பெற்றெடுத்த உள்ளம்

1
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 22, 2014
பார்வையிட்டோர்: 13,715 
 
 

ஒரு வார காலமாக சந்திரசேகரனுக்குச் சரியான தூக்கம் இல்லை. மகன் திருமணப் பிரச்னை. சுரேஷுக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்தே, நான் அப்பா, அம்மாவைப் போலத்தான் காதல் திருமணம் செய்வேன் என்று நண்பர்களிடம் பேச்சு. அம்மா அப்பாவின் சந்தோச வாழ்க்கையையே பார்த்துப் பழகிப் போனவனுக்குச் சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் என்பது தெரியாதது பரிதாபம்.

எட்டாம் வகுப்பு படிப்பவனுக்கு அது சொன்னால் தெரியாது. தெரிய வேண்டியது……

பெற்றெடுத்த உள்ளம்

“”சுரேஷ் இந்த சங்கல்ப்பமெல்லாம் இப்போ வேணாம். வேளை வரும்போது யோசிக்கலாம். இப்போ உன் வேலை படிப்பு. அதை செய்” சொன்னார்.

சந்திரசேகரனுக்கு எப்போதுமே தவறுகளைச் சுட்டிக்காட்டும் சுபாவம். தன் கஷ்டம், துன்பம் பிறர்க்கு வேண்டாமென்கிற எண்ணம். அதற்காக கஷ்டமே வேண்டாமென்பதும் அவர் விருப்பம் கிடையாது. கஷ்டமே வா கஷ்டப்படுவோம் என்பதும் அவர் துணிவு. மகன் கஷ்டம் என்கிறபோது தன் காதில் விழுந்ததுமே கண்டித்தார்.

அன்றிலிருந்து அவன் வாய் அடக்கம். ஆனால் வாய் மூடிப் போன சொற்கள் வைராக்கியமாய் மாறியது, பத்து நாட்களுக்கு முன்தான் வெளிச்சம்.

நான்கு நாட்களாக சுரேஷ் முகத்தில் வாட்டம்.

“”என்னடி?” மனைவி மரகதத்திடம் கேட்டார்.

“”நீங்களே கேளுங்க” அவள் கணவரைத் திருப்பி விட்டாள்.

“”என்னடா?” மகனிடம் வந்தார்.

அவனுக்குத் திடீரென்று அதிர்ச்சியை மிதித்த மிரட்சி. என்ன? என்பதைப் போல் பார்த்தான்.

“”வாட்டமா இருக்கே?”

புரிந்தது.

“”நா… நான் ஒருத்தியைக் காதலிக்கிறேன்……”

அதிர்ச்சியை மறைத்துக் கொண்டார்.

“”ம்ம்…. அதுக்கென்ன?” ஏறிட்டார்.

“”பொண்ணு வீட்ல திருமணத்துக்குச் சம்மதிக்கலை….”

“”அவ்வளவு தூரத்துக்குப் போயாச்சா?”

“”ம்ம்…….”

“” ஏனாம்?”

“”ஜாதகம் வேணுமாம்”

அதை எழுதி வைக்காதது இவர் குறை. சந்திரசேகரனுக்கு சாமி, சாதி, மதம்,

ஜாதகம், நல்ல நேரம், கெட்ட நேரத்திலெல்லாம் நம்பிக்கை இல்லை. காதலித்து மணம் முடித்த மரகதம் மகன் பிறந்ததுமே, “”பொறந்த நேரத்தை வைச்சி ஜாதகம் எழுதிடுங்க” கணவருக்குக் கட்டளையிட்டாள்.

“”வேணாம்”

“”உங்களுக்கு நம்பிக்கை இல்லாம இருக்கலாம். பின்னால பையனுக்குப் பெண் தேடும்போது தேவையாய் இருக்கும்”

“”அவனும் நம்மைப் போல முடிப்பான்”

“”இந்த காதல், கஷ்டமெல்லாம் அவனுக்கு வேணாம். முடியாதுன்னா நகர்ந்திடுங்க. நான் என் அப்பா, அம்மாக்கிட்ட சொல்லி முடிச்சுக்கிறேன்”

“”வேணாம் மரகதம். அவன் காலம் காதல் சுலபமாய் இருக்கும். காதலா…. கல்யாணம் முடிச்சுக்கோங்கன்னு பெத்தவங்க பிரச்னை இல்லாம முடிச்சுடுவாங்க. அப்போ இந்த ஜாதகம் அது இதெல்லாம் குப்பை” பிடிவாதமாய் மறுத்து செய்யவே இல்லை. இப்போது, இடைஞ்சல்.

“”இல்லேன்னு சொல்ல வேண்டியதுதானே?” – தொடர்ந்தார்.

“”சொன்னதோடு நிறுத்தலை. பேர் ராசிக்கும் பார்த்து பத்து பொருத்தம் இருக்குன்னு சொல்லியாச்சு. ஜாதகம் இல்லேன்னு தெரிஞ்சு வேணும்ன்னு அடம். சம்மதிக்காததுக்கு அழும்பு” மரகதம் சொன்னாள்.

அப்போ தாய்-மகன் கூட்டுக் களவாணி. முடிந்தவரை தனக்குத் தெரியாமல் முயற்சி செய்திருக்கிறார்கள். முடியலை…இப்போ இங்கே வெளிச்சம். – அவருக்குப் புரிந்தது.

வீட்டில் எந்த திருட்டுத்தனங்களும் இறுதியில்தான் தலைவனுக்குத் தெரியவரும், தெரிவிக்கப்படும் என்கிற பொது விதி. இவருக்கும் பலித்ததை நினைத்து நொந்தார். மக்கள் அவனை ஒரு கோபக்காரனாகவோ கொடுமைக்காரனாகவோ நினைத்து ஒதுக்குகிறார்கள், மறைக்கிறார்கள். வலித்தது.

சுரேஷுக்கு எல்லாம் பட்டுத்தான் தெரிய வேண்டும் போல. நினைப்பு ஓடியது.

பிள்ளையார் சுழி, படிப்பு.

சந்திரசேகரனுக்கு மகனைப் பொறியியல் படிக்க வைக்க ஆசை. ஆனால் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் அதற்கு ஆதரவாய் இல்லை. விளைவு… மாற்று வழி பிடித்தார். சுலபமாக பட்டயப் படிப்பில் சேர்த்துவிட்டு பொறியியல் பட்டத்தில் நுழைக்கலாம் நினைத்து தொழிற்கல்வி கல்லூரியில் சேர்த்தார். பணம் கொட்டும் தகவல் தொழில் நுட்ப படிப்பு. சுரேஷ் மதிப்பெண்ணிற்குத் தாராளமாகக் கிடைத்தது.

முழுதாய் பத்து நாட்கள் பாடம் படிக்கவில்லை. முகத்தில் வாட்டம், படிக்கப் போகவில்லை என்று அடம். வழக்கம் போல அம்மாவிடமிருந்தே செய்தி.

“”ஏன் சுரேஷ்?”

“”அங்கே எல்லாரும் பத்தாம் வகுப்பு. மதிப்பெண்களும் குறைச்சல். கல்லூரிகளுக்கு வழி இல்லாதவனெல்லாம் அங்கே வந்திருக்கான். என்னையும் அப்படி நெனைச்சு கேவலமாய்ப் பார்க்கிறானுங்க”.

விவரம் சொல்லிச் சேர்த்தும் இப்படி ஒரு சங்கடம்.

“”அதுக்கு என்ன செய்யனும்ங்குறே?”

“”பட்டப்படிப்புக்குப் போறேன். பி.ஏ, பி.காம் பண்றேன்”

“”அதெல்லாம் அம்பது வருசத்துக்கு முன்னாடியே செல்லாக் காசு. நான் படிச்சே படாத பாடு பட்டேன்”

“”இப்போ படிக்கிறவங்க யாரும் வேலைக்குப் போகலையா? முயற்சி செய்தால் எல்லாம் முடியும்”

“”மத்தவங்களைப் பத்தி நினைக்காம இந்த மூணு வருசத்தை முடி. என் திட்டப்படி பட்டம் முடிச்சு நல்ல வேலைக்குப் போகலாம்”

“”மாட்டேன்” குரல் கடுமையாக வந்தாலும் முகத்தில் அழுகை வரத் துடித்தது.

எதிரிலிருந்த பெற்றவளுக்கு வலி வர,

“”ஏங்க…..அவன் விருப்பத்துக்கு விடுங்களேன் ” கணவரிடம் கடுமை காட்டினாள்.

“”ஆமாடா. விருப்பத்துக்கு விரோதமா நடந்தா எதுவும் சரியா இருக்காது” – காது கொடுத்து கேட்ட பாட்டன் பாட்டி – இவர் அம்மா அப்பா.

“”தொலையுது விடு” விட்டார்.

பி.காம். முடித்து, படாதபாடுபட்டு, என்னென்னவோ எழுதி இறுதியாய் வங்கித் தேர்வில் வெற்றி பெற்று வேலை. இதோ அடுத்த கட்டம் காதல், கல்யாணம்.

“”ம்ம்…அடுத்து…?” எதிரிலிருந்த மகனையும் மனைவியையும் ஏறிட்டார்.

“”அதான் தெரியலை” – சுரேஷ். முகம் முழுக்க குழப்பக் கோடுகள்.

“”உங்க தப்புக்கு நீங்களே நிவாரணம் தேடலாம்” மரகதம் இவரைப் பார்த்தாள்.

“”எதைச் சொல்றே?” புரியாமல் ஏறிட்டார்.

“”ஜாதகம் ஜாதகம்”

“”ஜாதகம் எழுதி வைச்சு… பொருத்தம் இல்லேன்னா காதலிச்சவங்க மனசு மாறும், கலியாணம் நிற்குமா”

தாய், மகன் துணுக்குற்றார்கள்.

சுரேஷ் நிதானித்து….. “”அப்பா நான் அந்தப் பொண்ணைத்தான் கலியாணம் முடிப்பேன்”

“”உன் காதலி?”

“”அவளும்தான்”

“”நிச்சயமா?”

“”நிச்சயம்”

“”மாற்றமிருக்காதே”

“”சத்தியமா கெடையாது”

“”ஏன் முரண்டு பிடிக்கிறாங்க?”

பாசமாய் வளர்த்த பொண்ணு. தூரத் தொலைவுன்னு யோசிக்கிறாப்போல. அது மட்டுமில்லாம ஜாதி, கெüரவம்….அப்படி இப்படின்னு தற்கொலைவரை வழக்கமான மசாலா.

இவருக்குள் என்ன செய்யலாம் என்கிற யோசனை.

“”நீங்க பேசிப் பாருங்க” சுரேஷ்.

“”முடியலைன்னா?”

“”எதுக்குத் தர்க்கம்? அடுத்து யோசிக்கலாம்”- மரகதம்.

நியாயம். தெளிவான முடிவு. அதற்கு மேல் பேச்சில்லை.

மொத்தப் பேருமே போய் பேசலாம். வளையலைன்னா அடுத்த கட்டம். சொன்னார். கிளம்பினார்கள்.

ஓசூரை ஒட்டி பெரிய கிராமம். சுற்றிலும் பச்சைப் பசேல் என்று வளமான பூமிகள். பெண்ணிற்கு மட்டும் சுரேஷ் தகவல் தெரிவித்திருந்ததால் கார் போய் வாசலில் நின்றதும் அவளே வந்து வரவேற்றாள். நல்ல அழகு, களை.

உள்ளே நுழைந்ததும் அவள் அப்பா, அம்மா, தம்பி அத்தனை பேர் முகங்களிலும் கடுமையான இறுக்கம். வந்தவர்களை வாவென்று வாய் அழைக்காத மெüனம்.

“”ஐயா உங்க பொண்ணை..” வீட்டுத் தலைவரைப் பார்த்து சந்திரசேகரன் வாய் திறந்தார்.

“”முடியாதுய்யா”

“”காரணம்?”

“”அதெல்லாம் சொல்லணும்ன்னு அவசியமில்லே. சொல்லியாச்சு. நீங்க கிளம்பலாம்”

“”இப்படியெல்லாம் பேசக்கூடாது” என்று நிறைய மறுப்புகள், பேச்சு வார்த்தைகள். இறுதி முடிவு….

“”எங்க சம்மதம் சத்தியமா கிடைக்காது” அவரின் முத்தாய்ப்பு.

“”மீனா, சுரேஷ் இனி உங்க முடிவு” அனைவரின் முன்பாகவும் இவர் அங்கேயே சொல்லி எழுந்தார்.

“”சொல்றேன். என் அம்மா அப்பா எல்லாரும் கேட்டுக்கோங்க. என் அம்மா அப்பா சம்மதத்தோட கட்டினா சுரேஷைத்தான் கட்டிப்பேன். முடியலைன்னா கடைசிவரை கன்னியா இருப்பேன். சாகமாட்டேன்” உறுதியான குரலில் சொன்னாள்.

“”என் முடிவும் அதேதான்” சுரேஷும் அறிவித்தான்.

பெண்ணைப் பெற்றவர்களிடம் அதிர்வோ, அசைவோ இல்லை.

இப்படியும் மக்களா? காலம் மாறவில்லையா? சந்திரசேகரன் திகைப்பின் எல்லைக்குப் போய் எழுந்தார்.

பெண்ணின் பிடிவாதம்… இரண்டு மூன்று நாட்களில் பதில் வரும் என்று எதிர்பார்த்து இருந்தவருக்கு வரவில்லை என்றதுடன் அங்கிருந்து மூச்சே இல்லை.

புரிய…..இவர்களைக் கரையேற்ற வழி – தூக்கம் வரவில்லை.

“தட் தட்’ கதவு தட்டும் சத்தம் கேட்டது.

இந்த அகால நேரத்தில் யார் போய்க் கதவைத் திறந்தார்.

மீனா…..

“”ஆ” லேசாக அலறினார்.

உள்ளே நுழைந்தவள், “”ஆமாம்ப்பா. நான்தான். பாச வேஷம் கலைஞ்சிடுச்சு” குமுறினாள்.

“”புரியலை”

“”நான் அனாதையாம். பிள்ளை இல்லாக் குறையை நீக்க என்னை அனாதை ஆசிரமத்திலேர்ந்து வாங்கி வளர்த்தாங்களாம். அடுத்துதான் அவுங்களுக்குத் தம்பி பொறந்தானாம். நாம இவ்வளவு தூரம் பிடிவாதம் பிடிக்கிறதே… பெண் ஓடிப் போய் கல்யாணம் முடிப்பாள். இதை சாக்காய் வைச்சு அத்து விட்டுட்டு நம்ம மொத்த சொத்துக்களுக்கும் மொத்த வாரிசாய் நாம பெத்தப் பையனுக்குச் சேரும்படியாய்ச் செய்துடலாம்ன்னு… என்னை பெத்தவங்கன்னு நெனைச்சிருந்தவங்க பேசிக்கிட்டிருந்ததைக் கேட்டேன்பா. ச்சே… வந்துட்டேன். என்னை ஏத்துக்கோங்கப்பா” சடாரென்று காலில் விழுந்தாள்.

சந்திரசேகரனுக்குப் பொலபொலவென்று பொழுது விடிந்தைப் போலிருந்தது.

மருமகளும் மகள்தான். எழுந்திரு மீனா என்று அவளை அன்பாய் ஆசீர்வதித்தவர், அடுத்த விநாடி வீட்டிற்குள் திரும்பி, “”சுரேஷ், மரகதம் நம்ம வீட்டுக்குச் செல்வம் வந்துடுச்சு” உற்சாகமாகக் கூவினார்.

– ஏப்ரல் 2014

Print Friendly, PDF & Email

1 thought on “பெற்றெடுத்த உள்ளம்

  1. அருமையான கதை.எப்படி இவ்வளவு நாள் படிக்காமல் இருக்க முடிந்தது என்று தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *