அக்கா முதன் முறையாக ஊரை விட்டுப் போக இருந்தாள். கீழ் வானம், கூட இன்னும் வெளுக்கவில்லை, யாழ்ப்பானத்தை இருள் அப்பிக் கிடந்த காலம். யுத்த நெருப்பு மூண்டு, எரிகிற தணலில் உறவு கூட மிஞ்சாமல் போன பெருந் துயரத்தில் அக்கா தான் என் செய்வாள்?
தீபன் பொறியியல் படிப்பதற்காக, பேராதனைப் பல்கலைகழகம் போன, பிற்பாடு அக்காவும் அத்தானும் தனிமையில் வாழ்ந்தே சாகிறார்கள். இது பெரும் மரண அவஸ்தை, புலிகளின் சண்டைக்குப் பிறகு, நாதியற்றுப் போன ஒரு சமூகம், வேறு என்ன தான் செய்யும்? உறவை நிலை நாட்ட வீடு வாசல் எல்லாம் வெற்றுக் கனவு போலானது.
பெரியண்ணன் ஊரை விட்டு கொழும்புக்குப் போய் இன்னும் ஒரு மாதம் கூட ஆகவில்லை, அதற்குள் அக்காவுமா என்ற, கேள்வி வடத்தினுள் சிக்கி ராதாமிகவும் சோர்ந்து போயிருந்தாள். இவர்களுக்கு பிறகு நானும் வீட்டை விட்டுபோய் விடுவேனா என்ற கவலையில் அவள் வெகுவாகக் குழம்பிப் போயிந்தாள். இந்தக் கவலையில் இப்படி அவள் சாகத் தொடங்கி அவள் கணக்கில் ஒரு புகம் போலாகிறது.
அக்காவுக்கு வேறு நிலை. அவளைப் பூப் போல பார்த்து ,வாழ வைக்க அத்தானின் அப்பழுக்கற்ற இருப்பு, பூரண அன்பு வழிபாட்டினை ஒற்றி நிகழ்ந்தேறுகிற மாசுபடாத ஒரு தெய்வீக நிலை. ஆனால் ராதா மறு துருவம் முரணபாட்டுச் சிக்கலே வாழ்க்கையாகிப் போனது. இந்த வாழ்க்கைக்கு முகம் கொடுத்து, தினமும் தீக்குளித்தே சாகிற, அவளை இனி கடவுளே வந்தாலும் காப்பாற்ற, முடியாது.
அக்காவும் அத்தானும் வீட்டை காலி பண்ணி விட்டு இதோ புறப்படப் போகிறார்கள். முன்பு மாதிரி ரயில் பயணமல்ல, அது தான் கண் முன்னால், தகர்க்கப்ப்ட்டு தண்டவாளமே சிதிலமாகிப் போன நிலையில் இனி ரயிலை கனவில் தான் பார்க்க முடியும். இது யார் இட்ட சாபம்? தமிழே தோலுரிந்து கிடக்கிற மாதிரி ஒரு கொடுமை. இதற்கு நெருப்பு வைக்க, மாற்றான் எதற்கு? பேராசைப்பட்டால், இது தான் நடக்கும். அதிகபட்ச பேராசை வந்தால், எல்லாமே தடம் புரண்டு போகும் அது தான் நடக்கிறது இங்கே.
கொழும்பு போவதற்காக, அத்தானும் அக்காவும் முதன் முதலாக ரிக்க்ஷா, ஏறினதே ஒரு தனிக் கதை வாதம் வந்து முழங்கால் முட்டி வீங்கி இருக்க, அக்காவுக்கு நடக்கிறதே பெரும்பாடு. இந்த நிலையில் போக்குவரத்தெல்லாம் சீர் குலைந்து இருக்கும் வேளையில் அக்காவுக்கு கொழும்பு போக வேண்டிய தேவை ஏன் வந்தது? எல்லை மீறிய, பிள்ளை பாசத்தால் வந்த வினை, தீபனோடு சேர்ந்து இருக்க வேண்டுமென்ற, பிடிவாதம் காரணமாகவே, அவள் இப்படி கழுவாய் சுமக்க நேர்ந்திருக்கிறது.
எப்படியோ யாழ்நகர் எல்லையைக் கடந்த பின் கிளாலி கடல் வழிப் பயணம் அதுவும் உயிரைப் பணயம் வைத்து தண்ணீரில் மூழ்காமல், ஆபத்தான, ஒரு கடற்பயணம் வள்ளத்திலிருந்து, கரையை நோக்கி குதித்து இறங்குவதே பெரும் சவால், உறவு வலை பின்னியே, உழலும் மனம், வேறு என்னதான் செய்யும்.
பெரியன்ணர் தான் முதலில் இந்தக் கொழும்புக் கனவை தொடக்கினார். அவருக்கும் அதீத பிள்ளைப் பாசம். பிள்ளைகள் இருவர் அவர்க்கு ஒரு பையனும் பெண்ணுமாய் அதிலேயே ஒடுங்கி விட்ட மனம். மகள் நன்றாகப் படித்து பெரிய டாக்டராக இருக்கிறாள். கொழும்பு போதனா வைத்தியசாலையில் அவளுக்கு வேலை. சிறுவர் நலம் பேணும் வைத்தியத் துறையில், அவளுக்கு பெரிய பதவி. பையனும் நல்ல வேளையில் தான் இருக்கிறான். போக்குவரத்து வசதிகள் குறைந்து போனதால், அவர்கள்கொழும்பை விட்டு ஊருக்கு வந்து வெகுகாலமாகிறது. அதனால் தான் அண்ணாவும் அக்காவுமாக, இப்படி வேர் கழன்று போகிறார்கள். எல்லாமே தடம் புரண்டு, கிக்குக்கு ஒருவராய் சிதறிப் போன பின் மண்ணை ஆழத் தோன்றினாலும் விருட்சமாக வளர்ந்து நின்ற, அடி வேர் அறுந்து கழன்றூ போன நிலையில் வேராவது மண்ணாவது.
இவர்களின் இந்த உயிர் விட்டுப் போன பயணத்தை நினைத்து ராதா தனக்குளே புலம்பி அழுது தீர்த்தாள். பெற்ற பிள்ளைகளை கட்டிக் காக்க, அதன் தனித்துவம் பேண மற்றவர் இருப்பெல்லாம் துரும்பு போலானாது இதில் நான் யார்? என் பிள்ளைகள் யார் என்ற கேள்வியே, அவளைக் கருவறுத்து விடும் போலிருந்தது. அக்காவிடமே இந்தக் கேள்வியைக் கேட்டால், நன்றாக இருக்கும் போல், பட்டது ஆனால் இது கேள்வி,கேட்கிற நேரமில்லை எல்லாம் முடிந்து விட்டது. அவரவர் பாடு எல்லோருக்கும் சொந்த பந்த உறவைத் தவிரமற்ற உயிர்களெல்லாம் புறம் போக்கு நிலை. தான். ஊர் எப்படி தோலுரிந்து கிடந்தாலென்ன! அண்ணாவும் அக்காவும் வரிந்து கட்டிக் கொண்டே, கொழும்பு போனார்களே. இது வேறு எதைக் குறிக்கிறது. இந்தப் பிழைப்பு வேண்டாமே, என்று தோன்றியது ராதாவுக்கு.
மல்லிகை மணம் வேறு இது . ராதாவின் அப்பா அவளுக்கு அளித்த சொர்க்கம் . சொர்க்கமும் நரகமும் , மனம் சம நிலையில் இருந்தால், எல்லாம் ஒன்று தான்
நீண்ட நாட்களுக்குப் பிறகு மகன் சாந்தனோடு அவள் வாசலில் இருந்து அவள் உரையாடிக் கொண்டிருந்தாள். மருமகள் , கெளரியும் பிள்ளைகளும் உள்ளே உரையாடிக் கொண்டிருக்க, அவள் முன் வாசல் படியில் கால் நீட்டி அமர்ந்தவாறு நிலவையே பார்த்துக் கொன்டிருந்தாள் அது பெரிய வீடு தான் முன் வாசலை ஒட்டினாற் போல் நீண்ட படிக்கட்டு முற்றம் , முற்றத்து மல்லிகையின் சுகந்த வாசம் நுகர்ந்தவாறே, அவன் கேட்டான். எப்படியம்மா தனிய இருக்கிறியள்? அதுவும் என்னை விட்டிட்டு அதைக் கேட்டு விட்டு அவளால், சிரிக்கத் தான் முடிந்தது அவள் வாயைத் திறந்தால் வேதமே, வரும் பூத சஞ்சாரம் எப்பவும் அவளுக்கு புறம் போக்குத் தான் அவனுக்கு பூதமும் தெரியாது வேதமும் தெரியாது நிஷ்களங்கமாய் இருக்கும் அம்மா முகமே அவனுக்கு மனப் பாடம், அதை நினைக்க உயிர் சிலிர்த்தது. வெகு நேர அமைதிக்கு ப் பிறகு,, இரவின் அமைதியைக் கிழித்துக் கொண்டு, கம்பீரமாய் அவள் குரல் கேட்டது.
தம்பி! உறவை நினைச்சு ஓடுகிற ஆள் நானில்லை. அப்படி ஓடினவர்ளின் கதி தான் இன்று மண் கவ்விக் கிடக்கிறதே. அதற்கு அவன் கேட்டான் என்னம்மா சொல்ல வாறியள். உனக்குத் தான் தெரியுமே உறவை நினைத்து ஓடினவர்களின் கதியைத் தான் நீ நேரில் பாத்து வாறியே! பெரிய மாமா, அது தான், என்ரை ஆசை அண்ணை ஆரை விட்டிட்டு இருக்க ஏலாமல் அப்ப கொழும்புக்கு, ஓடிப் போனாரே! அவரின்ரை முதுகிலை குத்திப் போட்டு, பிள்ளையளும் வெளிநாடு போட்டினம், அதுவும் ஒரேயொரு அருமை மகளை, டாக்டருக்கு படிக்க வைத்து அழகு பார்த்தாரே அப்ப. இப்ப அவள் எங்கை சொல்லு சாந்தன். அது தான் தெரிஞ்ச கதையாச்சே ஒவ்வொரு முறையும் நான் அங்கை போனால், பெரியமாமா ஒப்பாரி வைச்சு அழுது தான் மகள் தன்னை விட்டு லண்டனுக்கு போய் விட்டும் போய் விட்டதாக கண்ணீர் கதை கூறுவார். ஓம் தம்பி! பாசமென்பதே, ஒரு வரட்டுச் சித்தாந்தம் அது உயிர் பெறாமல் ஆருக்கு நட்டம்.? சொல்லு சாந்தன்.
கன்ணைக் குத்திக் கொண்டு, கிடக்கிற மாமாவுக்குத் தான் இது ஏன் அப்ப அவருக்குப் புரியேலை .
எல்லாம் பாச மயக்கம் தான் ஊரும் உலகமும் அண்டை அயல் மனிதர்களும் மறந்து போய், பாசத் திரை ஒன்றே, கண்ணை மயக்க, காற்றோடு எடுபட்ட கோலம் உயிர் ஆத்மா எல்லாம் கனவாய்த் தான் போகும். இந்தக் குழிக்குள் வீழ்ந்து மறைந்து போன அண்ணனை அக்காவை காப்பாத்த, இனி கடவுளே வந்தாலும் முடியாது. அதற்கு மேலும் சொன்னாள். ஒரு மேலான தத்துவம். அவன் அமையாக அதைக் காது கொடுத்து, அதைக் கேட்கவும் செய்தான் அப்போது, அவள் குரல், கம்பீர தொனியில். கேட்டது,
அதற்கு நாம் மனிதர்களாக வல்ல தெய்வமாக, அதாவது சாட்சி புருஷனாக இருந்தாலே போதும் வாழ்க்கை நம் கைக்குள் வரும். வானம் வசப்படும். அதற்கு அவன் கேட்டான் அது ஆரம்மா சாட்சி புருஷன் சொன்னாலும், உனக்கு இது விளங்காது. இது புதிராகவே இருந்து விட்டுப் போகட்டும். புதிரைக் கிண்டினால் தான் புதையலே கிடைக்கும் என்றாள் அவள் எல்லாம் அறிந்த ஞானி போல் அவனுக்கு அது புரிந்ததோ இல்லையோ. முகம் நிறைந்த, சிரிப்புடன். அவன் தலையை ஆட்டுவது, ஒரு கனவுக் காட்சி போல் அவள் நெஞ்சில், நிலைக்காமல் நின்று மறைந்தது.