(1978ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அந்தி மயங்கிவிட்டது. கூன் விழுந்த மலைகளுக் கிடையே தேங்கிக்கிடந்த பனிப்புகாரையும் அணைத்துக் கொண்ட இருள் ஒரு திருடனைப் போல மெல்ல….மெல்ல…வந்து பதுங்குகின்றது.
பார்வை…பார்த்துக் கொண்டிருக்கும்போதே, கண்ணாமூச்சு காட்டி இருள் கரிய, திரைதிரையாய் வந்து படிந்து விடுகின்றது. எப்படி வந்தது? ம்….தெரியாது.
மலைப்பாதையில் நின்றுவிட்ட சரக்கு வண்டியாக ஆங்காங்கே நீண்டுகிடக்கும் லயன், காம்பிராக்களில் ‘கும்பிலாம்புகள் ‘ ஒவ்வொன்றாகக் கண்சிமிட்டுகின்றன.
பீலிக்கரையிலிருந்து ஈரச்சேலையுடன் வீடு திரும்பிய காமாட்சிப்பாட்டி மண்வெட்டியைத் திண்ணையில் எறிந்து விட்டு அடுக்களைக்கு விரைந்தாள்.
அவளுக்குப் பகீரென்றது ம்…. குளிர், தாங்கமுடியாத குளிர். முதுமையினால் தளர்ந்துபோன உடல் தட…தட…வென ஆடியது. அடுப்பு மூட்டப்படவில்லை . எப்படிக் குளிர் காய்வது? விளக்கும் ஏற்றப்படவில்லை. எங்கும் ஒரே கும்மிருட்டு. குகையினுள் சிக்கிக்கொண்ட உணர்வுதான் ஏற்பட்டது. கண்களைக் கசக்கியபடியே வெளியே வந்தாள்.
அவள் உடம்பு நடுங்கியது. உடுத்தியிருந்த ஈரச்சேலை வேறு தேகத்தை ஊதவைத்து விறைக்கச் செய்தது. விரல்கள் கொடுகி….. கொடுகி… வெட்டி வெட்டி இழுத்தன. பற்களை இழுந்த முரசுகள் ஒன்றையொன்று அணைத்துக்கொள்ள வாய் “வில்வடிவில்” மேல்நோக்கி வளைய சுருங்கித் தொங்கும் கன்னத்தோல் சிலந்திவலைப் பின்னலெனப் படம் காட்டுகின்றது.
“டேய் அம்பி…டேய்…அம்பி ” இயன்றமட்டும் குரலெடுத்துக் கூப்பிட்டாள் கிழவி.
பதில் இல்லை “அம்பி… அம்பியோ…” பதில் இல்லை “அம்பி…அம்பியோ…” பதிலுக்கு அடுத்த காம்பிரா அலுமேலு “ஐயோ முட்டை விடுற கறுப்புப் பொட்டையைக் காணலியே, காளி கோயிலுக்குக் காணிக்கை கட்டுறேன்” என்று அங்கலாய்க்கும் குரல்தான் கேட்டது.
நாலு லயன்களுக்கு அப்பால் உள்ள பெரட்டுக்களத்தில் தன் சகாக்களுடன் “பிள்ளையார் பந்து” அடிக்கும் அம்பிப்பயலுக்குப் பாட்டியின் பலவீனமான குரல் எங்கே கேட்கப்போகின்றது?
அப்படித்தான் தம்பித்தவறிக் காதில் விழுந்தாலும் கூப்பிட்ட குரலுக்கு மதிப்புக்கொடுத்து உடனே வந்துவிடப்போகின்றானா; என்ன?
மீனாட்சிப்பாட்டியின் மதிப்பு அப்படியாகிவிட்டது!
அவனைச் சொல்லியும் குற்றமில்லை. விளையாட்டுப்பிள்ளை. புத்தாண்டுத் திருநாள் வேறு வருகின்றது. “சித்திரைப் பெருநாள்” “வருஷப்பிறப்பு” என்று சிறுவர்களெல்லாம் ஒரே இன்பக் குதூகளிப்பில் மிதக்கின்றார்கள்.
திண்ணையிற் கிடந்த தேயிலை மிலாரை எடுத்துக்கொண்டு போய், அடுப்பில் திணித்துவிட்டுத் தீப்பெட்டியைத் தேடினாள். விறகு அட்டல், ஜன்னல் திண்டு, போத்தல் ராக்கை இன்னும் எங்கெல்லாமோ துளாவினாள்.
ஹும்… ஹும்… கிடைத்தபாடாக இல்லை.
கிழவிக்கு இப்பொழுது பகற்பொழுதிலேயே கண் சரியாகத் தெரிவதில்லை. தேயிலைப் புதருக்குள்ளே “வத…வத…வென்று செழுமையாகப் படர்ந்துக் கிடக்கும் அமலப்புற்களே கிழவியின் கண்களைப் பொத்திவிட்டு மெதுவாக நழுவித்தப்பிவிடுகின்றன.
“இனியும் பார்வை என்ன வேண்டியிருக்கின்றன” என்று அலுத்துப்போய் உள்வாங்கிக் கொண்ட கண்களோடு, ஏதோ ஒரு நிதானத்தில்தான் கிழவி நடமாடிக்கொண்டிருக்கின்றாள்.
“கண்வெளிச்சம்” இருந்தால் கிழவி இப்படி ஏன் இந்த முடியாத வயதில் கொந்தரப்புக்காட்டில் உயிரைப்பிடித்துக்கொண்டு ஏறி இறங்க வேண்டும்.
கொழும்புப் பங்களாவில் கிடைத்த ஆயா வேலையோடே எப்படியோ காலத்தை ஒட்டி இருக்கலாம்.
ஆனால் “கண்தெரியாத கிழடை வைத்துக் கொண்டு மாரடிக்க முடியாது” என்ற நற்சாட்சிகளுடன் தோட்டத்திற்கே கிழவி திரும்பிவந்த போது “கொந்தரப்பு” மட்டும் ஒதுக்காமல் ஏற்றுக்கொண்டு விட்டது.
கொந்தரப்புச் சம்பளம் மாதா மாதம் கிடைக்கின்றதோ என்னவோ; கொந்தரப்புக் கணக்குப்பிள்ளையின் “திட்டு” மாதம் தவறாமல் கிழவிக்கு கிடைக்கும்.
உழைக்கக்கூடாத வயது. உழைக்கமுடியதா உடம்பு. ஆனால் கிழவி உழைத்துக்கொண்டுதான் இருக்கின்றாள். தெம்பு உடலில் அல்ல. உள்ளத்தில்தான். என்ன செய்வது? வயிறு என்ற ஒன்று ஒட்டிக் கொண்டிருக் கின்றதே? “ஒரு நாள் உணவை ஒழியென்றால்…ஒழியுமா” ஔவைக்கே இந்த சோதனை என்றால் காமாட்சி எம்மாத்திரம்? உண்டு இல்லையென்று பாராமல் நேரம் தவறாது பற்றி எரிகின்றதே!
ஐம்பத்தி ஐந்து வயதுவரை உழைத்துவிட்டு “அக்கடா” என்று ஓய்வாக மூலையில் குந்த முடியாது. மருமகளின் பெயரிலுள்ள இரண்டு ஏக்கர் கொந்தரப்பில் புல்வெட்டுகிறாள் கிழவி.
பெற்ற தாயையும், கட்டிய மனைவியையும், இருபிள்ளைகளையும் தவிக்கவிட்டுவிட்டு யாரோ ஒருத்தியை இழுத்துக்கொண்டு வவுனியாவிற்கு ஓடிப்போன மகனைப்பெற்ற பிழைக்காக மட்டுமன்றி, தனக்கும் வேறு ஒட்டிக்கொள்ள உறவில்லாதபடியால் மருமகளுடனேயே தங்கிவிட்டாள் கிழவி.
வேறு எங்குதான் போவது…..? ஏச்சுப்பேச்சு, இன்பதுன்பம் எல்லாவற்றிற்குமே அவள் தான். நாளைக்குக் கிழவிக்கு ஒன்று நடந்துவிட்டால் முழுப்பொறுப்பும் அவள் தலையில் தானே! இதை நினைத்து மருமகள் என்னதான் பிழைசெய்தாலும் கிழவி மௌனமாக அடங்கிப் போய்விடுவாள். மருமகள். தூக்க முடியாத குடும்பச் சுமையை ஏற்றுத் தவிப்பது கிழவிக்கு புரியும். என்னதான் இருந்தாலும் என் மருமகள் போலாகுமா? என்று பெருமிதப் பட்டுக் கொள்வாள்.
அடுத்த வீட்டு அலமேலுவிடம், சிரட்டையில் தீக்கங்குகளை வாங்கிவந்து அடுப்பை மூட்டிக் குளிர்காயத் தொடங்கினாள். கேத்தலில் தண்ணீர் கொதிக்கத் தொடங்கியது.
வேலை முடிந்து வீடு திரும்பிய கிழவியின் மருமகள் தேனீர் தயாரித்து வழங்கிவிட்டு இரவுச் சாப்பாட்டிற்காகச் சமையலை ஆரம்பித்தாள்.
கிழவிக்கு உடுத்துக்கொள்வதற்கு மாற்றுச் சேலை கிடையாது. கட்டியிருக்கும் சேலை மட்டும்தான். அதுவும் கடந்த தீபாவளிப் பண்டிகைக்கு மருமகள் வாங்கிக்கொடுத்ததுதான். கிடைக்கும் சொற்ப வருமானத்தில் நான்கு உயிர்களின் வயிற்றைக் கழுவிக் கொண்டு கிழவிக்கென ஒரு சேலையை மருமகள் வாங்கியது பெரிய சாதனை!
கிழவிக்காவது ஒரு சேலை இருக்கின்றது. பாலாயிக் கிழவி ஒரு கந்தலை இடுப்பில் சுற்றிக்கொண்டு தோட்டத்தைச் சுற்றிவருவதும். அனாதையான சன்னாசிக் கிழவன் தொங்கல் காம்பிராவில் செத்துப்போயிக்கிடந்த கோலம்!
அந்த ஒரேயொரு சேலையுடன் கிழவி காலந்தள்ளுவதே ஓர் அதிசம்தான். பூப்போல அதைப் பாவித்து வந்தாள். என்றாலும் அதுவும் நூல்தானே! நைந்து நைந்து நைலோன் துணியாக உடலைக்காட்டத் தொடங்கிவிட்டது.
சேலையின் ஒரு பாதியை இடுப்பில் சுற்றிக்கொண்டு மறுபாதியையும் தோய்ப்பாள். குளித்து முடிந்து கரையேறிய பின்னர் உலர்த்துவதும் இப்படியேதான். ரவிக்கைபோடாது அந்தச் சேலையை மட்டுமே அவள் அணிந்திருப்பதே ஒரு தனிக்கலையாகும்.
இரவில் குளிருக்காகப் போர்த்துக்கொள்ளவும் இதே சேலைதான். பகலில் கொந்தரப்புக் காட்டிற்குச் செல்லும் போது இடுப்பில் ஒரு படங்குத் துண்டைக் கட்டிக்கொள்வாள்.
கிழவி இப்படி எத்தனை பவ்வியமாகப் பாவித்த போதிலும் அது கண்சிமிட்டி விளையாடத் தொடங்கிவிட்டது.
அன்றொருநாள் தன் இளைய பேரப்பிள்ளையை மடியில் வைத்து தாலாட்டிக் கொண்டிருந்தாள் கிழவி. கிழவியின் ரா….ரா… ராராடில் களிகொண்ட குழந்தை துள்ளிக்குதித்து தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டது. பயன் கிழவியின் சேலை இரண்டாகக் கிழிந்ததுதான். பின்னர் ஊசியால் உருட்டித் தைத்துவிட்டாள் மருமகள்.
சேலை காய்ந்தவுடன் கிழவி அடுப்படியைவிட்டு நகர, மருமகள் இரவுச் சாப்பாட்டிற்காக ரொட்டி சுடத்தொடங்கினாள்.
கிழவிக்கு ஓய்வு கொடுக்கக்கூடாது என்பது போலத் தொட்டியில் உறங்கிய “உங்காப்பயல்” வீரீட்டுக் கத்தினான். அவனைத் தூக்கி அணைத்தபடியே திண்ணைக்குச் சென்று தாலாட்டுப்பாடித் தட்டிக்கொடுத்துத் தூங்க வைத்தாள் கிழவி.
“அம்பி வந்தானா?” மருமகள் கோபத்துடன் கேட்டாள். “இல்ல. நான்தான் வந்து அடுப்பு மூட்டினேன். கிழவி கூறினாள்.
“இன்றைக்கு அவன் வரட்டும். தோலை உரிக்கிறேன் ” மருமகள் கறுவியபடியே வேலையில் மூழ்கினாள். கிழவி மௌனமானாள்.
கிழவி பகல் கொந்தரப்பில் புல் வெட்டிக் கொண்டிருக்கும் போது திடீரென்று குளிர் காற்றுச் சுழன்று அடித்தது. நினைத்துப் பார்ப்பதற்கு முன் மேற்காவுகை மழை ஒரு பாட்டம்பாடி ஓய்ந்தது. எதிர்பாராத விதமாக ஆலங்காய் அளவில் பெரிய மழைத்துளிகள் விழுந்தன. கிழவி வசமாகச் சிக்கிக் கொண்டாள். குன்றுகளை மெழுகி விட்டாற் போன்று மரகதப்பச்சைத் தேயிலைச் செடிகள். ஓடி ஓதுங்கவும் முடியாது.
சிறிது நேரத்தில் மழை ஓய்ந்து மஞ்சள் வெயில் சுரீரென்று அடித்தது. எனினும் கிழவி தெப்பமாக நனைந்து விட்டாள். செம்மண் தூசிபடிந்த உடம்பை மழைநீர் சேறு பூசியது போலாக்கி விட்டது.
அதற்கு மேல் கிழவியால் வேலை செய்ய முடியவில்லை. பீலிக்கரைக்குச் சென்று உடலைக் கழுவிக்கொண்டு வீடு திரும்பினாள். அலசிப் பிழிந்து இடுப்பில் சுற்றிய ஈரச்சேலை உடம்பில் சொத… சொதப்பை ஏற்படுத்தியது.
“கண்டக்டர்” வீட்ல அந்த அம்மா இன்னைக்கு உன்னை கட்டாயம் வர சொன்னிச்சே…போகலியா…ரொட்டியை மறுபக்கம் திருப்பிப்போட்டபடியே கேட்டாள் மருமகள்.
“அந்திக்கே போகத்தான் நெனைச்சிருந்தேன். மழையில சேலை நனைஞ்சி ஈரமாகி போயிடுச்சி…வீட்டுக்கு வந்தா…அம்பியையும் காணல்ல…இதோ இப்பபோயிட்டு வந்திடுறேன்.
“கந்தையா கண்டக்டர் வேலைத் தளத்தில் மிகவும் கண்டிப்பான பேர்வழி எனினும் தங்கமான மனிதர் ” என்று பெயரெடுத்தவர். அவருடைய மனைவி சென்றமாதம் பிரசவித்தாள். இது ஐந்தாவது குழந்தை அந்த அம்மாவுக்கு ஆஸ்துமா வேறு! காமாட்சிப் பாட்டிக்கு அங்கு கழுவ வைக்க’ என்று ஏகப்பட்ட ஓய்வு ஒழிச்சலற்ற வேலை. பாட்டி இப்பொழுதும் ஊடமாட ‘ அங்கு போய்வருகிறாள்.
“நான் ஐயா வீட்டிற்குப் போய் வருகின்றேன். அம்பி வந்தா அடிக்க வேண்டாம்” – கொள்ளிக்கட்டையை வீசிக்கொண்டு இறங்கி நடந்தாள் கிழவி. அம்பிப்பயல் குறும்பு செய்தாலும் அவன் மீது தனிவாஞ்சை கிழவிக்கு! தன் மகளையே உரித்துவைத்துப் பிறந்திருக்கின்றான் என்பது கிழவியின் கணிப்பு!
இரவு மணி எட்டைத் தாண்டியிருக்கும் அம்பிப்பயல் மெதுவாக வீட்டுக்குள் நுழைந்தாள். உடம்பெல்லாம் ஒரே அழுக்கு. வியர்வை வேறு மணத்தது. சட்டையின் ஜேபி கிழிந்து தொங்கியது. மாலையில்
சிறுவர்களுடன் சண்டை பிடித்திருக்கவேண்டும். முகத்தில் நகக்கீறல்களில் இரத்தம் கசிந்து செங்கோடுகள் ஒடிக்கிடக்கின்றன. தலைமயிர் படியாது, குத்துக் குத்தாக சிலுப்பிக் கிடக்கின்றது.
“இவ்வளவு நேரம் எங்க போயிருந்த ” தாய் அதட்டினாள். பதில் பேசாது மூலையில் போய் அமர்ந்தான் அம்பி.
“எங்கடா போன…இவ்வளவு நேரமா விளையாடுறது? அடுப்ப பற்ற வைச்சி தண்ணி சுடவைச்சா என்ன? உனக்கு விளையாட்டுப் பெருசாபோச்சி… அப்பாயி ஈரச்சேலையுடன் நடுக்கிக் கிட்டு இருந்ததைப் பார்த்தியா…?”
“எனக்கு நீ ஏன் புதுவருஷத்திற்கு புதுச்சட்டை வாங்கிக் கொடுக்கல்ல…. ராசு, கோபாலன் எல்லோருக்கும் அவங்க அம்மா புது உடுப்பு வாங்கிக் கொடுத்திருக்காங்க அழுகையை சுமந்து நிற்கும் குரல் அவன் நியாயம் அவனுக்கு!”
தன் இயலாமையை நினைக்கத் தாயின் கோபம் தணிந்தது! “புதுச்சட்டை தைக்க காசுக்கு எங்க போறதாம்? இந்த மாதம் மேலதிக அரிசி, மாவுக்கே சம்பளம் போதாது. அடுத்த மாத சம்பளத்திற்கு கட்டாயம் வாங்கித் தருவேன். இந்தா நீ…பகலும் சாப்பிடல்ல…சோறு சாப்பிடு…”
அம்பி முறைத்துக்கொண்டு நின்றான். “இந்தா சாப்பிடு ராசா…என் கண்ணு இல்ல…
“ம்…ம்…எனக்கு சோறு வேண்டாம். புதுவருஷத்திற்கு போட்டுக்கிற சட்டை வாங்கிக் கொடுத்தாத்தான் சாப்பிடுவேன். இல்லாபடி எங்கேயாவது, ஓடிப் போயிடுவேன்” சாப்பிடமறுத்து அடம்பிடித்தான் அம்பிப்பயல்.
“சரி நாளைக்கு வாங்கித் தாரேன். இப்ப நீ… இதை சாப்பிடு” தாய் சோற்றுப் பீங்கானை நீட்டினாள்.
“எனக்கு வேண்டாம்” – நாளை மறுநாள் புத்தாண்டுத் திருநாள். இத்தனை நாளும் இல்லாமல் ஒருபகலில் எப்படி புது உடுப்பு வாங்கி அளிக்கப் போகின்றாள்? – அம்பிப்பயலுக்கு நம்பிக்கை வரவில்லை.
“ம்…சாப்பிடு” கோபத்தோடு ஒரு உதை விட்டான். சற்று தூரத்திற்கப்பால் விழுந்து நொறுங்கியது பீங்கான். தாய்க்கு முகம் சிவந்து கோபம் கொப்பளித்தது.
“அன்னத்தை கொட்டிட்டியே பாவி; இதுக்குத்தானே இந்த பாடுபடுகிறோம்” அம்பிப்பயல் எழுந்து லாவகமாக ஓடப் பார்த்தான். தாய் விடவில்லை. தலைமயிரைப் பற்றிப் பிடித்துக் கொண்டாள்.
“ஐயோ அம்மா நான் செத்தேனே” – அம்பி அலறினான். தாய் காளியாக மாறினாள்.
“ஐயோ அம்மா…அடிக்காதீங்க…அடிக்காதீங்க…ஏன் இப்படி பச்ச பாலகன அடிக்கிற” பக்கத்து வீட்டு பார்வதி உள்ளிருந்தே குரல் எழுப்பினாள்
கண்டக்கடர் வீட்டிலிருந்து திரும்பிய காமாட்சிப்பாட்டி ஓடி வந்து தடுத்தாள். “விடு…விடு பச்சபுள்ளைைய இப்படியா அடிக்கிறது?”
அவளிடம் இருந்து விடுவித்துத் திண்னைக்குக் கூட்டிவந்தாள்.
“வலிக்குதா” ஆதரவோடு முதுகைத்தடவிக் கொடுத்தாள். அம்பிப்பயல் தேம்பித்தேம்பி அழுதான். மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது, அவனுக்கு!
“ஏன் வீட்டு வேலைகளை ஒழுங்காக செய்யல? இனிமே இப்படிச் செய்யாத; ஒழுங்காக நட”
“வருஷப்பிறப்பிற்கு ராசு, கோபாலன் எல்லோரும் சட்டை போடுவாங்க. எனக்கு மட்டும் இல்ல. எனக்கும் புது உடுப்பு வேண்டும்” வார்த்தைகள் கோர்வையாக வரவில்லை. தேம்பித் தேம்பி அழுதபடியே கூறினாள்.
கிழவி ஒருகணம் மௌனமாக யோசித்தாள். பின் அமைதியான குரலில் “நீ அழுவாத இந்தா உனக்கும் சட்டைதைக்க புதுத்துணி” மடியிலிருந்து பார்சாலை எடுத்தாள். இளஞ்சிவப்பு நிறத்தில் ஒரு புடவை.
அம்பிப்பயலின் அழுகை நின்றது. கண்கள் ஆச்சரியத்தால் அகல விரிந்தன. அழுகை போன திக்குத் தெரியவில்லை.
என்ன அதிசயம் புதுப்புடவை “கமுசும் சாரமும் தைச்சிக்கிட்டு மீதிக்கு உங்காப்பயலுக்கு ஒரு ஜங்கி தைச்சு கொடு”…புடவையை விரித்து மேலும் கீழுமாகப் பார்த்தான் அம்பிப்பயல் ‘அச்சா பாட்டி. நான் இப்பவே போய் தைக்க கொடுக்கட்டா?” புடவையை கன்னத்தில் அழுத்தி முத்தம் கொடுத்தான்.
“ம்… உன் விருப்பப்படியே செய்” – “எங்க அச்சா பாட்டி” என்று கூறிய படியே சீத்தைப் புடவையுடன் தொங்கவீட்டு இராமு டெயிலரிடம் ஓடினான். அம்பிப்பயல் “இருட்டு பார்த்துப்போ…விழுந்திராத” என்று கூறவிட்டு சேலையின் முந்தானையை இழுத்துச் சொறுகியபடியே கிழவி உள்ளே போனாள்.
“உனக்கு ஏது புதுப் புடவை” – மருமகள் கிழவியை விசனத்துடன் கேட்டாள்.
“கண்டக்டர் வீட்டு அம்மா கொடுத்தாங்க. பிரசவம் பார்த்ததற்கு சந்தோஷமா புதுவருஷத்திற்கு மூட்டிக்கட்டிக்கணுசொன்னாங்க உனக்கு கட்டிக்க இல்லாம நைஞ்சி போன ஒட்டுத்துண்டை சுத்திக்கிட்டு இருக்கியே. அவனுக்கு என்ன இப்ப அவசரம் புது உடுப்பு கட்டாட்டி வருஷம் போகாமலா இருந்திடப் போவுது” அவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. கண்கள் பனித்தன.
கிழவி பதில் கூறாது பலாக்கட்டையை இழுத்துப்போட்டு அமர்ந்து ரொட்டியை சிறியதாக பிய்த்து பிய்த்து நடுங்கும் விரல்களில் நசுக்கி நசுக்கி கறியில் தோய்த்து அழுத்தி ஊறவைத்து பொக்கை வாயில் குதப்பத் தொடங்கினாள். வறுமையையும் துன்பத்தையும் நிரந்தரமாக அணிந்துள்ள அவளுக்கு புத்தாண்டு புதிதல்ல….
தான் சாப்பிடுவதற்காக கருகிப்போன ரொட்டியை எடுத்த மருமகள் சிறுபிள்ளையைப் போல் ரொட்டியை குதப்பும் கிழவியைப் பார்த்த படியே சுவரில் சாய்ந்திருந்தாள்.
– இச்சிறுகதையினை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து “ஒயிஸ் ஒப் த ஒயிஸ் லெஸ்” சஞ்சிகை மலையக ஆங்கில சிறுகதை தொகுப்பில் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில், தினமணி கதிர் மறு பிரசுரம் செய்துள்ளது.
– சிந்தாமணி 1978, அட்சய வடம், முதற் பதிப்பு: 2012, பூபாலசிங்கம் பதிப்பகம், கொழும்பு.