பூபாள நேரத்து கனவுகள்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 12,865 
 

“பொற்கொல்லர் கள்!’ – ஒரு பிரபல வாரப் பத்திரிகை அறிவித்திருந்த சிறுகதை போட்டியில், முதல் பரிசை தட்டிக் கொண்ட சிறுகதை இது.
கதாசிரியை கனகா, தனியார் நிறுவனத்தில் டைப்பிஸ்டாக வேலை பார்ப்பவர்.
வரதட்சணை பேயால் சீரழியும் பெண்களைப் பற்றி, உருக்கமாக எழுதியிருந்தாள் கனகா.
அவளும், வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்தான்.  மாமியார்களுக்கு எதிராக புறப்பட வேண்டிய  கட்டாயத்தையும் அக்கதையில் கோடிட்டு  காட்டியிருந்தாள்.
பூபாள நேரத்து கனவுகள்அந்த வாரப் பத்திரிகையிலிருந்து கனகாவின் ஆபிசிற்கே செய்தி வந்ததும், அவளைச் சுற்றிலும் ஏகப்பட்ட, “கங்கிராட்ஸ்’ கூக்குரல்கள். அத்தனையும் பெண்களின் உற்சாகக் கூக்குரல்கள். வேறு வழியின்றி கடனுக்காக அசடு வழியும் முகங்களுடன் வாழ்த்துக் கூறியது, ஆபிசிலுள்ள ஆண்களின் கூட்டம். இந்த கதையின் பாதிப்பு, எங்கே தங்களுக்கு நடக்க இருக்கும் கல்யாணங்களில் எதிரொலித்து விடுமோ என்ற பயம் கலந்த சந்தேகம், அக்கூட்டத்திலுள்ள ஒன்றிரண்டு ஆண்களுக்குள் முளைத்தது என்னவோ சத்தியம்.
அன்று மதியம் உணவு இடைவேளையில், தோழிகள் அனைவரும் கனகாவை சூழ்ந்து கொண்டனர்.
“”கனகா… நிஜத்தை சொல்லுப்பா. தினமும் பஸ் செலவுக்கே உன் மாமியாரிடம் கை நீட்டும் பிச்சைக்காரி  நீ. இதை நீ எழுதினாய் என்றால் நம்பவே முடியலேப்பா… கதையிலே எழுதியிருக்கிற மாதிரி கொஞ்சமேனும் நிஜ வாழ்க்கையிலும் நடந்துக்கோப்பா… உன் வாழ்க்கையில் நிஜமாகவே வசந்தம் வீசும்…” -இது லில்லியின் அட்வைஸ்.
“”ஹும்… எனக்கென்னவோ கனகாவோட இந்த துணிச்சல் சரியாகப் படலே… ஏதோ ஒரு அசட்டு தைரியத்தில் மருமகள்களை, “ப்ரெயின் வாஷ்’ பண்ண புறப்பட்டிருக்கா… மாமியார்கள் சும்மா விட்டு விடுவரா என்ன? இது எதில் கொண்டு போய் விடப் போகிறதோ, தெய்வத் திற்குத்தான் வெளிச்சம்…” -இது கொத்தடிமைத் தனத்தின் முழு இலக்கணமான அலமேலுவின் விமர்சனம்.
“”இட் இஸ் எ சூப்பர்ப் பீஸ் ஆப் ரைட்டிங்; கீப் இட் அப் கனகா…” -மிஸ் ஜார்ஜின் உற்சாகமான அட்வைஸ்.
அன்று முழுவதும் அவளுக்கு ஏகப்பட்ட போன் கால்கள்… அத்தனையும் அவளுக்கு உற்சாகமூட்டுவதாக இருந்தன. நெஞ்செல்லாம் ஒரே சந்தோஷப் புனல். இந்த மகிழ்ச்சியை தன் கணவனும், தன்னோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று மிகவும் ஆவலுடன் அவனின் போன்காலை எதிர்பார்த்தவளுக்கு, மிஞ்சியது ஏமாற்றம் மட்டும்தான்.
சாயங்காலம் வீட்டை நெருங்க நெருங்க, அவளுள் ஒரே  இருட்டு. வாசல் வராந்தாவில் உட்கார்ந்திருந்த மாமனார் இவளைக் கண்டதும், சட்டென்று போலி மரியாதையுடன் எழுந்து நின்றவர், “”அபிராமி… உன், “ரைட்டர்’ மருமகள் வந்திருக்கா…” என்று குரல் கொடுத்தார்.
குரலிலும், செய்கையிலும் தான், என்னவொரு நக்கல்.
“”இப்படி வாயாலே சொன்னா போதுமா? ரெட் கார்பெட் போட்டு  மலர் தூவி, மரியாதைகளுடன் அல்லவா எழுத்தாளரை வரவேற்கணும். சரி… உள்ளே வாங்கோ மேடம்… மாடி ஹால்லே போய் பேனுக்குக் கீழே உட்கார்ந்து, “ஹாய்யா’ இன்னும் எழுதி குவிங்கோ… நான் போய் சூடா காபி கலந்து, மாடிக்கு கொண்டு வரேன்…” ஆலகால விஷத்தை கக்கிவிட்டு உள்ளே போய் விட்டாள் அவளின் மாமியார்.
“சகோதரிகளே… புகுந்த வீட்டு நடைமுறைகளில், ஏதேனும் கொஞ்சம் மெல்லிய அபஸ்வரம் தட்டினால் கூட, நீங்கள் உடனே உஷாராகி விட வேண்டும். தைரியமாக அங்கிருந்து வெளியேறி விட வேண்டும்…’
– இப்படி எழுத்தில் வடித்ததை செயலாக்கும் திராணி அவளுக்கு இல்லை. இரவில், ஏகமாக முறைத்தான் கணவன்.
“”ஏய்.. உனக்கு எவ்வளவு திமிர் இருந்தால், இப்படி ஒரு கதை எழுதுவே? என்னவோ எங்க வீட்டிலே நாங்க எல்லாரும் உன்னை ரொம்பவும் கொடுமைப்படுத்துவதை போல கயிறு திரிச்சிருக்கே… அவ்வளவு சிரமப்பட்டு நீ இங்கே இருப்பானேன். அடுத்த வேளை சோற்றுக்குக்கூட வக்கற்ற உன் அப்பன் வீட்டிற்கு போய் விடேன்…”
“”ப்ளீஸ் கோபால்… நான் யதார்த்தமா ஊரில் நடப்பதைப் பற்றித்தானே எழுதினேன். அதை நீங்க ஏன் தப்பா எடுத்துக் கிறீங்க?”
அவள் சொல்வதை அவன் ஏற்றுக் கொள்வதாக இல்லை. அன்றைய இரவு, அவளின் கண்ணீருக்கு சொந்தமாகிப் போயிற்று.
அதன் பின் வீட்டில் சுகநாதம், சுத்தமாய் கலைந்து போய் ஒரே அபஸ்வரம்.
கனகாவிற்கு பத்திரிகை ஆபிசில் பெரிய பாராட்டு விழா எடுத்தனர். முதற் பரிசான பத்தாயிரம் ரூபாய்க்கான காசோலையை புன்னகையுடன் பெற்றுக் கொண்டாள் கனகா.
ஜீவ ஓட்டம் முழுவதுமாய் ஒடுங்கிவிட்ட நெஞ்சோடு வீடு திரும்பினாள். வீட்டினுள் அடி எடுத்து வைத்ததுமே, அந்த காசோலையை மிக உரிமையோடு கைப்பற்றிக் கொண்டாள் அபிராமி.
அன்று மதியமே கோபால் ஆபிஸ் வேலையாக பெல்காம் போய் விட்டான். ஊரிலிருந்தால் மட்டும் இந்த பாராட்டு விழாவிற்கு வரவா போகிறான்? “நாளை செக் வந்ததும் அம்மாவிடம் கொடுத்து விடு…’ என்று நேற்றிரவே அவளுக்கு உத்தரவு போட்டு விட்டான். அந்த உத்தரவை மீறிவிட முடியுமா என்ன?
மறுநாள் மதியம், “”கனகா… உனக்கு போன். உன் மாமியார் உன்னுடன் பேசணுமாம்…”
ஆபிசிற்கே போன் பண்ண வேண்டும் என்றால், ஏதோ மிக முக்கிய விஷயமாகத்தான் இருக்கும். சற்றே படபடப்புடன் போனுக்கு ஓடினாள்.
“”என்னம்மா… என்ன சமாச்சாரம்?”
“”கனகா… அப்பாவும், நானும் அவசர காரியமா மூணு மணி பஸ்சிலே காஞ்சிபுரம் போறோம். ஒரு வாரத்தில் திரும்புவோம். கோபாலும் ஊரில் இல்லாததால், நீ சீக்கிரமா வீடு வந்து சேர். “ஓவர் டைம்’ பண்ணிட்டு ஆபிசிலே இருக்க வேண்டாம். பக்கத்து வீட்டிலே சாவியை கொடுத்து விட்டு புறப்படறேன்… ஜாக்கிரதை.”
கனகாவிற்கு உள்ளூர ஒரே மகிழ்ச்சி… இந்த எதிர்பாராத சுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்கணும். உடனே பெற்றோர் வீட்டிற்குப் போய் மிகவும் உல்லாசமாய் சகோதர, சகோதரிகளுடன் அந்த பழைய நாட்களின் சந்தோஷங்களை திரும்பவும் அனுபவித்துத் திளைக்கணும். உள்ளம் பரபரத்தது. ஏதோவொரு அசட்டுத் துணிச்சலில் மிஸ்.ஜார்ஜிடம் ஐநூறு ரூபாய் கைமாத்து வாங்கிக் கொண்டாள். அப்பாவிற்கு பழங்கள், அம்மாவிற்கு ஹார்லிக்ஸ், பூ, குங்குமம். சகோதர, சகோதரிகளுக்கு சாக்லெட், பிஸ்கட் என்று வாங்கி குவித்துக் கொண்டாள். முதலில் தன் வீட்டுக்குச் சென்று, தேவையான டிரஸ்களை எடுத்துக் கொண்டு புறப்படலாம் என்று எண்ணி, வீட்டிற்கு திரும்பினாள்.
பக்கத்து வீட்டில் சாவியை வாங்கி, தன் வீட்டினுள் நுழைந்தாள்.
பிறந்த வீட்டிலிருந்து உடனே திரும்பக் கூடாது  என்ற எண்ணத்தில், நான்கு நாட்களுக்கு வேண்டிய துணிமணிகளை பெட்டியில் அடுக்கிக் கொண்டாள். காபி கலக்க அடுப்பை பற்ற வைக்க, “ஐயோ… ஐயோ’ என்று கனகா அலற, தீக்கங்குகள் நாலா பக்கமும் சூழ்ந்து, மிக சந்தோஷத்துடன் இவளை அள்ளிக் கொண்டது…
அப்புறம் என்ன? வீட்டைச் சுற்றிலும் ஒரே ஜன நெரிசல்… காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் வேகமாய் சென்று கொண்டிருந்த பஸ்சை நிறுத்தி, அதில் பயணித்துக் கொண்டிருந்த அபிராமி தம்பதிக்கு விவரம் தெரிவிக்கப்பட, அவர்கள் டாக்சியில் பறந்தோடி வர, போலீசும் வந்தது.
அக்னி தேவனின் இறுக்கமான ஆலிங்கனத்தின் விளைவாய் முழுமையாய் கருகி… முழுதுமாய் அடங்கிப் போயிருந்தாள் கனகா. அதனால், மரண வாக்குமூலத்திற்கோ, மற்றைய எந்தவிதமான தடயத்திற்கோ இடமில்லாமல் போய்விட, “பெண்ணின் அஜாக்ரதையால் அடுப்பை பற்ற வைக்கும் போது தீப்பிடித்து இறந்து போனாள்…’ என்ற ரிப்போர்ட்டை எழுதி, தன் கடமையை முடித்துக் கொண்டது போலீஸ்.
இரண்டு மூன்று நாட்களுக்கு, பற்பல அனுமானுங்களுடன், செய்தி தாள்களில், முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் இடம் பெற்ற கனகா, சிறிது சிறிதாக சமூகத்தின் நினைவிலிருந்து விடுபடத்தொடங்கினாள்.
சில நாட்களுக்குப் பின், ஒருநாள்,  கனகாவின் கணவன் கோபாலுக்கு பூனாவிலிருந்து போன். அவன் சகோதரி சித்ரா மிக ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில அனுமதிக்கப்பட்டிருக்கிறாள் என்ற செய்தியை தாக்கல் செய்தது. இவர்கள் போய் சேருமுன் எல்லாமே முடிந்து விட்டிருந்தது.
“அம்மா… இவர்கள் சொல்வதைப் போல், ஸ்டவ் வெடித்து உங்கள் மகள் சித்ரா சாகவில்லை; இது கொலை. திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை. இந்த அயோக்கியக் கும்பலை சும்மாவிடக் கூடாது. நீங்களும், உங்கள் கணவருமாகச் சேர்ந்து, போலீசிற்கு ஒரு கம்ப்ளெயின்ட் எழுதிக் கொடுங்கள். மேற்கொண்டு நாங்கள் கவனித்துக் கொள்கிறோம்…’
சித்ராவின் உண்மை நிலையை  அறிந்தவர்களின் உதவியோடு சமூக நலசேவை உறுப்பினர்கள், அபிராமியிடம் கூறினர்.
“அட… தாராளமா போலீசுக்கு கம்ப்ளெயின்ட் எழுதி கொடுக்கட்டும்… யார் வேண்டாம் என்றது. இவர்கள் வீட்டிலும் ஸ்டவ் வெடித்தது. இவர்கள் வீட்டு மருமகள் கனகா மரணமடைந்த போது எழாத சந்தேகம், இப்போது இங்கே மட்டும் எப்படி முளைக்கிறது? நியாயமாக வெடிக்கும் உரிமை, இவர்கள் வீட்டு ஸ்டவுக்கு மட்டும்தான் உண்டோ? அந்த உரிமை எங்கள் வீட்டு ஸ்டவ்விற்கு கிடையாதா?’ கத்திக் கொண்டிருந்தான் சித்ராவின் மைத்துனன் ரங்கன்.
தன்னிச்சையாய் சிந்தனையில் உறைந்து கொண்டிருந்த கோபாலின் மனதில் பல எண்ணங்கள் ஓடின.
ஊர் திரும்பியவன் நேரே போலீசில் சரண் அடைந்தான்.
“”என்ன சார்… நாங்கள் கேசை க்ளோஸ் பண்ணி இருபது நாட்களுக்கு மேலாகிறது. இப்போது இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடுகிறீர்கள்?” என்றார் எஸ்.ஐ., பலராமன்.
“”சார்… என் மனைவியை திட்டமிட்டு எரித்தவன் நான் என்று உங்கள் முன் வந்து நிற்கிறேன். என் கைகளில் விலங்கை மாட்டுவதற்கு பதிலாக, “கேஸ் க்ளோஸ்டு’ என்றால் என்ன அர்த்தம்? நீங்கள் தீவிரமாக விசாரணை செய்திருந்தால், உண்மை வெளிப்பட்டிருக்கும். நீங்கள் உங்கள் கடமையை சரிவர செய்யவில்லை. ஒரு கொலைகாரனை தப்புவிப்பதில் உங்களுக்கு என்ன லாபம்? நான் எப்படி என் மனைவியை கொலை செய்தேன் என்று பத்திரிகைகாரர்களிடம் தெரிவிக்கப் போகிறேன். அப்புறமாவது நீங்கள் நேர்மையாக செயல்படுகிறீர்களா என்று பார்ப்போம்…” என்று ஏகமாக ரகளை செய்தான்.
மிக பரபரப்பிற்கிடையே கேஸ் நடந்தது. கோர்ட்டில், “”மைலாட்… நான் தான் என் மனைவியை கொலை செய்தேன். என் மாமனாரிடமிருந்து நான் எதிர்பார்த்த ஸ்கூட்டரும், வாஷிங்மெஷினும் வந்து சேரவில்லை. தன் அப்பாவிடம் நச்சரித்து அவைகளை வாங்கிக் கொண்டுவரும் சாமர்த்தியம் என் மனைவிக்கு இல்லை என்றான பின், நான் மிக கவனமாக திட்டமிட்டு, என் பெற்றோரை அப்புறப்படுத்திவிட்டு, அவளை கொலை செய்தேன். இப்போது, எனக்கு அவளைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது. தயவு செய்து சீக்கிரமாக என்னை அவளிடம் அனுப்பி வையுங்கள் மை லாட்… ” என்று ஆணித்தரமாக அடித்து சொல்லி விட்டான்.
தூக்கு மேடைக்கு செல்லும் முன்தினம் கோபாலிடம்,  “”ராஜா… நான் பண்ணின கொடுமைக்கு நீயா தண்டனை அடையறது…” என்று கதறும் அம்மாவை, “”அழாதேம்மா… என்னைப் போல முதுகெலும்பில்லாத பேடிகளுக்கு என் தண்டனை ஒரு பாடமாக இருக்கட்டும். கனகா தன், “பொற்கொல்லர்கள்’ கதையில் எழுதியுள்ளபடி, இனி, நீ பெண்ணினத்தின் மேம்பாட்டிற்காக பாடுபட வேண்டும். உன் வீட்டின் அடுப்பு வெடித்ததன் எதிரொலியாகத்தான் சித்ராவின் வீட்டு ஸ்டவ் வெடித்தது அம்மா. உங்கள் பேராசைக்கு தீனி போட இனி இந்த ஸ்டவ் வெடி சப்தங்களும் வேண்டாம்மா. இந்த சப்தங்களை நிறுத்த நீ பாடுபடு. கனகாவும், சித்ராவும் தீக்கிரையானது போதும். மருமகள்கள் எரியாமல் பார்த்துக் கொள்… மாமியார்களிடம் பிச்சை எடுப்பதும் கேவலம் என்பதை புரிய வை. இதுதான் நீ கனகாவிற்கு செய்து விட்ட துரோகத்திற்கு பரிகாரம்…” என்றான்.
கனகாவின் எழுத்துக்கள் உயிர்துடிப்பு பெற்று விட்டதற்கான அறிகுறியாக அமைந்தது அவனது வாக்குமூலம்.

– டிசம்பர் 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *