கதையாசிரியர்:
தின/வார இதழ்: மணிக்கொடி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 2, 2021
பார்வையிட்டோர்: 3,833 
 
 

(1936ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இடுப்பில் ஒரு வயதுக் குழந்தையுடன் பேசாமடந்தை நேற்று ஆற்று வெள்ளத்திலே இறங்கிவிட்டாள். அந்த ஜலப் பிரளயமாவது அவளுடைய மனக் கொதிப்பை ஆற்றியதா என்பது சர்வேஸ்வரனுக்குத்தான் வெளிச்சம்!

சித்திரப்பாவை போன்ற பருவத்திற்குப் பேசும் சக்தியையும் அளித்திருக்கக் கூடாதா அந்தப் பொல்லாத பிரம்ம தேவன்! அதுதானில்லை; அவளுக்குப் பிறந்த பெண்ணும் பேசா மடந்தை யாகவேயா இருக்க வேணும்? வயிற்றில் சுமந்திருந்த பத்து மாதமும் தனக்குப் பிறக்க இருந்த குழந்தை பேசுமா, பேசாதா என்ற கவலையில் இரவு பகலாகத் தூக்கமின்றியே காலங் கழித் தாள். அது பிறந்த பின் ஒவ்வொரு நாளும் அது மூச்சு விடுவதைத் தவிர்த்து நாவசைத்து வேறு ஏதாவது சத்தம் செய்யாதா என்று ஏங்கினாள். இந்த ஏக்கத்தினால் சென்ற ஒரு வருஷமாக அவள் மனதில் வேறு ஒன்றும் உறைப்பதேயில்லை; எதற்கும், யாருக்கும் பதிலேயளிக்காமல் சித்தப் பிரமை பிடித்தவள் போல் மணிக் கணக்காய் உட்கார்ந்திருப்பாள். ராஜுவைக் கண்டால் கூட அவளுக்குப் பிடிக்காமல் போய் விட்டது. அவனும் ஏதோ ஒரு மாதிரியாகத் தானிருந்து வந்தான். பேசா மடந்தைக்குப் பிறந்த பெண்ணும் இதர ஜனங்களைப் போலில்லாது ஊமையாகவா கஷ்டப்படணும்? ஊமை வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா? அந்தப் பெண்ணுக்கும் ஊமைப் பெண் பிறந்து விட்டால் பேசாமடந்தை சந்ததி சாசுவதமாகி விடும்! ஆற்று வெள்ளத்தைச் சரணென்று சென்றடைந்து விட்டாள்!

ராஜுவின் மனதை முதன் முதலாகக் கவர்ந்தது அவளுடைய கண்களிலே பரந்து நிலவிய உயிரொளிதான். அக்கம் பக்கத்தில் அவளைப் பற்றி விசாரித்த பிறகே அவனுக்கு அவள் ஊமை யென்பது தெரிய வந்தது. அவள் முகத்தில் ஊமைக்களை ஒரு சிறிது மில்லை . ஆனால் உற்றுக் கவனித்தால் அவளுடைய அதிப் பிரகாசமான கண்களில் எப்போதும் ஒரு சூன்யப் பார்வை குடி கொண் டிருந்தது தெரிய வரும். அதைக் கவனித்த புதிசில் ஒரு பத்து நாள் அப்பார்வை அவன் மனதை விட்டகல மறுத்து விட்டது. நினை விலும் கனவிலும் அவனைத் தொடர்ந்து துன்புறுத்தியது. வாழ்க் கையில் ஒரு இலக்ஷியமும் இல்லாமையே அச்சூன்யப் பார்வையின் அர்த்தம் என்று ஊஹித்துக் கொண்டான் ராஜு. இதைத் தொடர்ந்து, தான் ஏன் அதற்கு ஓர் பரிகாரம் தேடக் கூடாது? அப்பெண் உய்ய ஒரு வழி காட்டக் கூடாது? – என்று யோசிக்கலானான். அவளுக்கு ஒரு வாழ்க்கை லக்ஷியந் தேடித்தர வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டான்.

ராஜு காலேஜ் விடுமுறை நாட்களிலெல்லாம் பழையபடி பட்டணம் போவதை நிறுத்தி விட்டுப் பேசா மடந்தையை நாடி, சதா அவள் ஞாபகமாகச் சுவாமி மலை வந்து சேர்ந்து விடுவான். ராஜுவுக்கு உற்றார் உறவினர் யாருங் கிடையாது. அவன் தாயாருக்கு ஏதோ தூர பந்துவான ஒரு கிழவி, அவனுடைய சுவாமி மலை வீட்டில் அவனுக்குச் சமைத்துப் போட்டுக் கொண்டிருந் தாள். சுவாமிமலையே அவனுக்குப் பூர்விகமான கிராமம். அங்கே அவனுக்கு ஒரு சிறிய வீடும் கொஞ்சம் நிலமுமிருந்தது. கையில் கொஞ்சம் ரொக்கமுமிருந்தது. பேசா மடந்தையின் பெற்றோர் அவன் தங்களுடைய ஊமைப் பெண்ணுடன் சிநேகிதமாயிருப்பது பற்றி யாதொரு ஆக்ஷேபனையுஞ் செய்யவில்லை. ஆனால் அந்த நட்பு நாளடைவில் பரஸ்பரம் காதலாக மாறிக் கலியாணம் வரையில் கொண்டு போய் விடும் என்று அவர்கள் கனவிலும் நினைக்கவில்லை. கலியாணமெல்லாம் ஆன பிறகுங் கூடப் பணக்கார ராஜு ஒரு ஏழை ஊமைப் பெண்ணைக் கட்டிக் கொண்டு அதிக நாள் காலம் தள்ள மாட்டானென்று தினேதினே பேசா மடந்தை வாழா வெட்டியாகத் திரும்பி வந்து விடுவாள் என்றே எதிர் பார்த்தனர். கடைசியில் பேசாமடந்தை கர்ப்பமாயிருந்த செய்தி தெரிந்த பின்தான் ராஜுவுக்கு அவளைத் தள்ளி வைத்து விடும் எண்ணமே கிடையாது என்றறிந்து அவர்கள் மனம் சந்துஷ்டி யடைந்தது. நல்ல வேளையாக நேற்றைய சமாசாரம் அவர்கள் காதில் விழுமுன் அவர்கள் இவ்வுலகை விட்டு நீங்கி விட்டனர். பேசா மடந்தையின் தகப்பனார் அவளுக்குச் சீமந்தம் ஆகும் வரையில் தானிருந்தார்; விதவைத் தாயார் தன் பேத்தி பிறந்த இருபதாம் நாள் இறந்தாள். அதுவும் ஈசுவர சங்கல்பந்தான்.

ராஜுவின் நட்பிற்கு முதலில் இடையூறாகக் குறுக்கே நின்றது பேசா மடந்தையே. அவள் தன் தாய் தகப்பனைத் தவிர வேறு யாருடனும் பழகி யறியாள். ஒத்த வயதுக் குட்டிகளுடன் நெருங்கவே அவள் மனம் இடங் கொடுக்காது. அவளுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தினால் அவள் மனம் துன்ப உணர்ச்சி தவிர வேறு ஒரு விதமான உணர்ச்சியையும் நுகர மாட்டாது ஸ்தம்பித்துப் போயிருந்தது. அவளை யாரும் மனிதப் பிறவியென்று மதிக்க மாட்டார்களென்றே அவள் நம்பியிருந்தாள். பி.ஏ. வகுப்பில் படித்துக் கொண்டிருந்த ஒரு இருபது வயது வாலிபன் தன்னைப் பற்றிக் கவலைப்படுவான் என்று அவள் கனவிலும் கருதியதில்லை. மேலும் தன் ரூபலாவண்யத்திலீடுபட்டு யாராவது பட்சமாக நடத்துவார்கள் என்றும் அவள் எண்ணிய தில்லை . அவள் அழகென்பதே அவளுக்குத் தெரியாது. நிலைக் மணிக்கொடி கண்ணாடி யருகில் போயறியாள்; அந்தப் பேசத் தெரியாத வாயைக் இதழ் தொகுப்பு கண்டால் அவளுக்குக் கண் கலங்கி நிறைந்து விடும்!

ராஜுவைச் சந்திக்கும் வரையில் அவளுக்குத் தன் துயரங்களை மறக்க ஒரே ஒரு வழிதான் தெரியும். கையில் ஏதாவது ஒரு புத்தகத்துடன் யார் கண்ணிலும் படாமல் ஒரு மூலையிலுட்கார்ந்து சதா படித்துக் கொண்டே யிருப்பாள். அவளது இன்பமற்ற வாழ்க் கையை எவ்வளவு நாள் இம்மாதிரி கம்ப ராமாயணத்திலீடுபட்டு மறந்திருப்பாள் என்று கணக்கிட முடியாது. ராஜுவுக்கும் அவளுக்கும் அவளுடைய பதினாலாவது வயதில் புத்தகங்கள் மூலமாகவே நட்புண்டாயிற்று. ஒரு விடுமுறையில் ராஜு பேசா மடந்தையைப் பற்றிய எல்லா விவரங்களையும் அறிந்து கொண்டு அவளிடம் பரிதாபங் கலந்த அன்பு கொண்டான். சாரமற்ற தன் வாழ்வை மறக்க அவள் தமிழிலக்கியத்திலே ஈடுபட்டிருந்தாள் என்றும் அறிந்து கொண்டான். ராஜுவுக்கு ஏற்கெனவே தமிழில் இருந்த ஆர்வம் அன்று முதல் பன்மடங்காய் அதிகரித்தது. அடுத்த விடுமுறைக்குச் சுவாமிமலை வரும்போது பொறுக்கித் தேர்ந் தெடுத்த புத்தகங்களாய் ஒரு நூறு தன்னுடன் கொண்டு வந்தான். பேசா மடந்தைக்கு ஏதோ ஒன்றிரண்டு புத்தகங்கள்தான் வாசிக்க வசதியிருந்தது. எனவே ராஜு அவர்கள் வீட்டுக் கிழவி மூலம் கொடுத்தனுப்பிய புத்தகங்களை அதி ஆவலுடன் வாங்கிப் படித்து விட்டுத் திருப்பியனுப்பினாள். இம்மாதிரி நாலைந்து தரம் கிழவி போய் வந்த பிறகு பேசா மடந்தை தானாகவே பயத்தை மறந்துவிட்டு, பிறகு இரண்டொரு புத்தகங்கள் கேட்டனுப்பினாள். இதற்குள் காலேஜ் திறந்தாகி விட்டபடியால் ராஜு திருச்சி போய் விட்டான்.

அதற்கடுத்த வாரத்தில் விடுமுறையில் தான் இருவரும் முதலில் சந்தித்தது. பேசாமடந்தை அவனை நிமிர்ந்து பார்க்கவே யில்லை. தூர நின்றபடி அவன் சொல்லுவதைக் கேட்டுவிட்டு, கொடுத்த புத்தகங்களை வாங்கிக் கொண்டு படிக்கப் போய் விட்டாள். இரண்டாவது தடவை சந்தித்த போது சற்றுத் தைர்யமாகத் தன் பிரகாசமான கண்களால் ராஜுவைப் பார்த்தாள். அந்தப் பார்வையிலீடுபட்டு ராஜு இரண்டு நிமிஷம் பிரமித்துப் பேசவே மறந்து போய் விட்டான். அன்று ராஜுவுக்குத் தான் அவளைக் கலியாணஞ் செய்து கொண்டு அவளுடன் வாழா விட்டால் தன் வாழ்க்கையே வீணாகி விடும் என்று தோன்றிற்று. இந்த எண்ணம் நாளாக ஆகப் பலப்பட்டே வந்தது. அவள் கண்களிலும் அவளுக்குத் தன்னிடம் வளரும் காதல் புலனாகவே, அவன் பரீக்ஷையானதும் கூடிய சீக்கிரம் ஏதாவது வேலையிலமர்ந்து பேசா மடந்தையைக் கலியாணஞ் செய்து கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தான். இந்த எண்ணத்தைப் பேசா மடந்தைக்கும் தெரிவித்ததும் அவள் என்ன வெல்லாமோ ஆக்ஷேபனைகள் செய்தாள். முடிவில் ராஜுவிடம் தனக்கேயிருந்த அன்பினால் ‘சரி’யென்று ஒப்புக் கொண்டு விட்டாள். கலியாணமும் அவளுடைய பதினேழாவது வயதில் நடந்தது. அப்போது அவனுக்கு வயது இருபத்து மூன்று; ஒரு பள்ளிக்கூடத்தில் அறுபது ரூபாயில் வேலையாகி ஆறு மாதமாயிருந்தது.

கலியாணமான முதலிரண்டு வருஷங்கள் தான் பேசா மடந்தையின் வாழ்விலேயே கலப்பற்ற இன்ப மயமாகக் கழிந்த நாட்கள். தனக்கும் தன்னைச் சுற்றியிருந்த மனிதர்களுக்கும் உள்ள வித்தியாசத்தினால் மானஸீகமாகக் கூட அதிகம் பாதிக்கப்படாமல் காலத்தைக் கடத்தினாள். இந்த விஷயத்தில் ராஜுவினுடைய அன்பும் பரிபூரணமாக அவளுக்கு உதவியாக இருந்தது. தமிழிலக்கிய விசாரணையிலும் சில காலம் ஈடுபட்டுத் தன் துன்பங்களை மறந்திருந்தாள். நமது இலக்கிய மறு பிறப்பிலே உத்ஸாஹங் கொண்டு புதுமையான ரீதியில் சில கதைகளும் கட்டுரைகளும் எழுதி வெளியிட்டாள். அவைகளை வாசித்த யாரும் பேசா மடந்தையின் உயர் கலைத் திறனை மனமார ஒப்புக் கொள்ளத்தான் செய்வார்கள். அவை நூதனமான பாணியிலமைந்து இலக்கிய விசேஷ விசித்திரங்கள் திகழ்ந்திலங்கும் அதிமேன்மை யான கதைகளாகும். இன்னம் பல நாள் தம்முடனிருந்து அம் மாதிரிப் பல கதைகள் எழுதி யருளாது இவ்வளவு சீக்கிரமேயவள் இறந்து விட்டது தமிழகத்தின் துர்பாக்கியந்தான். ஆனால் இன்னஞ் சின்னாள் இருந்திருந்தால்… அவளுக்கு என்ன நேர்ந்திருக்குமோ, யார் கண்டது? அவள் இத் தருணம் இறக்க வேண்டுமென்று ஈசுவர சித்த மிருந்த போது, பின்னால் அவள் வாழ்க்கையில் என்ன நடந்திருக்கும் என்று நாம் எண்ணிப் பார்ப்பதில் பயன் யாது?

கலியாணமான பிறகு கொஞ்ச நாள் ராஜுவும் சந்தோஷமாகத் தானிருந்தான். பேசாமடந்தையின் இருளடைந்த வாழ்க்கைக்கு வெளிச்சமும், உயிரும், உத்ஸாஹமும் அளித்தது தானே என்னும் பெருமையில் அகமகிழ்ந்தான். ஆனால் நாளடைவில் தன் வாழ்வு முழுவதையும் ஒரு ஊமைச்சியிடம் ஒப்படைத்து விட்டது தவறு தானோ என்று கொஞ்சங் கொஞ்சமாய்ச் சந்தேகம் தட்ட ஆரம்பித்தது. படிப்படியாக அது விருத்தி யடைந்தது. கடைசியில் வருஷக் கணக்காய் ஆயுள் முழுவதையும் ஒரு ஊமைச்சியைக் கட்டிக் கொண்டு தள்ள ஏன் ஒப்புக் கொண்டோம் என்று ஏங்க லானான். முதலில் இதை மனதுக்குள்ளேயே வைத்துக் கொண்டு, பேசா மடந்தைக்குத் தெரிந்தால் விசனப் படுவாளேயென்று கஷ்டப்பட்டான். இதன் பலனாக நாளடைவில் அவன் நடத்தையில் ஏற்பட்ட மாறுதல்களினின்றும் அவன் அன்பு முன் போலக் களங்கமற்றதாக இல்லை யென்று பேசாமடந்தையும் கண்டு கொண்டாள். அவள் தலைமேல் இடி விழுந்தது போலிருந்தது. திகிலடைந்து விட்டாள். ராஜுவின் அனன்னியமான அன்பில்லாது எப்படிக் காலந் தள்ளுவது என்று திகைத்தாள்.

இதன் மத்தியில் நடந்தவொரு சம்பவம் அவள் மனதை முற்றிலும் கசக்கி விட்டது. அது நடந்தபோது அவள் நாலுமாதம் கர்ப்பமாயிருந்தாள். அவள் வயிற்றிலிருந்த குழந்தையை யெண்ணித்தான் அதற்கப்புறமும் அவள் உயிருடனிருக்கத் துணிந்தது. இல்லாவிட்டால், அன்றே ராஜு வேறு ஸ்திரீயை நாடுகிறான்; தன் காதலை மறந்து விட்டான் என்று தெரிந்த அன்றே – உயிரை விட்டிருப்பாள். ஆனால் தன் குழந்தை பிறந்ததும் அதன் மழலைச் சொற்களைக் கொண்டு தன் கணவனைத் திருத்தி அவனுடன் பழையபடி வாழலாம் என்ற ஆசையில்தான் உயிர் வைத்துக் கொண்டிருந்தாள். குழந்தையும் ஊமையாகப் பிறக்கவே அந்த ஆசையிலும் மண் விழுந்து விட்டது. ஊமைப் பெண்ணையுமா கவனிக்கப் போகிறான், என்றெண்ணித்தான் நேற்று ஆற்றில் இறங்கி விட்டாள் போலும்!

அச்சம்பவம் முழுவதையும் இங்கு விவரிக்க வேண்டிய அவசியமில்லை. ராஜு வேலையாயிருந்த பள்ளிக்கூடத்தில் பதினாறு வயதுப் பெண்ணொருத்தி வாசித்துக் கொண்டிருந்தாள். கட்டழகி; கிளி போல் பேசுவாள்; ஐயோ! குயில் போல் குரல். சங்கீதத்திலே தேட்டை.

ராஜுவுக்கும் சங்கீதத்தில் அதிகப் பிரேமை, பைத்தியம் உண்டு; வித்வத்தும் உண்டு. உருவத்துக்கேற்ற குரலும் பேசா மடந்தைக்கு இருந்திருக்குமாயின் அவன் அந்தப் பத்மாவை ஏறிட்டும் பார்த்திருக்க மாட்டான். அவன் செவிகள் அவனைப் பத்மாவின் பக்கம் திருப்பின.

அவர்கள் காதல் வளரச் சந்தர்ப்பங்களும் அநேக மெழுந்தன. ஒரு தரம் பேசாமடந்தையின் வீட்டிலேயே, அவள் அருகிலிருக்கப் போகிறாளே என்ற பயத்தையும் மறந்து, அவர்கள் காமவசம், காதல் வசம் பரவசமாயினர். அன்று பேசாமடந்தை தனக்கு வாயில்லாது போனது போலக் கண்ணுங் காதுமில்லாது போயிருக்கக் கூடாதா என்றேங்கினாள்!

ராஜுவுக்கு இன்னும் பேசாமடந்தை தன்னை அன்று கவனித்து விட்டாள் என்று தெரியாது. அன்பு மறைந்து இருண்ட கண்களில் பேசா மடந்தை வழக்கம் போலவே தானிருக்கிறாள் என்று பட்டது.

காலக் கிரமத்தில் குழந்தையும் பிறந்தது. தாயைப் போலவே சொர்ண விக்கிரஹந்தான். தாயைப் போலவே ஊமையுந்தான். தன் பிரார்த்தனைக் கிரங்கிக் குழந்தைக்குப் பேசும் சக்தி அளிக்க மாட்டாரா என்று இரவு பகலாகப் பகவானைத் துதித்தாள். அந்தச் சண்டாளன் கண் திறக்கவில்லை; ராஜுவுக்குப் பேசாமடந்தையிடம் கொஞ்ச நஞ்சமிருந்த பரிதாபமும் அழிந்து ”அந்த இரண்டு ஊமைப் பிணங்களிடமும்” வெறுப்புத் தட்ட ஆரம்பித்தது.

தன் எளிய இருண்ட வாழ்க்கையினின்றும் அம்பலத்துக் கிழுத்து, காதல் காட்டி ஏமாற்றிக் கடைசியில் வெறுக்க ஆரம்பித்த ராஜுவிடம் பேசா மடந்தைக்கும் சொல்லொணாத வெறுப்பேற் பட்டு விட்டது.

ராஜுவும் பத்மாவும் எல்லோரெதிரிலும் கணவன் மனைவி போலவே நடக்க ஆரம்பித்து விட்டனர். அவர்கள் உண்மையி லேயே கணவனும் மனைவியுமாவதற்கு நேற்று வரையில் குறுக்கே நின்றது பேசாமடந்தைதான்.

தனக்குத்தான் வாழ்க்கையில் இன்பமில்லாது போய்விட்டது; ராஜுவுக்கும் பத்மாவுக்கும் ஸர்வ மங்களங்களும், இன்பங்களும், இஷ்டங்களும் கிட்டட்டும் என்றுதான் தன்னை நீக்கிக் கொண்டு விட்டாள்!

தன் ஞாபகார்த்தமாக, தன்னைப் போலவே வாழ்க்கை வினையிலகப்பட்டுத் துடிக்கத் தன் பெண்ணை மாத்திரம் விட்டு விட்டுப் போவானே னென்று அந்த ஒரு வயதுக் குழந்தையையுந் தன்னுடன் அழைத்துச் சென்று விட்டாள்!

குழந்தையினுடைய உடல் மட்டுந்தான் இன்று காலையில் அகப்பட்டது. பேசா மடந்தையின் உடல் அகப்படவில்லை . துக்கத்தால் உருகி ஸத்தின்றி யிருந்த அவ்வுடல் நீரிலே கரைந்து கலந்து விட்டதோ என்னவோ தெரியவில்லை!

– 1936 மணிக்கொடி இதழ் தொகுப்பு

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *