கதையாசிரியர்:
தின/வார இதழ்: ஈழகேசரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 11, 2021
பார்வையிட்டோர்: 3,686 
 
 

(1952ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆநந்தனுக்கும் திலகத்துக்கும் கல்யாணமாகி இரண்டு மாதங்கள் கூட ஆகியிருக்காது. ஆதர்ச தம்பதிகள் என்று சொல்வார்களே அந்தச் சொற்றொடருக்குப் பொருளாகவும் விளக்கம்போலவும் அவர்கள் வாழ்த்தார்கள். ‘கல்யாணமானதும் காதல் கருகிவிடுகிறது’ என்று குறும்புத்தனமாகவோ அல்லது அர்த்தத்தோடோ எழுதும் இந்த இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் சிலர் வெட்கப்படும்படியாக அவர்கள் வாழ்க்கை அமைந்திருந்தது. அக்கம் பக்கத்துப் பெண்கள் அவள் என்ன சொக்குப் பொடி போட்டாளோ?’ என்றுகூடக் குசுகுசுத்தனர். இதனை அவர்கள் அறிந்தார்களோ என்னவோ அவர்கள் இன்பமாக வாழ்ந்தார்கள்.

அன்று……. மத்தியானச் சாப்பாடாகிட்டது.

உண்ட மயக்கத்தில் ஆநத்தன் தன் கட்டிலிலிருந்த தலையணையில் முதுகைச் சாய்த்துக் கொண்டு கிடக்கிறான். கையிலே நித்திரையை வருவிப்பதற்காகவோ அல்லது தடுப்பதற்காகவோ ஒரு புத்தகம்.

திலகம் சமையலறை ஒழுங்குகளைச் செய்து விட்டு வருகிறாள். அறைக்குள்ளே கிடந்த அடுத்த கட்டிலில் அவளும் படுத்திருக்கலாம். ஆனால் அவள் அதை விரும்பவில்லை .

அவன் நித்திரையாய் விடுவான் என்ற பயமோ என்னவோ அவள் கதிரையை எடுத்துப் போட்டுக்கொண்டு அவன் முன்னால் உட்காருகிறாள். ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக அவள் கையில் ஒரு புடவைத்துண்டும் ஊசியும் நூலும். அவள் கண்களிலே அவனை வெற்றிக்கொண்ட ஒரு பெருமிதம் வெறியாட்டம் போட்டுக்கொண்டிருக்கிறது. அவள் தைத்துக்கொண்டிருக்கிறாள். இடையிடையே என்னென்னவோ கேட்டு அவன் வாசிப்பைத் தடுத்து, நித்திரையைக் கலைத்து…

நித்திரை மயக்கில் அவன் பேச்சுக் கொடுக்கத் தவறும் போது அப்பாடா அவள் படும்பாடு! காலம் ஊர்ந்து கொண்டேயிருக்கிறது. திலகம் தைத்துக்கொண்டிருக்கிறாள். ஆநந்தன் படித்துக்கொண்டிருக்கிறான்.

அப்போதுதான் கனகம் அறைக்குள்ளே வருகிறாள். அன்றைக்குத்தான் அவள் பட்டினத்திலிருந்து வந்திருக்கிறாள்.

கனகம், ஆநந்தனுக்கு மாமி மகள். ஒருகாலத்தில் அவள் தனக்கு மனைவியாகலாம் என்று ஆனந்தன் எண்ணியதுண்டு. கனகமும் எதிர்பார்த்ததுண்டு. ஆனால் இப்போது ஏதோ காரணத்தினால் கனகம் பிறந்த கிராமத்தையேவிட்டுப்போய்ப் பட்டினத்திற் படிக்கலானாள் ‘நாணம், மடம், அச்சம் நாய்கட்கு வேண்டும்’ என்று பாரதியாரின் கனவுப் பெண் சொன்னாளல்லவா? அந்தப் புதுமைப் பெண்ணின் பிரத்தியட்ச ரூபமாய் இருப்பாள் கனகம். தனக்கு ஆங்கிலம் தெரியும் என்பதைக் காட்டிக்கொள்வதற்காக வாயையும் உதடுகளையும் சதவக்கிரமமாக்கிக் கொண்டு அத்தான்’ என்றழைக்கும்போது ஆந் ந்தனுக்கு அவள் தன்னை இன்னோர் முறை அப்படிக் கூப் பிடமாட்டாளா என்றிருக்கும். கனகத்துக்கும் ஆநந்தன் மேல் ஒரு பாசம்! கனகம் அறைக்குள்ளே வருகிறாள். ஒரு க்கணித்துச் சாத்தப்பட்டிருந்த கதவால் நுழையும்போது எதிரேயிருந்த திலகந்தான் அவள் கண்களிற் படக்கூடிய தாயிருக்கிறது.

அத்தான் வீடு என்ற உரிமையோடு தடபுடலாக நுழைந்த கனகம் கட்டில் விளிம்பில் இருந்து கொண்டு திலகத்துடன் பேச்சுக் கொடுக்கிறாள். ஆநந்தன் படுத்திருப்பது அவளுக்குத் தெரியாது. சத்தங்கேட்ட ஆநந்தன் கையிற் பிடித்திருந்த புத்தகத்தை மார்பிற் கவிழ்த்து வைத்துவிட்டுத் திரும்பிப்பார்க்கிறான்.

ஒழுங்காக வாரிவிடப்பட்டுத் தலையில் ஒட்டி நெளி ந்தோடும் கேசமும், பின்னல் முடிந்தவிடத்தில் வண்ணாத்திப் பூச்சியைப்போலத் தொத்திக்கொண்டிருந்த நீலநிற ‘றிபனும்’ அதற்குக்கீழ் விரிந்து பறந்து கொண்டிருந்த நீண்ட கூந்தலும், பேச்சுக்குரலும், அவள் கனகந்தான் என்பதை அவனுக்கு அறிவுறுத்துகின்றன.

ஒருகாலத்தில் அவளோடு பண்ணிய குறும்புத்தனத்தின் மெல்லிய நினைவுகள், அவள் படபடத்த வாயைக் கிளப்பி வேடிக்கை பார்க்கவேண்டுமென்ற ஆசையை அவன் மனதில் மூட்டுகின்றன. அவள் கூந்தலைக் கிள்ளிப்பிடித்து வெடுக்கென்று இழுக்கிறான் ஆநந்தன்.

கனகம் தடாரென்று திரும்பிப் பார்க்கிறாள். ஆநந்தனும் பார்த்துச் சிரிக்கிறான். கனகமும் ஒருகணம் முறைத்துப் பார்த்துவிட்டுச் சிரிக்கிறாள். இருவருக்கு பிடையில் குறும்புத்தனமான சம்வாதம் நீண்டுகொண்டே போகின்றது. சிரிப்பும் கும்மாளமும் அறைச் சுவர்களில் மோதி எதிரொலிக்கின்றன.

எதிரே கதிரையிலிருந்து திலகம் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருக்கிறாள். இத்தனை நேரமாக அவன் தன் மீது கொண்டிருந்த அலட்சியம், அதனால் ஏற்பட்ட நிராசை, தன் முன்னிலையிலேயே அவன் கனகத்தோடு கொஞ்சுந்தாராளம், அதனால் ஏற்பட்ட பொறாமை எல்லாம் அவள் இதயத்தை முறுக்கிப் பிழிகின்றன: அவனை வெற்றிகொண்ட வெறி ஓடியிருந்த அவள் கண்களில் ஏமாற்றத்தின் அவநம்பிக்கையும், தோல்வியின் நமைச்சலும் கண்ணீரைப் பொழியவைக்கின்றன.

திலகம் எழுந்து வெளியே நடக்கிறாள். அறைக்குள்ளே சிரிப்பினொலி கேட்டுக்கொண்டேயிருக்கின்றது!

நிமிஷங்கள் கரைகின்றன. எதையோ உணர்ந்து கொண்டவன் போல ஆநந்தனும் எழுந்து வெளியே போகின்றான்.

வீட்டுத் தாழ்வாரத்திற் திலகம் சேலைத் தலைப்பை முறுக்கிக்கொண்டு நிற்கிறாள். அவள் கன்னத்தில் கண்ணாடியில் விழுந்த மழைத்தாரையைப் போலக் கண்ணீர் கோடிழுத்துக்கொண்டு ஓடுகிறது.

ஆநந்தன் அவளை நெருங்குகிறான். “ஏன் அழுகிறாய்?”

“…….”

ஆநந்தன் விஷயத்தை விளங்கிக்கொண்டுயம், “இதற்காகவா அழுகிறாய்?” என்கிறான்.

திலகம் பேசவேயில்லை. அவள் மௌனம் மன இரைச்சலுக்குப் பகைப்புலமாக நிற்கிறது.

ஆநந்தன் பெருமூச்சுவிட்டுக் கொண்டே மறுபடி அறைக்குள் போவதற்காகத் திரும்புகிறான். திலகம் தடாரென்று பாய்ந்து அவன் மார்பில் முகத்தைப் புதைத்துக்கொண்டு விம்மிப் பொருமி அழுகிறாள்.

ஆம், பரத்தை வீட்டுக்குப் போகவிரும்பிய தொழு நோய் பிடித்த கணவனைத் தன் தலையாலேயே சுமந்து சென்றவளைக் கற்புக்கரசியென்று கையேந்தும் இந்த நாட்டில் அவள் அழாமல் வேறு என்ன செய்வாள்?

ஏனென்றால் அவள் பெண்!

– ஈழகேசரி-8-6-52

– தோணி (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 1962, அரசு வெளியீடு, கொழும்பு.

– ஒரு காவியம் நிறைவு பெறுகின்றது (ஐம்பது சிறுகதைகள்), முதற் பதிப்பு ஒக்டோபர் 1996, மித்ர வெளியீடு, சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *