அந்த பிரபலமான, “டிவி’ சேனலின், பிரபலமான புரோகிராம் அது. படப்பிடிப்பு மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. நிகழ்ச்சியின் இயக்குனர் ராதா, நிகழ்ச்சியின் போக்கில் கவனமாக இருந்தாள்.
இந்த முறை, “டாபிக்’கே வித்தியாசமானது. திருநங்கைகள், தங்கள் குடும்பத்தை விட்டு வெளியேறிய பின்பும், முன்பும், சம்பந்தப்பட்ட குடும்பத்தாரின் உணர்வுகள், பிரச்னைகள், நடவடிக்கைகள் – இது தான் கான்செப்ட். நிகழ்ச்சி சூடு பிடித்துக் கொண்டிருந்தது.
இதோ… இதோ… மைக், சரவணமுத்துவிடம் வந்து விட்டது. மைக்கை கையில் வாங்கியதுமே, அவன் கதற ஆரம்பித்து விட்டான். சூழலின் தன்மையே மாறிவிட்டது.
கேள்விகள் கேட்கும் தொகுப்பாளர், “”உங்க வீட்டிலும்…” என்று துவங்க, அவன் முகத்தை பொத்திக் கொண்டு அழ, யூனிட் மொத்தமும், ராதாவை பார்க்க… ராதா, “”லைட்ஸ் ஆப்.” என்றாள்.
கூட்டம் சலசலக்க, அவனை அழைத்து, அருகில் இருந்த அறைக்குள் நுழைந்தாள் ராதா.
சூடாக டீ வரவழைத்தாள். டீ உள்ளே போனதுமே, கொஞ்சம் தெளிவானது அவன் முகம்.
“”சொல்லுங்க மிஸ்டர் சரவணமுத்து… ஏன் இப்படி உணர்ச்சிவசப்பட்டு எக்சைட்மென்ட்டாகிட்டீங்க?” என்று, தோழமையுடன் கேட்டாள் ராதா.
“”சாரி மேடம்… என்னால் புரோகிராம் டிஸ்டர்ப் ஆயிடுச்சு.”
“”பரவாயில்ல… உங்க மனசுல இருக்கிறதை முதல்லே என் கிட்டே கொட்டுங்க. ரிலாக்ஸ் ஆகிடுவீங்க. அப்புறம் கேமரா முன்னால பேசலாம்… சொல்லுங்க…”
இடதுகை விரல் நகங்களையே உற்று பார்த்தவன், தழைத்த குரலில் பேச ஆரம்பித்தான். “”நான்… அண்ணன், அம்மா – இதான் எங்க குடும்பம். அப்பா, என் சின்ன வயசுலேயே தவறிட்டார். தோட்டம், நிலம், வீடுன்னு இருந்ததாலே, வாழ்க்கை ஒண்ணும் கஷ்டமாக போகலை,” என்று துவங்கினான்.
“அம்மா… எனக்கு கல்யாணம் வேணாம். தம்பி சரவணமுத்து காதலிக்கிற பொண்ணு வீட்டுலே அவசரப்படாறங்க… அந்த பொண்ணையே பேசி முடிங்கம்மா…’
“அதெப்படி கிருஷ்ணா… மூத்தவன் நீயிருக்க, இளையவனுக்கு கல்யாணம் முடிக்கிறது?’ மறுத்தாள் அம்மா.
“எனக்கு கல்யாணம்லாம் சரிபட்டு வராதும்மா… சொன்னா கேளுங்க…’ இறுதியில் கிருஷ்ணனின் பிடிவாதமே வென்றது.
சாந்தியின் கைத்தளம் பற்றினான் சரவணமுத்து.
சாந்தி தான், கிருஷ்ணாவிடம் உள்ள மாறுதலை கண்டுபிடித்தாள். கிருஷ்ணன், விடுதியில் தங்கி படித்தவன். படிப்பு முடிந்ததும் கூட, தோட்ட வீட்டிலேயே தங்கிக் கொண்டான்.
சரவணமுத்துவோ, அம்மாவோ, விகற்பமாக நினைக்கவில்லை. வேலை, வசதிக்காக தங்கியிருக்கிறான் என்றே நினைத்தனர். ஆனால், சாந்தி கண்டுபிடித்து விட்டாள்.
கணவனின் காதில் போட்டதோடு, ஊரெல்லாம் டமாரம் அடித்தாள். கிருஷ்ணன் கண்ணில் படும்போதெல்லாம், நக்கல் பேச்சும், கேலிச் சிரிப்புமாய் படுத்தி வைத்தாள். இதில், அடிப்பட்டு போனான் கிருஷ்ணன்.
அம்மா அதிர்ந்து போனாள். தாய் மனசு, “இது உண்மையா… உண்மையா…’ என்று பைத்தியமாய் தவித்தது.
ஒரு நாள், சரவணமுத்து, “அண்ணே… என் பொண்டாட்டி என்னையே ஒரு மாதிரி கேவலமா பாக்குறா… உன்னால, எனக்கு அவமானமாக இருக்கு. நீ எங்கையாவது கண்காணாம போயிடேன்…’ என்றான் கோபமாக.
“சரவணா… என்ன பேச்சுடா இது… அவன் உன் உடன்பிறப்புடா… பாவி, அவனை வீட்டை விட்டு போகச் சொல்றீயே நல்லாயிருப்பியா நீ?’ அம்மா இடைமறித்தாள்.
“பேசாதீங்கம்மா… ஊருல தலைகாட்ட முடியலை… அவனவன் என் முதுகுக்கு பின்னால, நக்கலடிக்கிறான்… தெருவுல போனாலே… “ஒம்போது’ன்னு கத்தறான்… எனக்கு நாண்டுகிட்டு சாகணும் போல இருக்கு… எல்லாம் இந்த பொட்டைப் பயலால வந்தது… கண்டவனும், என்னை பேசுறான்க… இவன் ஒழிஞ்சு போனாதான், நிம்மதியா தெருவுல நடக்க முடியும்…’ என்றான் நிர்தாட்சண்யமாய்.
தலையிலடித்துக் கொண்டு அழுதாள் அம்மா.
“டேய் சரவணா… இப்படியெல்லாம் பேசாதடா… உனக்கு முன்னால அவனை தாண்டா இந்த வயிறு சுமந்தது… அவன்தான் முதன்முதலா, “அம்மா’ன்னு வாய் நிறைய கூப்பிட்டு, எனக்கு பெருமிதத்தை தந்தான்… நம்மளை விட்டா, அவனுக்கு யாருடா இருக்கா… இந்த வீட்டுக்காக, அவன் மாடு மாதிரி உழைச்சிருக்கான்டா…
“வேணும்ன்னா, கிருஷ்ணன் தோட்டத்து வீட்டிலேயே இருந்துப்பான். இங்க வரமாட்டான். உன் கண்ணுலேயே படமாட்டான்… சரின்னு சொல்லுடா…’
தாய் கெஞ்ச கெஞ்ச, தலையை சிலுப்பி கொண்டான் சரவணமுத்து. இரவில், சாந்தி காதோரமாய் குழைந்து சொன்னது, ரீங்காரமிட்டது…
“தோ பாருங்க… உங்க அண்ணனோ, அக்காவோ, அந்த ரெண்டுங்கெட்டான் சனியனை விரட்டி விட்டுடுங்க… மொத்த ஆஸ்தியும், விள்ளாம விரியாம நமக்கு வந்திடும். நாளைக்கே முடிவெடுத்து, “அதை’ துரத்துறீங்க, சொல்லிட்டேன்…’
தம்பி சொன்ன, “பொட்டை’ என்ற வார்த்தையிலேயே, குமைந்து குமுறிக் கொண்டு நின்றான் கிருஷ்ணன்.
“எங்கேனா போகட்டும்… இந்த மாதிரி பொட்டை ஜன்மம், ஊருல எவ்ளோ இல்லே… அத்தோட போய் தொலையட்டும். கர்மம். கண்ணைவிட்டு அகண்டு போனா சரி. மானம் போகுது. அண்ணனாம் அண்ணன்…’
“அண்ணன் இல்லைங்க அக்கா…’ – எகத்தாளமாய் சிரித்தாள் சாந்தி.
“ஏம்மா… எல்லாம் உன் வேலைதானா… அண்ணன் தம்பி நடுவுலே, மூட்டிவிட்டுக்கிட்டு வேடிக்கை பாக்குறீயா… அடுக்குமா இது… பொண்ணா நீ? மனசுல இரக்கம் வேணாம்…’ சீறினாள் அம்மா.
“அதுக்கு என்ன அத்தே செய்யறது… விதை சரியாயில்லையோ, விதைச்ச நெலம் தான் சரியாயில்லையோ… யாருக்கு தெரியும்? ஆக மொத்தத்துலே பயிரு பதரா போயிடுச்சு… யாரை குத்தஞ் சொல்றது…’ அவள் நக்கலாக சிரித்தாள்.
“சிரிக்காத சாந்தி… பெத்த வயிறு பத்திகிட்டு எரியுது… வீணா, என் வாயில விழாத…’
“ஹ்ஹா தோடா… பொட்டையை பெத்து வச்சுகிட்டு, வாய் நீளுதே அத்தையம்மாவுக்கு… சாபம் தந்துடுவீங்களோ…’ அவள் நொடித்தாள்.
அம்மாவின் அழுகை, இன்னும் அதிகமாகியது. கிருஷ்ணனின் முகம் தொங்கிப் போய் விட்டது.
“எந்த ஜென்மத்து பாவம் இது… ஏன் எனக்கு இப்படி ஒரு ஊனம்? கடவுளே… மேலுதட்டு மீசையும், உடைந்து போன குரலும், ஆண்மகனாக புற அடையாளங்களாக நிற்க, மனசு மட்டும் பெண்மையின் மென்மை உணர்வுகளாய், அங்கங்களின் மாற்றமுமாய் தடுமாறி போய் விழ வைக்கிறதே… இது யாரால், எதனால்? எந்த தேவன் தந்த சாபம் இது… கடவுளே…’ உள்ளுக்குள்ளே மறுகினான் கிருஷ்ணன்.
ஒரு சூட்கேசை தூக்கி வந்து தொப்பென்று போட்டு, அதன் மேல் பணக்கற்றையை வைத்து, வலது கையால் வாசலை காட்டினான் சரவணமுத்து.
“”இப்படித்தான் என் அண்ணனை வீட்டை விட்டே விரட்டினேன் மேடம்.”
முகத்திலடித்துக் கொண்டான் சரவணமுத்து.
அவன் கைகளை விலக்கிவிட்டு, “”சரு… ப்ளீஸ்…” என்றாள் ராதா.
அடிவாங்கினாற் போல் ஏறிட்டுப் பார்த்தான் சரவணன்.
“”என்னாச்சு?”
“”மேடம்… எங்கண்ணன், என்னை இப்படித் தான் கூப்பிடுவான்,” கண்களைத் துடைத்துக் கொண்டான்.
ராதாவின் கண்களும் கலங்கின. நாசூக்காய் விரல் நுனியால் உதறிவிட்டுக் கொண்டாள்.
“”சரி சரவணன்… அப்புறம் உங்கண்ணன் போயிட்டார்… உங்கம்மா எப்படி இருக்காங்க… உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?”
“”குழந்தைகளா?” கேலியாய் சிரித்தான் சரவணன்.
“”மேடம்… எங்கண்ணனை நான் படுத்திய பாட்டுக்கு, ஆண்டவன் கூலி கொடுத்திட்டார். எனக்கு குழந்தைகளே இல்லை. டாக்டர்ங்க கிட்ட எல்லாம் போய் வந்தோம். ரெண்டு பேர் கிட்டயும் ஒரு குறையும் இல்லேன்னு மெடிக்கல் ரிப்போர்ட் சொல்லுது… கோவில் கோவிலா சுத்தியாச்சு… ஆனா, அந்த பாக்கியம் மட்டும் கிடைக்கவே இல்லை.
“”எங்கம்மா என்னோட பேசறதையே நிறுத்திட்டாங்க… அண்ணன் போனதுமே, அண்ணன் இருந்த தோட்ட வீட்டுக்கே போயிட்டாங்க… தப்பி தவறி பார்த்துகிட்டா கூட, அவங்க பார்வையே என்னை குற்றவாளி மாதிரி பார்க்கும்… என் பெண்டாட்டி, என் சொத்தையெல்லாம் அவபேருல மாத்திகிட்டு, என்னை அடிமை மாதிரி நடத்துறா…
“”இப்போல்லாம், என்னை என்னன்னு கூப்பிடறா தெரியுமா மேடம்?”
தலையை உயர்த்தி பார்த்தாள் ராதா.
கண்ணத்து சதைகள் துடிக்க, உதடு பிதுங்க, “”பொ…பொட்டை… பொட்டென்னு கூப்பிடறா…” உடல் குலுங்க அழுதான் சரவணமுத்து.
“சட்’டென்று எழுந்த ராதா, அவனை நெருங்கி நின்று அணைத்துக் கொண்டாள்.
“”சரு… சரு… அழாதடா… ப்ளீஸ் அழாதேடா…”
ஸ்விட்ச் போட்டது போல அழுகை நின்றது. கண்களை மலர்த்தி, அவளை பார்த்தான் சரவணமுத்து.
“”ஆமாம்டா… நான் தான் கிருஷ்ணன்… ராதா கிருஷ்ணன்…” என்றதும், அவளை கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தான் சரவணமுத்து.
ராதா கிருஷ்ணன் என்ற ராதாவும் அழ ஆரம்பித்தாள்.
இத்தனை காலமும், அடக்கி வைத்திருந்த அத்தனை அழுத்தமும், அழுகையாய் பொத்து கொண்டு வர, இருவருக்குமான நெருக்கத்தில், அடைகாத்து முடித்து போய்விட்ட பறவையின் வெறுங்கூட்டில், சிதறிக் கிடக்கும் மென்மையான பூஞ்சிறகுகளின் உயிர்ப்பு தெரிந்தது!
– டிசம்பர் 2012