(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
மாடியில் நின்றவர்களைப் பார்த்து உற்சாகமாகக் கையாட்டிவிட்டு டிரைவர் இருக்கையில் உட்கார்ந்தான் ரவிக்குமார். அவனையும், மேலே நின்ற தன் பெற்றோரை யும் அண்ணன், தம்பி தங்கைகளையும், அவனது பெற்றோ ரையும் கூச்சத்தோடு பார்த்தாள் மல்லிகா. அந்த கார் கதவு , அவன் கைபடாமலே தானாகத் திறப்பதைப் பார்த்து விட்டு , கூச்சப்பட்ட பார்வையை ஆச்சரியமாக்கினாள் . அதற்குள் ரவிக்குமார், “கமான்….” என்று சொன்னபடியே அவளை நோக்கி லேசாகக் கையை நீட்டி , பிறகு அதற்கு இன்னும் உரிமை வரவில்லை என்பது போல் மடக்கிக் கொண்டான்.
அவள் மீண்டும் மாடிக்காரர்களைத் தயக்கத்தோடு பார்த்தபோது, மேலே நின்ற அவள் தந்தை பேராசிரியர் பெருமாள், “இதுல என்னம்மா இருக்குது? ஏறிக்கோ … ஐம்பதாண்டுக்கு மேல குடும்பம் நடத்தறதுக்கு அரை நாள் பரீட்சை எழுதறதுல தப்பில்லையே…” என்றார்.
மல்லிகா அந்த காரில் ஏறிக் கொண்டதும், அதன் கதவு தானாக மூடியது. இறக்கி வைக்கப்பட்ட ஜன்னல் கண்ணாடி கள் முழுமையாக மூடிக்கொண்டு, அந்த காரையே ஒரு தனி உலகமாகக் காட்டியது. இதுவரை அவள் பார்த்தறியாத கார். இருக்கைகள் கூட வெல்வெட் மெத்தைகளாக மின்னின. அதில் உட்கார்ந்தவுடனேயே மயிலிறகில் உடகார்ந்தது போன்ற சுகம்.
“இப்போதான் இந்த காரைப் புதுசா மார்க்கெட்ல விட றோம். கதவு, கண்ணாடிகளை ஆட்டோமாடிக்கா திறக்க லாம்…. மூடலாம். இதோ, இந்த ஸ்டியரிங்கைக்கூட நம்ம உயரத்துக்கு ஏற்றபடி அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். ஸீட் டைக்கூட முன்னாலும் இழுத்துப் போட்டுக்கலாம்” என்று அவன் சொல்லிவிட்டு ஏ.ஸி.யைப் போட்டான்.
அந்த கார், அந்தத் தார்ச்சாலையில் குண்டு குழிகளை யெல்லாம் மறைத்துக்கொண்டு, அந்தத் தெருவுக்கே ஒரு தனிக் கம்பீரம் கொடுத்தபடி மெள்ள மெள்ள நகர்ந்து ஓடத் துவங்கியது. இருவரும் ஒருவரையொருவர் ஆழம் பார்ப்பது போல் பார்த்துக் கொண்டார்கள். வாயில் புடடையிலும் அவள் அசத்தலாய்ப் பார்த்த அந்தப் பார்வை அவனுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. அவன் பார்வையைத தாள முடியாது அவள் அங்குமிங்குமாய் நெளிவதைப் பார்த்து விட்டு, அவளை கார் கண்ணாடியில் பார்த்தான அவன்.
கட்டிய புடவையைப் போலவே, எளிமைக்கும் கவர்ச் சிக்கும் இடைப்பட்ட தோற்றம். அவள் உள்ளடக்கத்துக்குச் செவ்வரளிப் பூவால் உருவம் கொடுத்தது போன்ற நேர்த்தி. ஏதோ ஒன்று ஒளியோ அல்லது அதுபோலான ஒன்றோ அவள் உடம்பு முழுவதிலுமிருந்து ஜொலித்துக் கொண் டிருந்தது. முன் பற்களில் ‘கிளிப்’ போட்ட அடையாளங் களையும், அவளது சிறிது அதிகப்பட்ட உயரத்தையும் வேண்டுமானால் குறைகளாக எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தான்.
நிழலில் பட்டவளை நிஜமாகப் பார்க்கப் போனபோது, அவளும் அவனை உள்வாங்கிக் கொண்டிருந்தாள். அந்த கார் கண்ணாடி மாதிரி உன்னிப்பாக பார்த்தால் மட்டும் தெரியக்கூடிய தங்கப் புள்ளிகளைக் கொண்ட பாண்ட் – சட் டையில் இருந்தான். கழுத்தில் தொங்கிய தங்க நிற டை அவன் முகத்தில் தன்னம்பிக்கையைக் காட்டும் ஒரு தோரணை. கூர்மையாகப் பார்க்கும் கம்பீரம். இத்தகைய பல ஆண்களை, பல ‘செமினார் ‘ களில் அவள் பார்த்திருந்தா லும் இப்போது வித்தியாசமான காரணத்துக்காகப் போவ தால், அவனை வித்தியாசமாகவே பார்த்தாள்.
அவன் என்ன பேசுவது என்று யோசித்துவிட்டு ‘டை’ யைத் தளர்த்தி சட்டையைத் தூக்கி ஊதியபடியே ஒரு காமெண்ட் அடித்தான். “க்ளைமேட் ரொம்ப மோசமா இருக்குல்ல … ஒரே சல்ட்ரி- வியர்க்குது”.
அவள் கன்னங்கள் பெரிதாக வாயால் ஊதி லேசாகச் சிரித்தாள்.
“எதுக்காக சிரிக்கிறீங்க மேடம்?”
“ஏ.ஸி. குளுகுளுன்னு இருக்குது. உங்களுக்கு எப்படி வியர்க்கும்?”
“நான் ஒரு இடியட்! தர்மசங்கடமான சமயத்துல முதல்ல எல்லாரும் பேசறது மாதிரி , நானும் இந்த க்ளை மேட்டை பேசிட்டேன். ஆனா, ஒண்ணு… நீங்க பக்கத்துல இருக்கிறதனால எனக்கு க்ளைமேட் மறந்து போச்சு – ஏதோ பேசணுமேன்னு தத்துப்பித்துன்னு பேசிட்டேன் …..”
இதற்குள், அந்த கார் மூன்று கிலோ மீட்டர் தாண்டி ஒரு திருப்புமுனையில் வந்து நின்றது. அதுவே அந்த வாக னத்துக்கு இருப்பு முனையாகிவிட்டது. முப்பரிமாண சிக்னல் விளக்குகளை அணைத்துப் போட்டுவிட்டு, இருபது இருபத்தைந்து வெள்ளை யூனிஃபாரகாரர்கள் விசிலடித்துக் கொண் டிருந்தார்கள். இடது பக்க, வலது பக்க, எதிர்ப்பக்க வாகனங்கள் அனைத்தும் ஓர் ஓரமாக முடக்கப்பட்டன. ரவிக்குமார் ஆச்சரியத்தோடு கேட்டான்.
“வாட் இஸ் திஸ் – எதுக்காக இப்படி எல்லா கார்களையும் காயலாங்கடை சாமான் மாதிரி இந்த மூலையில் நிறுத்தி வெச்சிருக்காங்க”
“சி. எம். வெளியூர் போறாங்களாம். இந்த வழியா ஏர் போர்ட் போவாங்க. இன்னும் ஒரு மணி நேரத்துக்கு இங் கேயேதான் கிடக்கணும்…”
“உங்க மெட்ராஸ் புரிஞ்சுக்கவே முடியலையே ஆனானப்பட்ட டெல்லியிலேயே இப்படிக் கிடையாது. பிரைம் மினிஸ்டர் கூட வர்றதும் தெரியாது — போறதும் தெரியாது.”
“சென்னை நகர மக்களே இப்போ திறந்தவெளி ஜெயிலுல இருக்கிறது மாதிரிதான் இருக்கிறாங்க. சரி , டிராக்ஃபிக் கிளியர் ஆக ஒரு மணி நேரம் ஆகும்…. என்ன செய்யலாம்? காரை நிறுத்திவிட்டு காலார கொஞ்சம் வெளியில் நிக்கலாமா?”
“வேண்டாம்… இங்கேயே பேசிட்டிருக்கலாமே.”
“சரி…. பேசுவோம்….”
“உங்க அப்பாவை என்னால புரிஞ்சுக்கவே முடியல. உங்க பேரண்ட்ஸ், என்னோட பேரண்ட்ஸ் எல்லாரும் உட்கார்ந்திருக்கும் போது, எங்க டாடி, ‘பெண்ணைக் கூடி வாங்கன்னு சொல்ல.. உங்க டாடி என்னன்னா துண்டு சோபாவுல குத்துக்கல்லு மாதிரி உட்கார்ந்திருக்கிற உங்களைப் பார்த்து ‘இதான் பொண்ணு’ன்னு சொல்றார். நிஜமாவே நான் அதிர்ந்து போயிட்டேன்.”
“நான் காபியும் டம்ளருமா, நாணமும் முகமுமாய், பின்னாலிருந்து அம்மா தள்ள, அருமைத் தங்கை கையப் பிடிச்சு முன்னால இழுக்க, அசல் மாட்டுப்பெண் மாதிரி வருவேன்னு நினைச்சிருப்பீங்க. நான் என்னடான்னா வேலைக்காரப் பெண் கொண்டு வந்த லட்டை நீங்க எடுக்கறதுக்கு முன்னாடியே எடுத்துக் காக்கா கடியா கடிக்கறேன். நல்லா ஏமாந்தீங்க இல்ல….”
“சந்தோஷமா ஏமாந்தேன்…..அப்புறம் உங்கப்பா உங்களை என்னோட தனியா அனுப்பறதுக்குச் சம்மதிச்சது ஆச்சரியமா இருக்கு….. இவ்வளவுக்கும் நான் உங்ககிட்ட தனியா பேசணும்னுதான் பர்மிஷன் கேட்டேன்.”
“எங்கப்பா நாமார்க்கும் குடியல்லோம்’ என்கிற திரு நாவுக்கரசு அடிகள் பாடலையும், ‘கண்மூடிப்பழக்கம் மண் மூடிப் போக’ என்கிற ராமலிங்க சுவாமிகள் பொன்மொழியை யையும் சின்ன வயசிலிருந்தே எங்களுக்கு ஞாபகம் ஊட்டுகிறவரு.”
“சரி . என்னைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?”
“நீங்க ஒரு நல்ல டிரைவர்.”
“வாட்?”
“உண்மையாத்தான் சொல்றேன்…. ஒரு நல்ல டிரைவருக்கு இலக்கணம்…. அவரு வண்டியை ஓட்டும் போது உட்கார்த்திருக்கிறவங்களுக்கு அவர் ஓட்டறது மாதிரி தெரியப் படாதாம். அதாவது, சடன் பிரேக் போடறது…. குண்டு குழியில் வண்டிய விடறது……அடுத்த வண்டிக்காரனைப் போடா கய்தேன்னு திட்டறது – இந்த மாதிரி தெருக்காரியங்களைச் செய்யாமல், ஓட்டுறவரே நல்ல டிரைவர். இதே இலக்கணத்தைத்தான் ஒரு தலைவருக்கும் சொல்வாங்க. நல்ல தலைவர் என்கிறவரு, தான் தலைமை தாங்கி நடத்தறோம் என்பதைக் காட்டிக்காமலே, மக்களுக்கு வழி காட்ட ணும்….இந்தத் தலைமைக் குணம், அகில உலக அளவுல லெனினுக்கும் தேசிய அளவில் சாஸ்திரிக்கும் இருந்ததாகச் சொல்றாங்க.”
“லெனினைப் பற்றியும், சாஸ்திரியைப் பற்றியும் பேச லட்சக்கணக்கான பேர் இருக்காங்க நம்மைப்பற்றிப் பேசத் தான் நாம் ரெண்டு பேரு மட்டும் இருக்கோம்.”
“அப்படீங்களா….?”
“ஆமாம்….. நீங்க என்னை டிவி.யில் வர்ற விருந்தினரா நெனைச்சுக்கிட்டு என்னைப்பற்றி உங்களுக்குத் தெரிஞ்சதையெல்லாம் சொல்லுங்களேன்….”
“உங்க பேரு …. எனக்குத் தெரியும். ரவிக்குமார்….. உங்க படிப்பு …. அதுவும் தெரியும்….. இன்ஜினீயர் . நீங்க பிரபல கார் தயாரிக்கும் கம்பெனில் விற்பனை அதிகாரி…. டெல்லியில் நாராயணாவுல வீடு. இன்கம்டாக்ஸ்காரங்களை ஏமாத்த அடிப்படைச் சம்பளம் ஆயிரம் ரூபாய்னு சொல் வீங்க… ஆனா, பெர்க்ஸ் எல்லாம் சேர்த்து வாங்குறது எட்டாயிரம்…..”
கார் புறப்பட்டது.
மல்லிகா , தன் வழக்கமான இயல்பில், மனம் விட்டுச் சிரித்தாள். கல்லூரியில் மற்ற சகாக்களிடம் தனது மாணவ – மாணவிகளிடமும் எப்படிப் பேசுவாளோ அப்படி நையாண்டி யாய் பேசிச் சிரித்தாள். பிறகுதான், தான் ஒரு வித்தியாச மான காரணத்துக்கு வந்திருப்பது நினைவுக்கு வர, அவள் சிரிப்பதை குறைத்துக் கொண்டாள். இதற்குள் அவனோ, ஸ்டியரிங்கிலிருந்து இரண்டு கைகளையும் எடுத்து, கைதட்டி னான். பிறகு முன்னெச்சரிக்கையாக ஒரு கையால் ஸ்டியரிங்கைப் பிடித்துக்கொண்டு, இடது கையால் அவள் தோளில் “சபாஷ்… சபாஷ்” என்று சொன்னபடி பட்டும் படாமலும் தட்டி விட்டான்.
கார் மீண்டும் ஒரு மும்முனைக்கு வந்தது. அவன் கேட்டான். மகாபலிபுரம் வரைக்கும் வண்டியை விடலாமா? அவள் தலையாட்டினாள். அப்படி ஆட்டும்போது அவள் தனக்கே சொந்தம் என்பது போலவும், அவன் தன் பக்கம் வரவேண்டும் போலவும் இருந்தது.
அந்த கார் பத்து கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்திருக் கும். காவல் துறையினர் பத்துப் பதினைந்து பேர் தாங்களே சாலை மறியலில் ஈடுபட்டது போல் சாலையின் குறுக்கே மனிதச் சங்கிலியாக நின்றனர். ஒரு காக்கி யூனிஃபாரக் காரர் , அந்த காரின் முன்னால் வந்து நின்றார் . ரவிக்குமார் ஒரு பட்டனை அழுத்தி வலது பக்க கண்ணாடி ஜன்னலை கீழே இறக்கினான. அப்போது அதிகாரி போல் தோன்றிய இன்னொரு காக்கிக்காரர், உள்ளே எட்டிப் பார்த்து மிடுக்காகக் கேட்டார்.
“நீங்க யாரு? இவங்க யாரு?”
“மொதல்ல எதுக்காக எங்களை நிறுத்தினீங்க…….அதைச் சொல்லுங்க…”
“உங்ககிட்ட சொல்லணும்னு அவசியமில்லே….”
“என்ன சார் இது……அடாவடியாய்ப் பேசுறீங்க… நாங்க இந்த நாட்டோட பிரஜைங்க…. வோட்டுப் போட்டவங்க…… எங்களை எதுக்காக நிறுத்துனீங்கன்னு தெரியணும்…. இது எங்கள் அடிப்படை உரிமைகளைப் பறிக்கிற குற்றம்…. புரியுதா….?”
“போங்க சார்…. போங்க – இந்தாப்பா, ரோட்டை விட்டுத் தள்ளி நில்லு. அவங்க போகட்டும்.”
இத்தகைய தமிழ்ப் பண்பாட்டுக் காரியங்களுக்குப் பழக்கப்பட்டுப் போன மல்லிகா, வண்டியை எடுக்கும்படி ரவிக்குமாரின் தோளில் தட்டினாள். தட்டிய கையை தட்டப் பட்ட இடத்திலேயே வைத்துக் கொண்டாள். அவளது ஆண் சகாக்கள் பலர் ‘போலீஸ்’ என்றதும் புறமுதுகிடுவதைப் பார்த்தவளுக்கு அவன் அப்படி வீராவேசமாகவும், எதையும் எதிர்கொள்ளத் தயாரான தோரணையிலும் பேசியவிதத் தில் அவள் அசந்துவிட்டாள். இப்போது அவன் வித்தியாசமானவனாக மட்டும் தெரியவில்ல. அவள் கற்பனையில் தனது வருங்காலக் கணவன் எப்படி இருக்க வேண்டுமென்று கோலப்புள்ளிகள் போட்டு கோலமிடாமல் வைத்திருந்ததற்கு, இப்போது முழு வடிவம் கிடைத்தது போல் தோன்றியது. அவன் தனது தோளில் பட்ட அவள் கையைப் பிடித்து அந்த விரல்களை நெருடி விட்டுக் கொண்டே சிறிது உணர்ச்சி வயப்பட்டுப் பேசினான்.
“நீங்க என்னைக் கல்யாணம் பண்ணினால் நான் அதிர்ஷ்டக்காரன். நமக்குக் கல்யாணம் நடந்த பிறகு, சும்மா ஒரு வாதத்துக்குத்தான் சொல்றேன். நீங்க வேலையை விட வேண்டியதிருக்கும். சரியா?”
“ஒரு பெண்ணுக்கு வேலை என்கிறது பணம் சம்பந்தப் பட்டது மட்டுமல்ல……அதுல ஒரு ஆத்ம திருப்தியும் இருக்கு….டெல்லியில் எனக்கு ஒரு வேலை கிடைக்காமலா போகும்? அதோட நீங்களே இங்கே வேலையை மாத்திட்டு வந்தால் என் வேலை பிழைக்குமே?”
“சரி அதைப் பற்றியெல்லாம் அப்புறமா பேசிக்கலாம்….இப்போ கொள்கை முடிவு எடுத்திருக்கோம். அதாவது, நாம் கல்யாணம் பண்ணிக்கப் போறோம்……சரியா?”
அவள் ‘சரி’ என்று சொல்லவில்லை. அவன் தோளில் சரிந்து விழுந்தாள். அவன் காரை ஆகாயத்தில் விடுவது போல ஓட்டி எதிரே ஒரு லாரி வந்தபோது சுதாரித்தான். “மகாபலிபுரம் வந்துடுச்சு… முதல்ல நாம எங்கே போறோம்?” என்று கேட்டாள்.
“எங்க கம்பெனி கெஸ்ட் – ஹவுஸுக்குப் போறோம். உன்னைப் பார்த்த ஜோர்ல உங்க வீட்ல தந்ததுல எதையுமே சரியா சாப்பிடல…”
கார், மகாபலிபுரத்தில் தென்னந்தோப்பு மாதிரி இருந்த ஒரு பகுதிக்குள் சென்றது. அதற்குள் விசாலமான ஒரு கட்டடம். சுற்று முற்றிலும் மலர்ச்செடிகள். காரிலிருந்து அவர்கள் இறங்கினார்கள். அவன் ஒரு ரோஜாவைப் பறித்து ஆங்கிலப் பணியில் மண்டியிட்டு அந்த மலரை அவளிடம் நீட்டினான். அவள் சிரித்துக் கொண்டே அதை வாங்கி, அவன் சட்டை பட்டனில் சொருகினாள்.
இருவரும், வரவேற்பறைக்கு வந்தார்கள். பொதுவாக, அவனைப் பார்த்ததும் அலறியடித்து எழுகிறவர்கள் ஏதோ சொல்ல முடியாத துக்கத்தைச் சுமப்பது போல தோன்றினார்கள். அவன், சிறிது ஆச்சரியப்பட்டு அதட்டினான்.
“என்னப்பா ….. அசிரத்தையாய் ….”
மல்லிகாவின் இடையில் பட்டும் படாமலும் கையைப் போட்டபடி ரவிகுமார், வரவேற்பாளர் சொன்ன ‘குடிலை’ நோக்கி நடந்தான். அவள் காதுகளில் மெள்ளக் கிசுகிசுத்தான். “எம்.டி. நல்லவரும்மா….. ஆனால், கொஞ்சம் ‘மூடி’ டைப்… எனக்கு மெட்ராஸுக்கு டிரான்ஸ்ஃபர் வேணுமுன்னு என் சார்பா நீயும் கேளு. பிரமோஷன்னு சொல்லாமல் டிரான்ஸ்ஃபர் மட்டும் கேளு… ஆனால் நான் சொன்னது மாதிரி அவருக்குத் தோணப்படாது … சரியா….”
அவன், தன்னாலேயே இயக்கப்படுகிறான் என்பது போல் அவள் பெருமிதமாகத் தலையை ஆட்டினாள். அந்த காட்டேஜுக்கு வந்ததும் வெளியே அவன் விரல்பட, உள்ளே ஒரு சங்கீதம் எழும்பியது. ஓரிரு நிமிடங்களில் கதவு திறக்கப் பட்டது. திறந்தவருக்கு நாற்பத்தைந்து வயது இருக்கும். அழகான தோற்றம். வெட்டும் கண்கள்,ஆக்கிரமிக்கும் பார்வை. அவனைப் பார்த்து ஆச்சரியப்பட்டது போல் கண் உயர்த்தி, “அடடே…. நீயாப்பா? இந்நேரம் ஏதோ ஒரு வீட்டில் பொண்ணு பார்க்கிற சாக்கில் சொஜ்ஜியும் பஜ்ஜியும் தின்னுட்டு இருக்கணுமே….” என்றார்.
ரவிக்குமார், மல்லிகாவை அவருக்கு அறிமுகம், செய்து வைத்தான். அவர், அவளை அங்கீகரித்துக் கொண்டே ‘ராஜா நாற்காலி’ மாதிரியான, தலைக்கு மேல் உயர்ந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்து எதிரே உள்ள சோபா – செட்டில் அவர்களையும் உட்காரச் சொன்னார். அவன், அவரிடம் பெண் பார்க்கும் படலம், அதே சாக்கில் பிக்னிக் படலமானதைக் ‘கீழ்ப்படியும்’ குரலோடு விவரித்தான். அவர் சிரித்துக் கொண்டார். பிறகு, அவளைப் பார்த்து “யு ஆர் லக்கி” என்றார். உடனே, மல்லிகாவும் “ஹி இஸ் ஆல்ஸோ லக்கி” என்றாள். அவர் கடகட வென்று சிரித்தார். அவளைப் பார்த்து ரசித்தார். பேச்சு எங்கெல்லாமோ போனது. அத்தனை உலக விவகாரங்களையும் அவர் சொல்லச் சொல்ல அவற்றில் உள்ள தப்புகளையும் பொருட்படுத்தாமல் அவர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இறுதியில் மல்லிகா எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் அவரிடம் ஒரு வேண்டுகோளை விடுத்தாள்.
“அங்கிள் அங்கிள்….இவரை மெட்ராஸுக்கு மாற்றிப் போடுங்க அங்கிள் – அதனாலே நான் கஷ்டப்பட்டு தேடிக்கிட்ட அசிஸ்டெண்ட் புரொபசர் வேலையைக் காப்பாத்திக்கலாம். உங்க மகள் மாதிரி எனக்கு”
“நோ பிஸினஸ் டாக் ப்ளீஸ்.”
எம்.டி.யின் குரலே மாறி விட்டது. சிறிது மௌனத்துக்கு பிறகு, ரவிக்குமாரிடம் அவனுக்கு விடை தெரியாத கேள்விகளாகக் கேட்டுத் திணறடித்தார். பிறகு எழுந்து நின்றார். ரவிக்குமாரும் மல்லிகாவும் வெளியே வந்தார்கள். அவன் உடம்பெல்லாம் ஆடியது. அவளைச் செல்லமாகக் கண்டித்தான்.
“காரியத்தை கெடுத்துட்டியே மல்லி…..எங்க எம்.டி.க்கு மனசிலே பெரிய மன்மதன்னு நெனைப்பு. எல்லாப் பெண்ணுங்களும் தனக்காக ஏங்குறதா ஒரு எண்ணம்….அப்படிப் பட்டவரைப் போய் அங்கிள் …..அப்பா…..ன்னு அழைச்சிட்டியே – ‘சார்…. சார்’னு ஒரு இழுப்புப் போட்டுக் குழைந்திருக்க வேண்டாமா? நட…. ஏய் மல்லி…. நீ ஏன் அப்படி ஓடுறே ….?”
“உங்ககிட்ட சொல்றது அநாவசியம்; ஆனாலும் சொல்றேன். நான் பல்லவன் பஸ்ஸைப் பிடிக்கணும். வர்றேன்….என்னை நீங்க மட்டும் தான் உங்களுக்காக மட்டும் தான் கல்யாணம் செய்துக்கப் போறதா நினைச்சேன்…”
அவன், சட்டையிலிருந்து விழப்போன ரோஜாப்பூவை யதேச்சையாய்த் தாங்கிப் பிடிக்கப் போனான் …. ஆனால் அந்தப் பூ, அவன் சட்டையைச் சட்டை செய்யவில்லை.
– பூநாகம் (சிறுகதைகள் தொகுப்பு), முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1993, கங்கை புத்தக நிலையம், சென்னை.