கதையாசிரியர்:
தின/வார இதழ்: மங்கை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 7, 2024
பார்வையிட்டோர்: 2,111 
 
 

(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கலாசாலையில் என்னுடன் படிக்கும் ஒரு மாணவியின் வீட்டிற்குப் போயிருந்தேன். நாங்கள் ஏதோ சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருக்கும் பொழுது, உள்ளேயிருந்து யாரோ, சுப்பாயி, அடி சுப்பாயி, என்று கூப்பிட்டார்கள். ஆனால் இந்தச் சத்தம் எங்கள் பேச்சைத் தடை செய்யவில்லை. மீண்டும் கூப்பிட் டுக் கொண்டே அக்குரல் நெருங்கியது. வந்தது ஒரு பாட்டி. நாங்கள் இருந்த அறையில் பிரவேசித்து ‘ஏண்டி சுப்பாயி உன்னைத்தானே இத்தனை நாழியா கூப்பிடறேன். பேசாமே உக்காந்திருக்கயே’ என்றாள். என் சிநேகிதியின் முகம் கறுத்து விட்டது. ‘ஸரோ மன்னிச்சுக்கோ இதோ வந்துடறேன்’ என்று சொல்லிவிட்டுப்போனாள். கலாசாலையில் இவள் பெயர் லதாங்கி என்பது; உன் கொடி போன்ற தேகத்திற்கு இசைந்த பெயர் என்று யாராவது சொன்னால், உச்சி குளிர்ந்துவிடும். லதாவுக்கு கர்நாடக நாகரீகம் என்றாலே பிடிக்காது. இப்படிப் பட்டவளை அதுவும் என் எதிரில் ‘சுப்பாயி’ என்று கூப்பிட்டதும் பெருங் கோபம் வந்து விட்டது. அவள் திரும்பி வந்ததும், பாவம் முகம் அசடு வழிந்தது. தலை நிமிர்ந்து என்னைப் பார்க்கவே கூசினாள். அவள் ரகசியம் இனியும் ரகசியமாகவே இராது என்று அஞ்சினாள் போலும்! 

பீ.ஏ.யில் படிக்கும் ஒரு இருபது வயது நாரீமணியை ‘சுப்பாயி’ என்றழைப்பது பொருத்த மில்லாமல் தானே இருக்கிறது. சுமார் 20, வருடங்களுக்கு முன்னர் கூட குழந்தைகளை “சுப்பி’ குப்பி, ‘சேஷி’ என்று பாட்டியிடம் இருக்கும் அன்பிற்காகவோ அல்லது ஊர்ப்பிச்சையாக வளரட்டும் என்பதற்காக பிச்சை, வேம்பு என்றோ பெயரிடுவார்கள். அதே குழந்தைகள் விவரம் அறிந்த யுவர்களாகி நாகரீக ஏணியின் முதல் படியில் கால் வைக்கும் போதே செய்யும் பிரதான காரியம், தங்கள் பெயரை மாற்றிக் கொள்வதே. இதற்காகச் சிலர் சர்க்காருக்கு ஐந்து ரூபாய் அபராதமும் செலுத்தத் தயார். 

பிறந்தவுடனே குழந்தைகளுக்கு ஏன் பெயரிட வேண்டும்? இக் கஷ்டம் ஏற்படுவ தெல்லாம் அதனால் தானே. பெரியவர்களாகி, பிடித்த பெயராக அவர்களாகவே பொறுக்கிக் கொள்ளட்டுமே. இன்று நாம் எந்தப் பெயரை வைத்தாலும், 20 வருடத்திற்கப்பால் அது பழமையாகத்தான் இருக்கும். இப்பொழுது பெற்றோர் ஒரு பெயருக்காக தேடி அலைவதும், கவலைப்படுவதும், விவாதிப்பதும் எல்லாம் பின்னால் கட்டாயம் வியர்த்தமாகிவிடும். மோட்டார் கார்கள் பெயருக்குப் பதிலாக நம்பரை மட்டும் வைத்துக் கொண்டே சமாளித்து விடுகின்றன. கைதிகளும், கான்ஸ்டேபிள்களும் நம்பருடனேயே காலந் தள்ளிவிடுகின்றனர். இதே போல் குழந்தைகளுக்கும் நம்பர் வைத்தா லென்ன?.

ஒருவருடைய பெயரிலிருந்தே அவரைப் பற்றிய அனேக விவரம் அறிய முடியும். அவர் பெயரே, அவர் குடுப்ப அந்தஸ்து, செல்வ நிலை, நாகரீக முன்னேற்றம், வயது, சொந்த ஊர், மதம் இன்னும் எவ்வளவோ சொல்லிவிடும். 

மீனாக்ஷி சுந்தரம் என்ற பெயருடையவ ரானால், சட்டென் மதுரையைச் சேர்ந்தவர் என்று கூறிவிடலாம். பிராமணரா, அப்பிராமணரா என்று சொல்ல முடியா விட்டாலும், சைவ ஜாதி என்று திடமாகச் சொல்லலாம். இப்பெயர் ஆண்பால் பெண்பால் இரண்டுக்கும் பொதுவானது! இதே போல்தான் ராஜகோபாலன் என்றால் மன்னார்குடி ஞாபகம் வருகிறது, ஆனால் இது சைவ, வைஷ்ண கணவர் இருவருமிடையே காணப்படும் பெயர். கற்பகம் மயிலாப்பூர் சைவப் பெண்தான். பார்த்தசாரதி என் பெயரோ திருவல்லிக்கேணியை நினைப் பூட்டுகிறது. சில சைவர்களிடையேயும் இப் பெயர் காணப்படுகிறது. சைவ மதத்தினர் தான், வைஷ்ணவரைவிட பரந்த நோக்க முடையவர்களா? 

‘வெங்கோபராவ், குப்பய்யங்கார், சுப்பய்யர்’ என்ற நாமங்களைக் கேட்ட மாத்திரத்திலே, சரி ஆசாமி 1900 ஆண்டு மோஸ்தர் என்று தோன்றுகிறது. பெயருடன் அய்யர், ராவ் என்ற வாலும் இருப்பதால் வைதீகப் பற்றுகூட உண்டு என்பதில் ஐயமில்லை. குடுமி இருந்தாலும் இருக்கலாம்! ஸ்ரீநிவாஸ், சுந்தர், சங்கர் என்றிருந்தால் 1910-1915 மோஸ்தர் எனலாம் இவர்களுக்கு வயது சுமார் முப்பது அல்லது முப்பத்தைந்து இருக்கும். பெயருடன் வால் இல்லாததால் ஜாதியை நிச்சயமாக குறிப்பிட முடியாது, இருந்தாலும் ஆளைப் பார்த்தால் சொல்லிவிடலாம். இந்த வகுப்பில் பெண்களின் பெயர்களோ ராதா, ஸீதா, கமலா, விமலா என்று ஜோடி, ஜோடியாக இருக்கும். இவர்களில் சகோதரிகள் எவ்வளவு பேர் இருந்தாலும் அவர்கள் பெயரெல்லாம் பிராஸத்துடன் பிரமாதமாகத்தான் இருக்கும்- ஐயா, விஜயா, சுஜயா, ஸ்ரீஜயா என்று இவர்கள் பழைய நாகரீகமுமில்லை, புதிய நாகரீகமுமில்லை என்று இரண்டு கூட்டத்திலும் இருப்பார்கள். 

இன்னும் 10, 15 வருடங் களுக்கு முன்னர் பார்த்தால் சிலருக்கு மேல் நாட்டிடம் இருக்கும் மோகம் அவர்களுடைய பெயரிலேயே விளங்கும். பெற்றோர் வாய் நிறைய அழைக்க வேண்டுமென்று பரமேச்வரன், தனபாலன், வேங்கடாசலபதி என்று பெயரிடுவர். அது கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல், பி. ஈச்வரன், டி. பாலன், வி.சலபதி என்றாகி கடைசியில் பி. வாரன், டி. பால், வி. பதி என்று ஏதோ ஆங்கிலப் பெயர் போல் மாறிவிடும். பெண்களின் பெயரோ ஷீலா, ரீடா, லில்லி என்றுதான் இருக்கும். இவர்களை 1920-30 ஆண்டு மோஸ்தர்களாக வருணிக்கலாம். 

அக் காலம் மாறி தனித் தமிழர்களோ – திராவிடர் என்று மார்தட்டுபவர் – அதீதமாக அந்தக் கோடிக்குப் போய் விடுகிறார்கள், பெயரில்கூட தமிழ் ஒலிக்க வேண்டுமாம். பஞ்ச ரத்னம், ஐந்து கல் என்று மாறினது போல் நாராயண சாஸ்திரி, திருமால் பண்டிதனாக மாறி விடுகிறார். (ஒரு சந்தேகப் பிராணி ‘பண்டிதர் வடமொழி அல்லவோ?’ என்கிறார்.) ஆரிய தெய்வங்களின் பெயரால் ராமன்,  கிருஷ்ணன் என்றழைப்பதை
விட்டு, திராவிட தெய்வங்களின் பெயரால் மாடன், இருளன் என் றழைத்தா லென்ன என்று கூட கேழ்ப்பார்கள். வேறு சில தாய் நாட்டு அன்பர்கள் இருக்கின்றனர். நாட்டி லிருக்கும் நதி, மலைகளின் பெயரால்தான் குழந்தை களை அழைக்க வேண்டுமென்பார்கள். இப்படிப்பட்டவர்கள் சரயு, விந்தியா, ஹிமவான் என்று வைக்கலாம். இன்னும் சிலருக்குத் தேசத் தலைவர்களின் மீது இருக்கும் பாசமோ சொல்லி முடியாது. பத்து வருடம் கழித்து, ஒரு பள்ளிக்கூட ரிஜிஸ்டரில் போய்ப் பார்த்தீர்களானால் பெயர்களெல்லாம் மோஹன், சுபாஷ், ஜவாஹர், கஸ்தூரிபா, அருணா என்றே ஸரோஜினி, இருக்கும். ஏது, ஒரு பள்ளி உபாத்தியாயருக்கு தினம் ஒரு தடவை ‘ரிஜிஸ்டரைப்’ படித்தாலே சஹஸ்ரநாமம் செய்த பலன் கிட்டுவிடும் போலிருக்கிறதே! 

பெயரில் என்ன இருக்கிறது என்கிறார் ஷேக்ஸ்பியர் – அப்படியும் ஓர் பிரகிருதி. ரோஜாவை, ரோஜாவென் றழைக்காவிட்டால் அதன் அதன் குணம், மணம், மாறியாவிடும் என்று கேட்கிறார். கனகாம்பரத்தை அடிக்கடி ரோஜாவென் றழைப்பதால், அதற்கும் நறுமணம் வந்துவிடும் என்கிறார்கள் தற்கால விளம்பர நிபுணர்கள். படித்த அறிவாளிகள் கேவலம் பெயருக்கு இருக்கும் மதிப்பை உணரவில்லை யென்றால், இனி உண்மையாகாது.  இதற்கு ஒரு உதாரணம் தருகிறேன் பாருங்கள்.

பிரசாரம் என்பது பொது உறவு என்ற கௌரவமான பட்டத்தின் கீழ், இப்பொழுது நிபுணர்கள் போதிக்கும் ஓர் அரிய சாஸ்திரமாக துலங்குகிறது. இதன் விசேஷம், பெரிய மேதாவிகள், பாமரர்களின் நன் மதிப்பைப் பெற இவ்வளவு பாடு படுவதுதான். சாதாரண மக்களிடையே எப்படிப் பேசவேண்டும், அவர்கள் சிந்தனை செல்லும் வழியாது, அதை கவருவதெப்படி, அவர்களை எவ்வாறு திருப்தி செய்வது என்றெல்லாம் அறிஞர்கள் நுணுக்கமாக ஆராய்ச்சி செய்யத் தொடங்கிவிடுகிறார்கள். ஒரு சமயம் ‘டோரி’க் கட்சியினர் பொதுத் தேர்தலில் தோல்வி யுற்றனர். உடனே தங்கள் கட்சியின் பொது உறவு இலாகாவிடம் பரிகாரத்திற்கு ஓடினார்கள். அவ் விலாகா நிபுணர்கள், ரகசியம் எல்லாம் பெயரில் தான் இருக்கிறது என்றனர். இக் கட்சிக்கும் ‘டோரி’ என்ற பழைய பெயரே இருந்ததால், ஜனங்கள் இது புதுக் கொள்கைகளுடைய கட்சி என்பதை உணரவில்லை. கட்சிக்கு ஆதரவும் கிடைக்கவில்லை. ஆகவே, ‘கன்ஸர் வேடிவ்’ கட்சியின் அடுத்த கூட்டத்தில், தங்கள் கட்சிக்கு ஒரு புதிய, வசீகரமான பெயர் வேண்டுமென சிலர் பேசினர். இதை யெல்லாம் பார்த்த பிறகும் யாராவது பெயரில் என்ன இருக்கிறது என்று சொல்வார்களா? 

சாக்கு விற்பனை அதிகரிப்பதின் பாதி ரகசியம் அச் சாமானுக்கு ஒரு கவர்ச்சியான பெயரை கண்டுபிடிப்பது அல்ல, கற்பனை செய்வது என்பதே. இதை எந்த விளம்பர அதிகாரியும் அறிவான். பெயர் பிடித்திருந்தால் சாமானும் பிடித்திருக்கும் என்று 10-ல் 9 பங்கு நிச்சயமாகக் கூறலாம். 

எவ்வளவோ நல்ல சாமான்கள் பொருத்தமுள்ள பெயரில்லாததால் கவனிப்பற்றுப் போயிருக்கின்றன. அதே போல் நம்மிடம் பிரபலமா யிருக்கும் அனேக சாமான்களின் தரம்சுமாராகவே இருந்த போதிலும், அவைகளுடைய வசீகரமான பெயரும், அவைகளுடைய விளம்பரத்திற்கான பெரும் செலவும், அச் சாமான்களின் அமோகமான விற்பனைக்கு காரணமாகின்றன. ஷிக்கல்க்ரப்பர் ஐரோப்பாவின் ‘பூச்சாண்டியாவதற்குமுன் தன் பெயரை ஹிட்லர் என்று மாற்றிக் கொள்ள வேண்டியிருந்தது என்கிறார் ஒரு தமாஷ் பேர்வழி ! ஸல்பானமைட் (Sulphanamide) போன்ற அரும் மருந்தின் பெயரைத்தான் எடுத்துக் கொள்ளுங்களேன். அதன் வைத்தியப் பெயரால் அதை யார் அழைக்கிறார்கள். அதை உற்பத்தி செய்யும் மே & பேக்கர் (May and Banker) கம்பெனியின் பெயரே நிலைத்து விட்டது. 

பெண்ணுக்கு வரன் தேடப் போங்கள். பெயர் கீதா, பிரபா என்றில்லாமல் வடுவாம்பாள், வாலாம்பாள் என்றிருக்கட்டும். பையன், பெண்ணின் புகைப்படத்தைக் கூட பார்க்க மறுத்து விடுவான், அதுவே தப்பி ஒரு கலியாணம் நிச்சயமானாலும், பெண்ணிற்குப் புதிய நாமகரணம் ஏற்படாமலிருக்காது. சாஸ்திரத்தில் கூட பெண்களுக்கு விவாகத்தின் போது தானே நாமகரணம், ஜாதகரணம் செய்ய வேண்டுமென்று சொல்லியிருக்கிறது. அதனால்தானோ என்னமோ சில திருமணப் பத்திரிகைகளில் வேம்பு அலயஸ் வஸூமதி என்றிருக்கும்! 

பெயரிடுதல், சினிமா முதலாளிகளுக்கும், புத்தகவெளியீட்டாளருக்குமே சிக்கலான பிரச்னையாக இருந்தால், பெற்றோருக்கு தங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற கவர்ச்சியுள்ள, மங்களமான பெயரைப் பொறுக்குவது எவ்வளவு கடினமாக இருக்கும். அதுவும் இரட்டைகளாகப் பிறந்துவிட்டால் அவர்கள் மூளைக்குச் சரியான பரீட்சை தான். நுட்ப புத்தியும், கற்பனையும் உடையவரானால், ராதா. அனுராதா, ரங்கன், சாரங்கன், தீபா, பிரதிபா என்றெல்லாம் பெயரிடுவார்கள். ஆனால் சாதாரணமானவர்கள் இத் தருணத்தில் திணறித்தான் போவார்கள், இவர்களுடைய உதவிக்காக நம் அறிஞர்கள் ஹிந்துப் பெயர்களின் ஒரு அகராதியை தயாரித்தல் அவசியம். 

கூடியமட்டில் பெயர் பொருத்தமானதாகவும் அமைய வேண்டும். கவி தாகூரின் ஓர் கதையில் சுபாஷினி என்று அருமையாக பெயரிடப்பட்ட குழந்தை ஊமையாக நேரிட்ட சோகக் கதை போல் ஆகாம்லிருக்க வேண்டாமா? தீனதயாளுவிடம் பிச்சைக்குப் போனவன் வெறுங்கையாக திரும்பவும், ஆசையோடு மீனாக்ஷி என்று பெண் 15 வயதுக்குள் ‘ஸோடா பாட்டில்’ கண்ணாடி போல், கண்ணுக்கு அணிகலம் போட்டுக்கொள்ள நேரிட்டால் என்ன செய்வது? 

நம் பெரியோர் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதில் மூடநம் பிக்கை உள்ளவர்களாக இருந்தனர் என்று சொல்வது பெருந் தவறாகும். உண்மையில் நாம்தான் இக் குற்றத்திற்கு ஆளாகிறோம். பண்டைய காலத்தவர் அதிர்ஷ்டமுள்ள பெயர்களையோ நல்ல பெயர்களையோ கடமைக்காகவே தேர்ந்தெடுத்தனர் என்று குற்றஞ் சாட்டப்பட்டாலும், இன்றைய யுவ யுவதிகள் பெயருக்காகத் தேடி அலைவதைப் பார்க்கும்பொழுது, ஏது இவர்கள் தாங்களிடும் பெயர்களையே பெரும் பரிசாக மதிக்கிறார்கள் போலும் என்று தோன்றுகிறது. சம்பிரதாயப்படி பாட்டி, தாத்தாவுக்காகவோ அல்லது ஊர்த் தெய்வத்துக்காகவோ பெயரிடுவது நம் முன்னோரின் தன்னடக்கத்தையே காட்டுகிறது. மற்றக் காரணங்களைவிட வழக்கப்படி செய்வது, பெயரிடுதலை சுலபமான, எளிதான காரியமாக்கியது என்ற ஒரு காரணமே போதுமே. நாமோ பெயர்களிலேயே வீண் கர்வம் அடைகிறோம். 

எவ்வளவு அபூர்வமாகவும் நவீனமாகவும் இருக்கிறதோ அவ்வளவு திருப்தி அடைகிறோம். இப்படிப்பெயருக்காக வேட்டையாடுவதும், லதாங்கி ‘சுப்பாயி’யைக் கண்டு நடுங்குவதும் மாத்திரம் மூடநம்பிக்கை இல்லையோ? 

– மங்கை, ஜூலை 1947

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *