புருவக்குட்டி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 21, 2016
பார்வையிட்டோர்: 7,803 
 

கிடுகு முனைந்துகொண்டிருந்த சரசுவை புறவாசல் பக்கமிருந்து கத்தும் ஆட்டின் சத்தம் நிமிரச்செய்தது. அவள் வளர்க்கும் ஆடுகளில் ஒன்று சினையாகி இருந்தது. இரண்டு நாட்களாக எப்போது குட்டி போடும் என்று காத்துக்கொண்டிருந்தவள் சத்தம் கேட்டவுடன் ஓடிச் சென்று பார்த்தாள். ஆடு குட்டி ஈனும் தருவாயிலிருந்தது.

அருகில் சென்று அதன் முதுகை வாஞ்சையுடன் தடவிக்கொடுத்தாள். வலி பொறுக்க முடியாமல் தலையை ஆட்டியபடியே சத்தம்போட்டுக்கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் ஆட்டுக்குட்டியின் சிறிய கால்களும் அதற்கிடையே தலையும் வெளியே வர ஆரம்பித்தது. குட்டிபோடும் இடத்தில் சாக்குப்பைகளை விரித்து வைத்தாள் சரசு. குட்டியின் உடல் முழுவதுமாய் வெளிவந்து சாக்குப்பை மீது பொத்தென்று விழுந்தது. பழைய துணி ஒன்றை எடுத்து குட்டியை நன்றாக துடைத்துவிட ஆரம்பிக்கும்போது அடுத்த குட்டியையும் ஈன்றது அந்த தாய் ஆடு. சத்தம்கேட்டு பக்கத்துவீட்டு செவ்வந்தி ஓடிவந்தாள்.

“என்ன சரசக்கா ஆடு ஈனிருச்சா? கெடாக்குட்டியா புருவக்குட்டியாக்கா?”
ஆர்வம் பொங்க கேட்டாள் அச்சிறுமி.

“ரெண்டும்தான்..நல்ல நேரத்துல வந்த கொஞ்ச நேரம் குட்டிய பார்த்துக்க,எதிர்தோட்டத்துல போயி புல்லறுத்துட்டு ஓடியாந்துர்றேன். பாவம் ஆடு களச்சு போயிருக்கும்” என்றவள் பனையோலை பெட்டியும் புல்லறுக்கும் அருவாளும் எடுத்துக்கொண்டு கிளம்பினாள். வாசலுக்கு வந்தவளை வழி மறித்தான் சரசின் கணவன் சாமிக்கண்ணு. சாமிக்கண்ணு ஒரு மொடாகுடிகாரன். வேலை வெட்டி இல்லாமல் ஊர் சுற்றுபவன்.

அவள் கையை முறுக்கி, முதுகில் ஓங்கி அறைந்து கீழே தள்ளிவிட்டான்.

“யாத்தீ” என்று அலறியபடி விழுந்தாள் சரசு.

“ரெண்டு நாளா துட்டு துட்டுன்னு நானும் நாயா அலையறேன் ஒரு பயலும் துட்டு குடுக்கமாட்டேங்கறான். இப்ப துட்டு தர்றியா இல்லையா? அடுப்பகறையில ஒளிச்சு வச்சிருப்பியே? சனியன்புடிச்ச சிறுக்கி” கோபத்தில் கத்தினான் சாமிக்கண்ணு.

“இந்தா பாரு ஆடு குட்டி ஈனியிருக்கு. நான் போயி புல்லறுத்துட்டு வரணும். ச்சும்மா என் கிட்ட அஞ்சு பைசா கிடையாது. அடுப்புல பழைய சோறு இருக்கு வெங்காயத்தை கடுச்சுக்கிட்டு தின்னு இல்ல எங்கயாவது போயி சாவு. என் உசிர எடுக்காத” சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.

ஆடுகளுக்கு புற்கள் அறுத்துக்கொண்டு வீட்டிற்கு வரும்போது திமுதிவென்று ஆட்கள் ஓடுகின்ற சத்தம் கேட்டு புரியாமல் நின்றாள். கூட்டம் கூட்டமாக எல்லோரும் குளத்தை நோக்கி ஓடிக்கொண்டிருந்தனர். என்ன ஏதுவென்று புரியாமல் சிறுவன் ஒருவனை மடக்கி நிறுத்தினாள்.

“ஏலே எல்லாரும் எங்க இப்படி கண்ணு மண்ணு தெரியாம ஓடுதிய?”

“அக்கா உனக்கு சேதி தெரியாதா குளத்தாங்கரை பக்கத்துல சாராய கட இருந்துச்சுல்லா, அதுல ஏதோ விசம் கலந்துருச்சாம். நாலு வேரு செத்துக்கெடக்காங்களாம்” மூச்சுவாங்கிக்கொண்டே சொன்னவன் சரசைவிட்டு விலகி ஓடிவிட்டான். தூக்கிவாரி போட்டது சரசுக்கு. ஒருவேளை சாமிக்கண்ணு குடிக்க போயிருந்தால்? தெரியாமல் புருஷனை சாபமிட்டது பலித்துவிடுமோ? விறுவிறுவென்று வீட்டிற்கு வந்து தேடிப்பார்த்தாள். சாமிக்கண்ணு வீட்டில் இல்லை. ஆடு கத்திக்கொண்டிருந்தது.

குளக்கரை நோக்கி ஓட்டமும் நடையுமாக படபடப்புடன் சென்றாள் சரசு. குளக்கரைக்கு பக்கத்திலிருந்த சாராய கடையை பெரும் கும்பல் சூழ்ந்திருந்தது.

ஒப்பாரிச்சத்தமும், அழுகையும் பலமாய் கேட்டது. நெஞ்சிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுதுகொண்டிருந்தனர் பெண்கள். நான்கு உடல்கள் வரிசையாக கிடத்தப்பட்டிருந்தன. பயந்து அழுதுகொண்டே ஒவ்வொரு உடல்

அருகிலும் சென்று பார்த்தாள் சரசு. நான்காவது உடலை பார்ப்பதற்கு சென்றவள் தோள்மீது ஒரு கை விழுந்து தடுத்தது. யாரென்று திரும்பி பார்த்தாள்.

தலையை தொங்கபோட்டுக்கொண்டு நின்றிருந்தான் சாமிக்கண்ணு. கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் கொட்டிக்கொண்டிருந்தது.

“மச்சான் ஏம் மச்சான் அழுவற…மச்சான் என்னாச்சு மச்சான்” அவனைக் உயிருடன் கண்ட சந்தோசத்திலும், ஏன் அழுகிறான் என்கிற குழப்பத்திலும் அவனை உலுப்பினாள் சரசு.

“என்னை மன்னிச்சுடு புள்ள…எத்தனையோ நாளு நீ என்னைய குடிக்ககூடாதுன்னு நீ சொல்லியும் நான் கேட்கல. இன்னைக்கு நீ புல்லறுக்க போயிருந்தப்ப புதுசா பொறந்த ஆட்டுக்குட்டிய எவனுக்காச்சும் வித்து தண்ணி அடிக்கலாம்னு நெனச்சு புருவக்குட்டிய தூக்கிட்டு சந்தை பக்கம் போனேன். போகிற வழியில கையில இருந்து ரோட்டுல குதிச்சிருச்சு. ஓடிப்போயி எடுக்கறதுக்குள்ள பஸ்ஸுகாரன் அடிச்சு எறிஞ்சுட்டான். அந்த சின்னக்குட்டி துடிதுச்சு சாகறத கண்ணால பார்த்துட்டேன் சரசு. என்னால தாங்க முடியல. மனசு ஒடிஞ்சுபோயி அங்கேயே ஒட்கார்ந்திருந்தேன். அப்போதான் சாராயத்துல விஷம் கலந்த விசயம் தெரிஞ்சுது. அதோட உசுர விட்டு என் உசிர காப்பாத்திருச்சு அந்த ஆட்டுக்குட்டி. இனிமே அந்த ஆட்டுக்குட்டிமேல சத்தியமா நான் குடிக்கமாட்டேன் சரசு” சொல்லிவிட்டு கதறி அழுதான் சாமிக்கண்ணு.

சாராயத்தால் இறந்தவர்களுக்காக அழுகின்ற சத்தத்தைவிட அதிகமாய் கேட்டது ஆட்டுக்குட்டிகாக அழுகின்ற சாமிக்கண்ணுவின் அழுகைச்சத்தம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *