கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 19, 2024
பார்வையிட்டோர்: 2,302 
 
 

(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கல்யாண விடே பரபரப்படைந்தது.

“என்ன… ஏது?” என்று தான் எல்லோரும் கேட்டுக்கொண்டு இருந்தார்களே தவிர விஷயத்தை வந்து சொல்வாரில்லை.

உள்ளே போய் எட்டிப்பார்க்கலாமென்றால் நுழைய முடியாத படி சுவர் வச்ச மாதிரிப் பெண்கள் கூட்டம்.

வகை வகையான மலர்களின் கதம்ப வாசனை. அந்த வாசம் பூவிலிருந்து வருகிறதா அந்த உடம்பிலிருந்து வருகிறதா என்று தெரியாத ஒரு மயக்கம். திரும்புகிற பக்கமெல்லாம் கல்யாண வீட்டுக்கே உரிய காட்சிகளும் மணங்களும்.

“விலகுங்கெ… தள்ளிக் கிங்கெ… தூரப் போங்கெ; செத்த நகருங்களேன்…” என்ற குரல்கள் வந்ததே தவிர யாரும் விலகவுமில்லை; தள்ளிப் போகவுமில்லை. அதுக்குப் பதிலாக அது ஆட்களை மேலும் மேலும் அந்த இடத்துக்கு வரவழைத்தது.

“லேய், மணி. இங்கே வா,” என்று சத்தங் கொடுத்தேன். அவன், கப்பலைத் துளைக்கிற டார்பிடோ மாதிரி இரண்டு பெண் இடுப்புகளுக்கு மத்தியில் தலையைக் கொடுத்து நுழைத்துக் கொண்டிருந்தான் உள்ளே புக.

பக்கத்திலிருந்தவர் என்னைக் கையமர்த்தி, “பேசாமெ இருங்கெ; பயல் போய்ட்டு வந்தாத்தான் விஷயம் என்னென்னு நமக்குத் தெரியும்”, என்று சொல்லி முடிப்பதற்குள் மணி புகுந்துவிட்டான்.


கல்யாணம் நடக்கிற வீடு,. ஒரு பட்டகசாலையும் ஒரு அரங்கு வீடும் கொண்டது. முன் பக்கம் சமையல் கட்டும் மாட்டுத் தொழுவமும். அரங்கு வீட்டுக்குள்தான் கல்யாணப் பெண் இருந்தாள். சிங்காரித்து முடிந்தது. முகூர்த்த நேரமும் நெருங்கி விட்டது. மணவடையில் வந்து மாப்பிள்ளை உட்கார்ந்து விட்டான். பட்டகசாலையில்தான் மணவடை. நாங்கள் பட்டகசாலைக்கும் சமையலறைக்கும் மத்தியிலுள்ள ‘முத்தவெளி’யில் உட்கார்ந்திருந்தோம்.

நாங்கள் அங்கே ஜமுக்காளத்தில் உட்கார்ந்துகொண்டு வெற்றிலை போடுகிறோம் என்கிற பேரில், வெற்றிலைக் காம்புகளைக் கிள்ளியெறிந்தும் வெற்றிலையின் நரம்புகளைக் கிழித்துப் போட்டும் ஜமுக்காளத்தைக் குப்பையாக்கியும்; வெற்றிலைச் சக்கையையும் எச்சிலையும் துப்பித் துப்பித் தரையை அசுத்தப்படுத்திக் கொண்டு வாயையும் கறையாக்கிக் கொண்டும் அரசியல் பேசிக் கொண்டிருந்தோம். பேச்சில் ‘கரீபி ஹடாவ்’ பலமாக அடிபட்டது. கல்யாணம் எங்களுக்கு ரெண்டாம் பட்சமாகி விட்டது. ஒரு வகையில் உண்மையும் அதுதான்.

கல்யாணம் நடந்தது எங்கள் சித்தப்பாவின் வீடு. ஆனால் கல்யாணம் எங்கள் குடும்ப சம்பந்தப்பட்டது அல்ல. கல்யாணப் பெண் ஓர் அனாதை. சின்ன வயசிலேயே அவள் எங்க சித்தப்பாவின் வீட்டுக்கு எருமை மாடு மேய்க்க வந்தாள். வீட்டு வேலையெல்லாங் கூடச் செய்வாள். சாப்பிடுகிற நேரம் தவிர அந்த எருமை மாடுகளின் சாண முத்திர வாடையில்தான் வாசம் அவள்.

ஊமை இல்லையென்றாலும் வாய் திறந்து அதிகம் பேச மாட்டாள். செய்யச் சொல்லுகிற வேலையை எவ்வளவு நேரமானாலும் எந்த நேரமானாலும் தட்டாமல் செய்வாள். ராத்திரி பத்து மணி – பதினொரு மணிக்கு, வீட்டு ஆட்கள் பூராவும் தூங்கிக் கொண்டிருப்பார்கள், தொழுவில் மாடுகள் தூங்கிக் கொண்டிருக்கும்: கடேசியில் பாட்டிதான் சொல்லுவாள், “பேரக்கா: சரி போதும், நீ தூங்கப் போ”. பாட்டிக்குத் தூக்கம் வரும்வரை கை கால்களைப் பிடித்து விடவேண்டும் அவள்.

பாட்டிக்குத் தூக்கமே வராது. ஒரு சின்ன கோழித் தூக்கம் போடுவாள். மூணு மணிக்குத் தொழுவின் கூரை மேல் உட்கார்ந்திருக்கும் சேவல் இறக்கைகளைப் படபடவென்று தட்டிச் சோம்பல் முறித்து ஒரு கொக்கரக்கோ சத்தம் கொடுக்கும். ஊரிலேயே முதலில் கூவுகிற சேவல் அது தான். பாட்டிக்கு அதிலும் ஒரு பெருமை.

சேவலின் முதல் சத்தத்தை அடுத்து பாட்டியின் சத்தம் வரும். “பேரக்கா, ஏட்டீ எந்தி!” இந்த ஒரு வார்த்தைக்காகவே காத்திருந்தது போல் துள்ளி விழுந்து எழுந்திருப்பாள் பேரக்காள்.

காலையில் எழுந்ததும் சித்தப்பாவுக்கு முதல் காரியம் தன் கைக் கடியாரத்துக்குச் ‘சாவி’ கொடுப்பது. பேரக்காவுக்கோ பாட்டியின் சத்தம் ஒன்றுதான் சாவி; உடனே முற்றம் தெளிப்பதிலிருந்து தொடங்கி விடும் வேலை.

பேரக்காள் அந்த வீட்டுக்கு வந்த பிறகு, அவளது உடம்பில் ஏற்பட்ட மாறுதல்களைப் போலவே அந்த வீட்டிலும் பல மாறுதல்கள் ஏற்பட்டது அவளால்.

தூக்கணாங் குருவிக் கூடு போலக் காட்சி அளித்த அவளுடைய தலை மயிரை சித்தப்பா முதல் காரியமாகக் குடி மகனை வரவழைத்து மழுங்கச் சிரைக்கச் சொன்னார். கொஞ்ச காலம் இது தொடர்ந்து நீடித்தது. அப்போது, பேரக்காளைப் பார்க்கிறவர்கள், “நல்ல, ஆட்டுரல் குழவி போல” என்று சொல்லிச் சிரிப்பார்கள்.

அவள் வளர்ந்த பிறகு, மொட்டையிலிருந்து ‘பாப்’ வைத்துக் கொள்ள அனுமதித்தார்கள். சித்தப்பா வீட்டுப் பையன்களுக்கு பார்பர் வந்து கிராப் வெட்டிவிடும் போது பேரக்காளுக்கும் அது ஒழுங்காக நடைபெறும்-அவளைக் கேளாமலேயே.

அவளுக்குத் தாவணி கொடுத்துப் போட்டுக் கொள்ளச் சொன்ன போது சித்தப்பா வீட்டுத் தொழுவின் கூரை கொல்லம் ஓடு ஆக மாறியது.

அந்த வளர்த்தியிலும் அவள் பாப் வைத்துக் கொண்டிருந்தது, சிலர் அவளை இந்திரா காந்தி என்று பட்டப் பெயர் சூட்டி அழைத்தார்கள். பேரக்காள் அதுக்கு ஒன்றும் சொல்ல மாட்டாள்.. இந்திரா காந்தி தன்னைப் போல் ஒரு பெண் என்றோ, இந்தியாவையே ஆளும் ஒரு மாதரசி என்றோ அவளுக்குத் தெரியாது.

பாட்டிதான் ஒரு நாள் சித்தப்பாவைச் சண்டை பிடித்தாள். அதிலிருந்து அவள் பார்பரிடம் முடி வெட்டிக் கொள்வதில்லை.

சம்சாரி வேலைக்கு வரும் கொத்தாட்கள், ஊர்க் கிணற்றிலிருந்து குடம் குடமாகத் தண்ணீர் சுமக்க மறுத்தார்கள். அதனால் சம்சாரிகள் அறுநூறு, ஆயிரம் என்று செலவழித்து வீடு தவறாமல், ‘அடி பம்ப்’ போட்டார்கள். சித்தப்பா வீட்டில் அந்த மாறுதல் ஏற்படவே இல்லை. குடம் உட்காருவதற்கு பேரக்காளின் உறுதியான இடுப்பு இருந்தது; குடத்தின் கழுத்தை இழுத்து அணைக்கப் பேரக்காளின் வலிமையான கை இருந்தது. பெரிய வாளியின் தாம்புக் கயிற்றைக் கிணற்றிலிருந்து தண்ணீரோடு இழுத்து இரைக்கும்போது அவளது பருத்த மார்பையும் புஜங்களையும் பார்த்துக் கிராமத்து இளவட்டங்கள் பெருமூச்சு விடுவார்கள்.

வேலை நெருக்கடியான விதைப்பு நாட்களில் சித்தப்பாவின் வீட்டுக்கு வேலைக்காரர்களின் தட்டுப் பாடு ஏற்பட்டதே இல்லை. அப்படி வந்து சேர்ந்தவர்களில் ஒருவன்தான் குமரய்யா. சந்தையில் மாடு பார்க்கிறதில் சித்தப்பா எவ்வளவு சாமர்த்தியசாலியோ அவ்வளவுக்கு வேலைக்காரனை இனம் கண்டு கொள்வதிலும் உண்டு. குமரய்யா-பேரக்காள் நெருக்கத்தைக் கண்டு பிடித்ததில் பாட்டி நிபுணியாக இருந்ததினால், அவள் இருவரையும் சேர்த்து வைத்து முடிச்சுப் போட்டு விடுவது என்று தீர்மானம் ஆயிற்று.

“நூறு கல்யாணம் கண்ட வீடு சிறப்பானது” என்று ஒரு நம்பிக்கை. ஆகவே இந்தக் கல்யாணத்தைத் தங்கள் வீட்டிலேயே தங்கள் செலவிலேயே நடத்தி வைப்பது என்று ஆரம்பித்து விட்டார்கள். இதனால் பேரக்காளும் குமரய்யாவும் அந்த வீட்டுக்கு மேலும் கடமைப்பட்டவர் களானார்கள்.

கிராமமே இந்தக் கல்யாணத்தில் ஓர் உற்சாகம் கொண்டிருந்தது என்று சொல்லலாம்.


மணி இப்பொழுது அந்தக் கூட்டததுக்குள்ளிருந்து மீண்டு வந்து கொண்டிருந்தான். என்ன விஷயம் என்று கேட்பதற்கு முன்னான அவனே ஓடி வந்து சொன்னான்.

கல்யாணப் பெண் மயக்கம் போட்டு விழுந்து விட்டாளாம்.

எங்கள் எல்லோருக்கும் ஒரே திகைப்பு. காரணம் விளங்கவில்லை. கூட்டத்தின் நெருக்கடியோ காற்றோட்டம் இல்லாததோ காரணமாக இருக்க முடியாது. அப்படி ஒன்றும் பேரக்காளின் உடம்பு மெல்லிசானது இல்லை. எத்தனையோ அதிமெல்லிசானதுகள் எல்லாம் அங்கே உள்ளே இருக்கின்றன. ஒன்றும் மயக்கம் போட்டதாகத் தெரியவில்லையோ.

பாட்டிதான் சிரித்துக் கொண்டே வெளியே வந்தாள். அவள் இந்தக் கல்யாணத்துக்கு என்று தனக்காக எடுத்த புதிய நார்ப்பட்டு உடுத்தியிருந்தாள். சித்தப்பாவிடம் அவள் எதையோ சொல்லிவிட்டு சத்தம் போட்டுச் சிரித்தாள். சித்தப்பாவும் சிரித்த மாதிரி இருந்தது.

என்னவென்று விசாரித்து அறிய நான் எழுந்திருந்தேன். அதற்குள் பாட்டியே வெளியே வந்து எல்லோரிடமும் சொன்னாள். “கழுதை ஒரு நாளாவது தலையில் பூ வைத்திருந்தாலல்லவா; இண்ணைக்குச் சிங்காரிக்கும்போது பூ வாசம் தாங்காமல் மயக்கம் போட்டுட்டது!”

பாட்டி சொன்னதைக் கேட்ட எல்லோருடைய முகங்களிலும் ஆச்சரியம் விரிந்து, பிறகு அது சிரிப்புபாக வழிந்தது.

எனக்குச் சிரிப்பு வரவில்லை.

– 27 மார்ச் 1975

Print Friendly, PDF & Email
கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன், கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். கி.ரா என்கிற கி.ராஜநாராயணனின் முழுப்பெயர், ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர். 1923-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ம் தேதி பிறந்தார். ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியரின் ஐந்தாவது பிள்ளை கி.ரா.[1] 1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *