கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 12, 2022
பார்வையிட்டோர்: 8,882 
 
 

(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கோமதி தோட்டத்தைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். அவள் கண்களிலே நீர் படர்ந்திருந்தது. கண்களில் தீட்டிக் கொண்டிருக்கும் மை கலையாமல் அக் கண்ணீரை உள்ளே இழுத்துக் கொள்ளப் பார்த்தாள் அவள். அழகான பெரிய பங்களாவின் முன்னிலை யில் தன் முன் அலங்காரமாகப் புஷ்பச் செடிகள் சிரிக்கச் சிரிக்க இருந்தும் அவள் முகத்தில் சோகத்திற்கு இடம் ஏன்?

சுந்தரராமன் உள்ளே வந்தான். கோமதி எழுந்து அவன் பின்னால் சென்றாள்.

“கோமு! எனக்குச் சீக்கிரம் சாதம் போடுகிறாயா?”

“இதோ போடுகிறேன். எங்காவது வெளியே போகப் போகிறீர்களா?” என்று கம்மிய குரலில் அவனைக் கேட்டாள் கோமதி.

“ஆமாம். கணேசன் தெருக் கோடியில் காத்துக் கொண்டிருப்பான். ‘இதோ நொடியில் சாப்பிட்டு விட்டு வருகிறேன்’ என்று கூறிவிட்டு வந்தேன்.”

கோமதி பல்லைக் கடித்துக்கொண்டு இலைபோட்டுப் பரிமாற ஆரம்பித்தாள்.

“கோமு, இன்று கூட்டு ஒண்ணாந்தரம். எனக்குத் தான் நிதானமாகச் சாப்பிட முடியவில்லை . உன் கை தங்கமடி!” என்று புகழ்ந்தான் சுந்தரராமன்.

கோமதி அடுப்பங்கரையில் எதையோ எடுப்பதாகப் பாசாங்கு செய்தாள். இரண்டு முத்துக் கண்ணீர் கன்னத்தில் ஓடியது. புடவைத் தலைப்பால் அதைத் துடைத்துக் கொண்டாள் அவள்.

“கோமு, என் பக்கத்தில் மோரை எடுத்து வைத்து விட்டு, ஒரு காரியம் செய்யேன். நல்ல வெற்றிலையாகப் பார்த்து எடுத்து வை. நம் வீட்டுப் பாக்குப் பொடி என்றால் கணேசனுக்கு உயிர். சுண்ணாம்புகூட அவன் வீட்டில் இராது என்று நினைக்கிறேன். அவன் மனைவியும் ஊருக்குப் போய் நான்கு மாதங்கள் ஆகிவிட்டனவே!” என்று அங்கலாய்ப்புடன் கூறினான் சுந்தரராமன்.

“அதற்கென்று பிரசவத்திற்குப் பிறந்தகம் போனால் நான்கு மாதம்கூட ஆகாதா? எப்பொழுது வருகிறாளாம் அவள்?” என்று கோமதி கேட்ட போது அவளிடம் துக்கம் மாறிச் சிறிது கோபம்கூடத் தலைகாட்டியது.

“எப்பொழுது வருவாளோ, தெரியாது. மூன்றாவது பிரசவம் தானே! இன்னமுமா பிறந்தகம் ஆட வேண்டும்? ஒருவன் இங்கு கிடந்து தவிக்கிறானே என்றுகூட ஒருத்திக்குத் தெரியவில்லை. குழந்தைகளும் இல்லாமல் மனைவியுமில்லாமல் அவன் பயித்தியமாக அலைகிறான். அவனுடைய கஷ்டமே அவளுக்குத் தெரியவில்லையே, சட்!” என்று கூறிக்கொண்டே இரண்டே கவளமாக மோர் சாதத்தைச் சாப்பிட்டு விட்டு எழுந்து விட்டான் சுந்தர ராமன்.

“சிலருக்கு அப்படித்தான் வாழ்க்கைப்பட்டவர்களின் கஷ்டம் தெரிவதில்லை” என்று கோமதி அபிப்பிராயம் கூறினாள். அவள் குரல் தழுதழுத்தது.

“கோமு! உனக்கு ஜலதோஷமா என்ன? குரல் கம்மிக் கிடக்கிறதே?” என்று பரிவுடன் கேட்டுவிட்டு அவள் கொடுத்த வெற்றிலையை வாங்கிக் கொண்டு அவள் கன்னத்தில் லேசாக ஒரு தட்டுத் தட்டினான்.

“கோமு! எனக்காக நீ விழித்துக் கொண்டு இருக்க வேண்டாம். நீ படுத்துத் தூங்கி விடு. நான் வந்து எழுப்பு கிறேன்” என்று கூறி விட்டுப் புறப்பட்டான் அவன்.

“நான் சாப்பிடும் வரை இருங்களேன்; எனக்குப் பயமாக இருக்கிறது” என்று வெகு பிரயாசையுடன் வேண்டினாள் கோமதி.

“நான் எப்படி இருப்பது? கணேசன் காத்து கொண்டிருப்பானே!”

“இதுவரையில் அவர் தெருவிலேயா நின்று கொண்டி ருந்தார்? பாவம், நம் வீட்டிலாவது வந்து உட்காரச் சொல்லக் கூடாதா?”

“இல்லை, அவனும் ஓட்டலுக்குப் போனான். நானும் வந்தேன்!”

“நம் வீட்டுக்கு அழைப்பது தானே? இங்கேயே சாப்பிட்டு விட்டு உங்களுடன் பேசிவிட்டுப் படுக்கப் போகலாமே!” என்றாள் கோமதி.

“அது முடியுமா?” என்று பட்டதும் படாததுமாகக் கூறிவிட்டு வெளியே விரைந்தான் சுந்தரராமன்.

அவன் இருளில் மறையும் வரை பார்த்துக் கொண்டு நின்றாள் கோமதி. பிறகு தன் கண்களிலிருந்து தடையின்றிப் பெருகும் கண்ணீரைத் துடைக்காமலே உள்ளே சென்றாள். கதவைத் தாளிட்டு விட்டு போய் இலையில் உட்கார்ந்தாள். அடுத்த ‘போர்ஷ’னில் இருக்கும் பாகீரதி குழந்தைகளை விரட்டிக் கொண்டி ருந்தது செவியில் விழுந்தது.

“தூக்கம் வரா விட்டால் எங்காவது கண்மறைவாக ஒழிவது தானே? சோறு தின்னவிடாமல் ஏனோ மென்னி யைப் பிடிக்கிறதுகள்!”

அதைக் கேட்டதும் கோமதிக்கு ஒரு வரட்டுச் சிரிப்புத் தோன்றிற்று. அன்று மாலை பாகீரதி கூறிய சொற்கள் உடனே அவள் நினைவுக்கு வந்தன.

“அவளுக்கு என்ன வந்தது? அவளுக்குக் குழந்தைகள் அருமை என்ன தெரியப் போகிறது? தனக்குப் பொழுது போகவில்லை என்று எல்லாக் குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு, விளையாட்டுக் காட்டுகிறேன் என்று பெயர் வைத்துக் கொண்டு அதுகளுக்கு வேளைக்கு வாய்ச் சோறு இல்லாமல் அடிக்கிறாள்.”

“யாரிடம் இப்படிச் சொல்கிறாள்?” என்று திகைத் தாள் கோமதி.

“அதை ஏன் கேட்கிறீர்கள்? அதை விட்டால் எங்கள் வீட்டில் வந்து மணிக்கணக்கில் உட்கார்ந்து விடுகிறாள். அவளுக்கு வேலை இல்லை, வெட்டி இல்லை!” என்று பின் பக்கத்து அறையில் குடித்தனம் செய்யும் காவேரி கணீர் என்று பதில் கூறியதும் தொடர்ந்து கேட்டது.

அவர்கள் குடியிருந்தது ஒரு பெரிய பங்களா. அதில் மாடியில் வீட்டுக்காரர்களும், கீழே மூன்று குடித்தனங் களும் ஒரு தனி மனிதனும் ஒண்டிக் குடியாக வாழ்ந்து வந்தனர். அவரவர்கள் ‘போர்ஷன்’ தனித் தனியாக மிகவும் வசதியாக அமைந்திருந்தது. சுற்றிலும் அழகான தோட்டம். அதில் தென்னை , மா, பலா முதலிய மரங் களும், பற்பல விதமான புஷ்பச் செடிகளும் அடர்ந் திருந்தன.

பாகீரதியும், காவேரியும் சோமதியுடன் மிகவும் கனிவுடன் தான் பழகினார்கள். குடும்ப வாழ்க்கையில் சிற்சில சமயத்தில் சிற்சில விதமாகப் பேச்சுக் கிளம்பி விடுகிறது. அவரவர்கள் திருஷ்டிக்கு எட்டியதை அவர வர்கள் கூறினார்கள். கோமதி மனித வர்க்கத்தின் போக்கை ஆராய்வதில் முனைந்தாள்.

வெகு நேரம் யோசித்த பிறகு, ‘ இதற்கெல்லாம் காரணம் என்ன?” என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டாள்.

விடை எதுவும் கிடைக்காமல் போகவே ‘என்ன? என்ன?’ என்ற பிரச்னை திரும்பத் திரும்ப அவள் செவி களில் வண்டு போல் ரீங்காரஞ் செய்தது.

அன்று மாலை எல்லாக் குழந்தைகளும் பள்ளியி லிருந்து திரும்பிய பிறகு அவளிடம் ஓடி வந்தன. அவர் களுடன் அவளும் சேர்ந்து கொண்டு அவர்களுக்குப் புதிய விளையாட்டுக்கள் சொல்லிக் கொடுப்பதும், அவர்கள் பழைய விளையாட்டைப் பார்வையிடுவதுமாகக் களித்துக் கொண்டிருந்தாள்.

“சனியன்களா, வயிற்றுக்கு ஒன்றுமே வேண்டாமா?” என்ற அதட்டல் பிறந்தது பாகீரதியிடமிருந்து. பயந்து கொண்டு குழந்தைகள் ஓடி விட்டன.

குழந்தைகள் போன பிறகு தனியாகத் தன் தாழ் வாரத்திற்கு வந்து அமர்ந்தாள் கோமதி. அப்பொழுதும் அவள் கணவன் காரியாலாயத்திலிருந்து வீடு திரும்ப வில்லை. ஆகையால் அவன் வரும் வழியை நோக்கிய வாறு உட்கார்ந்திருந்தாள். மாலைப் பொன்னிறத்தில் பசுமையான அந்தத் தோட்டம், வர்ண ஜாலங்களைப் போன்ற புஷ்ப தினுசுகளுடன் அழகாக விளங்கியது. மனத்திற்கு மிகவும் ரம்யமான அந்தக் காட்சியை மிகவும் ரஸித்து ஆனத்தித்தாள் கோமதி.

அந்த வீட்டின் சொந்தக்கார அம்மாள் கலாரசனை யுள்ள ஒரு மாது. ஆகையால், செடிகளில் பாத்தியும் அமைப்புமே மிகவும் அழகாக இருக்கும். கோமதி அதைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினாள்.

அப்பொழுது வேப்பமரத்தடியில் ஒரு திண்ணையில் வீட்டுக்காரப் பெண்ணும், அவள் கணவனும் நெருக்கி உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். கோமதி தான் வந்த சுவடு தெரியாமல் திரும்பி வரும்போது தேர் அலங்கரித்தாப்போல் குண்டு மல்லிகைச் செடி ஒன்று இருந்தது. அந்தப் புஷ்பங்களைக் கண்டதும் கோமதிக்குச் சபலம் தட்டிவிட்டது. ஒரே ஒரு புஷ்பத்தைக்கொய்தாள். அவள் அதைத் தலையில் சூட்டிக்கொள்ளும் சமயம் மேலிருந்து வீட்டுக்கார அம்மாள் பார்த்து விட்டாள்.

“இந்தாம்மா, வேண்டுமென்று தான் செடியிலேயே வைத்திருக்கிறேன். உனக்கு வேண்டுமானால் என்னைக் கேட்பது தானே? நான் கொடுப்பேனே?” என்று அந்த அம்மாள் சிரித்துக் கொண்டே கூறினாலும், கேட்காமல் கொள்ளாமல் பறிப்பது சரியல்ல என்று கூறுவது போலவே இருந்தது அவள் குரல். கோமதி அங்கிருந்து சட்டென்று அப்பால் நகர்ந்தாள்.

“அதுதான் பார்த்தேன், நேற்றே ஒரு ரோஜாப் பூவைக் காணோம் என்று” என்று அந்த அம்மாள் கூறிக் கொண்டே உள்ளே போனாள்.

கையிலிருந்த மலருடன் நேரே மாடி ஏறினாள் கோமதி. “இந்தாருங்கள். நான் ஏதோ பிரமையில் கிள்ளி விட்டேன்” என்று கூறிக் கொண்டே மலரை அவர்கள் வீட்டு மேஜை மேல் வைத்தாள்.

“ஏனம்மா, நீ தலையில் வைத்துக் கொள். என்னைக் கேட்கக் கூடாதா, இங்கே கொய்து வைத்திருக்கிறேனே என்று தான் சொன்னேன்.”

“வேண்டாமே. நீங்கள் படத்திற்காவது வையுங்கள். நான் தெரியாத்தனமாக எடுத்துவிட்டேன். ஆனால் இது முதல் தடவை. கடைசித் தடவையும்கூட. இனி தொட மாட்டேன்.”

“இதோ பார், கோமதி. நீ தப்பாக நினைத்துக் கொண்டு விட்டாயா? பூவைக் கொய்து விட்டால் பிறகு செடியின் அழகு குறைந்து விடுமே என்று வருத்தமாகி விட்டது. இந்தா, இந்த மலரைத் தலையில் சூட்டிக் கொள்.”

கோமதி காது கேட்காதவள் போல் இறங்கி வந்து விட்டாள்.

மீண்டும் தன் இடத்திற்கு வந்து உட்கார்ந்தாள். காவேரி கணவனுடன் பேசிச் சிரிப்பது கேட்டது; பாகீரதி குழந்தைகளுடன் கொஞ்சுவது தெரிந்தது. அவள் மட்டும் தனிமையில் உட்கார்ந்து கொண்டு இருந்தாள், அவள் நயனங்களில் நீர் மல்கி இருந்தது.

அந்த வேளையில் தான் சுந்தரராமன் வேகமாக வந்தான். அவசர அவசரமாகச் சாப்பிட்டு விட்டு, நண்பன் கணேசனுக்குத் துணையாக இருக்க விரைந்து சென்று விட்டான்.

தனிமையோடு, அவளைச் சுற்றி இருளும் சேர்ந்து கொண்டது. துக்கத்தோடு தூக்கமும் கலந்து கொண்டது.

கோமதி தன் சாப்பாட்டைச் சீக்கிரமே முடித்துக் கொண்டு, எழுந்து வேலைகளையும் முடித்துவிட்டுப் படுத்துக் கொண்டாள். இதுவரை பயமுறுத்திக் கொண்டிருந்த கண்ணீர் இப்பொழுது தாராளமாகப் பெருகிற்று. கடியாரம் மணி பத்தடித்தது. சுந்தரராமன் வரும் காலடி கேட்டது. அதுவரை துக்கம் தீர அழுததால் அவள் முகம் வீங்கிக் கிடந்தது.

“அம்மாளுக்கு நல்ல தூக்கம் போலிருக்கிறது!” என்று கூறிக் கொண்டே உள்ளே வந்து கதவைத் தாளிட்டான் சுந்தரராமன். செம்பிலிருந்து ஒரு டம்ளர் ஜலத்தை எடுத்துக் குடித்து விட்டு “கோமு!” என்று அவள் முகத்தைத் தூக்கினான். அவள் சுந்தர வதனம் கண்ணீரினால் நனைந்து போயிருப்பதைப் பார்த்து அவன் திடுக்கிட்டான்.

“கோமு, அழுதாயா என்ன? அசடு, என்னிடம் சொல்லக் கூடாதோ?”

“நான் அழவும் இல்லை , ஒன்றும் இல்லை .”

“பொய்! அழுதிருக்கிறாய். என்னிடம் சொன்னால் தான் விடுவேன்.”

அவள் ஒன்றும் பதில் சொல்லவில்லை. வெகு நேரம் பேசாமல் கண்ணை மட்டும் திறந்து கொண்டு படுத்திருந் தாள்.

“கோமதி, சொல்ல மாட்டாயா?” என்று கடுமை யாகவே கேட்டான்.

“என் தலையில் புஷ்பம் இருக்கிறதா பார்த்தீர்களா?” என்று கேட்டாள் கோமதி.

“அதற்காகவா அழுதாய்? அசடு! சின்னக் குழந்தையா நீ? என்னைக்கேட்கக் கூடாதோ? நான் வாங்கி வருகிறேன்!”

“உங்களைக் கேட்டு வாங்கிக் கொள்ள வேண்டும், உம்… அதுவும் எப்பொழுது கேட்பது? சாப்பிடக் கூடத் துணையில்லாமல் பறந்து விட்டீர்கள்.”

“அதற்காக அழுதாயாக்கும்! போடீ போ. பயித்தியம்! ஊரெல்லாம் பெரிய பெயர் பெற்ற இந்தப் பூஞ்சோலைப் பங்களாவில் உனக்கு ஒரு புஷ்பம் கிடைக்காமல் போய் விட்டதாக்கும்! அவர்களைக் கேட்டு வாங்கிக் கொள்வது தானே! உம்… ஒரு மனிதன் பத்து மணிக்கு வீட்டுக்கு வந்தால், அப்பொழுது இதுதான் வரவேற்பு. சட்! அங்கேயே இருந்து விடாமல் போய் விட்டேன்! கோமதியின் மனத்தில் எவ்வளவோ இருந்தாலும், கணவன் கூறிய சொற்கள் அவளைத் தைத்தன. அவள் பணிந்து விட்டாள்.

“என்னமோ தெரியாத்தனமாக நடந்து விட்டேன். என் மீது தான் குற்றம். அது போகட்டும்; கணேசன் வீட்டில் என்ன பேசிக் கொண்டிருந்தீர்கள்? அவர் குழந்தையைப் பார்த்து விட்டு வரப் போகலையா?” என்று பேச்சை மாற்றினாள் கோமதி.

அவள் தாழ்ந்து போனதும் கணவனின் மனத்திலே கனிவும் இரக்கமும் இடம் பெற்றன. “கோமு, நீ ஏன் அழுதாய் என்று சொல்ல மாட்டாயா?”

“என்னவோ, தனியாக உட்கார்ந்து கிடக்கிறேன் காலையிலிருந்து, சற்றுத் தூக்கம் வருகிறது.

“அண்டை அகத்துக் குழந்தைகளை வைத்துக் கொள்வதுதானே? இல்லாவிட்டால், சற்று நேரம் அவர்கள் வீட்டுக்காவது போய்ப் பேசிக் கொண்டிருப்பது தானே?”

“எத்தனை நேரம் தான் அசல் வீட்டுக் குழந்தைகள் நம் வீட்டிலேயே இருக்கும்? மேலும் அவரவர்கள் வீட்டில் அவரவர்கள் கணவன் மனைவிமார்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்” -மறுபடியும் அவள் குரல் கம்மிற்று.

“பாவம், தனியாக இருந்தாய் அல்லவா?”

“இல்லை, கொள்ளைப் பேர்கள் அடுத்த அறைகளில் இருந்தார்கள், மாடியில் இருந்தார்கள், தெருவில் இருந்தார்கள். தோட்டம் நிறையப் புஷ்பம் இருந்தது. எனக்கு என்னவாயிற்று? ஒரு பூ பறித்ததற்கு ஈனமான பேச்சுக் கேட்டுக் கொணடேன்…” என்று விக்க ஆரம்பித்து விட்டாள் கோமதி.

பிறகு அன்று நடந்தவற்றையும் கூறி முடித்தாள்.

“உன்னை அப்படியா சொன்னார்கள்? நாளைக்கே வேறு வீடு பார்த்துக் கொண்டு போய் விடுவோம். கணேசன் வீட்டிற்குப் பக்கத்தில் ஒரு வீட்டில் ஒரு ‘போர்ஷன்’ காலியாக இருக்கிறது. அதற்கு நாளைக்கே நான் ‘அட்வான்ஸ்’ கொடுத்து விடுகிறேன்” என்றான் சுந்தர ராமன்.

“எதற்கு எது மருந்து? எல்லோரையும் போல் நீங்கள் ஒருவர் வீட்டில் இருந்தால் போதுமே! அதை விட்டு வீடு ‘என்ன செய்யும்?” என்று நினைத்துக் கொண்டாள் அவள். ஆனால் எதாவது சொல்லிக் கணவனின் மனத்தைக் கலைக்க இஷ்டப்படவில்லை.

“இவ்வளவு வசதி அதில் இருக்குமோ இருக்காதோ? குழாய் ஜலம் வருமா? கிணறு இருக்கிறதா? காற்று வருமா?” என்று கேட்டாள்.

“பேஷாக இருக்கும். தனியாகவும் இருக்கும்.”

“இதுவும் தான் தனியாகத் தானே இருக்கிறது. இந்தச் சின்ன விஷயங்களை யெல்லாம் பாராட்டிக் கொண்டு, வேறு வீடு பார்க்க வேண்டாம்!”

“என் கோமுவை ஒருவர் இழிவாகப் பேசுவது, அப்புறம் அந்த வீட்டில் இருப்பதா?” என்று ஒரே பிடிவாத மாகக் கூறிவிட்டான் சுந்தரராமன்.

அதற்கு அடுத்த வாரமே அவர்கள் வீடு மாறிப் போய் விட்டார்கள்.

அங்கு போன காலம் நல்ல காலமோ என்று கூறும் படி இருந்தது. கோமதி கருவுற்றாள். தான் தனியாக இருந்தது போக, இப்பொழுது சுந்தரராமனைத் தனியாக வீட்டைக் காவல் காக்கும்படிச் செய்து விட்டுப் பூச் சூட்டல் என்றும், மசக்கை என்றும் பிறந்தகம் போவதும் வருவதுமாக இருக்கத் தொடங்கினாள்.

“கணேசனை அழைத்து வைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டுச் செல்வாள் அவள். வந்ததுமே முதலில் அதை விசாரிப்பாள்,

“அவன் எப்படியும் வருவான்; குழந்தைகள் விடமாட்டேன் என்கிறதுகளாம். மனைவியையும் தனியாக விட்டில் விட்டு விட்டு எப்படி வருவான்? அவள் மிகவும் பயந்த சுபாவமாம்” என்று பதிலளிப்பான் சுந்தரராமன். கோமதி தன் நாக்கை கன்னத்தில் அடைத்துக் கொண்டு சிரித்துக் கொண்டே இருப்பாள்.

கடிதம் மேல் கடிதம் எழுதி, குழந்தை பிறந்த மூன்றாம் மாதமே மனைவியை வரவழைத்துக் கொண்டு விட்டான் சுந்தரராமன். பெண்ணுடன் வந்த கோமதியின் தாயாரும் ஊருக்குத் திரும்பி விட்டாள். அன்று கணவனும் மனைவியும் ஒரு பக்கம் தாழ்வாரத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.

கீழே பாயை விரித்துக் குழந்தையைக் கிடத்தி இருந்தனர். சுந்தரராமன் அதன் அருகில் படுத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தான். கோமதி ஒரு தொட்டியில் இருக்கும் ரோஜாச் செடிக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள்.

“கோமு! உனக்குப் பூஞ்சோலை பங்களாவை விட்டு வந்தது மனசுக்குக் குறைதான் அல்லவா? உண்மையாகச் சொல்” என்று கேட்டான் சுந்தரராமன்.

“ஒருகாலும் இல்லை . என் ஒரு ரோஜாச் செடிதான் எனக்குப் பூஞ்சோலை. ஒரு செம்பு நீர் விடவோ ஒரு மொட்டைக் கிள்ளி எடுக்கவோ என்னுடையது என்று இருக்கும் இந்த ஒரு செடிதான் எனக்கு உயர்த்தி. ஊரிலிருக்கும் பூஞ்சோலை எல்லாம் எனக்கு எதற்கு?” என்று அவள் கூறும்போது அவள் கண்கள் தாமாகவே வாத்ஸல்ய மிகுதியுடன் தன் குழந்தையை நாடித் தழுவிக் கொண்டன. – “மிகவும் அழகாக இருந்தது அந்த வீடு!” என்றான் சுந்தரராமன்.

“ஆனால், இது கணேசன் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கிறது. சொல்ல மறந்து விட்டேனே. அவர் குழந்தைக்கு இப்பொழுது ஜுரம் அடிக்கிறது. உங்கள் நண்பர் பயித்தியம் பிடித்தவர் மாதிரி தனியே உட்கார்ந்து கொண்டிருப்பார். முன்பெல்லாம் போய்ப் போய் உட்கார்ந்து கொள்வீர்களே, இப்பொழுது சமயத்துக்குப் போகாமல் இங்கே இருக்கிறீர்களே!…”

“போடி, பயித்தியமே! ‘இந்தக் குட்டிக் கழுதை’யை விட்டு விட்டு எப்படிப் போவான் ஒருவன்?” என்று கூறி விட்டுத் தன் குழந்தையைக் கையில் தூக்கி குலுக்கு வதிலும், கொஞ்சிக் கொஞ்சி முத்தம் கொடுப்பதிலும் மும்முரமாக ஈடுபட்டான் சுந்தரராமன்.

கோமதி தன் கணவனையே கண்கொட்டாமல் பார்த்தாள். ஆனால் அவள் மனத்தில் பழைய நினைவினால் கசப்புத் தோன்றவில்லை. தற்போதைய இன்பக் காட்சிதான் அவள் கண்களில் நிறைந்து காணப் பட்டது.

– 19.8.1951

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *