சென்ற ஞாயிறன்று என்னைப் பிறந்த வீட்டிற்கு அழைத்துப் போய் பிரசவம் பார்க்க நாள் குறிப்பதற்காக என் பெற்றோர் வந்திருந்தனர். இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கின்றன, டெலிவரிக்கு. அதற்குள் வீட்டில் ஆளாளுக்கு குழந்தைக்குப் பெயர்வைப்பதில் போட்டி. பிறக்கப் போவது பெண்ணா பையனா என்பது தெரியாது. ஸ்கேனின்போது தெரிந்திருக்கும், ஆனால் டாக்டரிடம் கேட்கவும் இல்லை. அவர் சொல்லவும் இல்லை.
எனக்கு ஏற்கனவே 5 வயதில் ஒரு மகன் இருக்கிறான். ராம். கண்ணாடி அணிந்த வாயாடி. அடுத்தது பெண் குழந்தை தான் வேண்டும் என்று ஒட்டுமொத்த குடும்பத்தினரும் காத்திருக்கின்றனர்.
“அதெப்படி மாமி, பெண் குழந்தை தான் பிறக்கும்னு சொல்றீங்க?” என்று என் மாமியாரைக் கேட்டேன். “உனக்கு மேல் வயிறு தள்ளி, அகலமா இருக்கு, மஹா. பையனா இருந்தா, அடி வயிறு தள்ளும். எங்களுக்குத் தெரியாதா, பொறக்கப் போவது வைஷ்ணவி தான்” என்றார்.
“மஹாலட்சுமியின் பொண்ணுக்கு வைஷ்ணவின்னு பேர் வைக்கலாம் தான். ஆனால் பொறக்கப்போற பேத்திக்கு நல்ல தமிழ்ப் பெயரா வைக்கணும். நித்தில வல்லின்னு வைக்கலாமா?” என்றார் தமிழ்ப் பேராசியாரான என் மாமனார். “ஆமா, எல்லாரும் நெத்திலின்னு கூப்பிடுவா, சும்மா இருங்கோ” என்றார் மாமியார்.
இவர்களுடன் சேர்ந்துகொண்டு என்அம்மா அப்பாவும், எனக்குப் பெண் குழந்தை தான் பிறக்கும் என்று பெயர் சூட்டக் குதித்தார்கள். அம்மா சொன்னார் “உனக்கு மசக்கையின் போது, தினமும் காலையில் வாந்தி, மயக்கம் அதிகமா இருந்தது, இனிப்பா முழுங்கினே, அதனால் கண்டிப்பா பெண் குழந்தை தான். என் பாட்டி அம்புஜம்மாள் தான் உன் மடியில் வந்து பிறப்பாள்”. “ஏன், என்அம்மா பெயரை வைக்கக் கூடாதா? நான் என் பேத்தியை கிருஷ்ணவேணின்னு தான் கூப்பிடுவேன்.” என்றார் என் அப்பா.
அவர்கள் கூட வந்திருந்த என் தம்பி “அப்பா, வித்தியாசமான பேரா வைக்கலாம்பா. கரிஷ்மா, கத்ரீனா, ஹன்சிகா அப்படின்னு மாடர்னா வைக்கலாமே” என்றான். “நோ நோ. எல்லாம் வடநாட்டுப் பெயரா இருக்கு. சுத்தமான தமிழ்ப் பெயர்தான் வெக்கணும்” என்றார் என் மாமனார். என் தம்பியிடம் “ஏண்டா, நீயும் பெண் குழந்தை தான்னு டிசைடே பண்ணிட்டியா? என்று கேட்டேன். “மஹா, உன்னை ரெகுலரா செக் பண்ற டாக்டர் சொன்னாரில்லையா, உன் ஹார்ட் பீட் 142 இருக்குன்னு. 140க்கு மேலே இருந்தா பெண் குழந்தை தான் பொறக்கும்னு நெட்லே பார்த்தேன்”. என்றான்.
என் கணவர் முகத்தைப் பார்த்தேன். அவர் எதுவும் பேசாமல் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார். மைத்துனரும் அவருடன் விளையாடிக் கொண்டிருந்த என் மகனும் ஹாலில் வந்து எங்களுடன் உட்கார்ந்தார்கள். ஐஐடியில் படிக்கும் என் மைத்துனரைக் கேட்டேன், “நீங்களும் பெண் குழந்தைதான் பிறக்கும்னு உங்க அண்ணாவிடம் பெட் கட்டி இருக்கிறீர்களாமே, நிஜந்தானா?” “ஆமாம் அண்ணி, உங்களுக்கு பெண் குழந்தை தான் பிறக்கும். உங்களுக்கு வயசு 26. நீங்க கன்சீவ் ஆனது ஜனவரி மாசம் என்று அண்ணா சொன்னார். ஜனவரின்னா ஒன்னாம் மாசம். அப்போ 26 + 1 = 27. ஒற்றைப்படை எண், ஆட் நம்பர் வந்தா பெண் குழந்தை தான். இது சைனிஸ் கணக்கு.” என்றார்.
“நல்ல ஐஐடி, நல்ல சைனிஸ் கணக்கு.” என்ற என் கணவர், என் மகனை அருகில் அழைத்து “ராம், உனக்கு என்ன பாப்பா வேணும்? தம்பி பாப்பாவா, தங்கச்சி பாப்பாவா? என்று கேட்டார். அந்த வாண்டு எழுந்து நின்று, கண்ணாடியை அட்ஜஸ்ட் செய்து போட்டுக் கொண்டு, எல்லோரையும் பார்த்து, “எனக்கு தங்கச்சி பாப்பா தான் வேணும். பாப்பாக்கு பேர் குந்தவை” என்றான். எல்லோரும் கொல்லென்று சிரித்தார்கள். என் தம்பி அவனைத் தன பக்கம் இழுத்து “அது சரி ராம், அந்த பாப்பாவை குந்தவச்சிட்டு என்ன பேர் சொல்லி கூப்பிடுவே?” என்று கிண்டலாகக் கேட்டான். அதற்கு ராம் சொன்னது எங்களை ஆச்சரியப்பட வைத்தது.
“மாமா, குந்தவை என்பது சோழர் கால ராணியோட பெயர். அவங்க நெறைய கோயில்லாம் கட்டி இருக்காங்களாம். எல்லோருக்கும் உதவி பண்ணாங்களாம். அழகா இருப்பாங்களாம். என் கிளாஸ்மேட் பேரு குந்தவை. அவள் என் பெஸ்ட் பிரென்ட். அவ தான் இதெல்லாம் சொன்னா. குந்தவை அழகா சிரிப்பா. என் தங்கச்சி பாப்பாவும் அழகா சிரிப்பா இல்லியா, அதனால பாப்பாவை குந்தவைன்னு தான் கூப்பிடுவேன்.” என்றான்.
“ஆஹா, குந்தவை. அழகான தமிழ்ப் பெயர். வித்தியாசமான பெயரும் கூட. குந்தவை நாச்சியார், ராஜ ராஜ சோழனின் சகோதரி. பிரகதிஸ்வரர் ஆலயம், விஷ்ணு ஆலயம், சமண ஆலயம் எல்லாம் கட்ட உதவிய சமரச சன்மார்க்க வாதி. ஆடல் பாடல் கலைகளில் தேர்ந்தவர். பேத்தியின் பெயர் குந்தவை தான். நோ அப்பீல்”, என்று சொல்லி ராமை வாரி அணைத்துக்கொண்டார் என் மாமனார். எல்லோர் முகத்திலும் சந்தோஷம்.
நல்ல பெயர் வைத்தது மட்டுமின்றி, பெயருக்கான காரணத்தையும் அந்தக் குழந்தைக்கு சொல்லிக்கொடுத்திருந்த குந்தவையின் பெற்றோரை எண்ணி மகிழ்ந்து வாழ்த்தினேன்.
நாங்கள் குந்தவைக்காகக் காத்திருக்கிறோம்.