கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 8, 2020
பார்வையிட்டோர்: 4,625 
 

இப்பொழுது அவள் என் கனவில் வந்தாள். ஏளனம் செய்யும் அவள் புன்னகையுடன் என் பின்னால் வந்து என் பேரை என் காதண்டை சொல்லி, என் தோளைத் தொட்ட மாதிரி இருந்தது.

‘பூர்வா!’ என்று அலறிப் புடைத்துக்கொண்டு எழுந்தேன். என்னைச் சுற்றி இருட்டுத்தான். கண்ணைத் தேய்த்துக் கொண்டேன். கண்கள் கண்ணிரில் நனைந்திருந்தன. தூக்கத்திலும் என்னையும் அறியாமல் நான் அழுதிருக்கிறேன்.

‘டாங்’– எங்கேயோ மணி ஒன்று அடித்தது.

இனி விடியும் வரையில் தூக்கம் எனக்கு வரப் போவதில்லை. திரும்பத் திரும்ப நினைத்த நினைவுகளே மனத்திரையில் ஆட ஆரம்பித்துவிட்டன. முன்னும் பின்னும், பின்னும் முன்னும்.

– ஆடி மூட்டத்தின் அதிகாலையில் சமுத்திரக் கரையோரத்தில் பூர்வாவின் கதை ஆரம்பமாகிறது.

நான் அலைகளைச் சுட்டிக் காண்பித்துக்கொண்டு ஏதோ சொல்லிக்கொண்டிருந்தேன். “மனிதன் எவ்வளவோ கண்டு பிடிக்கிறான். புதுப்புதுக் கண்டங்களைக் கண்டிருக்கிறான். அநேகமாய் இப்பூமியில் கண்டறிய வேண்டியவைகளை யெல்லாம் கண்டுவிட்டான் என்றே சொல்லலாம். ஆனால், இன்னமும் அவன் இவ்வானையும் நீரையும் சரியாய் அளந்த பாடில்லை என்றே என் அபிப்பிராயம். இன்னமும் இச் சமுத்திரத்தில் அவன் மனத்திற்கும் பார்வைக்கும் எட்டாத ஜந்துக்கள் வேண்டியன புதைந்து கிடக்கின்றன. எனக்கு என்ன தெரியுமா ஆசை? என்றேனும் இக்கரையினின்றும் இப்படியே நடந்து ஜலத்துள் போய் உயிருடனும் நினைவுடனும் இருக்க வழி யாதேனும் இருந்தால், அவ்வுலகத்தைக் காணவேண்டு மென்கிற ஆசைதான்.

“நான் பட்டணம் வந்து பத்து வருஷங்கள் ஆகிவிட்டன. ஆனால் இன்னமும் சமுத்திரம் பார்த்த ஆச்சரியம் எனக்குத் தணிந்தபாடில்லை. எத்தனை பேர் கிறிஸ்துமஸ் லீவு என்றும் பொங்கல் விடுமுறையென்றும் பட்டனத்துப் புதுமைகளைப் பார்க்க வேண்டுமென்று வருகிறார்கள். பட்டணத்திலும் நாளுக்கு நாள் ஒரு புதுமை இருக்கிறது. ஆனால் அப்புதுமைகளெல்லாம் புளித்துவிட்டன. இச்சமுத்திரத்தின் புதுமை எனக்குத் தணிந்தபாடில்லை.”

பூர்வா மெளனப் புன்னகை புரிந்தாள். நான் மேலும் பிதற்றிக்கொண்டே போனேன்.

“நான் முதல் முதல் பட்டணம் வந்ததை உன்னிடம் சொன்னேனோ? நான் கிராமத்திலிருந்து ஓடிவந்து விட்டேன். ஒருநாள் என் பாட்டி எல்லாக் குழந்தைகளையும் வைத்துக் கொண்டு ஏதோ ஒரு ராஜகுமாரன் கதை சொன்னாள். அவன் யாரோ ஒரு ஜலகன்னியை மணந்துகொண்டானாம். அவளை முதன் முதலில் எப்படிப் பார்த்தானென்றால், உச்சி வெய்யில் வேளையில் சமுத்திரத்தில் இருந்து அவள் வெளிப்பட்டுக் கரைக்கு வந்து, வெய்யிலில் காய்ந்துகொண்டிருந்தாளாம்.
அப்பொழுது அந்த வழியில் வேட்டையாடிக் களைத்து, தொண்டை வறண்டு ஒரு ராஜகுமாரன் வந்தானாம். எங்கே பார்த்தாலும் ஜலமாய் இருந்தாலும் உப்புத் தண்ணிர்; தாகத்தினால் தவிக்கிறான். அப்பொழுது இந்தச் சமுத்திர தேவதையைக் கண்டானாம். அவன் அவளைக் கண்டு ஆசைப்பட்டானாம்.

“இப்படி ஏதோ கதை போகிறது. எனக்கு இப்பொழுது முழுதும் ஞாபகமில்லை.

“பாட்டி எப்படி அந்த ஜலதேவதை கரைக்கு வந்தாள்?” என்றேன்.

“சமுத்திரத்திலிருந்து.”

“சமுத்திரம் எங்கே இருக்கிறது?”

“பட்டணத்தில்.”

“அவள் எப்படி வரமுடியும்?”

“அலையே படகாய், அவள் கையே துடுப்பாய்.”

“படகு என்றால்? அலையென்றால்? துடுப்பு என்றால்?”

“சனியனே! தூங்கறத்துக்குக் கதை சொன்னேனா? நீ குறுக்குக் கேள்வி கேக்கறத்துக்குக் கதை சொன்னேனா? திரும்பிப் படுடா கழுதை –”

“என்ன எனக்குத் தோன்றிற்றோ தெரியவில்லை; அடுத்த நாள் காலை நான் அலமாரியிலிருந்து இரண்டு கை நிறையச் சில்லறையை அள்ளி மடியில் கட்டிக்கொண்டு ஒருத்தருக்கும் தெரியாமல் பட்டணம் கிளம்பிவிட்டேன். எங்களுர் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரை எங்கள் வீட்டுக்குத் தெரியும். அதனால் அடுத்த ஸ்டேஷனுக்கு நடந்து போய் வண்டி ஏறினேன். எந்த இடத்திற்கு டிக்கட் என்று கேட்டான். சமுத்திரத்திற்கு” என்றேன். இப்பொழுது சிரிப்பாய் வருகிறது.”

பூர்வா அவளுடைய புரியாப் புன்னகை புரிந்தாள்.

“பட்டப் பகலில் ஒரு படகடியில் படுத்துக்கொண்டு காத்துக்கொண்டிருந்தேன். அலைகள் மலைகள் போல் எழும்பி, சிகரத்தில் நுரையைக் கக்கின. நுரைமேல்.”

“பூர்வா! பூர்வா!”

பூர்வாவின் செவியில் என் வார்த்தைகள் ஏறவில்லை. அங்கு மீன்பிடித்துக்கொண்டிருந்த ஒரு செம்படவனின் செய்கைகளில் அவள் கவனம் நழுவிவிட்டது.

கடற்கரையில் எங்கள் மூவரைத் தவிர வேறு யாரும் இல்லை. வெகு நிதானமாய் அவன் ஒரு நண்டைத் தூண்டிலில் ஏற்றி ஜலத்தின் மேல் வீசி எறிந்துவிட்டு, யோகத்தில் ஆழ்ந்த மூர்த்திபோல் அசைவற்று மெளனமாய் மீனின் வருகைக்குக் காத்துக்கொண்டு நின்றான். அவ்வளவு தூரத்தில் இருக்கும் முள்ளில் மீன் மாட்டிக்கொண்டது அவனுக்கு எப்படித் தெரிந்ததோ! ‘கரகர’ வென்று இழுக்கும் கயிற்றின் நுனியில் ஒரு சாண் நீளத்துக்கு ஒரு மீன் துடித்துக்கொண்டு ……

அதைக் கழற்றி, இடையில் கட்டியிருக்கும் ஒலைக் கூடையில் போட்டுக்கொண்டான். கூடைக்குள் படபடவெனச் சப்தம் திடீரென்று பூர்வா அவனை அணுகிக் கூடையைத் திறந்து காண்பிக்கச் சொன்னாள். அவன் ஏதோ முணுமுணுத் தான். “பார்த்தால் பார்ப்பாரு மாதிரி இருக்குதே!” என்று சொன்னான் போலிருந்தது.

கூடைக்குள் இரண்டு மீன்கள் கூடை வாயை எட்டி எட்டி உயிர்மூச்சுக்குத் தாவித் துடித்துக்கொண்டிருந்தன. போய்க்கொண்டிருக்கும் உயிரில் மலர்ந்துபோன அழகிய விழிகள் ஒன்றுடன் ஒன்று இடித்துக்கொண்டு, ‘ஆவ், ஆவ்’ என்று வாயைத் திறந்தவாறு மூச்சுக்குத் தவித்துக் கொண்டு….

திடீரெனப் பூர்வாவின் தலை கிறுகிறுத்துக் கண்களில் ஒளி மங்கியது. நான் தாங்கிக்கொண்டிராவிட்டால் அப்படியே கீழே விழுந்திருப்பாள். அவள் உதடுகள் என் செவியில் உராய்ந்தன. காற்றின் அசைவைப் போல் அவள் வார்த்தைகள் சப்தமற்றுப் போயின.

“நான் இரண்டு மாதங்களாய் ஸ்நானம் பண்ண வில்லை.” –

நினைவு மங்கிய அவள் உடலை நான் தாங்கிக்கொண்டு நின்றேன். அவ்வலைஞன் என்னைப் பார்த்து மிரள மிரள விழித்துக்கொண்டு நின்றான். அவன் கையில் ஏந்திய துண்டிலில் ஒரு நண்டு கழுவில் ஏற்றப் பெற்று, கால்களை உதைத்துக்கொண்டிருந்தது. எங்கள் மெளனத்தில் சமுத்திரம் பேரிரைச்சலாய் இருந்தது. அலைகள் எங்கள் கால்களைக்
கழுவின.

* * *

நான் வீடு திரும்பும் வேளையில் கையெழுத்து மறைந்து விட்டது. பூர்வா வாசற்புறத்துத் தாழ்வாரத்தில் சாய்வு நாற்காலியில் சாய்ந்துகொண்டிருந்தாள். நெற்றி மயிரில் இரண்டு பிரியும் மேலாக்கும் மாலைக் காற்றில் மெதுவாய் அசைந்தன. அவள் கண்கள் மூடியிருந்தன. சந்தடி செய்யாமல் அவள் பக்கத்தில் போய் பூர்வா என்று கூப்பிட்டேன். அவள் துங்குகிறாளா, அல்லது சிந்தனையில் ஆழ்ந்திருக்கிறாளா என்று தெரியவில்லை. எங்களைச் சுற்றி ஒரே அமைதி. செடிகளிலும் மரங்களிலும் இலைகள் சலசலத்தன.

நான் தாழ்வாரத்தின் சுவரின் மேல் அமர்ந்தேன். பூர்வா எனக்குப் புரிந்தபாடில்லை. இம்மாதிரி படுத்துக்கொண்டிருப்பதில் அவளுக்கு ரொம்பவும் விருப்பம்.

சோம்பேறியா?

ஆயின் அப்படியும் தோன்றவில்லை; ஏனெனில், ஒரு சமயம் நான் டைபாய்டு ஜுரத்தில் படுத்தேன். இருபத்தொரு நாட்கள் கண்கூடத் திறவாத கடுஞ்சுரம் என் நினைவு எனக்கு வந்ததும் என் ஞாபகத்தில் முதலில் உறைத்தது அவள் உருவமே. கவலையின் மிகுதியால் முடியக்கூட மறந்து அவிழ்ந்த கூந்தல் பிரிந்து கழுத்தின் இரு பக்கங்களிலும் சரிந்து என் மார்மேலே விழுந்திருந்தது. இரவும் பகலுமாய் தூக்கத்தில் மூடாத விழிகள். அன்ன ஆகாரம் மறந்ததால் சுண்டிப்போன முகத்தில் கண்கள் அளவினும் பெரியதாய் என்னை வெறித்தன. டாக்டர் என் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தார், அவளைச் சற்று அச்சத்துடனேயே பார்த்த வண்ணம்.

“ஸார், இந்தப் பூட்டுக்குப் பிழைத்துவிட்டீர்கள். ஆனால் இந்த அம்மா இல்லாவிட்டால் உங்களுக்கு என்ன நேர்ந் திருக்குமோ எனக்குத் தெரியாது. நீங்கள் தப்பர்த்தம் பண்ணக் கூடாது. உங்களைப் பெண்டாட்டியாய்க் கவனிக்கவில்லை; பிசாசாய்த்தான் கவனித்தார்கள். உங்களுக்கு மருந்து கொடுக்கு முன்னால் இந்த அம்மாளுக்கு உடல் தேற மருந்து கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

“பூர்வா, பூர்வா, பூர்வா!”

நான் பாட்டுக்குக் கூப்பிட்டுக்கொண்டே இருப்பேன். ஆனால் ஒரொரு சமயம் அவளுக்குக் காதே கேட்காது.

செவிடா?

அதுவும் சொல்வதற்கில்லை. ஏனெனில் ஒரு இரவு என்னை அவள் அவசர அவசரமாகத் தட்டி எழுப்பினாள்.

“என்ன?” என்றேன், தூக்கத்தில் கையைக் காலை முறித்துக்கொண்டு. என் கையை அவசரமாய் மடக்கினாள். “உங்கள் தலைமாட்டில் தேள்:”

“சும்மா கனவு காணாதே– இந்த இருட்டில் நான் எங்கிருக் றேன் என்று என்னாலேயே கண்டுபிடிக்க முடியாதே! உன்னால் முடியுமா, நீ தேளைக் கண்டுபிடிப்பதற்கு? இந்தா, சொல் பார்க்கலாம்- என் கையில் எத்தனை விரலை மடக்கிக் கொண்டிருக்கிறேன்?” என்று வேடிக்கை பண்ணினேன்.

“விளையாடாதீர்கள். விளக்கைப் போடுங்கள்.”

விளக்கைப் போட்டேன். வாஸ்தவமாய் ஒரு சருகுத் தேள் கொடுக்கைப் பாய்ச்சிக்கொண்டு கொட்டத் தயாராய் நின்றது. அதன்மேல் ஒரு அடியைப் போட்டேன். “எனக்குத் தெரியவில்லையே” என்றேன், அவளை வியந்தவண்ணம். “அது விழுந்த சப்தம் கேட்டுத்தான் நான் எழுந்தேன்” என்று முனகிக் கொண்டு பூர்வா திரும்பிப் படுத்தாள். அவள் பேசிக்கொண் டிருக்கையிலேயே நித்திரை அவளை மருவ ஆரம்பித்துவிட்டது.

“பூர்வா, அறுபது நாழிகையும் என்ன யோசனை பண்ணிக் கொண்டிருக்கிறாய்? எந்தக் கவலையைப் பட்டுக்கொண்டிருக்கிறாய்?” .

ஆம். இவள் இவ்வளவு கவலைப்பட்டாற்போலிருப்பதற்கு என்ன காரணம் இருக்கிறது? என்னைச் சுற்றிப் பார்க்கிறேன். எங்கும் அமைதியைத் தவிர வேறொன்றும் தெரியவில்லை. அடையாறில் ஒரு மூலையில் எங்கள் வீடு. நாற்புறங்களும் மதிற் சுவர்கள். தோட்டத்தின் நடுவில் வீடு. வாசற்புறத்து அறைப்பக்கமாய் ஒரு மாதுளை மரம். முத்தமிட்டுச் சிவந்த உதடுகள் போலப் பழங்கள் செவசெவ என்று அடுக்கடுக்காய்த் தொங்குகின்றன. மரத்தடியில் ஒரு கல்மேடை எங்கள் தோட்டத்தில் எவ்வளவோ பூச்செடிகள் வைத்தும் மாலை வேளைகளிலோ, சில சமயம் காலை வேளைகளிலோ எதிர் பாராத சமயத்தில் மனத்தைத் திகைக்க அடிக்கும் ஒரு மனம் எங்கிருந்தோ காற்றில் மிதந்து வரும். தோட்டக்காரனைக் கேட்டால் சற்று நேரம் யோசித்துவிட்டுப் பக்கத்துக் காம்பவுண் டில் இருந்து வருகிறது என்பான். ஆனால் பக்கத்துக் காம்பவுண்டில் விசாரித்ததில், அம்மாதிரியான செடியோ, மரமோ அங்கே ஒன்றும் கிடையாது.

வீட்டின் பின்புறத்தில் அடையாறு அழுக்கற்று அமைதியாய் ஒடுகிறது. நிலவில் அது பளிங்காய் மாறிவிடும். துரத்தில் சமுத்திரத்தின் ஒசை, இரைச்சலற்று, இதமான பேச்சைப்போல் இழைகிறது.

வீட்டுள் என் அறையில் அலமாரிகளில், மனத்திற்கும், சமயத்திற்கும் ஏற்ற புத்தகங்கள் நிறைந்து சுவர்களை மறைக்கின்றன. சோபாவும், மெத்தை நாற்காலிகளும் மலிந்து கிடக்கின்றன. தரையை ஜமக்காளமும், புலித்தோலும், மான்தோலும் போர்த்துகின்றன. இவ்விடத்தில் விசனத்திற்கும் குருட்டு யோசனைகளுக்கும் எங்கே இடம்? .

“பூர்வா, பூர்வா!”

கேட்ட கேள்விக்கு பதில் வராது. என் கூப்பாட்டுக்கு அவளது அர்த்தமற்ற, அல்லது அர்த்தம் நிறைந்த, அல்லது அர்த்தம் புரியாத, ஆனால் கவர்ச்சி மிகுந்த புன்னகைதான் பதில்.

நான் இன்னமும் யோசிக்கிறேன்; நான் அவளை மணந்தேனா, அவள் புன்னகையை மணந்தேனா? முதன் முதலில் நான் அவளைச் சிந்திக்கையில்—

என் விவகாரங்களையொட்டி அவள் பெற்றோர்கள் வசித்து வந்த கிராமத்திற்கு நான் போகும்படியிருந்தது. முன்பின் எங்கே என்ன என்று அநுபவமோ, பார்த்தோ இருந் திருந்தால்தானே? கிணற்றடியில் குடத்தை மடியில் வைத்துக் கொண்டு முழங்கையை மடியில் ஊன்றிக்கொண்டு மோவாய்க் கட்டையைக் கையில் தாங்கிய வண்ணம் தரையில் தட்டுத் தடுமாறி ஊறிச் செல்லும் வண்ணாத்திப்பூச்சியைப் பார்த்துக் கொண்டு பொருள் புரியாப் புன்னகையுடன் உட்கார்ந் திருந்தாள். எனக்கு நல்ல தாகம். நான் வாய் திறந்து கேட்கு முன்னர் வீட்டுள்ளிருந்து, “பூர்வா! பூர்வா! என்ன பண்ணிண்டிருக்கே?” என்று ஒரு அசதியான குரல் வந்தது. குடத்தில் ஜலத்தை மொள்ளாமலே அந்தப் பெண் வீட்டினுள் சென்றாள்.

அந்த கிராமத்தில் நான் ஒரு வாரம் தங்கும்படி நேர்ந்தது. அவ்வூரிலேயே அவர்கள் வீடு ஒன்றுதான் பிராமணர் வீடு. ஆகையால், எனக்குத் தங்குவதற்கும் அங்குதான் ஏற்பாடாயிற்று.

அவர் தகப்பனார் பெரிய சம்சாரி, ஏழெட்டுக் குழந் தைகள். பெரிதும் சின்னதும்- அதில் ஐந்து பெண்கள். ஏழை, என்னதான் பண்ணுவார்! பாவம். ஊருக்கு மணியம் அவருடையது என்றாலும், வருவாய் மிகவும் சொல்பமே. க்ஷாமம் பிடித்த ஊர். சதா வீட்டில் இரைச்சல் குழந்தைகள் சண்டை போட்டுக்கொண்டே யிருக்கும்; சின்னவர் பெரியவர் என்னும் தராதரம் இருக்காது. வீட்டுக்கு வேற்று மனிதன் வந்திருக்கிறானே என்கிற லஜ்ஜையைக்கூடப் பொருட்படுத்தாமல் ஒன்றுடன் ஒன்று அடித்துப் புடைத்துக் கொள்ளும் “அப்பா இதைப் பாரேன். அம்மா இதைப் பாரேன்!” அவர் ஒரொரு சமயம் தலையைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு திண்ணையில் உட்கார்ந்துவிடுவார். “இந்தச் சனியன்களை யெல்லாம் எங்கேயாவது தொலைத்துவிட்டு அக்கடா என்று ஒரு நாளைக்கு இருக்க மாட்டேனா?” என்று வாய்விட்டே கத்துவார். இந்தப் புயலின் இடையில் பூர்வா கொஞ்சமும் பதட்டமற்று அவளுடைய அதிசயப் புன்னகையுடன் வளைய வருவது எனக்கு ஆச்சரியமாய் இருந்தது.

எதிரே உடன்பிறந்தவர்கள் ஒருத்தரை ஒருத்தர் கொலை பண்ணிக் கொண்டிருப்பார்கள். அவள் விலக்கவும் மாட்டாள், சேரவும் மாட்டாள். அவள் மனசைப் பொறுத்தமட்டில் அங்கேயே இருக்கவும் மாட்டாள் என்று நினைக்கிறேன். எதிரே ஆழ்ந்த யோசனையுடன், அமைதியாய் மோவாய்க் கட்டையைக் கைகளில் ஊன்றிக்கொண்டு உட்கார்ந்து கொண்டிருப்பாள். அவள் என்ன கனவு காண்கிறாள்?

அவள் கனவு காண்பதும், காணும் நிலையும், அவள் புன்னகையும் அவளுக்கு மிகவும் பொருத்தமாய் இருந்தன. அப்பொருத்தம் என் மனத்தைக் கவர்ந்தது; நான் அச்சமயம் தன்னந்தனி; தனிக்காட்டு ராஜா. மெதுவாய் ஒரு பொது ஆள் மூலமாய் வார்த்தையை விட்டேன். அவர் பாவம், பிரமித்துப் போனார்! “அந்தப் பையனுக்குத் தெரியுமா, அந்தஸ்தில் நம்மிருவருக்கும் மலைக்கும் மடுவுக்கும் இருக்கிற வித்தியாசம்? நான் அன்னக் காவடி, கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டுமானாலும் சகலமும் அவனேதான் ஏற்பாடு பண்ணிக்கொள்ள வேண்டும். என்னிடத்தில் ஒரு சல்லிக்காசுகூடக் கிடையாதே” என்றார்.

“எல்லாம் தெரியும் சுவாமி! உமக்கு ஏன் அந்தக் கவலை! உம்மைத் தேடிக்கொண்டு அதிருஷ்டம் வந்தாலும் கண்ணை ஏன் இப்படிக் கெட்டியாய் மூடிக்கொள்கிறீர்கள்?” அவரும் அவர் மனைவியும் நன்றி தாங்காமலே கண்ணீர் உகுத்தனர் என்று கேள்வி. ஐந்தில் ஒரு பெண் என்றாலும், ஒரு கனம் குறைந்தது என்றுதான் அவர்கள் நிலையில் அவர்கள் சந்தோஷப்பட முடியும்.

மாதமும் தை. அந்த வாரத்திலேயே ஒரு முகூர்த்தமும் நேர்ந்தது. மணம் நிறைவேறிய சுருக்கு எனக்கே இப்பொழுது ஆச்சரியமாய் இருக்கிறது. இரண்டாம் நாளிரவு வண்டி யேறினோம். முதல் வகுப்பு வண்டியில் நானும் அவளும்தான். வண்டி இருளைக் கிழித்துக்கொண்டு வெகு வேகமாய்ச் சென்றது.

‘பூர்வா’ என்று கையைப் பிடித்தேன். ஜன்னலிலிருந்து அவள் முகம் என் பக்கம் திரும்பிற்று. என்ன ஜாஜ்வல்யமான புன்னகை மோவாய் குழிந்தது. இத்தனிமையில், இந்த நெருக்கத்தில், இம்மங்கிய வெளிச்சத்தில், அவள் முகத்தின் கவர்ச்சி பன்மடங்கு அதிகமாய் எனக்குப் பட்டது.

‘மணம் புரிந்துகொண்டபின் மனிதன் நிலை என்ன வாகிறது?’ என்று இன்னும் என்னைக் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன். எப்படியிருந்தாலும், அதற்கு முன்னால் இருந்தாற் போல் அவன் இருப்பதில்லை. கால்கட்டு, பொறுப்பு என்பதைப் பற்றி நான் இப்பொழுது பேசவில்லை; அவன் மனநிலை. எப்படியோ அவன் முழுமை அவனிடமிருந்து கழன்றுவிடுகிறது. அவன் இரு கூறாய்விடுகிறான். ஒரு பாதியை மனைவி பெற்று விடுகிறாள். அவனிடமிருந்து போனது, போனதுதான். அதை அவன் திரும்பிப் பெறும் முயற்சியில் தவிக்கும் தவிப்புத்தான் தாம்பத்திய வாழ்க்கையோ? ஆயினும் அதே மாதிரி தன் பாதியை மனைவி அவனிடம் கொடுக்கிறாளோ? அவனிடமிருந்து அடைந்த பாதியே அவளுடைய கோட்டை ஆண்களைவிட ஏமாந்த பிராணி இவ்வுலகில் எதுவுமே இல்லை!

அவள் அமைதி முதல் கொஞ்ச நாட்களுக்கு அதன் புதுமையால் ஒரு கவர்ச்சியாயிருந்தது. வெய்யிற் காயும் பூனைக் குட்டிபோல் அவள் சோபாவில் சுருண்டு படுத்துக்கொண்டு புன்னகை புரிந்துகொண்டிருப்பாள். மடியில் ஒரு புத்தகம் கவிழ்த்துப் போட்டிருக்கும். அவள் அதைப் படித்துக் கொண் டிருந்தாளோ? அல்லது பகற் கனவு கண்டு கொண்டிருந் தாளோ? என்னதான் கனவு கண்டு கொண்டிருப்பாளோ?

அவளுடன் பேசுவதற்கு என்ன இருக்கிறது? மொத்தத்தில் அவள் வீட்டைப்பற்றிப் பேசுவதில் அவளுக்கு விருப்பமில்லை என்று அறிந்தேன். இளமையிலேயே வறுமை பிடுங்கித் தின்னும் வாழ்க்கையைப் பற்றிப் பிரியமாய் என்ன பேச முடியும்? ஒரு தடவை, ஆகாரமில்லாத பலவீனத்தில் கிணற்றடி யில் மயக்கம் போட்டு விழுந்துவிட்டாளாம். மண்டையில் நல்ல அடி தரித்திரத்தின் கொடுமையால் ஏற்படும் மனக்கசப்புடன் பொறுமையும் பிரியமும் அற்ற அக்கஷ்டத்தைப் பற்றி விஸ்தரிக்க அவளுக்கு இஷ்டமில்லை.

“ஆயினும் எல்லாம் நிறைந்திருக்கும் இவ்விடத்தில் நீ ஏன் சந்தோஷமாய் இருக்கக் கூடாது?”

அவள் உதடு நகை அரும்பு கட்டியது.

“நான் சந்தோஷமாய் இல்லை என்று நீங்கள் என்ன கண்டீர்கள்? சந்தோஷமாய் இருக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?”

அவளுடைய அமைதி, அமைதியல்லாது இயற்கையிலேயே அவளுக்குடைய பத்திர சுபாவம் என்று இப்பொழுது காண்கிறேன். –

அவள் பத்திரம் என் மனத்தின் நிம்மதியைக் குலைத்து எனக்கு விஸ்தரிக்கவொண்ணாத ஒரு மனச் சங்கடத்தை இயக்குகின்றது. எங்கள் சுபாவத்தின் மாறுபாட்டால், நாங்கள் அறியாமலே எங்களிருவரிடை எழும்பியிருக்கும் சுவரை நான் தகர்க்க முயன்றதில்லை. நான் அதில் முட்டிக் கொண்டதுதான் மிச்சம். நான் கலகல”வென்று ஒரு தோழியை வேண்டினேன்; கல்லை வேண்டவில்லை. ஆயினும் நான் அவள்மேல் வைத்து விட்ட பிரியத்திற்கு எல்லையில்லை. அப்பிரியத்தில் என் முழுமையை நான் இழந்துவிட்டேன். அவ்வெதும்பலிலேயே என் அகம் எரிந்தது. ஈடாக அவளுடைய அம்சத்தை நான் பெறாது என்னை நான் இழந்துகொண்டிருக்கும் சங்கடம் எனக்குத் தாங்க முடியவில்லை. இயற்கையாகவே என் உடலிலும் மனசிலும் என்னையும் மீறித் துடிக்கும் உத்வேகம் செலாவணியாவதற்கு இவள் என் வாழ்க்கையில் புகுமுன்னர் எத்தனையோ வழிகள் இருந்தன.

இப்பொழுதோ?

“ஹே, பூர்வா! உன் உடலில் ஒடுவது ரத்தமா அல்லது பானையிலிட்டுக் குளிர வைத்த பச்சை ஜலமா?”

திகைப்பில் அவள் விழிகள் மிரளுகையில் அவளுக்கு எப்படி அவ்வளவு அழகு கொடுக்கிறது?

“நீங்கள் சொல்லுவது எனக்குப் புரியவில்லையே”

“வாஸ்தவம், நான் என்ன உளறுகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை.”

பாலையில் கானலைக் கண்டு தவிப்பவன்போல் இருக்கிறது என் மனநிலை.

ஒரு தடவை சமையலறையில் மாடப் புரையில் எதையோ தேடுகையில் அவளைத் தேள் கொட்டிவிட்டது. வலியினால் வாய்விட்டுக் கத்தமாட்டாளா! கொட்டிய இடத்தைக் கெட்டியாய் அழுத்திப் பிடித்துக்கொண்டு சுவரில் சாய்ந்த வண்ணம் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். நெறி தோளைக் குடைகிறது. நெற்றியில் வியர்வை முத்து முத்தாய் அரும்புகிறது. துடிக்கும் வலியில் புருவங்கள் நெரிகின்றன. ஆயினும் வாயினின்று, “அம்மாடி பொறுக்க முடியவில்லையே!” என்ற ஒரு அரற்றல்கூடக் கிளம்ப மாட்டே-னென்கிறது. அவளை நான் என் தோளில் சாய்த்துக்கொள்கிறேனென்றாலும் என் ஆறுதலுக்குச் சாய்த்துக்கொள்கிறாளேயொழிய, அவள் வேதனைக்குத் தணிப்பாய் இருப்பதாகத் தெரியவில்லை. அவளுக்காக நான் தவிப்பது என் தவிப்பே அவள் தவிப்பில் ஒரு பங்கு அல்ல. அவள்தான் எனக்குத் தன்னில் பங்கு தரமாட்டேனென்கிறாளே! இவள் மனித ஜன்மந்தானா, அல்லது மிருகமா!” என்றுகூட நான் வியப்புறுகிறேன். வேதனையை அவ்வளவு மெளனமாய் அவைகள்தாம் சகித்துக் கொள்ளும்.

* * *

ஆயினும் அவள் இப்பொழுது நெற்றியில் கூந்தலின் இரு பிரியும், மார்பின் மேல் மேலாக்கும் மாலைக் காற்றில் மெதுவாய் அசைய, மூடிய கண்களுடன் சாய்வு நாற்காலியில் சாய்ந்துகொண்டிருக்கும் நிலையை நான் கவனிக்கையில், என்னையும் மீறி என் மனம் பரிதவிக்கிறது.

பாவம், தன்னுடன் போகாது என் வித்தையும் தாங்கு கிறாள். ஏற்கெனவே சற்று நலிந்த உடல் இன்னும் நாளாக ஆக என்னவோ! என் மனத்தை அலசிப் பார்த்துக் கொள்கிறேன். நான் இன்னமும் சில நாட்களுக்குள் தந்தை யாவதைப் பற்றி எனது மனத்தில் சந்தோஷமா? பெருமிதமா? ஒரு தினுசில் சிறு அசடு தட்டுகிறது- ஏதோ ஏமாந்துபோன மாதிரி; ஆனால் மனத்தில் ஒரு நிம்மதியும் படுகிறது. அக்குழந்தையின் மூலம் அவளிடம் நான் எனது அம்சத்தில் ஒரு பங்காவது பெற்றுவிடுவேன் என்றே நினைக்கிறேன். பிறப்பது பெண்ணாய்ப் பிறந்தால் தேவலை, தன் தாயைவிட என்னிடம் இன்னும் கொஞ்சம் பட்சம் காட்டாதா?

திடீரென்று அவள் குரல் என் சிந்தனையைக் கலைத்தது. “அந்த வலையன் கூடைக்குள் மீன் ரெண்டு இருந்ததா, மூணு இருந்ததா?”

“இரண்டுதான் என்று நினைக்கிறேன். இப்பொழுதென்ன அதைப்பற்றி?”

“அந்தக் குடலைக்குள் அந்த ஜோடி எப்படித் தவித்தது பார்த்தேளா? எனக்குப் பார்க்கவே சகிக்கவில்லை.”

“அதெல்லாம் பற்றி நினைத்துச் சங்கடப்பட்டுக்கொண்டிருக்காதே. மனசில் அதெல்லாம்-”

“-அதோ பாருங்கள்” என்று மறுபடியும் அவள் குரல் குறுக்கே வெட்டிற்று. திகிலின் அதிர்ச்சி கண்ட குரல். எனக்கே புதிதாய் இருந்தது. ஆகாயத்தைச் சுட்டிக் காண்பித்துக் கொண்டிருந்தாள். ஆகாயத்திலிருந்து இரண்டு நட்சத்திரங்கள் விழுந்துகொண்டிருந்தன. நிலையினின்று கழன்று சத்தமற்று சீறிக்கொண்டே இறங்குகையில் அந்தரத்தில் ஒன்று கலந்து ஒரே நட்சத்திரமாய் உதிர்ந்தன. வீட்டுக்குப் பின்புறம் அடையாற்றில் விழுந்திருக்கும்.

அவள் கையை மெதுவாய்ப் பிடித்தேன். அதில் ஒரு சிறு நடுக்கம் இருந்ததோ! பச்சை மரத்தைப் பார்த்தாயோ?” என்றேன் காதண்டை, மெதுவாய், கேலியாய், மனசுக்குத் தைரியமூட்டும் பாவனையாய். அவள் பெருமூச்செறிந்தாள். என்ன விசனமோ அறியேன்.

* * *

ஆவணி—புரட்டாசி–ஐப்பசி…

வெளியில் நல்ல மழை பெய்கிறது. அடையாறு என் வீட்டுக்குப் பின்சுவர் வரையில்கூட எட்டிவிட்டது என்று நினைக்கிறேன். வானத்தினின்று குடம் குடமாய் ஊற்றுகிறது. பகலிலேயே விளக்கைப் போட்டுக் கொள்ளும்படியான இருள் கவிந்தது.

பூர்வா.

என் எதிரில் சோபாவில் சாய்ந்துகொண்டிருக்கிறாள். அவள் அவயவங்கள் உருண்டு திரள ஆரம்பித்துவிட்டன. உடலிலும் முகத்திலும் ஒரு தனி அழகு பொலிகிறது. மேனியில் ஒரு பளபளப்பு. அவளுடைய புரியாப் புன்னகையில் முன்னிலும் பன்மடங்கு மயக்கு. பேச்சில்- எங்கே அவள் முந்தியளவுகூட இப்பொழுது பேசுவதில்லை! தன்னுள் தானே மூழ்கிக் கிடக்கிறாள்.

“பூர்வா கலகலவென்று இரேன். குருட்டு யோசனை பண்ணிக்கொண்டிருக்காதே. பொம்மனாட்டிகள் கர்ப்ப காலத்தில் சந்துஷ்டியாய் இருந்தால் சந்ததியும் நன்றாய் இருக்கும். சுறுசுறுப்பாய் இருக்க வேண்டும்.”- நான் சொல்வதெல்லாம் அவள் காதில் விழுந்தால்தானே!

“பூர்வா, பூர்வஜன்மத்தில் நீ என்னவாய் இருந்திருப்பாய் என்று யோசித்துக் கொண்டிருக்கிறாயா? அவள் கண்களில் முதன்முதலாய் ஒரு குறுகுறுப்பும் விந்தையும் தட்டின.

“ஏன் உங்களுக்கு அப்படித் தோன்றுகிறது?”

என்னை உறுத்திய எரிச்சல் திடீரென்று தணிந்தது. அதற்குப் பதில் மனசில் ஒரு சிறு விசனம் புகுந்தது. “ஆம், மிருகங்களுக்குப் பூர்வ ஜன்ம வாசனையிருக்குமாம். அதனால் தான் அவைகள் ஆகாரம் தின்னாத வேளையில் தம்முள்தாமே ஆழ்ந்திருக்கின்றன. ‘ஐயோ, அந்த ஜன்மத்தில் அப்படியிருந் தோமே, இப்பொழுது இப்படியிருக்கிறோமே’ என்பது அவைகளின் சிந்தனை போலும்! நீ அநேகமாய் அப்படித்தான் இருக்கிறாய்.”

“உம்?” என்று சிரித்துக்கொண்டே எழுந்து உட்கார்ந்தாள். அவளுக்குப் பேசப் பிடித்தமான விஷயம் ஏதோ கண்டுபிடித்து விட்டேனென்று தோன்றிற்று. அதில் ஒரு சந்தோஷம். அவளை சுவாரஸ்யப்படுத்தும் விஷயம் ஏதோ ஒன்றேனும் என்னிடம் இருப்பதில் எனக்கு ஒரு சந்தோஷம். மனிதனின் சபலத்தை என்னென்று சொல்வது?

ஜன்னல் கண்ணாடியில் மழைத்தாரை வழிந்தது. அதற்கப்பால் மாரியிருளின் மங்கலில் தோட்டத்தின் மாதுளை மரம், அந்தண்டை மதிற்கவர், அதற்குமப்பால் சற்று மேட்டு நிலத்தின் மேல் ஏறும் வண்டிப் பாதை அதற்குமப்பால் சவுக்கு மரங்கள், அவைகளின்மேல் மழை மேகங்கள் கவிழ்ந்த வானம், அதற்குமப்பால் தூக்கங் கலைந்து பசி கண்ட சிங்கத்தின் கர்ஜனைபோல் இடியின் குமுறல். இப்போதைக்கு வெக்கை யளிக்கும் தினுசாய்த் தோன்றவில்லை.

நான் ஏதோ என் மனத்தில் தோன்றியதைச் சொல்லிக் கொண்டே போனேன். “அவனவன் பூர்வ ஜன்ம வினைக்கேற்ற ஜன்மமெடுக்கிறான்; மறைகிறான். அநேகமாய் ஒருவனுடைய இந்த ஜன்ம குணாதிசயங்களைக் கொண்டே, அவன் பூர்வ ஜன்மத்தில் என்னவாய் இருந்திருப்பான் என்று சொல்லிவிடலாம் என்று நினைக்கிறேன்.”

“அப்படியானால் நான் என்னவாய் இருந்திருப்பேன் என்று உங்களுக்குத் தோன்றுகிறது?”

“நீ ஒரு கல்லாய் இருந்திருப்பாய் என்றுதான் எனக்குப் படுகிறது. யாராவது ஒரு மகான் இளைப்பாற உன் கல் ஜன்மத்தில் எப்பொழுதேனும் உட்கார்ந்திருக்கலாம்; அந்த ஸ்பரிச புண்ணியத்தினால் உனக்கு மானிட ஜன்மம் கிட்டி யிருக்கும். தெரியுமோயில்லையோ, அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது!”

எனது தர்க்க நுணுக்கத்தைக் கண்டு அவள் சிரித்தாள்.

” நீங்கள்? ”

“நானா? என் அப்பா.”

அவள் மிரள விழித்தாள்.

“புரியவில்லையா? நான் என் தாயின் கர்ப்பத்தில் இருக்கையிலே என் தகப்பனார் காலமாய்விட்டார். அது ஒரு அற்பாயுசு நிலை! ஆகையால் நான் பிறந்ததும் என் தந்தைதான் மறுபடியும் என் ரூபத்தில் ஜனித்திருப்பதாக என் தாயாருக்கு எல்லோரும் தேறுதல் சொன்னார்களாம். நானும் நடையுடை பாவனை எல்லாவற்றிலும் என் அப்பா மாதிரியே.”

நான் என் பேச்சை முடிக்கவில்லை; வயிற்றைக் கலக்கும் தினுசில் ஒரு பெரும் இடி வீட்டின் மேலேயே விழுந்ததுபோல் மளமளவென நொறுங்கியது. “பூர்வா!” ஒரு தாவுத் தாவி அவளை அனைத்தேன். அவள் பயந்துகொள்ளாமல் இருக்க வேண்டுமே! கர்ப்பிணி. அதையொட்டினாற் போலேயே, அதனினும் பெரிய இன்னொரு இடி. பளிரென்று சாட்டை போல் ஒரு மின்னல் யுகத்தையொத்த ஒரு கணநேரம், நாங்கள் இருந்த அறை அதன் வெளிச்சத்தில் ஜ்வலித்து மறுபடியும் முன்னிலும் இருண்டது. அவள் உடல் வெடவெட வென்று உதறிற்று. அவளை நான் தட்டிக் கொடுத்தபோதிலும் என் தைரியம் அப்பொழுது சூன்யம்தான்.

“இடித்தது ஒண்ணா? ரெண்டா?” என்றாள்.

“எப்படியிருந்தால் என்ன?”

“சும்மா கேட்டேன்.”

# # #

கார்த்திகை

“பூர்வா, நாளாகிறது. உன் வீட்டு மனுஷாள் யாரையாவது வரவழைக்கட்டுமா? அல்லது உனக்கு உன் பிறந்தகம் போக வேண்டுமென்றிருக்கிறதா?”

“வேண்டவே வேண்டாம்!” அவள் மறுப்பில் ஒலித்த தீர்மானமும், கோபமும், பயமும் எனக்கு ஆச்சரியமாய் இருந்தன. ஆகையால் அத்துடன் அப்பேச்சையும் விடும்படி யாய்விட்டது. ஆயினும் அவளிடம் ஒரு சிறு மாறுதலை நான் இப்பொழுது கண்டேன். அவள் மெளனம் வெறும் மெளனமாய் இப்பொழுது இல்லை. அர்த்தமும் காரியமும் நிறைந்த மெளனம். இரண்டுபேர் ஒர் அறையில் ரகசியம் பேசிக்கொண்டிருந்தால், அதைச் சுவரில் காதை வைத்துக் கொண்டு வெளிப்புறமாக ஒட்டுக் கேட்பவனின் மெளனம்; நாடி பிடித்துப் பார்க்கும் வைத்தியனின் மெளனம். அவள் எதை அப்படி ஒட்டுக் கேட்கிறாள்? பூமாதேவிக்கு நாடி பிடித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறாளா? இவள் கவலைகளைப் பட்டுப் பட்டு எனக்கு மண்டைகூட நரைத்துவிடும் போல் இருக்கிறது.

ஒருநாள் நான்பாட்டுக்கு மெளனமாய் எதையோ படித்துக் கொண்டிருந்தேன். அவள் வழக்கம்போல் எதிரில் உட்கார்ந்து கொண்டிருந்தாள், பெரிதாய்க்கொண்டே வரும் வயிற்றின் மேல் கையை வைத்துக்கொண்டு.

“கொஞ்சம் சும்மாயிருங்கள்-”

நான் விழித்தேன். “நான் சும்மாதானே இருக்கிறேன்.”

“உங்களுக்கு ஒன்றும் கேட்கவில்லையா?”

எனக்கு ஒன்றும் புரியவில்லை. சுற்றுமுற்றும் பார்த்தேன். “எலியா, பெருச்சாளியா? ஒன்றும் தெரியவில்லையே.”

“என் வயிற்றுக்குள் குசுகுசு வென்று யாரோ பேசும் குரல் எனக்குக் கேட்கிறது.”

“சீ அசடே”

“அசடுமில்லை; சமர்த்துமில்லை. நிஜமாய்த்தான்.”

“என்ன பேசுகிறது? அம்மா பலூன் வாங்கிக் கொடேன்” என்று குழந்தை இப்பவே கேட்கிறதா?”

“உங்களுக்கு எப்பவும் விளையாட்டுத்தானா?”

முதன்முதலில் என் மனத்தில் சிறு அச்சம் கண்டது. அவள் அருகில் சென்று தோள்மேல் கையைப் போட்டுக்கொண்டேன். “பூர்வா, இன்றைக்குச் சினிமாவுக்குப் போவோம். சார்லி சாப்ளின் படம். அவனைப் புரிந்துகொள்ள பாஷை தெரிய வேண்டியதில்லை.”

“பேச்சை மாத்தாதீர்கள்ன்னா….”

எனக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை.

இந்தப் பாழும் மழை ஒயாதா! இன்னமும் இம்சையாய் ‘பிசுபிசு’வென்று துறிக்கொண்டுதாணிருக்கிறது. இதனாலேயே அர்த்தமற்ற கிலேசம் ஒன்று வண்டல்போல் மனத்தில் இறங்கி உறுத்துகிறது.

அன்றிரவு படுக்கையில் முனகினாள்.

“என்ன பண்ணுகிறது பூர்வா?”

“வயிற்றைக் குமட்டுகிறது. சங்கடமாய் இருக்கிறது. வாந்தி வரும் போலிருக்கிறது. இதோ வருகிறேன்.”

அவளுக்கு மறுக்கும் சப்தம் வெந்நீருள்ளிருந்து கேட்கிறது.

என் பிரிவுத்தனத்தால் அவளுக்கு என்ன பிரயோஜனம்? நானும் தவிக்கிறேன். அவளும் தவிக்கிறாள். இந்நிலையில் நானும் தனியன், அவளும் தனியள்தான்; அவள் படும் கஷ்டத்தை நான் வாங்கிக்கொள்ள முடிகிறதா? அவளால் தான் கொடுக்க முடிகிறதா? இப்படியேதான் சந்ததி உண்டாகிறது; மடிகிறது. பார்க்கப் போனால் யாரால் யாருக்கு என்ன பயன்?

# # #

மார்கழி

இரவு, தூக்கம் அவளுக்கும் கெட்டுவிட்டது; எனக்கும் கெட்டுவிட்டது. ஒரு பெரும் அசதிதான் கண்ட மிச்சம். டாக்டரைக் கூப்பிட்டுக் காண்பித்ததில் ஒன்றும் கோளாறாய்த் தெரியவில்லை. அவளுக்கு வயிற்றில் இம்சை அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. ஏழு மாதங்களிலேயே வயிறு நிறைந்து இறங்கிவிட்டது. அடிக்கடி ஒரு பெருமூச்சு. ஒரு இறைப்பு. ஒரு உயிர் இன்னொரு உயிரைத் தாங்கிக் கொண்டிருப்பதென்றால் இலேசாய் இருக்கிறதா?

“என் வயிற்றில் நான் எப்பொழுதும் ஒரு குரலக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். ஒரே குரலாய் இல்லை. வெவ்வேறு குரலாய் இருக்கிறது. சுவாமி எந்த ஜன்மாவை என் வயிற்றுக்குள் வைக்கலாம் என்று இன்னும் ஒவ்வொன்றாய் வைத்து வைத்துப் பார்த்து எடுக்கிறாரா? எந்தக் கணக்கில் வைப்பார்? என் வயிறு எவ்வளவு கொள்ளுமோ அந்தக் கணக்கில்லையா?”

“அடி பைத்தியமே! அன்னிக்கு என்னவோ சொன்னேன்; அதை வைத்துக்கொண்டு யோசனை பண்ணிக்கொண்டிருக்கிறாயா?”

“ஏன் பண்ணக்கூடாது? என் அவஸ்தையிலும் எனக்கு அப்படித்தானே படுகிறது! என் வயிற்றுக்குள்ளேயே ஏதோ சச்சரவும், மனஸ்தாபமும் நடந்துகொண்டிருக்கிறது. யாருக்கும் யாருக்கும் என்று தெரியவில்லை. சுவாமிக்கும், ஜன்மத் துக்குமா?-”

இவள் பேசுவது வேதாந்தமா? விபரீதமா? பூர்வா, இதெல்லாம் மனப்பிராந்தி. இதற்கெல்லாம் இடம் கொடாதே. நாளைக்கு போகிப் பண்டிகை. பழையன கழியும்; பொங்கலோடு புதியன பிறக்கும். இனி, தை மாதம், நாட்களெல்லாம் குஷியாய் இருக்கும். பொங்கல் கழியட்டும்; நாம் இருவரும் குற்றாலம் போவோம். நீர்வீழ்ச்சியை நீ பார்த்ததில்லையே? எண்ணெய் தேய்த்துக்கொண்டு அதனடியில் நின்றுவிட்டால் போதும், சீயக்காய் தேய்த்துக் கொள்ள வேண்டியதில்லை. அவ்வளவு ஜோராய், ‘கொட கொட’வென்று கொட்டும். மாலையும் காலையும் அங்கு ரொம்பவும் அழகாய் இருக்கும்…”

நான் இதையெல்லாம் யாருக்குச் சொல்லிக் கொண்டிருக் கிறேன்? எனக்கா?

# # #

தை

திடீரென்று அவள் படுத்திருந்த கட்டிலிலிருந்து அவள் குரல் கிளம்பிற்று. நான் துள்ளியெழுந்தேன்.

“வேளை வந்துவிட்டதென்று நினைக்கிறேன். இடுப்பை அப்படி வலிக்கிறது.”

அவள் குரல் கூடியவரையில் அமைதியாய் இருந்த போதிலும் எவ்வளவு தூரம் அவள் அடக்கிக்கொண்டிருக்கிறாள் என்று அதன் அமைதியிலும் ஒருவாறு புரிந்தது. புரிந்த அளவுகூட மனம் சகிக்க முடியவில்லை. காரை ஷெட்டிலிருந்து எடுப்பதற்கு, இதுவரையில் எனக்கு ஆகும் நேரத்தில் பாதி நேரம்தான் ஆகியிருக்கலாம். ஆயினும் இவ்வளவு நேரமாய் எனக்கு எப்பொழுதும் பட்டதில்லை.

வண்டியை முழுவேகத்தில்தான் ஒட்டுகிறேன். ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்கும் மூன்று மைல்தான். ஆயினும், இந்த மூன்று மைல் தூரத்திற்கு முழுவேகத்தில் இப்பொழுதாகும் நேரத்தைவிட, இன்னமும் சுருக்கில், இதைவிடக் குறைந்த வேகத்தில், முந்நூறு மைல் துரத்தை நான் கடந்திருக்கிறேன்.

அவள் என் பக்கத்தில்தான் உட்கார்ந்திருக்கிறாள். என்மேல் சாய்ந்துகொண்டிருக்கிறாள். சத்தம் வெளிப்படாத வண்ணம் கீழுதட்டை அவள் பற்கள் இறுகக் கடித்து அழுத்திக்கொண்டிருக்கின்றன. அவள் சரீரம் எவ்வளவு மிருதுவாய் இருக்கிறது. என் வண்டி பறக்கிறது. வண்டியின் பின் அதன் தோகை போலும் ஒரு புழுதி மேகம் அதைத் துரத்துகிறது. இந்நள்ளிரவில் நடுநிலவில் அடையாறு ஒரே வெள்ளித் தகடாய்ப் பிரகாசிக்கிறது. இந்தக் கஷ்டத்திலும் மனத்தில் இவ்வழகு பதியாமலில்லை.

நாளைக்குக் குற்றாலம் போவதாய் இருந்தோம். இப்பொழுது குற்றாலம் எவ்வளவோ தூரம் எட்டப் போய் விட்டது. குத்தாலமும் வேண்டாம்; எத்தாலமும் வேண்டாம்; வயிற்றை விட்டுக் கனம் கழிந்தால் சரி.

“என் வயிற்றில் ஏதோ பெரிய யுத்தம் நடந்துகொண்டிருக்கிறது. என் அப்பாவும் அம்மாவும் சண்டை போடுகிற மாதிரி.”

வலியின் ஜன்னியில் இப்படிப் பிதற்றுகிறாளா?

அப்பாடா! இதோ ஆஸ்பத்திரி வந்துவிட்டது.

அவளை அழைத்துக்கொண்டு உள்ளே போனார்கள். சற்று நேரத்துக்கெல்லாம் நர்ஸ் ஒருத்தி அவள் புடைவையைச் சுருட்டிக்கொண்டு வந்து காரின் பின்வnட்டில் எறிந்தாள்.

டாக்டர் என்னைப் பார்த்துப் புன்முறுவல் பூத்தார். “இப்பொழுதுதான் முதல் தடவையோ?” . .

பரபரக்க வாசலில் உலாவினேன். இவர்களுக்கெல்லாம் கேலியாகத்தானிருக்கும். இப்பொழுது என் தவிப்பு அதிகமா? அவள் தவிப்பு அதிகமா? –

திடீரென்று அவளுடைய வீறல் நிசப்தத்தை வெட்டியது. என் வயிற்றைச் சுருட்டியது. வலி கடைசியில் அவளை வெற்றி கொண்டுவிட்டது. இன்னொரு வீறல். இன்னும் ஒன்று. ஒவ்வொரு வீறலுக்கும் என் இதயம் பாளம் பாளமாக வெடிப்பதை நானே உணர்கிறேன். ஆயினும் வலி அவளைக் கடைசியில் வெற்றி கொண்டதைப் பற்றி எனக்கு உள்ளுறக் கவலை கழிந்தாற்போலவே தோன்றுகிறது. பூர்வாவும் என்மாதிரி, சாதாரணப் பிறவிதான். அவளுக்கும் வலி, உணர்ச்சி எல்லாம் உண்டு. இனி என்மாதிரி அவளும் ஆகி விடுவாள். இன்னும் கொஞ்ச நேரத்தில் குழந்தை பிறந்ததும் எங்களிருவருக்கும் சந்தோஷம்தான்.

நர்ஸ் வெளியே ஓடிவந்தாள். “டாக்டர்-டாக்டர் டாக்டர் பரக்கப் பரக்க உள்ளே ஒடுகிறார். என்னையுமறியாமல் என் உடல் அவரைப் பின்தொடர முயல்கிறது.

“ஸில்லி!” என்று என்னைப் பிடித்து அவர் வெளியே தள்ளுகிறார். முகத்தைக் கையில் பிடித்துக்கொண்டு வாசற்படியில் உட்காருகிறேன். காது கேட்கவொண்ணாத பேச்சுக்களும் கலவரமும் உள்ளே நடக்கின்றன. ஒரு வார்த்தை மாத்திரம் சம்மட்டி அடித்தாற்போல் உள்ளிருந்து வெளியே கேட்கிறது.

“ஹெமர்ரேஜ்!

அப்புறம் என்ன என்று எனக்கு நினைவில்லை. எனக்கு நினைவு வந்த சமயத்தில் டாக்டர் என்னைத் தோளைப் பிடித்துக் குலுக்கிக்கொண்டிருந்தார்.

“தைரியமாயிருங்கோ, ஸார்- நாங்கள் ஒன்றும் செய்வதற் கில்லை. ஹோப்லஸ் கேஸ், இரட்டைக் குழந்தை– ஆணும் பெண்ணுமாய் வயிற்றிலேயே செத்துப்போய் விட்டன. ஆயுதம் போட்டுப் பிரயோஜனமில்லை- -ஹோப்லஸ் கேஸ்-”

நான் ஒன்றும் பேசவில்லை. பேச என்ன இருக்கிறது? எனக்கு அழுகைகூட வரவில்லை. என் கண்கள் காரில் சுருட்டிப் போட்டிருக்கும் அவள் புடைவையை வெறிக்கப் பார்த்துக்கொண்டிருந்தன. வெங்காயக் கலர்ப் புடைவை; ஒரத்தில் சிவப்பு பார்டர்; அவள் கலியாணத்திற்கு வாங்கின புடைவை.

கீழ்த்திசை வெளுக்க ஆரம்பித்துவிட்டது.

பூர்வாவின் கதையும் முடிந்தது.

– ஜனனி (சிறுகதைத் தொகுதி), முதற்பதிப்பு ஜூன் 1992, திருநாவுக்கரசு தயாரிப்பு. நன்றி: https://www.projectmadurai.org

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *