கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 11, 2024
பார்வையிட்டோர்: 1,252 
 
 

‘தன்னை யாரும் பார்க்கிறார்களா?’ எனச் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, தயக்கத்தோடும் மனத்தில் பொங்கியெழுந்த குறுகுறுப்போடும் சண்டையிட்டு வெல்ல முடியாமல் இரண்டிடம் தோற்று வேறு வழியின்றித் தன்னையறியாமலேயே ‘டக்’கென அதனைத் தன் மேல் உதட்டுக்கும் மூக்கின் நுனுக்கும் இடைப்பட்ட மென்பூமுடிகள் சூழ்ந்த சிறு குழி மேட்டின் மீது வைத்து ஒருமுறை ஒரேயொரு முறை மணத்திப் பார்த்தாள் சாஹிதா.  

உலர்ந்த புகையிலையின் மணம் அவள் உச்சந்தலைக்கு ஏறி, அவளைப் பூமியைவிட்டு ஓரடி உயரத்திற்குத் தூக்கியது. எரியும் சிகரெட்டின் மணத்தைவிட எரியா சிகரெட்டின் மணம்தான் சாஹிதாவுக்கு மிகவும் பிடிக்கும்.  

அவளின் தந்தை புகைத்துவிட்டுப் பாதிக்கு மேல் எரிந்த சிகரெட்டைத் தன் இடக்கை கட்டைவிரல் நகத்தின் மீது அழுத்தி அணைத்து, வீட்டின் ஏதாவதொரு மூலையை நோக்கி எறிந்துவிட்டுச் செல்வார். ஒவ்வொரு நாளும் இரண்டு வேளைகள் சாஹிதா வீட்டைக் கூட்டிப்பெருக்கி அள்ளும் குப்பையில் பாதித் துண்டு சிகரெட்டுகளாகத்தான் இருக்கும். அவற்றைக் குப்பைமுறத்தில் அள்ளிச் சென்று கொல்லைப்புறத்தில் கொட்டுவதற்கு முன்னால் அதில் எந்த சிகரெட் நீளமானது எனத் தன் கூறிய பார்வையால் அளந்துவிட்டு, தன் குச்சி விரல்களால் அதனை மட்டும் எடுத்து யாருக்கும் தெரியாமல் ஒருமுறை ஒரேயொரு முறை மணத்திப் பார்ப்பாள்.  

பாதி எரிந்த சிகரெட்டில் கருகல் மணத்தோடு கூடிய புகையிலையின் மணம் எழும். அது சாஹிதாவுக்கு அவ்வளவாகப் பிடிக்காது. எரிக்கப்படாத முழு சிகரெட்டிலிருந்து உதிரும் புகையிலைத் தூளின் மணம் அதுதான் சாகிதாவுக்கு மிகவும் பிடிக்கும். அதற்காகவே அவள் தன் அப்பாவுக்காக சிகரெட் வாங்கிவரும்போதும் சிலநேரங்களில் மட்டும் சிகரெட் நுனியில் தன் குச்சி விரல் பிறை நிலா நகத்தால் சுரண்டி, துகள்களைத் தன் உள்ளங்கையில் விழச்செய்து, மணத்திப் பார்ப்பாள்.  

இவள் இப்படிச் சுரண்டுவதால் சில நேரங்களில் சிகரெட் நுனி ஒரு சென்டிமீட்டர் நீளம் வரைக்கும்கூட வெறும் தாள்கூடாகிவிடும். அவ்வளவுதான், அப்பாவுக்குச் சினம் தலைக்கேறிவிடும். “ஒரு சிகரெட்டை வாங்கி ஒழுங்கா கையில பிடிச்சுக்கிட்டு வர உனக்குத் துப்பில்லையா? வழி நெடுக மணியாட்டுற மாதிரி ஆட்டிக்கிட்டே வந்தியோ?” என்று கத்த ஆரம்பித்து விடுவார்.  

அதைத் தவிர்ப்பதற்காகவே சாஹிதா ஒவ்வொரு முறையும் தன் அப்பாவுக்கு சிகரெட் வாங்குவதற்காக பெட்டிக் கடைக்குச் செல்லும் போதெல்லாம் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்வாள். ஒருகையில் படுக்கை வசமாக சிகரெட்டையும் மறுகையில் சில்லறைக் காசுகளையும் வைத்துக் கொண்டு கைகளை ஆட்டாமல் நடந்து வருவாள். சிகரெட்டை இறுக்கிப் பிடித்தால் வளைந்து நெளிந்துவிடும். தளர்த்திப் பிடித்தால் நழுவி கீழே விழுந்துவிடும். அண்டாமல் அகலாமல் தீக் காய்வார் போல மூடிய விரல்களுக்கும் சீரெட்டுகளுக்கும் இடையே இடைவெளிவிட்டு அந்த சிகரெட்டை இறுக்காமலும் தளர்த்தாமலும் உள்ளங்கைக்குள் ஒரு பட்டாம்பூச்சியை உயிருடன் ஒளித்துவைப்பதுபோல அவ்வளவு பதமாய், பக்குவமாய், பாதுகாப்பாய்ப் பிடித்துக்கொண்டு மெல்ல மெல்ல நடந்து வருவாள் சாகிதம் 

அம்மாவோடும் அண்ணன்மார்களோடும் அக்காவோடும் அவள் கடைக்குப் போய் வருவாள். அப்போதெல்லாம் அவளிடம் அப்பா சிகரெட் வாங்கி வரச் சொல்ல மாட்டார். அவர் மகன்களிடம் சிகரெட் வாங்கிவருமாறு கூறியதே இல்லை. ‘ஆண் பிள்ளைகளிடம் இதை வாங்கி வரச் சொன்னால், அவர்கள் சிகரெட் பிடிக்கப் பழகி விடுவார்கள்’ என்ற முன் எச்சரிக்கையுடன் இருந்தார் அவர். மூத்த பெண்ணை சிகரெட் வாங்குவதற்காகக் கடைக்கு அனுப்புவதில் அம்மாவுக்கு விருப்பமில்லை. மூத்த பெண் வயதுக்கு வருவதற்கு முன்பே மனைவி கராராகக் கூறிவிட்டார் – “அவ வளர்ந்துட்டா. இனிமே அவளை கட கண்ணிக்கு அனுப்பவேணாம். கேட்டியளோ?” அவர், ‘சரி’ என்பது போல தலையை ஆட்டினார். 

சாஹிதா அப்பாவுக்குச் செல்ல மகள். கடைக்குட்டி. சொன்னதைச்  ‘சரி’ எனக் கேட்கும் சமத்துப்பிள்ளை. காலம் கடந்து பிறந்த பிள்ளை. ஊட்டச்சத்து குறைவு. அதனாலேயே அவள் வீட்டார்,  ‘ஐயோ, பாவம்’ என்ற தொனியில்தான் அவளிடம் பேசினர். கேட்டதை வாங்கிக் கொடுத்துக் கொஞ்சினர். தப்புச் செய்தால் கெஞ்சித் திருத்தினர். அது ஒருவிதமான இரக்கம் – பச்சாதாபம் – மற்றொரு வகையான பேரன்பு. அந்தப் பேரன்பில் கிடைத்த விடுதலை உணர்வால்தான் சாகிதா, ‘தான் எது செய்தாலும் தன்னைத் தன் வீட்டார் ஒன்றும் செய்ய மாட்டார்கள்’ என்ற நினைப்பில், சிகரெட் புகைக்க விரும்பினாள்.  

‘எத்தனை நாள்தான் அப்பா புகைக்கும் சிகரெட்டின் புகையைச் சுவாசிப்பது? நாமே சிகரெட்டைப் புகைத்து சுவாசித்தால் என்ன? நாமே புகைத்துப் பார்த்தால்தானே அந்தப் புகையிலையின் உண்மையான மணத்தை உண்மையாக உணர முடியும்? புகைத்துவிட வேண்டியதுதான்’ என்ற முடிவுக்கு வந்துவிட்டாள் சாஹிதா. 

‘சிகரெட் வாங்க காசு வேணும்? யாரிடம் கேட்பது? ஏன் காசுக்கு வாங்க வேண்டும்? அப்பாதான் தினமும் சிலமுறைகள் சிகரெட்களை வாங்கி வருமாறு சொல்கிறாரே! அதில் ஒன்றைக் கூடவா அவர் மிச்சம் வைக்காமல் போய்விடுவார்? அதில் ஒன்றை மட்டும் திருடி, பதுக்கிக் கொண்டால் அவருக்கு என்ன தெரியவா போகிறது? சரி. அதை எப்படிப் பற்றவைப்பது? அடுப்படியிலிருந்து நெருப்பெட்டியை எடுத்தால் அம்மா கண்டுபிடித்து விடுவார். அது வேண்டாம். கர்த்தருக்கு ஏற்றி வழிபடும் சிறிய மெழுகுவர்த்தியைக் கொளுத்திக் கொள்ளலாம். அதை அவர் முன்பாகச் சிறிது நேரம் மட்டும் எரிய விட்டு, அவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு அதையே எடுத்துச் செல்லலாம். அதைக்கொண்டு சிகரெட்டைப் பற்ற வைக்கலாம். சரி. ஆனால், எங்கு வைத்து சிகரெட்டைப் புகைப்பது? தோட்டத்தில்? அக்கா வருவார். மொட்டைமாடியில்?  அண்ணன்மார்கள் வந்து போவார்கள். சரி, முற்றம்? எப்போதும் அப்பா அங்குதான் இருப்பார். புறக்கடை? அம்மா வந்து போவாரே! வேறு எங்கே?’  

சாஹிதாவுக்கு ஓரிடமும் சிக்கவில்லை. அப்போதுதான் தன் தோழி மெக்ஸ்ஷாவின் நினைவு வந்தது.  

இருவரும் இணைந்து சிறு சிறு களவுகளைச் செய்திருக்கிறார்கள். ஆனால், இந்த விஷயமோ ‘பெரியது’ என்பது சாகிதாவுக்கு நன்றாகவே தெரியும். ‘இதைப் பற்றி மெக்ஸ்ஷாவிடம் கூறினால், அவள் ஒப்புக்கொள்ளலாம் அல்லது மறுக்கலாம்தான். ஆனால், அவள் தன்னைப் பற்றி என்ன நினைப்பாள்? தன்னைக் கீழான பெண்ணாகவோ, தன்னைக் கர்த்தருக்குப் புறம்பான பெண்ணாகவோ அல்லது தன்னைச் சாத்தானுக்கு நிகராகவோ நினைத்து விடுவாளே!’ என்று நினைத்துத் தயங்கினாள் சாஹிதா. இரண்டு தெரு தாண்டிச் சென்றால் பத்மாவின் வீடு. அவளிடம் இந்த ரகசியத்தைப் பற்றியெல்லாம் பேச முடியாது. அவள் இவளுக்கு அந்த அளவு நெருங்கிய தோழியும் அல்லள்.  

மெக்ஸ்ஷாதான் சரி. அவளை விட்டால் இவளுக்கு வேறு ஆள் இல்லை. பக்கத்து வீடு. அப்படிச் சொல்வதைவிட அடுத்த ஜன்னல் என்றுகூடக் கூறலாம்தான். சாஹிதா தன் வீட்டு ஜன்னல் வழியாகக் குரல் கொடுத்தாலே போதும். உடனே கோவில் மணிச் சத்தம் போல தன் வீட்டு ஜன்னல் வழியாகப் பதில் குரல் கொடுத்து விடுவாள் மெக்ஸ்ஷா. இவர்கள் வீட்டில் பேசப்படுவனவும் அவர்கள் வீட்டில் பேசப்படுவனவும் பரஸ்பரம் அப்பட்டமாக இருவீட்டாருக்குமே தெரிந்துவிடும். அந்த ஜன்னல்கள் மிக நெருக்கமாகவும் மிகவும் வெளிப்படையாகவும் தகவல்களை, ரகசியங்களைக் கடத்திக் கொண்டிருந்தன.  

பள்ளியில் காலை இடைவேளை நேரம். சாஹிதா தனக்கிருக்கும் சிகரெட் பிடிக்கும் ஆசையைப் பற்றி மெக்ஸ்ஷாவிடம் தயங்கி தயங்கிக் கூறினாள். மெக்ஸ்ஷாவுக்குக் குறுகுறுப்புக் கூடியது. தன் மணிக்கண்கள் விரிய பெருமகிழ்வுடன் சாஹிதாவையே பார்த்துக்கொண்டிருந்தாள்.  

‘நீதான் இதுக்கு உதவனும்!’ என்று சாஹிதா கேட்டவுடன், மெக்ஸ்ஷா உடனே, ‘சரி’ என்றாள். இதை அவள் எதிர்பார்க்கவில்லை. மெக்ஸ்ஷாவே இதற்குரிய சரியான மறைவிடத்தையும் கூறிவிட்டாள். அதனால் ஷாகிதாவுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. மறைவிடம் மெக்ஸ்ஷாவின் வீட்டுக்குப் பின்புறத்தில் உள்ள கிணற்றுறைகளின் அடக்கம்தான். ‘இன்று மாலை’ என்று நேரம் குறித்துக் கொண்டனர் இருவரும். 

மாலையில் பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்தவுடன் முற்றத்தில் அமர்ந்திருந்த தன் அப்பாவிடம் சென்று, “அப்பா! சிகரெட் வாங்கிட்டு வரட்டுமா?” என்று கேட்டாள் ஷாஹிதா. அவர், “இல்ல, இருக்கு” என்றவுடன் சாஹிதா தனக்குளேயே நொறுங்கிப் போனாள்.  

முகத்தைக் கழுவிவிட்டு வந்த பின்னர்தான் அவளுக்குத் தெளிவு பிறந்தது. ‘எதுக்குப் புது சிகரெட் வாங்கனும்? அதான் இருக்கே அவருக்கிட்டேயே – நேத்து வாங்குனது. அதையே எடுத்துக்க வேண்டியதுதான்’ என்று நினைத்துத் தன்னையே சமாதானம் செய்துகொண்டு, தன் அப்பாவின் சில்க் ஜிப்பா தொங்கும் கொடிக்கயிற்றுப் பக்கமாக மெதுவாக நடந்து சென்றாள். ‘யாராவது தன்னைப் பார்க்கிறார்களா?’ என்று சுற்றும் முற்றும் பார்த்தாள். ‘யாரும் இல்லை’ என்பதை உறுதிப்படுத்திக் கொண்டதும் தன் குச்சி விரல்களை ஜிப்பாவின் வலதுபைக்குள் நுழைத்துத் துழாவினாள். இரண்டு  சிகரெட்கள் அகப்பட்டன. அதில் ஒன்றைமட்டும் எடுக்கும்போது தன் முதுகுப்பரப்பில் தன் வீட்டார் அனைவரின் கண்களும் பட்டுத் தெறிப்பதுபோல உணர்ந்தாள். அவள் உடல் சிலிர்த்தது. ‘கர்த்தருக்கு ஸ்தோத்திரம்’ என்று மனசுக்குள் முனங்கிக்கொண்டே எடுத்தாள். அதை இடக்கைக்குள் வைத்து மூடி மறைத்துக் கொண்டாள் கர்த்தருக்கு மெழுகுவர்த்தியை ஏற்றுவதற்காகச் சென்றாள். அங்கு ஒரு மெழுகுவர்த்தி முக்கால்வாசி எரிந்த நிலையில் தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தது. ‘என் பாவங்களை மன்னித்தருளும் கர்த்தாவே!’ என்று கூறிவிட்டு, அதை எடுத்துக்கொண்டு ஜன்னலுக்கு அருகில் வந்து உரத்த குரலில், “மெக்ஸ்ஷா” என்று அழைத்தாள். சாஹிதாவின் குரலுக்காகவே காத்திருந்தவள் போல மெக்ஸ்ஷா உடனே மறுகுரல் ஒலித்தாள், “தோட்டத்துக்கு வா” என்று.  

சாகிதா மொழுகுச்சுடரினை ஏந்தியபடியே மெக்ஸ்ஷாவின் தோட்டத்திற்குச் சென்றபோது அங்குக் கிணற்றுறை அடக்கங்களின் அருகில் பரபரப்புடன் நின்றிருந்தாள் மெக்ஸ்ஷா. மெழுகுச்சுடர் காற்றில் அலையுற்றது. உடனே, மெக்ஸ்ஷா தன்னிரு கைகளாலும் அதைக் காத்தாள். காற்றோட்டம் மட்டுபட்டதும் மூவடுக்குக் கிணற்றுறைக்குள் குதித்திறங்கினாள் மெக்ஸ்ஷா. உள்நின்றபடியே சாஹிதாவிடம் இருந்து மெழுகுவர்த்தியை வாங்கித் தரையில் நிற்கச் செய்தாள். தன் பாவாடையைச் சற்று உயர்த்திப் பிடித்து, வலது காலைத் தூக்கி, கிணற்றுறைக்குள் வைத்து மெல்ல தடுமாறி, நிதானித்து இடக்காலையும் அதனுள் தூக்கி வைத்தாள்.  

இருவரும் ஒருவரையொருவர் இடித்தபடி கிணற்றுறை அடுக்கத்துக்குள் அமர்ந்து கொண்டனர். அவர்களின் தலைகள் வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்குத் தெரியவில்லை. மூவடுக்கு உறை அவற்றை மறைத்துக்கொண்டது. இருந்தாலும் தம் பாதுகாப்புக்காக இருவருமே தம் தலையைத் தாழ்த்தி, முதுகை வளைத்து அமர்ந்திருந்தனர். உறைக்குள் இருந்த நிழலிருளை மெழுகுவர்த்தியின் சுடர் கரைத்து விளையாடியது.  

சாஹிதா சிகரெட்டின் நுனியைச் சுடரில் காட்டி சிகரெட்டைப் பற்ற வைத்தாள். புகை மூண்டது. தன் அப்பாவைப் போலவே, சிகரெட்டை இரட்டை விரல் இடுக்கில் பிடித்து, வாயில் வைத்து உதடுகளைக் குவித்துப் புகையை உள்ளிழுப்பதற்குள் அவளுக்கு பொறையேறியது. தும்மல், இருமல் என அவளை முட்டித்தள்ளி துள்ளச் செய்தது.  

‘சத்தம் போட்டுவிடக்கூடாதே!’ என்பதற்காக அவள் சிகரட்டைக் கீழே போட்டுவிட்டுத் தன்னிரு கைகளாலும் வாயை மூடினாள். இருமலை அடக்க முயன்றாள். முடியவில்லை. மூச்சு முட்டியது. ஒவ்வொரு முறை சுவாசிக்கும்போதும் உடலுக்குள்ளிருந்து இருமல் எழும்பி வந்து நெஞ்சை அடைத்தது. துள்ளி எழுந்து, பாவாடையைத் தூக்கிப்பிடித்து, கிணற்றுறைகளைத் தாண்டிக் குதித்து, வெளியே வந்தாள். திரும்பியே பார்க்காமல் தன் வீட்டை நோக்கி இருமிக்கொண்டே ஓடினாள்.  

அடுத்து என்ன செய்வதெனத் தெரியாமல் எங்கேயே அமர்ந்திருந்தாள்  மெக்ஸ்ஷா. அவள் உடல் மெல்ல நடுங்கியது. அவளுக்கு முன்பாகத் தரையில் சிகரெட் கனன்றுகொண்டிருந்தது. மெழுகுவர்த்தி தொடர்ந்து சுடர்ந்துகொண்டிருந்தது. அவள் தன் வலக்கையை வீசி மெழுகுச் சுடரை அணைத்தாள். அந்த நிழலிருளில் சிகரெட்டின் முனை தீத்துளியெனச் சிவந்து தெரிந்தது. தன் இடக்கை விரல்களால் புகைந்துகொண்டிருந்த சிகரெட்டை எடுத்தாள். அதை வாயில் வைத்து உதடுகளைக் குவித்து, கண்களை மூடிக்கொண்டு மிகவும் மெதுவாகப் புகையை உள்ளிழுத்தாள். ஒன்றும் ஆகவில்லை. அவளுக்கு ஒன்றுமே ஆகவில்லை. வாயிலிருந்து சிகரெட்டை எடுத்தாள். வாய் வழியாகவும் மூக்கின் துவாரங்களின் வழியாகவும் மெல்லிய வெப்பத்துடன் புகை வெளியேறியது. உச்சந்தலையில் ஏதோ ஏறிக்கொண்டதுபோல உணர்ந்தாள். 

அடுத்தடுத்து எனத் தொடர்ந்து புகையை உள்ளெழுத்து வெளியே விட்டபடியே இருந்தாள். மூன்றடுக்குக் கிணற்றுறைகளுக்கு மேலே புகை மண்டலம் சுழலத் தொடங்கியது. அதை முதலில் பார்த்தது மெக்ஸ்ஷாவின் அம்மாதான். தோட்டத்து எரிகுழியில் குப்பைகளைக் கொட்ட வந்தவர், கிணற்றுறை அடுக்கத்தினுள்ளிருந்து புகை வருவதைப்  பார்த்துவிட்டு, ஐயத்துடனும் அதிர்ச்சியுடனும் அதை அணுகி வந்தார்.  

கிணற்றுறைக்குள் அமர்ந்துகொண்டு வெகு இயல்பாக,  உல்லாசமாகத் தன் மகள் சிகரெட் பிடிப்பதைப் பார்த்ததும் அவருக்கு நெஞ்சே அடைத்துவிட்டது. வெறிகொண்டவர் போல கத்திக்கொண்டே மெக்ஸ்ஷாவின் தலைமுடியைப் பற்றித் தூக்கினார். முடி வளர்வதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் மெக்ஸ்ஷாவுக்கு மொட்டையடித்திருந்தனர். ஒருகைப்பிடிக்குள் அகப்படும் அளவுக்கு மட்டுமே மெக்ஸ்ஷா சுருற்கூந்தல் வளர்ந்திருந்தது. பிடித்த பிடியை விடாமல் அவளை இழுத்தபடியே கிணற்றுறைக்குள்ளிருந்து வெளியே கொண்டு வந்தார். அவள் முதுகில் ஓங்கி ஓங்கி அறைந்தபடியே வீடு நோக்கித் தள்ளிச் சென்றார். 

சாஹிதாவுக்கு இன்னமும் இருமல் நிற்கவில்லை. இருமி இருமி நெஞ்சு வலிக்கத் தொடங்கியது. அவள் மெல்ல நடந்து சமையலறைக்குள் சென்றபோதுதான் மெக்ஸ்ஷாவின் அழுகுரல் கேட்கத் தொடங்கியது. அந்த அழுகுரல் சாஹிதாவை நடுங்கச் செய்தது. அவளுக்கு அடிவயிறு வலிப்பது போல இருந்தது. சமையல் வேலைகளைச் செய்து கொண்டே ‘என்ன?’ என்பது போல சாஹிதாவைப் பார்த்தார் சாஹிதாவின் அம்மா.  

முற்றத்தில் இருந்த சாஹிதாவின் அப்பாவுக்கும் மெக்ஸ்ஷாவின் அழுகுரல் கேட்டது. அதைவிடத் துல்லியமாக மெக்ஸ்ஷாவை மெக்ஸ்ஷாவின் அம்மா அடிக்கும் ஒலியும் ஏசும் வசைச் சொற்களும் கேட்டன. 

“அந்தச் சாத்தானோட சேர்வியா? இனி, சேர்வியா? அந்த இனிமே சாஹிதா மூஞ்சில நீ முழிச்சே பார்த்துக்கோ. உன்னோட முழியைத் தோண்டிடுவேன். இனிமே அந்தச் சாத்தான் சாஹிதாவோட நீ பேசவே கூடாது.” 

தன் மகளைச் ‘சாத்தான்’ என்று கூறும் மெக்ஸ்ஷாவின் அம்மாவின் மீது சாஹிதாவின் அப்பாவுக்குப் பெருஞ்சினம் ஏற்பட்டுவிட்டது. உடனே, பதறி எழுந்தார். வேகமாக வீட்டுக்குள் நுழைந்து ஒவ்வொரு அறையாகச் சென்று சாகிதாவைத் தேடினார். அவள் இல்லை. இறுதியாக அவர் சமையலறைக்குள் நுழைய முயன்றார். இவரின் காலடி ஓசையை உணர்ந்துவிட்ட சாஹிதாவின் அம்மா உள்ளிருந்தபடியே, “உள்ள வராதீங்க! சின்னவ வயசுக்கு வந்துட்டா” என்றார். 

‘அட, இதுதான் விஷயமா?’ என நினைத்துத் தன்னை ஆறுதல்படுத்திக் கொண்டு முற்றத்தை நோக்கி நடக்கும்போது, ‘இனிமே நாமலேதான் சிகரெட் வாங்கிக்கணுமோ?’ என்று நினைத்துக் கொண்டார். 

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *