இன்றைய ராஜபாளையத்திற்கு அருகே முன்னொரு காலத்தில் பூங்கொடியாபுரம் என்ற ஒரு கிராமம் இருந்தது. பச்சை நிறத்தில் பந்தல் போர்த்தியது போல ஊரெங்கும் வளமையாக இருந்தது. ஆனாலும், சமுதாயத்தில் பொருளாதார ரீதியாகவும், சாதி அடிப்படையிலும் பல ஏற்றத்தாழ்வுகள் காணப்பட்டன. அங்கு வாழும் மக்களுக்கு குலத்தொழில் நெசவு. இருப்பினும் வேளாண்மையும் பிரதானமாக பார்க்கப்பட்டது. ஏனென்றால் பசி வந்தால் பஞ்சை சாப்பிட முடியாதல்லவா?
சாத்தப்பன்-முத்தம்மாள் என்ற தம்பதிகள் இதே ஊரில் பிறந்து காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். முத்தம்மாளுக்கு தற்போது 9வது மாதம். அன்று காலை வழக்கம்போல கைத்தறியில் வந்து அமர்ந்தார் முத்தம்மாள். முதல் துண்டை நெய்வதற்காக நாடாவில் நூல் சுற்றப்பட்ட குழலை பொருத்தினாள். ஓடம் முன்னும் பின்னும் அசைந்தது. அவளுடைய வலதுகை மேலே தொங்கவிடப்பட்ட கைப்பிடியை இழுக்க, இடதுகை ஓடத்தை முன்னும் பின்னும் ஆட்டியது. இரண்டு கால்களும் மேலும் கீழும் மிதிபலகையை மிதித்தன. தறியில் நாடா இடம் வலம் பாயந்து விளையாடியது. சிறிது நேரத்திற்கு பின், முத்தம்மாளுக்கு அடிவயிற்றில் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு வலி. முத்தம்மாள் கூப்பாடு போட ஆரம்பித்தாள்.
முத்தம்மாளின் அலறல் சத்தத்தை கேட்ட சாத்தப்பன் வீட்டிற்குள் ஓடோடி வந்து பார்த்தான். அங்கு முத்தம்மாள் வலியால் துடித்துக்கொண்டிருந்தாள். சாத்தப்பன் அவளை தூக்கி மாட்டுவண்டியில் போட்டுக்கொண்டு அரசு மருத்துவமனையை நோக்கி விரைந்தான். ஆனால், செல்லும் வழியில், இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள பழைய இடிபாடுடன் கூடிய முருகன் கோவிலில் அவளை படுக்க வைத்தான். அந்த நேரத்தில் என்ன செய்வதென அறியாமல் சாத்தப்பன் முழித்தான். அவளுக்குவலி அதிகரிக்கவே, தானே இறங்கி அவளுக்கு பிரசவம் பார்க்கலானான்.
வெற்றிகரமாக அவள் ஆண்பிள்ளை ஒன்றை பெற்றெடுத்தாள். முருகன் கோவிலில் வைத்து அந்த குழந்தை பிறந்ததால் அவனுக்கு குமரன் என பெயர் வைத்தார்கள். வருடங்கள் பல கடந்தன. குமரன் நகரத்தில் இருந்த ஒரு புகழ்பெற்ற மகளிர் கல்லூரிக்கு வெளியே ஜெராக்ஸ் கடை ஒன்றை நடத்தி வந்தான். மேலும், காலையும் மாலையும் விவசாயத்தையும் உடன் கவனித்து வந்தான். அவனால், பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்தது. காரணம், அப்போது காசிருந்தால் மட்டுமே கல்வி. குமரனை பத்தாம் வகுப்பு வரை படிக்க வைத்ததற்கே அவன் அம்மா, என் மகனுக்கு என்ன அவன் கலெக்டர் படிப்பு படிச்சிருக்கான் என அக்கம்பக்கத்தினரிடம் பெருமை பேசிக்கொள்வாள். அவன் கடைக்கு தினமும் அக்கல்லூரியில் பயிலும் ஏராளமான மாணவிகள் வந்து செல்வது வழக்கம். காரணம், குமரனின் அழகை கூற வார்த்தையே இல்லை. முருகன் கோவிலில் பிறந்ததாலோ என்னமோ அவன் அந்த முருகப்பெருமானின் அழகை உரித்தாற்போல் பிறந்துள்ளான். குமரா, நீ ஜெராக்ஸ் கடை போட்டதுக்கு பதிலா டீக்கடை போட்டுருந்தனா இன்னும் நிறைய கூட்டம் வந்துருக்கும். நாங்களும் எதையாவது எடுத்து சாப்பிட்டுகிட்டே உன்னையும் சைட் அடிச்சிருப்போம் என்று தாவணி போட்ட ஒரு தேவதை கூறினாள். அதற்கு மற்றொரு தேவதை, இப்போ மட்டும் என்ன குமரா அவளுக்கும் எனக்கும் சேர்த்து 2 காப்பிய(ஜெராக்ஸ் காப்பி) போடு என நக்கலாக கூறினாள். இவ்வாறு இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் குமரனின் அம்மா அங்கு வந்தாள். அவன் கடையில் நின்றுகொண்டிருந்த அனைத்து தேவதைகளும் ரெக்கையை விரித்து பறந்து சென்றனர். இந்த பக்கம் என் பையன பாக்க எந்த சிரிக்கியாது வந்தேங்க கால உடைச்சு அடுப்புல வச்சுருவேனு முத்தம்மாள் கத்த தொடங்கினாள். சரி விடும்மா அவங்கதான் போயிட்டாங்கல என குமரன் அவன் அம்மாவை சமாதானப்படுத்தினான். உனக்கு தெரியாதுப்பா. காலம் கெட்டுப்போயி கிடக்கு. உன்ன மயக்குறதுக்கு ஆசை வார்த்தையா பேசுவாங்க. அதுக்கெல்லாம் அசந்து அவங்க பின்னாடி போயிறக்கூடாதுப்பா என முத்தம்மாள் குமரனுக்கு அறிவுரை கூறினாள்.
மே மாதம் பிறந்தது. கல்லூரிக்கு ஒரு மாத காலம் விடுமுறையும் விடப்பட்டது. குமரனின் வருமானமும் குறைந்தது. மழை குறைந்து கத்திரி வெயில் சுட்டெரித்ததால் குளங்களிலும் கிணறுகளிலும் நீர் வற்றிப்போனது. விவசாயமும் பெரும் பாதிப்புக்குள்ளானது. நகரங்களில் பெரிய பெரிய பஞ்சாலைகள் விசைத்தறிக்கூடங்கள் தோன்றியதால் கைத்தறி நெசவும் பாதிக்கப்பட்டது. விவசாயிகளும் தங்கள் நிலங்களை பெரிய பெரிய ஜமீன்தார்கள் வசம் கொடுத்துவிட்டு பஞ்சாலைகளிலும், விசைத்தறிக்கூடங்களிலும் வேலைக்கு சேர்ந்தனர். ஒவ்வொருவரின் வீட்டில் மாட்டப்பட்டிருந்த தறியும் கழற்றி எறியப்பட்டது.
குமரன், தன்னுடைய கடையில் அமர்ந்திருந்தான். குமரனின் அம்மா உச்சி வெயிலில் கால் கடுக்க நடந்து தன் மகனின் கடைக்கு வந்தாள். டேய் குமரா! நம்ம மூக்காயி மகள் கற்பகத்த கல்யாணம் பண்ணாருல மாடசாமி. அவரு மில்லுக்கு ஆபிஸ்ல வேலை பார்க்க ஆள் வேணும்னு கேட்டாருடா. நான் தான் என் மகன வேணும்னா வரச்சொல்றேன் முதலாளினு சொல்லிட்டு வந்துருக்கேன் டா. நீ உடனே படிச்ச சர்டிபிகேட்லாம் எடுத்துட்டு என்கூட வா. உனக்கும் வயசு ஏறிகிட்டே போகுதுல. காலாகாலத்துல உனக்கு கல்யாணம் பண்ணி வச்சு என் பேரக்குழந்தைய நான்கொஞ்ச வேண்டாமா? விவசாயமும், இந்த கடையும் கொடுக்குற வருமானத்தவிட அவரு பலமடங்கு தர்றேனு சொல்லிருக்காருடா என்றாள் முத்தம்மாள். ஊர்மக்கள் தான் தங்களோட அறியாமையினால சோறு போடுற நிலத்த விட்டுட்டு அங்க வேலைக்கு போறாங்கனா, என்னையும் நீ போக சொல்றேயேம்மா என குமரன் கண்ணீர்மல்க அவன் அம்மாவிடம் கூறினான். இருப்பினும் தன் தாய் சொல்லை தட்ட முடியாத குமரன் மில்லுக்கு வேலைக்கு சென்றான்.
தென்மேற்கு பருவக்காற்று காலம் ஆரம்பித்தது. மழையோ சரமாரியாக பெய்தது. ஆனால், மக்கள் மனதில் சிறிதும் மகிழ்ச்சியில்லை. ஏனென்றால் அவர்கள் கைவசம் தற்சமயம் நிலம் இல்லை. தன் நிலங்களை விற்ற ஜமின்தாரிடமே சென்று தங்கள் நிலங்களை மீண்டும் தங்களிடமே தரும்படி முறையிட்டனர். ஆனால், அந்த ஜமீன்தார் முடியவே முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டார். பசியும் பட்டினியும் வாட்டியெடுத்து செய்வதறியாது திகைத்த ஊர்மக்களுக்கு குமரன் ஒருவழியைக் கூறினான். தன்னிடம் உள்ள நிலத்தில் விவசாயம் செய்து தன்னிறைவை காண்போம் என்பதுதான் அது. மக்கள் அனைவரும்
குமரனின் வழியை பின்பற்றினர். , ஜமீன்தாரின் வலதுகை என அழைக்கப்படும் ராமன், ஜமீன்தாருக்கு ஒரு யோசனையை வழங்கினான். மக்களது நிலங்களை அவரவர்களுக்கே கொடுத்துவிடுவோம். அதற்கு பரிகாரமாக அவர்களிடமிருந்து மாதாமாதம் வாடகை மற்றும் உற்பத்தியில் 60 சதவிகிதத்தையும் பெற்றுக்கொள்வோம் என்பதுதான் அது.
குமரனின் வழியில் நடந்துகொண்டிருந்த மக்களில் சிலர் ஜமீன்தாரின் இந்த சூழ்ச்சி வலையில் சிக்கினர். குமரன் அவர்களிடம் எவ்வளவோ கூறிப்பார்த்தும் அவர்கள் யாரும் அதை காதில் வாங்கிக்கொள்ளவில்லை. அவர்களும் மனிதர்கள் தானே. மனித மனம் குரங்குக்கு ஒப்பானதல்லவா? நாட்கள் நகர்ந்தன. ஊர்மக்கள் தங்கள் நிலங்களில் தானே உழவு செய்து தங்களது பொருட்களையும், பணத்தையும் தாங்களே ஜமீன்தாருக்கு தாரை வார்த்து கொடுப்பதை கண்ட குமரன் விழிபிதுங்கி நின்றான்.
ஜமீன்தாரின் மனைவி இறந்து பல வருடங்கள் ஆகிறது. அவருக்கு ஒரு மகள் இருந்தாள். அழகென்றாள் அது அவள் தான். குமரனை விட பேரழகு என்று தான் சொல்ல வேண்டும். இந்த ஊரிலயே அதிகம் படித்த பெண் என்றாள் அது அவள் தான். அவள் பெயர் வள்ளி. விவசாயம் சார்ந்த பட்டப்படிப்பில் இளங்கலைப்பட்டம் பயின்றுள்ளாள். தற்போது முதுகலைப் பட்டப்படிப்பிற்காக குமரனின் ஜெராக்ஸ் கடைக்கு எதிரே இருக்கும் மகளிர் கல்லூரியில் சேர்த்து விட்டார் ஜமீன்தார். ஜமீன்தாருக்கு தன் மகளை டாக்டர், வக்கீல் என படிக்க வைக்க வேண்டும் என்பதுதான் ஆசை. ஆனால், வள்ளிக்கு பிடித்தது விவசாயம் தான். என்ன தான் ஊருக்கு ஜமீன்தாரா இருந்தாலும் தன் மகளுக்கு தங்கமான அப்பாவாச்சே. அதனால், தன் மகள் ஆசைப்பட்ட படிப்பையே படிக்க வைத்தார்.
ஒருநாள், பேருந்து நிறுத்தத்தில் வள்ளி நின்றுக்கொண்டிருக்க, பக்கத்து ஊரிலிருந்து மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் வள்ளியிடம் வம்பிழுத்தனர். அவளை கொச்சையாக வர்ணித்தனர். வள்ளி தன்னுடைய செருப்பை கழட்டி அவர்களை அடித்தாள். அதில் ஒருவன் வள்ளியின் கையை பிடிக்க, பிடித்தவனின் கையை குமரன் ஒடிக்க சற்று நேரத்தில் அந்த இடம் போர்க்களமானது. தன்னை தக்க சமயத்தில் வந்து காப்பாற்றிய குமரனுக்கு வள்ளி நன்றி தெரிவித்தாள். பின்னர், அந்த நன்றி நாசுக்காக காதலாக மாறியது. வள்ளி அங்கு படித்த 2 வருடங்களில் விவசாயத்தை மட்டும் படிக்கவில்லை. காதல் பாடத்தையும் நன்கு படித்திருந்தாள்.
ஒருபுறம் இவர்கள் காதல் வளர, மற்றொருபுறம் ஏழை மக்கள் உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்தனர். வள்ளியும் குமரனும் சேர்ந்து ஒரு திட்டம் தீட்டினர். அதன்படி, ஜமீன்தார் ஊரில் இல்லாத ஒரு நாள், ஜமீன்தார் வசம் இருந்த நிலங்களின் உரிமைகளை ஊர்மக்கள் பெயரில் மாற்றி எழுதினார்கள். ஊர்மக்கள் அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் துள்ளிக்குதித்தனர். குமரனை பெற்றவர்களும் தன் பையனை ஊர்மக்கள் பெருமையாக பேசுவதை நினைத்து பூரித்து போயி நின்றனர். அந்த நேரத்தில் குமரன் வள்ளி காதலும் ஊரார் அனைவருக்கும் தெரிய வந்தது. ஊரே திரண்டு அவர்கள் திருமணத்தை பன்பொழி திருமலைக்கோவிலில் வைத்து சீரும் சிறப்புமாக நடத்தியது. இந்த சேதியை கேள்விப்பட்ட ஜமீன்தார் தன் காரில் பன்பொழிக்கு விரைந்தார். அங்கு மலைமீது ஏறிய ஜமீன்தாரின் காரில் முன்புற டயர் வெடித்து மலையில் இருந்து கார் பள்ளத்தில் உருண்டது. பின்னர் ஜமீன்தார் இளந்தோப்பு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரைக்காண திருமணக்கோலத்தில் கழுத்தில் மாலையுடன் குமரனும் வள்ளியும் வந்தனர். ஊரும் உடன் வந்தது. ஜமீன்தார் கோமா நிலைக்கு சென்றதை மருத்துவர் தெரிவித்தார். வள்ளி கதறி அழுதாள். குமரன் அவளுக்கு ஆறுதலாக உடனிருந்தான்.
(சில வருடங்களுக்கு பிறகு)
குமரனுக்கும் வள்ளிக்கும் பெண்குழந்தை ஒன்று பிறந்தது. அதன் மழலை ஓசை ஜமீன்தாரின் காதில் விழவே, அவரும் கோமாவில் இருந்து மீண்டு வந்தார். தன் தவறை நினைத்து வருந்தினார். பேத்தியை கொஞ்சி, ஊர்மக்களுக்கு வாரி வழங்கி தன் கடைசி காலத்தை கழித்தார். பூங்கொடியாபுரம் மீண்டும் உங்களை வரவேற்கிறது. அதே இயற்கை வண்ணத்தில்.
நன்றி!
உணவு, உடை, இருப்பிடம் எவ்வளவு அத்தியாவசியம் என்பது அது இல்லாதவர்களுக்கு மட்டுமே தெரியும். பசியில் தவிக்கும் உயிர்களை கண்டால் உணவளியுங்கள். உடையின்றி கிடக்கும் உயிர்களுக்கு அவர்களின் மானத்தை மறைக்க சிறிது துணி கொடுங்கள். இருப்பிடம் இல்லா ஏழைகளுக்கு தங்க இடம் கொடுங்கள். ஒருவேளை வாடகைக்கு கொடுத்தாலும், குறைவான தொகையை பெற்றுக்கொள்ளுங்கள். ஏனென்றால் பல நூறு வருடங்களுக்கு முன்பு இந்த இடம் உங்களுடையது அல்ல. நாம் அனைவரும் மனிதர்கள். மனிதத்தை நேசிப்போம். ஒற்றுமையாக வாழ்வோம்.
என்றும் உங்களில் ஒருவன்.
பா.கலுசுலிங்கம்.,B.Com(CA)
Parava illai. Gud try