மதிய நேரங்களில் சங்கீதா இல்லையென்றால் கலையரசிதான் சாப்பாட்டினை எடுத்துவந்து கூடத்தில் வைத்துவிட்டுப் போகிறாள். சாப்பிடும்வரை திண்ணையில் காத்திருந்து சாப்பிட்டு முடித்தவுடன் பாத்திரங்களைக் கொண்டு சென்று அடுப்படியில் வைத்துவிட்டு திண்ணையில் கிடக்கும் தையல் மிஷினில் உட்கார்ந்து விடுகிறாள். ஒருவருட காலமாக சங்கீதாவும் சரிவரப் பேசியதில்லை. கடந்த ஆறுமாத கலமாக கலையரசியும் பேச்சைக் குறைத்துக்கொண்டாள்.

நண்பர்களின் தொடர் பிடிவாதத்தால் ஒருநாள் மதுக்கடைக்குச் சென்றுவிட்டேன். இரவு நேரம் என்பதால் கடையில் கூட்டம் நிரம்பியிருந்தது. ஒவ்வொரு மேசையிலும் வெவ்வேறு நண்பர்கள் கூட்டமாக அமர்ந்து குடித்துக்கொண்டிருந்தார்கள். நண்பர்கள் ஐந்துபேரும் சேர்ந்து ஒரு மேசையில் அமர்ந்துகொண்டோம். பிராந்தியின் முதல் மிடறைச் சுவைக்கத் தொடங்கினேன். உலகம் பிரகாசமானது. இருளாகத் தோன்றிய அனைத்தும் துல்லியமாக புலப்படத் தொடங்கியது. நண்பர்கள் என்னை வேடிக்கையாகப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தார்கள். என் குடும்பத்தைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நானும் கேட்டுக்கொண்டிருந்தேன். நான் ஏதோ தடுமாறித் தடுமாறிப் பதில் சொல்ல முயன்றேன். ஆனால், சங்கீதாவை என்னால் அப்படி ஒருபோதும் நினைக்க முடியாது என்பதில் மட்டும் தெளிவாக இருந்தேன். என் செய்கையால் அவர்கள் எரிச்சலுற்றார்கள். தங்களுக்குள் கோபப்பட்டுப் பேசிக்கொண்டவர்கள், மீண்டும் நிறையக் குடித்தார்கள். பின் என்னை அங்கேயே விட்டு விட்டுக் கிளம்பிப் போனார்கள். நானும் கொஞ்சம் தனியாக வாங்கிக் குடித்துவிட்டுக் கீழே விழுந்துவிட்டேன். தெளிவில்லாத போதையில் யாரோ கொண்டுவந்து வாசலில் விட்டார்கள். கதவைத் தொட்டவுடன் திறந்துகொண்டது. சங்கீதாவும், மகளும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். தெளிவாக இருந்த சங்கீதாவின் முகம்தான் நான் போதையில் நினைவு தவறுவதற்கு முன் கடைசியாகப் பார்த்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *