பெண்டாட்டிக்குப் பயந்தவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 19, 2022
பார்வையிட்டோர்: 3,706 
 
 

தன்னுடைய வீட்டிற்கு நேர் எதிர்வீட்டில் நான்கு நாட்களுக்கு முன்பு அந்த அழகான தம்பதிகள் குடி வந்ததிலிருந்தே தன் மனைவி சுஜாதாவிடம் ஒரு மௌனமான மாற்றம் மறைவாக இருப்பதை கண்டான் கல்யாணம்.

அது மட்டுமல்லாமல் அவர்கள் வரும் வரை இந்த வீட்டைப் பற்றியும், குளியலறை, கழிவறை தண்ணீர் வசதிப் பற்றியும் வானளாவ புகழ்ந்தவள் இப்போது வேறு வீடு பார்க்கும்படி நச்சரிக்கிறாள்.!!

வேறு வீடு பார்க்க வேண்டுமென்றால் உடனடியாகவாக் கிடைத்துவிடும் சட்டென்று குடிபோய்விட..?!

எந்தவித தொந்தரவும் இல்லாமல் தான் கொடுக்கும் இந்த சொற்ப வாடகையில் இதைவிட வசதியாய் வேறு வீடு கிடைப்பதென்பது சந்தேகம்தான். இது தெரிந்தும் வேறு வீடு பார்க்கும்படி மனிதன் உயிரை எடுக்கிறாள் சுஜா..?

கிட்டத்தட்ட ஒரு மாதக் காலமாகப் பூட்டிக்கிடக்கும் எதிர் வீட்டிற்கு குடிவரப் போகின்றார்கள் என்று தான் கேள்விப்பட்டதைச் சொன்னதும்…

‘அப்பாடா! இந்தப் புறநகர்ப் பகுதியில் தனக்குத் துணையாக இன்னொரு குடும்பம் வரப்போகின்றதே..! ‘ என்று மகிழ்ந்து போனவள்… அவர்கள் வந்ததும் ஏனிப்படி மாறிப்போனாள்..?

தட்டுமுட்டு சாமான்களுடன் வண்டியில் கைக்குழந்தையுடன் அவள் தனி ஆளாய் வந்து இறங்கியதும் ஆவல் மிகுதியால் இவள் வலியப் போய் ஒத்தாசை செய்தவள்தான் இந்த சுஜா. அடுத்து அவள் கணவன் வந்த நாழியிலிருந்து அந்தப் பக்கம் எட்டிப்பார்க்கவில்லை இவள். ஆண் துணை வந்தபிறகு எதற்கு உதவி…?

யார் யார் வந்திருக்கின்றார்கள்..?!

ஏதோ ஒரு அரசு வங்கியில் பணி புரியும் அவன், அவன் மனைவி, ஒரு கொழுக் மொழுக் குழந்தை. இவ்வளவு தானே..?!

ஒரு வேளை இப்படி இருக்குமோ..?!……..

தனக்குத் திருமணமானதிலிருந்து குழந்தைப் பேறு இல்லாததால் எதிர் வீட்டுக் குழந்தையைக் கண்டதும்… பொறாமையால் சோகமாகிப் போய்விட்டாளா..? இவளுக்குள் குற்ற உணர்ச்சி, தாழ்வுமனப்பான்மை ஏற்பட்டு இப்படி மாறிப்போனாளா….?!

அந்தக் குழந்தை இவள் ஏக்கம் தாக்கத்தை அதிகப்படுத்துகிறது என்பதால் வேறு வீடு பார்க்கச் சொல்கிறாளா..? எதனால் இப்படி சுஜா மாறிப் போனாள்..? – மிகவும் குழம்பினான் கல்யாணம்.

இந்த ஏக்கம் தாக்கத்தினாலோ என்னவோ அவர்கள் குடி வந்து முடித்த நான்காம் நாளிலிருந்தே சுஜாவிற்குச் சுரம் கண்டு விட்டது.

அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்துக் கொண்டு துணையாகிப் போனான் கல்யாணம். வேறு வழி..?!

இவனை நம்பி வந்தவளுக்கு எல்லாம் இவன்தானே!

பாத்திரம் மட்டும் துலக்கி வைத்துவிட்டுச் செல்லும் வேலைக்காரியை வைத்துக் கொண்டு சமையல் முதல் எல்லாவற்றையும் சமாளித்துக் கொண்டான். சுஜாவும் அவனுக்கு அதிக சிரமம் கொடுக்கவில்லை.

விடுப்பு எடுத்துக் கொண்டு தங்கியது முதல் தன் மனைவிக்கு ஒத்தாசைகள் செய்தது போக மீதி நேரங்களில் படிப்பதும், உறங்குவதும் , சமயம் கிடைக்குப் போதெல்லாம் எதிர் வீட்டு குழந்தையை ரசிப்பதுமாகப் பொழுதைப் போக்கினான் கல்யாணம்.

எதிர் வீட்டை இந்த நான்கு நாட்களாய்க் கவனித்ததில் கணவனின் சத்தத்தை விட அவன் மனையின் சத்தம்தான் அதிகமாக் கேட்டுக் கொண்டிருக்கிறது.

கல்யாணம் மாதிரி ஆள் நல்ல வாட்ட சாட்டமாக இருந்தாலும் பெரும்பாலும் வாயில்லாப் பூச்சியாகத் தென்பட்டான். மனைவியின் கோபம்தாபம் சத்தத்திற்கெல்லாம். ஒரு வேளை மௌனம்தான் அவனது தற்காப்பு, ஆயுதம் எல்லாம் போலிருக்கின்றது என்கிற நினைப்புதான் வந்தது கல்யாணத்திற்கு.

அவன்தான் அந்த வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டான். புதிதாகக் குடி வந்ததினால் வேலைக்காரி கிடைக்கும்வரை மனைவிக்கு ஒத்தாசையாக இருக்கின்றான் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டான்.

ஆனால் அவனின் கணிப்புத் தவறாக இருந்தது.

முழு பெண்டாட்டிதாசனென்றால் இவன்தான் என்று அடையாளம் காட்டும் அளவிற்குத் தண்ணீர் எடுப்பது, துணி துவைப்பது, காய்கறி, மளிகை, ரேஷன் கடை என்று எல்லாவற்றையும் அவனே பார்த்துக் கொண்டான்.

ஒருவேளை சமையல் முதல் எல்லா வேலைகளையும் அவனே செய்வான் போல என்று நினைக்கும்போது கொண்டதை பார்க்கும்போது எரிச்சலாக இருந்தது கல்யாணத்திற்கு.

எல்லா நேரங்களிலும் அவள் குழந்தையோடு மட்டுமே வெறுமனே இருந்தாள். குழந்தை மீது பற்றுப் பாசமாக இருப்பவளாகக் கூடத் தெரியவில்லை. எப்போதும் அதனுடன் ஒரு இறுக்கமான முகத்துடன் இருந்தாள் ஒரு வேலைக்காரியைப் போல் குழந்தையை வைத்துக் கொண்டாள்.

அதேசமயம்… அவளுக்கு கணவனைத் திட்டுவது, விரட்டுவது என்றால் கொள்ளை பிரியம் போல. அக்கம் பக்கம் பார்க்காமல், அவன் வருத்தப்படுவான், நோகுவான் என்ற எந்த கவலையுமின்றி சத்தம் போட்டு திட்டுவாள்..

ஞாயிற்றுக் கிழமைகளில் குழந்தையை அவனிடம் கடாசிவிட்டு சினிமாவிற்குப் போய்விடுவாள். பாவம்! இவன் குழந்தையுடன் லோலடித்துக் கொண்டு இருப்பான். சில சமயம் இவள் பாட்டுக்கு வீட்டைப் பூட்டிக் கொண்டு கைக்குழந்தையுடன் பகல் ஆட்டம் சினிமாவிற்குப் போய்விடுவாள். அலுவலகத்திலிருந்து அலுத்து வருபவன் வீடு பூட்டி இருப்பதைப் பார்த்ததும் அய்யோ..! என்று வாசலில் உட்கார்ந்துவிடுவான்.

இப்படி ஒரு பெண்டாட்டிதாசனா..? அவள் என்னதான் பெரிய அழகியாய் இருந்தாலும் இப்படியா ஒருவன் பழியாய்க் கிடப்பது..? கணவனை வேலை வாங்க, நாக்கில் நரம்பில்லாமல் பேச ஒரு பெண்ணிற்கு எப்படி மனசு வரும்..?

எதிர் வீட்டுக்காரியோடு தன் மனைவியை ஒப்பிட்டுப் பார்த்தான் கல்யாணம்.

சுஜா எவ்வளவு நல்லவள். நாசூக்கானவள். இந்த மாதிரி கணவனை மதிக்கத் தெரியாத அடங்காப்பிடாரியாகவெல்லாம் நடக்க அவளுக்குத் தெரியாது.

இவன் காப்பியைக் குடித்துவிட்டு டம்ளரைக் கழுவினால் கூட படபடத்துப் போகும் சுபாவம் அவளுக்கு. எதையும் கணவனுக்காகப் பார்த்துப் பார்த்து செய்வாள். கேட்டு நடப்பாள். கல்யாணம் முகம் சுண்டுகின்றாற்போல் இதுவரை ஒரு நாள் கூட நடந்து கொண்டதில்லை.

பெண்டாட்டியை அடக்கி ஆளத் தெரியாதவனெல்லாம் என்ன ஆண்மகன்! இவனெல்லாம் எப்படி மனுசன்.?! – எதிர் வீட்டுக்காரன் மேல் வெறுப்பு வந்தது கல்யாணத்திற்கு.

ஒரு நாளைக்கு அவனை நேருக்கு நேர் பார்த்து…

“ஏன்டா! நீயெல்லாம் முதுகெலும்பு உள்ள ஆம்பளைத்தானா..?” என்று சுடச் சுட கேட்க வேண்டும்போலிருந்து.

ஆனால் பழக்க வழக்கமில்லாமல் பொசுக்கென்று எப்படி ஒரு மனிதனைப் போய் கேட்பது..?

நண்பனென்றால்…. விளையாட்டை நாசுக்காய்க் கேட்டு விடலாம். எதிரியாய் இருந்தால் எச்சில் துப்பி சண்டை வாங்கி கேட்டு விடலாம். இவன் எதிலும் சேர்த்தி இல்லாதவன். எப்படி கேட்பது…?

ஆனாலும் கேட்டே ஆகவேண்டுமென்று கல்யாணம் மனதிற்குள் முடிவெடுத்துக் கொண்டான்.

ஆள் தனியே மாட்டினால்தான் கேட்க முடியும்..? அதனால் அதற்கான சமய சந்தர்ப்பத்தையும் எதிர் நோக்கி இருந்தான்.

அதுவும் அதற்கு அடுத்த நாளே கிடைத்தது.

மாலை அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்த எதிர்வீட்டுக்காரன்… காப்பியைக் குடித்து விட்டு உடனேயே துணிப்பையை எடுத்துக் கொண்டு தெருவில் இறங்கினான். அவன் பையை எடுத்துக் கொண்டு கிளம்பினால் கடைக்கோ காய்கறி வாங்கவோ செல்ல வேண்டும்.

உடனே சுறுசுறுப்பானான் கல்யாணம். உள்ளே அறையில் சுஜா தூங்கிக் கொண்டிருப்பதால் சட்டையை மாட்டிக் கொண்டான் வாசல் கதவை ஒருக்களித்து வைத்து விட்டு பின் தொடர்ந்தான். அவன் ஒரு சந்தில் நுழைய……..

இவன் ஒரு குறுக்குச் சந்தில் நுழைந்து யதேச்சையாக சந்திப்பதாக நடித்து அவனைப் பார்த்துப் புன்னகைப் புரிந்தான்.

அவன் கொஞ்சம் யோசனை செய்துவிட்டு புன்னகை செய்தான்.

“சார்! நான் கல்யாணம். உங்க வீட்டுக்கு எதிர்க்க இருக்கேன்.!”வலிய இவன் அறிமுகம் செய்து கொண்டான்.

“என் பேர் சேகர்!” அவன் சுருக்கமாக தன் அறிமுகத்தை முடித் தான்.

“என்ன சார்.! கறிகாய் வாங்கவா..?” இப்படி ஆரம்பித்து சேகரை சகஜ நிலைக்குக் கொண்டு வந்த பிறகு..” உங்களால் நான் வேற வீடு பார்க்கலாம்ன்னு இருக்கேன் சார்..”என்று சொல்லி தன் விசயத்திற்கு வந்தான் கல்யாணம்.

“ஏன்.?” சேகர்! அதிர்வில் துணுக்குற்றான்.

“பின்னே என்ன சார். ஒரு ஆம்பளையாய் யோக்கியமாய் இல்லாமல்..உங்க மனைவியை சிரமப்படுத்தாமல் எல்லா வேலைகளையும் நீங்களே செய்து…. என்னை அவமானப்படுத்துறீங்க..? என்னை என் மனைவி ஒரு மாதிரியாய்ப் பார்க்கிறாள்.” முகம் சுளித்தான்.

ஒரு நிமிடம் மெளனமாக இருந்த சேகர்….. மெல்ல…

“ஆமாம் சார். நான் பொண்டாட்டிக்கு அடங்கி நடக்குற பொண்டாட்டிதாசன்தான். ஏன் தெரியுமா..?” என்றான்.

“சொல்லுங்க..? ”

“இவ எனக்கு ரெண்டாவது சம்சாரம். முதல் மனைவியும் இவளாட்டம்தான் இருந்தாள். எதிர்த்துக் கேட்டதுல, கண்டிச்சதுல குடும்பத்துல குழப்பம். அப்புறம் அதுவே விஸ்வரூபம் எடுத்து பின்னால விவாகரத்து வரைக்கும் போயிடுச்சு. இவளையும் அதுமாதிரி இழந்துடக் கூடாது என்கிறதுக்காகத்தான் அவ சொல்லுக் கட்டுப் பட்டு எல்லாத்துக்கும் அடங்கிப் போறேன்.

அவள் கோபப்படுறதிலேயும் நியாயம் இருக்கு. பருவ வயசுல கலர் கலர் கனவுகளை சுமந்துக்கிட்டு இருந்தவளை நான் தனிமரமாய் ஆகிடுவேன் என்கிற பயத்துல இவளை நிர்பந்த படுத்தி எனக்கு கட்டி வச்சாங்க என்னைப் பெத்தவங்க. அவளுக்கு கனவுகள் கலைந்த ஆத்திரம். ரெண்டாம்தாரமாய் வாழ்க்கைப் பட்டுட்டோம் என்கிற வருத்தம்.. கொட்ட வேற போக்கிடம் இல்லாமல் என்மேல் கொட்டறாள். வேற வழி..? விசயம் புரிஞ்ச நானும் பொறுத்துப் போறேன். இதான் நிலைமை!”நிறுத்தினான்.

“அப்படியா..?!” என்று உச்சுக் கொட்டினாலும்…

‘ஏன்டா கேட்டோம்..? பழசைக் கிளறி அவனை வருத்தப் பட வைத்து விட்டோம்!’ என்று கல்யாணத்திற்குள் மனசு துடித்தது.

தனக்கு வாய்த்த சுஜா போல இவனுக்கும் ஒரு மனைவி கிடைத்திருந்தால் அவன் வாழ்க்கை இவ்வளவு முட்கள் நிறைந்ததாக இருக்காதே..! என்று நினைக்க சேகர் மேல் இவனுக்குப் பச்சாதாபம் வந்தது.

தான் மட்டும் அனுதாப படவில்லை. தன்னைப் போல தன் மனைவியும் அவன் மீது அனுதாப்படுகிறாள் என்று காட்டிக் கொண்டால் எதிர்வீட்டுக்காரன் தன்னை, தன் மனைவியை தற்போது மதிப்பதை விட இன்னும் கூடுதலாக மதிக்கலாம் என்கிற எண்ணம் வர…..

“என் மனைவி சுஜா ரொம்ப தங்கமானவள் சார். நீங்க இப்படி கஷ்டப்படுறதைப் பார்த்து உங்க ரெண்டாவது சம்சாரத்தைக் கரிச்சிக் கொட்டியே சுரமாய் படுத்துட்டாள்ன்னா பார்த்துக்கோங்க. உங்க மனையோட அடங்காப்பிடாரி தனத்தைப் பார்த்திட்டு நீங்க குடி வந்த நாள் முதலாவே என்னை வேறு வீடு பாருங்கன்னு நச்சரிக்கிறாள்ன்னா.. பார்த்துக்கோங்கோ..” என்று பீற்றி தன் மனைவி நல்லவள், உன் மனைவி மாதிரி இல்லை என்று நாசூக்காய் சொன்னான் கல்யாணம்.

‘சுஜா திருந்தி விட்டாளா..?!’ – சேகருக்கு உண்மையிலேயே ஆச்சரியமாக இருந்தது.

இருக்கலாம்.! கடந்த கால வாழ்க்கையைப் போல் நிகழ்கால வாழ்க்கையையும் இழந்துவிடக் கூடாதெகின்ற பயத்தில், அனுபவம் ஏற்படுத்தி இருந்த பாடத்தில் மாறிப் போயிருக்கலாம். என் முகத்தில் தினமும் விழிக்கப் பயந்து கொண்டு வேறு வீடு பார்க்கும்படி தன் கணவனை ஏவி இருக்கலாம். அல்லது தன் கடந்த காலங்கள் தன்னால் தன் கணவனுக்குத் தெரிந்து விடுமோ என்கின்ற பயத்தில் இருக்கலாம். இதனால் ஏற்பட்ட மன அழுத்தம், பயத்தில் அவளுக்குச் சுரமும் கண்டிருக்கலாம்.

சுஜா! நீயும் நானும் விவாகரத்து செய்து கொண்ட பின் நீ யாரோ, நான் யாரோ..? உன் வாழ்க்கைப் பயணம் அப்படி என் வாழ்க்கைப் பயணம் இப்படி என்று எழுதி இருக்கையில் யார் யாரை நொந்து கொள்வது….? நீ என் வாழ்விலும், நான் உன் வாழ்க்கையிலும் தலையிடுவதற்கு ஏதாவது நமக்குள் உறவிருக்கின்றதா..? ஒட்டுதலிருக்கின்றதா..? கவலைப்படாதே! என்னால் உனக்கு எந்தவித தீங்கும் ஏற்படாது.! என்று மனம் மௌனமாய் பேசிக் கொள்ள….

“ரொம்ப மகிழ்ச்சி கல்யாணம். சார். இங்கே குடி வந்த முதல் நாளே இந்த வீடு வசதிப்படாதுன்னு புரிஞ்சி போச்சு. அதனால அடுத்தக் கட்ட நடவடிக்கையாய் உடனே நான் வேற ஊர்ல வேறு வீடு பார்த்து முன் பணம் கொடுத்துட்டேன். நாளைக்கு மறுநாள் குடி போறோம்.!” என்று உண்மையைச் சொல்லிவிட்டு சென்றான் சேகர்.

மௌனமாய் பார்த்து நின்ற கல்யாணம் மனதின் ஒரு மூலையில் அவனையும் அறியாமல் வலித்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *