பேசலின்றிக் கிளியொன்று

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 137 
 
 

எழும்பின நேரம் முதல் வீடு ஒரே பரபரப்பாக இருக்கிறது. “பிளீஸ் அம்மா, பிளீஸ்…நானும் உங்களோடை ஹொஸ்பிற்றலுக்கு வரட்டே?” என்று ‘அம்மா’விடம் கெஞ்சினது பலனளிக்காமல் போய்விட, முகத்தைத் தூக்கிக் கொண்டு தன்னுடைய பள்ளிக்கூட பஸ்சுக்கு ஓடுகிறாள், தங்கைச்சி. அவளைப் பின்தொடர்ந்து போன ‘அப்பா,’ “குட்டி, நீ வீட்டை வந்தாப்போலை அக்கான்ரை கையைப் பாக்கலாம் தானே. இப்ப அழாமல் போட்டு வா…. என்ன?” என்று முதுகைத் தடவி, அவளின்ரை நெற்றியிலை கொஞ்சிவிடுகிறார்.

இப்படித்தான் என்ரை அம்மாவும்! கட்டிப்பிடித்து, கொஞ்சி, தடவி, எதையாவது சொல்லிச் சமாதானப்படுத்தித்தான் என்னைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்புவா. ’மனம் சந்தோஷமாக இருந்தால்தான் பள்ளிக்கூடத்திலை படிப்பிக்கிறது விளங்கும்’ என்று அவ அடிக்கடி சொல்வதை நினைத்த போது என்ரை கண்கள் கசிகின்றன.

“சுமிக் குஞ்சு, கவனமாய்ப் போட்டு வாம்மா, பொம்மர் சுத்தத் தொடங்கினால் உடனை பங்கருக்குள்ளை ஓடிப்போயிட வேணும் என்ன? தற்செயலா, அப்பிடி ஓட ஏலாமல் போயிட்டால், உடனை நிலத்திலை விழுந்து படுத்திடு ராசாத்தி! ரீச்சர்மார் எத்தனை பேரை எண்டு பாக்கிறது, நீ தான் உன்னிலை கவனமாயிருக்க வேணும், என்ன?”, என்ரை நாடியை உயத்தி, என்ரை கண்களைப் பார்த்து அம்மா எனக்குத் தினம் தினம் சொன்ன வாசகங்கள், இவை.

அண்டைக்கும் அப்படித்தான் சொல்லிப்போட்டு போனவ. போன கையோடை, திரும்பி ஓடி வாறா. “உந்தா சுத்தத் தொடங்கியிட்டாங்கள். ஒண்டுக்குப் பின்னாலை ஒண்டாக நாலைஞ்சு வருது. இண்டைக்கு பள்ளிக்கூடம் வேண்டாம்.” என்று என்னையும் தம்பியையும் கையிலை பிடித்துக்கொண்டு வீட்டை நோக்கி ஓடுகிறா…

“சுமி, ரெடி தானே? வா, அப்பா கீழை காருக்குப் போயிட்டார். ” ‘அம்மா’வின் குரல் என் நினைவைக் குழப்புகிறது.

அந்த ஆஸ்பத்திரி வழமை போல வலு சுத்தமாக, எந்தச் சத்தமும் இன்றி, இன்றும் மிகவும் அமைதியாக இருக்கிறது.

எங்களைக் கண்டதும் அப்பாவிடம் ‘அவர்கள்’ ஆங்கிலத்தில் ஏதோ சொல்கிறார்கள். பிறகு அந்தப் பொய்க்கையைக் கொண்டு வந்து எனக்குப் போட்டு விடுகிறார், ஒருவர். என் பெருவிரல் மட்டும் வெளியில் தெரியக்கூடியதாய், மீதி நாலும் பொய் விரல்களுடனும் இருந்த அந்த உறை எனது புதுக்கை ஆகி விடுகின்றது.

என்ரை நிறத்திலிருந்து பெரிதும் வேறுபடாமல், எனது உடலின் ஒரு பகுதியாகி விட்ட என்ரை அந்த வலக்கையைத் தொட்டுப் பார்த்த ‘அப்பா’ என்னைப் பார்த்து ஒருவித ஆறுதலுடன் சிரிக்கின்றார்.

“ஹப்பி?” எனக் கேட்ட ‘அவர்களுக்கு’ப் பதிலாக என் தலையைக் கொஞ்சம் மேலும் கீழுமாய் ஆட்டுகிறேன், நான்.

“சிரிச்சுக் கொண்டெல்லோ சொல்லவேணும்! என்ன, பிள்ளை? ஹப்பி தானே?” என்கிறா, ‘அம்மா’.

அந்த உறையைக் கழட்டுறது எப்பிடி? பிறகு திருப்பி என்னெண்டு போடுறது? என்றெல்லாம் ‘அவர்கள்’ விளங்கப்படுத்துறதை எனக்கு விளங்கக் கூடியதாய் தமிழிலை ‘அப்பா’ திருப்பிச் சொல்கிறார். “ஊத்தையாய்ப் போனால் சவுக்காரம் போட்டுக் கழுவலாமாம். ஆனபடியால் இது ஊத்தையாய்ப் போயிடும் எண்டு நீ பயப்படத் தேவையில்லை. சரியே?” எனச் சொன்ன ‘அப்பா’வைப் பார்த்து, ’சரி’ எனத் தலையாட்டுகிறேன், நான்.

“உனக்கு, கை சும்மாயிருக்காது. இந்தச் செம்பாட்டு மண் முழுக்க உன்ரை உடம்பிலைதான். மண்ணிலை விளையாடுறதிலை உனக்கு என்ன தான் புளுகமோ…! சரி, எழும்பு. போய்க் கையைக் கழுவிப்போட்டு, சாப்பிட வா.” அம்மா பக்கத்திலை வந்து நிண்டு நச்சரிப்பது காதிலை வந்து போகிறது.

“இந்தக் கையாலை, இப்ப கொஞ்சம் சின்னச் சின்ன வேலைகள் செய்து பார்ப்போம், சரியா?, இந்தப் பந்தை உங்கடை இரண்டு கைகளாலையும் வடிவாய்ப் பிடித்து எனக்கு எறியுங்கோ”.

“குட்”.

“இப்ப, இந்தக் கரண்டியை வலக்கையாலை இறுக்கிப் பிடியுங்கோ, பாப்பம் ……. ”

அவர்கள் சொன்ன எல்லாத்தையும் தமிழிலை எனக்கு மீளச் சொல்லி, என்னைக் கொண்டு அவற்றைச் செய்வித்த பிறகு, “என்ன இருந்தாலும் அந்தக் கையாலை கஷ்டமான வேலைகள் செய்யக்கூடாதாம்” என்று ‘அப்பா’ எனக்கு எச்சரிக்கையும் செய்கிறார்.

“சுமி, இனி இந்தக் கையை ஒளிக்கத் தேவையில்லை! வெட்கப்படாமல் வடிவாய்க் காட்டாலாம்” என்று ‘அம்மா’மகிழ்வுடன் சிரிக்கின்றா.

“இந்தக் கை, சுமியின்ரை கையோடை சேருற இடத்தை மறைக்கிறதுக்கு காப்பு மாதிரி ஏதாவது வாங்கிப் போடலாமாம்.” ‘அம்மா’வுக்குச் சொல்லுகிறார், ‘அப்பா’.

“ஓம், பிள்ளைக்கு நான் வடிவான காப்பு வாங்கித்தாறன்.” சொன்ன ‘அம்மா’ என் தலையைக் கோதிவிடுகிறா.

“சரி, .சுமி இப்ப, கையைக் கொடுத்து இவைக்கு தாங்ஸ் சொல்லு பாப்பம்… உந்தக் கையாலை இல்லை… மற்றக் கையாலை. உன்ரை வலது கையாலை…….. கெட்டிக்காரி!” சொன்ன ‘அப்பா’ தொடர்கிறார், ”இனிப் பிள்ளை சந்தோஷமாக இருக்க வேணும், என்ன?”

வீட்டுக்குப் போனதும் என்ரை புதுக்கையைப் பார்க்க என்று வந்த பக்கத்து வீட்டு மாமி, “செயற்கைக் கை எண்டே சொல்லேலாது. அந்த மாதிரி நல்லாயிருக்குது!” என்று அதன் அச்சொட்டான நிறத்தைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டுப் போகிறா.

“அங்கை நேரத்துக்கு வைத்தியம் செய்திருந்தால் மற்ற விரலுகளையும் பாதுகாத்திருக்கலாம். என்ன செய்யிறது? என்ரை சினேகிதன் இன்ஸ்பெக்டர் பெரேரா இருந்ததாலை இப்படியாவது பிள்ளையைக் காப்பாத்த முடிஞ்சுது.” பெருமூச்சு விட்டுக் கொள்கிறார், ‘அப்பா’.

“செல் அடிபட்டதாலை, பிஞ்சுபோன துடையையும் பிளாஸ்ரிக் சேஜரியாலை திருத்தலாமாம்… அதையும் செய்யவேணும்” என்ற ‘அப்பா’வை “எத்தனை பேர் அங்கை இருந்து கஷ்டப்படுதுகள். என்னவோ, சுமியின்ரை நல்ல காலம், இங்கை வரக் கூடியதாய் இருந்திட்டுது. அதை விட உங்களுக்கு நல்ல மனசிருக்குது….. இப்படி எல்லாரும் உதவி செய்யாயினம்!” என வாயாராப் பாராட்டுகிறா, பக்கத்து வீட்டு மாமி.

“கடவுளே, தலைக்கு மேலை பொம்மர் சுத்துது!… சுமி, சுமன் விழுந்து படுங்கோ…. படுங்..கோ!” அவசரப்படுத்தின அம்மா நாங்கள் படுக்க முதல், எங்களைக் கீழே விழுத்திப்போட்டு எங்களுக்கு மேலே படுத்துக் கொள்கிறா.

நிலத்திலை பரவிக்கிடந்திருந்த கூரான அந்தச் சல்லிக்கற்கள் உடம்பை விறாண்டுகின்றன.

“குஞ்சு, பயப்பிடாதை அப்பன், அம்மா இருக்கிறனெல்லே.” வீரிட்டலறும் தம்பியைச் சமாதானப்படுத்தும் அம்மாவின் குரல் நடுங்குகிறது. அவன் நிலைமையை விளங்காமல் திமிறிக் கொண்டிருக்கிறான். எனக்கு அழுகை அழுகையாய் வருகுது. உடம்பு நடுங்குது. செத்துப் போகப்போறம் மாதிரி பயமாகக் கிடக்குது!

வட்டம்போடுற பருந்திட்டையிருந்து குஞ்சுகளைக் காப்பாத்த, தன்ரை செட்டைகளை விரித்து, அவற்றை மூடுற ஒரு தாய்க்கோழி மாதிரி …எங்களைத் தன்னால் மூட அம்மா முயற்சிக்கின்றா. ஆனால் அவவிட்டை செட்டை இருந்தால் தானே….

திடீரென்று காது வெடித்துவிடும் போல் பலத்த சத்தம் கேட்கிறது. என்னில் ஏதோ ஒன்று பட்டுச் சிதறுகிறது. வலக்கையின் நாலு கை விரல்களும் கீழே தொங்க, இரத்தம் பாய்ந்து ஓடுகிறது. அந்த வலி… தாங்கமுடியாத அந்த வலியில், ”அம்மா!” என ஓலமிட்டுக் கதறுகிறேன், நான்.

நாங்கள் இருந்த இடத்திலிருந்து நான் மிகவும் தூரத்தில் வீசப்பட்டு இருப்பது அந்தக் கரிய புகைக்குள்ளும் மெலிதாகத் தெரிகிறது. கண்ணுக்குத் தெரிந்த இடமெல்லாம் இரத்தம். காது நிறைந்த முனகல்களும், கூக்குரல்களும் வேறு மனதைப் பிளக்கின்றன. மெல்ல எழும்ப முயன்ற போது, தலைக்கு மேலை வந்த இன்னொரு பொம்பர் பிறகும் ஒரு குண்டைப் போட்டு விட்டுச் செல்ல———- பக்கத்திலிருந்த வேப்ப மரம் பெருத்த ஒலியுடன் சடாரென விழுகிறது. தொடர்ந்து என்னுடைய இரண்டு கால்களுக்கும் இடையில் ஏதோ ஒன்று விழுந்து காலை எரிக்கிறது.

ஆஸ்பத்திரியில் கண் முழித்த போது ‘அம்மா வேறை வாட்டிலை, தம்பி வேறை வாட்டிலை இருக்கினம். இப்ப ஒருத்தரும் ஒருத்தரையும் பார்க்கேலாது. சுகம் வரப் பார்க்கலாம்’ என்றார்கள்.

தலையிடி, காய்ச்சல் எண்டாலே, ’வைரவரே பிள்ளையைக் காப்பாத்து,’ எண்டு ஒரு பழந்துணியிலை 25 சதம் காசும், திருநீறும் கொஞ்சம் போட்டுக் கையிலை கட்டிவிட்டு, அடிக்கடி நெத்தியிலை பச்சைத் தண்ணிச்சீலை போட்டு விட்டபடி, பக்கத்திலை இருந்து தடவிக் கொண்டிருக்கிற என்ரை அம்மா, இந்த வலியின்போது எனக்குப் பக்கத்தில் இல்லையே என மனசு பலமாக வலிச்சது. எங்களுக்கு மேலே படுத்த அம்மாவின்ரை முதுகிலை செல் விழுந்திருக்குமோ அல்லது அவவின்ரை தலையிலை விழுந்துதோ என்னவோ என்று ஒரே யோசனையாகவும் மிகுந்த பயமாகவும் வேறு இருந்தது.

என்னுடைய வாட் நேர்ஸ் என்னைப் பார்க்க வரும் போதெல்லாம் அழுதா. ஆஸ்பத்திரியில் துண்டு வெட்டி, என்னை முகாமுக்கு அனுப்பின போதுதான் அம்மாவும் தம்பியும் என்னை விட்டுப் போய் விட்டதை நான் அறிகிறேன். எனக்கு கை இல்லாமல் போனதை விட, நான் தனிச்சுப் போட்டன் என்ற இரக்கத்திலை தான் அந்த நேர்ஸ் அப்படி அழுதிருப்பா என்பதும் அப்போது தான் புரிகிறது.

கடைசியிலை, அப்பாவின்ரை அக்கா, எனக்கு ‘அம்மா’வாகினதில், இப்ப இப்படி இங்கு வந்து நிற்கிறன், நான்.

பள்ளிக்கூடத்தாலை வந்த ‘தங்கைச்சி’ என்ரை புதுக்கையைப் பார்க்க ஆர்வத்துடன் ஓடி வாறாள்.

“சுமி, என்ன யோசனை? இனிச் சந்தோஷமாக இருக்க வேணும். கை வந்திட்டுது தானே. பிறகென்ன? எங்கை, சிரி பாப்பம்!” பக்கத்து வீட்டு மாமி சொல்லுறா.

நான், என்ரை இரண்டு கைகளையும் மாறி மாறிப் பார்கிறன். இது என்ரை அதிஷ்டமா?

– உரையாடல். நவம்பர் 14

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *