புது ராத்திரி

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 12,924 
 
 

இடுப்பில் நீர் நிறைந்த குடம் இருந்தது. இருளாயி மனசெல்லாம் கிடந்து கொதிக் கிறது. தாங்க முடியாத கோபக் கனல் தெறிக்கிறது. முகத்தில் மனக் கொதிப்பின் தளதளப்பாகத் தெறித்துச் சிதறுகிற அனல் வார்த்தைகள்.

”ஓ வாய்லே புத்து பெறப்பட… நாசமாய்ப் போக… ஒருநாள் பேதியிலே ஒருமிக்கப் போக… என்னையாடி பேசுதே? சாதிமான் கண்ணுடி நா. வாழையா வம்சம் தழைக்குற வவுத்துலே வந்து பெறந்தவடி… என்னையாடி இப்படிப் பேசுனே? ஒன்னோட வாய்லே புத்து வளர்ந்து புதுப் பாம்பு குடியேற…”

தக் தக் தக்கென்று அவள் நடக்கிற நடையின் கோபத்தில் தரை அதிர்கிறது. அகல எட்டு எடுத்துவைக்கிற வேகத்தில் ஈரப் பாவாடை டப் டப் டப்பென்று கதறுகிறது. ஈரச் சேலை எல்லாம் தரைப் புழுதி மண் அப்பி இருக்கிறது.

குடத்தை இறக்கிவிட்டு மறுபடியும் குடத்தைத் தூக்கிக்கொண்டு ஓட வேண்டியவள். இன்னும் பத்து குடம் எடுக்கணும்.

”அந்தப் புழுத்த வாய்ச் சிறுக்கி குழாயடியிலே நிப்பா… அந்தக் கொள்ளிக் கண்ணு முன்னாடி நாம் போய் நிக்கவா? த்தூய்…”

அப்படியே வீட்டு உள் திண்ணையில் உட்கார்ந்தாள். பே(ய்) மூச்சு பெருமூச்சாக இரைக்கிற மூச்சிரைப்பில் ஏறி இறங்குகிற மார்பகம். ஓடி ஓடித் தண்ணீர் எடுத்த அலைச்சல் பாதி… இங்குட்டு குத்தி அங்குட்டு வாங்குகிற மாதிரி வார்த்தை கேட்ட கோபம் மீதி.

வெளம் வெளமாகப் பொங்கி வருகிறது, நினைக்க நினைக்க அடங்காமல் திமிறி வருகிற கோபாக்கினி. அவள் எதிரில் இருக்கிற நினைப்பின் ஆத்திரத்தில் மட்டியைக் கடிக்கிற அவள். ”ஏய்ய்க்… ஏய்ய்ய்க்” என்று சீறிக் கூவுகிறாள். அடங்காத ஆங்காரத்தில் சாமி அருள் வந்தவளைப்போல அவளது முறுக்கேறித் தெறிக்கிற மனத் திணறல். கொதிபானைச் சோறாக தளதளத்துக் குமுறுகிற நினைவு மூர்க்கம். மூசு மூசுவென்று நாசி இரைச்சல்.

குழாயடிக்குப் பக்கத்தில்தான் தெருப் பாதை. பள்ளிக்கூடம் போகிற பாதை. பள்ளிக்கூடம் போக மறுக்கிற ஒரு சின்னப் பயல். அவனைத் தரதரவென இழுத்துச் செல்கிற பூமியம்மா…

நெருங்கிவிட்ட பள்ளிக்கூடம் என்ற பயத்தில் இழுபட்டு வந்த அந்தப் பயல், வெடுக்கென்று கையை உருவிக்கொண்டு தரையில் குத்துக்கால்வைத்து உட்கார்ந்து அழுக… கையில் இருக்கும் சோளத் தட்டையால் சப்பென்று அறைகிறாள். சுரீரென்று சாட்டையடியாகச் சுழன்று விழுகிற அடியின் சடேர் சத்தம். வீறிட்டு அழுகிற அவனின் கத்தல். வெடித்த வீறிடல்.

”என்னத்துக்கு புள்ளையப் போட்டு இப்புடி அடிக்கே? பச்சை மண்ணுக்கு என்ன தெரியும்? பாவமில்லே?” என்று கண்டிக்கிற முனியம்மாவின் பதைப்பு.

”மூணு நாளா போகலேக்கா… நானும் கிளிப் பிள்ளைக்குச் சொல்ற மாதிரி கெஞ்சிக் கெதறி, மண்டி மன்றாடி சொல்லிப் பாத்துட்டேன்க்கா. அடிச்சாத்தான் வழிக்கு வருவான்.”

”அப்பவும் பொய்யடி மெல்லடியா அடி. இப்புடி சோளத் தட்டையாலே புடிச்சு புளிச்னு வாங்குனா எப்புடி?”

குழாயில் குடம் ஏந்தி நின்ற இருளாயி. தண்ணீர் சர்ர்ரென்று வெள்ளிக் கற்றையாக விழுந்தது. சும்மா இருக்க மாட்டாமல், குறுக்கிட்டு ஏதோ சொல்லிவிட்டாள்.

”அடிச்சுப் புடிச்சுப் படிக்கவெச்சாத்தானே, புள்ளே நாளைக்கு உருப்பட்டு ஒசரத்துக்கு வருவான்?”

இந்த எதிர்க் கூற்றை எதிர்பார்க்காத முனியம்மா. கோபச் சீற்றமாக இருளாயியை வெடுக்கென ஒரு பார்வை.

”முக்கிப் பெத்த வலி அறிஞ்சிருந்தா… பச்சை மண்ணை அடின்னு சொல்ல வாய் வருமா?” சீற்றமான பார்வையும், தீப்போன்ற வார்த்தையையும் எறிந்துவிட்டு குடத்தை இடுப்பில்வைத்து, சாய்ந்த நிலையில் நடக்கிற முனியம்மா.

முனியம்மாவின் தீக்கங்குச் சொற்களில் பூமியம்மாவே வெலவெலத்துப் போனாள். கல்யாணமாகி ஏழெட்டு வருஷமாக பிள்ளை பெறாத இருளாயியை, பரிதாபமும் பச்சாதாபமுமாய்ப் பார்க்கிறாள். அவள் பார்வையின் கருணையும் முனியம்மாவின் தீப்பொறிகளும் ஒரு சேர அவளை முட்டித் தள்ளி மோதிற்று.

கோணூசியால் இங்குட்டுக் குத்தி அங்குட்டு வாங்கியதைப்போல் இருந்தது. உயிர் நரம்பு அறுந்த மாதிரி இருந்தது. ஒரு கணம் அவளுக்குள் எல்லாமே நின்றுபோன மாதிரி இருந்தது. நின்ற மூச்சு, நின்ற துடிப்பு, நின்ற நினைவு தொடர்ந்து இயங்க ஆரம்பித்த கணத்தில்தான்… அவளுக்குள் ஆங்காரமும் அழுகையும் பொங்கிக்கொண்டு வந்தது. ஊர் கூடி நிற்கிற மந்தையில் அம்மணமாய் நிறுத்தி நனைந்த விளக்குமாறால் சப் சப் சப்பென்று அறைந்து விளாசியதுபோல் இருந்தது.

முனியம்மா லேசுப்பட்டவள் அல்ல. தாட்டியமானவள். ஓங்குதாங்கான வளர்த்தி. ஊரெல்லாம் உறவுப் படை. ஆள் செல்வாக்கு பெருத்தவள். அந்த ஆணவம், மமதை, திமிர் இருப்பதற்கு நியாயம் இருக்கிறது.

அவளை ஒரு வார்த்தை பேசினால் போதும், ஊரில் பாதியாட்கள் படை திரண்டு பாய்ந்து வருவார்கள். வந்து, ‘உண்டு, இல்லை’ என்றாக்கிவிடுவார்கள்.

ரெண்டு மூணு வருஷமாக இந்த மாதிரி இருளாயி பற்றி மறைவாக ஒன்று ரெண்டு பேர் பேசினது உண்டு. பட்டும் படாமல் பயந்து பம்மி… ஜாடைமாடையாகப் பேசியதாகத் தாக்கல் வந்தது உண்டு. நேருக்கு நேராக நெஞ்சில் குத்தினது, மூஞ்சிக்கு நேராகக் காறித் துப்பினது இந்த முனியம்மாதான். இருளாயி தலையில் அடித்து அழுதாள். வெடித்துக் கதறுகிற அழுகை ரெண்டு கையாலும் முன் தலையில் மடேர் மடேரென்று அடிக்கிற ஆங்காரம்.

”மலட்டுக் கழுதைன்னு மப்பேறுன சிறுக்கி வாயாலே கேக்கும்படியாச்சே… ஐயோ பாதரவே, எனக்கா இந்தக் கதி வரணும்? ஆயிரங் கண்ணுடையாள் மாரியாத்தா… ஓம் மவளுக்கு இந்த நிலைமையா? இதுவும் ஒனக்குச் சம்மதமா?”

அங்கலாய்த்துப் புலம்புவது கொஞ்சம். உள்ளுக்குள் ஆரவாரித்துக் கொந்தளிக்கிற கொதி நினைவுகள் ரொம்ப மனக் கொதிப்பு பூராத்துக்கும் வார்த்தை தேட முடியாமல், குத்துண்ட பறவையின் மரணப் புலம்பலாக, ”ஆத்தா… ஆத்தா… ஆத்தா… சக்தி மாரியாத்தா… ஆயிரங் கண்ணுடைய ஆத்தா… நீதா தண்டிக்கணும், அந்த நாறச் சிறுக்கியை ஆத்தா… ஓங் காலடியே தஞ்சம்னுகெடக்குற ஓம் மகளை நீதா தாயாக்கணும்…” என்று ஒரே கதியிலாக சிணுங்கிக்கொண்டு இருந்தாள். இயல்பான அங்கலாய்ப்பு அல்ல. கோபத்தின் உச்சம் தொட்டுத் தாண்டிய நிலையில், உணர்வற்ற சிலையின் முணுமுணுப்பாக இருந்தது. உயிருக்கும் ஆழத்தில் இருந்து கசிவெடுக்கிற முணுமுணுப்பு.

பங்குனி மாச மதிய வெயில். நடு மதியம் தாண்டி பொழுதுக்கால் உச்சியில் இருந்து சரிந்து இருந்தாலும், உக்கிரமமாகத் தாக்குகிற வெயிலின் சீற்றம். சிமின்ட்டுப் பாதையில் வெயில் பட்டு, பன்மடங்காகப் பெருகிய வேகத்தில் கண்ணைக் குத்துகின்றது. கண்ணில் உறுத்தலையோ காந்தலையோ பொருட்படுத்தாதவளாக அருள் இறங்காத சாமியாடிபோல வெயிலையே வெறித்துப் பார்க்கிறாள். இமை தட்டாத பார்வையின் நங்கூரம்.

நினைவு எங்கோ போய் செத்தொழிந்த மாதிரி ஒரு மன ஸ்தம்பிப்பு. ”ஆத்தா… ஆத்தா… சக்தி மாரியாத்தா… நீயே தஞ்சம் அம்மா”- இடைநிறுத்தம் இல்லாத தொடர் முணுப்பு. வெறிகொண்ட மன உக்கிரத்தின் முணுமுணுப்பு.

இருளாயி முந்தி எல்லாம் இப்படி இல்லை. மாரியாத்தாவைக் கும்பிடுவது இல்லை. நினைப்பதுவும் இல்லை. எல்லாக் கிராமத்துச் சம்சாரி வீட்டுப் பொம்பளையைப்போல… சாமி இல்லை என்று கட்சியும் கட்ட மாட்டாள். ‘உண்டு’ என்று ‘அதே கதி’ என்று கோவில் குளம் என்று போகவும் மாட்டாள்.

கால மழை பெய்தால், கரிசல் காட்டு விதைப்பு நடத்துகிற அதே மும்முரத்தில் – கோடைக்கு முன்னாடி அறுப்பு நடத்துகிற அதே தீவிரத்தில் – வருஷத்துக்கு ஒரு தடவை வைகாசி மாசம் வருகிற சக்தி மாரியம்மா கோவில் திருவிழா மூன்று நாளைக் கொண்டாடுவாள். ஒரு வருஷ கால உழைப்பின் அலுப்பை ஆற்றிக்கொள்கிற மனக் கொண்டாட்டம்.

அதுவும் லௌகீக வாழ்வின் குதூகலம்தான். வீடு முழுக்க வெள்ளைத் தண்ணி காட்டி, வந்தது போனது, ஓட்டை சாட்டையை அடைத்து வீட்டைப் புதுசாக்குவது… புதுத் துணிமணிகள் எடுப்பது… சொந்த பந்தங்களை வரவழைத்து, ஆக்கி அவித்துப் போட்டு உண்பது… கிடாய்க் கறி, கோழிக் கறி என்று ஊர் முழுக்க மணக்கவைப்பது… சாமிக்கு நடக்கிற பூஜையிலும், முளைப்பாரி ஊர்வலத்திலும், ஆளோடு ஆளாகக் கலந்துகொள்வது. இப்படித்தான் வீட்டுக்கும், வயிற்றுக்கும், உறவுக்குமான கொண்டாட்டமாக இருக்கும்.

”ஆத்தா ஒரு பக்கம் இருக்கட்டும்… அவா பேரைச் சொல்லி ஆக்கி அவிச்சு உடுத்தி நாம அனுபவிக்குறது இருக்கே… இதுக்குத்தான் சாமி வேணுங்குறது” என்பாள் இருளாயி.

மற்ற நாளுக்கு என்றைக்கும் கோவில் பக்கம் தலைவைத்துக்கூடப் படுக்க மாட்டாள். கோவி லுக்கு விளக்குப் போட, அந்திப் பூஜை நடத்த யாராச்சும் கூப்பிட்டால்கூட மறுத்துவிடுவாள்.

”நிமிர்ந்து பாக்க நேரமில்லாம, பாடு ஜோலி குமிஞ்சுகெடக்கு. கோவில், குளம்னு திரியுறதுக்கு எங்க இருக்கு பொழுது?” என்று சலிப்பும் சடைப்புமாகச் சொல்வாள்.

”அப்ப… சாமி இல்லியா?”

”அது இருந்தா இருந்துட்டுப் போகட்டும். நமக்குத் தேவைப்படுறப்ப ‘ஆத்தா’ன்னு போய் நின்னுக்கிட வேண்டியதுதான். நம்ம பாடுஜோலியை நிப்பாட்டுற ஆத்தா என்னத்துக்கு?”

”பாடு ஜோலிதா முக்கியமா? ஆத்தா முக்கியம் இல்லியா?”

”ஆத்தாவுக்காக ஆத்தாவைக் கும்புடணும்னு என்ன இருக்கு? நம்ம பொழைப்பு நாயம் நல்லா நடக்கத்தான் ஆத்தாவைக் கும்புடணும்.”

இப்படிப் பேசுவதுதான் இருளாயி. எல்லா ஊர் இருளாயிகளும் இப்படித்தான். இருளாயி, வெள்ளி, செவ்வாய்க்கு விளக்கு போடப் போகிறவர்களை – பௌர்ணமி பூஜைக்குப் போகிறவர்களை எல்லாம் ”வேலையத்துப் போய் இதுவே விதினு அலையுதுக” என்று உதட்டைப் பிதுக்குவாள்.

அப்படி இருந்த இருளாயி, ‘ஆத்தாவே தஞ்சம்’ என்ற நிலைமைக்கு ஆளானதும், உணர்வு தப்பிய நிலையிலும் உயிரும் உதடும் ‘ஆத்தா ஆத்தா’ என்று முனங்குகிற அளவுக்கு மாறியதும் தனிக் கதை.

இன்னும் ஏழெட்டுக் குடம் தண்ணீர் எடுத்திருப்பாள். முனியம்மாவால் நின்றுபோனது. அரசாங்கப் புண்ணியத்தில் கரன்ட்டும் போய் விட்டது.

கம்பம் பயிருக்குத் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டு இருக்கிற வெள்ளையன் கரன்ட் நின்றவுடன் தொட்டித் தண்ணீரில் உடம்பை அலசிக்கொண்டு, மம்பட்டியோடு வீட்டு வாசலில் வந்து நிற்பான்.

‘தண்ணி குடு’ என்பான். கண்கள் அவளைப் பார்க்கும், ‘டீத் தண்ணி ரெடியா?’ என்ற கேள்வி யோடு. பாடுபட்டு வந்த மனுசன். குலை பிடுங்குற பசியோடு வருவான். காரச் சேவும் கருப்பட்டி மிட்டாயும் தந்து, நிறை செம்புத் தண்ணீரும், ஆவி பறக்கிற தேயிலைத் தண்ணீரும் தந்தால் சரியாயிருக்கும். அதுதான் வாழ்க்கையும்கூட.

முனியம்மா வைத்த தீயால் கருகிக்கிடக்கிற இருளாயி. தண்ணீரே எடுக்காமல் சிலையென உறைந்துகிடக்கிறாள்.

வெள்ளையன் வந்துருவானே என்ற நினைப்பின் சாட்டையடியில், நினைவுலக ஸ்தம்பிப்பில் இருந்து லௌகீக வாழ்வுக்குத் தெறித்து வந்தாள்.

பால் சொஸைட்டிக்கு ஓடினாள். ராச் சாப்பாட்டுக்கு அடுப்பு கூட்ட வேண்டும். கடைகண்ணிக்கு ஓட வேண்டும். பெட்டியும் கையுமாகப் போய் சாமான் செட்டு வாங்கி வர வேண்டும்.

சக்கரம் கட்டிய காலாக உருண்டாள் இருளாயி. றெக்கை முளைத்தவளாகப் பறந்தாள். கடையை நோக்கி வெயிலுக்குள் நடந்தாள். அவள் நினைவோ…?

….வெள்ளையன், பெயர்தான் வெள்ளையன், திரேகம், கரிசல் கறுப்பு. உழுது புரட்டப்பட்ட கரிசல் மண் மாதிரி மினுமினுப்பான அடர் கறுப்பு.

இருளாயிக்கு விவரம் தெரிகிற வயதில், வெள்ளையன் கருவாயனாகத் திரிவான். அவனுக்கு ‘ஒழுவாடி’ என்றொரு பட்டப் பெயர். எந்நேரமும் வாயின் இருமருங்கிலும் எச்சில் வடிந்த வண்ணமாக இருக்கும். ஆள், சீத்தக்குஞ்சி மாதிரி இருப்பான். எந்நேரமும் எச்சில் ஒழுக, கறை விழுந்த பற்களுடன் இளித்துக்கொண்டு திரிவான். அழுக்குத் திரேகம். கிட்டப் போனாலே கொச்சை வீச்சம் வீசும். இருளாயிக்கு அவனைப் பார்த்தாலே குமட்டும்.

இளவட்டமான பிறகும் பெரிய வித்தியாசம் இல்லை. அழுக்கான கைலி. கணேஷ் புகையிலை போடுகிற வாயின் ஒழுகல், புகையிலை எச்சிலின் பிண நாற்றம். குடலைப் புரட்டுகிற பிரேத வாடை.

இருளாயி நல்ல லட்சணமான கட்டை. சிவப்பு இல்லை. கறுப்பும் இல்லை. கோதுமை நிறம். கண்ணும், மூக்கும், உதட்டமைப்பும் கச்சிதம். வெயிலில் வெந்து வியர்வை வடித்து, கடைந்தெடுத்த சிலை மாதிரி திரேகம். தாட்டி யமான உடம்பு. அவளைச் சுற்றிச் சுற்றி மொய்க்கிற இளவட்ட ஈக்கள். பல்லை இளித்துக்கொண்டு உரசப் பார்க்கிற கிழடு கட்டைகள்.

அம்மாவைத் தவிர, வேறு நாதி இல்லை. வேறு சொத்துபத்தும் இல்லை. கம்மல் மூக்குத்திக்கும் கதியற்ற நிலை. அம்மா ரெண்டு தடவை கிறுகிறுப்பாக வருதென்று விழுந்துவிட்டாள். கண்ணு முழிச்ச அம்மாவுக்குக் கவலை. ”சமைஞ்சு நிக்குற புள்ளையை ஒருத்தன் கையிலே ஒப்படைச்சுட்டு செத்தா… கட்டை வேகும்” என்று வாய்க்கு வாய் புலம்புகிற அம்மா.

புகலற்ற நிலை. வழியற்ற மறிப்பு. ‘ஏழைப்பட்ட பொம்பளைக்கு எல்லாரும் மாப்பிள்ளைக’ என்கிற மாதிரி ஊர் நிலவரம். மிட்டாயை மொய்க்கிற ஈக்களாக இளவட்டங்கள். சாக மாட்டாத கெழடுகட்டை கள்கூட பல்லை இளித்துக்கொண்டு உரசப் பார்க்கிற கொடுமை.

வேறு கதி இல்லை. ‘வெள்ளையனுக்கு வாழ்க்கைப்படு’ என்கிற அம்மா. அவனை நினைத்தாலே குமட்டும் இவளுக்கு. வாயில் ஒழுகுகிற எச்சில். அடி உதட்டில் உருட்டித் திணிக்கிற கணேஷ் புகையிலையின் பிண நாற்றம். நினைத்தாலே குமட்டுகிற நாற்றெமெடுத்த ஒரு பிறவியுடன் எப்படி கூடப் படுக்க? ச்சேய்ய்ய்க்!

இருளாயியின் விருப்பத்தையும் ரசனையையும் பொருட்படுத்துமா விதி? ஏழ்மையும் இயலாமையும், இருளாயியை வெள்ளையனின் பொஞ்சாதி ஆக்கியது.

விடிய விடிய தலைவிதியை நொந்துகொண்டு அழுது கண்ணீர் வடிக்கிற இருளாயி. இடது உள்ளங்கையில் தட்டிய கணேஷ் புகையிலையைத் தூசி ஒதுக்கி, உருட்டித் திரட்டி அடி உதட்டை இழுத்து உள்ளே திணித்து, ஊறுகிற எச்சிலைத் துப்பாமல் வழியவிடுகிற அவனின் உறக்கம்.

இப்படித்தான்… முதல் ராத்திரி முடிந்தது. முதல் ராத்திரி மட்டும் அல்ல… எல்லா ராத்திரிகளும்தான். அதையும் தாண்டி, வயதுக் கோளாறினால் யத்தனிக்கிற வெள்ளையன். இன்னது செய்வது, இப்படிச் செய்வது என்று அறியாத குழப்பம். ஒரு பெண்ணை ஆளுமை செய்வது எப்படி என்று அறியாத மன இருட்டு. அதையும் மீறி கம்பம் புஞ்சைக்குள் பாய்ந்த செம்மறிக் கிடாயாக அவன் மேலே விழுந்து ஆக்கிரமித்தாலும்… நாற்றம் தாளாமல், பாதியிலேயே ஒதுங்கி ஒடுங்கிக்கொள்கிற இருளாயி.

ஏழு வருஷத்துக்கும் மேலாகிவிட்டது. வெள்ளையனுக்கு இருக்கிற புஞ்சை விளைகிறது. கரிசல் காடு விளைகிறது. மஞ்சணத்தி பூக்கிறது. வேலி மரம் காய் காய்க்கிறது. குருவி குஞ்சு பொறிக்கிறது. இருளாயிக்கு மட்டும்?

அரசல்புரசலாக அங்கும் இங்கும் பேசப்படுகிற ஜாடைப் பேச்சுகள். உயிரின் ஆணி வேர் வரைக்கும் பரவிப் பாய்ந்து உலுக்குகிற வலி.

ராத்திரி குளிக்கிறபோது… தண்ணீரை மோந்து மோந்து ஊற்றிக் குளிக்கிறபோது… அவளது மார்பகங்கள் வெள்ளையன் விரல் படாதது. தன் உயிரில் வளர்ந்த ரத்த நிழலான மழலையின் பிஞ்சு வாய் அதைக் கவ்வினால்… பிஞ்சு மென்விரலால் வருடினால்… அந்த நினைப்பிலேயே உயிர் நனைந்து சிலிர்ப்பாள் இருளாயி. இப்படியான நினைவுகள். தவழ்ந்து, தத்தித் தடுமாறி, தன் உடம்பில் ஏறி விளையாடுகிற மழலையின் தேன் எச்சில் கன்ன மேட்டில் விழ… அந்தப் புல்லரிப்பில் இவள் கண் சொருக… குஞ்சு பொறிக்கிற கனவுகள்.

வெளியே ஜாடைப் பேச்சுகள்… உள்ளே தாய்மைத் தவிப்பு. உடல் மோகக் காமத்தின் மறு ரூபம். அவளுக்குள் ஒரு கனிவு. ஒரு குழைவு. உடம்பின் நச்சரிப்பில் மனதில் வந்த நெகிழ்வு.

தம்மை அலங்கோலமாக்கி வேடிக்கை பார்த்த விதியின் மூஞ்சியில் கரியைப் பூச வேண்டும். வாய்த்த அசிங்கத்தையே… அசூயைப் படாமல் சிங்கமாக்க வேண்டும். அது எப்படி? என்ன வழி?

பூ வாசக் கொத்தாக இருளாயி. பூவுக்குள் இருக்கும் தேனின் இரும்புச் சத்தென வைராக்கியம்கொள்கிற அவளின் போர்க் குணம்.

கோணல் தலையெழுத்தாகிப்போன தாம்பத்யத்தைத் திருத்தி எழுதுவது எப்படி? என்ன வழி? அவனை எப்படி சிங்கமாக்குவது? அவளுக்குள் குழப்பம், திகைப்பு.

அப்பதான் –

இருளாயியின் பால்ய வயதுத் தோழி செல்லாயி வந்தாள். ”ஆத்தா… சக்தி மாரியம்மாவ நம்பிக் கும்புடு. கையெடுத்துக் கும்புட்டு மடியேந்து. வெள்ளீ, செவ்வாய்க்கு வெளக்குப் போடு. பௌர்ணமி பூஜைக்குப் போ!”

அன்றைக்கு ராத்திரி வெந்நீர் வைத்துத் தந்தாள் இருளாயி.

”குளிக்கலாம்ல?”

”ரெண்டு நாளாகலே குளிச்சு. அதுக்குள்ளே எதுக்கு?”

”சோத்தை வெச்சிரவா?”

”வெச்சிரு.”

உண்டான், ஒழுவாடி. வாயைக் கொப்பளித்தவுடன் கணேஷ் புகையிலை தேடிய அவனை… பரபரத்தவனைக் கையைப் பிடித்தாள், தடுத்துவிட யத்தனித்தாள்.

அவள் பிடியை உதறிவிட்டு புகையிலையைத் தேடினான். கரும் புகையிலையை உள்ளங்கையில் திரட்டி உருட்டினான். பிண நாற்றம் நாறியது. அவளுக்குள் வந்த அசூயை. அரு வருப்பு. பல்லைக் கடித்து, சமாளித்துக் கொண்டாள்.

”சக்தி மாரியம்மாளுக்கு வெள்ளி செவ்வாய்க்கு வெளக்குப் போடணும். நீங்களும் கூட வரணும்.”

”வர்றேன்…”

”வர்றப்ப… குளிச்சிட்டு சுத்தபத்தமா வரணும்.”

”குளிக்கணும்னா… நா வரல்லே.”

”சக்தியுள்ள மாரியம்மா… நமக்கு ஏதாச்சும் தண்டனை குடுத்துரப்போறா…”

”அப்ப நா குளிக்கிறேன்.”

வெந்நீரில் குளித்தான். அவளே முதுகு தேய்த்துவிட்டாள். முதுகெல்லாம் கருஞ்சுருள் ரோமம். தேய்க்கத் தேய்க்க அழுக்கு திரண்டு வந்தது.

வந்த பிண நாற்ற புகையிலை நெடியை வெந் நீராலும் கழுவ முடியவில்லை.

பூசாரியிடம் பூஜை சாமான்களைத் தந்தாள். மாலையும் தந்தாள். கோயிலைச் சுற்றி வந்து, தீபம் போட்டு திருநீறு, குங்குமம் பூசிக்கொண்ட இருளாயி. அப்படியே வெள்ளையனும் கையெடுத் துக் கும்பிட்டுக் கண் மூடி நின்றான்.

புது இருளாயி மனசுக்குள் பிடித்திருக்கிறாள். ‘தூத்தூ’ என்று சொல்லாத இருளாயி. அருவருப்பில் முகம் சுளிக்காத புதிய இருளாயி. அசூயையில் மூக்கைப் பொத்தாத புதிய பொஞ்சாதி. பாசத்துடன் முதுகு தேய்க்கிற அன்புப் பெண்டாட்டி.

”இவள் இப்படியே இருக்கணும் ஆத்தா…” என்று முணுமுணுத்துக் கும்பிடுகிற வெள்ளையன்.

அக்கணம் –

இருளாயியின் இனிய குரலின் அழைப்பு.

”ஏங்க…?”

”என்ன?”

”இந்த ஆத்தா முன்னாடி வெச்சுக் கேக்கேன்… சத்தியம் பண்ணித் தருவீகளா?”

”என்னன்டு?”

”போயிலையைக் கையாலே தொட மாட்டேன்னு.”

வெலவெலத்துப்போனான். சோறு தண்ணி இல்லாமக்கூட இருந்துவிட முடியும். அது இல்லாமல் ஒரு கணம்கூட இருக்க முடியாது.

அவன் திகைத்தான். தவித்தான். மறுத்துவிட வாயைத் திறந்தான். அக்கணம் –

இருளாயியைப் பார்த்தான். அந்தக் கண் அன்பு சுரக்கிற கண். அதில் உள்ள கனிவு. குழைவு. அன்பின் ஈரம், புன்னகைக்கிற பூ முக மலர்வு. கர்ப்பக் கிரகத்து ஆத்தாவையும் பார்த்தான்.

இந்த இருளாயி வேணும். இந்தப் பிரியம் வேணும். இந்தக் கனிவான இருளாயி வேண்டும்.

ஆத்தாவைப் பார்த்தான். அதன் அலங்காரம், அதன் கண்கள், அதன் உதட்டுப் புன்னகை.

அன்பின் வசப்பட்டு இருளாயி கையைத் தொட்டான். ”இந்த ஆத்தா மேல ஆணை… போயிலையும் பீடியையும் மனசாலேகூடத் தொட மாட்டேன்.”

மாசி மாசம் போன மாசம். வெள்ளையன் புதுசா வந்தான். ஆத்தா புண்ணியத்தில் நாற்றம் இல்லாத வெள்ளையன் வந்தான். பீடியோ, புகையிலையோ தொடாதவன். தினசரி குளிக்கிறவன். ஊறுகிற எச்சிலை வழியவிடாமல், இடம் பார்த்து ஒதுக்கமாகத் துப்புகிறவன்.

‘ஆத்தாதான் அவனைப் புதுசாப் பெத்துக் குடுத்துட்டா’ என்கிற நம்பிக்கை இருளாயிக்கு. ஆத்தா மீது பயம் உள்ள வெள்ளையன், மெள்ள மெள்ளத் தன்னை வருத்தி சபலச் சலனத்தில் இருந்து மீண்டான். இருளாயியின் இனிய அன்பைப் பெறுகிற தேட்டம் அவனுக்கு.

மாசி மாசம் முதல் தீவிர பக்தையாகிவிட்ட இருளாயி, மூச்சுக்கு மூச்சு ஆத்தா. தீபம் போட, பூஜைக்குப் போக… திருநீறுக் கோடிட்டு குங்குமப் பொட்டு வைத்துக்கொள்கிற பக்தி… மூச்சுக்கு முன்னூறு ஆத்தா நாமம்.

மம்பட்டியோடு வந்தான் வெள்ளையன். அவள் தந்த கருப்பட்டி மிட்டாயையும், காரச் சேவையும் தொடும் முன்பாகக் கை கழுவினான்.

”குளிக்கணுமா? வெந்நி போடணுமா?”

”வேண்டாம். பச்சைத் தண்ணியிலே குளிச்சிருதேன்.”

முகம் சுளித்த இருளாயி. காறித் துப்பிய இருளாயி. ஆசையுடன் கிட்ட வந்தபோதெல்லாம், ‘தூத்தூ’வென்று துப்பி அவமானப்படுத்தித் துரத்திய இருளாயி. அடைக் கோழியாய் அண்டவிடாமல் உறுமி விரட்டிய இருளாயி. அதையும் மீறி ஆக்கிரமித்தபோது எல்லாம்… பாதியிலேயே ஒதுக்கி, ஒடுங்கிய இருளாயி.

அவளுக்குள் முனியம்மாவின் தீச்சொல்லின் கருகல் நெடி,

”முக்கிப் பெத்த வலியறிஞ்சிருந்தா…”

முனியம்மாவின் தீச்சர வார்த்தைகள். அதன் திகுதிகுப்பு. தகிப்பு கனல் சூடு. அவளை உருக்கிப் புதிதாக்குகிற சூடு.

இருளாயிக்குள் வைராக்கியத்தில் எழுந்த கனிவு. போர்க் குணத்தில் விளைந்த பூஞ்சிரிப்பு. கோபாக்னியில் எழுந்த குளிர் முகம்.

ஆத்தாவின் புது மகனை ஆசையோடு பார்த்தாள். அள்ளிச் சூறையாடிவிடத் துடித்தாள். அவனைக் கொள்ளையடித்து, தன்னைப் பறி கொடுக்கக் குழைந்தாள்.

அன்றைக்கு அவளுக்கு, அவனுக்கு முதல் ராத்திரியாயிற்று!

– 07 ஜூன் 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *