பெருவிரல்

0
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 11, 2014
பார்வையிட்டோர்: 10,396 
 
 

பேருந்து கிளம்ப இன்னும் அரைமணி நேரமிருக்க ஜன்னலோரத்தில் உட்காந்து பிளாட்பாரக் கடைகளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் ரத்தன், அவன் பயணத்துக்காக கடையில் தண்ணீர் பாட்டில் வாங்கிக்கொண்டிருந்த அப்பாவின் மீது அவன் கண்கள் உணர்ச்சியின்றிக் குத்தி நின்றுகொண்டிருந்தது. பேருந்து நிலையங்களுக்கே உரித்தான இரசிக்கமுடியாத இரைச்சல்கள் அவன் காதுகளை ஆக்கிரமித்திருந்தது. கண்களும் காதுகளும் திறந்திருந்தாலும் இரண்டோடும் தொடர்பின்றி மனம் எங்கெங்கோ அலைந்து கொண்டிருந்தது,

“இங்கே இன்னும் கொஞ்ச நேரத்துல அடைமழை ஸ்டார்ட் ஆகப்போவுது…”

பின்சீட்டில் உட்காந்து இருந்தவர் யாருடனோ செல்பேசியில் சொன்ன வார்த்தையில் அவன் மெளனம் கலைத்து ஜன்னலுக்கு வெளியே வானத்தை எட்டிப் பார்க்க முயற்சித்துவிட்டு, முடியாமல் வெளியில் மப்பும் மந்தாரமுமான சூழல் இருப்பதை வைத்து அவர் சொன்னதை மனதுக்குள் ஆமோதித்துக் கொண்டான். அதற்குள் அப்பா பேருந்தை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

பின்னால் இருந்த ஆள் சத்தமாய் தங்லீஷில் ரொம்ப நேரமாய் வளவளத்துக் கொண்டிந்தாலும் அந்த ஒரு வார்த்தை மட்டும் அவனது மெளனத்தைக் கலைத்த காரணம் அவனுக்கு புரியவில்லை. அவன் எதிர்பார்த்தபடியே இப்போது அப்பா ஜன்னலுக்குக் கீழே நின்று கொண்டு தண்ணீர் பாட்டில் இத்தியாதிகளைக் தன் கையில் திணித்துவிட்டு தனது வழக்கமான நீண்டநெடு லெக்ச்சரை ஆரம்பிக்கப்போகிறார். காரணம் ரத்தன் அவ்வளவு ஆழமான பாதிப்பைக் குடும்பத்தில் ஏற்படுத்தியிருந்தான்.

வழக்கமாக அப்பா திட்டவோ அறிவுரை சொல்லவோ ஆரம்பித்தால் மடைதிறந்த வெள்ளம்போல வழக்கமான வசவுகள் வந்து கொட்டிக்கொண்டே இருக்கும். இடையிடையில் நிறுத்தி கேள்வியெல்லாம் கேட்கமாட்டார். அவர் வாயசைவையும் தலையசைவையும் வைத்து ஒவ்வொரு வாக்கியத்தின் முடிவிலும் குத்துமதிப்பாக குறுக்காகவோ, நெடுக்காகவோ, ஆமோதித்தோ தலையசைத்தால் போதும். தலை கவிழ்ந்தால் மட்டும் அப்பாவுக்குப் பிடிக்காது அவர் கண்களை நேராகப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும், எனவே அப்பா கச்சேரியை ஆரம்பித்தவுடனே காதுகளை ஆஃப் செய்துவிட்டு ம்யூட் மோடில் சூழலை சமாளிப்பது ரத்தன் கற்றுக்கொண்ட வித்தை. அது அவருக்கு தெரிந்தோ என்னவோ அவனுக்கு உறைப்பதற்காக “நாக்கைப் பிடுங்கும்” டைப் வார்த்தைகளை இடையிடையே சொருகுவது வழக்கம். சுற்றியிருப்பவர்கள் யாரென்பதையெல்லாம் பார்க்கமாட்டார். தன் மகன் தன்னை வெறுத்தாலும் சரி, நாலுபேர் முன்னிலையில் அவன் தன்மானத்தை குத்திக் கிளறிவிட்டாகிலும் வழிக்குக் கொண்டுவந்துவிடவேண்டும் என்பது அப்பாவின் எண்ணம். அவரைப் பொறுத்தவரை அது ஒரு தியாகம் கலந்த தந்திரம்.

அப்பா கையில் சில பிஸ்கெட், லேஸ் மற்றும் தண்ணீர் பாட்டிலை கொடுத்துவிட்டு, “நீ சாதிக்கப் பிறந்தவன்” என்ற ஒரு தன்னம்பிக்கைப் புத்தகத்தையும் கையில் திணித்து. “பஸ்ஸுல போறப்ப இந்தப் புஸ்தகத்தப் படி, நான் சொன்னதையெல்லாம் நல்லா ஞாபகம் வச்சுக்க..நான் சின்ன வயசுல அனுபவிச்ச வறுமையை நீங்களும் அனுபவிக்கக்கூடாது. அதனாலதான் உன் அக்காவுக்கு தனலட்சுமின்னும் நீயும் உன் அண்ணனும் பிர்லா, டாட்டா மாதிரி சாதிக்கணும்னு அவனுக்கு ஆதித்யான்னும் உனக்கு ரத்தன்னும் பேருவச்சோம். நீ ரத்தனாகாட்டிக்கூடப் பரவாயில்ல ஆனா பித்தனாயிராத…”

ரத்தன் உடனடியாக ம்யூட் மோடுக்கு மாறிவிட, போக்குவரத்துப் போலீசின் இடைவிடாத பிக்பாக்கட் எச்சரிக்கை ஒலிபரப்பையும் மீறி அப்பா உச்சஸ்தாதியில் தனது அட்வைஸ் மழையை ஆரம்பித்தார். என்னதான் ம்யூட் மோடுக்குப் போனாலும் பணம் குவிப்பதே வாழ்க்கை என்ற அப்பாவின் அறிவுரையும், பணத்தை திருடர்களிடம் இழந்துவிடாதீர்கள் என்ற காவல்துறையின் எச்சரிப்பும் மாறிமாறி அவன் காதுகளில் மோதிக்கொண்டுதான் இருந்தன, அவனது விருப்பமெல்லாம் இந்தச் சூழலைக் கலைக்க பின்னால் இருப்பவர் முன்னுரைத்ததுபோல ஒன்று மழை வரவேண்டும், அல்லது டிரைவர் வந்து வண்டியைக் கிளப்பவேண்டும்.

தான் விரும்பிய தத்துவவியல் பாடத்தை எடுக்கவிடாமல் வலுக்கட்டாயமாக தனக்குப் பிடிக்காத பி.காமுக்குள் பிடித்துத் தள்ளியது அவனுக்கு அப்பா மீதிருந்த கோபத்தை அதிகரித்திருந்தது. பி.காம் படிப்பிற்கு தன் ஊரிலேயே ஏகப்பட்ட கல்லூரிகள் இருக்க ஏன் தன் தந்தை விடுதியில் தங்கிப் படிக்கும்படி தன்னை சென்னை மாநிலக் கல்லூரிக்கு அனுப்புகிறார் என்பது ரத்தனுக்கு நன்றாகத் தெரியும். அதில் அவனுக்கும் இஷ்டம்தான் ஆனால் வேறுவகையில். “கெணத்துத் தவளை மாதிரி இருக்காத, உன்னப்போல பசங்களப்பாரு, ஒலகம் போற போக்கை தெரிஞ்சுக்க, ஊரோட ஒத்து வாழு..” என்பது அப்பா தனது லெக்ச்சரில் வழக்கமாகச் சொல்லும் வார்த்தைகள். ஒரு மாயையிலிருந்து இயல்பு வாழ்க்கைக்கு ரத்தனை இழுக்க சென்னை மாதிரியான பெருநகரங்களின் கல்லூரி மற்றும் விடுதிச் சூழல்தான் சரி என்பது அப்பாவின் எண்ணம், ஆனால் ரத்தனோ தான் விரும்பியபடி தனித்து வாழவும் தனது தேடலை தடையின்றித் தொடரவும் விடுதிதான் சிறந்தது என்ற எண்ணத்தில்தான் அப்பாவின் யோசனைக்கு மறுப்பின்றி ஒப்புக்கொண்டான்.

அதே வேளையில் இந்தத் தேடல் நமது குடும்பத்தார் பயப்படுவதுபோல நம்மை உண்மையிலேயே பித்தனாக்கிவிடுமோ, பெருநகரச் சூழலில் புதிய மாணவர்களோடு எப்படி ஒன்றப்போகிறோம். வீட்டில் ஒரு ஆதித்யாவையே சமாளிக்க முடியல…சென்னைப் பசங்களப் பத்தி சொல்லவே வேணாம்! ரத்தனின் மனதுக்குள் இனம்புரியாத பயங்களும் அலைமோதாமல் இல்லை.

ஆதித்யாவும் ரத்தனும் எதிரெதிர் துருவங்கள், இருவருமே அப்பாவின் திட்டங்களுக்குள்ளும், கனவுகளுக்குள்ளும் அடங்கமுடியாதவர்கள். ஆதித்யாவைப் பொறுத்தவரை அப்பாவின் பார்வையில் அவன் ஒரு பொறுப்பற்ற ஊதாரி. எப்போது பார்த்தாலும் மிமிக்ரி, ஸ்டாண்டப் காமெடி என்று மேடைகளைத் தேடி அலைந்து கொண்டிருப்பவன். அவனது வாழ்நாள் லட்சியம் நகைச்சுவை டிவி சேனலில் காம்பியரிங் செய்வது, அந்தப் புகழைப் பயன்படுத்தி சினிமாவில் நுழைவது. அவன் நண்பர்கள் ஆதித்யா சேனல் பார்க்காமல்கூட இருந்துவிடுவார்கள் ஆனால் ஆதித்யாவைப் பார்க்காமல் ஒருநாள்கூட இருந்ததில்லை. அந்த ஊரில் அவனுக்கென ஒரு தனி ரசிகர் வட்டமிருந்தது. அப்பா ஆதித்யாவுக்கென்று முற்றிலும் வேறொரு வெர்ஷன் அறிவுரை மற்றும் திட்டுத் தொகுப்பு வைத்திருக்கிறார். “நீ அடிக்கிற கூத்து உனக்கு சோறு போடும்ணு நெனைக்கிறியா…என்ற ரீதியில் அது தொடங்கி முடிவில்லாமல் சென்றுகொண்டே இருக்கும். வீட்டில் அப்பா இல்லாத நேரங்களில் ரத்தனை கிண்டல் செய்து அம்மாவையும் அக்காவையும் விலாநோக சிரிக்க வைப்பது ஆதித்யாவுக்குப் பிடித்த பொழுதுபோக்கு.

அப்பா வியாபாரம் செய்கிறார், சேர்த்த பணத்தை பங்குச்சந்தை போன்ற காரியங்களில் முதலீடு செய்து இரட்டிப்பாக்குவது, நிலங்களை வாங்கிப்போடுவது. இதுதான் அவரது முழுநேர வாழ்க்கை. பல லட்சங்கள் சம்பாதித்த பின்னரும் அதே பழைய வீடு, பழைய ஓனிடா டிவிப்பெட்டி, கதர் வேட்டி சட்டை எதையுமே மாற்றவில்லை. எல்.இ.டி டிவி கேட்டு பிள்ளைகள் பலமுறை நச்சரித்தபின்னும் “அதெல்லாம் வெட்டிச்செலவு, இந்த டிவியில பார்த்தாலும் அதே படந்தானே தெரியுது” என்று அவர் இதுவரை எல்.இ.டி டிவிக்கு இணங்கவில்லை.

ரத்தனின் அம்மாவுக்கு அடுப்படியைத் தவிர விருப்பமான காரியங்கள் இரண்டே இரண்டு. கரண்ட் இருக்கும்போது டிவி சீரியல், இல்லாதபோது அக்கம்பக்க வீடுகளின் உள்விவகாரங்களை உளவுபார்த்து புளங்காகிதமடைவது. தனலட்சுமியை ப்ளஸ்டூவோடு படிப்பை நிறுத்தி தூரத்து சொந்தத்தில் திருமணம் செய்து வைத்தார்கள். தனலெட்சுமி அப்பாச்செல்லம், நல்லவள்தான் ஆனால் வாய் மட்டும் காதுவரை நீளம், வாய்த்துடுக்கான பேச்சால் மாமியாரிடம் சண்டையிட்டு திருமணமான நாலே மாதத்துக்குள் அம்மா வீட்டுக்கு திரும்பிவிட்டாள். விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே பெற்றோர் கட்டாயத்தால் வேண்டா வெறுப்பாக தனலட்சுமியை கரம்பிடித்த அவள் கணவன் இதையே காரணங்காட்டி தனலட்சுமியை முற்றிலும் கைகழுவிவிட்டான். தம்பதிகளை சேர்த்துவைக்க தனலட்சுமியின் பெற்றோர் எடுத்த முயற்சிகள் அதனாலேயே கைகூடவில்லை. அவளும் அதைப்பற்றி ரொம்ப அலட்டிக்கொள்ளவில்லை. இப்போதைக்கு தனலட்சுமிக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு தம்பிகள் இருவரையும் பற்றி அவ்வப்போது அப்பாவிடம் போட்டுக்கொடுத்து நல்லபேர் வாங்குவதுதான்.

இந்தக் குடும்பத்தில் ரத்தன் மட்டும் முற்றிலும் வேறுபட்டவன். குடும்பத்திலிருந்து மட்டுமல்ல சம வயதான மற்ற இளைஞர்களிடமிருந்தும் மாறுபட்டவன். அவன் தேடல் இந்த உலகத்துக்கும், வாழ்க்கைக்கும் அப்பாற்பட்டது. ரத்தனைப் போலவே இளவயதில் ஆன்மீகத் தேடலைத் தொடங்கிய பலர் மெய்ப்பொருளை அடைந்தார்களோ இல்லையோ காலப்போக்கில் அதுவே “பொருளை” அடைந்து பிழைப்பை ஓட்டுவதற்கான வழியாக மாறி, ஆன்மீகப் பாதையில் வியாபார வண்டி ஓட்ட ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் ரத்தனின் தேடலில் கண்டுகொண்டால் வாழ்வு, இல்லாவிட்டால் சாவு என்ற அளவுக்கு ஒரு வெறி இருந்தது. அந்தவெறியின் தாக்கம் அவன் வெளிப்புற தோற்றம் மற்றும் நடவடிக்கைகள் வரை பிரதிபலித்தது. அவன் குடும்பத்தாரை மிரளவைத்தது அதுதான். தன்னைச் சுற்றியுள்ளவைகள் மாத்திரமல்ல தானும் நிரந்தரமற்றவன் என்ற உணர்வு வந்தபின்னர் அவனால் எதன் மீதும் நாட்டம் கொள்ள முடியவில்லை. அவன் தேடலெல்லாம் நிரந்தரம் என்ற ஏதோ ஒன்றை நோக்கியே இருந்தது.

“இருபது வயசுல இது உனக்கு தேவையில்லாததுடா, சாமிங்கிறது சூரியன் மாதிரி அதவிட்டு ரொம்ப தூரம்போனாலும் ஆபத்து அதரொம்ப நெருங்கினாலும் ஆபத்து” என்ற அப்பாவின் வாதம் ரத்தனிடம் எடுபடவில்லை. “ஆன்மாவும் ஒரு சுடர்தாம்ப்பா, இந்தச் சிறுசுடர் அந்தப் பெருஞ்சுடரில் சென்று கலப்பதுதான் நியதி” என்று கூறிவிட்டு நகர்ந்துவிட்டான். அதுமுதல் அப்பா அவனிடம் ஆன்மீகம் பேசுவதில்லை.

சமீபத்தில் வியாபார விஷயமான வாரணாசிக்குச் சென்று வந்த அப்பாவுக்கு அங்கிருந்த அகோரிகளைப் பார்த்தவுடன் மனதிலிருந்த கொஞ்சநஞ்ச நிம்மதியும் பறிபோய்விட்டது. தன் மகனின் ஓட்டமும் இங்குவந்து முடிந்துவிடுமோ என்ற பயத்தில் பல தூக்கமற்ற இரவுகளைக் கழித்தார். விளைவாக ரத்தன் மீது குடும்பத்தாரின் பிடி மேலும் இறுகியது. அவன் அரும்பாடுபட்டு சேர்த்த ஆன்மீகப் புத்தகங்கள் ஒரே நாளில் தீக்கிரையாக்கப்பட்டது. சிகையலங்காரத்தை மாற்றும்படியும் ஜீன்ஸ் டீஷர்ட் அணியும்படியும் நிர்ப்பந்திக்கப்பட்டான். சினிமாவுக்கு வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டான். வீட்டைவிட்டு ஓடிவிடலாம் என்ற தோன்றிய நிலையில் சென்னையில் மேல்ப்படிப்பு என்ற அப்பாவின் முடிவு அவனுக்கு ஆறுதலளித்தது.

நியாயமானதும், நிலையானதுமான ஒன்றைத் தேடும் தன்னை ஏன் இந்த உலகம் புறக்கணிக்கிறது என்று அவனுக்குப் புரியவில்லை. தன்னிடம்தான் ஏதேனும் உளவியல் பிரச்சனை இருக்கிறதோ என்ற சந்தேகங்கூட அடிக்கடி எட்டிப்பார்த்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் வீட்டுக்கு வந்த அம்மாவழிப் பாட்டி “பல லட்சம் மனிதர்களுக்கு ஒருவன்தான் உன்னைப்போல அதிசயப்பிறவியாய் பிறப்பான்“ என்று சொன்னதைக் கேட்டு “இறைவன் இந்த பூமிக்கு அனுப்பிய யுகப் புருஷருள் தானும் ஒருவனாக இருக்கக்கூடும்” என்ற எண்ணம் அவன் மனதில் பச் சென்று ஒட்டிக்கொண்டது. நாளடைவில் அவன் தன்னைத்தான் ஒரு யுகப்புருஷனாகவே கற்பனை செய்துகொள்ள ஆரம்பித்துவிட்டான். அவன் மனதளவில் காயப்படும்போதெல்லாம் அந்த எண்ணமே மருந்தாக மாறி மனதுக்கு இதமளித்தது. ஆனால் அவன் அடிக்கடி கொடுமையாய்க் காயப்படுவதற்கும் அந்த எண்ணமே காரணமாய் இருந்தது.

இப்போது சரியாக இருபது நிமிடங்கள் கடந்துவிட்டிருந்தது….

பேருந்தின் கீழிருந்து அப்பா செய்துகொண்டிருந்த உபதேசம் இன்னும் நின்றபாடில்லை. சட்டென நினைவுக்குத் திரும்பியவனாய், தன்னைத்தவிர தனது முன்னால் பின்னால் சீட்டிலிருந்த அனைவரும் அப்பாவின் உபதேசத்தைக் கேட்டபடி தன்னையும் பரிதாபமாகப் பார்ப்பதை ரத்தன் அப்போதுதான் கவனித்தான். அதிலும் முன்சீட்டுக்காரன் அடிக்கடி இவனைத் திரும்பிப்பார்த்து ஒரு நமட்டுச் சிரிப்பு சிரித்தான். ரத்தனுக்கு அப்போதே செத்துவிட வேண்டும்போல் இருந்தது. அவன் மனம் முழுவதும் டிரைவரின் வருகைக்காக ஏங்கிக்கொண்டிருந்தது. “ச்சே..இந்த வண்டி கிளம்பினால்தான் அந்த வண்டி நிற்கும்”.

ஒருவழியாக டிரைவர் பேருந்தில் ஏறி இருக்கையில் உட்காந்து வெளியில் இறங்கி நிற்பவர்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக ஒரு ஹாரன் அடித்ததும். அப்பாவின் உபதேச தொனி சட்டெனெ கீழிறங்கி கெஞ்சலாக மாறியது.

சரிய்யா, வண்டி கிளம்பப்போவுது… அப்பா திட்றனேன்னு கவலப்படாத… அங்க போயி நல்லா சாப்பிடு, ஒடம்பப் பாத்துக்கோ, எப்ப பணம் தேவையினாலும் எவ்வளவு தேவையினாலும் ஒடனே ஒரு போன் பண்ணு, காச பேங்கில போட்டுவிட்டுடிறேன். நான் ஒழைச்சு ஓடாப்போனதே உங்க மூணுபேருக்காகத்தானடா… அதுவரை தன்னைப் பரிதாபமாகவும், கிண்டலாகவும் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்த முன்சீட்டுக்காரன் இன்னொருமுறை ரத்தனைத் திரும்பிப் பார்த்தான் இந்த முறை அவன் பார்வையில் பொறாமை இருந்தது.

பஸ் பிளாட்பாரத்தின் அணைப்பிலிருந்து பின்னோக்கி நகர ஆரம்பித்தது, பிளாட்பாரத்தில் நின்றுகொண்டிருந்த அப்பா டாட்டா காட்டும் விதமாக கையை மேலுயர்த்தி மடக்கினார் ஆனால் உயர்த்திய கையை அசைக்க மறந்துபோனார். அவர் கண்களிலிருந்து கண்ணீர் தாரைதாரையாக வழியத்துவங்கியது. ஒரு கடினமான மனிதராக அதற்குமேலும் அவரால் நடிக்க முடியவில்லை. தோளிலிருந்த துண்டை எடுத்து வாயைப் பொத்திக்கொண்டு குலுங்கி அழ ஆரம்பித்தார். அவர் குலுங்கியதைப் பார்த்து ரத்தன் நொறுங்கிப்போனான்.

தனது இருபது ஆண்டுகளில் அப்பா எனும் இரும்பு மனிதர் சிறுபிள்ளைபோல அழுததைப் பார்த்தது இதுதான் முதல்தடவை. பேருந்து பிளாட்பாரத்தை விட்டு முற்றிலும் விடுபட்டிருந்தது. ரத்தனுக்கு பேருந்திலிருந்து இறங்கி ஓடிப்போய் அப்பாவைக் கட்டிப்பிடித்து அழவேண்டும்போலிருந்தது. வீட்டிலிருந்து கிளம்பும்போது அம்மாவும் அக்காவும் அழுததுகூட அவனை இந்த அளவு உலுக்கவில்லை. பஸ் நகர நகர அழுதுகொண்டிருந்த அப்பா ரத்தனின் பார்வையிலிருந்து முற்றிலும் மறைந்து போனார். ஆனால் மனதிலிருந்து அந்தக் காட்சி இன்னும் விலகவில்லை. ரத்தன் அதைக் கலைக்க விரும்பாமல் வெகுதூரம்வரை சுமந்துகொண்டு போனான்.

காணாத பரம்பொருளை உயிர்நோகுமளவு தேடிய பயணத்தில் தனது கண்கண்ட, தன்னுடன் வாழ்ந்து கொண்டிருந்த மனிதர்களிடம் அந்தப் பரம்பொருளின் சாயல் ஒளிந்திருப்பதைக் கண்டுகொள்ளத் தவறிவிட்டோமே என்ற எண்ணம் அவனுக்குள் சுருக்கென்று குத்தியது.

ரத்தன் தான் நினைத்துக் கொண்டிருப்பதுபோல அவன் உண்மையிலேயே ஒரு யுகப்புருஷனாகக் கூட இருக்கலாம். இவர்கள் பெருவிரலைப் போன்றவர்கள் அது மற்றவிரல்களுடன் சேர்ந்து நிற்காது ஆனால் அந்தப் பெருவிரலின்றி கையின் இயக்கம் முழுமையடையாது. உலகத்தின் போக்குக்கு எதிர்திசையில் சிந்திப்பதுதான் இவர்கள் பலமும் பலவீனமும். தறிகெட்டு ஓடும் உலகத்தை அவ்வப்போது தத்துவகயிறுகளால் கட்டி இழுத்து நிறுத்துபவர்கள் இந்தப் பெருவிரல்கள்தான். இவர்கள் சிறுவயதில் தனித்தேதான் இருந்திருக்கிறார்கள். அந்தத் தனிமைதான் இவர்களை செதுக்கியிருக்கிறது. மனுக்குலத்தின் ஆயிரமாயிரமாண்டுகாலப் பயணத்தில் இந்தப் பெருவிரல்களின் பங்களிப்பை யாராலும் மறுக்கமுடியாது.

கடவுள் இயற்கையில் ஒரு சூழ்நிலைச் சமநிலையை (Ecological balance) ஏற்படுத்தியதுபோல மனிதர்களிலும் வெவ்வேறு வகையானவர்களை ஏற்படுத்தியிருக்கிறார். மனிதம் ஒருபக்கம் சாயும்போது அதைச் சமன்படுத்த எதிர்ப்பக்கத்திலும் ஆட்கள் தேவை. ரத்தன் போன்றவர்கள் அநாவசியமானவர்களல்ல, அவசியமானவர்கள்! ஆனால் சராசரியான எதிர்பார்ப்புகளைக் கொண்ட ரத்தனின் அப்பா போன்ற மனிதர்களால் இந்த உண்மையை புரிந்து கொள்ள முடியாது. இப்படி இயல்பால் வேறுபட்ட நல்ல பறவைகள் ஒரே கூட்டில் வசிக்கும்போது உறவுப்போராட்டங்கள் வெடிப்பதும் தவிர்க்கமுடியாதது. ஆனால் அதில்தான் வாழ்வாங்கு வாழ்ந்து முடித்த ஒரு சுகமும் இருக்கிறது.

– விஜய், ஊடகம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *