வக்கீல் மாமாவிடமிருந்து அவசர பச்சைச் செய்தி கிடைத்தவுடன் மூத்தவன் சல்யன் மனைவி ரேஷ்மாவுடன் ராக்கெட்டில் வந்தான். அடுத்தவன் கேசரி, மனைவி லதா, மகள் நீதுவுடன் ஏர் டாக்ஸியில் வந்தான். அடுத்தவள் அனா என்ற அன்னம், மகனை கணவனுடன் ஊரில் விட்டுவிட்டு வந்திருந்தாள். மூவரும் படுக்கையில் நினைவிழந்து இருந்த கிழவரைச் சுற்றி அமர்ந்திருந்தனர்.
பெரியவர் உண்மையில் ரொம்ப நைந்து போயிருந்தார். அவரது முகம் மட்டும் திறந்திருக்க உடல் வெள்ளைப் போர்வையால் போர்த்தப்பட்டிருந்தது. அவ்வப்போது நினைவிழப்பதாக வக்கீல் வேறு கூறியிருந்தார். தாங்கள் கொண்டுவந்திருந்த உயர்ரக வாழைப்பழங்களை அவர்கள் பக்கத்தில் இருந்த ஒரு மேசை மேல் வைத்தார்கள்.
” போன முறை நான் பார்த்தப்போகூட நல்லாத்தானே இருந்தார்.” -இது சல்யனின் தற்காப்பு அஸ்திரம்.
“ஆமாம் பார்த்தே, நீ இங்க வந்து அஞ்சு வருஷமாச்சு- அப்புறம் நானாக்கும் எல்லாம் பாத்துக்கிட்டேன், பிள்ளைக்கு பதிலா” -இது அனா.
கேசரி வாயைத் திறக்கவில்லை, அவன் வந்தது கிழவரைப் பார்க்க இல்லை.
வக்கீலின் பதிவு ஒளிச் செய்தியை பல முறை சட்டை செய்யாமல் இப்போது வந்திருப்பது பிரதான சாலை அருகே உள்ள கிழவரின் அந்தகால வீட்டை அரசாங்கம் எடுத்துக்கொள்ளப் போகிறது என்ற செய்தி ஒரு முக்கிய காரணம்.
அதற்கு பிரதி உபகாரமாக பல மில்லியன் பொன் மதிப்புள்ள சொத்துக்கள் கிழவருக்கு பரிசாக கிடைக்கப் போவதை செய்தியில் அறிந்து ஓடி வந்திருந்தான்.
“அப்பாவுக்கு நான் மூன்று முறை விலோக்கா வந்து போக ராக்கெட் பாஸ் வாங்கினேனாக்கும். ஒரு விடுமுறைக்கு பத்து நாட்கள் வண்டார்டிகாவிற்கு அழைத்துச் சென்றேன். – சல்யன் ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தான், அப்பா கண் விழிக்கையில் , வக்கீல் மாமா வருகையில் சொல்லவேண்டிய மந்திரம்.
“உனக்கு அவர் உதவி தேவையாக இருந்தது, அதனால் அப்பாவைக் கூட்டிப்போனாய்”- அனா முணுமுணுத்தவாறு,
“பிள்ளைகள் இரண்டு பேர் இருந்தும் நான் தான் பிள்ளைக்குப் பிள்ளையாய் பார்த்துக்கொண்டிருந்தேன்” அவள் பெருமிதப்பட்டாள்.
கேசரியின் மனைவி லதா தன் மடியில் தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தை நீதுவை உள்ளே படுக்கையில் விடுவதற்கு எழுந்தாள். அவசரமாக யாருக்கும் தெரியாமல் கண் ஜாடை காட்டி, அவளை தன் மடியில் இருத்திக்கொண்டான் கேசரி. அப்பா கண்விழிக்கும் போது சட்டென்று தூக்கிக்காட்ட தோதாக இருக்கவேண்டும். நீது அவன் அம்மாவை அச்சு அசலாக உரித்து வைத்திருந்தாள். மனைவியின் அசட்டுத்தனத்தைப் பார்த்து எரிச்சல் வந்தாலும் காட்டிக்கொள்ளாமல் இருந்தான்.
கடைக்கண்ணால் எல்லாவற்றையும் கவனித்த ரேஷ்மா மனதுக்குள் பொறுமிக்கொண்டாள். கிழவரையே உரித்துவைத்திருக்கும் பிள்ளையை விலோக்காவில் விட்டுவிட்டு வந்திருக்க வேண்டாமோ என்று தோன்றியது.
அப்போது தான் அந்த பெண் ஒரு வானவில்லைப்போல் வந்தாள். அவளை பார்த்தால் இருபதிலிருந்து அறுபது வரை எந்த வயது வேண்டுமானாலும் இருக்கலாம் என்பது போல இருந்தாள். கூடவே வக்கீல் மாமா.
“இவள் பெயர் புரு. மருத்துவர். சமீபகாலமாய் இவள்தான் அப்பாவைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள். அரசாங்க மருத்துவசாலையில் இவளை அனுப்பியுள்ளார்கள்.”
எல்லோரும் அவள் முகத்தைப் பார்க்காமலேயே, நன்றி என்றார்கள் இறுக்கத்துடன்.
அவள் சில நொடிகள் அவர்களையே கூர்ந்து பார்த்தாள் பின், கிழவரின் நாடி, நரம்புகளைச் சோதித்து விட்டு
“இன்னும் சில நொடிகளில் சிகிச்சையை ஆரம்பித்துவிடுகிறேன் மாமா; அவர் சொன்ன பொருட்கள்,… என்றாள்.
“அதெல்லாம் தயார் அம்மா,” இது வக்கீல் மாமா.
சல்யன்தான் அவள் அழகின் தாக்கத்தை கொஞ்சம் சுதாரித்துக்கொண்டு ” மாமா யார் இவள் அப்பாவை ரொம்பத் தெரிந்தவள் போல் பேசுகிறாள்,”. கதை முடியப்போகிறது; இவள் ஏதோ சிகிச்சை அது இது என்று கிளப்புகிறாளே, குழப்பம் எல்லோர் மனதில் தோன்றியது. அவள் முகம் வேறு ஒரு சமயம் மிகவும் பரிச்சயமானது போலவும், வேரொரு சமயம் பரிச்சயம் இல்லாததுபோல் இருந்தது.
“அது வந்து,.. என்றவர் சற்று திக்கித் திணறியவாறு, இந்த மருத்துவர்தான் அப்பாவை கொஞ்ச நாட்களாக பார்த்துக்கொண்டிருக்கிறார்”- என்று சமாளித்தார் வக்கீல்.
“எதுக்கு மருத்துவர் எல்லாம், இப்போதுதான் எல்லா வியாதியும் ஒழித்தாயிற்றே எயிட்ஸ், ஸார்ஸ், விலங்கு வைரஸ், பறவைக்காய்ச்சல், புற்றுநோய் என்று போன தலைமுறை வியாதி எதுவுமின்றி உலகைச் சுத்தப்படுத்தியாச்சே,” மருத்துவர்கள் எல்லோருமே ஆராய்ச்சிசாலையில்தானே இருக்கிறார்கள்” அப்பாவித்தனம் தொனிக்கக் கேட்டார்கள்.
“சரிதான், இன்னும் வயோதிக மரணத்திற்கு ஒண்ணும் கண்டுபிடிக்கலையே, தவிர அரசாங்கம் கடைசி காலத்தில் முதுமை மரணத்திற்கு மருத்துவர் யாராவது பக்கத்தில் இருக்க அனுமதிக்கிறதே”
“அப்படி ரொம்ப கஷ்டப்பட்டால் யூதி முறையைப் பயன்படுத்தலாமா? ”
“அதெல்லாம் இப்போது ரொம்ப தப்பு, தவிர கிழவர் தூக்கத்தில் தானே இருக்கிறார், அவ்வவ்போது எழுந்து கொள்கிறார், அவரது மருத்துவ குறிப்பேடு இன்று இரவு வரை தாக்குப்பிடிப்பார் என்று நேரம் கொடுத்திருக்கிறது; அதற்கு பிறகு பாவர்தனா ( பாவர்தனா அவர்களது கடவுள். கடவுள். அவர் பிம்பத்தை எங்கு வேண்டுமானாலும் தரிசிக்கலாம். ஒரு பொத்தானைத் தொட்டால் போதும்.)
கையில்தான் எல்லாம்”- வக்கீல் மாமா கண்களை ஒரு வினாடி மூடித்திறந்தார்.
“மாமா பெரியவர் இங்கேயே இருக்கட்டும், இவர்கள் மட்டும் சில நிமிடங்களுக்கு அடுத்த அறைக்குப் போனால்,… நான் இன்றைய பரிசோதனையைச் செய்துவிடுவேன்; அவர் விழித்துக்கொண்டால் அவர்கள் பேசலாம்; அந்தப் பெண் மருத்துவர் வேண்டுகோள் விடுக்க,
“சரி; நான் வெளியே போய்விட்டு அரை மணியில் வந்துவிடுகிறேன்,” வக்கீல் மாமா விடைபெற்றார்.
“அப்பாவிடம் உயிலைப் பற்றி ஒரு வார்த்தை கேட்க வேண்டும். அதன் பின் மூச்சு நின்றாலும் பரவாயில்லை”. அடுத்த அறையில் குரல்கள் தேய்ந்து ஓய்ந்தன.
அவர்கள் கூட்டமாக எழுந்த அடுத்த அறையில் உட்கார்ந்தார்கள்.
“லதா, வா தொடுதிரையில் பொருட்கள் வாங்கச் செல்வோம் என்று லதாவோடு அடுத்த அறையில் இருந்த டர்மினலுக்கு ரேஷ்மா போக, லதா குழந்தையை படுக்கையில் கிடத்திவிட்டு இயந்திர பணிப்பெண்ணை இயக்கி ஆணை கொடுத்துவிட்டு,
” எனக்கு தலைவலி நான் வரவில்லை. மாமனார் இருக்கும் நிலையில் இதெல்லாம் செய்வதற்கு பதில் பாவர்தனாவை பிரார்த்தித்துக்கொள்கிறேன்” என்றாள்.
பணத்தைத் துரத்துவதிலேயே மூழ்கியவர்கள் பாவர்தனவாவைப் பார்த்து நேரத்தை வீணாக்குவதில்லை, லதா மாதிரி சில மரபணு கோளாறுள்ள சிலர் (அப்படித்தான் கேசரி சொல்லுவது வழக்கம்) பாவர்தனா பாவர்தனா என்று புலம்புவார்கள். அவள் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டாள்.
அனா கிடைத்த நேரத்தை வீணாக்காமல் தன் தனிப்பட்ட மோதிரத்தின் திரையில் கிழவரின் சொத்துக்களை ஐம்பதாவது முறையாக தனிமையில் கணக்கிட்டுக்கொண்டிருந்தாள்.
சல்யன் மெதுவாக தம்பியை வேறு அறைக்குத் தள்ளிக்கொண்டுவந்து , “கேஸ், உன்னிடம் தனியா ஒண்ணு பேசணுமே” ; “சின்ன வயதில் அம்மாவின் தங்க சங்கலியைத் திருடிக்கொண்டு போனானே, நம்ம கடைசித் தம்பி, ….
“தம்பின்னு சொல்லாதே”
“சரி அந்த புருஷோத்தமன்”
“அவன் தான் எங்கயாவது வந்துருவானோன்னு நெனச்சேன்; கிழம் மண்டையப் போடும் நேரத்தில் வந்து தொலைக்கப்போகிறது. மரணப்படுக்கையில் இருப்பவர் விவரம்தான் செய்தியாக மருத்துவ அறிவிப்பில் உலகமெங்கும் வருதே”
“;சின்ன வயசிலே நம்ப கூட சேராம, அப்பாவோட சதா கதை பேசி எத்தனை திட்டு நமக்கு வாங்கிக் கொடுத்திருக்கு” ஓடிப்போறதுக்கு முன்னகூட யாரோடயுமே ஒட்டாம என்ன ஒரு பிறவி”.
“வக்கீல் மாமாவிடம் கேட்டுக்கணும், இந்த அனாவின் பேராசையைப் பாரு; சொல்லறதை எல்லாம் சொல்லிவிட்டு ஹாரிதான் கேட்கிறான் என்கிறாள். (ஹாரி அனாவின் கணவன்.) வக்கீல் மாமா வேறு அப்பா இரண்டு உயில் செய்திருக்கிறார் என்று பயமுறுத்துகிறார். ஹாரி நல்லவன்; அப்பா போனவுடன் அவர்களுக்கு நல்ல சன்த்ந்ரானில் துணி எடுத்து கொடுத்து விடலாம். வேண்டுமானால் டாலி லாண்டுக்கு அவர்களுக்கு ஒரு குடும்ப டிக்கெட் வாங்கிக்கொடுத்துவிடலாம். அனாவிடம் இப்போது சும்மா தலையாட்டிவிட்டு, ஹாரியிடம் பேசிக்கொள்ளலாம்.”
அவள் இப்போது கிழவருடன் தனிமையில் இருந்தாள். தாமதிக்காது பரப்பரப்பாக செயல்பட்டாள். இந்த தினத்திற்குத் தான் இரண்டு வாரங்களாக காத்துக்கொண்டிருந்தாள். அவள் செய்து வரும் ஆராய்ச்சியின் படி இறுதி நாளில்தான் இந்த மருந்தை பயன் படுத்த வேண்டும், இல்லாவிடில் விபரீத விளைவுகள் நேரிடலாம். அவள் ஆராய்ச்சி இன்னும் பூர்த்தியாகவில்லை; அதன் பிறகுதான் அவள் அரசாங்கத்தின் அனுமதி பெற்று சோதனை முயற்சி மேற்கொள்ளலாம். ஆனாலும் அப்பாவின் இறுதி நேரம் அவர் உடல் அணுக்கள் மூலம் கணக்கிட்டு கூறப்பட்டதால், தான் கண்டுபிடித்த மருந்தை அளித்துப் பார்க்கலாம், ஒரு வேளை அப்பா அதன் மூலம் காப்பாற்றப்பட்டுவிட்டால், அவள் மகிழ்விற்கு எதுவும் ஈடு இல்லை. ஒரு வேளை அது செயல்படாவிட்டால், அனுமதி பெறாமல் பயன்படுத்தியதற்கு அரசாங்கம் கொடுக்கும் எந்தத் தீர்ப்பையும் ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தாள்.
மருத்துவத்துறையைத் தேர்ந்தெடுத்ததால்தானே அவள் எங்கோ இருந்தாலும் அப்பாவின் நிலை பற்றிய அறிவிப்பைப் பார்க்க முடிந்தது.
கிழவருக்கு வேண்டிய மருத்துவ பணிவிடைகளைச் செய்யும் இயந்திரத் தாதியை ஸ்லீப் மோடிற்கு (உறங்கும் நிலை) அனுப்பினாள்.
பின் தானே அவரை சுத்தமாகத் துடைத்து பவுடர் போட்டாள். தான் கொண்டு வந்திருந்த மருந்து புட்டியிலிருந்த திரவத்திலிருந்து ஒரு ஸ்பூன் மருந்தை அளந்து எடுத்துக்கொண்டு ஒரு சிறு குப்பியிலிட்டு மூடி, அதன் ஒரு முனையை ஒரு மாஸ்க்குடன் (மூச்சு விடும் துளையுடன் கூடிய மூக்குக்கவசம்)
இணைத்து கிழவரின் மூக்கருகில் வைத்தாள்; மறு முனை தான் கொண்டு வந்திருந்த விரலடக்க நெபுலைசர்ருடன் இணைத்து விசையைத் தொட்டாள். போர்வையை விலக்கி விட்டாள்.
மருந்து மெல்ல ஆவியாகி அவர் மூச்சில் மிக நிதானமாகக் கலந்து கொண்டிருந்தது.
அவளை அறியாமல் கண்ணில் நீர் வழிந்தது. அவள் அவரோடு இரண்டு நாள் முன் நிகழ்த்திய உரையாடலை நினைத்துக் கொண்டாள்.
” உங்க கடைக்குட்டி மகன் உங்களை மறக்கலை அப்பா, உங்களுடைய அப்பா அதான் அவன் தாத்தா விட்டுச் சென்ற பொக்கிஷங்களை புத்தகங்களை கரைத்து குடித்தவன், உங்களையே தெய்வமா நெனக்கறவன், அவனை தவறான பாதையில் போகத் தூண்டுமா, அவன் பதின்ம வயதைத் தொடும்போது அவனுக்கு சில அதிர்ச்சிகள் ஏற்பட்டன.
ஆம் அவன் தன்னுடலில் சில அதிர்ச்சியான மாற்றங்களைக் கண்டான். .வீட்டைவிட்டுப் போக முடிவு செய்தான். அம்மாவின் ஞாபகமான கையடக்கப் பொருள் கிடைத்தது அந்தத் தங்கச் சங்கிலிதான். பசி பட்டினியில் துடித்த போதுகூட அதை அவன் விற்கவில்லை. பல சீண்டல்கள், ஆபத்துகளில் மாட்டிக்கொண்டு உயிரை விடப்போன நேரத்தில் ஒரு வெளிநாட்டுபச் சுற்றுலாப் பயணி அவனை காப்பாற்றி, அவனை தத்துப் பிள்ளையாக்கி, படிக்க வைத்தார்.
அழகிய பெண்ணாக அறுவைச் சிகிச்சை செய்யவைத்தார்; ஆம் அவனுக்கு எல்லா ஆண்களைப் போல் xy க்ரோமோஸோம் இல்லை, அவள் வெறியுடன் படித்தாள்; மருத்துவ ஆராய்ச்சி செய்தாள். தானும் ஒரு சாதனையாளர் என்று காட்டிக்கொள்ள அல்ல தன்னைப் போல் மரபுமுறை மீறிப் பிறந்த எந்தச் சிறுவரும் உயிரை விடக்கூடாது என்பதற்காக, அந்த ஆராய்ச்சியில் இடையில் தற்செயலாக வேறு ஒரு மருந்தைக் கண்டுபிடித்தாள் ;
சரியான நேரத்தில் தன் தந்தை மரணப்படுக்கையில் இருக்கும் செய்தி, உலக மருத்துவமனை அறிவிப்புக்களில் கேட்டவுடன் இதோ ஓடோடி உங்கள் முன்னால் வந்திருக்கிறாள்; நான்தான் அப்பா உங்கள் கடைக்குட்டி புருஷோத்தமன், இப்போது புரு. அவள் குமுறிக்குமுறி அழுதாள்.
அப்போது அப்பா படுக்கையில் இருந்தவாறே அவள் தலையைத் தடவினார், கைகளை லேசாக ஆட்டி ஏதோ சொல்ல முயன்றார். முடியவில்லை; அவர் கண்களிலும் கண்ணீர். அவர் கண்கள் காட்டிய காட்டிய உணர்ச்சிகள் இன்னும் அப்படியே மனதிலிருக்க சத்தமின்றி அழுதாள்.
அப்பா, அப்பா நான் இப்போது உங்கள் மகள் புரு என்றாள்.
திடீரென்று கதவுச்சத்தமும் தொடர்ந்து கைத்தட்டல் ஒலியும் கேட்டது.
“வெரி குட், இத இத நான் எதிர்பார்த்தேன், ஆனா பொம்பள வந்து சொத்தை எடுத்துக்கலாம்னு நினைச்சா அது நடக்காது கைகளைத் தட்டியபடி, சல்யன் வர கூடவே திகைத்தபடி கேசரியும், அனாவும்.
“எங்கே அப்படியே வந்தவழி ஓடிப்போயிடு பார்க்கலாம், இல்லாவிட்டால் இப்போதே கழுத்தை நெரித்துவிடுவேன். ஓடு ஓ மருத்துவரா வந்திருக்க இல்லே, அப்பா மூச்சு நின்னதும் மருத்துவசாலைக்கு தகவல் கொடுத்தோமா, செய்தி நிலையத்திற்கு சொன்னோமா என்று ஓடி போயிடணும், சொத்து கித்துன்னு அலைஞ்ச,….
“அய்யோ அண்ணா வேண்டாம், எனக்கு அப்பாவின் சொத்து எதுவும் வேண்டாம், அப்பா எனக்கு தருவதாகச் சொன்னது புத்தகங்கள், நிஜ புத்தகங்கள், அப்பாவின் அறையில் ஒமையாபூதத்தில் (பழைய பெரிய பெட்டி) இருக்கிறது”. வக்கீல் மாமாவிடம் அப்பா சொல்லியிருக்கிறார், என்றாவது நான் வந்தால்,..
“என்ன நேரத்தை கடத்த உளறுகிறாயா- உன்னை உள்ள விட்டதே தப்பு; இப்போது எல்லாம் மின்னணு புத்தகம்தான்”
“இல்லை சத்தியமா, அண்ணா நீ வேண்ணா எடுத்துப் பாரு, அப்பா என்னை எடுத்துக்கச் சொன்னார்”.
அனா, அண்ணனுடன் பழைய ட் ரங்க் பெட்டியை இழுத்து வந்தாள். அதில் ஜூல்ஸ் வேர்ன், இவி லூகாஸ், கீட்ஸ், கல்கி, பாரதியார், பாபி பிஷர், தலைப்புகள் தெரிந்தன; அம்மாவின் போட்டோ அந்தப் பெட்டியின் உள்மூடியில் ஒட்டப்பட்டிருந்தது.
“அடியில் அம்மாவின் நகைகள் எதாவது கிழம் ஒளித்து வைத்திருக்கிறதா பார்,” கேசரி படபடத்தான்,
சல்லியன் பொறுமையின்றி பெட்டியை தலைகீழாக்க, பைரன், ஷா, டாக்டர் கால்ட்வெல், அருணாசலக்கவிராயர் எல்லோரும் கீழே விழ ,ஆரோக்ய வைத்திய போதினி, சதுரகராதி, சித்தர் நூல் பற்றிய குறிப்புக்கள், ஆனந்தியின் தங்க மாம்பழம், கம்ப ராமாயணம் இன்னும் பல புத்தகங்கள் எல்லாம் சிதறின.
“எல்லாத்தையும் பொறுக்கிக்கொண்டு போ என்று அண்ணன்மார் கத்த,
அவள் அழுதவாறு பெட்டியில் அள்ளிப் போட்டுவிட்டு, அப்பா கட்டிலில் இருந்த சுத்தமாக்கியில் கைகளைக் ஒரு வினாடியில் சுத்தப்படுத்தி கொண்டபோது தான் எல்லோரும் அப்பாவைப் பார்த்தார்கள். அதிர்ச்சியடைந்தார்கள்.
நாற்பது வயது மதிக்கத்தக்க கட்டுடலுடன் படுக்கையில் கண்முடி இருந்தார். முகத்தில் இளமை கொஞ்சியது.
“இது என்ன அப்பா சாகவில்லையா” மூவரும் அவளைச்சுற்றி நின்று ஒரே குரலில் கத்த,
“அண்ணா, அதுதான் நான் வேறு ஒரு ஆராய்ச்சி செய்கையில் தற்செயலாக அமைந்துவிட்ட கண்டுபிடிப்பு;”
இந்த ஒரு சிறு குப்பிமருந்து மட்டும்தான் என்னால் தயார் செய்ய முடிந்தது. அப்பா இன்னும் பத்து நிமிடங்களில் எழுந்து விடுவார், இந்த மருந்து ஒரு ஸ்பூன் குடித்தால் போதும் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாவது வயது குறைந்து இளமையாகலாம். அப்பா சாகக் கிடப்பதால் இன்னும் ஆராய்ச்சி பூர்த்தி ஆகாவிட்டாலும் முயற்சியாவது செய்து பார்ப்பதில் தவறில்லையே,.. அப்பா இருந்த நிலைமையில் அவரால் இந்த மருந்தைக் குடிக்க முடியாது அதனால் மூச்சில் கலக்க வைத்தேன்,… ஆனால், இதில் ஓர் அபாயம் உள்ளது,….. அவள் பேசும்போதே கிழவர் உடல் லேசாக தூக்கிவாறிப் போட்டது போல் இருக்க ,.. புரு பேச்சை நிறுத்திவிட்டு அப்பாவின் உடலில் ஏற்படும் சில அசைவுகளைப் பார்த்துவிட்டு அவள் அவரது கை கால்களை லேசாக வருடியவாறு, அவரையே கவனித்துக்கொண்டிருக்க,
அவர்கள் மூவரும் அவ்வளவு அவசரமாக சத்தமின்றி மேசையில் இருந்த குப்பியையும் ஸ்பூனையும் எடுத்து ஆளுக்கு கொஞ்சம் குடித்துவிட்டு ஒன்றும் தெரியாதமாதிரி உட்கார்ந்திருந்தார்கள்.
பெரியவருக்கு அவசரமாக மசாஜ் செய்து கொண்டிருந்த புரு, அவர் கண்களை இனி எப்போது வேண்டுமானாலும் திறக்கலாம் என்பதை அவர்களுக்குச் சொல்ல திரும்புகையில் மேசை மீதிருந்த காலி மருந்து புட்டியைப் பார்த்து திடுக்கிட்டுபோய்,
” பாவர்தனா,( கடவுளே) இதை மருத்துவ சாதகத்தின் கடைசி தினத்தில்தான் குடிக்கணும் என்று பதைபதைக்க, ” நீங்கள் கொட்டி விட்டீர்களா, என்ன செய்தீர்கள் சொல்லுங்கள்,” பதறிபோக, எல்லாவற்றுக்குமே நேரம் கடந்துவிட்டது. வக்கீல் மாமா கண்ணாடி கதவுக்குபின் வருவது தெரிந்தது.
தான் சொன்னபடி சரியாக வக்கீல் மாமா, இரு உதவியாளர்களுடன் உள்ளே
கிழவர் அறைக்கு வந்தபோது மூன்று சிம்பன்சிக் குரங்குகள் வாழைப்பழம் தின்று கொண்டிருப்பதைப் பார்த்து திகைத்தார்.
– தமிழ் நேசன் 2006