இரவு சாப்பாடு முடிந்து, நளினி அடுப்படியில் ஏதோ வேலையாக இருக்க, “டிவி’ பார்த்துக் கொண்டிருந்த மகன் அருகில் வந்தாள் தங்கம்.
“”பரணி… உன் பெரியம்மா, அவங்க சொந்தக்காரங்களோடு சேர்ந்து, ஷீரடி, பண்டரிபுரம் எல்லாம் அடுத்த மாதம் போகப் போறதாக சொன்னாங்க. நானும், அப்பாவும் அவங்களோடு போயிட்டு வரலாம்ன்னு பார்க்கிறோம். தகுந்த துணையோடுதான் அவ்வளவு தூரம் போக முடியும். ஏதோ கண் மூடறதுக்குள்ளே ஷீரடிக்கு போகணும்ன்னு எனக்கு ஆசை. என்னப்பா சொல்ற?”
சிறிது நேர மவுனத்திற்குப் பிறகு, “”சரிம்மா. யோசிச்சு இன்னும் இரண்டு நாளில் சொல்றேன்.”
“”என்னங்க… உங்கம்மா சொல்லிட்டாங்களா… ரெண்டு நாளா அவங்க அக்காவோடு இதுதான் பேச்சு. உங்க பெரியம்மாவுக்கு பணம் கொட்டிக் கிடக்கு. நினைச்ச இடத்துக்கு, நினைச்ச நேரத்தில் கிளம்புவாங்க. இங்கே அப்படியா? வீட்டு நிலைமையை யோசிக்க வேண்டாமா? இடத்தை வாங்கி, லோன் போட்டு, வீட்டை கட்டிட்டு இருக்கோம். புள்ளைங்க படிப்பு செலவு வேறு. மாமா பென்ஷனும், உங்க வருமானமும் சேர்ந்து, ஏதோ வண்டி ஓடிட்டு இருக்கு. அவங்களுக்கே தெரியணும். சின்னக் குழந்தைங்க மாதிரி ஊருக்குப் போக ஆசைப்பட்டுக்கிட்டு…”
நளினி பேச்சை முடிக்க, பதிலொன்றும் சொல்லவில்லை பரணி.
பரணிக்கு, பாங்கில் வேலை சரியாக இருந்தது. திங்கட்கிழமை என்பதால் கூட்டம் அதிகம். பைலை கொண்டு வந்து, அவன் மேஜையின் மீது வைத்த அட்டெண்டர், “”சார்… புது பீல்டு ஆபிசர் வந்திட்டாரு பார்த்தீங்களா?” என்று கேட்க, அப்போது தான் கவனித்தான். அடுத்த கேபினில், 50 வயது மதிக்கத்தக்க நபர் உட்கார்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
“”சார்… வணக்கம்.”
“”வாங்க… நீங்க அக்கவுன்டன்ட் பரணிதானே. நான் தர்மபுரியிலிருந்து டிரான்ஸ்பரில் வந்திருக்கேன். இன்னைக்கு தான் ஜாயின் பண்ணினேன். இங்கே பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில், மேன்சனில் தங்கியிருக்கேன். பேமிலியை கூட்டிட்டு வரணும் சார். நல்ல வீடு இருந்தா சொல்லுங்க,” என்று, சகஜமாக அவர் பேசினார்.
“”கட்டாயம் விசாரிச்சு சொல்றேன்.”
அதற்குள் பாங்க் மேனேஜரிடமிருந்து அழைப்பு வர, அவர் அறை நோக்கி சென்றான்.
சிறிது நேரத்தில் வெளியே ஒரே பரபரப்பு. என்ன ஆச்சு… பீல்டு ஆபிசரை சுற்றிக் கூட்டம். அவர் நாற்காலியிலேயே உட்கார்ந்தபடி மயங்கி சரிந்திருக்க… அடுத்த, 10 நிமிடத்தில், காரில் அவரை அழைத்துக் கொண்டு, அருகிலிருக்கும் ஆஸ்பத்திரிக்கு செல்ல… மாரடைப்பு… உயிர் பிரிந்து விட்டது. பரணியால், அதை ஜீரணிக்க முடியவில்லை. நன்றாக சிரித்துப் பேசிய அந்த நபர், அடுத்த அரை மணி நேரத்தில் இறந்து கிடப்பது… மனம் அதிர்ந்தது.
“”பரணி… நீங்களும், ஹெட் கிளார்க்கும் ஆம்புலன்சில் தர்மபுரிக்கு போய், பாடியை அவங்க வீட்டிலே ஒப்படைச்சுட்டு வந்துடுங்க. நம்ப தர்மபுரி பிராஞ்ச் மூலமா அவங்க வீட்டுக்கு தகவல் சொல்லியாச்சு. கொஞ்சம் சிரமம் பார்க்காம போயிட்டு வாங்க. ப்ளீஸ்,” என்று மேனேஜர் சொல்ல, பரணியால் மறுக்க முடியவில்லை. மனிதாபிமானம் அவனை சம்மதிக்க வைத்தது.
மனித வாழ்க்கை எவ்வளவு சீக்கிரம் முடிந்து விடுகிறது. அரை மணி நேரம் முன், சிரித்துப் பேசியவர், இப்போது சடலமாக, இன்னும் சரியாகப் பழகாத அவருக்காக அவன் மனம் வருந்தும் போது, பாவம், அவருடைய உறவினர்களால் இதை எப்படி ஜீரணிக்க முடியும்.
“”பாவம், மனுஷன், இப்படி குடும்பத்தை அநாதரவாக விட்டுட்டுப் போயிட்டார். வயசான அம்மா, மனைவி, இரண்டு பெண்களாம். குடும்பமே தவிச்சுப் போய் நிக்கும்.”
— வேனில் அருகில் அமர்ந்து வரும் ஹெட் கிளார்க் சொல்ல, மனம் கனக்க அமர்ந்திருந்தான் பரணி.
வீட்டின் முன் வேன் நிற்க, உள்ளிருந்து கூட்டமாக வந்த உறவினர்கள் வேனை சூழ்ந்து கொள்ள, “”என்னங்க… என்னை விட்டு போயிட்டீங்களா…”
— தலைவிரி கோலமாக அழுதபடி வரும் பெண்மணி, அவளை இருபுறமும் கை தாங்கலாகப் பிடித்தபடி அலறும் பெண்கள். பரணியின் கண்களில் கண்ணீர் தளும்பியது.
எண்பது வயது மதிக்கத்தக்க மூதாட்டி, நடக்க முடியாமல் கம்பை ஊன்றியபடி, தட்டு தடுமாறி வந்தாள்.
“”என் தங்கமே, வயசான காலத்தில் என்னை நிற்கதியாக விட்டுட்டுப் போயிட்டியே… எனக்கு இனி யார் இருக்கா… எனக்கு கொள்ளி போட வேண்டிய நீ, என் கண் முன்னாலே இப்படி கிடக்கறியே… என் புள்ளை இல்லாம, இனி நான் எப்படி இருப்பேன். கடவுளே,” என்று புலம்பியபடி மயங்கி சரிய, அவளை, அருகில் இருந்தவர்கள், தாங்கிப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றனர்.
பாடியை ஒப்படைத்து விட்டு, அதே வேனில் இருவரும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
“”பரணி… காலையிலிருந்து ஒண்ணும் சாப்பிடலை. ஓட்டலில் நிறுத்தி, ஏதாவது சாப்பிடுவோமா?”
“”எனக்கு வேண்டாம்… மனசு என்னவோ போல் இருக்கு. வெறும் டீ மட்டும் போதும்; நீங்க சாப்பிடுங்க.”
“”இல்லப்பா. எனக்கும் வேண்டாம்; உனக்காகத் தான் கேட்டேன். டிரைவர், வண்டியை ஏதாவது ஓட்டல் பக்கத்தில் நிறுத்துங்க. டீ குடிச்சிட்டு போகலாம்.”
மவுனமாக அமர்ந்திருக்கும் பரணியைப் பார்த்தார்.
“”என்ன பரணி இது, இந்த அளவு நீ அப்செட் ஆவேன்னு தெரிஞ்சிருந்தா, வேறு யாரையாவது அழைச்சுட்டு வந்திருப்பேன். வருத்தப்படாதே… மனுஷ வாழ்க்கையில் ஜனனமும், மரணமும் சகஜம்பா… அதை, நாம் ஏத்துக்க வேணும். வாழ்க்கையே அவ்வளவுதாம்பா. உறவுகள் நம்மோடு இருக்கும் போது, அவங்களுடைய மன உணர்வுகளை ஏத்துக்க மறுக்கிறோம். அவர்கள் நம்மை விட்டு பிரியும் போது தான், அவர்கள் ஆசைகள், தேவைகள் எல்லாம் நிறைவேற்றாமல் போய் விட்டோமோன்னு மனது வேதனைப்படும். அவங்க உயிரோடு இருக்கும் போது, அன்பு காட்டத் தயாராக இல்லாத மனசு, அவங்க இறந்த பிறகு, அவங்க படத்தை வைத்து பூஜிக்க நினைக்குது.”
ஹெட்கிளார்க் சொல்ல, “”வயசான என்னைத் தவிக்க விட்டு போயிட்டியே… இனி, எனக்கு யார் இருக்கான்னு அந்தத் தாய் அழுதது, இன்னும் என் கண்ணிலேயே நிக்குது சார்.”
“”பரணி… மனசை தேத்திக்கப்பா.”
விடியற் காலையில் வீட்டில் நுழைந்தவனை, “”பரணி… என்னப்பா ஆச்சு. ராத்திரி வேலை இருக்கு. வீட்டிற்கு வரமாட்டேன்னு போன் பண்ணினே. கண்ணெல்லாம் சிவந்திருக்கு. தூங்கலையாப்பா.”
கேட்டபடி தங்கம் எதிர்கொள்ள, “”துக்க வீட்டுக்குப் போகும்படி ஆச்சு. குளிச்சிட்டு வர்றேன்மா,” என்றான்.
குளித்துவிட்டு, தலையை துவட்டியபடி வந்தவன், சோபாவில் அமர்ந்திருக்கும் அம்மாவின் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டான்.
“”என்னங்க… என்ன விஷயம், யார் இறந்துட்டாங்க,” என்று கேட்டபடி நளினி வர, “”நளினி… முதலில் அவனுக்கு சூடா காபி எடுத்துட்டு வாம்மா. குளிச்சிட்டு வந்திருக்கான். சாவகாசமாகச் சொல்லட்டும்,” சொன்னவள், “”பரணி… தலையில் ஈரம் அப்படியே இருக்கு பாரு. இந்தா துண்டு… நல்லா துடைச்சுக்க,” என்றாள்.
கரிசனத்துடன் சொல்லும் தாயைப் பார்த்து, “”அம்மா… நீயும், அப்பாவும், பெரியம்மாவோடு ஷீரடி போயிட்டு வாங்க. எல்லா கோவில்களிலும் நல்லா தரிசனம் பண்ணிட்டு, சந்தோஷமா வாங்க.
அதற்காகும் செலவை, பெரியம்மாகிட்டே கொடுத்துடறேன்,” என்று சொன்ன மகனை, பாசம் மேலிட, மகிழ்ச்சியோடு பார்த்தாள் தங்கம்.
– மார்ச் 2011