புயல் உறையும் பூக்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 6, 2021
பார்வையிட்டோர்: 4,540 
 
 

வானம் சிவப்பும் மஞ்சளுமாய் கலந்து மினுங்கிக் கொண்டிருந்தது. அந்த அந்தி சாயும் வேளை அடுத்த ஒரு மணி நேரம்தான் செல்லியம்மாளுக்கு வியாபாரத்தின் மும்முரமான சமயம். அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் பெண்களில் செல்லியம்மாளுக்கு கொஞ்சம் நிரந்தர வாடிக்கையாளர்கள் உண்டு. நல்ல நாள் பண்டிகைக் காலங்களில் சற்று அதிகப்படியான வியாபரம் போணியாகும். மொத்தச் சந்தையில் அன்று எது மலிவாகக் கிடைக்கிறதோ அந்தப் பூக்களை எடைக்கு வாங்கி மாலையாக்கி எண்ணிக்கையில் விற்கும் மிகப் பெரிய வியாபார உத்தியில் – இந்திய அரசாங்கம் சமீப காலங்களில் செல்லியம்மாள் போன்ற அன்றாடங்காய்ச்சிகளை குறு தொழில் முனைவோர் பட்டியலில் உயர்த்தி வல்லரசாகத் துடிக்கும் வேகத்திலும் – செல்லியம்மாள் கடந்த இருபது வருஷங்களுக்கும் கூடுதலாக கைக்கும் வாய்க்குமாக ஓட்டிக் கொண்டிருக்கிறாள். கஞ்சிக்கே வழி இல்லேன்னாலும், அடயறதுக்கு ஒரு ஓலக் குடிச கூட கொடுப்பின இல்லேன்னாலும், எப்படியோ வழி வழியாய் பாமரருக்கே வருகிற வைராக்கியமான செத்தாலும் சாகாலாமேயொழிய வயிறு வளக்க திருட்டு, பிச்சை என்ற ரெண்டு மட்டும் கூடாதுங்ற உறுதியில் செல்லியம்மாளுக்கு இந்த பூ வியாபரம் வந்து சேர்ந்தது.

இந்த தேசத்தின் எத்தனையோ முகவரியற்ற மன்னர்களில் செல்லியம்மாளும் ஒருவர். கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் கணக்கற்ற துரும்புகளில் இந்த அறுபத்திரண்டு வருஷங்களில் செல்லியம்மாள் தன் பெருவாரியான நாட்களை இந்த நகரத்தில்தான் கரைத்திருக்கிறார். மிச்சமிருக்கின்ற நாட்களும் இந்த மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகத்தின் சுற்றுச் சுவர்களின் கீழ் நடைபாதையில் அவளைப் போல வேறு வேறு சில்லறை வியாபரங்களில் வயிறு வளர்க்கும் கூட்டாளிகளுடன்தான் கழிந்து போகும். பக்கத்தில் பத்து கிலோ மீட்டர் தள்ளியிருக்கும் ஒரு சிறிய கிராமம்தான் சொல்லிக் கொள்ள செல்லியம்மாளின் பூர்வீகம். வயல் வெளியில் கதிர் கொய்து கைகளிலேயே கசக்கி ஊதி ஊதி தின்றது, சம வயதுக் கூட்டாளிகளுடன் ஆற்றங்கரை மாந்தோப்பில் கல் விட்டு அடித்த மாங்காயை பாவாடை முனையில் மூடி வாயால் கடித்து பங்கு போடுவதற்குள்ளாகவே தோப்பின் காவலாளி அதே கல்லால் ஏக வசவுகளுடன் விரட்டியது, ஊர் சிவன் கோவில் பிரசாதத்தை கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டு சோத்துக் கையில் வாங்கி பொத்தி வைத்துக் கொண்டு மறு படியும் பீச்சாங் கையை நீட்டும் போது பட்டரின் வசவு – அப்படியும் சளைக்காமல் ஒரே வாயில் அமுக்கி விட்டு மறு படியும் கை நீட்டியது என்ற சில சிதிலமான நினைவுகள் தவிர செல்லியம்மாளுக்கு அந்த ஜென்ம பூமியில் இப்பொழுது எதுவும் சொந்தமில்லை. வயல் வேலைக்குப் போய் திரும்பி வந்து அந்தி சாயும் நேரம் அம்மா வடிக்கும் கஞ்சியின் வாசம் நினைவில் வருகிற அளவுக்கு அந்த நாள் அம்மாவின் முகம் கூட இப்பொழுது அவ்வளவாய் ஓர்மை இல்லை. மிஷன் பள்ளிக்கூடத்து பெரிய இரும்பு கேட்டும், எழுதி எச்சில் வைத்து அழித்து மறுபடியும் சிலேட்டில் எழுதியதில் வாத்தியாரின் அடியும், மதிய உணவில் வாரம் மூனு நாள் கோதுமை உப்புமாவை தம்பியுடன் பங்கு போட்டதும் பால் மாவுக் கஞ்சியும்தான் செல்லியம்மாள் கடந்து வந்த பாதைகள். கணவனின் மரணத்துக்குப் பின் கவ்ரவமாய் வயிறு கழுவ பட்டிணப் பிரவேசமான அபலை அம்மாவுடன் சிறிய வயதிலேயே செல்லியம்மாள் இந்த நகரைச் சுவீகரித்திருந்தாள். அதன் பிறகு ஒரு முறையோ இரண்டு முறையோ கோயில், நேர்ச்சை என்று கிராமத்துக்கு அம்மா கூட்டிப் போன நினைவு. திரும்பும் போது ரோட்டோரத்தில் சற்று தள்ளி ஒரு பெரிய வயலைக் காண்பித்து “அதுதான் ஒங்க தாத்தா போக்யத்திலிருந்த நெலம்” என்று சொல்லி பெருமூச்சு விட்டது நினைவிருக்கிறது. இழந்து போன சாம்ராஜ்யங்களின் ஏக்கங்களெல்லாம் அம்மாவுக்குத்தான். செல்லியம்மாளுக்கு அவையெல்லாம் டம்பக் கனவுகள்தான்.

எப்பொழுதாகிலும் “நம்மயும் ஒரு ஜென்மம்ன்னு ஆண்டவன் படச்சானே”ன்னு அலுத்துக் கொள்வது தவிர செல்லியம்மாளுக்கு இந்த ஓட்டத்தில் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளெல்லாம் கிடையாது. இப்படி அலுத்துக் கொள்ளுவது கூட அரிப்பெடுத்த முதுகைச் சொறிகிற சுகம் போலத்தானே அல்லாமல் அது ஒரு புகாராகவோ வருத்தமாகவோ கூட அல்ல. தங்களுக்கு இப்படி விதிக்கப் பட்டிருக்கின்றது என்று அதை இயல்பாய் ஏற்றுக் கொள்ள கற்ப்பிக்கப் பட்டிருக்கிற கோடானு கோடிக் குடிகளின் ஒரு பிரதியாகத்தான் செல்லியம்மாளும். எதிர்பார்ப்புகள் என்று அதிகம் எதுவும் இல்லாததால் ஏமாற்றங்கள் என்றும் பிரம்மாதமாக ஏதும் இல்லை. அம்மை, காலரா, மழை தண்ணி இல்லாம வறட்சி, ரேஷன் கடயில் அரிசிக்குக் காத்துக் கிடப்பது, திடுமென்று புயலும் வெள்ளமுமாய், இவற்றினூடே கோயில், பண்டிகை, கல்யாணம் , காட்சி, தேர்தல் என்று நாட்களின் பல் வேறு விதமான வண்ணங்களில் செல்லியம்மாள் போன்றவர்களின் இருத்தல் எனும் நிர்ப்பந்தம் தொடர்கின்றது. வெள்ளயும் சொள்ளயுமாய் கலெக்டர் ஆபிஸுக்குள் போய் வருகிற ஜனக் கூட்டத்தை பார்க்கிற பொழுது “இதுக்கெல்லாம் படிக்ற வயசுல ஒரு கொடுப்பின இருந்த்ருக்கனும்” என்று தனக்குள் சிரித்துக் கொள்வாளே அல்லாமல் அது ஒரு குறையாகவோ ஏக்கமாகவோ கூட விரிவதேயில்லை. இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் மத்தியில் எப்படியோ சமன் படுத்திக் கொண்டு இந்த உலகம் பயணிக்கிறது என்று கை கழுவும் சித்தாந்தங்கள் செல்லியம்மாள் போன்றவர்களைச் சுற்றியே கட்டியெழுப்பப் படுகின்றன. வசதி படைத்தவர்களுக்கு இது எவ்வளவு சவுகரியமான சமூகம். இப்படி இந்த நகரத்தில் செல்லியம்மாள் வளர்ந்தாள்; இல்லை வளர்க்கப் பட்டாள்.

“இந்தப் பிள்ளய எவன்ட்டயாது ஒருத்தன்ட்ட கைய்யப் பிடிச்சுக் கொடுத்துட்டன்னா நான் நிம்மதியாக் கண்ண மூடிருவேன்” என்று தன் வாழ்நாளின் ஒரே லட்சியமாக செல்லியம்மாளின் அம்மா முணுமுணுப்பதும், சில சமயம் மகளுக்கு எச்சரிக்கை மணி போலவும் சத்தமாக புலம்புவதுமாக ஆரம்பித்திருந்தாள். பருவமும் இன்னொரு பசியின் ஆரம்பமாகவே மலர்வதால் அது தான் படையெடுக்கும் உயிரின் வயிற்றுப் பசியைப் பற்றியெல்லாம் சட்டை செய்யாது. அது அதன் நேரத்தில் அழைக்காமலேயே வருகின்றது; மலர்கின்றது. செல்லியம்மாளுக்கு எரிச்சலூட்டும் கட்டுப்பாடுகள் வந்தன. வயிற்றுப் பசி பத்தையும் பறந்து போக வைத்திடும். அதிகத் தொந்தரவுகள் இல்லாத ஒரு ஆச்சியும் ஐயரும் மாத்திரம் உள்ள வீட்டில் அந்த வயதான பெண்மணிக்குத் துணையாக காலையிலிருந்து மாலை வரை இருந்து செல்லியம்மாள் சம்பாதிக்க அவளுடைய தாய் வழி தேடியிருந்தாள். அம்மா எந்த தைரியத்தில் அல்லது நம்பிக்கையில் தன் கல்யாணம் பற்றி புலம்புகிறாள் என்று அவளுக்குப் பிடிபடவேயில்லை. வாலிபத்தின் கனவுகள் கூட ஆடம்பரமான தன் வக்கற்ற வாழ்க்கையில் செல்லியம்மாள் அதைப் பற்றியெல்லாம் நினைப்பதேயில்லை. மாதம் ஒரு முறை அம்மா தேர்ந்தெடுக்கும், அம்மாவோடு போகும் சினிமாவில் எம்.ஜி.ஆர் சரோஜாதேவியை மரத்தைச் சுற்றி ஓடிப் பிடித்து விளையாடும் கண்ணாமூச்சி காதல் செல்லியம்மாளுக்கு போதுமானதாய் இருந்தது. இடைவேளைக்குப் பின் வரும் அரசாங்கத்தின் குடும்பக் கட்டுப்பாடு விளம்பரத்திற்கும், அதன் பின் படத்தில் வரும் டூயட்டுகளுக்கும் என்ன சம்பந்தம் என்கிற மாய்மால வணிக, சமூக சூத்திரம் செல்லியம்மாளுக்குப் பிடிபடவில்லை. தனியாக இல்லாமல் அவளைப் போன்ற சக மனிதர்களின் கூட்டத்தின் மத்தியில் இரண்டரை மணி நேர முப்பது பைசா இருட்டுச் சுகத்தில், எம்.ஜி.ஆர் ஒற்றை மனிதராய் வில்லன் நம்பியாரையும் அவர் கூட்டத்தின் காலையும் முகத்தையும் முறித்த பின் போலீஸ் விசில் ஊதிக் கொண்டே வந்து எல்லாப் பிரச்னைகளையும் சுபமாய் முடித்து வைக்கும். படம் பாத்து வந்த சில இரவுக் கனவுகளில் எம்.ஜி.ஆர் அவளைப் பார்த்து சிரிக்கும் போது திடுக்கிட்டு முழித்து விடுவாள் செல்லியம்மாள். நல்ல வேளை செய்தி அறிந்து மறு நாள் கனவில் சரோஜாதேவி வந்து செல்லியம்மாளை முறைப்பதில்லை. நிச்சயமற்ற நிஜத்தை தன்னைப் போலவே இரத்தமும் சதையுமான ஒரு நிழல் விழுங்கி வெல்லுவதான பிரேமையில், பேதமையில், அது அதீதம் என்று அறிந்தாலும் ஒரு சுமை குறைந்த சுகம் இருக்கிறது. சூர சம்ஹாரத்திலிருந்து, நரசிம்ம அவதாரம் தொடர்ந்து, அசுரர் தேவர் அரசியலிலிருந்து, அதற்குள் ஆன்ட்டி க்ளைமாக்ஸாக தீபாவளி, ஓணம் பண்டிகைகள் தொடர்வது வரையிலும் காவியம், புராணம், கூத்து, நாடகம் என்று சமைக்கப்பட்ட சமூகத்தில் நவீன விஞ்ஞானம் தந்த திரைப் படம் மாத்திரம் தடம் மாற வேண்டும் என்பது என்ன நியாயம்? இப்படி அற்ப சொற்பத் தேவைகளோடும் திருப்தியோடும் உழன்று கொண்டேயிருந்த செல்லியம்மாளுக்கு ஏற்ற வரனை ஒரு வழியாய் அவள் தாய் தேடிப் பிடித்து ஒரு சுபயோக நன்னாளில் விளக்கு முன்னால் மஞ்சக் கயிறில் திருமணத்தை முடித்து வைத்து விட்டாள்.

கல்யாணம் முடிந்த மூன்றாம் நாளே ஆண்டியப்பன் சாராயப் பிரியன் என்பது செல்லியம்மாளுக்குத் தெரிந்துவிட்டது. உடனே ஊரைக் கூட்டி “இவரு சாரயத்த நிறுத்தலன்னா நான் யேன் அம்மாட்ட போயிருவேன்னு” கர்ஜிக்க, இந்த புனித விவாக விலங்கிலிருந்து வெளி நடப்புச் செய்ய செல்லியம்மாளின் தாய்க்கு குறைந்த பட்சம் சொந்த ஓலைக் குடிசை கூட கிடையாது. பொம்பளகள மிருகம் மாறி மோப்பம் பிடிக்கிறவங்கள்ட்டேருந்து தப்பிக்க ஒரு ஆண் முகவரி என்ற அளவில்தான் செல்லியம்மாளின் தாம்பத்ய தபர்தஸ்து. கணவனின் போதையைப் பற்றி அலட்டிக் கொள்வது கூட ஆடம்பரமாகத்தான் ஆகும். “என்னத்தயும் ஒரு கொத்த வேல, கூலி வேலன்னா ஒடம்பு வலிக்கு சாப்பிட்ரான்னு திருப்தியாகலாம். காலேலேர்ந்து ராத்திரி வர ஒரு கள்ளிப் பெட்டில உக்காந்துக்கிட்டு அப்பப்ப பீடியப் பத்த வச்சுக்கிட்டு அது பாக்ற வாழப் பழ வெயாபாரத்துக்கு இந்த சனியன் என்னத்துக்கு?” என்று தனக்குள் பொருமிக் கொண்டாளே அல்லாமல் “ஒடம்பப் பாருங்க; வீட்டுச் செலவ யோசிங்க” என்று முதலில் மெதுவாய் எச்சரித்தாள். புதுப் பொண்டாட்டியின் உரிமையான எச்சரிப்பே சொந்தமாய் தொழில் செய்யும் ஆண்டியப்பனுக்கு நச்சரிப்பாய்த்தான் தெரிந்தது. மூனு நாளைக்கு ஒரு முறை எண்ணை பாக்கும் தலை முடியை இழுத்து வாரிக் கொண்டு மீசையை சீவி விட்டு, சாரத்தை இருக்கிக் கட்டிக் கொண்டு பரவலாய் வாழைக் கரை படிந்திருக்கும் கலர் டி சர்ட்டை உதறி மாட்டிக் கொண்டே “ எல்லாம் எனக்குத் தெரியும் பிள்ள; நொய் நொய்ங்காத” என்று சொல்லிக் கிளம்பி விடுவான். கனவும் நினைவும் இணையாத நாட்களின் வாடிக்கையில், அந்த ஏக்கத்தில், சுமையின் சோகத்தில் சில வறியவர்களின் வாழ்க்கையில் போதை ஒரு அங்கமாகி விடுகின்றது. திருப்தியான போதையின் பின் எப்பொழுதாகிலும் செல்லியம்மாளின் கருவாட்டுக் கொழம்பும் சோறும் கை கொடுத்தால் அவனுடைய ஒரே சொத்தான ஈஸிசேரில் சாய்ந்து “ஆமா இந்த லட்ச ருபா பழ வியாபரத்ல நான் கோடி கோடியா சம்பாதிச்சு, செலவழிக்காம சேத்து வச்சு, காரு பங்களா, ஒனக்கு கழுத்து நெறய நகன்னு ஜொலிக்கப் போறோம். போடி போக்கத்தவள; இருக்றதுக்குள்ள திருப்தியா இருக்கப் பாரு. வாரத்ல மூணு நாள் என்னோட ஒரே சொகம். நான் சம்பாதிச்சு சாப்ட்டு திருப்தியா தூங்கற மாதிரி நகைக் கட செட்டியாருக்குக் கூட கொடுப்பின கெடயாது. பணத்த வச்சுப் புடுங்கவா? போ போ” என்று தன் நாட்களின் திருப்தியையும் போதையின் நியாயத்தையும், அதில் அவன் கண்ட ஞானத்தையும் செல்லியம்மாளுக்கு உபதேசிப்பான். பல சமயங்களில் சரக்கு உள்ளே சென்ற அளவிற்கு பல்வேறு காரணங்களினால் சாப்பாடு உள்ளே செல்லாமல் ஆண்டியப்பன் உடலில் உபாதைகள் ஆரம்பித்தன. விளைவாக பத்தே வருஷ தாம்பத்ய சுகத்திலும் பெரு வாழ்வு வாழ்ந்து கழித்த திருப்தியுடனும் ஆண்டியப்பன் வாழ்க்கைப் போதையிலிருந்து விடு பட்டு அகாலமாய் செல்லியம்மாளிடமிருந்து விடை பெற்று வீடு பேறடைந்து விட்டான்.

அக்கம் பக்கம், ஒரே ஒரு உறவு குழும கடந்து போன கணவனுக்காக மூன்று நாட்கள் துக்கம் கொண்டாடினாள் செல்லியம்மாள். அதுவே அதிகம்தான். நாலாம் நாள் சோத்துக்கு என்ன பண்ணுவது? உடனடித் தேவைகளின் குரூர நெருக்கடி வாழ்வின் பிரதானமான இழப்புகளைக் கூட செல்லியம்மாள் போன்றவர்களுக்கு மரத்துப் போய் மறக்கச் செய்கிறது. ஆண்டியப்பன் இருக்கும் போதே இரண்டு வீடுகளில் செல்லியம்மாள் தூத்துத், துடைத்து, கழுவிப், பெருக்கும் தேசத்தின் முறை சாரா உழைக்கும் மக்கள் கூட்டத்தில் இணைந்திருந்தாள். ஆண்டியப்பன் விட்டுப் போன வெற்றிடத்தில் கிடைத்த அந்த நேரத்தில் என்ன செய்யலாம் என்ற யோசனை அரித்தது. மூன்று குடிசை தள்ளியிருக்கும் ரேணுகாம்மா வாரம் ரெண்டு மூன்று நாட்கள் சந்தையில் வாங்கி வரும் மல்லிகையை மாலையாக்கக் கொடுப்பாள். இன்ன கூலி என்றெல்லாம் இல்லாமல் வாரம் ஒரு முறை செல்லியம்மாளுக்கு செலவுக்குக் கொடுப்பாள். பூவும் பொட்டுமிழந்த செல்லியம்மாளுக்கு பூ கட்டி விற்கும் வியாபரம் ஆண்டியப்பனுக்குப் பதிலான துணையானது. பூவும் நூலும் வாடகையற்ற நடைபாதையும்தான் மூலதனம். ஆண்டியப்பன் போய்ச் சேர்ந்த ஆறாவது நாள் செல்லியம்மாள் தன் கணவனின் கடையைத் தேடிப் போனாள். ஆண்டியப்பனின் கள்ளிப் பெட்டி ஆசனம், கள்ளிப் பலகையில் அவன் பழங்களைப் பரப்பி வைக்கும் பெரிய அலமாறியுமான பட்டறை இரண்டும் நடைபாதையில் சற்று உள்வாங்கி ஒதுக்கி வைக்கப்பட்டது போலிருந்தது. கள்ளி அலமாறியில் ஆண்டியப்பன் இல்லாது போனதால் அதற்குள் ஒரு பெரிய சிவப்பு நோட்டீஸ் – போக்குவரத்து ஊழியர்களின் போராட்ட நோட்டீஸ் – ஒட்டப் பட்டிருந்தது. அவளை அவ்வளவு சீக்கிரமாய் எதிர்பார்க்கவில்லை என்பதை பக்கத்துக் கடை அண்ணாச்சியின் பார்வை சொன்னது. சுதாகரித்துக் கொண்டவர் “வாம்மா வா , நல்லாருக்கியா ? துணைக்குத் துணையாயும், ஒரு பெரிய தைரியமாயும் இருந்தான்ம்மா. நமக்குக் கொடுப்பின இல்ல; அவ்ளவுதான்” ன்னு ஆறுதல் வார்த்தைகள் சொன்னவர் “ரெண்டொரு பேர் வந்து கடயப் பாத்தாங்கம்மா. நான் கேட்டுச் சொல்றேன்னு சொன்னேன்” என்றார். “யார்ட்டயும் எதுவும் சொல்ல வேண்டாம்ப்பா”. அழுத்தம் திருத்தமாய் செல்லியம்மாள் பதில் சொன்னாள். சற்று நேர மெளனத்திற்குப் பின் “சீக்கிரமா கை மாத்திரணும். இல்லேன்னா தர்ர கொஞ்ச காசும் கூட தர மாட்டானுங்கம்மா” என்றவரிடம் “காசும் வேண்டாம்; கடய விடறதாவும் இல்ல. ரெண்டே நாள்ல்ல வந்துருவம்ப்பா” என்று மறுபடியும் அவரிடம் அழுத்தமாகச் சொன்னாள் செல்லியம்மாள். அவளறிய வாழ்வில் முதல் முறையக செல்லியம்மாள் தன் உரிமையை, தீர்மானத்தை அழுத்திச் சொன்னாள். கொஞ்சம் குழம்பியவராகவும், புரியாமலும் “சரி, ஒன் இஷ்டம்” என்று சொல்லி ஒதுங்கிக் கொண்டார்.

அடுத்த ரெண்டாம் நாள் கொஞ்சம் மல்லிகை, சம்பங்கி, மஞ்சள் பூக்களோடும், ஒரு சிறிய ப்ளாஸ்டிக் வாளி, பெரிய குடையோடு செல்லியம்மாள் ஆண்டியப்பன் ஆசனத்தில் தன் உரிமையை நிலை நாட்டி அமர்ந்துவிட்டாள். முருகன் ஃப்ரூட் ஸ்டால் இயற்கையின் இயக்கத்தில் சற்று பின் வாங்கி பூக்கடையாக மலர்ந்து விட்டது. காலை ஏழு மணியிலிருந்து பத்து மணி வரை வியாபாரம். அதன் பிறகு ரெண்டு வீட்டு வேலைகளை முடித்து விட்டு சந்தையில் போய் பூக்களை வாங்கிக் கொண்டு முந்திய நாள் சாதத்தை ஒரு சின்ன எவர்சில்வர் டப்பாவில் எடுத்துக் கொண்டு கடைக்குத் திரும்பி விடுவாள். இரவு எட்டு மணி வரையிலும் வியாபரம் பார்த்து விட்டு வீடு திரும்புவாள். ஒரு வருஷத்திற்க்குப் பின் ஒரே ஒரு வீட்டு வேலையை மட்டும் வைத்துக் கொண்டாள். நாட்கள் அவளைக் கரைத்ததா இல்லை அவள் நாட்களைத் துரத்தினாளா என்பதைத் தீர்மானிக்க முடியாத நிலவரத்தில் செல்லியம்மாள் இருத்தலின் இயக்கம் பயணித்தது. இப்படியாக மாவட்ட ஆட்சியர் வளாகத்தைச் சுற்றி அதைச் சார்ந்து இருக்கும் மனு எழுதிக் கொடுப்பவர்கள், அரசாங்கச் செல்லான் நிரப்பிக் கொடுப்பவர்கள், சைக்கிள் பஞ்சர் பாக்கும் சிறிய மெக்கானிக், டீக் கடைகள், பெட்டிக் கடைகள் ஆகிய இத்யாதி சமூக இயக்கத்தின் பிரிக்க முடியாத உறுப்பினர் பட்டியலில் செல்லியம்மாளும் ஒருவராகி விட்டாள். ஒரு முறை நகராட்சியிலிருந்து, ஒரு முறை மாவட்டத் தொழில் வளர்ச்சித் துறையிலிருந்து, இன்னொரு முறை மாவட்ட முன்னோடி வங்கி என்று மூன்று நான்கு முறைக்கும் மேலாக செல்லியம்மாளின் பெயர், வயது, ஊர், கணவர், குடும்பம், முகவரி என்று தரவுகளாகப் புனருத்தாரணம் பெற்று பதியப்பட்டுவிட்டாள். “எத்தன பேர் எடுப்பாக ? எத்தன தடவ எடுப்பாக? என்னத்துக்கு எடுக்காக?” என்று முனங்கிக் கொண்டாள்.

செல்லியம்மாளும் அவளுடைய நடை பாதை வியாபார சகாக்களும் அந்த மாவட்ட ஆட்சியர் வளாகத்தின் பக்கவாட்டில், முன் பின் வாசல்கள் தவிர இன்னுமொரு அவசர வழியாகப் பயன் படுத்தப்படும் ஒரு வாசலின் இரண்டு பக்கமும்தான் நங்கூரமிட்டிருந்தார்கள். எப்படியும் மாதத்தில் குறைந்தது மூன்று முறையாவது அந்த வாசலை நிறைத்து தேவைக்கேற்றபடி ஷாமியானோ போட்டோ போடாமலோ எதாவது ஒரு கூட்டம் வந்து அவரவர் கொடிகளைப் பிடித்துக் கொண்டு கோஷம் போடுகிறார்கள். வந்த புதிதில் செல்லியம்மாளுக்கு இது வினோதமாகத் தெரிந்தது. நாட்கள் செல்ல செல்ல அவள் வாழ்வின் எல்லா நல்லது பொல்லாததுகளும் அவளுக்குப் பழகிப் போனது போலவே இந்த வாழ்க, ஒழிக, ரத்து செய், அமுல் படுத்து, எச்சரிக்கை, கண்டிக்கிறோம், கைது செய், ஜிந்தாபாத், ஓங்குக, போராடுவோம், வெற்றி பெறுவோம் என்ற கோஷங்களும் கூட்டங்களும் பழகிப் போய்விட்டன. ஏன் இங்கன வந்து கத்துதாக? கலெக்டர் ஒரு நாள் கூட கத்றவுகள வந்து எட்டிப் பாக்க மாட்டக்கார; அப்டியிருந்தும் யாராவது மாத்தி மாத்தி வந்து தொண்டத் தண்ணி வத்த கத்திக்கிட்ருக்காகளே? இதெல்லாம் அவளுக்குப் புரியவில்லை. வந்து கோஷம் போட வர்ர ஜனமும் வித விதமா ரகம் ரகமாத்தான் வர்ராக. வெள்ளயும் சொள்ளயுமா இருக்றவகளும் வந்து கத்றாக; பஞ்சயும் பராரியுமாவும் வாராக. கட்சிக் காரங்களும் வாராக; அவளுக்கு என்னன்னே தெரியாத கொடியெல்லாம் தூக்கிட்டு வாராக. அவங்கள்ளாம் வேறவேற சங்கத்துக் காரங்கன்னு அவளுக்குப் பின்னால் தெரிய வந்தது. ஒரு நாள் சாய்ந்த்ரம் அவ பாத்தப்ப கலெக்டர் ஆபீஸ் உள்ளேர்ந்து கொஞ்சம் கொஞ்சமா அங்க வேல பாக்றவங்களே வந்து எல்லாரும் வந்ததுக்கப்றம் அவுகளும் கோஷம் போட்டாங்க. அடப் பாவமே இவகளப் பாத்து வற்றவங்க எல்லாரும் கத்றாகன்னா இவங்களே ஏன் வந்து கத்றாங்க? என்னது? கொள்ள கொள்ளன்னு கோயிலுக்குப் போனா கோயில்ல கொலயே இருந்த மாதிரி இது என்னது? இன்னொரு நாள் கடைத் தெரு பெரிய பெரிய வியாபரிங்கள்ளாம் வந்து பெரிய சாமியானா போட்டு காலேலேர்ந்து சாய்ந்த்ரம் வரைக்கும் கோஷம் போட்டு ஊடே ஊடே யார் யாரோ கோபமாப் பேசி அமர்க்களம் பண்ணிட்டாங்க. அப்றம் ஒரு நாள் செமக்க ஆணும் பெண்ணுமா காலேஜ்ல படிக்ற வெடலப் பிள்ளங்க வந்து ரத்து செய், அமுல் படுத்து, தாமதிக்காதேன்னு ராகமா தாளம் போட்டு கத்திட்டுப் போச்சுக. இப்படி செல்லியம்மாளுக்குத் தெரிய ஊர்ல ஒருத்தர் பாக்கியில்ல; எல்லாரும் கத்றாங்க; கூப்பாடு போட்றாங்க. வந்த முதல் வருஷத்தில் செல்லியம்மாளுக்கு “சே; கலெக்டரு ரொம்பவே பாவம்” ன்னுதான் தோனிச்சு. வருஷம் ஆக ஆக செல்லியம்மாளுக்கு யார் பாவம்ன்னு குழப்பமாயிருச்சு. எப்டி இவ்ளவு கத்றாங்க? எல்லாருமா தப்பு பண்ணுவாக? ஒரு தடவ கூட இந்த மனுஷன் வந்து எட்டிப் பாக்கலிய ? என்னன்னு கேக்கலிய? ஒன்னு எட்டிப் பாக்கனும்; அல்லது ஒரு ரெண்டு தடவயாது போலீஸக் கூட்டு அவகளயெல்லாம் போகச் சொல்லனும். இல்லாட்டின்ன அடிச்சு விரட்டச் சொல்லனும். எதுவும் இல்லாம கல்லுளி மங்கன் மாதிரி உள்ளயே உக்கந்துக்ராறே? இது என்ன பொழப்பு? போலீசும் கூட்டத்த பொறுத்து வருது; கத்திட்டுப் போனவங்க போன உடனே அவுகளும் போயிருதாக. செல்லியம்மாளுக்குப் புரியவில்லை.

எல்லாரும் கத்றத விட சிவப்புக் கொடியத் தூக்கிட்டு வந்து கத்றது கொஞ்சம் தூக்கலத்தான் தெரியும். அவுக கூட்டம் ஒரு முப்பது நாற்பது பேர்தான்னாலும் ஒரு ஒழுங்கா விதியா ரெண்டு மணி நேரம்னாலும் ஒருத்தரும் ஓரம்சாராமா கலையாம உற்சாகமாக் குரல் கொடுப்பாக. அவுங்க கோஷங்களும் வித்தியாசமா ஒரு சீரா இருக்றத செல்லியம்மாள் கவனித்திருக்கிறாள். அவுங்க கூட்டத்ல நீட்டாவும் இருப்பாக, சாதாராணக் கைலி வேட்டி சட்டயோடும் இருப்பாங்க, ரொம்பக் கஷ்ட்டப் பட்டவங்க, கூலி வேலைக் காரங்க, ரிக்க்ஷா இழுக்றவங்க, பள்ளிக்கூடத்து வாத்திமாரு, எல்லா வயசிலயும் – செல்லியம்மாளுக்கு அந்தக் கூட்டக் கலவையே வித்தியாசமாத் தெரியுது. அது மாதிரி அநேகமா அவுக மட்டும்தான் கோஷம் நடந்துக்ட்ருக்கும் போதே கட கடயாவும், ரோட்ல வர்ரவக போறவங்கட்டயும் நோட்டீஸ் கொடுப்பாங்க. செல்லியம்மாள் வாங்கி உள்ளே அலமாரியில், வைத்துக் கொள்வாள். அது மாதிரி அவுங்க கோஷத்ல வித்யாச வித்யாசமா மின் வெட்டு, கூடங்குளம், விலைவாசி, வரி குறைப்புன்னு புதுசு புதுசா பொது விஷயமா கோஷங்கள் வரும். இப்படிக் கோஷங்களின் மத்தியில் செல்லியம்மாளின் நாட்கள் பழகிப் போயிருக்கின்றன.

ரெண்டு வருஷங்களுக்கு முன்னால நாலஞ்சு கட தள்ளி இருக்கும் பெட்டிக் கடைக் கார பெரியவர், கடைசி டீக் கடை காரர், இன்னும் ரெண்டு பேரா வந்து செல்லியம்மாள்ட்ட ஒரு நோட்ல அவளோட கீறல் கையெழுத்த வாங்கிக்கிட்டு, ஐம்பது ருபாய்க்கு ஒரு ரசீதும் கொடுத்துட்டு, தொகய மாச மாசமாகவோ இல்ல அவளுக்குத் தோதுப் பட்ட தவணையிலயோ தரச் சொல்லி விட்டு போனார்கள். முந்திய நாள் பக்கத்துக் கடைக் காரர் சொல்லியிருந்தார். டவுன்ல இருக்ற எல்லா ப்ளாட்ஃபார்ம் வியாபாரிகளும் சேர்ந்து சங்கம் ஆரம்பிக்கிறாங்கன்னு. “போலீஸ், கவர்மெண்ட் கெடுபிடி ஜாஸ்தியாயிருச்சு ஆத்தா. நாம சேர்ந்து நின்னாத்தான் எதுவும் செய்ய முடியும்; இல்லன்னா கஷ்ட்டம். வருஷத்துக்கு அம்பது ருபாதான்.” செல்லியம்மாள் தலையாட்டினாள். அவர்கள் கொடுத்துப் போயிருந்த ரசீதப் பார்த்தாள். ஐய்ய; சிவப்புக் கொடிக் காரங்க கைய்யில் இருக்ற அதே அருவா சுத்தியல். “எல்லாம் சரிய்யா. இது என்ன அடிக்க வர்ர மாதிரி அருவா சுத்தியல்; அவுக கொடிலதான் இருக்கு. இந்த ரசீதுலயும் ஏன்ய்யா?”. பக்கத்துக் கடைக் காரர் சிரித்துக் கொண்டே சொன்னார். “ஒன்ன யாரும் அடிக்காம இருக்றதுக்குத்தான் அது. அதுதான் நம்ம சின்னம். அவுங்கதான் நம்ம எல்லாரயும் ஒன்னாக்கி ஓடியாடி அலயுறாங்க. ஓன் கைல சின்னக் கத்தி வச்சிருக்கியே- எதுக்கு? அது இல்லாம ஓன் வேல நடக்குமா? வயித்தக் கழுவ முடியுமா? அந்த அறுவாள் வெவசாயி கதிர் அறுக்றது. அந்த சுத்தியல், அந்தா செருப்பு தைக்றான் பாரு நம்ம முனியாண்டி அவன் கைய்ல இருக்கு. ஃபேக்ட்றில தொழிலாளங்க கைய்ல இருக்றது. அருவாளும் சுத்தியலும் கலாட்டா பண்றதுக்கு இல்ல. உழைக்றவங்களோட கருவியும், உழைக்றவங்களும் இல்லாம எந்த நாடும் நடப்பும் இல்லேன்னு சொல்றதுக்காக”. ரொம்ப நாளா கொடில அருவாளும் சுத்தியலும் எதுக்குன்னு கேக்கனும்னு நெனச்சிக்கிட்ருந்த செல்லியம்மாள்ட்டயே அது வந்து சேர்ந்திருச்சு. ரசீதை மறுபடியும் பார்த்தாள். ஒரு மெல்லிய சிரிப்போடு பெரு மூச்சு விட்டுக் கொண்டாள்.

ரெண்டு முறையொ மூன்று முறையோ அவர்களுடைய பொதுவான மனுவில் செல்லியம்மாளிடம் கையெழுத்து வாங்கினார்கள். அதன் பிறகு ஒரு நாள் சங்கத்திலிருந்து ஆள்கள் வந்து அடுத்த வாரம் திங்கக் கிழமை யாரும் கடை திறக்கக் கூடாது என்றும், காலேல பத்து மணிலேர்ந்து ஒரு ரெண்டு மணி நேரம் செல்லியம்மாள் இத்தன நாளும் வேடிக்கை பார்த்த அதே இடத்தில் எல்லோரும் கோஷம் போடனும்னு சொல்லிட்டுப் போனாங்க. அவர்கள் போன பின்பு நூலில் பூவைக் கட்டிக் கொண்டே தன்னையும் அறியாமல் கலகலவென்று சிரித்தாள். “என்ன ஆயா சிரிப்பு பலமா இருக்கு?” என்று பக்கத்துக் கடைக்காரர் கேட்டார். “ஹூம்; ஒன்னுமில்ல. யார் யாரோ வந்து கத்திக்ட்ருந்தாங்க. அதிகம் புரியல. யாராலயும் கத்தாம எதுவும் நடக்காதுன்னு மட்டும் கொஞ்சம் புரிஞ்சுது. கடசில நமக்கே விடிஞ்சிருச்சே? அதான் சிரிப்பாத்தான் இருக்கு; நம்ம நெலமயும்; நாட்டு நெலமயுந்தான்” என்று சொல்லி பெருமூச்சுவிட்டாள்.

திட்டமிட்டபடி நகர நடைபாதை வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் செல்லியம்மாள் நின்று கொண்டிருந்தாள். பெண்களெல்லாம் ஒரு ஓரமாக; வயது மூப்பின் அடிப்படையில் செல்லியம்மாள் பெண்கள் பிரிவில் முன்னால் நின்றாள். கோஷம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் யாரோ வந்து செல்லியம்மாள் கையில் ஒரு கொடியைக் கொடுத்து விட்டு மற்றவர்களிடமும் கொடுப்பதற்காக போய்க் கொண்டே இருந்தார். வாழ்வில் முதல் முறையாக செல்லியம்மாள் கையில் ஒரு கொடி இருந்தது; செங்கொடி. தலை நிமிர்ந்து பார்த்தாள். ஒரு மாதிரி வித்தியாசமாய் கூச்சமாய் இருந்தாலும், தனக்கும் இப்படியும் கிடைக்கும், நடக்கும் என்று கனவு கூட கண்டிராத நிலையில் செல்லியம்மாளுக்கு உற்சாகமும் பெருமையாகவும் கூட இருந்தது. கொடி பிடித்த செல்லியம்மாளின் பார்வை அதன் பின் நடந்த மற்ற போராட்டங்களைப் பார்த்த விதமே மாறியது.

ஆர்ப்பாட்டம் நடக்கும் வாசலிலிருந்து செல்லியம்மாள் கடை மூன்றாவது என்பதால் ஆர்ப்பாட்டத்தின் எல்லா நடபடிகளும் தெளிவாகவே தெரியும். அன்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக மாணவர்களும் மற்ற சங்கங்களும் என்று மூன்றரை மணியிலிருந்தே கூட்டம் கூட ஆரம்பித்திருந்தது. பெண் ஆசிரியைகள், மாணவிகள் என்று வந்தவர்களில் சிலர் செல்லியம்மாளிடம் மல்லிகை வாங்கினார்கள். ஆர்ப்பாட்டம் இன்னும் ஆரம்பித்திருக்கவில்லை. பொதுவாக ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் போது ஆர்ப்பாட்டக் காரர்களை வேடிக்கைப் பொருட்களைப் போல ஒதுங்கி நின்று பார்க்கிற ஒரு கூட்டம் எப்பொழுதுமே இருப்பதை செல்லியம்மாள் கவனித்திருக்கிறாள். அவர்களுடைய குதர்க்கமான, கூறில்லாத, புத்திமட்டான வார்த்தைகளும் அவள் காதில் விழுவதுண்டு. செல்லியம்மாளுமே இதைக் கடந்துதான் வந்திருக்கிறாள். ஆனால் அன்று ஒரு ஐந்து பேர் கூட்டம் கொஞ்ச நேரம் வாசல் முன்னால் நிற்பது; பூ வாங்க வரும் பெண்களைக் கண்டால் கடையை விட்டு சற்று தள்ளி நிற்பது என்று சதிராடிக் கொண்டிருந்தார்கள். அந்த வாலிபர்களின் வார்த்தைகள் ஒழுங்காக இல்லை; வக்ரமாய் இருந்தன; அவை செல்லியம்மாளுக்கு அறிமுகமான நாராசக் கெட்ட வார்த்தைகள். அந்த ஐந்து பேர் கூட்டத்தில் ரெண்டு ஜென்மங்கள் நாற்பதை நெருங்கும் மைனர்கள். கொஞ்சம் குரலை உயர்த்தி ஒரு ரவுடி சாகஸமாய் பெண் பிள்ளைகளுக்கு கேக்க வேண்டும் என்ற தொனியில், தோரணையில். “ஸ்கூல்ல ஒழுங்கா பாடம் எடுக்காம இங்க வந்து கூப்பாடு போட வந்துருக்றதப் பாரு. எல்லாம் ஒரு சைஸாத்தான் இருக்கு” என்று ஒருவன் சத்தமாகச் சீண்டவும் அந்தப் பெண்களில் – ஆசிரியை ? – ஒருவர் திரும்பிப் பார்த்தார். “ஏய் என்ன லுக் விடுற? துப்பட்டா கிழிஞ்சிரும் போ” என்று ஏளனமான அதட்டலுடன் சொல்ல மற்றவர்கள் சிரிக்க – செல்லியம்மாள் தன் ஆசனத்திலிருந்து எழுந்தாள்; “தம்பி என்ன வேணும்? போங்க – வெயாபரத்தக் கெடுக்காத, போ” என்று சொல்லிவிட்டு “நீ போம்மா” என்று பெண்களிடம் சொல்லவும் அவர்கள் திரும்புகிற போது “கெழவி ஓன் வேல மயிர மட்டும் பாரு – என்ன? கட பறந்துரும். போ” என்று சொல்லி அந்தப் பெண்களை நோக்கி பயமுறுத்துவது போல முன்னேறினான். ஆடு மாடுகளை விரட்டுவதற்காக பட்டறையில் வைத்திருக்கும் அந்த நீண்ட பெரம்பு நொடிப் பொழுதில் செல்லியம்மாள் கையிலேற முன்னேறிய அந்த வாலிபனின் சட்டையை இடது கையால் இழுத்துப் பிடித்து “பன்னாட நாய்களா – பொம்பளப் பிள்ளகன்னா ஒங்களுக்கு அவ்ளவு இளக்காரம்? என்னல?” என்று வலது கைப் பிரம்பால் அவன் இடுப்பிலும் தொடையிலும் சர சரவென்று விளாசிவிட்டாள். எதிர் பாராத நொடிப் பொழுது தாக்குதலில் “ஏய்- கெழவி” என்ற எதிராளியின் திமிறலெல்லாம் பத்ரகாளியாகியிருந்த செல்லியம்மாளிடம் பலிக்கவில்லை. தாக்குதலின் உக்கிரத்தைப் பார்த்து வாலிபனின் கூட்டாளிகள் திகைத்து நின்ற சில நிமிஷங்களில் திரும்பிய பெண்களும் சட்டென்று கையில் கழட்டிய செருப்போடு அவர்களை நோக்கிப் பாய , பக்கத்துக் கடைக்காரர்கள் ஓடி வர, சத்தம் கேட்டு ஆர்ப்பாட்டக் காரர்களும் ஓடி வர ஒரு சிறிய வலிய குருஷேத்ரம் செல்லியம்மாள் கையால் நடந்து முடிந்து விட்டது. மைனர்களில் ஒருவனும் ஒரு வாலிபனும் ஓடிவிட மற்ற மூவரும் மாட்டிக் கொண்டார்கள்.

கோபம் தணிந்த எரிமலையாய், புயல் கடந்த பூவாக, முகம் இன்னமும் கனற செல்லியம்மாள் ரவ்த்ரம் பழகி முடிந்து அவிழ்ந்திருந்த தன் நரைக் கூந்தலை சுற்றிக் கட்டிய வண்ணம் நின்று கொண்டிருந்தாள். வாழ்வில் எத்தனை அடிகள்? செல்லியம்மாள் இன்று வட்டியும் முதலுமாய் திருப்பிக் கொடுத்து விட்டாள். தாக்குதலுக்கு ஆளான ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்த இடை நிலை ஆசிரியை சங்கரி “ பாட்டி ஒங்களுக்கு ஒண்ணும் இல்லயே?” என்று விசாரித்தாள். செல்லியம்மாள் சிரித்துக் கொண்டே “எனக்குல்லாம் இனி ஆகுறதுக்கு ஒன்னுமே இல்லம்மா. ஆனா இந்த பொறுக்கி நாய்களயெல்லாம் எங்கனன்னாலும் விடக் கூடாதும்மா” என்றாள். “தேங்ஸ் பாட்டிம்மா” என்றவளிடம் “தேங்ஸெல்லாம் சொல்லக் கூடாதும்மா. நாம செய்யல்லன்னா வேற யார் செய்வா? சொல்லு.” “ஒன்றுபடுவோம்” கோஷ முழக்கம் கேட்கவும் சங்கரி தோழியருடன் ஆர்ப்பாட்டத்தை நோக்கி விரைந்தாள். பக்கத்துக் கடைக்கார வாலிபர் ஏதோ சொல்வதும் “வாய்ல ஈர மண்ணால வச்சிருந்த? ஓன் வீட்டுப் பிள்ளைகள்ன்னா விட்ருவியாடா?” என்று பாட்டி கர்ஜிப்பதும் சங்கரியின் காதில் விழுந்தது.

“பாதகம் செய்பவரைக் கண்டால் – நாம்
பயம் கொள்ளலாகாது பாப்பா
மோதி மிதித்து விடு பாப்பா – அவர்
முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா” –

எத்தனை தடவை பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்திருப்போம். பாட்டிக்கு முந்திக் கொண்டு அந்த ராஸ்கலை அசிங்கப் படுத்தும் தைரியம் வரவில்லையே என்ற ஆதங்கத்தில் சங்கரி தன் தோழியருடன் “போராடுவோம்; வெற்றி பெறுவோம்” என்ற ஆர்ப்பாட்ட கோஷத்தில் கலந்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *