புன்னைவனத்துப் புலி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 14, 2021
பார்வையிட்டோர்: 2,368 
 

முகவுரை

திருவாளர் செல்வன் சந்திரசூடனுக்குத் திருமணம் நடக்கப் போகிறது என்று அறிந்த போது, அவனுடைய நண்பர்கள் பலரும் அடைந்த வியப்புக்கு அளவில்லை. எனெனில், சந்திரசூடன் நெடுங்காலமாக, “கலியாணம் என்ற பேச்சை என் காதில் போட வேண்டாம்” என்று சொல்லிக் கொண்டிருந்தான். அவ்வளவு எளிதில் அவனுடைய நண்பர்கள் அவனை விட்டுவிடுகிறதாக இல்லை. அவன் கேட்க விரும்பவில்லை என்று சொன்ன வார்த்தையையே ஓயாமல் அவன் காது செவிடுபடும்படி டமாரம் அடித்துச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். “இப்படி எத்தனையோ விசுவாமித்திரர்களைப் பார்த்து விட்டோ ம்!” என்று அவனைக் கேலி செய்து கொண்டிருந்தார்கள். இத்தகைய நண்பர் கூட்டத்தில் சந்திரசூடன் அகப்பட்டுக் கொள்ளும் போது, “ஒருவேளை நான் புத்தி தடுமாறிக் கலியாணம் செய்து கொண்டாலும் இந்திய தேசத்தின் ஜனத் தொகையை மட்டும் பெருக்க மாட்டேன்” என்று சில சமயம் சொல்வதுண்டு, சொல்வதுடன் நின்று விடாமல் அவன் கர்ப்பத்தடை முறைகளைப் பற்றிய விஞ்ஞான ரீதியான இலக்கியங்கள், அதே விஷயத்தைச் சுற்றி வளைக்காமல் அப்பட்டமாகச் சொல்லும் நூல்கள், இவற்றையெல்லாம் வாங்கிப் படித்தும் வந்தான்.

அத்தகைய சந்திரசூடன் இப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறான், அதிலும் ஏற்கெனவே குழந்தை உள்ள ஒரு பெண்மணியைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிறான் என்றால் அவனை அறிந்தவர்கள் ஆச்சரியக் கடலில் மூழ்கித் தத்தளிப்பது இயல்பேயல்லவா?

அத்தகைய பரிகாசத்துக்கிடமான காரியத்தை அவன் செய்ய முன் வந்ததன் காரணத்தை அறிந்து கொள்ள அவனுடைய நண்பர்கள் ஆசைப்பட்டதிலும் அவ்வளவு வியப்பில்லை அல்லவா?

திருமணக் கடிதத்தைப் பார்த்ததிலிருந்து அவனைக் கண்டுபிடித்து நேருக்கு நேர் கேட்டுவிடுவதென்று பலரும் துடியாயிருந்தார்கள். அவர்களில் நானும் ஒருவன். கடைசியாக அவனை ஒரு நாள் கையும் மெய்யுமாகப் பிடித்து, “அப்பனே! இந்த விபத்தில் எப்படி அகப்பட்டுக் கொண்டாய்? உண்மையைச் சொல்லிவிடு!” என்றேன். “சொல்லாவிட்டால் நீர் விடப் போகிறீரா? ஏதாவது கதையும் கற்பனையுமாக சேர்த்து எழுதித் தள்ளிவிடுவீர், அதைக் காட்டிலும் நானே சொல்லிவிடுவது நல்லது” என்றான்.

“அப்படியானால், கதை எழுதுவதற்குத் தகுதியானது என்று ஒப்புக்கொள்கிறாயா?” என்று கேட்டேன்.

“எல்லாம் கதையினால் வந்த விபத்துதான்! முழுக் கதை கூட அல்ல; பாதிக் கதையினால் வந்த ஆபத்து. ‘தீபம்’ என்னும் மாதப் பத்திரிகையில் பாதிக் கதைப் போட்டி ஒன்று நடத்தினார்களே? ஞாபகம் இருக்கிறதா?” என்றான் சந்திரசூடன்.

ஆம்; அது என் ஞாபகத்தில் இருந்தது.

‘தீபம்’ பத்திரிகையில் அத்தகையப் போட்டி ஒன்று சில காலத்துக்கு முன்பு நடத்தினார்கள். ஓர் இதழில் ‘விமான விபத்து’ என்ற தலைப்புடன் ஒரு பாதிக் கதையை வெளியிட்டார்கள். அதைப் பூர்த்தி செய்யும்படி வாசக நேயர்களைக் கேட்டு கொண்டிருந்தார்கள். இந்தப் போட்டிக்கு வரும் பிற்பகுதிக் கதைகளில் சிறந்ததைப் பத்திரிகையில் வெளியிடுவதுடன் அதற்கு நூறு ரூபாய் சன்மானம் கொடுப்பதாகவும் அறிவித்திருந்தார்கள்.

இந்த அறிவிப்பு வெளியான இரண்டு மாதங்களுக்குப் பிறகு, பரிசு பெற்ற பிற்பகுதிக் கதையும் மேற்படி பத்திரிகையில் வெளியாகியிருந்தது.

கதையை அச்சமயம் மேலெழுந்தவாரியாகப் படித்திருந்தேன். ஓர் ஆகாச விமானம் பிரயாணப்பட்டுச் சென்றது; ஆனால் குறித்த இடத்துக்குப் போய்ச் சேர வில்லை. பிரயாணிகளுடன் மாயமாய் மறைந்துவிட்டது. எங்கேயோ மேற்குமலைத் தொடரில் மனித சஞ்சாரத்துக்கு அப்பாற்பட்ட இடத்தில் விழுந்து எரிந்து போயிருக்க வேண்டும் என்று அனுமானிக்கப்பட்டது. இதுதான் கதையின் முக்கிய சம்பவம். இம்மாதிரி ஒரு துர்ச்சம்பவம் உண்மையாகவே சில காலத்துக்கு முன்பு நிகழ்ந்திருக்கிறது.

இதையெல்லாம் ஞாபகப்படுத்திக் கொண்டு, “ஆமாம்; அந்தப் பாதிக் கதைப் போட்டிக்கும் உன் கலியாணத்துக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்டேன்.

சந்திரசூடன் அந்தச் சம்பவம் இன்னதென்பதை விவரமாகச் சொல்லித் தீர்த்தான். சொல்லாமற் போனால் யார் விடுகிறார்கள்?

1

பாண்டிய நாட்டையும் மலையாள தேசத்தையும் பிரித்து நிற்கும் நீண்ட மேற்கு மலைத் தொடர் ஒவ்வோரிடத்தில் ஒவ்வொரு பெயருடன் விளங்குகிறது. இந்த மலைத்தொடரை எந்த இடத்திலே பார்த்தாலும் அதன் இயற்கை வனப்பு அற்புதமாக இருக்கும். எனினும், நாகலாபுரம் மலைச்சாரலின் சௌந்தரியத்துக்கு ஒப்புவமை இல்லை என்று அந்தப் பகுதியைப் பார்த்தவர்கள் சொல்வார்கள். அங்கே இயற்கை அரசி பசும் பொன் சிங்காதனத்தில், நீலப் பட்டாடை உடுத்தி, நவரத்தின மாலைகளை அணிந்து, மணிமகுடம் தரித்து, செம்பவள இதழ்களின் வழியாக முத்து நகை புரிந்து, கருங்குவளைக் கண்களில் கருணை ஒளி வீசியவாறு வீற்றிருக்கிறாள் என்று கவிதா ரஸிகர்கள் வர்ணனை செய்வார்கள். மலையும், காடும், அருவியும், பொய்கையும், பல நிற மலர்களும் அப்படி ஒரே வர்ண ஜாலமாகக் காட்சி அளிக்கும்.

அத்தகைய நாகலாபுரம் மலைச் சாரலையொட்டி எத்தனையோ கிராமங்கள் உண்டு. அவற்றில் புன்னைவனம் என்னும் கிராமம் பிரசித்தமானது. அது கிராமம்தான் என்றாலும், பட்டணவாசத்தின் வசதிகள் எல்லாம் அங்கு உண்டு. புன்னைவனத்துக்கும் கொஞ்ச தூரத்தில் பெரிய நீர்த்தேக்கம் ஒன்று இருக்கிறது. அதிலிருந்து விழும் அருவியைக் கொண்டு மின்சார சக்தி உற்பத்தி செய்கிறார்கள். எப்போது மின்சார வசதி இருக்கிறதோ, அப்போது பட்டண வாசத்தின் சகல சௌகரியங்களையும் ஏற்படுத்திக் கொள்ளலாம் அல்லவா?

வருஷத்தில் ஒன்பது மாதம் புன்னை வனம் கிராமமாகத் தோற்றமளிக்கும். சாரல் காலத்தில் அதாவது ஜுன் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரையில் அது நகரமாக மாறி விடும். (ஜன நெருக்கத்தை அவ்வளவாக விரும்பாத ‘நாஸுக்குக்காரர்கள்’ அந்த மூன்று மாதமும் அது ‘நரக’மாக மாறிவிடும் என்பார்கள்.) அந்த மூன்று மாதங்களிலும் தென்னிந்தியாவில் பல பகுதிகளில் இருந்தும் ஜனங்கள் தேக சுகத்தையும் மன உல்லாசத்தையும் தேடிப் புன்னைவனத்துக்கு வருவார்கள்.

சென்ற வருஷத்தில் சந்திரசூடனுக்கு அம்மாதிரி தேக சுகத்தையும் மன அமைதியையும் தேடி எங்கேனும் போக வேண்டிய அவசியம் ஏற்பட்டது. உதகமண்டலம், கோடைக்கானல், குற்றாலம் முதலிய இடங்களைப் பற்றி யோசித்து, பல காரணங்களினால் அவற்றை ஒதுக்கி விட்டு, புன்னைவனம் போவதென்று முடிவு செய்தான். அம்மாதிரி அவன் முடிவு செய்ததற்குச் சிற்சில முக்கிய காரணங்கள் இருந்தன. ஒன்று புன்னைவனத்தின் இயற்கை எழிலைப் பற்றி ஒரு சிநேகிதன் மூலமாக அவன் கேள்விப்பட்டிருந்தது. இரண்டாவது காரணம், அங்குள்ள ஓட்டல்களில் நல்ல சாப்பாடும் கிடைக்கும் என்பது. மூன்றாவது காரணம் சில நாளைக்கு முன்னால் “புன்னைவனத்துப் புலி” என்ற தலைப்புடன் தினப்பத்திரிகைகளில் வெளியான செய்திகள்.

நாகலாபுரம் மலையின் உட்பகுதிகளில் துஷ்ட மிருகங்கள் எப்போதுமே உண்டு. ஆனால் மலையையொட்டி கீழேயுள்ள கிராமங்களுக்கு அவை வருவது அபூர்வம். அப்படி அபூர்வமாக ஒரு புலி புன்னைவனத்தில் ஒரு நாள் காணப்பட்டதாகவும், பின்னர் அடிக்கடி அங்குமிங்கும் தோன்றி ஆடுமாடுகளைக் கொன்று வருவதாகவும், அதைச் சுட்டுக் கொல்லுவதற்குச் செய்யப்பட்ட முயற்சிகள் இதுவரை பலிக்கவில்லையென்று தினப் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியிருந்தன. சந்திரசூடன் கலாசாலை மாணாக்கனாயிருந்த போது இராணுவப் பயிற்சிப் படையில் சேர்ந்து துப்பாக்கியை உபயோகிக்க கற்றுக் கொண்டிருந்தான். அப்படிப் பயின்ற வித்தையைக் காரியத்தில் பயன்படுத்துவதற்கு இப்போது ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாக எண்ணினான். புன்னைவனத்துப் புலி தன் துப்பாக்கிக்கு இரையாவதற்காகவே மலை மேலிருந்து கீழே இறங்கி வந்திருக்கிறது என்று முடிவு செய்து கொண்டு கிளம்பினான்.

‘நாகலாபுரம் சாலை’ என்னும் ரயில் நிலையத்தில் இறங்கி முப்பது மைல் தூரம் பஸ்ஸில் பிரயாணம் செய்து புன்னைவனத்தை அடைந்தான். அந்த ஊர் அவனுக்கு நிரம்பப் பிடித்திருந்தது. அதைப் பற்றி அவன் கேள்விப்பட்டிருந்ததையெல்லாம் விட அமைதியும் அழகும் இனிமையும் எழிலும் பொருந்தியிருந்தது. இனிய புனல் அருவி அங்கே தவழ்ந்து விளையாடியது. இன்ப மலைச்சாரல்களில் தென்றல் உலாவியது. கனி குலவும் சோலைகளில் கரு வண்டு பண் இசைத்தது. புன்னை மரங்களின் கீழ்ப் பூப் படுக்கை விரித்திருந்தது. அமுத நீர்ப் பொய்கைகளில் குமுதமலர் செழித்திருந்தது. அவன் தங்கியிருந்த ஹோட்டலில் சாப்பாடும் முதல் தரமாயிருந்தது. சென்னையிலுள்ள பாங்கிகாரர்கள் மட்டும் கொஞ்சம் தாராள புத்தியுடன் தான் கேட்கும் போதெல்லாம் பணம் அனுப்பிக் கொண்டிருந்தால், புன்னை வனத்திலேயே தன் வாழ்நாளைக் கழித்து விடலாம் என்று சந்திரசூடன் எண்ணமிட்டான்.

2

இரண்டு தினங்கள் இவ்விதமாக ஊரைச் சுற்றிப் பார்ப்பதிலும் கற்பனைக் கனவுகள் காண்பதிலும் கழிந்தன. மூன்றாம் நாள் புன்னைவனம் தபால் ஆபீஸுக்குச் சென்றான். கையில் கொண்டு வந்திருந்த பணம் துரிதமாகக் குறைந்து கொண்டு வந்தது. மேலும் பணம் தருவித்துக் கொள்ளச் சென்னைக்குக் கடிதம் எழுத வேண்டும். அதோடு, தனக்கு ஏதேனும் தபால் வந்திருக்கிறதா என்றும் விசாரிக்க வேண்டும். தபால்களைக் காட்டிலும் அதிக ஆவலுடன் ‘தீபம்’ பத்திரிகையின் அந்த மாதத்து இதழை அவன் எதிர்பார்த்தான். ‘விமான விபத்து’ என்னும் பாதிக் கதையின் முடிவு என்ன என்று தெரிந்து கொள்வதில் அவனுக்கு அவ்வளவு ஆர்வம் இருந்தது. உண்மை என்னவென்றால், அந்தப் பாதிக் கதைப் போட்டியில் அவனும் கலந்து கொண்டிருந்தான், தான் எழுதிய பாதிக் கதையை ஒரு வேளை பத்திரிகைக்காரர்கள் ஏற்றுக் கொண்டிருக்கலாம் அல்லவா? அப்படியானால் பணத்துக்கு பணம் ஆயிற்று, புகழுக்குப் புகழ் ஆயிற்று. இல்லையென்றால், தன்னைவிட நன்றாக அந்தக் கதையைப் பூர்த்தி செய்தவர் யார்? எப்படி பூர்த்தி செய்திருக்கிறார்?’ – இதையெல்லாம் அறிந்து கொள்வதற்கு அவன் மிக்க ஆர்வம் கொண்டிருந்தான்.

தபால் ஆபீஸுக்குச் சந்திரசூடன் போய்ச் சேர்வதற்கும் தபால் கட்டு வந்து சேர்வதற்கும் சரியாயிருந்தது. அவனைப் போல் இன்னும் இரண்டொரு புது மனிதர்களும் அங்கே வந்து காத்திருந்தார்கள். சந்திரசூடன் போஸ்டு மாஸ்டரிடம் தன் பெயரைச் சொல்லி, “ஏதாவது தபால் இருக்கிறதா?” என்று கேட்டான். போஸ்ட் மாஸ்டர் தேடிப் பார்த்து ஒரு தபாலையும், ஒரு சஞ்சிகையையும் எடுத்துக் கொடுத்தார். சஞ்சிகை ‘தீபம்’ பத்திரிகையின் அந்த மாத இதழ் தான். சந்திரசூடன் இருந்த பரபரப்பில், தபாலைக் கூடக் கவனியாமல் சஞ்சிகையைப் பிரித்துப் புரட்டினான். அவன் எதிர்பார்த்தபடியே ‘விமான விபத்து’ கதையின் இரண்டாம் பகுதி அதில் வெளியாகியிருந்தது. அவன் எழுதியது அல்ல என்று பார்த்தவுடன் தெரிந்து போய் விட்டது. பரிசு பெற்ற கதைப் பகுதி அவ்வளவு என்ன பிரமாதமாக அமைந்திருக்க முடியும் என்ற எண்ணத்துடன், நின்றபடியே அதைப் படிக்கத் தொடங்கினான்.

ஏறக்குறையப் படித்து முடிக்கும் சமயத்தில் ஒரு பெண்மணி அங்கே வந்தாள். தனக்கு ஏதாவது தபால் உண்டா என்று விசாரித்தாள். இல்லை என்று அறிந்ததும் அவள் பெரிதும் ஏமாற்றமடைந்ததாகத் தோன்றியது.

“தயவு செய்து நன்றாகப் பாருங்கள், ஸார்! ‘தீபம்’ பத்திரிகை என் பெயருக்கு ஒன்று வந்திருக்க வேண்டுமே?” என்று கெஞ்சும் குரலில் கூறினாள்.

“இல்லை, அம்மா! ஒரே ஒரு ‘தீபம்’ தான் வந்திருந்தது. அதில் இவருடைய விலாசம் எழுதியிருந்தது. கொடுத்துவிட்டேன்!” என்று போஸ்டு மாஸ்டர் சந்திரசூடனைச் சுட்டிக் காட்டினார்.

உடனே அந்தப் பெண்ணின் பார்வை சந்திரசூடன் மீது சென்றது. அவன் கையில் விரித்து வைத்திருந்த பத்திரிகையை அசூயை கலந்த ஆர்வத்துடன் நோக்கினாள்.

சந்திரசூடனுடைய கவனத்தில் ஒரு பகுதி, பத்திரிகைக் கதையில் சென்றிருந்தது. மற்றொரு பகுதி அந்தப் பெண்மணி தபாலாபீஸுக்குள் வந்ததிலிருந்து நிகழ்ந்தவைகளை மனத்தில் வாங்கிக் கொண்டிருந்தது. அவள் தன் கையிலிருந்த பத்திரிகையை ஆசையுடன் பார்க்கிறாள் என்று அறிந்ததும், உடனே படிப்பதை நிறுத்தி விட்டு, “தங்களுக்குத் ‘தீபம்’ வேண்டுமானால் இதையே எடுத்துக் கொள்ளலாமே?” என்று கூறிப் புன்னகை புரிந்தான்.

அந்தப் பெண், “ஒரு சில வினாடி பார்க்கவேணும். கொடுத்தால் இங்கேயே பார்த்து விட்டுத் தந்து விடுகிறேன்” என்றாள்.

“அவ்வளவு அவசரம் ஒன்றுமில்லை. தாங்கள் வீட்டுக்கு எடுத்துப் போய்ச் சாவகாசமாய்ப் படிக்கலாம். தங்கள் ஜாகை எங்கே என்று சொன்னால் நானே வந்து திரும்ப வாங்கிக் கொள்கிறேன்” என்றான் சந்திரசூடன்.

அந்தப் பெண் தபால் ஆபீஸின் பலகணி வழியாகச் சுட்டிக் காட்டி, “அதோ, அங்கே தான் என் வீடு! போஸ்டு மாஸ்டரின் வீட்டுக்கு அடுத்த வீடு!…அல்லது தங்கள் இருப்பிடத்தைச் சொன்னால் பத்திரிகையை அனுப்பி விடுகிறேன்” என்றாள்.

“வேண்டாம், வேண்டாம்! அவ்வளவு சிரமம் தங்களுக்கு வேண்டாம். நானே வந்து வாங்கிக் கொள்கிறேன்” என்றான் சந்திரசூடன்.

“மிக்க வந்தனம். காலை பத்து மணி வரையில் வீட்டில் இருப்பேன். பிறகு பள்ளிக்கூடம் போய் விட்டு மாலை ஐந்து மணிக்குத் திரும்பி வருவேன்” என்று சொல்லிவிட்டு அந்தப் பெண் பத்திரிகையை எடுத்துக் கொண்டு சென்றாள்.

3

சந்திரசூடன் அவள் போவதைப் பலகணி வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தான். நடக்கும் போதே அவள் பத்திரிகை படித்துக் கொண்டு போனதைக் கவனித்தான். ஒரு தடவை கூட அவள் திரும்பிப் பார்க்கவில்லை. அந்தப் பெண்ணின் கவனத்தை அவ்வளவு தூரம் கவரக் கூடிய விஷயம் ‘தீபம்’ பத்திரிகையில் என்ன தான் இருக்கும் என்று அதிசயித்தான்.

இதற்குள் தபால் வாங்குவதற்காக அங்கு வந்திருந்த மற்ற இரண்டொருவரும் போய் விட்டார்கள்.

சந்திரசூடன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு போஸ்டு மாஸ்டரைப் பார்த்து, “பெண்களுக்குப் படிப்பில் ருசி உண்டாகி விட்டால் ஒரே பைத்தியமாகப் பிடித்துக் கொள்கிறது. இந்தப் பெண்ணுக்குத் ‘தீபம்’ பத்திரிகையின் மீது எவ்வளவு ஆர்வம்? அப்படியொன்றும் அதில் பிரமாதமான விஷயமும் இல்லை” என்றான்.

“மிஸ். மனோன்மணிக்குப் படிப்பில் ஆர்வம் அதிகந்தான்! அதிலும் இந்த மாதத்துத் ‘தீப’த்தில் அவள் அதிக ஆர்வம் கொள்வதற்கு முக்கிய காரணம் இருக்கிறது” என்றார் போஸ்டு மாஸ்டர்.

“அப்படியா? அந்தக் காரணம் என்னவோ?”

“அதில் ஒரு பாதிக் கதைப் போட்டி வைத்திருந்தார்கள் அல்லவா? அதற்கு இந்தப் பெண்ணும் எழுதியிருந்தாள் போலிருக்கிறது.”

“ஓஹோ! அதுதானே நானும் பார்த்தேன்…! மிஸ். மனோன்மணி பிரசித்தமான எழுத்தாளியோ? இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாள்? ஏதோ பள்ளிக் கூடம் போவதாகச் சொன்னாளே!”

“இந்த ஊரில் உள்ள பெண் பள்ளிக் கூடத்தில் உபாத்தியாயினியாயிருக்கிறாள். சம்பளம் சொற்பம். வீட்டிலே கிழவர்கள் இருவர். ஒரு நொண்டிக் குழந்தை. இவளுடைய சம்பாத்தியத்திலேதான் காலட்சேபம் நடக்க வேணும். தபால் இலாகா, கல்வி இலாகா – இரண்டுந்தான் தெரிந்த விஷயம் ஆயிற்றே? ஊருக்கு இளைத்தவர்கள் நாங்கள். ஒழிந்த வேளையில் பத்திரிகைகளுக்கு எழுதினால் ஏதாவது கிடைக்காதா என்று இந்தப் பெண்ணுக்கு எண்ணம். ‘தீபம்’ பாதிக் கதைப் போட்டியில் மனோன்மணிக்குப் பரிசு வந்திருக்கிறதோ என்னமோ தெரியவில்லை. இதிலாவது அவள் ஏமாற்றமடையாமலிருந்தால் சரி. அந்தப் பெண் சிரித்துச் சந்தோஷமாயிருந்ததை நான் பார்த்ததேயில்லை. ஆறு மாதமாகப் பக்கத்து வீட்டில் தான் இருக்கிறேன்.”

“ஐயோ பாவம்! வாழ்க்கையில் துன்பப்பட்டவள் போலிருக்கிறது. என்ன கஷ்டமோ, என்னமோ?”

“அதுதான் பெரிய மர்மமாயிருக்கிறது. ‘மிஸ்’ என்று சொல்லிக் கொள்கிறாள். வீட்டில் நாலு வயது நொண்டிக் குழந்தை ஒன்று வளர்கிறது. இவளை ‘அம்மா’ என்று அழைக்கிறது. புருஷனால் நிராகரிக்கப்பட்டவள் என்று ஒரு வதந்தி. ‘விதவை’ என்றும் சிலர் சொல்கிறார்கள். வேறு ஏதாவது கண்றாவியாயிருந்தாலும் இருக்கலாம். யார் கண்டது? உலகம் வரவரக் கெட்டுப் போய் வருகிறது. நாகரிகம் முற்றிக் கொண்டு வருகிறது. பண்ணையார் சங்கர சேதுராயருடைய சுவீகாரப் பையன் ஒருவன் இந்தப் பெண்ணை இப்போது சுற்றத் தொடங்கியிருக்கிறான். அவனைப் பார்த்தாலே ‘கில்லாடி’ என்று தெரியும். இந்த ஊருக்கு நீங்கள் புதியவர் தானே!”

“ஆம் ஐயா!”

“புன்னைவனத்தின் அழகு வேரு எந்த ஊருக்கும் வராது. ஆனால் கொஞ்சம் பொல்லாத ஊர். ஜாக்கிரதையாக இருக்க வேணும். போததற்குப் புலி ஒன்று வந்து கழுத்தை அறுக்கிறது!”

“நான் கூட பத்திரிகையில் படித்தேன். அந்தப் புலியை யாரும் இன்னும் சுட்டுக் கொல்லவில்லையா?”

“அது ரொம்பக் கெட்டிக்காரப் புலியாயிருக்கிறது. துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வேட்டையாடுகிறேன் என்று வருகிறவர்களின் கண்ணில் மட்டும் அது அகப்படுவதேயில்லை!”

“அப்படி ரொம்பப் பேர் வந்திருக்கிறார்களோ?”

“அதோ பாருங்கள் ஒரு வேட்டைக்காரர் போகிறார்! பண்ணையாரின் சுவீகாரப் புத்திரன் என்று சொன்னேனே, அவர் தான் இவர்! வெறுமனே புத்திரன் என்று சொன்னால் போதாது, ‘புத்திர சிகாமணி’ என்று சொல்ல வேண்டும்!” என்றார் போஸ்டு மாஸ்டர்.

4

பலகணியின் வழியாகச் சந்திரசூடன் பார்த்தான். பட்டை பட்டையாகச் சிவப்புக் கோடு போட்ட பனியன் ஒன்றை உடம்பையொட்டி அணிந்திருந்த வாலிபன் ஒருவன் சாலையோரம் போய்க் கொண்டிருந்தான். அவனைப் பார்த்தாலே புலிவேஷக்காரன் மாதிரி இருந்தது. அவன் கையில் வெள்ளிப் பூண் போட்ட குட்டையான பிரம்பு ஒன்று இருந்தது. அதை அவன் சுழற்றிக் கொண்டே நடந்தான். அவனுக்குப் பின்னால், துப்பாக்கியும், மற்றும் வேட்டைச் சாமான்கள் அடங்கிய நீண்ட பை ஒன்றும் எடுத்துக் கொண்டு இன்னொருவன் பின் தொடர்ந்தான்.

“நீங்கள் சொன்ன புத்திரசிகாமணி முன்னால் போகிறவன் தானே?” என்று சந்திரசூடன் கேட்டான்.

“ஆமாம்; பின்னால் போகிறவன் யாரோ முஸ்லிம் வாலிபன் என்று தோன்றுகிறது. அவன் கொஞ்ச நாளாகத்தான் இவனோட போகிறான். புலி வேட்டையாடுவதற்கு இவனுக்கு ஒத்தாசையாக வந்திருக்கிறான் போலிருக்கிறது. இரண்டு பேரும் தினம் இந்த நேரத்துக்குத் துப்பாக்கி சகிதமாக மலைக்குப் போகிறார்கள். சாயங்காலம் திரும்பி வருகிறார்கள். வரும்போது ஒரு முயல்குட்டி, அல்லது நரிக்குட்டி, அல்லது ஒரு பெருச்சாளியைப் பிடித்துக் கொண்டு வருகிறார்கள். புலி மட்டும் இவர்களிடம் அகப்படாமல் ‘டிமிக்கி’ கொடுத்துக் கொண்டிருக்கிறது!”

“இவனுடைய சுவீகாரத் தகப்பனார், யாரோ பண்ணையார் என்று சொன்னீர்களே, அவர் யார் ஸார்?”

“இந்தப் பக்கத்திலேயே பெரிய முதலாளி, பண்ணையார் சங்கர சேதுராயர்தான். அவருக்கு இரண்டாயிரம் ஏக்ரா நிலம் இருக்கிறது. அதில் ஐந்நூறு ஏக்ராவில் பயிரிட்டுப் பணத்தை அள்ளிக் குவிக்கிறார். ஆனால் பணம் மட்டும் இருந்து என்ன பிரயோஜனம்?”

“பாவம்! புத்திர பாக்கியம் இல்லையாக்கும்!”

“இது ஒரு கண்றாவிக் கதை. மகன் ஒருவன் இருந்தானாம். வெகு புத்திசாலியாம். சாதி விட்டுச் சாதியில் யாரோ ஒரு பெண்ணைக் காதலித்துக் கலியாணம் செய்து கொண்டானாம். ‘இனிமேல் எனக்கு நீ மகன் இல்லை; என் முகத்தில் விழிக்காதே’ என்று பண்ணையார் அவனை வீட்டை விட்டுத் துரத்தி விட்டாராம்…”

“அப்புறம்…?”

“அப்புறம், பையன் திரும்பி வரவேயில்லை. கொஞ்ச காலத்துக்கு முன்னால் அவன் ஏதோவிமான விபத்தில் செத்தே போய் விட்டதாகக் கேள்வி வேண்டு மென்றே உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் வதந்தி. அவனுக்குப் பதிலாகத்தான் இந்த ‘சுப்ரதீப’மான புத்திரனைப் பண்ணையார் சுவீகாரம் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

“சில பேருக்கு அப்படி அதிர்ஷ்டம் அடிக்கிறது!”

“அதிர்ஷ்டமாவது, மண்ணாங்கட்டியாவது! எல்லாம் நமது கையாலாகாத அரசாங்கத்தினால் ஏற்படுவதுதான். என்னைக் கேட்டால், சுவீகாரம் எடுத்துக் கொள்ளுவதையே சட்ட விரோதமாக்க வேண்டும் என்று சொல்லுவேன். பிள்ளை இல்லாதவர்களின் சொத்துக்களையெல்லாம் சர்க்கார் எடுத்துக் கொள்ள வேண்டும்!”

“ஆமாம்; எடுத்துக் கொண்டு தபாலாபீஸ் சிப்பந்திகளுக்குப் பிரித்துக் கொடுத்தாலும் பிரயோஜனம் உண்டு!”

இவ்விதம் போஸ்டு மாஸ்டர் மனம் குளிர ஒரு வார்த்தை சொல்லிவிட்டுச் சந்திரசூடன் வெளியேறினான்.

5

மறுநாள் மாலை சந்திரசூடன் மிஸ். மனோன்மணியின் வீட்டுக்குப் போனான். சிறிது தயக்கத்துடனேதான் சென்றான். ஏனெனில், அதற்குள் பண்ணையார் சங்கரசேதுராயரின் சுவீகாரப் புதல்வன் மனோகரனை பற்றிச் சிறிது அவன் தெரிந்துகொண்டான். மனோகரனும் பெரிய குடும்பத்தில் பிறந்தவன் தானாம். ஆனால் அந்தப் பெரிய குடும்பத்தின் சொத்துக்கள் எல்லாம் எப்படியோ காலியாகி விட்டது. இவன் பிறந்த வேளைதான் என்று சிலர் சொன்னார்கள். பங்களூரில் இவனுடைய தந்தை பெரிய அளவில் வியாபாரம் நடத்தி வந்தார். தடபுடலான நாகரிக வாழ்க்கையும் நடத்தி வந்தார். பையன் இளம் பிராயத்தில் பல வருஷம் பெங்களூரில் கழித்தான். அங்கே தான் படித்தான். நவநாகரிகத்துக்குரிய நடை உடைகள் எல்லாம் பயின்றான். வியாபாரத்தில் திடீரென்று நஷ்டம் ஏற்பட்டுத் தந்தை ‘இன்ஸால்வெண்ட்’ ஆனார். இந்த இக்கட்டான நிலைமையில் தான் புன்னைவனத்துப் பண்ணையாரிடமிருந்து இவனுக்கு அழைப்பு வந்தது. இரண்டு வருஷங்களாக இங்கே தான் இருந்து வருகிறான். சுவீகாரத் தந்தைக்கு நல்ல பிள்ளையாக நடந்து வருகிறான். ஆனால் ஊரில் உள்ளவர்களிடையே இவனைப் பற்றி நல்ல அபிப்பிராயம் சொல்லுவார் இல்லை.

“அப்பேர்ப்பட்ட உத்தமமான பிள்ளையைப் பறிகொடுத்து விட்டு, இந்த ஒண்ணாம் நம்பர் கில்லாடியைப் பிள்ளையென்று தாலாட்டிச் சீராட்டுகிறாரே, பண்ணையார்! அவர் தலையில் எழுத்து அப்படி! இவனுக்கு அடித்த யோகம் இப்படி!” என்று சொன்னார்கள்.

இவ்விதம் பெயர் வாங்கிய மனோகரன் மிஸ். மனோன்மணியின் வீட்டுக்கு அடிக்கடி போவதுண்டு என்று அறிந்த பிறகு, சந்திரசூடனுக்கு அங்கே போவதில் தயக்கம் ஏற்பட்டது இயல்புதானே? ஆயினும் பத்திரிகையைத் திருப்பி வாங்கிக் கொள்ள வேண்டும்; வருகிறதாக அவளிடம் சொல்லியும் ஆகிவிட்டது! ஆகையால், போய் விட்டு உடனே திரும்பி விட வேண்டும் என்ற உறுதியுடன் சென்றான்.

சுற்றிலும் மதில் சூழ்ந்த ஒரு விசாலமான தோட்டத்தின் முன் பகுதியில் நாலு சின்னஞ்சிறு வீடுகள் ஒரே மாதிரியாகக் கட்டப்பட்டிருந்தன. யாரோ முதலாளி அந்த வீடுகளை வாடகைக்கு விடுவதற்காகவே கட்டியிருக்க வேண்டும் என்று பார்த்தவுடனே தெரிந்தது. அவற்றில், நேற்று மனோன்மணி சுட்டிக் காட்டிய வீட்டை நினைவுப்படுத்திக் கொண்டு சந்திரசூடன் அங்கே சென்றான்.

அந்த வீட்டின் வாசலில், கைவண்டி ஒன்றில், ஒரு குழந்தை உட்கார்ந்திருந்தது. கையில் ஒரு பொம்மையை வைத்துக் கொண்டு அதனுடன் பேசி விளையாடிக் கொண்டிருந்தது. இலட்சணமான குழந்தை; பிராயம் நாலு இருக்கும். சந்திரசூடனுக்குக் குழந்தைகள் என்றால் அவ்வளவாகப் பிரேமை இல்லைதான். குழந்தை குலத்தின் எதிரி என்று கூட அவனைச் சொல்லலாம். ஆயினும் இந்தக் குழந்தையிடம் ஏதோ ஒரு தனிக் கவர்ச்சி அவனை இழுத்தது. போகும் வழியில் ஒரு கணம் நின்று, ‘என்ன, பாப்பா! என்ன சேதி?’ என்றான்.

குழந்தை அவனை நிமிர்ந்து பார்த்து, “என்ன மாமா! என்ன சேதி?” என்று சொல்லிப் புன்னை புரிந்தது.

“நீ ரொம்ப சமர்த்துப் பாப்பாவாயிருக்கியே?” என்றான் சந்திரசூடன்.

“நீங்க ரொம்ப சமர்த்து மாமாவாயிருக்கேளே?” என்றது குழந்தை.

“பலே! பலே!” என்றான் சந்திரசூடன்.

“சபாஷ்! சபாஷ்!” என்றது குழந்தை.

இதையெல்லாம் உள்ளேயிருந்து கேட்டுக் கொண்டே மனோன்மணி வெளியே வந்தாள். அவள் முகமலர்ச்சி, உள்ளத்தின் உவகையைக் காட்டியது.

“வாருங்கள், வாருங்கள்! ராஜ்மோகனுக்கு உங்களைப் பிடித்துப் போயிருக்கிறது. அதென்னமோ, சில பேருக்குத்தான் குழந்தைகளுடன் சிநேகமாயிருக்கும் வழி தெரிகிறது. வேறு சிலரைக் கண்டாலே குழந்தைகள் அலறத் தொடங்கி விடுகின்றன!” என்றாள் மனோன்மணி.

“ஆமாம்; குழந்தைகளுடன் சிநேகம் பிடிப்பது ஒரு தனி வித்தைதான்!” என்றான் சந்திரசூடன்.

வீட்டின் முன்புறத்தில் இருந்த சிறிய தாழ்வாரத்தில் இரண்டு பிரம்பு நாற்காலிகள் இருந்தன. அவற்றில் ஒன்றைக் காட்டி, “உட்காருங்கள், இதோ நீங்க்ள் கொடுத்த பத்திரிகையைக் கொண்டு வருகிறேன்” என்று சொல்லி விட்டு மனோன்மணி உள்ளே சென்றாள்.

6

ஐந்து நிமிஷத்துக்கெல்லாம் ஒரு கப் காபியும் ‘தீபம்’ சஞ்சிகையும் எடுத்துக் கொண்டு வந்தாள்.

சந்திரசூடன் காப்பியைச் சாப்பிட்டுவிட்டு, “பாதிக் கதைப் போட்டியில் பரிசு உங்களுக்குத்தானா? நீங்கள் எழுதியதுதான் வந்திருக்கிறதா?” என்று கேட்டான்.

“இல்லை; இல்லை! நான் எழுதியது வரவில்லை, பரிசு எனக்குக் கிடைக்காவிட்டால் போகட்டும். ஆனால் கதையை இவ்வளவு சோகமாக முடித்திருக்க வேண்டாம்.”

“அடடா! சோகமாகவா முடிந்திருக்கிறது? நான் நன்றாகப் படிக்கவில்லை!”

“ஆமாம்; நேற்று நீங்கள் கொஞ்சம் படிப்பதற்குள் நான் வாங்கிக் கொண்டு வந்துவிட்டேன். நான் பரிசுப் போட்டிக்கு எழுதியிருக்கிறேன் என்று உங்களுக்கு யார் சொன்னது?”

“போஸ்டு மாஸ்டர் சொன்னார்.”

“ஓகோ! என்னைப் பற்றி இன்னும் ஏதாவது வம்பு வளர்த்தாரா?”

“இல்லை, இல்லை! தங்களைப் பற்றி ரொம்ப நல்ல மாதிரி பேசினார்.”

“போகட்டும்; இந்த மட்டும் விட்டாரே! இந்த ஊரிலேயே வம்புப் பேச்சு அதிகம்!”

“அதைப் பற்றி நமக்கு என்ன? நம்முடைய மனச் சாட்சிக்கேற்ப நாம் நேர்மையாக நடந்து கொண்டால், ஊரில் உள்ளவர்கள் என்ன பேசினால் நமக்கு என்ன கவலை?”

“நம் காதில் விழாமல் என்ன பேசிக் கொண்டாலும் பரவாயில்லை. நம்மிடமே வந்து ஏதாவது வேண்டாத கேள்வி கேட்கத் தொடங்கி விடுகிறார்கள். பாருங்கள் இதோ இந்தக் குழந்தை இருக்கிறானே, இவன் என் சொந்தக் குழந்தையா, இல்லையா என்று ஊராருக்கு என்ன கவலை? எத்தனை பேர் என்னைக் கேட்டிருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?”

“சில பேருக்கு இப்படிப் பிறத்தியாரைக் குறித்து வம்பு வளர்ப்பதிலேயே ஆனந்தம். அவர்களுடைய சுபாவமே அப்படி! அது போனால் போகட்டும். எப்படி முடித்திருக்க வேண்டுமென்று உங்களுக்குத் தோன்றுகிறது? நீங்கள் என்ன மாதிரி கதையை முடித்திருந்தீர்கள்?” என்று கேட்டான் சந்திரசூடன்.

“அதைப்பற்றிப் பேசுவதற்கே எனக்குச் சங்கடமாயிருக்கிறது” என்றாள் மனோன்மணி.

“அடடா! அவ்வளவு சகிக்க முடியாமல் எழுதியிருப்பதற்கா பரிசு கொடுத்திருக்கிறார்கள்?”

“சகிக்க முடியாமல் எழுதியிருப்பதாக நான் சொல்ல மாட்டேன். ஒரு விதத்தில் நன்றாகத்தானிருக்கிறது. ஆனால் என்னுடைய சொந்த அனுபவமும் இந்தக் கதையில் சேர்ந்திருப்பதால் வருத்தம் உண்டாக்குகிறது.”

“சொந்த அனுபவமா? ஆச்சரியமாயிருக்கிறதே!”

“சொந்த அனுபவம் என்றால், எனக்கு நேர்ந்தது அல்ல. இந்தக் கதையில் உள்ளது போன்ற ஒரு சம்பவம் என் சிநேகிதி ஒருத்தியின் வாழ்க்கையில் நடந்தது…”

“அப்படியா?”

“இப்போது என் மனம் சரியாயில்லை. இன்னொரு நாள் வந்தீர்களானால் சொல்லுகிறேன். யாரிடமாவது சொன்னால் என் மனத்தில் உள்ள பாரம் குறையலாம். ஆனால் அனுதாபத்துடன் கேட்பவர்களாயிருக்க வேண்டும். தங்களைப் பார்த்தால் அவ்விதம் கேட்பீர்கள் என்று என் மனத்தில் ஏனோ தோன்றுகிறது.”

“அது என்னுடைய அதிர்ஷ்டந்தான்! இன்னொரு நாள் அவசியம் வருகிறேன்.”

இந்தச் சமயத்தில் வாசலில் காலடிச் சத்தம் கேட்டு சந்திரசூடன் திரும்பிப் பார்த்தான். நேற்று போஸ்ட் மாஸ்டர் சுட்டிக் காட்டிய புலி வேட்டை மனோகரன் வந்து கொண்டிருந்தான். அவனைத் தொடர்ந்து சென்ற சாயபு எதிரேயிருந்த போஸ்டாபீஸ் தாழ்வாரத்தில் நின்றான்.

7

வரும் போது மனோகரன், கைவண்டியிலிருந்த ராஜ் மோகனைப் பார்த்து, “ஏண்டா நொண்டிப் பயலே! என்னடா சேதி?” என்றான். அது சந்திரசூடன் காதில் நாராசமாக விழுந்தது. மனோன்மணி முகம் சுருங்குவதையும் கவனித்தான்.

“என்னடா நான் கேட்கிறேன், பேசாமலிருக்கிறாயே?” என்று சொல்லிக் கொண்டே மனோகரன் குழந்தையின் காதைப் பிடித்துத் திருகினான். குழந்தை ‘வீல்’ என்று அலறத் தொடங்கியது.

மனோன்மணி முகத்தில் கோபம் கொதித்தது. அவள் எழுந்தாள். அதற்குள் மனோகரன் குழந்தையின் காதை விட்டு விட்டுத் தாழ்வாரத்துக்கு வந்தான். சந்திரசூடனை ஒரு தடவை முறைத்துப் பார்த்து விட்டு, இன்னொரு நாற்காலியில் உட்கார்ந்து கால் மேல் காலைப் போட்டுக் கொண்டான்.

“பேச்சின் நடுவில் ‘டிஸ்டர்ப்’ பண்ணுகிறேன் போலிருக்கிறது! மன்னிக்க வேணும்!” என்றான்.

“அதெல்லாம் ஒன்றுமில்லை. இவர் புறப்பட்டுக் கொண்டிருந்தார்” என்றாள் மனோன்மணி.

“ஆம்; புறப்பட்டுக் கொண்டிருந்தேன். தாங்கள் வருவதைப் பார்த்து விட்டுத் தான் தங்கினேன். ‘புன்னைவனத்துப் புலி’யைப் பற்றிப் பத்திரிகையில் அமர்க்களப்படுகிறது! தாங்கள் துப்பாக்கி சகிதமாக மலை மேல் போய் விட்டு வருவதை தினம் பார்க்கிறேன். அதைப் பற்றித் தங்களிடம் விசாரிக்க விரும்பினேன்.”

“ஓ! தங்களுக்கு வேட்டையில் பிரியம் உண்டா? ரொம்ப சந்தோஷம்! அந்தப் புலி ஒரு மாதமாய் எனக்கு ‘டிமிக்கி’ கொடுத்துக் கொண்டு வருகிறது. நீங்களும் வருவதாயிருந்தால்…”

“அழைத்துப் போனால் வரலாம் என்று தான் உத்தேசம். நான் இந்த ஊருக்குப் புதிது!”

“அப்படித் தான் நினைத்தேன் மனோன்மணி! இவரை எனக்கு நீ அறிமுகம் செய்து வைக்கவில்லையே?”

“அவருக்கு அந்தச் சிரமம் வேண்டியதில்லை. நானே என்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறேன். எனக்கு மதராஸ். பெயர் சந்திரசுடன். வயது இருபத்து நாலு. போன வருஷம் பி.எல். பாஸ் செய்தேன். இன்னும் தொழில் ஆரம்பிக்கவில்லை. கலியாணம் ஆகவில்லை. செய்து கொள்வதாகவும் உத்தேசமில்லை. இன்னும் ஏதாவது தகவல் வேணுமானால் கேளுங்கள்…”

மனோகரன் இடி இடியென்று சிரித்து விட்டு, “ரொம்ப வந்தனம். நாளை மலை மேல் ஒரு வேளை புலியைச் சந்தித்தால் தங்களைத் தக்கபடி அதற்கு ‘இண்டரட்யூஸ்’ பண்ணி வைக்கலாம். நாளை வருகிறீர்கள் அல்லவா?” என்றான்.

“கட்டாயம் வருகிறேன், எங்கே சந்திக்கலாம்?”

“பண்ணையார் வீடு என்றால், எல்லோருக்கும் தெரியும். அல்லது நீங்கள் இருக்குமிடத்தைச் சொன்னால்…”

“ஸ்ரீதர் ஹோட்டலில் இருக்கிறேன். நாளை தங்கள் வீட்டுக்கே வந்து விடுகிறேன். போய் வரட்டுமா?”

இவ்விதம் இரண்டு பேருக்கும் சேர்த்துச் சொல்லிக் கொண்டு சந்திரசூடன் புறப்பட்டுச் சென்றான்.

தற்செயலாக அவன் பார்வை எதிரே தபால் ஆபீஸ் தாழ்வாரத்தில் நின்ற சாயபுவின் பேரில் விழுந்தது. அந்த சாயபு கையில் ‘தீபம்’ பத்திரிகையை வைத்துக் கொண்டு வாசிப்பதாகத் தோன்றியது.

“அடே அப்பா! ‘தீபம்’ பத்திரிகைக்கு எத்தனை கிராக்கி?” என்று எண்ணி வியந்து கொண்டே போனான்.

8

மறுநாள் சந்திரசூடன் பண்ணையாரின் வீட்டுக்குப் போனான். மனோகரன் அவனை உற்சாகமாக வரவேற்றுப் பண்ணையாருக்கும் அவர் மனைவிக்கும் அறிமுகப்படுத்தி வைத்தான். சந்திரசூடன் பி.எல். பாஸ் செய்தவன் என்று அறிந்ததும் பண்ணையாருக்கு அவன் மீது தனிப்பட்ட சிரத்தை ஏற்பட்டது. மறுபடியும் அவனை வரும்படியாகச் சொன்னார்.

சந்திரசூடன் மனோகரனுடன் சில நாள் மலை மேல் வேட்டையாடுவதற்காகச் சென்று வந்தான். முயல், நரி, பெருச்சாளி முதலிய பிராணிகள் சில அற்பாயுளில் மாண்டன. புலி மட்டும் அகப்படவில்லை.

பண்ணையார் தனிப்படச் சந்திரசூடனைச் சந்கிக்க நேர்ந்த ஒருநாள் ‘உயில்’ எழுதும் முறைகளைப் பற்றி அவனிடம் விசாரித்தார். தம்முடைய சொத்துக்கள் பெரும்பாலும் சுயார்ஜிதம் என்றும் அவற்றைத் தம் இஷ்டப்படி யாருக்காவது எழுதி வைக்கலாமா என்றும் கேட்டார். சுயார்ஜித சொத்தில் சொந்தப் பிள்ளையின் உரிமை என்ன, பேரனின் உரிமை என்ன, சுவீகார புத்திரனுடைய பாத்தியதைகள் என்ன – என்றெல்லாம் விவரமாகக் கேட்டார்.

மனோகரனும் அதே விஷயத்தைப் பற்றித் தன்னிடம் விசாரித்தது சந்திரசூடனுக்கு வியப்பாயிருந்தது. ஒரு மாதிரி அவர்களுடைய பேச்சிலிருந்து ஊகம் செய்து நிலைமையை அறிந்து கொண்டான். மனோகரன் பண்ணையாரின் சொத்துக்களைத் தன்பெயருக்கு உயில் எழுதி வைத்து விடும்படி வற்புறுத்தி வருவதாகத் தெரிந்தது. பண்ணையாரின் மனத்தில் இது நியாயமா என்ற கேள்வி எழுந்து உறுத்திக் கொண்டிருந்தது. அத்துடன் சட்டப்படி செல்லுமா என்ற சந்தேகமும் ஏற்பட்டிருந்தது.

சந்திரசூடன் பண்ணையாரிடம் கொஞ்சம் நெருங்கிப் பழகி அவருடைய அபிமானத்தை ஓரளவு சம்பாதித்துக் கொண்ட பிறகு, “நீங்கள் இப்படியெல்லாம் மர்மமாய்க் கேட்டால் ஒன்றும் தெளிவாகாது. மனத்தில் உள்ளதை மனம் விட்டுச் சொன்னால், நான் சட்டங்களைப் பார்த்துத் திட்டமாகச் சொல்ல முடியும்” என்றான்.

அதன் பேரில் பண்ணையாரும் மனம் விட்டுப் பேசினார். தம் ஒரே பிள்ளையாகிய தர்மராஜன், தம் பேச்சைக் கேட்காமல் ஒரு கீழ் சாதிப் பெண்ணை மணந்து கொண்டதைப் பற்றியும், அவனைத் தாம் நிராகரித்து விட்டதைப் பற்றியும் கூறினார். அவன் சில காலத்துக்கு முன் ஒரு விமான விபத்தில் மாண்டு போனதாக வதந்தி என்றும், ஆனால் நிச்சயம் தெரியவில்லையென்றும், அந்தச் செய்தி வருவதற்கு முன்பே மனோகரனைத் தாம் அழைத்துக் கொண்டது பற்றியும் தெரிவித்தார். மகன் வீட்டை விட்டுப் போனதற்குப் பிறகு அவனைப் பற்றியோ, அவன் குடும்பத்தைப் பற்றியோ தாம் ஒன்றும் விசாரிக்கவில்லையென்று கூறினார். ஒரு வேளை அவனுடைய மனைவி இருந்தால், சொத்தில் அவர்களுக்குப் பாத்தியதை உண்டா என்று கேட்டார்.

நிராகரித்த மகனைப் பற்றிப் பண்ணையார் இன்னமும் தாட்சண்யமின்றிக் கடுமையாகவே பேசினார். ஆனாலும், அவனுக்கு நேர்ந்ததாகக் கேள்விப்பட்ட கதியைப் பற்றிப் பேசும்போது அவர் நெஞ்சு சிறிது இளகியிருந்ததாகத் தோன்றியது.

சந்திரசூடன் அவருடைய நெஞ்சு இளக்கத்தை அதிகமாக்குவதற்கு முயன்றான்.

“பையனுடைய தலைவிதி அப்படியிருந்தது. அதற்காக மற்றவர்களை ஏன் கோபிக்க வேண்டும்? அவனுக்குக் குழந்தைகள் உண்டா என்பது பற்றி விசாரிப்பது அவசியம். இந்த உலகத்தில் கடவுளை நேரில் தரிசிப்பது என்றால் குழந்தைகளிடந்தான் தரிசிக்கலாம். உலகப் பற்றுக்களை ஒழித்த பெரிய மகான்கள் கூடக் குழந்தைகளிடம் ஆசை காட்டினார்கள் என்று அறிந்திருக்கிறோம் அல்லவா?” என்றான் சந்திரசூடன்.

“இந்தப் பெரிய வீட்டில் தவழ்ந்து விளையாட ஒரு குழந்தை இல்லையே என்று நானுந்தான் ஏங்குகிறேன். அந்தப் பாவி இப்படி எங்களை விட்டு விட்டுப் போய் விட்டானே?” என்றார் பண்ணையார்.

பின்னர் இந்த விஷயத்தைப் பற்றி அடிக்கடி பேச்சு நடந்தது. பண்ணையாரின் மனைவியும் அதில் சேர்ந்து கொண்டாள். “எங்கள் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டு அவன் தான் போய்விட்டான். அவனுக்கு ஏதாவது குஞ்சு குழந்தை இருக்கிறதா என்று விசாரிக்க வேண்டுமென்று நான் சொல்லிக் கொண்டுதானிருக்கிறேன். இவர் ஒரே பிடிவாதமாயிருக்கிறார். ரொம்ப கல் நெஞ்சுக்காரர்!” என்றாள் பண்ணையாரின் மனைவி.

“எப்படியடி விசாரிக்கிறது? எப்படி விசாரிக்கிறது என்று கேட்கிறேன். பத்திரிகையில் விளம்பரம் போடச் சொல்கிறாயா? அல்லது ஊர் ஊராகப் போய் டமாரம் அடிக்கச் சொல்கிறாயா?” என்றார் பண்ணையார்.

இந்த மாதிரிப் பேச்சு நடந்து கொண்டிருந்தபோது ஒரு நாள் மனோகர் திடீரென்று உள்ளே வந்து விட்டான். அவன் முகத்தின் சுளிப்பைச் சந்திரசூடன் கவனித்து, உடனே அந்தப் பேச்சை நிறுத்திக் கொண்டான்.

9

முதல் சந்திப்புக்கு நாலு நாளைக்குப் பிறகு ஒரு நாள் சந்திரசூடன் மிஸ். மனோன்மணியைப் பார்க்கச் சென்றான்.

“இந்தப் பக்கம் அப்புறம் நீங்கள் வரவேயில்லையே! ராஜ்மோகன் கூட ‘சமத்து மாமா’வைப் பற்றி இரண்டு மூன்று தடவை கேட்டு விட்டான்!” என்றாள் மனோன்மணி.

“மிஸ்டர் மனோகர் ஏதாவது தப்பாக எண்ணிக் கொள்ளப் போகிறாரே என்று நான் வரவில்லை. அன்றைக்கே நான் இங்கே வந்திருப்பது அவருக்குப் பிடிக்கவில்லை என்று தெரிந்தது.”

“மனோகருக்குப் பிடிக்கவில்லையென்பது ஒரு காரணமா?…இருக்கலாம்; நான் என்ன கண்டேன்? அவருடன் ரொம்ப சிநேகமாகிவிட்டீர்கள் போலிருக்கிறது. அவர் வீட்டுக்கு அடிக்கடி போகிறீர்களாமே!”

“ஆமாம், தினமும் நாங்கள் மலைமேல் வேட்டையாடப் போகிறோம். போகும் போதும் திரும்பும் போதும் அவர் வீட்டுக்குப் போகிறேன்.”

“அவருடைய அப்பா அம்மாவைப் பார்த்தீர்களா?”

“ஓ! பார்த்தேன். தினமும் பார்க்கிறேன்; பேசுகிறேன். ரொம்ப நல்ல மனிதர்கள். மகன் விஷயத்திலே மட்டும் பண்ணையார் மோசமாக நடந்து விட்டார். அதற்காக இப்போது கிழவரின் மனத்தில் கொஞ்சம் பச்சாதாபம் ஏற்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது…”

“அப்படியா? சொன்னாரா, என்ன?”

“வாய் விட்டுச் சொல்லவில்லை. பேச்சுப் போக்கில் தெரிகிறது. அவருடைய சொத்துக்களை உயில் எழுதி வைப்பது பற்றி இப்போது ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்.”

“பண்ணையாரை நான் ஒரு தடவை பார்க்க வேண்டும். நான் வேலை பார்க்கும் பள்ளிக் கூடத்துக்கு அவர் ஒரு டிரஸ்டி. பள்ளிக்கூடத்தின் அபிவிருத்தி பற்றி அவரிடம் சில விஷயங்கள் சொல்ல வேண்டும். இந்த வீட்டில் சில ‘ரிப்பேர்’கள் அவசியமாயிருக்கின்றன. தாங்கள் ஒரு தடவை என்னை அவர்கள் வீட்டுக்கு அழைத்துப் போய் அறிமுகம் செய்து வைக்க முடியுமா?” என்று மனோன்மணி ஆவலுடன் கேட்டாள்.

“புதிய மனிதனாகிய என்னிடம் கேட்கிறீர்களே; மனோகரிடம் சொன்னால் உடனே காரியம் ஆகிவிடுமே?” என்றான் சந்திரசூடன்.

“அவரிடம் பல தடவை சொல்லியாகிவிட்டது. ‘ஆகட்டும்’ ‘ஆகட்டும்’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறாரே தவிர, அழைத்துப் போகவில்லை.”

“இப்படி இரண்டுங் கெட்டானாக உங்களை அழைத்துப் போகாமல் பண்ணையார் வீட்டு எஜமானியாக்கி அழைத்துப் போக விரும்புகிறார் போலிருக்கிறது.”

“ஆமாம்; அத்தகைய விருப்பம் அவருக்கு இருக்கிறதென்று என்னிடமும் தெரிவித்தார். ஆனால் இந்தக் குழந்தைதான் அவர் விருப்பத்துக்குக் குறுக்கே நிற்கிறான். அவனை எங்கேயாவது ஓர் அநாதை ஆசிரமத்தைப் பார்த்து தொலைத்துவிட வேண்டும் என்கிறார்.”

“அது இயற்கைதானே?”

“எது இயற்கை! புருஷர்கள் எல்லோரும் ஒரே மாதிரிதான் கல்நெஞ்சர்களாயிருப்பார்கள் போலிருக்கிறது.”

“இல்லை, இல்லை! ‘மிஸ்டர் மனோகர் அப்படிச் சொல்வது இயற்கைதானே’ என்றேன். எல்லா புருஷர்களும் அப்படியிருக்க மாட்டார்கள்.”

“அது உண்மைதான்; சிலருக்குக் குழந்தைகள் என்றாலே பிடிப்பதில்லை. அன்றைக்கு மனோகர் இந்தக் குழந்தை விஷயத்தில் எப்படி நடந்து கொண்டார் பாருங்கள்! அதிலும் ‘நொண்டிப் பயலே!’ என்று அவர் அழைத்தபோது எனக்கு அசாத்திய கோபம் வந்தது. அடக்கிக் கொண்டேன். பச்சைக் குழந்தையின் இளம் உள்ளத்தைப் புண்படுத்தக் கூடாது என்று கூடச் சிலருக்குத் தெரிவதில்லை. அடுத்தாற்போல, நீங்களும் ராஜ்மோகனும் பார்த்தவுடனேயே சிநேகமாகி விட்டீர்கள்.”

10

“குழந்தைகள் என்றாலே எனக்கு ஒரு தனி உற்சாகம். மனோகரின் நிலைமையில் நான் இருந்தால், தங்களை இந்த ஒரு குழந்தையோடு மட்டுமல்ல, தாங்கள் பள்ளிக்கூடத்தில் பாடம் சொல்லிக் கொடுக்கும் அத்தனை குழந்தைகளையும் சேர்த்துக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென்றாலும் செய்து கொள்ளத் தயாராயிருப்பேன்!”

மனோன்மணி கலகலவென்று சிரித்துவிட்டு, பள்ளிக் கூடத்தில் குழந்தைகள் அடிக்கும் கொட்டத்தை நீங்கள் ஒரு நாளைக்குப் பார்த்தால் அப்புறம் இம்மாதிரி சொல்ல மாட்டீர்கள்” என்றாள்.

பின்னர், “நான் தங்களுக்கு அவ்வளவு தொந்தரவு கொடுக்க மாட்டேன். ஒரு உதவி செய்தால் போதும். தயவு செய்து பண்ணையார் வீட்டுக்கு என்னை ஒரு தடவை அழைத்துப் போய் அவருக்கு அறிமுகப்படுத்தி வைக்க முடியுமா?” என்று கேட்டாள்.

“பரஸ்பரம் நம்பிக்கை உள்ளவர்கள் தான் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள முடியும்” என்றான் சந்திரசூடன்.

“அதில் என்ன சந்தேகம்?” என்றாள் மனோன்மணி.

“என்னிடம் உங்களுக்கு அத்தகைய நம்பிக்கை இருக்கிறதா என்பது தான் சந்தேகம்.”

“நிச்சயமாயிருக்கிறது. இல்லாவிடில் உங்களிடம் இந்த உதவி கேட்டிருப்பேனா?”

“நம்பிக்கையிருந்தால் என்னிடம் உண்மையைச் சொல்ல வேணும். பண்ணையாரைச் சந்திப்பதற்கு இவ்வளவு ஆவல் ஏன்?”

“நானே அதைச் சொல்லிவிட வேண்டும் என்றிருந்தேன். தாங்கள் கேட்டு விட்டீர்கள். முக்கியமான விஷயத்தை முதலில் சொல்லுகிறேன். ராஜ்மோகன் என் சொந்தக் குழந்தையல்ல” என்றாள் மனோன்மணி.

“அப்படியா? இதை மனோகரிடம் சொன்னீர்களா?” என்று சந்திரசூடன் கேட்டான்.

“இரண்டு மூன்று தடவை சொல்ல நினைத்தேன். ஏதோ தயக்கம் வந்து சொல்லவில்லை. சொந்தக் குழந்தையென்று சொல்லும் போதே இப்படி அதனிடம் முரட்டுத்தனமாய் நடந்து கொள்கிறாரே…?”

“ஆம், ஆம்! அவரிடம் சொல்லாமலிருப்பதே நல்லது. மற்ற விவரங்களைக் கூறுங்கள்!”

“ராஜ்மோகன் என் அருமைச் சிநேகிதியின் குழந்தை. அவள் பெயர் ஸுசேதா. அவளும் நானும் குழந்தைப் பருவம் முதல் ஒன்றாய் வளர்ந்தோம். ஒன்றாய்ப் படித்தோம். இரண்டு பேரும் கலியாணம் செய்து கொள்வதில்லை யென்றும், உத்தியோகம் பார்த்துச் சுதந்திரமாக வாழ்க்கை நடத்துவது என்றும் தீர்மானித்திருந்தோம். துரதிர்ஷ்டவசமாக, சில வருஷங்களுக்கு முன்பு ஸுசேதாவின் புத்தி தடுமாறி விட்டது. காதல் என்ற மூடத்தனத்தில் விழுந்து, யாரோ ஒருவரைக் கல்யாணம் செய்து கொண்டாள். அதானால் அவருக்கும் கேடு விளைவித்துத் தனக்கும் கேடு தேடிக் கொண்டாள். கேடு பின்னால் வந்தது. கலியாணமான புதிதில் அவர்கள் சந்தோஷமாய்த் தானிருந்தார்கள். மூன்று உலகத்திலும் தங்களுக்கு நிகரில்லை என்று இருந்தார்கள். பிறகு இந்தக் குழந்தை பிறந்தது. அதனால் அவர்களுடைய கொண்டாட்டம் இன்னும் அதிகமேயாயிற்று. கொஞ்ச நாளைக்குப் பிறகு குழந்தைக்கு ஒரு கால் ஊனம் என்று தெரிந்தது. இதனால் அவர்கள் அடைந்த வேதனைக்கு அளவேயில்லை. கால் ஊனத்தைக் குழந்தைப் பருவத்திலேயே சரிப்படுத்திவிடலாம் என்று கேள்விப்பட்டு அதற்குப் பிரயத்தனம் செய்தார்கள். குழந்தையை டாக்டர்களிடம் எடுத்துப் போவதே அவர்கள் வேலையாயிருந்தது.

11

“ஒரு சமயம் ஸுசேதாவின் கணவன் பம்பாய்க்குப் போக வேண்டியதாயிற்று. அங்கே குழந்தையின் கால் சிகிச்சையைப் பற்றியும் தெரிந்து கொண்டு வருவதாகச் சொல்லி விட்டுப் போனார். அந்தச் சமயத்தில் என் சினேகிதிக்கு ‘டைபாய்டு’ சுரம் வந்துவிட்டது. நான் தான் ஒத்தாசை செய்து கொண்டிருந்தேன். அவளுடைய விருப்பத்தின்படி பம்பாய்க்குத் தந்தி அடித்தேன். அவரும் மறுநாள் புறப்பட்டு ஆகாய விமானத்தில் வருவதாகப் பதில் தந்தி அடித்தார். துரதிர்ஷ்டத்தைக் கேளுங்கள். அவர் மறுநாள் வருவதற்குத் தான் விமானத்தில் ‘ஸீட்’ ரிஸர்வ் செய்திருந்தார். இதற்குள் அன்றைக்கே பம்பாயிலிருந்து சென்னைக்குப் புறப்படுவதாக இருந்த ஒரு சிநேகிதனைப் பார்த்தாராம். அவன், ‘நான் இன்றைக்குப் போக முடியவில்லை; நீ போகிறாயா?” என்று கேட்டானாம். இவரும் ‘சரி’ என்றாராம். இதையெல்லாம் டிரங்க் டெலிபோன் மூலம் என்னிடம் தெரிவித்து, அன்று, சாயங்காலம் வந்து விடுவேன் என்றார். நானும் ஸுசேதாவிடம் சொன்னேன். அவள் சந்தோஷத்துக்கு அளவே கிடையாது. பேதைப் பெண்! அன்று பம்பாயிலிருந்து புறப்பட்ட விமானம் சென்னைக்கு வந்து சேரவில்லை. புயல் மழை காரணமாக விமானம் தறிகெட்டு எங்கேயோ விழுந்து எல்லோரும் இறந்திருக்க வேண்டும் என்று செய்தி வந்தது. இதை அறிந்த பிறகு ஸுசேதாவின் உடம்பு அதிகமாகிவிட்டது. பிழைத்து எழுந்திருக்கவேயில்லை. கண்ணை மூடுவதற்கு முன்னால் இந்த அநாதைக் குழந்தையைக் காப்பாற்றும்படி என்னிடம் வேண்டிக் கொண்டாள்…”

இச் சமயத்தில் மனோன்மணி விம்மினாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர்த் துளிகள் சிந்தின. கண்களை துடைத்து கொண்டு சில நிமிஷம் சும்மா இருந்து விட்டு, “அவ்வளவுதான் கதை! அது முதல் இக் குழந்தையை வளர்ப்பது எனது கடமையென்று கருதி வளர்த்து வருகிறேன்” என்றாள்.

“‘தீபம்’ பத்திரிகையின் பாதிக் கதையில் உங்களுக்கு ஏன் அவ்வளவு சிரத்தை என்பது இப்போது தெரிய வருகிறது” என்றேன்.

“ஆம்; கதையில் உள்ளது போலவே என் சிநேகிதியின் கதை ஆகிவிட்டது.”

“அப்புறம் மிச்சத்தைச் சொல்லுங்கள்.”

“மிச்சம் ஒன்றுமில்லையே!”

“பண்ணையாரைத் தாங்கள் பார்க்க விரும்புவது எதற்காக என்று சொல்லவில்லையே?”

“இந்தக் குழந்தையின் கால் ஊனத்துக்குச் சிகிச்சை செய்து சரியாக்க வேண்டுமென்று ஸுசேதாவுக்கு ரொம்ப ஆசை. அதை நிறைவேற்ற வேண்டுமென்று பார்க்கிறேன். சிகிட்சைக்குப் பணம் அதிகமாக வேண்டியிருக்கிறது. பண்ணையார் தம் மகன் விஷயத்தில் கொடுமையாக நடந்து கொண்டாலும், தர்மவான் என்று கேள்வி…”

“போயும் போயும் இதற்காகவா, தெரியாத மனிதரிடம் போய் நிற்பார்கள்? ராஜ்மோகன் சிகிச்சைக்கு நானே ஏற்பாடு செய்வேனே?” என்றான் சந்திரசூடன்.

மனோன்மணி சற்று நேரம் சும்மா இருந்தாள்.

சந்திரசூடன், “நான் வரட்டுமா” என்றான்.

“ஆம்; நீங்கள் சொன்னது ரொம்பச் சரி. பரஸ்பர நம்பிக்கை இல்லாமல் எந்தக் காரியமும் செய்ய முடியாது. யாராவது ஒருவரை நம்பித்தான் ஆக வேண்டும். தங்களை நம்பிச் சொல்கிறேன். அப்புறம் ஆண்டவனுடைய சித்தம் போல் நடக்கட்டும்! பண்ணையார், மகனுக்குச் செய்த அநீதிக்குப் பரிகாரமாக, பேரனுக்கும் ஏதேனும் நல்லது செய்யட்டும் என்று பார்க்கிறேன். இந்த ஊர்ப் பண்ணையாரின் பேரன் தான் ராஜ்மோகன். என்னுடைய சிநேகிதி ஸுசேதா பண்ணையாரின் மகன் தர்மராஜனைத் தான் மணந்து கொண்டாள். இருவரும் இப்போது போய்விட்டார்கள். அவர்கள் மேல் பண்ணையாருக்கு இருந்த கோபத்தை இந்தப் பச்சைக் குழந்தையின் மேல் காட்டுவார் என்று நினைக்கிறீர்களா?”

12

“இந்த விஷயத்தை தங்களிடம் கிரஹிப்பதற்குள், புன்னைவனத்துப் புலியைக் கூடப் பிடித்துவிடலாம் என்று ஆகி விட்டது. இந்த ஊருக்குத் தாங்கள் வந்ததே அந்த உத்வேகத்துடன் தான் என்று சொல்லுங்கள்!”

“ஆம், ஐயா! எனக்கு உதவி செய்ய முடியுமா?”

“ஒரு சிநேகிதியின் குழந்தைக்காகத் தாங்கள் செய்துவரும் தியாகத்தை நினைக்கும் போது எனக்கு இது ‘கலியுகம்’ என்றே தோன்றவில்லை. ‘சத்திய யுகம்’ பிறந்துவிட்டதோ என்று நினைக்கிறேன். ஆனால் சிறிது அவகாசம் கொடுக்க வேண்டும். பண்ணையாரின் மனத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கரைக்க வேண்டும். மனோஹரிடம் நீங்கள் இந்த விஷயத்தைச் சொல்லவில்லையென்பது நிச்சயம்தானே?”

“நிச்சயந்தான். இரண்டு மூன்று தடவை சொல்லலாமா என்று எண்ணிப் பிறகு தயங்கி நிறுத்திக் கொண்டு விட்டேன்.”

“இனியும் சொல்ல வேண்டாம், பண்ணையாரைப் பார்ப்பதற்கும் அவசரப்பட வேண்டாம். என்னிடம் இவ்வளவு நம்பிக்கை வைத்தவர்கள் இன்னும் கொஞ்சம் நம்பிக்கை வையுங்கள்.”

“பண்ணையார் உயில் எழுதுவது பற்றி யோசிக்கிறார் என்கிறீர்களே? அதை நினைத்தால் கவலையாயிருக்கிறது…”

“அதே காரணத்துக்காகத்தான் நானும் சொல்கிறேன். உயில் விஷயமாகப் பண்ணையார் என்னிடந்தான் யோசனை கேட்கிறார். இந்தக் குழந்தையின் உரிமையைப் பாதுகாப்பது என் பொறுப்பு!” என்றான் சந்திரசூடன்.

13

மற்றும் சில தினங்கள் சென்றன. இந்த நாட்களில் சந்திரசூடன் அடிக்கடி பண்ணையார் வீட்டுக்குச் சென்று அவருடன் பேசுவதில் அதிக நேரம் செலவிட்டு வந்தான்.

இடையிடையே வேட்டையாடுவதற்கு மலை மேலும் போய்க் கொண்டிருந்தான். ஆனால் சீக்கிரத்தில் சலிப்பு அடைந்துவிட்டான். புலியோ அவர்கள் கண்ணில் சிக்காமலே இருந்துவந்தது. மற்ற சிறிய பிராணிகளைச் சுட்டு கொல்லுவதில் சந்திரசூடனுக்குச் சிரத்தையிருக்கவில்லை.

மனோகரனுடன் தினந்தோறும் வந்த சாயபுவுடன் சந்திரசூடன் பேச்சுக் கொடுக்கப் பார்த்தான். அப்துல் ஹமீது வாயைத் திறக்கிற வழியாக இல்லை. ஏதாவது கேள்வி கேட்டால், ஒரு வார்த்தையில் பதில் சொல்லி விட்டு வாயை மூடிக் கொள்வான்.

சாயபு வேட்டையில் ரொம்பக் கெட்டிக்காரனா என்று மனோகரனைச் சந்திரசூடன் ஒரு நாள் கேட்டான். “அவன் முகத்திலே கட்டுப் போட்டுக் கொண்டிருக்கிறானே, தெரியவில்லையா? ஒரு தடவை ஒரு சிறுத்தைப் புலி அவன் பாய்ந்து விட்டது. அதனுடன் மல்யுத்தம் செய்து ஜயித்தான். அந்தப் போரில் புலி அவனுடைய இரண்டு கன்னங்களையும் பிறாண்டி விட்டது. அப்படியும் வேட்டையாடுவதை நிறுத்தவில்லை. இந்த ஊர் புலியைக் கண்டு பிடித்துச் சுட்டுக் கொல்ல வேண்டும் என்பதில் அவன் என்னைவிடத் துடியாயிருக்கிறான். ஆனால் புலி தென்பட்டால் என்னிடம் தான் சொல்லவேண்டும் என்றும் அவன் துப்பாக்கியில் கையை வைக்கக்கூடாது என்றும் கட்டளையிட்டிருக்கிறேன். இத்தனை நாள் மலைமேல் அலைந்துவிட்டு, புலியை இன்னொருவன் சுடுவதற்கு விடுவேனா?” என்றான் மனோகரன்.

“அதை நான் ஒப்புக் கொள்ள முடியாது. புன்னைவனத்துப் புலி தங்களுக்குச் சொந்தமா, என்ன? அதுவும் பண்ணையார் சங்கரசேதுராயரின் சொத்தா? என் கண்ணில் அகப்பட்டால் நான் சுடுவேன்” என்றான் சந்திரசூடன்.

14

அன்று மலைமேல் அவன் மற்ற இருவரையும் விட்டுப் பிரிந்து, “நான் வேறு பக்கம் போய்ப் பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டுப் போனான். மலைமேல் ஓரிடத்தில் புதர்கள் மனிதனை மறைக்கும் அளவுக்கு உயர்ந்து வளர்ந்திருந்தன. அங்கே ஒரு வேளை புலி மறைந்திருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆகையால் சந்திரசூடன் வெகு ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொண்டு போனான். எதிரிலும் இரண்டு பக்கமும் பார்த்தானே தவிர, பின்புறத்தில் பார்க்கவில்லை. திடீரென்று அந்த நிசப்தமான மலைப் பிரதேசத்தில் சாயபுவின் குரல் ‘புலி! புலி’ என்று கூச்சலிட்டது. அதே சமயத்தில் பின்னால் புதர்களில் சலசலப்புக் கேட்டது. சந்திரசூடன் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். ஆம்; புதர்களுக்கு மத்தியில் புலி மறைந்து வந்து கொண்டிருந்தது. புலியின் முகம் தெரியவில்லை. ஆனால் உடம்பின் கோடுகல் தெரிந்தன. சந்திரசூடன் எவ்வளவோ துணிச்சல் உள்ளவனாயினும் அச்சமயம் வெலவெலத்துப் போனான். எவ்வளவு அஜாக்கிரதையாக இருந்துவிட்டோ ம் என்ற எண்ணம் அவனுக்கு அத்தகைய வெலவெலப்பை உண்டாக்கிற்று. அன்றைக்கென்று அவன் இன்னொரு காரியத்தையும் அலட்சியம் செய்து விட்டான். துப்பாக்கியில் குண்டு போட்டுக் கெட்டித்து தயாராக வைத்திருக்கவில்லை. புலியோ வெகு சமீபத்தில் வந்திருந்தது. ஆகையால் ஓடித் தப்புவதைத் தவிர வேறு வழியில்லை என்று அவன் முடிவு செய்த அதே சமயத்தில் ஓர் அதிசய சம்பவம் நிகழ்ந்தது. புதருக்குள் மறைந்து வந்து கொண்டிருந்த புலி திடீரென்று இரண்டு கைகளை நீட்டி அக்கைகளில் வைத்திருந்த துப்பாக்கியினால் அவனை நோக்கிக் குறி பார்த்தது. இது என்ன கனவா, மனப்பிரமையா, ஜால வித்தையா என்பது ஒன்றும் அவனுக்குத் தெரியவில்லை. யோசிப்பதற்கு நேரமும் இருக்க வில்லை. ஓட்டம் பிடிப்பது ஒன்றுதான் அவன் செய்யக் கூடியதாயிருந்தது, அவ்வளவுதான் ‘ஓ!’ என்று அலறிக் கொண்டு வழி கண்ட இடத்தில் விழுந்தடித்து ஓடினான். துப்பாக்கிக் குண்டு அவனுக்குச் சமீபமாகப் பாய்ந்து சென்று ஒரு மரத்தைத் தாக்கியதைக் கண்டான். அவனுடைய ஓட்டத்தின் வேகம் இன்னும் அதிகமாயிற்று. குடல் தெறிக்க ஓடி மலையிலிருந்து கீழே இறங்கினான். மனோன்மணியின் வீட்டை அடைந்த பின்னர் தான் நின்றான்.

மனோன்மணி வீட்டில் இருந்தாள். “என்ன? என்ன?” என்று ஆவலுடன் கேட்டாள். மூச்சு வாங்கல் நின்ற பிறகு, இனிமேல் நான் வேட்டையாடப் போக மாட்டேன்! போகமாட்டேன்!” என்றான்.

மனோன்மணி ஒன்றும் புரியாதவளாய், “ஒரு வேளை இன்று புலியைப் பார்த்தீங்களோ?” என்று கேட்டாள்.

“ஆமா, பார்த்தேன்! அது ரொம்பப் பொல்லாத புலி” என்றான் சந்திரசூடன்.

“அது பொல்லாத புலி என்று தான் தெரியுமே? எத்தனை ஆடு மாடுகளை அடித்துக் கொன்றிருக்கிறது? இவ்வளவு பயந்த சுபாவம் உள்ளவர்கள் வேட்டைக்கு போயிருக்கக் கூடாது!” என்றாள் மனோன்மணி.

“ஆடு மாடுகளை அடித்துக் கொல்வதோடு அந்தப் புலி நின்றால் பாதகமில்லை. மனிதர்களையும் தாக்க வருகிறது!” என்றான் சந்திரசூடன்.

“மனிதர்களைக் கண்டால், அதுவும் வேட்டையாட போகும் மனிதர்களைக் கண்டால், புலி பிரதட்சணம் செய்து நமஸ்காரம் பண்ணுமா?”

“அப்படிப் பண்ண வேணும் என்று நான் சொல்லவில்லை. எல்லாப் புலிகளையும் போல் மனிதன் மேல் பாய்ந்தால் பரவாயில்லை. இந்தப் புலி கையில் துப்பாக்கி எடுத்துச் சுட வருகிறது!”

புலியைக் கண்ட கிலியினால் இவருக்கு ஏதாவது மூளைக் கோளாறு வந்து விட்டதோ என்ற பாவத்தோடு சந்திரசூடனை மனோன்மணி பார்த்தாள். அப்புறம் வேறு பேச்சு எடுத்தாள். சந்திரசூடனும் பின்னர் மூளைத் தெளிவுடன் பேசினான்.

“நான் இன்றைக்கு மதராஸ் புறப்பட்டுப் போகிறேன். பண்ணையாரின் உயில் எழுதும் காரியமாகத்தான் போகிறேன். திரும்பி வர ஒரு வாரம் ஆகலாம். அதுவரை நீங்கள் ஜாக்கிரதையாயிருக்க வேணும்?” என்றாள்.

“எந்த விஷயத்தில் நான் ஜாக்கிரதையாயிருக்க வேணும்?” என்று கேட்டாள் மனோன்மணி.

“பொதுவாக ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். குழந்தை ராஜ்மோகன் விஷயத்தில் அதிக ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்” என்றாள்.

15

“உண்மைதான், வரவர, மனோகரின் நடத்தையில் முரட்டுத்தனம் அதிகமாகி வருகிறது. அது மட்டும் அல்ல, அவருடன் வரும் சாயபு ஒருநாள் குழந்தையின் அருகில் நின்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். என்னைக் கண்டதும் நகர்ந்து விட்டான். அது வேற எனக்கு கவலையாயிருக்கிறது.”

“நானும் ஒரு நாள் அதைக் கவனித்தேன், சாயபுவிடம் கேட்டு விட்டேன். ‘இந்தக் குழந்தையின் காலில் ஏதோ ஊனம் என்றார்கள். எனக்குக் கொஞ்சம் மலையாள வைத்தியம் வரும். அதனால், காலைக் குணப்படுத்த முடியுமா என்று பார்த்தேன்’ என்றான். அவனுடைய பதில் எனக்குத் திருப்தி அளிக்கவில்லை.”

“மொத்தத்தில் இந்த ஊரில் இருக்கவே எனக்குப் பயமாயிருக்கிறது. பண்ணையாரைப் பார்க்க முடியாது என்றோ, பார்த்துப் புண்ணியமில்லை என்றோ ஏற்பட்டால், இந்த ஊரைவிட்டுச் சீக்கிரத்தில் போய் விட விரும்புகிறேன்” என்றாள் மனோன்மணி.

“அவ்வளவு அவசரப்பட வேண்டாம். கொஞ்சம் பொறுங்கள், நான் திரும்பி வந்ததும் ஒரு முடிவுக்கு வரலாம்” என்றான் சந்திரசூடன்.

இந்தச் சமயத்தில் மனோகரும் வந்து சேர்ந்தான். சந்திரசூடனைப் பார்த்து இடி இடி என்று சிரித்தான். “இத்தனை நாளைக்குப் பிறகு புலி கண்ணுக்குத் தென்பட்டது. அதை அப்படிக் கூச்சல் போட்டு விரட்டி விட்டீரே? அப்பப்பா! என்ன ஓட்டம்! என்ன ஓட்டம்! புலி வேட்டைக்குச் சரியான ஆள் நீர் தான்!” என்று சொல்லி விட்டு மனோகரன் விழுந்து விழுந்து சிரித்தான்.

16

சந்திரசூடன் மதராஸுக்குப் போய்விட்டு ஒரு வாரம் கழித்துப் புன்னைவனத்துக்குத் திரும்பி வந்தான். அதற்கு முதல் நாள் புன்னைவனத்தில் ஒரு விசேஷம் நடந்தது என்று அறிந்தான். மலைமேலுள்ள கோயிலில் இரண்டு நாள் உற்சவம் நடந்தது. அதற்காகத் திரளான ஜனங்கள் மலைமேல் ஏறிச் சென்றார்கள். அக்கம் பக்கத்து ஊர்களிலிருந்தெல்லாம் வந்திருந்தார்கள். புலியைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்தபடியால் அனேகர் தடிகள், ஈட்டிகள் முதலிய ஆயுதங்களை எடுத்துக் கொண்டும் சென்றார்கள். இந்தத் தடபுடலினால் பயந்துதானோ என்னமோ, புலி பட்டப் பகலில் கீழே இறங்கி வந்து விட்டது. நடுச் சாலையில் ஒரு மாட்டின் மீது பாய்ந்து கொன்றது. இந்த விஷயம் பரவி விடவே உற்சவத்துக்கு வந்திருந்த ஜனங்களில் பலர் கூச்சலிட்டுக் கொண்டு அங்கு மிங்கும் ஓடினார்கள். தைரியசாலிகள் தடிக் கம்புகளையும் ஈட்டிகளையும் வேல்களையும் எடுத்துக் கொண்டு புலியைத் தாக்க ஓடி வந்தனர். மனோகரும் துப்பாக்கியை எடுத்து வந்தான். அதற்குள் புலி ‘காபரா’ அடைந்து ஓடிவிட்டது. புலியைப் பார்த்தவர்கள் அதற்கு ஒரு கால் ஊனம் என்றும், நொண்டி நொண்டி நடந்தது என்றும் சொன்னார்கள்.

‘புலி அடித்த மாட்டை அங்கேயே விட்டு வைத்திருந்தால் திரும்பவும் புலி வரும்’ என்று அனுபவசாலிகள் சொன்னதன் பேரில் அப்படியே செய்தார்கள். நாலாபுறத்திலும் காவலும் போட்டிருந்தார்கள்.

இந்த நிலையிலேதான் சந்திரசூடன் திரும்பி வந்தான். ஹோட்டலில் மேற்கூறிய விவரங்களையெல்லாம் தெரிந்து கொண்டான். துப்பாக்கியைக் குண்டு போட்டுக் கெட்டித்துக் கையில் எடுத்துக் கொண்டான். முதலில் மனோன்மணி வீட்டுக்குப் போனான். அவள் பள்ளிக்கூடத்துக்குப் போய் விட்டாள் என்று தெரிந்தது. குழந்தை ராஜ்மோகன் ‘சமர்த்து மாமா’வைப் பார்த்ததில் மகிழ்ச்சி கொண்டான். மழலை மொழிகளில் முதல் நாள் ஊருக்குள் புலி வந்ததைப் பற்றியும் கூறினான்.

“மாமா! எனக்குப் புலி பார்க்க வேணுமென்று ஆசையாயிருக்கிறது. அம்மாவோ வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என்கிறாள். நீங்கள் என்னை அழைத்துக் கொண்டு போய்ப் புலி காட்டறேளா, மாமா!” என்றான்.

“ஆகட்டும், ஆகட்டும்! அந்தப் பொல்லாத புலியைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து உங்கள் வீட்டு வாசலிலேயே கட்டிப் போட்டு விடுகிறேன்” என்று சொன்னான் சந்திரசூடன்.

பிறகு அவன் பண்ணையாரின் வீட்டுக்குப் போனான். அவரிடம் தனியாகச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தான். சென்னையில் பெரிய அனுபவசாலியான வக்கீல்களுடன் கலந்தாலோசித்து எழுதிக் கொண்டு வந்திருந்த உயில் நகலைப் படித்துக் காட்டினான். அவருக்கும் அது திருப்தி அளித்தது. ரிஜிஸ்ட்ரார் ஆபீஸுக்குச் சீக்கிரம் சென்று ரிஜிஸ்டர் பண்ணிவிட்டு வந்துவிடவேண்டுமென்றும் அதுவரையில் யாருக்கும் விஷயம் தெரிய வேண்டாம் என்றும் பண்ணையார் கூறினார்.

17

இதற்குள் ஊரில் ஏதோ அல்லோலகல்லோலம் நடக்கிறது என்பதற்கு அறிகுறியான கோஷங்கள் எழுந்தன. “புலி திரும்பி வந்திருக்கிறதாம்!” என்று வீட்டு வேலைக்காரர்கள் சொன்னார்கள். சின்ன எஜமானர் முன்னமே துப்பாக்கி சகிதமாகப் போயிருப்பதாகவும் தெரிவித்தார்கள். சந்திரசூடனும் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு கிளம்பினான். “ஜாக்கிரதை, ஐயா ஜாக்கிரதை! நம்ம முரட்டுப் பிள்ளையையும் கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள்!” என்று பண்ணையார் சொல்லி அனுப்பினார்.

சந்திரசூடன் பண்ணையார் வீட்டை விட்டு வெளியேறிக் கூச்சல் அதிகமாகக் கேட்ட திசையை நோக்கி விரைந்து சென்றான். கிட்டத்தட்ட தபாலாபீசை நெருங்கிய போது ஒரு விந்தையான காட்சியைக் கண்டான். அது விந்தையான காட்சிதான்; அதே சமயத்தில் மிகப் பயங்கரமான காட்சியும்தான்.

பிரசித்தி பெற்ற ‘புன்னைவனத்துப் புலி’ கடைசியாக அவன் முன்னால் தரிசனம் அளித்தது. புலி மரம் ஏறும் என்று அவன் கேள்விப்பட்டதில்லை. ஆயினும் இந்தப் புலி வளைந்திருந்த ஒரு தென்னை மரத்தின் பாதி உயரம் ஏறி அதைக் கட்டிப் பிடித்துக் கொண்டிருந்தது. ஜனங்கள் கூச்சல் போட்டுக் கொண்டு நாலாபுறமும் துரத்தவே அந்தக் காயம்பட்ட கிழப்புலி வேறு வழி இன்றித் தென்னை மரத்தின் மேல் பாய்ந்து ஏறிக் கொண்டது போலும்! புலி ஏறிய தென்னை மரத்தின் ஒரு பக்கம் மனோகரனும், அவனுடைய உதவியாளனாகிய ஹமீதும் நிற்பதைச் சந்திரசூடன் கண்டான். மனோகரன் துப்பாக்கியைக் கையில் எடுத்துக் குறி பார்த்துக் கொண்டிருந்தான். தென்னை மரத்தின் இன்னொரு பக்கத்தில் – பயங்கரம்! பயங்கரம்! மனோன்மணியின் வீட்டு வாசற்புற மதில்மேல் குழந்தை ராஜ்மோகன் உட்கார்ந்து கொண்டிருந்தான். குழந்தை எப்பேர்ப்பட்ட ஆபத்தான நிலையில் இருக்கிறது என்பது, பார்த்த அதே க்ஷணத்திலேயே சந்திரசூடனுக்குத் தெரிந்து விட்டது. மனோகரின் துப்பாக்கிக் குண்டு புலியின் மேல் பட்டாலும் சரி, அல்லது படாவிட்டாலும் சரி, புலி மறுபக்கமாகப் பாய்ந்தால் குழந்தையின் கதி அதோகதிதான்! இவ்வளவு விஷயங்களையும் சில விநாடி நேரங்களில் மனத்தில் கிரகித்துக் கொண்ட சந்திரசூடன் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து சென்று குழந்தையை அணுகினான். குழந்தை, “மாமா! மாமா! புலி புலி!” என்று உற்சாகமாகக் கூவியதைப் பொருட்படுத்தாமல் குழந்தையை அப்படியே தூக்கி எடுத்துக் கொண்டு மதில் சுவருக்கு அந்தப்புறத்தில் குதித்தான். அவன் குதித்த அதே சமயத்தில் குண்டு ஒன்று அவர்களுக்குச் சமீபமாகத் தலைக்கு மேலே சென்று மனோன்மணியின் வீட்டுச் சுவரில் பாய்ந்தது.

சந்திரசூடன் குழந்தையை அப்படியே கீழே விட்டு விட்டு பக்கத்திலிருந்த மதில் வாசல் வழியாக வெளிவந்தான். புலி இன்னமும் தென்னை மரத்தின் மேல் தான் இருந்தது. சுவர் ஓரமாகக் கிடந்த தன் துப்பாக்கியை எடுத்துக் குறி பார்த்துச் சுட்டான். அவன் சுட்ட குண்டு புலியின் மீது பாய்ந்தது என்று தெரிந்து கொண்டான். உடனடியாக இன்னும் இரண்டு மூன்று துப்பாக்கி வேட்டுச் சத்தமும் கேட்டது. புலி கீழே தடால் என்று விழுந்தது. ஒரு துள்ளுத் துள்ளி எழுந்திருக்கப் பார்த்து மறுபடியும் தள்ளாடி விழுந்தது. பயங்கரமான ஓர் உறுமல் உருமி விட்டுப் பிராணனை விட்டது.

மறுநிமிடம் ஜனக் கூட்டம் புலியைச் சூழ்ந்து கொண்டது. சந்திரசூடனும் புலிக்கு அருகில் சென்றான். அதற்குள் அங்கே வந்திருந்த மனோகரன் இவனைக் கண் பார்வையினாலேயே சுட்டு விடுகிறவனைப் போல் பார்த்து, “செத்த பாம்பை அடிக்கிற சூரர் உம்மைப் போல் கண்டதில்லை. நான் மூன்று குண்டு போட்டுப் புலியைக் கொன்ற பிறகு, நீ எதற்காக அதைச் சுட்டீர்?” என்று கோபமாகக் கேட்டான்.

“அதனால் என்ன! மூன்றோடு, நாலு! செத்த புலியில் பங்கு கேட்க நான் வரவில்லை; புலியைக் கொன்ற பெருமை முழுவதும் தங்களுக்கே இருக்கட்டும்!” என்றான் சந்திரசூடன்.

“ஒருவர் குறி வைத்த வேட்டையின் பேரில் இன்னொருவர் சுடுவது சட்ட விரோதம் தெரியுமா?”

“வேட்டை சம்பந்தமான சட்டம் ஒன்றும் எனக்குத் தெரியாது, ஸார்! தயவு செய்து மன்னிக்கவும்.”

“மன்னிக்கவாவது மண்ணாங்கட்டியாவது? குறி பார்த்துச் சுடவாவது உமக்குத் தெரிகிறதா? மயிரிழை தவறியிருந்தால், குண்டு என் பேரில் அல்லவா பாய்ந்திருக்கும்?”

“அடடா! அப்படியா! ரொம்ப ரொம்ப வருந்துகிறேன். போனது போயிற்று. இனிமேல் நடக்க வேண்டியதைப் பாருங்கள்!” என்று சொல்லிவிட்டுச் சந்திரசூடன் அங்கிருந்து மெள்ள நகர்ந்தான்.

செத்த புலியை ஜனங்கள் ஊர்வலமாக எடுத்துக் கொண்டு போனார்கள். புலியைச் சுட்டுக் கொன்ற வீரன் மனோகரனுக்கு மாலை சூட்டி அவனையும் ஊர்வலத்தின் முன்னணியில் அழைத்துச் சென்றார்கள். தமுக்கு தம்பட்ட முழக்கங்களும், “மனோகரனுக்கு ஜே!” என்ற கோஷமும் வானை அளாவின.

18

புலி ஊர்வலம் அந்த இடத்தை விட்டு நகர்ந்த பிறகு சாயபு மட்டும் தனியாக நிற்பதைச் சந்திரசூடன் பார்த்தான். அவனை அணுகிச் சென்று, “நல்ல வேலை செய்தாய், சாயபு!” என்றான்.

“நல்ல சமயத்திலே வந்து அந்தக் குழந்தையைக் காப்பாற்றினீங்க!” என்றான் சாயபு.

“நானா காப்பாற்றினேன்? நீயல்லவா உன் எஜமானை நல்ல சமயத்தில் அசக்கிவிட்டு குறி தவறச் செய்து காப்பாற்றினாய்?”

அப்துல் ஹமீது அசட்டுச் சிரிப்புச் சிரித்தான்.

“அன்றைக்கு மலைமேல் ‘புலி புலி’ என்று கத்தினாயே? அது எனக்கு எச்சரிக்கை செய்வதறகாகத்தானே? உண்மையைச் சொல்?” என்று சந்திரசூடன் கேட்டான்.

“நம்ம சின்ன எஜமானும் ஒரு சிறு குழந்தைங்க. சில சமயம் விளையாட்டுப் புத்தி வந்திடுங்க! எஜமான் கிட்டச் சொல்லாதேங்க, ஸாமி! நம்ப பிளைப்புப் போயிடப் போவுது!”

“இதோ பார், சாயபு! வெறுமனே வேஷம் போடாதே! நீ பிழைப்புக்காக இவரிடம் வரவில்லை. வேறு காரியார்த்தமாக வந்திருக்கிறாய்? உள்ளதைச் சொல்லு” என்றான் சந்திரசூடன்.

அப்துல் ஹமீது திருதிருவென்று விழித்தான்.

சந்திரசூடன் அவன் காதோடு, “நீ ஸி.ஐ.டி.யைச் சேர்ந்தவன், இல்லையா?” என்றான்.

ஹமீது கண்களை ஒரு சிமிட்டுச் சிமிட்டி, “நீங்க என்னைவிடப் பெரிய ஸி.ஐ.டி.யாக இருக்கீங்களே!” என்றான்.

“உன் பேரில் இன்னொரு குற்றம் இருக்கிறது. ‘தீபம்’ பத்திரிகையில் கதை எழுதிப் பரிசு வாங்கியது நீதானே?”

சாயபு ஆச்சரியக் கடலில் முழுகியவனாய், “உங்களுக்கு எப்படி அதெல்லாம் தெரிந்தது?” என்று கேட்டான்.

“சென்ற வாரம் மதராசுக்குப் போயிருந்தபோது ‘தீபம்’ காரியாலயத்துக்குச் சென்று கொஞ்சம் ரகளை செய்தேன். பத்திரிகாசிரியரைப் பார்த்து, ‘பரிசு பெற்றவரின் புனைப் பெயர் மட்டும் கொடுத்திருக்கிறீர்கள். விலாசம் கொடுக்கவில்லை. உங்கள் பரிசுத்திட்டமே வெறும் மோசடி!’ என்றேன். மனுஷர் பயந்து போய்ப் பரிசு பெற்றவன் பெயர், விலாசத்தைக் கொடுத்ததுடன், உம்முடைய கடித்தத்தையும் காட்டினார்.”

“அடே! நம் குட்டு வெளியாயிட்டே? யாரிடமும் சொல்லாதீங்க! நம்ம தமிழ் நடை எப்படி இருந்ததுங்க?”

“தமிழ் நடை நன்றாய்த்தானிருந்தது. ஆனால் கதை முடிவுதான் மோசம். கலியாணத்தில் கொண்டு போய் முடித்திருக்கக்கூடாதா?”

இச்சமயத்தில் சாயபு, “அதோ!” என்றான். அவன் சுட்டிக் காட்டிய இடத்தில் பண்ணையார் வந்து கொண்டிருந்தார். சந்திரசூடன், “சரி! இன்னொரு தடவை நாம் சந்திக்க வேண்டும், தெரிகிறதா?” என்றான்.

இருவரும் உடனே பிரிந்து போனார்கள்.

19

சந்திரசூடன் நேரே மனோன்மணியின் வீட்டுக்குப் போனான். அதற்குள் மனோமணியும் அங்கே வந்திருந்தாள். அவள் பள்ளிக் கூடத்தின் பலகணி வழியாகப் புலி தென்னை மரத்தில் ஏறியதையும் பிறகு நடந்தவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது அவளுக்கு ஏற்பட்ட திகிலின் படபடப்பு இன்னும் முழுவதும் போகவில்லை. குழந்தையைக் கட்டி அணைத்து ஏதேதோ கேட்டுக் கொண்டிருந்தாள். குழந்தையும் மழலைச் சொல்லில் பதில் சொல்லிக் கொண்டிருந்தது.

சந்திரசூடனைப் பார்த்ததும் மனோன்மணியின் கண்ணில் கண்ணீர் ததும்பியது.

“எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். குழந்தையைக் காப்பாற்றினீர்கள். தங்களுக்கு எந்த விதத்தில் நன்றி செலுத்துவது என்று தெரியவில்லை” என்று தட்டுத் தடுமாறிக் கூறினாள்.

“நன்றி சொல்வதற்குக் காலம் வரும்; அப்போது சொல்லுகிறேன்” என்றான் சந்திரசூடன்.

“குழந்தை இப்போது என்ன சொல்லிக் கொண்டிருந்தான், தெரியுமா? நீங்கள் புலியை இவன் வீட்டுக்குக் கொண்டு வருகிறேன் என்றீர்களாம். அப்படியே செய்து விட்டீர்களாம். அந்த முரட்டு மாமா அநியாயமாய்ச் சுட்டுக் கொன்று விட்டாராம்!”

இதற்குள் ராஜ்மோகன், “மாமா! எனக்கு ஒரு புலியும் துப்பாக்கியும் வாங்கி தரேளா?” என்று கேட்டான்.

“ஆகட்டும் பாப்பா! உனக்குப் புலியைக் கண்டால் பயமாயில்லையா?” என்றான் சந்திரசூடன்.

“எனக்குப் புலிகிட்டப் பயமில்லை. பூனை கிட்டத்தான் பயம்!” என்றான் ராஜ்மோகன்.

“மலைமேல் உங்களைத் துப்பாக்கியால் சுடப் பார்த்தது என்கிறீர்களே? அதன் பொருள் இன்று தான் விளங்குற்று! என்னை ஜாக்கிரதையாயிருக்கும்படி சொன்னதன் காரணமும் இப்போதுதான் புரிகிறது!” என்றாள் மனோன்மணி.

“ஆமாம்; இன்னும் இரண்டு மூன்று நாள் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். உயில் தயாராகி விட்டது. ரிஜிஸ்டராவது தான் பாக்கி. உயில் ரிஜிஸ்ராகி இந்தப் பையனை அவனுடைய தாத்தாவிடம் சேர்ப்பித்து விட்டால்…”

“அது முடியும் என்று நினைக்கிறீர்களா?”

“தாங்களும் கொஞ்சம் ஒத்துழைத்தால் முடியும்?”

“ஐயோ! அப்புறம் நான் என்ன செய்வேன்?”

“செய்வது என்ன? யாராவது மனசுக்குப் பிடித்தவனைக் கலியாணம் செய்து கொண்டு பிறகு எப்போதும் ஆனந்தமாக வாழ்ந்திருப்பது!”

மனோன்மணி தயங்கித் தயங்கி, “தாங்கள் இவ்வளவு ஒத்தாசை செய்திருக்கிறீர்கள். ஆனால் தங்களிடம் நான் முழு உண்மையையும் சொல்லவில்லை!” என்றாள்.

“ஓஹோ! உண்மையில் இன்னும் கொஞ்சம் பாக்கி வைத்திருக்கிறீர்களா?”

இச்சமயம் வாசலில் ஏதோ சத்தம் கேட்டது. இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். அதிசயத்திலெல்லாம் அதிசயம்! பண்ணையார் சங்கரசேதுராயர் வந்து கொண்டிருந்தார்.

மனோன்மணி பதறிக் கொண்டு எழுந்திருக்க முயன்றாள். குழந்தை ராஜ்மோகன் அவளைக் கட்டிக் கொண்டு எழுந்திருப்பதைத் தடை செய்ய முயன்றான்.

“உட்காரு, அம்மா, உட்காரு! இந்தக் குழந்தை இன்று பிழைத்தது புனர்ஜன்மம்!” என்றார் பண்ணையார்.

“பல விதத்தில் அதற்கு இன்றைக்குப் புனர்ஜன்மந்தான்! உட்காருங்கள்!” என்று சந்திரசூடன் நாற்காலியைக் காட்டி உபசரித்தான்.

20

பண்ணையார் உட்கார்ந்து, “வீதி முனையில் நின்று நானும் பார்த்துக் கொண்டிருந்தேன்! கரணம் தப்பினால் மரணம் என்று இருந்தது. புலி இந்த வீட்டுப் பக்கம் பாய்ந்திருந்தால்! அல்லது துப்பாக்கிக் குண்டு தவறிப் பட்டிருந்தால்…? ஓய்! உம்மை என்னவோ என்று நினைத்தேன். வெகு தைரியசாலி! நீர் அப்படிப் பாய்ந்து ஓடிக் குழந்தையை எடுத்திராவிட்டால்…?” என்றான்.

“எல்லாம் கடவுளுடைய செயல்! நம்மால் என்ன இருக்கிறது?” என்றான் சந்திரசூடன்.

“கடவுளும் மனித ரூபத்தில்தானே காரியம் செய்ய வேண்டியிருக்கிறது? நானும் என் மனையாளும் இந்தச் சாலையில் உலாவ வரும் போதெல்லாம் இந்தக் குழந்தையைப் பார்ப்போம். ‘இம்மாதிரி ஒரு குழந்தை நம் வீட்டில் வளரக் கூடாதா?’ என்று என் மனையாள் ஜபம் செய்வாள்.”

சந்திரசூடன், “இந்தக் குழந்தையையே வளர்த்தால் போகிறது” என்று முணுமுணுத்தான்.

“என்ன சொன்னீர்?” என்று கேட்டார் பண்ணையார்.

“ஒன்றுமில்லை. உலகத்தில் வேறு எந்தப் பாக்கியம் இருந்தாலும் குழந்தைப் பாக்கியத்துக்கு இணையாகாது என்றேன்.”

“நூற்றில் ஒரு வார்த்தை! பாப்பா! இங்கே வா! என்னிடம் வா! தாத்தாவைக் கண்டால் உனக்குப் பயமாயிருக்கிறதா” என்றார் பண்ணையார்.

“அவன் புலியைக் கண்டே பயப்படவில்லையே?” என்று சொன்னான் சந்திரசூடன்.

“எனக்குப் பூனைகிட்டத்தான் பயம். புலி கிட்டப் பயமில்லை” என்று சொன்னான் ராஜ்மோகன்.

“உனக்குப் புலி மொம்மை வாங்கித் தருகிறேன். என்னிடத்தில் வா” என்றார் பண்ணையார்.

ராஜ்மோகன் எழுந்து நடக்கப் பார்த்தான். மனோன்மணி அவனைத் தூக்கிக் கொண்டு வந்து பண்ணையார் அருகில் விட்டாள்.

“குழந்தை ஒரு கால் சற்றுக் குட்டை; நடப்பதற்குக் கொஞ்சம் கஷ்டப்படும்” என்றான் சந்திரசூடன்.

“அடடா! அப்படியா! நானும் என் மனையாளும் இந்தப் பக்கம் வரும்போதெல்லாம் இந்தக் குழந்தை எப்போதும் கை வண்டியிலேயே உட்கார்ந்திருக்கும். அதன் காரணம் இப்போதுதான் புரிகிறது” என்றார் பண்ணையார்.

“கைவண்டியில் உட்கார வைத்து பெல்ட்டினால் கட்டிப் போட்டு விட்டு இந்த அம்மாள் காரியத்தைப் பார்ப்பாள். இல்லாவிட்டால் ஒரு நிமிஷம் சும்மா இருக்க மாட்டான். பாருங்கள்! இன்றைக்குக் கொஞ்சம் கவனிக்காமற் போகவே, எப்படியோ மதில் மேல் ஏறி உட்கார்ந்து விட்டான்.” பண்ணையார் குழந்தையைத் தட்டிக் கொடுத்து, “ஜாக்கிரதையாய்க் குழந்தையைப் பார்த்துக் கொள், அம்மா. திருஷ்டி கழித்துப் போடு” என்றார்.

மனோன்மணி பண்ணையாரிடமிருந்து குழந்தையை வாங்கிக் கொண்டாள்.

பண்ணையார் சந்திரசூடனைப் பார்த்து, “நான் போய் விட்டு நாளைக்கு என் மனையாளையும் அழைத்துக் கொண்டு வருகிறேன். அவளும் குழந்தையைப் பார்க்க ஆசைப்படுவாள், நீங்கள் ஏதோ முக்கியமான காரியத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தீர்கள் போலிருக்கிறது!” என்று சொல்லி விட்டு எழுந்தார்.

“அப்படி முக்கியமான விஷயம் ஒன்றுமில்லை, கலியாண விஷயந்தான்!” என்றான் சந்திரசூடன்.

“கலியாணமா? யாருக்குக் கல்யாணம்?”

“இன்னும் நிச்சயமாகவில்லை. பேச்சுத்தான் நடந்து கொண்டிருக்கிறது. எனக்குக் கலியாணம் ஆகவில்லையா என்று நீங்கள் கேட்டீர்கள் அல்லவா? ‘தகுந்த மணப்பெண் கிடைக்கவில்லை’ என்று பதில் சொன்னேன். மிஸ் மனோன்மணியைப் பார்த்த பிறகு அந்த அபிப்பிராயம் மாறி விட்டது.”

21

“மிஸ் மனோன்மணியா?” என்று பண்ணையார் சிறிது வியப்புடனே கேட்டு விட்டுக் குழந்தையைப் பார்த்தார். நல்ல வேளையாக, குழந்தை அதற்குள் மனோன்மணியின் மடியில் படுத்துத் தூங்கிப் போய் விட்டது.

“அப்படித்தான் நானும் முதலில் நினைத்தேன். ஆனால் குழந்தை இந்த அம்மாளுடைய சொந்தக் குழந்தை அல்ல. அநாதைக் குழந்தை. அதாவது ஒரு சிநேகிதியின் குழந்தை…”

பண்ணையார் மேலும் ஆச்சரியப்பட்டு, “அப்படியா? இந்தக் குழந்தைக்குத் தாய் தகப்பன் இரண்டு பேரும் இல்லையா?” என்று கேட்டார்.

“இல்லையென்று சொல்ல முடியாது. இந்த அம்மாளே தாயாராகவும், தகப்பனாராகவும் இருந்து குழந்தையை வளர்த்து வருகிறாள்…” என்றான் சந்திரசூடன்.

பண்ணையார் திடீரென்று ஒரு முடிவுக்கு வந்தவரைப் போல், “நான் சொல்கிறதைக் கேளுங்கள். இந்தக் குழந்தையை என்னிடம் ஒப்புவித்துவிடுங்கள்” என்றார்.

“அதற்கென்ன நாட்டில் எத்தனையோ அநாதைக் குழந்தைகள் இருக்கின்றன. தங்களுக்கு முன்னமே சொன்னேன், தங்கள் சொத்தில் ஒரு பாதியையாவது அநாதை ஆசிரமங்களுக்கு எழுதிவைக்கும்படி. நூறு குழந்தைகள் வேணுமானாலும்…”

“நூறு குழந்தைகள் இருக்கட்டுங்காணும்! இந்தக் குழந்தையைக் கொடுப்பதாயிருந்தால் சொல்லுங்கள். எனக்கும் என் மனையாளுக்கும் ரொம்பச் சந்தோஷமாயிருக்கும்! கால் ஊனத்துக்குச் சிகிச்சை செய்து, எத்தனை பணம் வேணுமானாலும் செலவழித்துச் சரிப்படுத்துகிறோம். உங்கள் கலியாணத்துக்கும் ஒரு தடை இல்லாமற் போகும்.”

“எங்கள் கலியாணத்துக்கு இந்தக் குழந்தையினால் தடை ஒன்றுமில்லை. வேறு தடைகள் இருக்கின்றன. இந்த அம்மாள் ஒரு கிறிஸ்துவப் பெண்.”

“இருந்தால் என்ன? சாதியாவது மதமாவது? குணந்தான் பிரதானம். இந்த அனாதைக் குழந்தையை இவ்வளவு அருமையாக இந்தப் பெண் வளர்ந்து வருகிறாளே? வேறு யாருக்கு இப்பேர்ப்பட்ட தயாள குணம் இருக்கும்? இவள் மாதிரி ஒரு பெண்ணை மனைவியாகப் பெறுவதற்கு நீர் ஏழு ஜன்மத்தில் தவம் செய்திருக்க வேண்டும். தெரிகிறதா? எல்லாவற்றுக்கும் சாயங்காலம் நம் வீட்டுக்கு வாரும். அப்போது பேசிக் கொள்ளலாம்!” என்று கூறிவிட்டுப் பண்ணையார் நடையைக் கட்டினார்.

அவர் போன பிறகு சந்திரசூடன், “தெய்வ சங்கற்பம் எப்படி இருக்கிறது, பார்த்தீங்களா? பண்ணையாரை நேரே இங்கு கொண்டு வந்து சேர்த்து விட்டது!” என்றான்.

மனோன்மணியின் கண்களிலிருந்து கண்ணீர் பெருகிக் கொண்டிருந்தது. “எனக்குச் சந்தோஷப்படுவதா, துக்கப்படுவதா என்று தெரியவில்லை” என்று விம்மினாள்.

“பெண்கள் சமாசாரமே இப்படித்தான்! எதற்காகத் துக்கப்பட வேண்டும்? துக்கப்படும்படி என்ன நேர்ந்து விட்டது? பேரனைப் பாட்டனிடம் சேர்க்க வேண்டும் என்கிறீர்கள். அதற்கு இதோ வழி பிறந்து விட்டது. தாங்கள் இஷ்டப்பட்டால், பண்ணையார் சொன்னது போல், ‘மிஸ்’ பட்டத்தை நீக்கிக் கொண்டு ‘மிஸ்ஸஸ்’ ஆகிவிடலாம். கையில் விண்ணப்பத்துடன் காத்திருக்கிறேன்..!” என்றான் சந்திரசூடன்.

“ஐயா! தயவு செய்து அந்தப் பேச்சுப் பேசாதீர்கள். தாங்கள் எவ்வளவோ எனக்கு உதவி செய்திருக்கிறீர்கள். இனியும் தங்களை ஏமாற்றினால், பெரும் பாவியாவேன். நான் இந்தக் குழந்தையின் வளர்ப்புத் தாயார் அல்ல; பத்துமாதம் வயிற்றில் சுமந்து பெற்ற சொந்தத் தாயார்தான்!”

“அட கடவுளே! அப்படியானால் குழந்தை பண்ணையாரின் பேரன் அல்லவா? அது பொய்யா..?”

“பண்ணையாரின் பேரன் தான் இவன்! பண்ணையார் மகனைக் கலியாணம் செய்து கொண்ட பாவி நானே தான். அரண்மனையில் வாழ வேண்டியவரை ஆண்டியாக்கி, கடைசியில் அவருக்கு யமனாக முடிந்தவளும் இந்த மகா பாவி தான்!” என்று கூறிவிட்டு மனோன்மணி விம்மி அழுதாள்.

மனோன்மணியின் விம்மல் நிற்கும் வரையில் சந்திரசூடன் காத்துக் கொண்டிருந்தான்.

பிறகு, “தாங்கள் உண்மையை முழுவதும் இப்போதாவது சொன்னது பற்றிச் சந்தோஷம், மொத்தத்தில் பார்த்தால், வருத்தப்படுவதற்கு எதுவும் இல்லை. பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல் ஆயிற்று. பண்ணையாருக்குத் தங்களை மருமகளாக ஏற்றுக் கொள்வதிலே கூட இப்போது ஆட்சேபம் அதிகமாயிராது…” என்றான்.

“கூடவே கூடாது! தங்கள் தலையின் மேல் ஆணை! அதை மட்டும் அவரிடம் சொல்ல வேண்டாம்; இந்தக் குழந்தையைச் சேர்ப்பித்தால் போதும்!” என்றாள்.

“சரி, சரி! தங்கள் இஷ்டம் எப்படியோ அப்படியே செய்வோம். முதலில் உயில் ரிஜிஸ்டர் ஆகட்டும். ஆனால் ஒன்று மட்டும் சொல்லி வைக்கிறேன். எனக்குச் சாதி விட்டுச் சாதி கலியாணம் செய்வதிலும் ஆட்சேபம் இல்லை, விதவா விவாகத்திலும் ஆட்சேபம் கிடையாது!” என்று சொல்லி விட்டுப் பதிலுக்குக் காத்திராமல் சந்திரசூடன் வெளியேறினான்.

22

பிறகு காரியங்கள் துரிதமாக நடைபெற்றன. சந்திரசூடன் மறுநாள் பண்ணையார் வீட்டுக்குப் போயிருந்த போது மனோகரன் அவனோடு வேண்டுமென்றே சண்டை பிடித்தான்.

“ஏதோ உயில் தயாராகிறதாமே! அது என்ன சமாசாரம்?” என்று கேட்டான்.

“என்னைக் கேட்கிறாயே! உன் தகப்பனாரைக் கேட்டுத் தெரிந்து கொள்” என்றான் சந்திரசூடன்.

அதன் பேரில் மனோகரன் சந்திரசூடனைக் கன்னாபின்னாவென்று திட்டி விட்டு, “ஜாக்கிரதை! நான் வலுச்சண்டைக்குப் போக மாட்டேன்; வந்த சண்டையையும் விடமாட்டேன். என் வழியில் குறுக்கே வருகிறவர்களை இலேசில் விடமாட்டேன். உண்டு இல்லை என்று பார்த்து விடுவேன்” என்று பயமுறுத்தினான்.

இவ்வளவையும் சந்திரசூடன் பொறுத்துக் கொண்டு காரியத்திலேயே கண்ணாயிருந்தான். பண்ணையாரின் சொத்துக்களை அவருடைய மகனின் சந்ததிகளுக்கு உயில் எழுதுவிக்கச் செய்வது, பேரனைப் பண்ணையாரிடம் சேர்ப்பித்து விடுவது ஆகிய இரு நோக்கங்களுடன் அவன் வேலை செய்தான்.

பண்ணையார் தமது பாரியாளையும் அழைத்துக் கொண்டு இன்னொரு தடவை மனோன்மணியின் வீட்டுக்கு வந்தார். அநாதைக் குழந்தையைத் தங்களிடம் ஒப்புவித்துவிடும்படி மனோன்மணியைக் கேட்டுக் கொண்டார். யோசித்துப் பதில் சொல்லும்படி கூறி விட்டுப் போய்விட்டார்.

மனோன்மணிக்கு அவளுடைய நோக்கம் நிறைவேறும் காலம் நெருங்க நெருங்கப் பீதியும் அதிகரித்து வந்தது; “குழந்தையைப் பிரிந்திருக்கவும் என்னால் முடியாது; என்னை அவர்களுடைய மருமகள் என்று தெரிவித்துக் கொள்ளவும் முடியாது” என்று பிடிவாதமாகச் சொன்னாள். சந்திரசூடனிடம், “உங்களுக்குக் கோடி புண்ணியம் உண்டு. உங்களுடைய முயற்சியை நிறுத்தி விடுங்கள். இல்லாவிடில் நான் இந்த ஊரை விட்டே போய் விடுவேன்!” என்று வற்புறுத்தினாள்.

“இன்னும் ஒரு நாள், இருபத்து நாலு மணி நேரம் பொறுத்துக் கொள்ளுங்கள். நாளைக்கு உயில் ரிஜிஸ்டர் ஆகிவிடும். அப்புறம் தீர யோசித்து உசிதப் படி முடிவு செய்து கொள்ளலாம்” என்றான் சந்திரசூடன்.

அந்த ஒரு நாள் – இருபத்து நாலு மணி நேரத்திற்குள் – மிகப் பயங்கர சம்பவங்கள் நிகழ்ந்து விட்டன.

23

அன்றிரவு மனோன்மணி குடியிருந்த வீட்டுக் கொல்லைப் பக்கம் தீப்பிடித்துக் கொண்டது. தீ வேகமாக பரவி முன் பக்கம் வந்தது. தூங்கிக் கொண்டிருந்த மனோன்மணி திடுக்கிட்டு விழித்தெழுந்தாள். விஷயம் இன்னதென்று தெரிந்து கொள்வதற்கே சிறிது நேரமாகி விட்டது. பிறகு கிழவனையும், கிழவியையும் தட்டி எழுப்பி விட்டாள். அவர்களை முடிந்தவரையில் சாமான்களைக் கொண்டு வந்து சேர்க்கும்படி சொல்லி விட்டுக் குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டு வாசற்பக்கம் ஓடினாள். நடுங்கிய கையினால் வாசற் கதவின் உள் தாளைக் கஷ்டப்பட்டுத் திறந்தாள். பிறகு கதவைத் திறக்க முயன்றாள்; ஆனால் கதவு திறக்கவில்லை. இடித்தாள்; உதைத்தாள்; பிறாண்டினாள்! அப்படியும் கதவு திறக்கவில்லை, வெளியில் யாரோ கதவைப் பூட்டியிருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அவளுடைய பீதி அதிகமாயிற்று. கொல்லைப் புறமாக ஓடினாள். அங்கே நன்றாய்த் தீப்பிடித்துக் குப்குப் என்று எரிந்து கொண்டிருந்தது. பின்னர், மனோன்மணி பித்துப் பிடித்தவள் போல கையில் குழந்தையைத் தூக்கிக் கொண்டு தலைவிரி கோலமாய் அலறிக் கொண்டு முன்னும் பின்னும் ஓடிக் கொண்டிருந்தாள். அந்த நிலையில் திடீரென்று வேட்டைக்கார சாயபு அவள் முன் தோன்றி, “குழந்தையை இப்படிக் கொடு!” என்றான். மனோன்மணி மேலும் வெறி கொண்டவளாய், “மாட்டேன்! மாட்டேன்!” என்றாள், சாயபு குழந்தையைப் பலாத்காரமாய்ப் பிடுங்கிக் கொண்டு ஓடினான். மனோன்மணி ஜன்னல் பக்கம் வந்து ‘ஓ’ என்று அலறினாள்.

சற்று நேரத்துக்கெல்லாம் வாசற் கதவை யாரோ தடால் தடால் என்று மோதும் சத்தம் கேட்டது. பிறகு ஏதோ பிளந்தது, கதவு திறந்தது. “ஐயோ! குழந்தை!” என்று அலறிக் கொண்டு மனோன்மணி வெளியே ஓடிவந்தாள். சாயபுவையும் சந்திரசூடனையும் ஏக காலத்தில் பார்த்தாள். “சாயபு கொன்று விட்டான்!” என்று கத்தினாள். “அதோ குழந்தை பத்திரமாயிருக்கிறது!” என்றான் சாயபு. மனோன்மணி அந்தத் திசையை நோக்கி ஓடினாள். ஆம், குழந்தை பத்திரமாயிருந்தது. குழந்தையை வாரி எடுத்து மடியில் போட்டுக் கொண்டு அழுவதும் சிரிப்பதுமாயிருந்தாள். குழந்தை சிறிது அழுதுவிட்டு அப்படியே தூங்கிப் போய்விட்டது.

இதற்குள் பக்கத்திலிருந்த வீடுகளுக்கும் தீ பரவி விட்டது. ஊர் ஜனங்கள் எல்லாரும் வந்து கூடி விட்டார்கள். சிலர் தீயை அணைக்க முயன்றார்கள்; சிலர் வெறுங் கூச்சல் போட்டார்கள்.

சிறிது நேரத்துக்கெல்லாம் சந்திரசூடன் மனோன்மணி இருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தான்.

மனோன்மணி “நான் சந்தேகப்பட்டது சரியாய்ப் போய்விட்டது. சாயபு வீட்டுக்குத் தீ வைத்தான். சாயபு என் குழந்தையைக் கொல்லப் பார்த்தான்!” என்றான்.

“இல்லை அம்மா, இல்லை – சாயபுதான் உன் குழந்தையையும் உன்னையும் காப்பாற்றினவன். நாங்கள் எல்லோரும் கடைசியில் தான் வந்து சேர்ந்தோம்” என்றான் சந்திரசூடன்.

எவ்வளவு சொல்லியும் மனோன்மணி இதை நம்பவில்லை.

“எது எப்படியிருந்தாலும் சரி, நான் உடனே இந்த ஊரை விட்டுப் போய் விட வேண்டும்” என்றாள்.

சந்திரசூடன் அவளுக்கு எவ்வளவோ சமாதானம் சொல்லிப் பார்த்தான்; மனோன்மணி கேட்கவில்லை.

பண்ணையாரே தம் வீடுகளில் தீப்பிடித்த செய்தி அறிந்து வந்து பார்த்தார். மனோன்மணியையும் குழந்தையையும் தம் சொந்த வீட்டில் வந்து தங்கியிருக்கும்படி சொன்னார்.

அதையும் அவள் கேட்கவில்லை.

வெறி பிடித்தவள் போல், “ஊரை விட்டுக் கிளம்பி விட வேண்டும்” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

மறுநாள் பொழுது விடிந்ததும் அவ்விதமே முதல் பஸ்ஸில் ஏறிச் சென்னைப் பட்டணத்துக்குப் போய்விட்டாள்.

சந்திரசூடன் பிறகு இரண்டு மூன்று நாள் புன்னைவனத்தில் இருந்தான். உயிலும் ரிஜிஸ்டர் ஆயிற்று.

இடையில் மனோகரனுக்கும் சந்திரசூடனுக்கும் ஒரு நாள் அடிதடி சண்டை நடந்தது. அப்துல் ஹமீது குறுக்கிட்டு அங்கே கொலை நிகழாமல் தடுத்தான்.

ஆனால் மனோகரனைக் கொலை வழக்கிலிருந்து தப்புவிக்க முடியவில்லை. பெங்களூரில் நடந்த ஒரு கொலை சம்பந்தமாக இரகசியப் போலீஸ் விசாரணை நடந்து கொண்டிருந்தது. கடைசியில் பெங்களூர் போலீஸாருக்குத் தடயம் கிடைத்தது. அவர்கள் வந்து மனோகரனைக் கைது செய்து கொண்டு போனார்கள்.

அன்றிரவு வீட்டுக்குத் தீ வைத்தவன் மனோகரனாய்த்தானிருக்க வேண்டும் என்று பண்ணையாருக்கு நிச்சயமாயிருந்தது. அவன் இரவில் திருட்டுத்தனமாக எழுந்து போனதையும், பிறகு திரும்பி வந்து படுத்ததையும் அவர் கவனித்திருந்தார்.

ஆகையினால் அவன் போனதே நல்லதாய்ப் போயிற்று என்று முடிவு செய்து கொண்டார்.

தம்மகனுடைய மனைவியைப் பற்றியும், அவர்களுக்குச் சந்ததி உண்டா என்பது பற்றியும் கூடிய சீக்கிரம் விசாரித்துத் தெரிவிக்கும்படி சந்திரசூடனிடம் கேட்டுக் கொண்டார்.

சந்திரசூடன் இது விஷயமாக ஸி.ஐ.டி. சாயபுவின் உதவியைக் கோரினான். “அதற்கென்ன பார்க்கலாம். சென்னையில் பின்னர் சந்திப்போம்” என்று சொல்லிவிட்டு அப்துல் ஹமீது சாயபு விடை பெற்றுச் சென்றான்.

பிறகு சந்திரசூடனும் சென்னைக்கு வந்து சேர்ந்தான். சில நாளைக்குப் பிறகு மனோன்மணியிடம் கலியாணப் பேச்சை எடுத்தான். பெண்கள் தனிமையாக வாழ்வது இந்த பொல்லாத உலகத்தில் எவ்வளவு கஷ்டம் என்பதை உணர்ந்திருந்த மனோன்மணியும் ஒரு மாதிரி மனதைத் திடப்படுத்திக் கொண்டு கலியாணத்துக்குச் சம்மதித்தாள்.

24

சந்திரசூடன் மேற்கூறிய விவரங்களையெல்லாம், கூறினான். “திருமணத்துக்கு அவசியம் வந்து சேர வேண்டும்” என்று வற்புறுத்தி என்னை அழைத்து விட்டுப் போனான். நானும் கலியாணத்துக்குப் போவதாகத்தான் இருந்தேன்.

இந்த நிலைமையில் ஒரு நாள், திருமணம் வைத்திருந்த தேதிக்கு இரண்டு நாளைக்கு முன்னால், “எதிர்பாராத காரணங்களினால் அழைப்பில் குறிப்பிட்டபடி என் திருமணம் நடைபெறாது, சிரமத்துக்கு மன்னிக்கவும்” என்று சந்திரசூடன் கையொப்பமிட்ட கடிதம் வந்தது. எனக்கு எப்படி இருந்திருக்குமென்று நேயர்களே ஊகித்துக் கொள்ளலாம்.

மறுபடியும் சந்திரசூடனைக் கண்டு பிடித்து, “எனப்பா இப்படி ஏமாற்றி விட்டாயே! ஏன் கலியாணம் நின்று போயிற்று!” என்று கேட்டேன்.

“எல்லாம் அந்த சி.ஐ.டி சாயபுவினால் வந்த வினை!” என்றான் சந்திரசூடன்.

“முன்னால் அந்தப் பாதிக் கதையின் பேரில் பழியைப் போட்டாய். இப்போது சாயபுவின் பேரில் பழிபோடுகிறாயே!” என்று கேட்டேன்.

சந்திரசூடன் பின்வருமாறு கதை முடிவைக் கூறினான்:

சென்னைக்கு வந்த பிறகு சந்திரசூடன் பல முறை அந்த ஸி.ஐ.டி. சாயபுவைச் சந்திப்பதற்கு முயற்சி செய்தான்; அவன் அகப்படவேயில்லை. பின்னர் கலியாணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய தொடங்கினான்.

கலியாணத் தேதிக்கு நாலு நாளைக்கு முன்பு ஹமீது அவனைத் தேடிக் கொண்டு வந்தான்.

“அந்தப் பெண்ணுக்கும் அவள் குழந்தைக்கும் நீர் உதவி செய்ததெல்லாம் சரிதான். ஆனால் இப்போது செய்ய உத்தேசிக்கும் காரியம் சரியில்லை” என்றான்.

“ஏன்! என்ன தவறு? விதவா விவாகத்தை இப்போது எங்கள் ஹிந்து சமூகம் கூட ஒப்புக் கொள்கிறதே! உமக்கு என்ன ஆட்சேபணை!” என்றான் சந்திரசூடன்.

“அவள் விதவை என்பதற்கு என்ன ருசு! புருஷன் ஒரு வேளை உயிரோடிருந்தால்…!”

“அது யோசிக்க வேண்டிய விஷயந்தான். புருஷன் உயிரோடிருந்தால் மறு கலியாணங்கூடச் சட்டப்படி செல்லாது! ஆனால் விமான விபத்தைப் பற்றித்தான் அப்போதே எல்லாப் பத்திரிகையிலும் விவரமாக வெளியாகி இருக்கிறதே!”

25

“விமான விபத்தில் எல்லோரும் இறந்துதான் போனார்கள் என்பதற்கு என்ன ஆதாரம்? இவள் புருஷன் எங்கேயாவது திண்டாடி விட்டு வந்து சேர்ந்தால்…”

“ஆமாம்! எனக்குக் கூட அதைப் பற்றிச் சிறிது கவலையாகத்தானிருக்கிறது. முன்யோசனை இல்லாமல் ஏற்பாடு செய்துவிட்டேன்.”

“இப்போது என்ன மோசம்? ஏற்பாட்டை ரத்துசெய்து விட்டால் போகிறது! அல்லது தள்ளியாவது வைக்கலாமே? புருஷன் நிச்சயமாய் செத்து தொலைந்து போனான் என்று தெரிந்த பிறகு கலியாணத்தை வைத்துக் கொண்டால் போகிறது!”

“நானே போய் அவளிடம் சொல்ல வெட்கமாயிருக்கிறது. எனக்காக நீர் போய் இந்த விஷயத்தைச் சொன்னால் நல்லது. நானும் அச்சமயம் வந்து சேர்ந்து கொள்கிறேன்.”

“அந்தப் பெண்பிள்ளை நான் அவள் குழந்தையைக் கொல்லப் பார்த்ததாகவல்லவா எண்ணிக் கொண்டிருக்கிறாள்! என்னைப் பார்த்ததும் எரிந்து விழுவாளே!”

“அதையெல்லாம் நான் சரிப்படுத்தி விட்டேன். நீர் தான் அவளுடைய குழந்தையைக் காப்பாற்றியவர் என்று காரண காரியத்துடன் எடுத்துச் சொல்லி அவளும் ஒப்புக் கொண்டாள். உமக்கு நன்றி செலுத்துவதற்காகக் காத்திருக்கிறாள். நீர்தான் எனக்காகப் போய் கலியாணத்தைத் தள்ளிப் போடும்படி சொல்ல வேண்டும். காரணத்தையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.”

“அப்படியானால், பார்க்கிறேன்” என்று சொல்லி விட்டு அப்துல் ஹமீது மனோன்மணியின் வீட்டுக்குப் போனான். சற்று பின்னால் சந்திரசூடனும் சென்றான்.

சாயபுவைப் பார்த்ததும் மனோன்மணி மகிழ்ச்சி அடைந்து குழந்தையை இரு முறையும் காப்பாற்றியதற்காகப் பலமுறை அவனுக்கு நன்றி கூறினாள்.

பிறகு அப்துல் ஹமீது ஒருவாறு அவளுடைய கலியாணத்தைப் பற்றி பிரஸ்தாபித்தான்.

“தனியாக வாழ்க்கை நடத்துவது இந்த உலகில் மிகவும் கஷ்டமென்று தெரிந்து கொண்டேன். அதற்காகத்தான் மறுமணத்துக்குச் சம்மதித்தேன். இந்தக் குழந்தையின் பேரிலும் அவர் ரொம்ப ஆசையாயிருக்கிறார்!” என்றாள் மனோன்மணி.

“மறுமணம் என்பது நிச்சயமாயிருந்தால் சரிதான், ஆனால் உங்கள் முதல் புருஷன் ஒரு வேளை உயிரோடிருந்தால்…?” என்று ஹமீது கூறியதும், மனோன்மணிக்குத் தாங்க முடியாத துக்கம் மீறிக் கொண்டு வந்து விட்டது. கண்ணீர் பெருகியது.

உடனே அவள் தேம்பித் தேம்பி அழத் தொடங்கி விட்டாள்.

அந்தச் சமயத்தில் சந்திரசூடன் வந்து சேர்ந்தான்.

“சாயபு! இது என்ன?” என்று கோபமாகக் கேட்டான்.

மனோன்மணி விம்மலை அடக்கிக் கொண்டு, “அவர் மீது குற்றம் ஒன்றுமில்லை, ராஜ்மோகனுடைய தகப்பனாரை ஞாபகப்படுத்தினார். எனக்குத் தாங்க முடியாமல் அழுகை வந்துவிட்டது” என்று சொன்னாள்.

“இப்போது எதற்காக அதை ஞாபகப்படுத்தினீர்?” என்று சந்திரசூடன் கேட்டான்.

“அவர் செத்துப் போனார் என்பது நிச்சயந்தானா என்று கேட்டேன். அதற்கு இந்த அம்மாள் இவ்வளவு அதிகமாய் அழுது விட்டாள்” என்றான் ஹமீது.

“நீர்தான் ஸி.ஐ.டி.காரராயிற்றே! தர்மராஜன் உயிரோடு இருக்கிறானா, இல்லையா என்று கண்டுபிடித்துச் சொல்லுமே?” என்றான் சந்திரசூடன்.

“அதற்கென்ன? ஒரு வருஷம் அவகாசம் கொடுத்தால், கண்டுபிடித்துச் சொல்கிறேன்.” என்றான் ஹமீது.

“நல்ல வேளை! ஒரு வருஷம் என்னத்திற்கு ஒரு நிமிஷம் போதாதா வேஷத்தைக் கலைப்பதற்கு?” என்று சொல்லிக் கொண்டே, சந்திரசூடன் அப்துல் ஹமீதின் தலைத் தொப்பியையும் முகத்தின் துணிக் கட்டையும் எடுத்து எறிந்தான்.

மனோன்மணி, “ஓ!” என்று அலறிக் கொண்டு போய்த் தர்மராஜனுடைய காலின் கீழ் விழுந்தாள்!
முடிவுரை

மலை உச்சியில் நடுக்காட்டில் விழுந்து எரிந்து போன விமனத்திலிருந்து தர்மராஜன் ஒருவன் மட்டும் எப்படி உயிர் பிழைத்து வந்தான், அவன் முகமெல்லாம் எப்படி எரிந்து தீய்ந்து கோரமாகப் போயிருந்தது, வெகுநாள் காட்டில் கஷ்டப்பட்டுப் பிரயாணம் செய்து எப்படிப் புன்னை வனத்தை வந்து அடைந்தான் என்பதையெல்லாம் சந்திரசூடன் விவரமாக எனக்குக் கூறினான். இந்தக் கதைக்குச் சம்பந்தமில்லாத படியால் அவற்றை இங்கே நான் விவரிக்கவில்லை.

“இவ்வளவு விவரம் சொன்னவன், ஒரு விஷயம் மட்டும் கூறாமல் விட்டு விட்டாயே? அந்தக் குடும்பத்தாரின் விஷயத்தில் உனக்கு இவ்வளவு அக்கறை ஏற்படக் காரணம் என்ன? மனோன்மணியின் பேரில் கொண்ட பரிதாபமா? அல்லது அவளுடைய குழந்தையின் மேல் ஏற்பட்ட மோகமா? அல்லது மனோகரின் பேரில் உண்டான கோபமா?” என்று சந்திரசூடனைக் கேட்டேன்.

“அதெல்லாம் ஒன்றுமில்லை. தர்மராஜன் பம்பாயிலிருந்து ஆகாய விமானத்தில் புறப்பட்டான் அல்லவா? அன்றைக்குக் கிளம்பியிருக்க வேண்டியவன் நான்! என் டிக்கட்டைத்தான் அவனுக்கு மாற்றிக் கொடுத்தேன். அன்று விமானத்தில் நான் கிளம்பியிருந்தால் என் உயிர் அல்லவா போயிருக்கும்? எனக்காக உயிரைக் கொடுத்தவனுக்கு நான் இந்த உதவியாவது செய்ய வேண்டாமா?” என்றான் சந்திரசூடன்.

“அவன் தான் பிழைத்து வந்து விட்டானே? உனக்காக உயிரைக் கொடுத்து விடவில்லையே?” என்றேன்.

“அவன் உயிர் அவ்வளவு கெட்டியாயிருந்தது. இருபது பேரில் அவன் ஒருவன் மட்டும் பிழைத்துவந்தான். நானாயிருந்தால் விமானம் விழுகிற போதே செத்துப் போயிருப்பேன்!”

“உன் உயிர் அவன் உயிரை விடக் கெட்டி அப்பனே! அதனால்தான் நீ அன்று புறப்படவே இல்லை?” என்று கேட்டேன் நான்.

சில நாளைக்குப் பிறகு சந்திரசூடன் மறுபடியும் புன்னைவனத்துக்குப் போய், பண்ணையாரிடம் எல்லா விவரங்களையும் சொல்லித் தந்தையையும் மகனையும், மருமகளையும் பேரனையும் சேர்த்து வைத்து விட்டு வந்தான். பண்ணையார் இப்போது ஒரேயடியாகப் பேரப் பிள்ளையின் மோகத்தில் முழுகிப் போயிருக்கிறாராம்! ‘சாதியாவது மதமாவது? குணமல்லவா வேண்டும்? என் மருமகளைப் போல் குணசாலி தவம் செய்தாலும் கிடைக்குமா?’ என்று அடிக்கடி சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறாராம்!

பழைய உயிலை ரத்து செய்து விட்டுத், தம்முடைய சொத்திலிருந்து ஒரு பெரும் பகுதியை அநாதைக் குழந்தைகளின் பராமரிப்புக்கென்று எழுதி வைத்திருக்கிறாராம்.

கடைசியாக, இவ்வளவு நல்ல முடிவுக்குக் காரணமாயிருந்த புன்னைவனத்துப் புலியின் ஞாபகார்த்தமாக ஒரு சமாதி எழுப்பியிருக்கிறார் என்று அறிகிறேன்.

வாழ்க புன்னைவனத்துப் புலி!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *