பெரிய இடத்து உத்தரவு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 9,425 
 
 

‘‘என்னங்க… இப்படிஇடிஞ்சு போய், பித்துப் பிடிச்ச மாதிரி உக்காந்துட்டு இருந்தா எப்படி? உங்க ஆபீஸ் பிரச்னை எப்பத்தான் தீரும், சொல்லுங்க? எப்போ என்கொயரி முடியுமாம்? இன்னும் எவ்வளவு நாளைக்குதான் சஸ்பெண்ட் பண்ணி வெச்சிருப்பாங்-களாம்?’’

மாலதிக்கு என்ன பதில் சொல்-வது என்று தெரிய-வில்லை. மொத்தத்தில் என் நேரம் சரி-யில்லை; அவ்வளவுதான்!

எங்கள் கம்பெனி சரக்கை தினமும் வேனில் எடுத்துச் சென்று விற்று வரும் சேல்ஸ் மேன் ராமு, கலெக்ஷனில் கை வைத்து-விட்டான். அதை ஆடிட்டில் கண்டு-பிடித்துவிட்டார்கள். நான்தான் தினமும் ராமுவிடம் பணத்தைச் சரி-பார்த்து வாங்குவது வழக்கம். அதனால், என்னை முக்கிய சாட்சி-யாகப் போட்டு, என்கொயரி வைத்-தார்கள். ராமு, தடாலடியாகப் பழியை என் மேல் தூக்கிப் போட்டு விட்டான். தான் கலெக்ஷனிலிருந்து எடுத்த பணத்தை மொத்தமாக என்னிடம் கொடுத்ததாக, ஒரே-யடியாகப் புளுகினான். இப்படி இரண்டு பேர் சம்பந்தப்பட்டிருக்கும் திருட்டில் தன்னை மட்டும் விசாரிப்பது சரியல்ல என்று வாதிட்டு, என்னையும் சஸ்பெண்ட் செய்ய வைத்துவிட்டான். அதன் காரணமாக, என் மேலதிகாரிகள் என் மீது வைத்திருந்த நம்பிக்கை சிறிது ஆட்டம் காணத் தொடங்கி-யிருந்தது.

இப்போதைய தலை-வலி, ராமு ஒரு தடாலடி வக்கீலை தனக்காக வாதிட அமர்த்தி-யிருப்பது. பொதுவாக, கம்பெ னிக்குள் நடக்கும் விசாரணையின்போது வக்கீல் அமர்த்திக்கொள்ளக் கூடாது என்ற நியதி இருக் கிறது. ஆனால் ராமு, தன் யூனியன் செல்வாக்-கைப் பிரயோகித்து, வக்கீல் அமர்த்-திக்கொள்ள விசேஷ அனுமதி வாங்கி-விட்டான்.

தினமும் நடக்கும் விசாரணை–யில், அந்த வக்கீல் என்னைக் கேள்வி-களால் சித்ரவதை செய்து-கொண்டு இருக்கிறார். என்னால் இந்தக் கொடுமை-யைத் தாங்கிக்கொள்ள முடிய-வில்லை.

‘‘என்னங்க, நேத்திக்கு தான் உங்க பிரச்னையை எங்கப்பாகிட்ட போன்ல சொல்லி அழுதேன். உடனே கிளம்பி வரேன்னிருக்காரு. நைட்டுக்-குள்ள வந்துருவாரு. நீங்க இப்ப மனசைப் போட்டு உழப்பிக்காம படுத்துத் தூங்குங்க. காலைல அவர் கிட்ட பேசினா, எல்லாம் சரியாயிரும்!’’

ஆபீஸ் அவமானத்தை என் மாமனார் கேட்க நேர்ந்துவிட்டதே என்று ஒரு பக்கம் வருத்தம் இருந்தாலும், அவர் மாதிரி ஒரு கலகலப்பான ஆள் பக்கத்தில் இருப்பது யானைபலம் என்ற ஆறுதலும் தோன்றியது.

மறுநாள் காலையில் காபி குடிக்கும்போதே, பேச்சுவார்த்தை ஆரம்பித்துவிட்டது.

‘‘மாப்பிள்ளை, மாலதி எல்லா விஷயமும் சொன்னா. வக்கீல் வெச்சு கேஸ் நடத்தறது, என்கொயரில வாதாடறது எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். முதல்ல இப்படி ஒரு சிக்கலான பிரச்னை வந்தா, யாராவது ஒரு பெரிய மகான்கிட்ட போய்க் கேக்கணும். அவங்களோட அருளாசிதான் முதல்ல நமக்குத் தேவை. ‘ஒண்ணும் கவலைப்படாதே! எல்லாம் நல்ல-படியா முடியும்’னு அவங்க ஆறுதல் சொன்னாங்-கன்னா, கூடுதல் தெம்போட நாம வேலை பார்க்க முடியும். என்ன சொல்றீங்க?’’

இந்த யோசனை எனக்கும் சரியாகத்தான் பட்டது. ‘‘நல்ல ஐடியா! எங்க குடும்பத்துக்கு வேண்டிய ஒரு முஸ்லிம் பெரியவர் இருக்கார். பெரிய மகான். ரொம்ப நல்லவர். என்கிட்ட அவருக்கு ரொம்ப அன்பு உண்டு. நாளைக்கே நான் அவரைப் போய்ப் பார்த்துப் பேசிடறேன்’’ என்றேன்.

ஆனால், மாமாவின் முகத்தில் சந்தோஷமோ, திருப்தியோ இல்லை.

‘‘இல்ல மாப்பிள்ளை… நான் சொல்றனேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. என்னதான் இருந் தாலும், அவர் வேற மதமாச்சே… அவர் எப்படி நம்ம…’’

‘‘இல்ல மாமா, அப்படி நினைக்காதீங்க! அவர் மாதிரியான மகான்களை சாதி, மதம்கற வரையறைக்குள்ள அடக்க நினைக்கிறது தப்பு! இப்ப, ஷீர்டி பாபாவை எப்படிப் பார்ப்பீங்க… இந்துன்னா? முஸ்லிம்னா? இல்லியே! அதுக்-கெல்லாம் அப்பாற்பட்டவர் அவர். அது மாதிரிதான் இவரும்!’’

‘‘மாப்பிள்ளை, நான் உங்க முஸ்லிம் பெரியவரை எந்த விதத்துலயும் குறை சொல்லலை. அவர் சக்தியானவர்தான். ஆனா, நாம எதுக்கு அவர்கிட்டப் போகணும்-கிறேன்? நமக்குதான் நம்ம மதத்தைச் சேர்ந்த மகான் களே நிறையப் பேர் இருக்காங் களே? பேசாம நான் சொல்றதைக் கேளுங்க, கும்பகோணத்துல ஒரு கணபதி உபாசகர் இருக்காரு. அவர்கிட்ட போவோம். அவர் சரியான பரிகாரம் சொல்லி, உங்க பிரச்னையைத் தீர்த்து வெச்சிடுவாரு!’’

‘‘இல்ல மாமா, எத்தனை தெய்வங்கள் இருந்தாலும், நம்ம மனசுக்கு எது இணக்கமா இருக்கோ, அதைத்தானே நாம கும்புடறோம்? தெய்வம் ஒண்ணுதான்னாலும், இந்து மதத்துல அதுக்கு ஆயிரம் உருவங்கள் கொடுத்திருக்-கிறதே நம்ம சௌகரியத்-துக்காகத்தானே? எனக்-கென்னவோ, அந்தப் பெரிய-வரை ஒரு தடவை பார்த்துட்டு வந்தாலே, பாதி பிரச்னை தீர்ந்துடும்னு ஒரு நம்பிக்கை இருக்கு. வேணும்னா, உங்க திருப் திக்கு அந்தக் கணபதி உபா சகரையும் அடுத்ததா ஒரு நடை போய்ப் பார்த்துட்டு வந்துடுவோம்!’’

‘‘இல்ல மாப்பிள்ளை, நான் சொல்றதைக் கேளுங்க. முதல்ல உபாசகர்; அப்புறம் முஸ்லிம் பெரியவர்!’’

இப்படியே வாக்குவாதம் தொடர்ந்தது. ‘‘சரி, உங்களுக்கும் வேணாம், எனக்கும் வேணாம்… முதல்ல யார்கிட்ட போகலாம்னு சீட்டுப் போட்டுப் பார்த்துடுவோம். அதுல எப்படி வருதோ, அதன்படி செய்வோம். சம்மதமா?’’ என்றேன்.

‘‘டபுள் ஓ.கே! ஒரு சின்ன சந்தேகம்… அந்த சீட்டுப் போடறதையாவது நம்ம சுவாமி முன்னாடி போட்டுப் பார்க்கலாமில்லே?’’ என்றார் மாமா.

‘‘சரி, மாமா! அப்படியே செய்வோம்’’ என்று சிரித்தேன்.

அதன்படி, ‘முஸ்லிம் பெரியவர்’, ‘கணபதி உபாசகர்’ என இரண்டு சீட்டுக்களில் எழுதி, எங்கள் பூஜை அறையில் கம்பீரமாக வீற்றிருந்த விநாயகரின் திருவடிகளில் போட்டு, பால்மணம் மாறாத என் நான்கு வயது மகனை விட்டு எடுக்கச் சொன்னோம். ‘முஸ்லிம் பெரியவர்’ என்கிற சீட்டே வந்தது. ஆச்சர்யம் கலந்த கோபத் துடன் விநாயகரை முறைத்தார் மாமா.

வெள்ளிக்கிழமை மாலை ஏழு மணியளவில், அந்த முஸ்லிம் பெரியவர் முன் உட்கார்ந்திருந்தோம். கோயில் கர்ப்பக்கிரகத்துக்குள் நிற்கிறபோது உள்ளூர ஒரு தெய்விக சிலிர்ப்பு ஓடுமே, அப்படி ஒரு சிலிர்ப்பு இவர் அருகில் இருக்கும்போதும் எனக்கு ஏற்பட்டது. பெரியவர் யாரிடமும் காசு வாங்குவது கிடையாது. அவர்களாகப் பார்த்து அன்புடன் ஏதாவது கொடுத்தால், மறுக்காமல் வாங்கிக்கொள்வார். நான் அவருக்குப் பிடித்த நயம் பேரீச்சம் பழங்களை வாங்கிக்கொண்டு வந்திருந்தேன்.

‘‘சேதுத் தம்பி, நல்லாருக்கியாப்பா? உங்கப்பா தவறிட்டதுக்கப்புறம், நீ இந்தக் கிழவனைப் பார்க்கவே வரலியே? மறந்துட்டியா?’’ என்று என் தலையை ஆதுரத்துடன் தடவி, கண்களை இடுக்கிச் சிரித்தார்.

‘‘அதெல்லாம் இல்லை ஐயா! ஏதோ அங்க இங்க அலைஞ்சிட்டு இருந்ததுல, வர முடியாமப் போயிருச்சி. இவ என்-னோட சம்சாரம். இவர் என் மாமா. உங்ககிட்ட ஒரு முக்கியமான பிரச்னைக்-காக வந்திருக்கோம்.’’

‘‘இன்ஷா அல்லாஹ் உங்க பிரச்னை நல்லபடியா முடியட்டும்’’ என்று சொல்லிக் கண்களை மூடி, தியானத்தில் ஆழ்ந்தார் பெரியவர்.

மூன்று நிமிடங்களுக்குப் பின் கண்களைத் திறந்தார். ‘‘தம்பி, எதுக்குக் கவலைப்படறே? அநியாயத்துக்குதான் ஆயிரம் வக்கீல் தேவை. ஆனா, நியாயத்துக்கு அல்லாஹ்வோட கருணை மட்டும் போதும். அதுக்கு முன்னால யாரு, என்ன செய்துட முடியும்?’’ என்றார்.

குபுக் என்று என் உடம்பு பூராவும் ஒரு பரவச ரேகை ஓடியது. நானாக எதுவும் சொல்லாமலே, எப்படி எல்லாம் அறிந்தவர் போல அருள்வாக்கு உதிர்க்கிறார்! என் கண்கள் குளமாகின.

‘‘ஆனா தம்பி, இது நீ கஷ்டப்பட வேண்டிய நேரம். ரெண்டே வாரத்துல எல்லாம் முடிஞ்சிரும். இன்னும் உயர்ந்த பதவி கிடைக்கும். தைரியமா இரு!’’

பெரியவரைப் பார்த்துக் கைகளைக் கூப்பியபடி, கண்களில் நீர் வழிய அவர் சொல்வதை மௌனமாகக் கேட்டுக்கொண்டு இருந்தேன்.

‘‘தம்பி, நீ ஒரு காரியம் செய்யணுமே! உன் வீட்டுக்குப் பக்கத்துல என்ன கோயில் இருக்கு?’’

‘‘ஒரு சின்ன பிள்ளையார் கோயில் இருக்-குங்க!’’

‘‘நல்லது. அந்தக் கோயிலுக்குத் தினமும் போ! தொடர்ந்து பதினஞ்சு நாளாவது போ! மனசார வேண்டிக்க. உன் மனச் சங்கட-மெல்லாம் விலகும்.பிரச்னை-யைக் கண்டு பயப் படமாட்டே. அதுக்கப்புறம் பாரு, நீதான் ராஜா!’’

பெரியவரை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி ஆசி பெற்று, வெளியில் வந்தோம்.

‘‘பார்த்தீங்களா மாமா வேடிக்-கையை? ‘முஸ்லிம் பெரிய வர்கிட்ட போ’ன்னு பிள்ளையார் உத்தரவு கொடுக்கறாரு. ‘பிள்ளை யாரைக் கும்புடு’ன்னு இந்தப் பெரியவர் உத்தரவு போடறாரு. பேதம் பெரிய இடத்துல இல்லை, மாமா… சின்ன இடத்துலதான் இருக்கு. சரி, கும்பகோணம் போய் எப்போ உங்க கணபதி உபாச-கரைப் பார்க்கலாம்னு சொல்லுங்க, கிளம்பலாம்!’’

மாமா ‘‘வேண்டாம்’’ என்றார். உணர்ச்சிப்பெருக்கில் அவர் குரல் கரகரத்தது.

வெளியான தேதி: 16 ஜூலை 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *