கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 1, 2013
பார்வையிட்டோர்: 16,927 
 
 

செல்ஃபோனில் செய்தி வந்ததற்கான சத்தம் கேட்டது. “இது ஒரு தொல்ல. சம்பந்தம் இல்லாம செய்தி போடுவானுவோ. அது ஆஃபர், இது ஆஃபர்ன்னு” என்று சொல்லி அலுத்துக்கொண்டே சோபா மீது கிடந்த செல்போனை எடுத்து செய்தியைப் படித்தாள் சங்கீதா. “இன்றிரவு ஆஸ்திரேலியா போகிறேன். பெட்டியை தயார் செய்யவும்’ என்று பாஸ்கர் அனுப்பியிருந்த செய்தியைப் படித்ததுமே அவளுடைய முகத்தில் மலர்ச்சி ஏற்பட்டது. உற்சாகமாக உடனே போன் போட்டாள்.

“ஹலோ. நாந்தான் பேசுறன். ஆஸ்திரேலியா போறீங்கன்னு செய்தி போட்டு இருக்கீங்களே ” என்று சிரித்துக்கொண்டே கேட்டாள்.

“இப்பத்தான் முடிவாச்சி. நீ என்னோட பெட்டிய ரெடி பண்ணு. நான் கொஞ்சம் பிஸியா இருக்கன். அப்புறம் கூப்புடுறன்” என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டான் பாஸ்கர். மீண்டும் போன் போட்டாள். போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. லேசாக கோபம் வந்தது. எத்தனை நாள் பயணம், என்ன காரணம், பெட்டியில் என்னென்ன எடுத்து வைக்க வேண்டும் என்றுகூட சொல்லாமல் போனை வைத்துவிட்டானே என்று மீண்டும் போன் போட்டாள். போன் அணைத்து வைக்கப்பட்ட நிலையிலேயே இருந்தது. அவளுக்கு காரணமில்லாமல் சலிப்பு உண்டாயிற்று. “மொட்டயா சொன்னா என்னா செய்ய முடியும்?” என்று சொல்லி அலுத்துக்கொண்டே தொலைக்காட்சியைப் பார்த்தாள். தொலைக்காட்சியைப் பார்த்தாளே ஒழிய அதில் என்ன ஓடிக்கொண்டிருந்தது என்பது அவளுடைய மனதிலும் பதியவில்லை, கண்களிலும் பதியவில்லை. வீட்டிலிருந்த அமைதியைக் குலைக்காமல் எழுந்து சென்று அறையிலிருந்த பாஸ்கரனின் பெட்டியை எடுத்துவந்து சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.

இரண்டு பேண்ட், இரண்டு சர்ட்டுகளை எடுத்து வைத்தாள். சோப்பு, சீப்பு, பவுடர், பேஸ்ட், பிரஷ், சென்ட் பாட்டில், கர்ச்சீப், துண்டு என்று எடுத்து வைத்தாள். எத்தனை பேண்ட், எத்தனை சர்ட் வைக்க வேண்டும் என்பது தெரியாததால் பாஸ்கரனுக்கு மீண்டும் போன் போட்டாள். போன் ஆன் செய்யப்படவில்லை. கோபம் வந்தது. சங்கீதா வெறுப்புடன் பெட்டியை மூடினாள். பாஸ்கர் எப்போது வருவான், எப்போது கிளம்புவான் என்பது தெரியாததே அவளுக்கு எரிச்சலை உண்டாக்கிற்று. அந்த வீட்டில் அவள் மட்டுமே இருந்தாள். அவள் காத்திருந்தாள். அவள் செய்யக்கூடியது அது மட்டுமே. தன்னையும், அந்த சூழலையும் மறக்க முயன்றாள். வெளியே வந்து பால்கனியில் நின்றுகொண்டு கீழே பார்த்தாள். ஆறாவது மாடியிலிருந்து கீழே பார்ப்பதால் லேசாக தலை கிறுகிறுப்பு உண்டாயிற்று. எங்கு பார்த்தாலும் கட்டடமாகத் தெரிந்தது. தரை கண்ணில்படவில்லை. அவளுடைய பிளாட்டுக்கு நேர்கீழே துணி தேய்த்துத் தருகிற வேலம்மாளுடைய மூன்று பிள்ளைகள் ஓடிப் பிடித்து விளையாடிக்கொண்டிருந்தன. பிளாட்டுகளில் இருக்கும் பிள்ளைகள் விளையாடுவதே இல்லை. எல்லா வீடுகளுமே மாடிகளில் இருந்தன. ஒவ்வொரு முறை கீழே வருவதும் மேலே போவதுமே பெரிய வேலையாக இருப்பதால் அநாவசியமாக்க் கீழே வரமாட்டார்கள். அதனால் பிள்ளைகளை மட்டுமல்ல பெரியவர்களையும் அதிகமாகப் பார்க்க முடியாது. ஆட்களை வீட்டைவிட்டு வெளியே போகும்போதும் அதேமாதிரி வெளியிலிருந்து வீட்டுக்கு வரும்போதும்தான் பார்க்க முடியும். அதுவும் சிறிது நேரம்தான். லிப்டிலிருந்து இறங்கியதுமே காரில் ஏறிவிடுவார்கள். அதேமாதிரி வெளியிலிருந்து வரும்போது காரைவிட்டு இறங்கியதுமே லிப்டில் ஏறிவிடுவார்கள். காரில் ஏறும்போது, காரை விட்டு இறங்கும்போது, லிப்டில் வரும்போது, லிப்டுக்காக காத்திருக்கும்போது மட்டும்தான் ஆட்களோடு பேச முடியும். அதுவும் “ஹலோ”, “ஹாய்”, “ஹௌ ஆர், யூ” “பாய்” என்பதோடு சரி. நானூறு ஐநூறு மீட்டர் தள்ளியிருந்த பழைய மகாபலிபுரம் ரோட்டைப் பார்த்தாள்.

பந்தயத்தில் ஓடுவதுமாதிரி இரு சக்கர வாகனங்களும் கார்களும் அடுக்கடுக்காக ஓடிக்கொண்டிருந்தன. சினிமாவில் பார்ப்பதுமாதிரி இருந்தது. சாலையில் ஓடிய கார்களும், இரு சக்கர வாகனங்களும், ரோடும் தமிழ்நாடுதானா என்ற சந்தேகத்தை உண்டாக்கிற்று. அவளுடைய பார்வை மீண்டும் வேலம்மாளுடைய குழந்தைகளுடைய விளையாட்டுப் பக்கம் திரும்பியது. அப்போது செல்ஃபோனில் செய்தி வந்ததுபோல் சத்தம் கேட்டதுமாதிரி இருந்தது. வேகமாக உள்ளே வந்த போனை எடுத்துப் பார்த்தாள். செய்தி எதுவும் வந்திருக்கவில்லை. பாஸ்கருக்கு போன் போட்டாள். போன் ஆன் செய்யப்படவில்லை. எப்போது வீட்டுக்கு வருகிறாய், எப்போது ஊருக்கு கிளம்ப வேண்டும், என்னென்ன பொருள்களை எடுத்து வைக்க வேண்டும் என்று செல்போனில் செய்தி அனுப்பினாள். செய்தி அனுப்பிய சிறிது நேரத்திலேயே ‘பெயில்டு’ என்று பதில் வந்தது. சொல்போனை போட்டு உடைத்துவிடலாம் போலிருந்தது. பாஸ்கரனின் பெட்டியைப் பார்த்தாள். உடனே பனியன், ஜட்டி, ஷேவிங் பொருள்களையும், சுரம், தலைவலி மாத்திரைகளையும் எடுத்து வைத்தாள். அப்போது அழைப்பு மணி அடிக்கிற சத்தம் கேட்டது. பாஸ்கர்தான் வந்திருப்பான் என்று வேகமாகச் சென்று கதவைத் திறந்தாள். வேலம்மாள் நின்று கொண்டிருந்தாள். ஒன்றும் சொல்லாமல் அவள் கொடுத்த துணிகளை வாங்கிக்கொண்டு வந்து சோபாமீது வைத்தாள். அப்போது வேலம்மாள் ஏதோ பேச முயன்றாள். அவளை பேசவிடாமல் பணத்தை கொடுத்து “ஐயா இன்னிக்கி ஊருக்குப் போறாங்க. அப்புறமா பேசிக்கலாம்” என்று சொல்லி அனுப்பினாள். பக்கத்திலிருந்த இரண்டு பிளாட்டுகளின் கதவுகளைப் பார்த்தாள். பூட்டியிருந்தது. தன் வீட்டுக் கதவையும் சாத்தினாள் சங்கீதா.

தன்னுடைய நண்பர்களுக்குப் போன் போட்டாள். எல்லாருடைய செல்போன்களுமே அணைத்து வைக்கப்பட்டிருந்தது. “ஐ.டி.யில் வேலப் பாக்கிற எல்லாருமே ஒண்ணுபோலத்தான் இருக்காங்க” என்று முணுமுணுத்தாள். திடீரென்று அவளுக்கு பாஸ்கர் மீதும் தன்னுடைய நண்பர்கள் மீதும் வீட்டின்மீதும் ஏன் அவள்மீதும் கோபம் வந்தது. கோபத்திற்கான காரணம்தான் தெரியவில்லை. .ஏ.சி., வாஷிங்மிஷன், டி.வி., மியூசிக் சிஸ்டம், ஃபேன் என்று ஒவ்வொன்றாகப் பார்த்துகொண்டே வந்த அவளுடைய பார்வை பாஸ்கரனின் போட்டோ மீது வந்து நின்றது. வீடு பொருட்களின் கிடங்காகத் தோன்றியது

உணவு மேசை மீதிருந்த திராட்சையில் ஒன்றை எடுத்து வாயில் போட்டு சப்பி சாப்பிட்டாள். லேசாகப் புளிப்பதுமாதிரி இருந்தது. அப்போதுதான் அவளுக்கு வேலம்மாள் என்ன சொல்ல வந்தாள் என்பதைக் கேட்டிருக்கலாம் என்று தோன்றியது. கல்யாணமாகி பாஸ்கருடன் இந்தக் குடியிருப்புக்கு வந்த மூன்று ஆண்டுகளாக நாள் தவறாமல் பேசுகிற ஒரே ஆள் அவள்தான். ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் சில்லறை இல்லை. பிறகு தருகிறேன் என்று சொன்னால் ஒன்றும் சொல்லமாட்டாள். தர வேண்டிய கடனை ஞாபகம் வைத்துக்கொண்டு திரும்பக் கேட்கமாட்டாள். துணி எடுத்துக்கொண்டு வரும்போது ஏதாவது வேலைசொன்னால் முகம் சுளிக்காமல் செய்வாள். முப்பது வயதிற்குள்தான் இருக்கும். எதற்கெடுத்தாலும் சிரிப்பாள். அவளுடைய குழந்தைகள் விளையாடுகிற சத்தம்தான் ஓயாமல் கேட்டுக்கொண்டிருக்கும். அதேமாதிரி அழுகிற சத்தமும் அவளுடைய குழந்தைகளிடமிருந்துதான் கேட்கும். எவ்வளவு நேரம் பேசிக்கொண்டேயிருந்தாலும் மற்ற பிளாட்டுகளில் உள்ளவர்களைபற்றி ஒரு வார்த்தைகூடப் பேசமாட்டாள். ஆனால் தன்னுடைய அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, புருசன், மாமனார், மாமியார் என்று ஒவ்வொருரைப்பற்றியும் சொல்வதற்கு அவளிடம் ஆயிரம் விசயங்கள் இருந்தன. மூன்று வருசத்தில் வேலம்மாளைத்தவிர தன்னிடம் அதிகம் பேசியவர்கள் யார் என்று நினைத்துப் பார்த்தாள். சட்டென்று ஒரு பெயர்கூட நினைவுக்கு வரவில்லை. வீட்டுக்கு வருபவர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பம்தான். அவளும் அதிகமாக யாருடைய வீட்டுக்கும் போனதில்லை.

அழைப்பு மணி அடித்தது. எழுந்துபோய்க் கதவைத் திறந்தாள். பாஸ்கர் நின்று கொண்டிருந்தான்.

“ஹாய்”.

‘‘ஹாய், டீயா, காபியா?” என்று சங்கீதா கேட்டாள்.

“டீ” என்று சொல்லிவிட்டு “பெட்டி ரெடியா?” என்று கேட்டான்.

“என்ன திடீர்னு ஆஸ்திரேலியா புரோகிராம்?” என்று கேட்டுக்கொண்டே டீ போடப் போனாள்.

“திடீர்னு முடிவாயிடிச்சி. பாஸ் போகச் சொல்லிட்டாரு. பெட்டிய ரெடி பண்ணுனியா? இல்லியா?” என்று கேட்டான். அவனாகவே எழுந்துவந்து டீயை எடுத்துக்கொண்டுபோய் சோபாவில் உட்கார்ந்தான். தனக்கான டீயை எடுத்துக்கொண்டுவந்து அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்த சங்கீதா ஒரு மிடறு குடித்தாள். பாஸ்கர் பக்கம் திரும்பி “எத்தன நாள், என்னா ஏதுன்னு தெரியாம எப்பிடி பெட்டிய ரெடிப் பண்றது?” என்று கேட்டாள்.

“எட்டு நாள்தான். ஒரு மாசம் ரெண்டு மாசம்ன்னு இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்.”

“எதுக்கு அப்பிடிச் சொல்றீங்க?”

“நாம எத்தன முற வெளிநாட்டுக்குப் போறம். எவ்வளவு நாள் அங்க ஒர்க்ப் பண்றம்ங்கிறத வச்சித்தான சம்பளம் ஏறும். இன்னும் ஆறு மாசத்துக்குப் பின்னால வீட்டு வாடக, கார் எல்லாம் கம்பனியே கொடுத்திடும்ன்னு நெனக்கிறன்” என்று உற்சாகமாகச் சொன்னான். போன் வந்தது. பேசிவிட்டு அவசரமாக ஏதோ செய்தியை டைப் செய்து அனுப்பினான். திடீர் என்று நினைவுக்கு வந்தமாதிரி “மணியாச்சி” என்று சொன்னான்.

“எத்தன மணிக்கு ஃபிளைட்?”

“பத்துக்கு.”

“இன்னும் மூணு மணிநேரம் இருக்கே.”

“கொறஞ்சது ஒரு மணிநேரத்துக்கு முன்னாடியே போயிடுறது நல்லது. இந்த ட்ராபிக் ஜாமில போய்ச்சேரவே ஒரு மணிநேரம் புடிக்கும்.”

“நீங்க குளிச்சிட்டு வாங்க. பெட்டிய ரெடி பண்ணிடலாம்” என்று சொன்னாள். அப்போது போன் வந்தது. வீட்டில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தபடி பேசிக்கொண்டேயிருந்தான். பேச்சை நிறுத்தவே இல்லை. போனில் பேசியபடியே கைச்சாடையில் லேப்-டாப்புக்கு சார்ஜ் போடச் சொன்னான். அவன் சொன்னதை செய்தாள். போனில் பேசிக்கொண்டே டேபிள் மீதிருந்த பெட்டியில் என்னென்ன பொருட்கள் இருக்கின்றன என்று பார்த்தான். சோபா மீதிருந்த பேண்ட், சர்ட்டுகளில் சிலவற்றை எடுத்து பெட்டிக்குள் வைத்தான். போன் பேசி முடித்ததும் சார்ஜில் போட்டான். அலுவலகத்தில் இருப்பதுமாதிரியே இருந்தது அவனுடைய செய்கை. வீட்டில் இருந்தால்கூட கணினியோடுதான் இருப்பான், இல்லையென்றால் செல்போனில் பேசிக்கொண்டிருப்பான். செல்போனையும் லேப் டாப்பையும் பிடுங்கிவிட்டால் அவனால் உயிரோடு இருக்க முடியுமா என்பது சந்தேகமே. ஒரு மாதத்தில் வீட்டுக்கு வாங்கும் பொருள்களின் செலவைவிட செல்போனுக்கு செலவு செய்வதுதான் அதிகம். காலையில் எட்டு மணிக்குத்தான் எழுந்திருப்பான். ஒன்பது மணிக்கெல்லாம் வெளியே போய்விடுவான். இரவு அவன் வரும் நேரம்தான். வந்த வேகத்திலேயே சாப்பிடுவான். அடுத்தநொடியே கணினியின் முன் உட்கார்ந்துவிடுவான். அவன் எப்போது படுப்பான் என்பது அவனுக்கே தெரியாது.

“ஒங்க அப்பா அம்மாவுக்கு சொன்னிங்களா?”

“ஏர் போர்ட்டுக்குப் போவும்போது பேசிடுறன். இல்லன்னா மெயில் போட்டுடுறன்.”

“எல்லாத்துக்கும் மெயில்தானா?” என்று கேட்டுவிட்டு தொலைக்காட்சியைப் பார்த்தாள். மியூசிக் சிஸ்டத்தை ஓடவிட்டு விட்டு வந்து “ஒனக்கு மூடு சரியில்லியா?” என்று கேட்டான். சங்கீதா பேசாததால் தொலைக்காட்சியின் ரிமோட் கண்ட்ரோலை எடுத்து சேனல்களை மாற்றிக்கொண்டே “மேல மேலன்னு போவனும்” என்று சொன்னான்.

“எவ்வளவு மேல?” என்று கேட்டாள்.

“ஒனக்கு என்னாச்சு?”

“போன புதன் கிழம ஆஸ்பத்திரிக்குப் போவனுமின்னு சொன்னன். இன்னியவர போகல.”

“ஓ. ஐயாம் ஸாரி. ஒன் வீக்குக்கு முன்னாடியே நீ நோட்டீஸ் கொடுத்திருக்கனும்.”

“நோட்டீஸ் கொடுத்திட்டு நோய் வராது.”

“ஷட் யுவர் மௌத். டோண்ட் ஆஸ்க் கொஸ்டீன்ஸ்.”

“துணி தேய்க்கிற வேலம்மா சர்க்கர இல்லியான்னு கேக்குறா. அந்தக் கேள்வியோட அர்த்தம் தெரியுமா?”

“நீ எதுக்கு லொக்காலிட்டிக்கிட்டயெல்லாம் பேசுற?” என்று கேட்டதும், சங்கீதா ஒரு மிருகக் காட்சி சாலையில் இருக்கும் விலங்கைப் பார்ப்பதுமாதிரி பாஸ்கரனைப் பார்த்தாள். அவன் கார்ட்டூன் சேனல் பார்ப்பதில் ஆர்வமாக இருப்பது தெரிந்தது. என்ன தோன்றியதோ “போயி குளிச்சிட்டு வாங்க” என்று சொல்லிவிட்டு எழுந்தாள்.

“ஏர்போர்ட்டுல பீஸா கீஸான்னு ஏதாச்சும் சாப்பிட்டுக்கிறன்.”

“குளிச்சிட்டு வந்து ரெடியாவறதுக்குள்ளார சாப்பாடு ரெடியாயிடும்.”

“ஓ.கே.டூ. இட்” என்று சொல்லிவிட்டு குளியலறைக்குள் போனான் பாஸ்கர். சங்கீதா சமையலறைக்குள் போனாள்.

குளித்துவிட்டு வந்த பாஸ்கர் தலையைத் துவட்டிக்கொண்டே “பெட்டியில என்னென்ன எடுத்து வச்சியிருக்க? இன்னும் என்ன வைக்கனுமின்னு பாரு ப்ளீஸ்” என்று சொன்னான். சங்கீதா பெட்டியிலிருந்த ஒவ்வொரு பொருளையும் வெளியே எடுத்துக் காட்டிவிட்டு வைத்தாள். ஒவ்வொரு பொருளைக் காட்டும்போதும் “ஒ.கே”, “ஒ.கே” என்று சொல்லிக்கொண்டே வந்தான். “பாஸ்போர்ட் எடுத்து வைக்கலியே” என்று சொன்னான். சங்கீதா பாஸ்போர்ட்டை எடுத்து வந்து வைத்தாள். “தேங்க்யூ” என்று சொன்னான். அதற்கு சங்கீதா லேசாக சிரிக்க மட்டுமே செய்தாள். துணி, பெட்டி, பொருட்களை எடுப்பதற்காகவே அவன் வீட்டுக்கு வந்தமாதிரி தெரிந்தது.

“தேங்க் யூ” என்று சொல்லிக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தான் பாஸ்கர்.

“நீங்க ஊருக்குப்போயிட்டு வந்த பிறகு நானும் ஏதாவது ஒரு கம்பனியில பயோடேட்டா கொடுக்கலாமின்னு இருக்கன்.”

“திடீர்ன்னு என்னாச்சி?”

“வீட்டுல இருக்க போர் அடிக்குது.”

“டி.வி. இருக்கு. மியூசிக் சிஸ்டம் இருக்கு. ஹோம் தியேட்டர் இருக்கு. ஏ.சி. இருக்கு. ஜாலியா இருக்க வேண்டியதுதான.”

“எல்லாம் ஒ.கே.தான். ஆனாலும் தனியா இருக்க முடியல.”

.“வீடு இருக்கு. பணம் இருக்கு. பாதுகாப்பு இருக்கு. இதுக்குமேல ஒரு மனுசனுக்கு என்ன வேணும்?”

“எல்லாம் இருக்கு. ஆனா இஷ்டம்போல இருக்க முடியல.”

“பக்கத்து பிளாட்டுல உள்ளவங்கக்கிட்டப் பேசிக்கிட்டு இரு.”

“இங்கயிருக்கிற நானூறு ஐநூறு பிளாட்டுல மொத்தமா பாத்தா பத்து இருபது பேர்கூட பகல்ல இருக்க மாட்டாங்க. இருந்தாலும் வீட்டப் பூட்டிக்கிட்டு இருப்பாங்க.”

“இப்ப என்னா சொல்ல வர?”

“வேலைக்கிப் போகலாமின்னு நெனக்கிறன்.” “ஒ.கே. உன்னோட இஷ்டம். நான் தடுக்கல” என்று சொல்லிவிட்டு சாப்பாட்டு மேசையைவிட்டு எழுந்து துணி மாற்றிக்கொள்ள ஆரம்பித்தான். சங்கீதா அவனையே வெறித்துப் பார்த்தாள். தடுப்பான். காரணம் கேட்பான், போகக்கூடாது என்று சொல்வான் என்று எதிர்பார்த்தாள். அவன் சட்டென்று விசயத்தை முடித்தது அவளுக்கு எரிச்சலை உண்டாக்கிற்று. பக்கத்திலிருந்த மீன் தொட்டியைப் பார்த்தாள். அதில் மூன்று மீன்கள் இருந்தன. உற்சாகமாக இங்குமங்குமாகக் திரிந்துகொண்டிருந்தன. திடீரென்று அந்நியருடைய வீட்டில் நின்றுகொண்டிருப்பதுமாதிரி இருந்தது. கல்யாண போட்டோவைப் பார்த்தாள். அவளுடைய முகம் மாறிற்று.

சோபாவில் உட்கார்நது ஷூவைப் போட்டுக்கொண்டே “சங்கீதா இன்னிக்கி ஒனக்கு என்னாச்சு? மூடு சரியில்லன்னா ரெஸ்ட் எடு” என்று சொன்னான். ஒரு காரணமுமின்றி அவளுக்குக் கோபம் வந்தது. முன்பு வேலைக்குப் போனால் தேவலை என்றுதான் நினைத்தாள். இப்போது வேலைக்குப்போயே தீர வேண்டும் என்று நினைத்தாள். அவள் பி.ஈ. முடித்தவுடனேயே வேலை கிடைத்தது. இரண்டு வருசம் வேலை பார்த்தாள். பாஸ்கருடன் கல்யாணம் முடிந்ததும் வேலையை விட்டுவிட்டாள். அவன் வேலை பார்த்தது சென்னையில். அவள் வேலை பார்த்தது பெங்களூரில். கல்யாணம் முடிந்ததும் வேறு வேலை பார்க்கலாம் என்றுதான் முதலில் நினைத்தாள். ஒரு மாதம், இரண்டு மாதம் என்று மூன்று வருடங்கள் ஓடிவிட்டது. அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. மூன்று வருடங்கள் பகலில் இந்த வீட்டில் தனியாகவா இருந்தோம்? குழந்தை பிறந்திருந்தால்கூட அது ஒரு துணையாக இருந்திருக்கும். மருத்துவ சோதனையில் இருவரிடமும் சிக்கலில்லை என்றுதான் எல்லா ரிப்போர்ட்டுகளும் இருக்கின்றன. ஆனாலும் குழந்தை உருவாகவில்லை. அதனால் உறவினர்கள் வீட்டுக்குப் போவதையும் தவிர்த்துவிட்டாள். ஒருவர் தவறாமல் எல்லாரும் கேட்கிற கேள்வி “விசேசம் ஒண்ணும் இல்லியா?” என்பதுதான். மற்றவர்கள் கேட்பதைச் சொன்னால் “டோண்ட் பி சில்லி” என்று பாஸ்கர் கோபப்படுவான். மீறிக் கேட்டால் “ரெண்டு பேருக்கும் இருவத்தி ஏழு வயசுதான ஆவுது” என்று சொல்வதோடு சரி. அதனால் இந்த இரண்டு மாதமாக அவனிடம் அதிகமாகப் பேசுவதையே குறைத்துக்கொண்டாள். ஒரு நாளைக்கு பேசிக்கொள்ளும் வார்தைகளின் எண்ணிக்கை நூறுக்குள்தான் இருக்கும். அதுவும் பழைய வார்த்தைகள்.

பெட்டியை சரிபார்த்தான். உடையை சரி செய்தான். செல்போனில் செய்தி அனுப்பினான். அப்போதுதான் சங்கீதா அங்கிருப்பதை பார்த்தமாதிரி “ஏன் டல்லா இருக்க?” என்று கேட்டுக்கொண்டே வந்து பக்கத்தில் உட்கார்ந்தான். சங்கீதா எதுவும் பேசாததால் மீண்டும் அவனே பேசினான். “இன்னக்கி இருக்கிற நெலமயில நாளக்கிப் பாத்துக்கலாம்ங்கிறமாரி எதுவுமே இல்லாமப் போயிடிச்சு. எதுவாயிருந்தாலும் இப்ப, இப்ப, உடனே, உடனேங்கிறமாரிதான் இருக்கு. இன்னும் மேல. இன்னும் மேல. இன்னும் மேலன்னு போயிக்கிட்டே இருக்கனும். இதுதான் இலக்குன்னு இல்லாம மேலப்போவனும். வாய்ப்ப தவறவுட்டா அதுக்காக நூறுபேரு காத்துக்கிட்டு இருக்காங்க. சந்தர்ப்பத்த வுட்டா பணம் போச்சி” என்று சொன்னான். அவனைவிடவும் நிதானமாக அவள் சொன்னாள் “பணம்ங்கிறது பேப்பர்தான்.”

“தெரியும். அந்தப் பேப்பராலதான் இந்த பிளாட், ஏசி, டி.வி., ஹோம் சிஸ்டம், மியூசிக் சிஸ்டம், காரு, வேக்குயூம் கிளினர், பிரிட்ஜ், வாஷிங் மிஷின், சோபா, எல்லாத்துக்கும் மேல சாப்பாடு கெடைக்குது.”

“நானும் அந்தப் பேப்பரும் ஒண்ணா?” என்று சொல்லும்போதே சங்கீதாவுடைய கண்கள் கலங்கின. அதை கவனிக்காமல் தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டே “ஷ்யூர்” என்று அழுத்தம் திருத்தமாக சொன்னதோடு “அந்தப் பேப்பர் முக்கியமில்லன்னா நீ ஏன் சாதாரண ஆள கட்டியிருக்கக்கூடாது? இஞ்சினியர் படிச்ச, அதுவும் நல்ல கோர்ஸ் படிச்ச, அதிலயும் டாப் ரேங்கர்ஸ் வேணும், அதிலயும் நல்ல கம்பனியில, அதிலயும் வெளிநாட்டுக் கம்பனியில வேலப்பாக்குற மாப்ள வேணுமின்னு எதுக்கு ஒங்க அப்பா அம்மா தேடுனாங்க? நான் நெறயா சம்பளம் வாங்குறன்ங்கிறதாலதான நீ என்ன கல்யாணம் கட்டிக்கிட்ட?”

“நான் படிக்கலியா? வேலதான் பாக்கலியா? ஒங்க அளவுக்கு நானும் சம்பளம் வாங்கலியா?”

“சங்கீதா நீ சொல்றதெல்லாம் ஒ.கே. நாம பேசுன விசியம் வேற.”

“நான் அப்படிப்பட்ட ஆளில்ல.”

“பொய். நான் ஒத்துக்கமாட்டன்” என்று சொல்லும்போதே பாஸ்கருக்கு கோபம் வந்துவிட்டது. “நீ அப்பிடி இருக்கியோ இல்லியோ. ஒலகம் அப்பிடி இருக்கு. அந்த ஒலகத்திலதான் நாம இருக்கோம். புரியுதா?” என்று சொன்னான். சங்கீதாவின் கண்கள் கலங்கியதைப் பார்த்ததும் “டோண்ட் பி சில்லி. நாட்டுப் புறத்துப் பொண்ணுமாரி எதுக்கு அழுவுற? லைஃப் இஸ் பியூட்டிப்புல். சோ எஞ்சாய் இட். ஓ.கே. உங்கம்மா வீட்டுக்குப் போறதின்னா போ. ஜாலியா இரு. செலவு பண்ணு. புதுசா வாங்கியிருக்கிற ஃபிளாட்ட போயிப் பாத்திட்டு வா. அறுபது லட்சம் போட்டிருக்கு. அத வாங்குனதாலதான் டேக்ஸ் பிரச்சனையிலிருந்து தப்ப முடிஞ்சது” என்று சொன்னான். அப்போது போன் வந்தது. போனை பேசி முடித்துவிட்டு லேசாக சிரித்துகொண்டே “நீயும் நானும் வாத்தியார் வேலக்கிப் படிச்சிருக்கனும். அதெ படிச்சிருந்தா சனி, ஞாயிறு லீவ், காலாண்டு, அரையாண்டு, கோடை விடுமுறைன்னு ஏகப்பட்ட லீவ் இருக்கும். அதுக்கும்மேல மழ பேஞ்சா லீவ், வெயிலடிச்சாலும் லீவு. சி.எல்., ஈ, எல்.ன்னு எவ்வளோ லீவ். அடேயப்பா. நம்ப உலகம் அப்பிடியா? இன்னிக்கி ஐ.டி. ஒலகங்கிறது மின்னலவிட வேகமா போயிக்கிட்டிருக்கு. தான் மேல போவலன்னாலும் பரவாயில்ல அடுத்தவன் மேல போவக்கூடாதுங்கிறதுதான் முக்கியம்” என்று சொல்லிவிட்டு சிரித்தான். பிறகு “ஒங்க அப்பா அம்மாவும் டீச்சர்தான். அவுங்க எதுக்காக ஒன்னெ இஞ்சீனியரிங் படிக்க வச்சாங்க? இன்னிக்கி படிப்பு, வேல, பொண்டாட்டிங்கிறது எல்லாமே பணம் சம்பந்தப்பட்டதுதான்” என்று சொல்லிகொண்டே “சரி டயமாயிடிச்சி. பெட்டிய திரும்பியும் செக்கப் பண்ணிடு” என்று சொன்னான். அவன் பேசாமல் இருக்கமாட்டானா என்ற எண்ணத்துடன் சங்கீதா பெட்டியை சரிபார்த்தாள்.

“எல்லாம் சரியா இருக்கு. டிக்கட், பாஸ்போர்ட் மட்டும் பாக்கெட்டுல வச்சுக்குங்க.”

“தேங்க்யூ” என்று சொல்லிவிட்டு “நாளக்கி ஒங்கம்மாவப் போயிப் பாத்திட்டு வரியா?” என்று கேட்டான்.

“நீங்க போயிட்டு வந்ததும் பாத்துக்கலாம்”

“ஷாப்பிங் மால்களுக்குப் போயிட்டு வாயன். ரிலாக்ஸா இருக்கும்.”

“போறன்.”

“சொந்தபந்தம் வேணும். பணமும் வேணும் புரியுதா? சொந்தபந்தம் வாணாம், படிப்பு, வேல, பொண்டாட்டி, புள்ள வாணாமின்னு சாமியாராப் போறன்னு போன சாமியாருங்க எல்லாம் இப்ப கார்ப்பரேட் நிறுவனங்கள்மாரி இருக்காங்க. ஒலகம் முழுக்க கிளைகள், சொத்து. கற்பனயே பண்ண முடியாத அளவுக்கு இருக்காங்க” என்று சொல்லிவிட்டு கடகடவென்று சிரித்தான். “தில்லியில ஒரு சாமியாரு பொம்பளகள சப்ள செஞ்சிருக்கான். நியூஸ் பேப்பர் பாத்தியா?” என்று கேட்டான். அவன் அடுத்துப் பேசக்கூடாது என்பதற்காக சட்டென்று “பாத்தன்” என்று சொன்னாள்.

“சரி. பெட்டிய எடு. டயமாயிடிச்சி.”

“சாமி கும்புட்டுட்டுப் போங்க” என்று சொல்லிவிட்டு பூஜை அறையை நோக்கிப் போனாள். அவளுக்குப் பின்னாலேயே பாஸ்கரன் போனான்.

காரில் ஏறிக்கொண்ட பாஸ்கரன் “ஓ.கே. பாய்” என்று சொன்னான். “பாய்” என்று சங்கீதா சொன்னாள். கார் புறப்பட்டுச் சென்றதும் தலையைத் தூக்கித் தன்னுடைய ஃபிளாட்டை பார்த்தாள். ரொம்ப உயரத்தில் இருப்பதுமாதிரியும் அச்சமூட்டுவதுமாதிரியும் தெரிந்தது.

Print Friendly, PDF & Email
கடலூர் மாவட்டம், கழுதூரில் பிறந்த (1966) இமையம் அவர்களின் இயற்பெயர் வெ.அண்ணாமலை. பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிவரும் இவர், இப்போது விருத்தாசலத்தில் வசித்து வருகிறார். தமிழின் மிக முக்கியமான நாவலாசிரியராக, சிறுகதையாசிரியராக அறியப்படும் இமையத்தின் முதல் நாவலான `கோவேறு கழுதைகள்’ (1994) உடனடியான கவனம் பெற்று, இன்றுவரை பேசப்படும் ஒன்றாக உள்ளது. `கோவேறு கழுதைகள்’ ஆங்கிலத்தில் ‘Beasts of Burden என்ற தலைப்பில் 2001ஆம் ஆண்டில் வெளியாகி இருக்கிறது. `ஆறுமுகம்’ 1999லும்,…மேலும் படிக்க...

1 thought on “பேமிலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *