அவன் படிகளிலிறங்கி நடந்துபோனான். ஒரு முறைகூடச் சற்றேனும் திரும்பிப் பார்க்கவும் இல்லை. ஒவ்வொரு காலடி வைப்பிலும் கோபம் நெரிந்து புதைந்துகொண்டிருந்தது. இல்லை, இனி ஒருபோதும் அவன் திரும்பிப் பார்க்கமாட்டான். ஒருபோதும் அவன் வரமாட்டான். பொறுக்கமுடியாத வேதனையுடன் கூக்குரலிட்டாள்.
… என் பொன்னான தம்பி.
மாடிப்படிகளில் ஓடியேறி மொட்டை மாடியின் வராந்தாவில் நின்று அவள் தரையைக் குனிந்து பார்த்தாள். காலியான தெருவினூடே ஏதோ புயற்காற்று அடித்துத் தள்ளியதுபோல அவனுடைய ஜீப் உறுமி நகர்ந்துகொண்டிருந்தது. நனைந்த கண்களோடு நோக்கி நின்றாள். கடைசி உறவும் அற்று விழுகிறது.
இனி யாருமில்லை, ஒன்றுமில்லை. பரந்த உலகின் நடுவில் ஏகாந்தமான ஒரு தீவுபோலத் தனித்து நிற்கிறாள்.
ஒரு நாளும் மீண்டும் காணமுடியாத ஒன்றை மனதிலிருந்து ஒரு போதும் இழந்துவிடக் கூடாது என்பதுபோல அவள் அந்தப் பக்கமாகவே பார்த்திருந்தாள். தெருத்திருப்பத்தில் அந்த வண்டி மறைந்து போனபோதிலும் பார்த்துக்கொண்டே நின்றாள்.
“சாரதாக்கா”
கீழேயிருந்து யாரோ கூப்பிட்டார்கள். கார்த்யாயனியாக இருக்கும். இயந்திரம்போலக் கையை உயர்த்தி அவள் வாட்சைப் பார்த்தாள். இனித் தாமதித்தால் ஆஃபீசுக்கு லேட்டாகும். ஆனால், நின்ற நிலையில் உறைந்து நிற்கவே முடிந்தது. அசைய முடியவில்லை. பேச முடிய வில்லை. ஒரே ஒரு உண்மை மட்டுமே இனிமேல் முன்னால் உள்ளது.
இனி, தான் தனி.
மாடிப்படிகளில் ஓடியேறி வந்த கார்த்யாயனி அவளது தோளைக் குலுக்கிக் கேட்டாள்.
“என்ன ஆச்சு சாரதாக்கா…?” அம் முகத்தில் கொந்தளிப்பும் இயலாமையும் கண்ட பின்னரே அவள் சட்டென்று மௌனமானாள்.
கார்த்யாயனிக்கு ஒன்றும் புரிந்திருக்காது. எப்படிப் புரிய வைப்பது…? ஒரு அர்த்தத்தில் அவள் வெறும் குழந்தைதான். வாழ்க்கையின் வாயிற்படியை அப்போதுதான் அடைந்திருக்கிறாள். கருமேகங்களே இல்லாத சித்திரை மாதம் மட்டும்தானே பார்த்திருக்கிறாள். ஆனாலும் அவளுக்கு மனிதர்களின் துன்பத்தைக் கண்டால் புரியாமலிருந்திருக்கும். ஒரு வேளை துன்பத்தின் ஊமையான உறைகுளிர் அவளுடைய நாவையும் மரத்துப்போகச் செய்திருக்கலாம்.
உறக்கத்திலிருந்து விழித்ததுபோலச் சாரதா சொன்னாள்:
“கார்த்தீ! நான் இன்றைக்கு வரலை. உடம்பு சரியாயில்லை. என் லீவு லெட்டரைக் கொஞ்சம் ஆஃபீஸில் கொடுத்துடு.”
சாரதா லீவு லெட்டர் எழுதிக்கொண்டிருக்கையிலும் கார்த்யாயனி ஒன்றும் கேட்கவில்லை. வீங்கிய முகமும் கலங்கிய கண்களும் கண்டு மௌனமாகவே நின்றிருந்தாள். ஏதோ எதிர்பாராத துக்கத்தின் கடினமான காயத்தைமட்டுமே அவள் தரிசித்தாள். என்னவாக இருக்குமது? தெரியவில்லை. காலையில் சாரதாவைப் பார்க்கத் தம்பி வந்திருந்தான் என்பதுமட்டும் அவளுக்குத் தெரியும். அவ்வப்போது அவன் வருவதுண்டே. ஐ.பி.எஸ். பயிற்சியாளனான அந்த ஒரு தம்பி மட்டுந்தானே சாரதாவுக்குச் சொந்தமென்று இருக்கிறவன். என்ன துக்க செய்தியை அவன் கொண்டு வந்திருக்கிறானோ? எதுவும் கேட்கும் சந்தர்ப்பமில்லை. லீவு லெட்டரை மடித்துப் பிடித்துக் கொண்டு கார்த்யாயனி இறங்கிப் போனாள்.
அவள் மாடிப்படியில் இறங்கிப் போவதையே பார்த்துக்கொண்டு சாரதா ஒரு நிமிடம் நின்றாள்.
வருடங்களின் படிகளை மிதித்து சப்தமுண்டாக்கிக்கொண்டு நினைவுகள் இறங்கி ஓடிப்போய்க் கொண்டிருந்தன.
எல்லோரும் போயாகிவிட்டது. ஒவ்வொருத்தராகப் போயினர். ஏகாந்தத்தின் நிசப்த இரவுகளுக்குள் அவளை உதறிவிட்டு. இதோ கடைசி ஆளும் போயாயிற்று.
நகரத்தின் சப்த கோஷங்களுக்கு நடுவில், யாரும் நினைவுகூர நேரம் வீணாக்காத ஒரு முன்னாள் நட்புபோலக் கவற்சியற்றிருந்த ஒரு என்.ஜி.ஓ. பெண்கள் விடுதியின் இருண்ட ஓர் அறையில் தனித்திருந்து அவள் அழுதாள்,. கண்ணீர் விடாமல் அழுதாள். பதினெட்டு வருட இன்க்ரிமென்ட்டும் முப்பத்தெட்டு வருடப் பழக்கமும் உள்ள ஒரு வெறும் இயந்திரம்மட்டுமாகவே இருந்தாள் அவள். அவளுக்கெப்படிக் கண்ணீர் உண்டாகும்…?
மாடியில் ஒட்டடையை நோக்கியவாறு அவள் மல்லாந்து கிடந்தாள். காலம் துடைத்தெறிய மறந்துபோன ஒரு ஒட்டடைதானே அவளும்.
…மிகத் தொலைவில் எங்கோ இளமைப்பருவத்தின் பசுமை நிறைந்த பள்ளத்தாக்குகள் இருந்தன. பூக்கள் நிறைந்த பள்ளத்தாக்கு. அன்று பாட்டிக்கு, காலை பூஜைக்காக அவள் பூப்பறிக்கப் போனாள். காலில் முள் குத்தியது. கையில் சிராய்த்தது. ஆனாலும் பூப்பறித்தாள். ஆனால் கொண்டு போனபோது பாட்டிசொன்னாள்:
“இதொன்றும் ஆகாது மகளே! இதெல்லாம் பூஜைக்கு உபயோகிக்காத பூக்களாகும் மகளே…”
தொட்டால் வாடிப் பூக்கள், வேலிப்பருத்திப் பூக்கள், கொங்கிணிப் பூக்கள், கள்ளிப்பூக்கள், ஊமத்தைப் பூக்கள்!
பூஜைக்குத் தொடாத அப் பூக்கள் முற்றத்து மூலையில் குப்பைத் தொட்டியில் யாருக்கும் வேண்டாமல் கிடந்து அழுதன. கழுத்தில் கருப்புச் சரட்டில் டாலர் கட்டிக்கொண்டிருந்த ஒரு சிறுமி கன்னத்தில் உலர்ந்த கண்ணீர்க் கோடுகளுடன் வராந்தாவின் தூணில் சாய்ந்து அதைப் பார்த்தவாறு நின்றாள். தேம்பித் தேம்பி
நின்றிருந்தாள்.
அந்தப் பாட்டி இறந்து புல்முளைத்துப் போயாயிற்று. அதற்கும் எத்தனையோ வருடங்களுக்கு முன்பு, நினைவுகளும் சென்று எட்டாத இறந்த காலத்தின் பனி மூடிய மண்ணில் தாயும் மறைந்துகிடந்தாள். வெறும் பத்தொன்பதே வயதான அவள் அப்படியாக ஒரு வீட்டுத் தலைவியானாள். சிறகு முளைக்காத ஒரு சிறு தம்பிக்கும், பருவத்தின் துறைமுகத்தை நோக்கி அதிவேகமாகக் குதித்துக்கொண்டிருந்த ஒரு தங்கைக்கும் அவள் திருமணம்கூடக் கழிந்திராத தாயானாள். பிரசவித்தறியாத பாட்டியானாள்.
தகப்பனார் மட்டும் உள்ளே படுத்திருந்தார். பக்கவாதத்தில் அடிபட்டு ஒரு பக்கம் நசுங்கித் தளர்ந்து படுத்திருந்தார். சற்று யோசித்தால் எல்லாவற்றிற்கும் காரணம் அந்த அப்பாதானே? ஆனால் அவ்விதமாக ஆலோசிக்கவே முடியாது. உணர்ச்சிகள் ஒளிவீசிய ஒரு சரித்திர கட்டத்தின் விளையாட்டு பொம்மையாக மட்டுமே இருந்தார் அப்பா. எதற்காக அவரைப் பழி சொல்லவேண்டும்…?
…சுதந்திரம் , சமத்துவம், சோஷலிசம் இவ்வார்த்தைகளின் பொருள் ஒன்றும் எனக்குத் தெரியாது. நாடு என்றும் நாட்டவர் என்றும் சொன்னால் எனக்குத் தெரியாது. ஆனால் அப்பா? இவ்வாழ்க்கை இப்படித் தரிசாகிவிட்டதே – என்று நினைக்குப்போது வருத்தம் வந்து விடுகிறது.
அப்பா ஒரு சுதந்திரச் சிப்பாயாக இருந்தார். ஸத்யாக்ரகம் நடத்தி, “பிக்கெட்டிங்” நடத்தி ஜெயிலுக்குப் போனார். கோஷங்கள் ஊர்வலங்கள் இவைகளின் கட்டுப்பாடற்ற உணர்ச்சி வேகத்தின் உற்சாகத்தில் இழைந்துபோனார். எல்லாம் தொலைந்தது. நெல் கிடைத்துக்கொண்டிருந்த நிலமும், கொஞ்சம் பணம் இருந்த பத்திரமும், தனது ஆரோக்யமும் கூட. இறுதியில் கொஞ்சமும் முடியாமல் தளர்ந்து விழுந்தார். அப்படிக் கிடக்கும்போதும் அப்பாவின் சிந்தனையும் பேச்சும் முழுக்க அதுவாகத்தானிருந்தது. அவளால் ஒரு போதும் புரிந்துகொள்ள முடியாத விஷயங்களைப்பற்றியும் , ஆட்களைப் பற்றியும், சம்பவங்களைப்பற்றியும், நாடும் நாட்டவரும் பொதுப் பிச்னைகளும். அப்பாவின் மனநிலையைப் பாதித்த தீராத புற்று நோயாயிருந்தது அது. படுக்கையில் விழுந்த பிறகும் முதலிலெல்லாம் யாராரோ அப்பாவைப் பார்க்க வருவதும் போவதுமாக இருந்தார்கள். மெதுவாக அதுவும் நின்றது. இறுதியில் மறதியின் ஆழம் மிகு தடாகத்தில் வீசி எறியப்பட்ட ஒரு கல் போல அப்பா பாசி பூசிக் கிடந்தார். அவ்வாறாக இருந்தது தியாக ஒளியான ஒரு வாழ்வின் மகத்தான முடிவு. ஆனால் ஒருவிதத்தில் அப்பா அதிருஷ்டசாலியாக இருந்தார். என்றே நினைத்துக்கொள்ள வேண்டும். தான் நினைவுகூரப்படாதவ னென்றும், அறியப்படாத ஆயிரம் பேர்களில் ஒருவனேயென்றும் இறுதிவரை புரிந்துகொள்ளாமல் இருந்தாரல்லவா. வேறு யாருக்காக இல்லா விட்டாலும் தனது மூன்று குழந்தைகளுக்காகவாவது விலை மிக்கதாயிருந்திருக்கக்கூடிய ஒரு வாழ்க்கையைத் தொலைத்தோமென்று அறிய வில்லையல்லவோ. மோகவெறியில் பிறந்த அம் மகனைப் பிரசவித்ததைத் தொடர்ந்து உண்டாகிய நோய்க்காலங்களில், தொலைதூரத்தில் எங்கேயோ உள்ள இருண்ட சிறையில்போய்க் கிடக்காமல் இருந்திருந்தால், ஒருபோதும் ஒரு குறையும் கூறியறியாத தன் சாதுவான மனைவிக்காவது அகால மரணம் நேரிட்டிருக்காது என்று நினைத்துப் பார்க்கவில்லையல்லவா.
“நீங்களெல்லாம் உட்கார்ந்து அனுபவிக்கும் இந்தச் சுதந்திரம் இருக்கே, அதற்காக நானெல்லாம் பாடுபட்டேனாக்கும்.”
“இந்த ஜனாதிபத்யம் இருக்கே, இதை ஸ்தாபிக்க நான் என் வாழ்க்கையையாக்கும் கொடுத்தேன்.”
என்று தற்பெருமையுடன் தானே உருவாக்கிக்கொண்ட ஓர் ஆத்ம திருப்தியின் மூட உலகத்தில் மயங்கிக் கிடக்க அப்பாவால் இயன்றிருந்தது.
“நான் எதையும் அடைய நடக்கவில்லை. சிபாரிசுக்கும் உதவிக்கும் நடந்ததில்லை. துன்பத்துக்குக் கூலி பெறவும் முயலவில்லை. புரிந்ததா…?
ஆனால், வீடு இருந்த தோட்டம் தவிர வேறெதுவும் பாக்கியில்லை. இலட்சியம் நிறை சுய பிரதாபத்தின் தீ நாக்குகளில் சிறகு கரிந்து துடித்து விழுந்த ஒரு விட்டில்பூச்சியாக இருந்தார் அப்பா.
அந்த ஆதரவற்ற நிலையின் மத்தியில்தான் அவள் படிப்பை நிறுத்தினாள். எத்தனை சிறியதாயிருந்தாலும் பரவாயில்லை, உத்யோகம் தேடினாள். 45-75-ன் ஒற்றையடிப்பாதையினூடே ஒரு லோயர் டிவிஷன் கிளார்க்காக அப்படி அவள் நடக்கத் தொடங்கியபோது ஒரு புதிய தீர்மானத்தின் ஆரம்பமாயிருந்தது அது.
எல்லாம் நேற்று நடந்ததுபோல நினைவிருக்கிறது. குமுறி அழுதவாறேதான் காலேஜிலிருந்து விலகினாள். தோழிகளுக்கு நடுவிலுள்ள அந்த உல்லாச வாழ்க்கை, எல்லாக் கஷ்டங்களும் கிலேசங்களும் மறந்துபோகும் மகிழ்ச்சி நிறைந்த நிமிடங்களாயிருந்தன. நேரங் கெட்ட நேரங்களில் ஒரு காரணமும் இல்லாமல் வெடித்துச் சிரிக்க முடிந்தது. என்னவெல்லாம் ஆசைகள், கனவுகள்… எல்லாம் நிறம் மங்கி இதழ் உரிந்து கீழே விழுந்தன. கையிலணிந்துகுலுக்கிக் கொண்டிருந்த மோகத்தின் கண்ணாடி வளையல்களெல்லாம் உடைந்து சிதறிப் போயின. வாழ்க்கை அவளை ஒரு சுமைதாங்கியாக மாற்றிக் கொண்டிருந்தது. ஒரு எரிச்சலோ, குறையோ, முணுமுணுப்போ இன்றி அவளை விதி ஆட்கொள்ளவும் செய்தது. தெளிவற்ற ஏதோ ஒரு தீர்மானத்தின் பதிந்த பாவுகற்களினூடே அழுத்தி மிதித்து அவள் நடந்துபோனாள். இடவலம் நோக்காமல், ஒரு நிமிட சஞ்சலமும் இல்லாமல்.
ஹா! ஒரு நிமிட சஞ்சலமும் இல்லாமலா? அப்படிச் சொல்ல முடியுமா…? அங்கே நினைவுகள் இடறுகின்றன. தகர்ந்த மோகங்கள் வாய்விட்டு அழுகின்றன. கடந்த காலத்தின் வேதனைகள் மீண்டும் வீங்கி உடைந்து சீழ்வடிக்கின்றன. தியாகம் என்று எத்தனையோ இனிப்பான செல்லப் பெயரிட்டு அழைத்தாலும், அது ஒரு கொலை பாதகமாகத்தானே இருந்தது? தன்னுடைய மட்டுமல்ல, இன்னொருவருடையவும்கூட. வாழ்க்கை அபிலாஷையின் கழுத்தை நெரித்துக் கொல்லுவதாகவே இருந்தது அது.
எல்லாம் எதற்காக…? ஒன்றும் கிடைக்கவில்லை. ஒரு இடத்தையும் சென்று அடையவுமில்லை. இல்லாத குறிக்கோளை நோக்கிய அர்த்த சூன்யமான ஒரு பயணமாக ஆகிவிட்டிருக்கிறது எல்லாம்.
கடவுளே! எனக்கு மன்னிப்புத் தரணுமே…
நனைந்த கண்ணிமைகள் முன்பு பாலச்சந்திரன் இப்போதும் வந்து நிற்கிறான். இன்றுமாதிரி நரைத்த மயிருடனல்ல. மேலே ஏறத் தொடங்கிவிட்ட நெற்றியோடல்ல; முகமெல்லாம் சுருக்கமும் கோடுகளும் விழுந்து உட்புறமாகச் சற்று வளைந்து தளர்வுமேலிட்ட அஸிஸ்டின்ட் செகரட்டரியாகவல்ல.
தடித்த ஃப்ரேம் கொண்ட கண்ணாடி வழியாக உயர்குடிப் புன்சிரிப்புச் சொரியும் சிவந்த, மெலிந்த, ஆரோக்யவானாகிய இளைஞனாக, யாரையும் நிராயுதபாணியாக்கும் மென்குணம்மிக்க புருஷனாக.
பாலச்சந்திரன் அன்று சூப்பிரின்டெண்டாக இருந்தான். அவனுடைய ஸெக்ஷனில்தான் சாரதா முதலில் வேலை செய்தாள். அவன்தான் அவளுக்குப் பர்ஸனல் ரிஜிஸ்டர், ட்ராஃப்ட், நோட், சப்மிஷன் எல்லாம் கற்றுக் கொடுத்தான். ஒரு உத்யோகஸ்தினளாக மாற்றினான்.
ஒரு லீவு நாளில் வேலை முடிந்து திரும்புகையில் ஆஃபீஸின் பின்னால் மலைவாழைகள் கொண்டையை நிமிர்த்தி நின்ற பூந்தோட்டத்தின் சமீபத்தில் பூத்துக் குலுங்கி நின்ற குல்மோஹர் செடியின் அடியில் பாலச்சந்திரன் அவனிடம் கேட்டான்.
“சாரதாமேல் ஆசைப்பட எனக்கு அருகதையுண்டா……?
அந்த குல்மோஹர் செடி போலவே மனமும் அசைந்து குலுங்கியது. பூக்கள் உதிர்ந்து இலைகள் பறந்தன.
அப்படியொரு கேள்வியை ஒருபோதும் யாரிடமிருந்தும் செவியுறப் போவதில்லை என்று மனப்பூர்வமாக எண்ணியிருந்தாள். உறுதியாயிருந்ததாள். மனத்தின் அந்தப் பக்கத்து ஜன்னல்களையெல்லாம் அடைத்துச் சாத்தி பத்திரப்படுத்தியிருந்தாள். அப்படியிருந்தும் இதோ…..
.. நீ யாரைத் தவிர்க்க ஆசைப்பட்டாயோ அவனே இதோ….
அக்கேள்விக்கு ஒரு பதிலை மனதில் தயாராக வைத்திருக்கவி்ல்லை. அதைப்பற்றி சிந்திக்கவே இயன்றிருக்கவில்லை. பக்கவாதக்காரனாகிய ஒரு தந்தையின், தாயற்ற மகளாக இருந்தாள் அவள். பருவமடையத் தொடங்கியிருந்த ஒரு தங்கையினுடையவும், வயது வராத ஒரு தம்பியினுடையவும் மூத்தவளாயிருந்தாள் அவள். ஒரு குடும்பத்தைத் துழவிச் செல்லவேண்டிய தலையெழுத்துக் கொண்ட ஓடக்காரியாக இருந்தாள் அவள். அப்படியொரு கேள்விக்கு அவள் வாழ்க்கையில் இடமிருக்கவில்லை. அதனால்தான் பதிலைப்பற்றி யோசிக்கவேண்டிய அவசியமும்.
மைதானத்திலிருந்து வந்த காற்று மலைவாழைகளின் இலைகளை அடித்துக் கிழித்துத் தோரணமாக்கிக்கொண்டிருந்தது. குல்மோஹர் பூக்கள் பாய்ந்து பறந்தன. யௌவனத்தின் அரும்பொருளான மந்த ஹாஸத்தைப் போன்ற சிவப்புப் பூக்கள் தாங்கி யூஃபர்ஸியா கொடிகள் கம்பி வேலியில் படர்ந்திருந்தன. ஆகாயத்தில் அந்தி மேகங்கள் சாட்சி நின்றன.
அவள் ஒன்றும் பேசவில்லை. மெல்ல நடக்க மட்டும் செய்தாள். திரும்பிப் பார்க்கக்கூட இல்லை. திரும்பிப்பார்க்க முடியவுமில்லை. அல்ல, சற்றுத் திரும்பிப் பார்த்திருந்தால், அம்முகத்தின் மாற்றத்தைக் கண்டிருந்தால், அக்கண்களின் காந்த சக்தியின் வசீகரப் பரப்பில் விழுந்திருதால்…
விழுந்திருந்தால்…. என்னவாயிருக்கும்?
வேரோடு சாய்ந்து விழுந்துவிட்டிருக்காது?
துயரம் தோய்ந்த இதயத்தின் எல்லாத் துன்பங்களுடனும் அவனுடைய காலடியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டிருக்க மாட்டாள்.? மெதுவாக நடந்து போய்க்கொண்டிருந்தபோது இதயத்தின் ஆழ்மட்டத்தில் எங்கேயோ துணையற்ற ஒரு ஆசையின் ஆதரவற்ற குரல் கேட்டது. ஆழமான ஒரு பள்ளத்தாக்கிலிருந்து வருவதைப்போல முனகி முழங்கியது. அதுவும் கேட்காத மதிரி நடித்து நடந்தாள். சுய கட்டாயங்களின் கற்படுக்கைகளினூடே அழுத்தமான காலடிகளுடன் நடந்தாள்.
…கடவுளே!…பதறக்கூடாது…வழுக்கக்கூடாது…விழக்கூடாது…
ஆனால், இரவில் உறங்க முடியவில்லை. அடுத்த தினங்களில் ஆஃபீசுக்குப் போக முடியவில்லை.
நினைவின் வாசலைப் பாதி திறந்து எட்டிப் பார்த்து, கண்களில் புனித ஒளியின் டார்ச் அடித்துக் கொண்டு, மென்மையும், உணர்ச்சி மிக்கது மான தொனியில் கேட்கிறான்:
“சாரதாமேல் ஆசைப்பட எனக்கு அருகதையுண்டா…?
நாணத்துடன் நிற்க மட்டுமே முடிகிறது. அவிழ்ந்து விழுந்த தலை மயிர்க்கொத்தில் முகச் சிவப்பை ஒளித்து, மௌனமாக நிற்கமட்டுமே முடிகிறது.
பெண்ணே! நீ பிறந்ததே இந்தக் கேள்வியைச் செவியுறமட்டுமே… என்று யாரோ சதா உள்ளே ஜபிக்கிறாரகள். அவ் வார்த்தைகளின் மயக்கத்தில், அந் நினைவின் மணத்தில் எல்லாம் மறந்து லயித்து நின்றுவிடும் ஆத்மாவில் ஒரு குல்மோஹர்.
பூத்துக் குலுங்கி நிற்கிறது.
அதனுடைய இயல்பான இதழவிழ்தல் என்னவாகியிருக்கும்..? பெண்மையின் அந்தச் சலசலப்பு வாழ்க்கையின் சங்கீதமாகவே மலர்ந்திருக்குமல்லவா..? விண்வெளியின் செவிகளிலும்கூட அந்த ஆனந்தகானத்தின் ராக தாரைகள் சென்று ஒலித்திருக்குமல்லவா..?
ஆனால்,எதுவும் அதன் இயல்பான முடிவை அடைவதில்லையே. விதியின் மாயக்கரங்கள் எல்லாவற்றையும் மாற்றித் தலைகீழாக்கி விட்டன. எல்லாம் வீழ்ந்து உடைந்தன. ஏன் விதியைப் பழிக்க வேண்டும்…?
…எல்லாவற்றிற்கும் காரணம் நான்தான்.
கொம்பன் யானைகளைப்போலக் கருமேகங்கள் மதமுற்று நிற்கும் ஆகாயம் மட்டுமே இனி பாக்கி. பேய் மழை எப்போது வேண்டுமானாலும் பெய்யலாம்.
அப்பா திடீரென்று இறந்துபோனார். மரணம் அதன் விருப்பம் போல் வந்து அப்பாவை வருடியபோது அவள் உணர்ச்சியற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள். மாரில் அடித்துக்கொண்டு அழவில்லை. மயக்கமாக விழவில்லை. இயக்கமற்றுப் பார்த்துநின்றாள்.
–இனி அப்பா இல்லை. மகளைக் கொஞ்ச அப்பா அறிந்திருக்கவில்லை. வாத்ஸல்யத்தை விளிப்படுத்த அவருக்கு இயன்றிருக்கவில்லை. ஆறாயிரம் காத தூரத்திலிருந்த வெள்ளையர்களின்மேலிருந்த வெறுப்பாக இருந்தது அப்பாவின் மனம் முழுவதும். அதிலிருந்து விடுபட்டபோது, பதிலாக வந்தவர்கள்மேல் திரும்பிவிட்டது. வீரமும் வெறியும் மட்டும் கனன்றுகொண்டிருந்த ஒரு வாழ்க்கையாக இருந்தது. வாழ மறந்துபோன ஒரு மனிதனாயிருந்தார் அப்பா.
ஆனால், அதிசயமென்றே சொல்லலாம்; மரணத்தின் முன்னால் இனமறியாத ஏதோ உந்துதல்போல அப்பா அவளை அருகில் அழைத்தார். மேலிருந்து துவாரங்கள் வழியாகச் சிவப்பு ஒளி வட்டங்கள் விழுந்துகொண்டிருந்த அந்தி வேளை. தோட்டத்து எல்லையிலிருந்த உயரமான கரும்பனையின் கருநிழல் நீண்டு நீண்டு வந்து திண்ணையில் விழுந்து கிடந்திருந்தது. அவள் பக்கத்தில் சென்றபோது, என்னவோ என்று பார்த்தபோது, அப்பாவின் கண்கள் நிறைந்து கவிந்திருக்கின்றன. ரோமம் அடர்ந்த முகத்தின் ஆழங்களில் இரு கண்ணீர்த் தடாகங்கள்.
ஒருபோதும் அழுதிராத அப்பா அழுகிறாரோ?
வெளிறிச் சூம்பிய கரங்களால் அவளை அணைத்துப் பிடித்துக்கொண்டு சிதறிய தொனியில் அப்பா அழைத்தார்.
“என் அதிர்ஷ்டம் கெட்ட…மகளே…” அத்தனை ஜீவராசிகளின் முழு வாத்ஸல்யமும் சிநேகமும் அதனுள் அடங்கியிருந்தன. தொடர்ந்தும் ஏதோ சொல்ல அவ்வுதடுகள் அசைந்தன. ஆனால், எதுவும் வெளிவரவில்லை. ஒன்றும் சொல்லாமலேயே அவ் வாழ்க்கை முடிந்தது.
அவள் மரத்துப்போய் நின்றாள். தங்கையும் தம்பியும் ஓலமிட்டு விழுந்து அழுதபோதும் அவள் மரத்துநின்றாள்.
அவ்வுதடுகளில் துளும்பி நின்ற வார்த்தைகள் என்ன…? கடைசியாக அப்பாவுக்குச் சொல்லவேண்டியிருந்தது என்னவாயிருந்திருக்கும்…?
வருடங்கள் குளம்பு ஒலியுண்டாக்கி, புழுதிப்படலம் உயர்த்திக் கொண்டு கண்முன்னால் கடந்துபோயின. பெருமை பேசும் ஊர்வலங்கள்… பொதுக்கூட்டங்கள்… ஸத்யாக்ரகங்கள்… மறியல்கள்…எல்லாவற்றிற்கும் முன்னால் கதர்த்தொப்பியணிந்த ஆஜானுபாகுவான ஒரு ஆளைக்காணோம். பத்திரிகைகளில் எல்லாம் அவருடைய படம் காணப்பட்டிருக்கலாம். பேச்சுக்கள் அச்சாகி வ்திருக்கலாம். அப்பா!
அன்றும், சிறுமியாயிருந்தபோதே, அவள் பாவாடையும் ஜாக்கெட்டு மணிந்து பையைத் தோளில் மாட்டிக்கொண்டு ஸ்கூலுக்குப் போகும் போது ஜனங்கள் மரியாதையுடன் சுட்டிக்காட்டிச் சொல்வதைக் கேட்டிருநந்தாள்.
“…டைய மகள், தெரியாதா?”
அந்தத் தந்தையின் மகள்தான் இப்படி…
இல்லாவிட்டால் – அத் தந்தையின் பெருமை என்னாயிற்று…? அறிந்து கொள்ளப்படாமல், அங்கீகரிக்கப்படாமல், ஆதரிக்கப்படாமல்… ஆறடி மண்ணில் எல்லாம் அடங்கிப்போயிற்று.
காட்டு எருக்கும், கானாநாரிச் செடிக்கும் மட்டுமே மலர் வளையங்கள் சமர்ப்பித்துத் தலைகுனிந்து நின்ற அம் மயானத்தில் புதிதாக நட்ட தென்னங்கன்றின் இளங்குருத்துக்களை நோக்கியவாறு அவள் அசைவற்று நின்றாள். அத் தென்னையின் அடியில் ஒரு வாழ்க்கை முடிந்து கிடக்கிறது. ஆழ்ந்த நித்திரையில் அமிழ்ந்து கிடக்கிறது. மறதியின் சில்லிட்ட இருளில் மறைந்து கிடக்கிறது.
இப்போதும் அக் கண்கள் நிறைந்து தளும்பிக்கொண்டிருக்குமோ…?
–அப்பா கொஞ்சம் சொல்லுங்கள் கடைசியாகத் தெரிவிக்க வேண்டியிருந்தது என்ன…?
வாழ்க்கையின் சூன்ய பூமிகளில் ஆதரவற்றவர்களாக விட்டுச் செல்லவேண்டி வந்த இக் குழந்தைகளைப் பற்றியோ…? சிறகு முளைக்காத சிறு தம்பியின் எதிர்காலத்தைப் பற்றியோ…? ஒன்றுமே ஆகியிராத தங்கையைப் பற்றியோ…?
வாழ்ந்திருந்தபோது அப்பாவுக்கு ஓய்வு இருக்கவில்லை. மரணத்திலாவது அது கிடைக்கட்டும். உறங்கிக்கொள்ளுங்கள். ஓய்வின் அமைதியில் உறங்கிக்கொள்ளுங்கள். கடைசி நிமிடத்தில் எவ்வளவு முயன்றும் சொல்ல இயலாத அவ் வார்த்தைகளுக்கு நான் இதோ பதில் கொடுக்கிறேன்.
–எல்லாவற்றையும் நான் ஏற்கிறேன். அப்பாவின் நற்பெயரையும், பெருமையையும், தங்கை தம்பியின் வாழ்க்கையையும் எல்லாம் நான் ஏற்கிறேன்.
அப் பிரதிக்ஞையை நிறைவேற்றுவதற்கான பூரணமான ஒரு சமர்ப் பணமாக இருந்தது அதன்மேற்கொண்டு. ஒரே சிந்தனையோடு கூடிய ஒரு பிரயாணம். அப் பிரயாணத்தில் விரும்பிய பலவற்றையும் தட்டித் தள்ளவேண்டி வந்தது. விலை மதிப்பற்ற பலவற்றையும் தூக்கி எறிய வேண்டிவந்தது. அதுவே ஒரு பெண்ணின் மிகவும் பெரிய வாழ்க்கை என்பதுபோல. முடிந்துபோன அந்த தர்மசங்கட முகூர்த்தம் இன்றும் உயிர்த்துடிப்புடன் நினைவிருக்கிறது.
அப்பாவின் மரணச் செய்தியறிந்து பாலச்சந்திரன் ஓடிவந்து சேர்ந்தான். கொள்ளிவைப்போடு சம்பந்தமான எல்லா விஷயங்களையும், உறவினனும் பொறுப்பு உள்ளவனும் போல அவன் விசாரிக்கலானான். அதற்குப் பிறகும் பல சமயங்களில் வந்தான். தன்னுடைய சௌம்யமான பிரசன்னத்தினால் அவன் ஒளியைத் தூவத் தொடங்கியிருந்தான். கண்ணீ்ர் மேகங்கள் நிறைந்த , அவளது தனிமையெனும் பயங்கரம் நிறைந்த இரவுகளில் ஒரு வசந்த பௌர்ணமி போல வந்து சேர்ந்திருந்தான். அந்த நல்தரிசனங்கள் அதிகமாகுந்தோறும், முதலிலேயே பிரச்னைகள் நிறைந்த வாழ்க்கை இன்னும் அதிகமாகச் சிக்கலடையாதோ என்று பயந்தாள். அதனால் வெளிப்படையாகச் சொன்னாள். அன்பும், நட்புறவும், உதவியும் மட்டுமே என்றும் நல்கிய நல்லவனாகிய அம் மனிதனிடம் இங்கிதமின்றிச் சொன்னாள். மென்மையற்ற வார்த்தைகளையே தேர்ந்தெடுத்து மனப்பூர்வமான குரூரத்துடன் சொன்னாள்:
“எனக்கு ஒரு நாளும் திருமணம் கிடையாது.”
வெளிறிப்போன முகத்தில் வேதனை தளும்பி நிற்க அவன் சொன்னான்: “எத்தனைநாள் வேண்டுமானாலும் நான் காத்திருப்பேன்…”
பெண்மையின் இயல்பான சாதுர்யமும், யௌவனத்தின் உணர்ச்சி பூர்வமான மோகமும் வந்து கையைப்பிடித்து விலக்கும்முன்பு அடித்துச் சொன்னாள்:
“வேண்டாம், அது வேண்டாம்… எனக்கு ஒருபோதும் திருமணம் நடக்காது. அது நிச்சயம். எனக்காக யாரும் காத்திருக்கவேண்டாம்.”
நிஷ்களங்கமான அன்பின் பரந்த மார்பில், ஓங்கியெறிந்த கட்டாரி போல அவ் வார்த்தைகள் சென்று தரித்திருக்கவேண்டும். வேறொன்றும் கூறாமல் போய்விட்டான். வழியில் ஒரு நிழல்கூட விழவிடாமல் போய் விட்டான்.
அதற்குப்பிறகு ஒரே சிந்தனையோடு வாழ்க்கையை ஒரு தவமாக்கிக் கொண்டாள். ஒரு பழைய ஃபைலைப்போல மனத்தை அதனுடைய எல்லாத் தளர்ச்சிகளுடனும் சிவப்பு நாடாவால் இறுகக் கட்டி வைத்தாள். சமுதாயத்தின் நியதிகளையெல்லாம் பின்பற்றி ஒடுங்கி நடந்து, பாதையின் இடது பக்கமாகவே நடந்தாள். 45-75-லிருந்து 50-150-க்கும், 90-200-க்கும் மட்டுமே வழிவிட்டு நடந்தாள். வருடங்களின் படிக்கட்டுகளை மிதித்துத் தள்ளினாள். பணிவான தினங்களின் வாட்டமிகு ஆவர்த்தனங்கள். அதன் நடுவில் செய்து தீர்க்கவேண்டிய பலவற்றையும் செய்து தீர்த்தாயிற்று என்ற ஆத்ம திருப்தி மட்டும் உண்டு. தங்கையின் திருமணத்தை நடத்தினாள். குழந்தைகளும் குடும்பமுமாகத் தொலைதூர நகரத்திற்கு அவள் பறந்துபோனாள். கூட்டில் அடைந்தும் விட்டாள். தம்பியும் ஒரு நிலைக்குவரத் தொடங்கி விட்டான். வீட்டையும் தோட்டத்தையும் இதற்கிடையில் விற்க வேண்டி வந்தது. அதனால் என்ன… கடமைகளின் சுமைகளை ஒவ் வொன்றாகத் தீர்த்து இறக்கியாயிற்று. இனி எதுவும் செய்து தீர்க்க பாக்கி வைத்திருக்கவில்லை.ஆனால் காலம் இதற்கிடையில் தலையில் வெண்பூக்கள் பின்னிவிட்டன. கன்னங்களில் துடிப்பு மாய்ந்து போயிற்று. யௌவனம் கொஞ்சம் கொஞ்சமாக விடைபெற்றுக் கொண்டது. பிரிந்தது. கதிரவன் அடிவானத்தைக் கடந்திருக்கிறான். இதற்கு நடுவே பலரும் நுழைந்து வந்தனர்; பலரும் பிரிந்து போயினர். இரவு பகல்கள், நீண்ட வருடங்கள், இப் பழைய மகளிர் விடுதியின் இருண்ட அறையிலிருந்து செக்ரட்டேரியட் வரையிலுள்ள இடுங்கிய வழியில் இடது ஓரமாக ஒடுங்கி நடந்தாள். எவ்வளவு பேர்கள் கூட்டாளிகளாக மாறிமாறி வந்தனர்.
சுமதி, ஆனி, ராதை, மேரி, இந்திரா, ஸ்ரீதேவி….
ஒவ்வொருவராகப் பிரிந்துபோயினர். ஒவ்வொரு சிறிய குடும்பத்தின்
ஓங்கிய சுவர்கட்குள்ளாக… குலுங்கும் கொலுசுகள் அணிந்த சிறு பிள்ளைகள் ஆரவாரத்துடன் விளையாடும் மண் முற்றங்களை நோக்கி… ஒரு தண்ணீர்விட்டான் கொடியைப் போல மெலிந்து ஒற்றைப் புறாவைப்போல் ஒதுங்கியவளான அந்த மைத்ரேயிகூட ஒரு காதல் திருமணத்தின் தீரத்துடன் வெளியே போனாள். அவர்கள் தாய்மாராயினர். சிலர் பாட்டிமாராகவும் ஆயினர். தமது இல்லற சௌந்தர்யத்தின் சுகமிகு ஆனந்தத்தில் நெருங்கியமர்ந்து சலசலத்துக் கொண்டிருந்த அத் தாய்ப்பறவைகளை, சாதாரண பார்வையாளர் ஒருவரைப் போலப் பார்த்திருந்தாள். அதிருப்திமிகு தாகத்துடன், நிராசையின் இருப்போடு, பரிதாபமிகு களைப்புடன் நோக்கி நின்றாள்.
- நான் மட்டும் காலால் உதைத்து எறியப்பட்டிருக்கிறேன்.
ஆட்கள் வருவதும் இளைப்பாறுவதும் பிரிவதுமான ஒரு தங்குமிடத்தில் இருள் அடரும் நேரம் மாதிரியிருந்தது அவருடைய வாழ்க்கை! அதே ஒற்றையடிப் பாதையோடு ஆஃபீசுக்கும், திரும்பி விடுதிக்குமாயுள்ள ஒரு நடை இடைவிடாமல் தொடர்ந்து கொண்டேயிருந்தது. முற்றுப்புள்ளியற்ற ஒரு வாழ்க்கைச் சக்கரம் போலத் தானே
நிர்மாணித்த சிலந்தி வலையில் சுற்றிச் சுழல்கிறாள்! வறுமையின் சிலந்தி
வலையிலேயே எல்லாம் முடிகிறது…
நினைவுகளின் முன் மலர்த்தட்டு ஏந்தி நின்ற அந்த குல்மோஹர் மட்டும் உள்ளே கண்ணீர் அருவிகளை உண்டாக்கிற்று. இக் கண்ணீர் அருவியின் கரையில் ஒருநாளும் மலராத குல்மோஹரின் கீழே யாரையும் எதிர்பாராமல் தனித்துக் காத்திருக்கிறாள்.
எனக்கு ஒருபோதும் திருமணம் ஆகாது.
எனக்காக யாரும் காத்திருக்க வேண்டியதில்லை.
இறந்த காலத்தின் நடைபாதைகளில் தானே சிதறித் தூவிய அம்முட்கள் நினைவின் காலில் குத்தி இரத்தம் சிந்துகிறது. வேதனை உண்டாக்குகிறது.
- பாலச்சந்திரன். ஆஷாட மாதத்தின் முதற் பூவைப்போல உன் இதய நறுமணத்துடன் நீ ஏன் என்னை எழுப்பிவிட்டாய்? காலம் உன் கண்ணீரைத் துடைத்து விட்டது. என் கண்ணீர்…?
பாலச்சந்திரனைப் பார்ப்பதுண்டு; மனப்பூர்வமான முயற்சிசெய்து தன்னுடைய செக்ஷனை மாற்றிக்கொண்டு போன பிறகும் சில நேரங்களில் ஒருபோதும் எதையும் நினைவுபடுத்தவில்லை. நட்பின் புன்னகையை மட்டும் அளித்துப்போனான். ஆனால், பார்த்தபோதும் பார்க்காதபோதும் அவன் லாபநஷ்டங்களின் துக்கமயமான நினைப்பை உண்டாக்கினான். தீவிர வேதனையின் தீ நாக்காகக் கொழுந்துவிட்டான்.
அவன் திருமணம் செய்துகொண்டான். தகப்பன் ஆனான். வாழ்க்கைப் பயணத்தில் வெகுதூரம் முன்னேறினான். ஆனாலும், இனமறியாத ஏதோ ஓர் சக்தி எந்நாளும் அவளை அவன் பக்கமாகக் கவர்ந்தது. அவனுடைய வாழ்க்கையைப்பற்றியும், சந்தோஷத்தைப் பற்றியும் எப்போதும் கவலைமிகு பரபரப்புடன் மௌன விசாரிப்பு நடத்தினாள். ஏக்கம் நிறைந்த ஆசையுடன் மனம் அவள் பின்னாலேயே சென்றது. எப்போதும் மௌனமாகப் பிரார்த்தித்தது.
- அவனுக்குக் கடவுள் கருணை காட்டட்டும்.
அவனுடைய குடும்பத்துடன் பரிச்சயமாயிற்று. மெல்ல அக்குடும்பத்தின் ஒரு பார்வையாளரானாள். அக் குழந்தைகளின் விளையாட்டுத் தோழியும் அன்பிற்குரியவளுமானாள். அக் குழந்தைகளைக்கட்டியணைத்து முத்தமிட்டபோது மட்டும் நெஞ்சில் தாய்மை சுரந்தது.
ஆனால், அவ்வுறவுகளைப்பற்றி ஜனங்கள் கட்டத்தொடங்கிய கதைகள் எதையும் அவள் அறியவில்லை. மயிர் நரைக்கத்தொடங்கிய மத்ய வயதுக்காரியான இப் பழைய அப்பர் டிவிஷன் கிளார்க்கின் புதிய உறவைப்பற்றி ஏராளம் கதைகள் சொன்னார்கள். அவளறியாமல் அவள் வம்புக்குப் பாத்திரமானாள். இளைஞர்களான புதுப்பணியாளர்களுக்கு, ஒரு நடுவயதுக்காரியின் சிரிப்புக்கிடமான சபலம், சூடான வம்பாயிருந்தது. போனி டெயில் கட்டி, லிப்ஸ்டிக் தடவி, மெல்லிய நைலான் துணிக்கடியில் தத்தம் உடம்பின் பூகோள சாஸ்திரத்தைக் காட்டி நடந்த யுவதிகள், ‘வெயிட்டிங் ரூமில்’ அவளைக் கண்டால் தமக்குள் கிசுகிசுத்தார்கள்.
“கிழவிக்கும், கிழவனுக்கும் ஒரு காதல்….” தங்கள் வயதுக்குச் சுமக்க முடிந்ததற்கும் அதிகமான கதைகளைத் தாமே நடத்திக் காட்டியிருந்த அந்த யுவதிகள் மூக்கு முழி வைத்துப் பரப்பினார்கள்.
“அங்கேயேதான் தங்கியிருக்காளாம்.”
“ஒருநாள் ரெண்டு பேரையும் கன்யாகுமரியில் பார்த்ததாக என் கஸின் சொன்னான்.”
“இத்தனை வயசானப்புறமும் வெட்கமில்லையே, அதான் எனக்கு ஆச்சரியமா இருக்கு.”
அவள் இதையொன்றும் அறிந்திருக்கவில்லை. நேற்றுத்தான் முதன் முறையாகக் கேட்க நேர்ந்தது. நேற்று முதல்முதலாகக் கேட்டபோது நடுங்கிச் சிதறிப்போனாள். குரூரமான ஓர் விதியின் விளையாட்டுபோல பாலச்சந்திரனிடமிருந்து அதை அறிய வேண்டி வந்தது.
எல்லாம் பழைய பின்னணியிலேயே நடந்தது. ஆஃபீஸின் பின்புறம் அந்தி வெயிலின் பொன்னொளியில் மூழ்கிக் கிடந்தது. மைதானத்திலிருந்து காற்று ‘ஓ’வென்று வீசியடித்துக்கொண்டிருந்தது. எதிர்பாராமல்தான் பாலச்சந்திரனைப் பார்த்தாள். அரங்கமும் கதா பாத்திரங்களும் எல்லாம் முன்போலத்தான். நடிக்கவேண்டிய பாகங்கள் மட்டும் தமக்குள் மாற்றிக்கொள்ள வேண்டி வந்திருக்கிறது.
“என் குடும்ப வாழ்க்கையைத் தகர்க்காமலிரு சாரதா, நீ விரும்பியதுபோல நானே விலகிப்போனேன்… எனது இவ்வழியிலாவது ஒதுங்கிப் போக என்னை விடமாட்டாயோ…”
ஸ்தம்பித்துக் கேட்டிருந்தாள். உணர்ச்சியற்றுக் கேட்டிருந்தாள். ஒரு வார்த்தை கூட வரவில்லை. உள்ளே சுழல்கள் சுற்றிச் சுழன்றன. மலர்கள் விரிந்து வெடித்துச் சிதறின. நுங்கும் நுரையும் கலந்து கலங்கிக் குழம்பின. நீண்டு விழுந்த தன் நிழலை ஊடுருவிக்கொண்டு களைப்புற்ற அவன் நடந்து போவதைப் பார்த்தவாறு பிரமித்து
நின்றாள்.
எங்கும் யாரும் இருக்கவில்லை. கொண்டையுயர்த்தி நின்ற மலை வாழைகள் இல்லை. பூத்து நின்ற குல்மோஹர் இல்லை. இளமையின் அரும்பொருளான மந்தஹாஸத்துடன் நின்ற யூஃபர்ஸியாக் கொடிகளில்லை. பழங்கதையை நினைவுபடுத்த யாருமில்லை. வெற்றான ஆகாயம் மட்டும் இடியுண்டாற்போலிருந்தது. காலம் இயக்கமற்றுப் பார்த்திருந்தது. முன்பு கொண்டையுயர்த்தி நின்ற மலைவாழைகளின் பின்னணியில், பூத்து நின்ற குல்மோஹரின் இடத்தில் புதுக்கட்டடங்கள் கட்டுவதற்காகக் கொண்டுவந்து தள்ளிய கருங்கல் ஜல்லிகள் குன்றாகக் கிடக்கின்றன.
கருங்கல் ஜல்லிகள்! தத்தம் கனவுகளுடன் மகிழ்ச்சி நிறைந்த கற்பனைகளில் மயங்கியிருந்த அப் பூக்கள், இக் கருங்கற்களின் கீழே நசுங்கித் தேய்ந்து கிடக்குமாயிருக்கலாம்…
நசுங்கித் தேய்ந்த மனத்துடன் இரவு முழுவதும் கிடந்து அழுதாள். இமையை மூடக்கூட முடியாமல் தேம்பியழுதாள். எல்லாம் தகர்ந்து போயிற்று. தாறுமாறாயிருக்கிறது… உறங்காத இரவின் கரிய ஜாமங்களில் திடமான முடிவ செய்தாள். காலையில் ஆஃபீசுக்குப் போனதும் தம்பிக்கு ஃபோன் பண்ணவேண்டும்.
மாலையில் ஹாஸ்டலுக்கு வா, கட்டாயம் வரவேண்டும், வந்தே தீர வேண்டும்.
அப்புறம் அவனிடம் சொல்வேன்: “இயலாது, எனக்கு இனிமேல் முடியாது. இயன்றதற்கு மேலேயே தாங்கியாயிற்று. செய்ய வேண்டியதற்குமேல் செய்தாயிற்று. இதோ, இப்போது தளர்ந்துபோயாயிற்று. எனக்கு இனிமேல் வேலை செய்ய முடியாது. நீ விரும்பினாயில்லையா… அதுபோல நான் ராஜினாமா செய்துவிட்டேன். எங்கேயாவது போகலாம். நான் இதோ தயார்”
ட்ரெயினிங் முடிந்து வந்த பிறகு அவன் அடிக்கடி சொல்கிறான்: “எதற்காக இந்தக் கேடுகெட்டவேலை இனிமேல்? விட்டுத்தொலை. பெரியக்கா… உன்னையும் சேர்த்துக் காப்பாற்றத் தேவையான பணம் எனக்குக் கிடைக்கிறதே”
உலகம் தனக்கு மட்டும் அநீதி இழைக்கிறது என்ற வேரூன்றிய நினைப்புடன் பார்த்ததினாலும், தான் கருப்புக்கண்ணாடி வழியாகவே நோக்கியதாலும் அப்போதெல்லாம் நினைத்துக்கொண்டாள்.
–ஒரு ஐ.பி.எஸ். காரன் தன் தமக்கை ஒரு வெறும் குமாஸ்தா என்று சொல்லிக்கொள்ள வேண்டியிருப்பது அவனுக்கு இப்போது அவமான கரமானதாக இருக்கிறது. அவனுக்கு வந்துகொண்டிருக்கும் பெரிய திருமண ஆலோசனைகளுக்கும், உயர்ந்த குடும்ப சம்பந்தங்களுக்கும் முன்னால் அக்காவின் வேலை அவனுக்குக் கேடுகெட்டதாக இருக்கிறது! மோசமானதாக இருக்கிறது! அவனுடைய ஸ்டாட்டஸுக்குக் குறைவுண்டாகிறது. ஒருவேளை அந்த ஆலோசகர்களே அதைச் சுட்டிக்காட்டி யிருக்கக்கூடும். உன்னுடைய இந்த ஐ.பி.எஸ். ஸைச் சம்பாதித்துக் கொடுத்தது அக்காவின் இந்தக் கேவலமான வேலையின் குறைந்த சம்பளம்தான் என்பதை நீ புரிந்துகொள்வதில்லை. உன்னுடைய போலி கௌரவத்தின் களங்கத்தை மறைப்பதற்காக, தயாளமான இந்த யோசனை. ஆனால், எனக்குப் புரிகிறது.
இன்னொரு பயமும் இருந்தது. தம்பி மணம் செய்துகொண்டு குடும்பஸ்தனாகும்போது, தான் அங்கும் ஒரு அதிகச் சுமை ஆகிவிட மாட்டோமா? அக் குடும்ப சங்கீதத்தில் ஒரு அபஸவரமாக ஆகிவிட மாட்டேனா? மிகவும் அபூர்வமாகவே கிடைக்கும் தங்கையின் கடிதங்களில் மட்டுமே இருப்பதாகத் தோன்றும் அந்த இரக்கம், தயவு, இவ்வுணர்ச்சிகளை மட்டும்தானே அதன்பின் கடைசிவரை எங்கேயும் எதிர்பார்க்க வேண்டியிருக்கும்.
பாவம் பெரியக்கா! யாருமில்லை. போக இடமில்லை. எதையாவது சொல்லிக்கொண்டிருப்பாள். நீ கொஞ்சம் பொறுத்துக்கொள்ளக் கூடாதா”
எதிர்காலச் சிந்தனையை வெளிக்காட்டாமல், அவனுடைய யோசனையைப் பெரிதாக எடுத்துக்கொண்டதாகக் காட்டிக் கொள்ளாமலும் சொன்னாள்:
“என்னவானாலும் இத்தனை காலமும் ஆயிட்டுதே….. வேற கஷ்டம் ஒண்ணுமில்லியே. முடியாதுண்ணு தோணுறபோது விட்டுடலா மில்லையா.”
ஆனால் இதோ இப்போது விலங்கு இறுகிவிட்டிருக்கிறது. கதிகெட்டிருக்கிறேன். இனிமேல் திறந்துபேசினால்தான் திருப்தியாகும்.
-முடியாது தம்பி, கொஞ்சமும் முடியாது. நான் சோர்ந்து போயிருக்கேன். வெளிப்படையான ஏளனத்தையும் திட்டையும் விட வேறெதுவும் பரவாயில்லை.
ஆனால் காலையில் ஆஃபீசுக்குப் போகவேண்டி வரவில்லை. ஃபோன் செய்யவேண்டி வரவில்லை. அதற்கு முன்பே அவன் வந்து சேர்ந்தான். தம்பி வந்திருக்கிறானென்று தெரிவித்தபோது, மாடிப்படிகளிலிறங்கிக் கொண்டே நினைத்தாள்:
- கடவுள் எல்லாவற்றையும் முன் கூட்டியே அறிந்திருக்கிறான். அவனை முன்னாலேயே சொல்லி அனுப்பியிருக்கிறான்.
ஆனாலும் கண்டவுடன் பதறிப்போனாள். வழக்கத்திற்கு மாறாக உத்யோகவேஷத்தில், வேலை அவசரத்திற்கிடையில் பாய்ந்து வந்தாற்போல, முகம் தீஜ்வாலைபோல சிவந்து ஒளிர்கிறது. திக்பிரமை தெளிவதற்கு முன்பே இடி முழங்கியது.
“நீங்க என் சகோதரின்னு சொல்லிக்கவே வெட்கமாயிருக்கு. தலை நிமிர்ந்து நடக்கமுடியலை. வெட்கம் மானமில்லாத….கஷ்டம்!!… நான் உங்க தம்பியில்லை. உங்களோடு எனக்கு எந்த உறவுமில்லை. அந்த கிழவன் அஸிஸ்டென்ட் ஸெக்ரட்டரியின் வைப்பாட்டியாகவே இருந்துக்குங்க….”
இயக்கமற்று நின்று கேட்டாள். கண்ணீர் இல்லாததனால் அழவில்லை. நாணமும் மானமும் இல்லாதவள்தானே. அதனால் தலை குனியவில்லை.. உணர்ச்சியற்று நின்று கேட்டாள். சொன்ன கையோடு அவன் வெளியே போனான். – ஒரு புயற்காற்று மாதிரி.
குழந்தைப்பருவத்திலிருந்தே அவன் முன்கோபி. எகிறிக் குதிப்பவனாயிருந்தான். பொறுமையற்றவனாயிருந்தான். ச*கிப்புத்தன்மை யற்றவனாயிருந்தான். ஆனால் எப்போதும் அவன் பலவீனனாயிருந்தான்.
அஸிஸ்டென்ட் ஸெக்ரட்டரியின் வைப்பாட்டி!
- இவ் வார்த்தைகளை என் முகத்தைப் பார்த்துச் சொல்ல உன்னால் எப்படி முடிந்தது குழந்தாய்!
அவளுடைய கையில் படுத்துவளர்ந்தவன் அவன். அவள் ஊட்டிக் கொடுத்தே சாப்பிட்டவன். அவளுடைய தாலாட்டைக் கேட்டு உறங்கியவன். அவள், தாயும், அண்ணனும், அக்காவும் எல்லாமா யிருந்தாள். அன்போடு வளர்த்தாள். எதையும் எதிர்பார்க்கவில்லை. வாழ்க்கையிலிருந்து எதுவும் எதிர்பார்க்கக் கூடாதென்ற கசப்பான உண்மையை வெகு சிறுவயதிலேயே கற்றிருந்தாள் அல்லவா. ஆனால்
இது… இது….
குரூரமான இக் குத்தல்… இதை ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. ஆறுதலைத் தேடிவந்தபோது, தேறுதலைத் தேடி ஓடி வந்தபோது… “உங்களுடன் எனக்கு இனி எந்தவித உறவுமில்லை”
எல்லாம் எவ்வளவு சுலபத்தில் முடிந்துவிட்டது. வெறும் நீரில் வரைந்த கோடுகள் போல… கடந்த காலத்தின் கதவுகளை அடைத்துப் பூட்டுவது இத்தனை சாதாரணமான செயலா?
மனம் பட்டுச்சேலையும் தறித்துணியும் உடுத்து வெளியே ஓடிற்று.; இடுப்புச் சலங்கையும் அரைச் சதங்கையும் குலுக்கிக்கொண்டு ஓடிற்று; இளம்பருவத்தின் பசுமையான பள்ளத்தாக்குகளை நோக்கி. அங்கே எண்ணற்ற பூக்களிருந்தன. அப் பூக்களைப் பறிக்க விருவிருப்பாக நடந்தாள். பூவே! உதிர்! என்று கூவியழைத்தாள். காலில் முள் குத்தினால் என்ன…? கையில் கீறல் விழுந்தாலென்ன…? திரும்பி வந்த போது கூடை நிறையப் பூக்கள் இருந்தன. அப் பூக்களைப்போலவே மலர்ந்த முகமும்.
ஆனால் எல்லாம் எவ்வளவு சட்டென்றே வாடிக்கருகின. பூஜையறையின் வாயிலில் கொண்டுவைத்தபோது பாட்டி சொன்னாள்: “இதெல்லாம் பூஜைக்கு உபயோகிக்காத பூக்களாச்சே மகளே..?
ஒன்றுக்குக்கூட பூத்தட்டில் இடம் கிட்டவில்லை. முற்றத்துமூலையில் குப்பையில் கிடந்து அவை வாய்விட்டு அழுதன. பிறகு வாடிக் கருகின.
–பூஜைக்கு உதவாத பூக்கள்!!
வருடங்களின் வேதனை உறைந்துபோன இதயத்துடனென்ற போதிலும் சாந்தமகாவே கேட்கிறேன் பாட்டி.. எரிச்சல் கொஞ்சமுமின்றிக் கேட்கிறேன் பாட்டி…
-அன்று அவ்வார்த்தைகளைச் சொன்னது அன்பு நிறைந்த அந் நாவால்தானோ…? அல்லது இருண்ட எதிர்கால விதியின் கரிநாக்காலோ..?
ஆகாயத்தின் ஆழ்ந்த இருளிலிருந்து ஒரு சாபக்கேட்டைப்போல அவ் வார்த்தைகள் வாழ்க்கையில் வந்து விழ்ந்திருக்கின்றன.அழுந்தச் சுட்டுச் சிரிக்கின்றன. கருக்கி அரிக்கின்றன.
-பூஜைக்கு உதவாத பூ நான்தான் பாட்டி!…நானேதான்… யாருக்கும் தேவையின்றி எதற்கும் உபயோகமில்லாமல் இதோ வீசி எறியப்பட்டிருக்கிறேன்.
பூஜைக்கு வேண்டாம்.
பூசாரிக்கு வேண்டாம்.
வாழ்க்கையின் குப்பையில் கிடந்து அழுகிறேன்.வாடுகிறேன்…
– என்.மோஹனன்
– சமீபத்திய மலையாளச் சிறுகதைகள், முதற் பதிப்பு: 1980, தொகுப்பு: எம்.முகுந்தன், மொழிபெயர்ப்பு: ம.இராஜாராம், நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா.
நன்றி: https://www.projectmadurai.org/