பெற்றோரிடம் அனுமதி கேட்கவேண்டும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 2, 2020
பார்வையிட்டோர்: 5,646 
 
 

வரிசையாய் அமைக்கப்பட்டிருந்த வீடுகளில் ஒன்றை உற்று நோக்கி கொண்டிருந்தேன் வீட்டுக்குள் போகலாமா? நம்மால் போக முடியுமா?

இங்கிருந்து பார்க்கும்பொழுது முன்னறையில் இருந்த நாற்காலியில் அப்பா பேப்பர் படிப்பது கண்களுக்கு தெரிந்தது. கண்ணாடியை கழட்டி கழட்டி துடைத்து படிக்கிறார். பாவம் சாளேஸ்வரம், இந்த வயதுக்கு வருவதுதான். என்னிடம் பணம் கேட்டு இரண்டு முறை மெயில் அனுப்பி இருந்தார், அப்பொழுது எனக்கு பண முடை, அனுப்ப முடியவில்லை. இந்த முறை அவர் கண் அறுவைக்கு தனியாக பணம் எடுத்து வந்திருக்கிறேன், ஆனால் கொடுக்க முடியுமா? தெரியவில்லை.

அம்மா உள்ளிருந்து வந்து அப்பாவுக்கு காப்பி கொடுக்கிறாள். இவர் பேப்பரை கீழே வைத்து விட்டு காப்பியை வாங்கி மெல்ல உறிஞ்சி குடிப்பது கண்ணுக்கு தெரிகிறது. அம்மா ஏதோ கேட்க இவர் தலையசைத்து சொல்வது தெரிகிறது. என்ன சொல்லியிருப்பாள், பையன் வெளி நாட்டுல இருந்து வர்றான் ஏர் போர்ட்டுக்கு போய் கூட்டிட்டு வாங்க அப்படீன்னு சொல்லியிருப்பாள் அப்பா தலை ஆட்டி யிருப்பார். பாவம் அவரும் பஸ்ஸில் தான் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் ஒரு “கால்டாக்சி” பிடித்து வரலாம், அதற்கும் நான்தான் ஏர் போர்ட்டில் வைத்து பணம் கொடுக்க நேர்ந்திருக்கும். அதற்கு முன்னால் நான் இங்கு வந்து இவர்களை கவனித்து கொண்டிருப்பது இவர்களுக்கு எப்படி தெரியும்.

பாவம்தான் அப்பா, முடிந்தவரை ஏதோ ஒரு கம்பெனியில் கணக்கு எழுதி, எழுதி எங்களை உருவாக்கி விட்டார். தம்பிக்கு மட்டும் ஏதாவது நிரந்தரமாக வேலை கிடைத்து விட்டால் போதும், அப்பா அந்த கம்பெனியை விட்டு வெளியே வந்து விடுவார். அம்மாவிடம் அடிக்கடி சொல்வதை நானும் கேட்டிருக்கிறேன். அவர்கள் என்னை பற்றி கவலைப்படவில்லை. படிப்பு ஏறவில்லை என்றாலும், எப்படியோ ஒரு தொழிலை கற்று மலேசியாவுக்கு பிழைக்க வந்து விட்டேன். வந்து மூன்று வருசம் ஆகியிருக்குமா? இருக்கும்.

முதலில் வேலை அமையறதுக்கே தாமதமாகி விட்டது. அப்பாவுக்கு என்னோட நிலைமை புரியாமல் கண் அறுவைக்கு பணம் கொடு என்று கேட்டால் எப்படி கொடுக்க முடியும். அதான் இந்த வருச சேமிப்புல அப்பாவுக்குன்னு தனியா எடுத்து வச்சிட்டேன்.

அப்பாகிட்ட ஒரு பொண்ணு வந்து பேசறது இங்கிருந்து பாத்தா தெரியுது.

‘அடடே” நம்ம கடைக்குட்டி கண்ணம்மா, ஏழாவது படிக்கிறாளா? இவளையாவது படிக்க வைக்கணும், கண்டிப்பா அப்பாவால முடியாது, என்னாலயும் முடியறது இப்ப சிரமம், தம்பி இருக்கான், கண்டிப்பா செய்வான். நான் பண்ணிட்டு வந்திருக்கற காரியத்தை பத்தி தம்பிக்கு மட்டும்தான் தெரியும். அப்பாகிட்டேயும், அம்மாகிட்டேயும் சொல்ல வேண்டாமுன்னு சொல்லி இருக்கேன். சொல்லி இருக்க மாட்டான்னு நினைக்கிறேன்.

அப்படி என்ன தப்பான காரியம் பண்ணிட்டேன்? அங்க ஒரு பொண்ணை பாத்து கல்யாணம் பண்ணிக்கலாமுன்னு முடிவு பண்ணிட்டேன். பண்ணீட்டேன் என்ன? பண்ணிட்டோம், அந்த பொண்ணு இலங்கையில இருந்து என்னைய மாதிரி பிழைக்க வந்த பொண்ணுதான், அவங்க வீட்டுல ஒத்துகிட்டாங்க, ஆனா உங்க அப்பா, அம்மா, அனுமதியோட வந்தாத்தான் பொண்ணை தருவேன்னு சொல்லிட்டாங்க, இப்ப அதுக்காக வந்துட்டு, ஒளிஞ்சு நின்னூ வீட்டை பாத்துகிட்டு இருக்கவேண்டி இருக்கு.

வீட்டுக்குள்ள போலாமா? ஏதாவது பிரச்சினை வருமா? நம்ம கல்யாணத்துக்கு ஒத்துக்குவாங்களா? அப்பா கூட கொஞ்சம் முரண்டு பிடிச்சாலும் கடைசியில ஒத்துக்குவாரு. ஆனா அம்மா கண்ணை கசக்கிட்டே இருக்கும். என்ன பண்றது? அந்த பொண்ணு என்னைய மாதிரி நல்ல உழைப்பாளி.கண்டிப்பா நம்ம குடுமபத்துக்கு ஏத்த பொண்ணுதான், ஆனா அதை எப்படி எடுத்து சொல்றது. இப்ப தம்பி அங்கிருந்தாலும் உள்ளே போய் பேச முடியும். போன உடனே பேச வேண்டாம்,முதல்ல எல்லாத்தையும் விசாரிச்சுட்டு அப்புறமா நாம் வந்த விசயத்தை பேச ஆரம்பிக்கலாம்.

சரி உள்ளே நுழையலாம், எண்ணியவாறு ஒரு அடி முன்னே வர.

தம்பி அவசர அவசரமாய் அப்பாவிடம் வந்து ஏதோ சொல்வது தெரிகிறது. அப்பா அப்படியே நெஞ்சை பிடித்து அந்த நாற்காலியிலேயே சரிகிறார். அதற்குள் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து வீட்டுக்குள்ளிருந்து வீட்டுக்குள் நுழைவது தெரிகிறது. ஆளாளுக்கு அம்மாவையும், அப்பாவையும், பிடித்து கொள்வது தெரிகிறது. என்ன நடக்கிறது அங்கே? நான் கண்டிப்பாக போக வேண்டும், விரைவாக செல்ல ஆரம்பிப்பதற்குள் வீட்டுக்கு வெளியே ஒரு கார் வந்து நிற்க, அனைவரும் அந்த காரில ஏறுவது தெரிகிறது. கார் அங்கிருந்து சீறிக்கொண்டு செல்வது தெரிகிறது.

வீட்டுக்கு வெளியே காத்து கிடக்கிறேன், அப்பா, அம்மா, தம்பி, தங்கை ஒருவரும் வரவே இல்லை. இரவு முழுக்க வாசலிலே காத்திருக்கிறேன். வீட்டையும்,என்னையும் பார்த்துக்கொண்டு, நிறைய பேர் சென்று கொண்டே இருக்கிறார்கள். ஒருவர் கூட ஏன் இங்கு உட்கார்ந்திருக்கிறாய் என்று கேட்கவே இல்லை. சோர்ந்து போய் மெல்ல வெளியே வருகிறேன். எதிரிலிருந்த பெட்டிக்கடையில் தொங்கிக்கொண்டிருந்த நாளிதழில் “மலேசியாவில் இருந்து கிளம்பிய விமானம் மாயமானது” ஏதேனும் கடலுக்குள் விழுந்திருக்கலாம் என்று அந்த நாட்டு இராணுவம் தேடிக்கொண்டிருக்கிறது. என்று கொட்டை எழுத்தில் தொங்கிக்கொண்டிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *