புதுவாத்தியார்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 13, 2024
பார்வையிட்டோர்: 236 
 
 

(2011ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1

வீட்டில் சாம்பிராணி மணம் எங்கும் பரவி இருந்தது. வானொலியில் பக்தி பரவசமூட்டும் அம்னன் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. வாசல் கதவோரத்தின் விளிம்பில் சொருகப்பட்டிருந்த ஊதுவத்தி மணம் ‘கமகம’ என வீசியது. மொத்தத்தில் அந்த வீடு தெய்வீக மணம் கமழும் கோயிலாகக் காட்சியளித்தது. இந்த ரம்மியமான காட்சியை ரசித்த வண்ணம் வாசலில் வந்து நின்றார் மதிவாணர். உள்ளே சமையலறையில் வேலையாக இருந்த பார்வதி, வாசலில் காலடி சத்தம் கேட்டு வாசல் பக்கம் வந்து எட்டிப் பார்த்தாள். அங்கே மதிவாணர் நிற்பதைக் கண்டதும், “வாங்க… வாங்க…” எனப் புன்சிரிப்புடன் வரவேற்றாள்.

“வாத்தியார் வீட்டில இருக்காங்களா?” என மதிவாணர் வினாத் தொடுத்தார். “இருக்காங்க உள்ளே வாங்க” எனப் பதில் அளித்த பார்வதி உள்ளே நுழைந்த மதிவாணரை இருக்கையில் அமரச் சொன்னாள். பார்வதி காட்டிய சோபாவில் அமர்ந்தார் மதிவாணர். சுற்றும் முற்றும் தன் பார்வையை ஓடவிட்ட மதிவாணர் அதன் எழிலைக் கண்டு பிரமித்துப் போனார். மூன்றறை கொண்ட சிறிய வீடாக இருந்தாலும், மிக நேர்த்தியாக அவ்வீடு அலங்கரிக்கப் பட்டிருந்தது. கச்சிதமான சோபா செட். அதற்கு அழகு சேர்க்க அதனருகில் பெரிய பூச்சாடி. அதற்கு நேர் எதிரே ஒரு கண்ணாடிப்பேழை. அதன் உள்ளே இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொம்மைகள். அதன் அருகில் தொலைக்காட்சிப் பெட்டி. எளிமையாகக் காட்சியளித்தாலும் அவ்வறை ரசிக்கும்படி இருந்தது.

“வாத்தியார் பூசை அறையில் இருக்காங்க. இப்ப வந்திடுவாங்க” என மெல்லிய குரலில் பதிலளித்தாள் பார்வதி. பின் ஏதோ வேலையாய்ச் சமையலறையில் தஞ்சம் புகுந்தாள். மதிவாணர் தான் எண்ணி வந்த காரியம் ஈடேற வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கையில் அமர்ந்திருந்தார். அந்தப் பஞ்சு மெத்தை அவருக்குத் தீயெனச் சுட்டது. எப்படியும் வாத்தியாரிடம் சம்மதம் வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்திலேயே அவர் இருந்ததால், அங்கே வாளா அமர்ந்திருப்பது அவருக்குப் பெருஞ்சுமையாக இருந்தது. எப்போது வாத்தியாரைச் சந்திப்போம் என்ற ஆவலில் அவர் இருப்புக் கொள்ளாது தவித்தார்.

அப்போது யாரோ வரும் காலடி ஒலி மதிவாணருக்கு நன்கு கேட்டது. தலையைத் திருப்பிப் பார்த்தார். அங்கே வெள்ளை வேட்டி. நீல நிறச் சட்டை அணிந்த பெரியவர் புன்முறுவலுடன் வந்து கொண்டிருந்தார். நரை திரை விழுந்த தலை. நெற்றியில் பட்டையாகத் திருநீறு. குழி விழுந்த கண்களுக்கு மூக்குக்கண்ணாடி. முகத்தில் ஒருவித சோகம் படர்ந்திருந்தது. இருப்பினும் அதனை மறைத்திட முயற்சிக்கும் புன்சிரிப்பு.

“தம்பி ரொம்ப நேரமா காத்திருக்கீங்களா?” என வினாத் தொடுத்தவரிடம் “அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. இப்ப தான் வந்தேன்” இடை மறித்துக் கூறினார் மதிவாணர், “பார்வதி… தம்பிக்குக் குடிக்கக் காபி கொண்டு வாம்மா” என வாஞ்சையுடன் குரல் எழுப்ப, மறுகணம் ஆவி பறக்கச் சுடச்சுடக் காபி தம்ளர்கள் இரண்டுடன் வந்து நின்றாள் பார்வதி. அதன் கூடவே ஒரு தட்டு நிறைய பனியாரமும் வந்து குவிந்தது. “ம்…சாப்பிடுங்க தம்பி” என்று கூறியவர் கையோடு ஒரு தம்ளரை எடுத்து மதிவாணரிடம் நீட்டினார். நன்றி பெருக்கோடு அதைப் பெற்றுக் கொண்டார் மதிவாணர். பின் இன்னொரு தம்ளரை அவர் எடுத்துக் காபியைச் சுவைக்கத் தொடங்கினார்.

”அப்போ சரி. விஷயத்தைச் சொல்றீங்களா? தம்பி யாரு? என்ன விஷயமா என்னைப் பார்க்க வந்தீங்க.” இப்படிக் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனார் பழனி வாத்தியார். “நான் தமிழர் பேரவையோட செயலாளர். என் பேரு மதிவாணர். எங்க பேரவை நடத்துற ஆண்டு விழாவுல சார் ஒரு சொற்பொழிவு ஆற்றனும்” என மிகப் பணிவோடு மதிவாணர் தான் வந்த காரணத்தை விளக்கிக் கூறினார்.

“என்ன தலைப்புல பேசனும்?”

“இன்றைய இளைஞர்களும் நமது தமிழ்ப்பண்பாடும்”

தலைப்பைக் கேட்ட மாத்திரத்தில் பழனி வாத்தியாரின் புருவம் சற்று அகன்றே விரிந்தது. அவர் வாய் எதையோ சொல்லத் துடித்தது. ஆனால் பேச முடியாத அளவிற்கு அவர் தொண்டையை ஏதோ அடைத்தது. பெருமூச்சு அவரை அறியாமல் வெளிவந்தது.

“சாருக்கு இந்தத் தலைப்பு ஒத்து வராட்டி வேற தலைப்பில பேசலாம். நீங்களே ஒரு நல்ல தலைப்பா பார்த்துத் தேர்ந்தெடுத்துடுங்க. எனக்கு எந்த ஆட்சேபணையும் கிடையாது” மதிவாணர் பேசிக் கொண்டே போனார்.

“சேச்சே… தலைப்புல என்ன இருக்கு? இளைஞர்கள் விரும்புற வகையில பேசனும். அது தான் முக்கியம்.”

“சரியா சொன்னீங்க சார்”

”இந்தக் காலத்து இளைஞர்கள் எங்கே நம்ம தமிழ்ப் பண்பாட்டைக் கடைப்பிடிக்கிறாங்க? பண்பாடுனா என்னனு கேட்கிற நிலையில தானே அவங்க இருக்காங்க?”

“எல்லாம் நம்ம வளர்ப்பு முறையில தான் இருக்குதுங்க சார். என்ன நான் சொல்றது சரிதானே?’

இந்தப் பதிலைப் பழனி வாத்தியார் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. தன்னைப் பார்த்து இந்த உலகமே எள்ளி நகையாடுவது போல் அவருக்குத் தோன்றியது. தன் வளர்ப்பு முறை சரியில்லை என யாரோ தன்னைச் சுட்டிக்காட்டுவது போல் இருந்தது. கோபம் அவர் கண்ணை மறைத்தது. “அப்போ என் வளர்ப்புச் சரியில்லைனா சொல்றீங்க?”

“சார் என்ன சொல்றீங்க? எனக்குப் புரியலை?” மதிவாணர் குழப்பத்துடன் கேட்டார். தன் நிலை உணர்ந்த பழனி வாத்தியார், சுய கட்டுப்பாட்டுக்குத் திரும்பினார். தன்னைச் சுதாரித்துக் கொண்டு “மன்னிக்கனும் ஏதோ ஞாபகத்துல பேசிட்டேன். அது போகட்டும். எப்போ பேச வரனும்னு சொல்லலையே?”

“அடுத்த மாதம் பத்தாம் தேதி”

“கொஞ்சம் இருங்க. டைரியைப் பார்த்துட்டுச் சொல்றேன்’ என்றவர் தன் தர்ம பத்தினியை அழைத்தார். “பார்வதி… என்னோட டைரியைக் கொண்டு வாம்மா” என அன்புக் கட்டளையிட்டார். சமையலறையில் வேலையாக இருந்த பார்வதி படுக்கையறைக்குச் சென்றாள். உள்ளே இருந்து ஒரு சிறிய புத்தகத்தைக் கொண்டு வந்து பழனியிடம் கொடுத்தாள்.

“எப்போது சொன்னீங்க?”

“அடுத்த மாதம் பத்தாம் தேதி”

“ம் எனக்கு அன்றைக்கு ஒன்னும் முக்கியமான வேலை இல்லை. நான் வந்துடுவேன்.”

“ரொம்ப சந்தோஷம். நிகழ்ச்சி இரவு ஏழரை மணிக்குத் தொடங்கும். நீங்க ஒரு ஆறு ஆறரை மணி போல வந்துட்டீங்கனா சௌகரியமா இருக்கும். எதற்கும் ஒன்பதாம் தேதி போல நான் உங்களோட தொடர்பு கொண்டு ஞாபகமூட்டுறேன்” நன்றி பெருக்கோடு சொன்னார் மதிவாணர். தான் நினைத்து வந்த காரியம் பழமாகக் கனிந்ததில் அவருக்குப் பரம திருப்தி.

“சரி அப்படியே ஆகட்டும்.”

“அப்போ எனக்கு உத்தரவு கொடுங்க. அம்மாகிட்ட சொல்லனும்” என்று கூறி, சமையலறை பக்கம் தன் பார்வையை ஓடவிட்டார் மதிவாணர். “பார்வதி… பார்வதி…” எனக் குரல் எழுப்பினார் பழனி வாத்தியார். மதிவாணர் விடை பெற எழுந்தார். “தம்பி இருந்து சாப்பிடுப் போகலாமே” எனத் தாய்மை உணர்வுடன் பார்வதி கனிந்த முகத்துடன் கேட்டாள். “பரவாயில்லைம்மா. இன்னொரு நாள் ஆகட்டும்” என வாய் நிறைய பல்லைக் காட்டிச் சிரித்து மழுப்பினார் மதிவாணர். மதிவாணர் சென்ற பிறகு அவ்வீட்டில் அமைதி நிரம்பி வழிந்தது.

பழனி வாத்தியார் தொலைக்காட்சிப் பெட்டியின் விசையை அழுத்தினார். தொலைக்காட்சியில் ஏதோ ஆங்கிலப் படம் இடம் பெற்றது. அவர் அதைப் பார்ப்பது போல் பாவனை செய்தார். அவர் மனம் அதில் லயிக்கவில்லை. ஒப்புக்குப் பார்த்துக் கொண்டிருந்தார். அது பார்வதிக்கும் தெரியும். அங்கிருக்க விரும்பாத பார்வதி சமையலறைக்குச் சென்றாள். அவ்வீட்டில் ஒருவித அமைதி காணப்பட்டது. அவர்கள் இருவருக்குள்ளும் பனி படர்ந்த பூசல் நிலவியது. தனிமை அவர்களை வாட்டத் தொடங்கியது.

2

பழனியப்பன் என்ற முழுப்பெயரைக் கொண்ட அவர் ஒரு தமிழாசிரியர். அதனால் எல்லோரும் அவரைப் பழனி வாத்தியார் என்றே அழைப்பது வழக்கம். தமிழ்ப்பற்று மிக்கவர். ‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’ என்ற கொள்கை கொண்டவர். அந்தக் காலத்து மனிதர். பழமையில் ஊறியவர். தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என வாதிடுபவர். தான் சொல்வது தான் சரி, தன் பேச்சுக்கு மறுபேச்சு இருக்கக் கூடாது என்று நினைப்பவர். அதற்குக் காரணம் அவர் வளர்ந்த விதம் – வாழ்ந்த சூழ்நிலை.

குடும்பத்தை நடத்துபவர் கணவர். அவருக்குக் கட்டுப்பட்டவளாக மனைவி இருக்க வேண்டும். பிள்ளைகள் பெற்றவர்களுக்கு அடங்கியவர்களாகத் திகழ வேண்டும் என எண்ணுபவர். அதற்காகக் குடும்பத்தை அடிமையாக நடத்த வேண்டும் என்ற எண்ணம் அவருக்குக் கிடையாது. குடும்பத் தலைவன் என்ற முறையில் தன் விருப்பப்படி எல்லாமே நடக்க வேண்டும் என வாதிடுபவர். மொத்தத்தில் தனது சாம்ராஜ்யம் கொடி கட்டிப் பறக்க வேண்டும் என எதிர்பார்ப்பவர்.

ராஃபிள்ஸ் சிங்கப்பூரை வர்த்தக மையமாக உருவாக்க நினைத்தபோது இந்தியாவிலிருந்து பல இந்தியர்கள் நம் நாட்டுக்குக் கூலியாட்களாகக் குடியேறினர். அப்படி வந்தவர்களுள் ஒருவர் தான் பழனி வாத்தியார். தூரத்து உறவினர் ஒருவரின் துணையுடன் சிங்கைக்குத் தன் பதிமூன்றாவது வயதில் வந்தார். புது நாடு. புது அனுபவம். அவருக்கு யாரும் பரிட்சமாகாத நிலை. ஒரு நல்ல உள்ளத்தின் சிபாரிசில் இராம கிருஷ்ண மடத்தில் தன் ஆரம்பக் கல்வியைத் தொடங்கினார். அப்போது வசதி குறைந்தவர்களுக்குப் புகலிடம் அளிக்கும் இடமாக அம்மடம் அமைந்திருந்தது.

காலம் யாருக்கும் காத்திராமல் தன் பணியைச் செவ்வனே ஆற்றியது. சிறுவன் பழனி வளர்ந்து வாலிபனானார். ஊரில் இருந்த அவர் பெற்றோர் மகனுக்குக் கால்கட்டுப் போடத் துடித்தனர். கடல் கடந்து இருக்கும் தன் மகன் சிங்கப்பூரிலேயே மணம் முடித்து விடுவாரோ என்ற பயம் பழனி வாத்தியாரின் பெற்றோருக்கு. அதனால் சொந்தம் விட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தில் அவர் அக்காள் மகள் பார்வதியை அவருக்கு மணம் முடிக்க ஏற்பாடு செய்தனர். கை நிறைய சம்பாதித்திருந்தாலும் பெற்றோருக்குக் கட்டுப்பட்டவர் பழனி. “நீர் அடித்து நீர் – விலகுமா?” சொந்த அக்காள் மகளான பார்வதியை மணம் புரிந்து கொண்டார். மணம் முடித்த கையோடு பார்வதியைச் சிங்கப்பூருக்கும் அழைத்து வந்தார்.

“மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’ என்று கூறுவார்கள். பழனியின் வாழ்க்கையில் அது உண்மையானது. திருமணத்திற்குப் பிறகு பழனியின் வாழ்வில் வசந்தம் வீசத் தொடங்கியது. இராம கிருஷ்ண மடத்தில் தான் கற்ற தமிழ்க் கல்வி அவர் வாழ்க்கைப் பயணத்தை நிம்மதியுடன் நடத்தத் துணை புரிந்தது. ஆம்! அவர் தமிழாசிரியராகப் பணி புரிந்து அம்மடத்தில் இருந்த ஆதரவற்றோருக்குத் தமிழ் கற்றுக் கொடுத்தார்.

“ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்” என்பது போல சிங்கப்பூரில் சம்பாதித்து வந்தாலும், அவர் மனம் ஊரில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தது. தான் சம்பாதிக்கும் பணத்தில் பெரும் பங்கை ஊருக்கு அனுப்பி வைத்துவிடுவார். அடிக்கடி இந்தியா செல்வார். ஊரில் நில புலன்களை வாங்குவதில் கருத்தாய் இருந்தார். தான் சம்பாதிக்கும் வரை சம்பாதித்து விட்டுக் கடைசி காலத்தில் இந்தியாவுக்குச் செல்ல வேண்டும் என்ற தீர்க்கமான முடிவுடன் இருந்தார். இப்படி எண்ணியதெல்லாம் ஒரு காலம். அந்த எண்ணம் காலப்போக்கில் மாறத் தொடங்கியது.

அப்போது சிங்கப்பூரில் பல துறைகளில் பின் தங்கிய நிலையில் இருந்த தமிழ் மக்களைக் கண்டு வேதனையுற்றார் பழனி. அவர்களுக்குத் தொண்டு செய்ய உறுதி பூண்டார். அவரின் தொண்டுக்குத் தோள் கொடுக்க ஒரு நல்ல இதயம் காத்திருந்தது. ஆம்! இவ்வேளையில் தான் அவருக்குத் தமிழ்வேள் கோ.சாரங்கபாணியின் நட்புக் கிட்டியது. சாரங்கபாணியின் உந்துதலால் அவர் பல தமிழ்ப் பணிகளை மேற்கொண்டார். அப்போது மிகவும் பிரபலம் பெற்று விளங்கிய ‘தமிழர் திருநாள்’ விழாக்கான பெரும் பொறுப்பை அவர் தன் தலை மேல்கொண்டு செய்தார்.

தமிழவேள் கோ.சாரங்கபாணியின் நட்புக் கிட்டிய பிறகு அவர் வாழ்வில் புது மாற்றம் தெரிந்தது. ஊர் தொடர்பு கொஞ்சம் கொஞ்சமாகத் துண்டிக்கப்பட்டது. சமூகச் சேவையில் நாட்டம் கொண்டார். பல தமிழ் அமைப்புகளுடன் சேர்ந்து ஏழை மாணவர்களுக்கும் வசதி குறைந்தவர்களுக்கும் பாடம் கற்றுக் கொடுத்தார். சிராங்கூன் வட்டாரத்தில் அவரை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவரிடம் ஆலோசனை கேட்கவும், அவர் சொற்படி நடக்கவும் பலரும் காத்திருந்தனர். அந்த அளவிற்கு அவர் மிகவும் புகழ் – பெற்று விளங்கினார். அவர் மக்களிடையே மிகுந்த செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்தார். அவருடைய செல்வாக்கு ஒருநாள் தரைமட்டமாகத் தகர்த்தெறியப்படும் என்று அவர் நினைக்கவேயில்லை.

3

பழனி வாத்தியார் பார்வதி தம்பதிகளின் தாம்பத்திய வாழ்வின் அன்பளிப்பாய்க் கலைவாணன் பிறந்தான். ஐந்தாண்டுகளுக்குப் பின் தவமிருந்து பிறந்த பிள்ளையாதலால் கலைவாணன் மீது தன் உயிரையே வைத்திருந்தார் பழனி வாத்தியார். தந்தை என்ற பொறுப்பு வந்த பிறகு அவருடைய உலகம் கலைவாணனைச் சுற்றியே வட்டமிட்டது. தமிழவேளின் மறைவுக்குப் பிறகு அவரின் பொதுத் தொண்டில் விரிசல் ஏற்பட்டது. சிங்கை நாட்டின் நிரந்தரவாசியானார். குடும்ப வாழ்வில் தன் முழுக் கவனத்தைச் செலுத்தத் தொடங்கினார். ஊர் தொடர்பு அறுந்துவிட்டது. பெற்றோர் இருவரும் காலமாகவே, அங்குச் செல்வதில் பயன் இல்லை என்பதை உணர்ந்தார். அதன் பின் ஊருக்கும் அவருக்கும் இருந்த தொடர்பு படிப்படியாகக் குறைந்தது.

கலைவாணனின் வருகைக்குப் பிறகு பழனி வாத்தியாரின் போக்கில் பெரும் மாற்றம் தெரிந்தது. அவரின் பெரும்பாலான நேரம் கலைவாணனிடமே கழிந்தது. பாசம் மிக்க தந்தையாக விளங்கினார். ஆனால் அதேசமயம் தன் பிடிவாத குணத்தைத் தளர்த்த அவர் ஒருபோதும் முயன்றதில்லை; முயற்சித்ததும் இல்லை. வழக்கமான பிடிவாத குணம். தன் விருப்பம் போல் தான் எல்லாம் நடக்க வேண்டும் என்ற கட்டாயம். பார்வதிக்குக் கணவரின் போக்குப் பழகிவிட்ட ஒன்று. ஆனால் வளர்ந்து வரும் கலைவாணனுக்குத் தந்தையின் போக்குப் புரியாத ஒன்று. அதைவிடப் பிடிக்காத ஒன்றும் கூட.

பழனி வாத்தியாரின் தந்தை அவரிடம் கையாண்ட அதே உத்தியைத் தன் ஒரே மகன் கலைவாணனிடமும் புகுத்த விரும்பினார் பழனி வாத்தியார். இன்றைய இளைஞனான கலைவாணனுக்குத் தந்தையின் கட்டுப்பாடு பிடிக்கவில்லை. என்றாலும் தாயின் முகத்திற்காகப் பொறுத்துக் கொண்டான். தந்தை மேல் கொண்ட வெறுப்பால் தமிழ் அவனுக்கு வேப்பங்காயாகக் கசந்தது. ஆங்கிலத்தில் சிறந்து விளங்கினான். இது பழனி வாத்தியாருக்குப் பெரும்குறையாகவே பட்டது. இருந்தாலும் தமிழைத் தவிர மற்றப் பாடங்களில் மகனுக்குள்ள திறமையை அவர் அறியாமல் இல்லை. அது அவருக்குச் சற்று ஆறுதலை அளித்தது. கலைவாணன் பல்கலைக் கழகம் வரை கற்றுத் தேறினான். ஒரு பட்டாரியானான். தமிழ் வாத்தியார் மகன் பட்டதாரியானான் என்ற நினைப்பே, பழனி வாத்தியாருக்குப் பெருமையாக இருந்தது. இருப்பினும் தன்னுடைய கட்டுப்பாடான வளர்ப்பு முறை தான், மகனை இந்த அளவுக்கு உயர்த்தியுள்ளது என அவர் ஆணித்தரமாக நம்பினார். அதனால் அவரின் கட்டுப்பாடு மேலும் இறுகியது.

“பிடிக்காத மனைவி கை பட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம்” என்ற வழக்குத் தமிழில் இருந்து வரும் ஒரு வேண்டாத பழக்கமாகும். அது கலைவாணன் விஷயத்தில் மிகவும் சரியாக அமைந்தது. தந்தை மீது கொண்ட வெறுப்பால் அவர் எதைச் சொன்னாலும் கலைவாணனுக்குத் தப்பாகவே தோன்றியது. அவருக்கு எதிராகவே எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்ற வெறி அவனுள் எழத் தொடங்கியது. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே எப்போதும் போராட்டம்தான். எது செய்தால் தன் தந்தைக்குப் பிடிக்காதோ அதைச் செய்வதே அவனுடைய வேலையாக இருந்தது.

சில சமயம் கலைவாணனின் செயல் வேண்டுமென்றே அமைவதும் உண்டு. இது தன் தந்தைக்கு அவன் வழங்கும் தண்டனையாகக் கருதினான். இளமை வேகத்தில் அவன் செய்யும் செயலின் விளைவைப் புரிந்து கொள்ளாது, வாலிப முறுக்கில் ஒருவித வெறியில் அவன் அதைச் செய்தான். பின் விளைவை உணராது, அவன் செய்த செயல் பழனி வாத்தியாருக்கு வேண்டுமானால் தண்டனையாக அமையலாம். ஆனால் அந்தத் தாய்க்கு அது வேதனையாக இருந்தது. பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு அல்லவா?

அதிகக் கட்டுப்பாடு சில சமயம் விபரீதத்தில் இட்டுச் செல்வதும் உண்டு. கலைவாணனைப் பொறுத்த வரை அது உண்மையாகிவிட்டது. தந்தையின் கட்டுப்பாடு அவனைப் பிடிவாதக்காரனாக மாற்றியது. தந்தைக்கு எதிராகச் செய்வதில் அவன் இன்பம் கண்டான். ஏட்டிக்குப் போட்டியாகச் செய்வதே அவன் வாடிக்கையாயிற்று. பார்வதி மகனின் செயலைக் கண்டு வருந்தினாள். தாயின் கண்ணீர் சில சமயம் கலைவாணனைக் கட்டுப்படுத்தும். ஆனால் அது நிரந்தரம் அல்ல. தற்காலிகமாக அவன் அமைதியாக இருப்பான். இந்த அமைதிபெரும் பூகம்பத்திற்கு அடையாளம் எனப் பார்வதிக்கு அப்போது தெரிய நியாயமில்லை தான்.

4

தன் பட்டப்படிப்பை முடித்துக் கொண்ட கலைவாணனின் போக்கில் பெரும் மாற்றம் தெரிந்தது. அவன் வீட்டில் தங்காமல் அடிக்கடி வெளியே சென்றுவருவான். பழனி வாத்தியாருக்கு இது கட்டோடு பிடிக்கவில்லை. அவர் தன் அதிகாரத்தை நிலை நிறுத்த முயற்சிக்கும் போதெல்லாம் பார்வதி மகன் மீது கொண்ட பாசத்தால் மிகவும் பாதிக்கப்படுவாள். மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவிப்பாள் பார்வதி. “அடி உதை உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள்” என்ற பழமொழியில் நம்பிக்கை கொண்டு, தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளையக் கை நீட்டி அடிக்கவும் முயல்வார் பழனி வாத்தியார்.

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்களே. அதுபோல சிலசமயம் தந்தை மகனுக்குள் ஏற்படும் பூகம்பம் அந்த வீட்டையே அதிரச் செய்யும். எந்தக் குடும்பத்தில் சண்டை இல்லை. இன்றைக்கு அடித்துக் கொள்வார்கள். நாளைக்கு ஒன்று சேர்ந்துவிடுவார்கள். குடும்பத்தில் இப்படி நடப்பது சகஜம்தானே? போகப் போகச் சரியாகிவிடும் என்று எண்ணிப் பார்வதி தன்னையே சமாதானம் செய்து கொண்டாள்.

ஆனால் அவள் நினைத்தபடி அவ்வளவு எளிதில் சுமூகமாகக்கூடிய விஷயம் இல்லை என்பதை அவள் போகப் போகப் புரிந்து கொண்டாள். ”உரலுக்கு ஒரு பக்கம் இடி. மத்தளத்திற்கு இரு பக்கம் இடி” என்பார்களே. பார்வதியும் அந்த நிலையில் தான் இருந்தாள். கணவர், மகன் இருவருக்கும் இடையில் மாட்டிக் கொண்டு யாருக்குச் சாதகமாகப் பேசுவது எனத் தெரியாமல் தவித்தாள் பார்வதி.

இறக்கை முளைத்த பறவை கூட்டை விட்டுப் பறப்பதைப்போல தந்தை பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளக்கூடிய சூழ்நிலை கலைவாணனுக்கு ஏற்பட்டது. ஆம்! தன்னுடன் பல்கலைக் கழகத்தில் படித்த மோனிகா லிம் என்ற சீனப் பெண்ணைக் காதலித்து மணமுடிக்க விரும்பினான் கலைவாணன். விஷயத்தைக் கேள்விப்பட்ட பழனி வாத்தியார் எரிமலை போல் கொதித்தெழுந்தார். பழமையில் ஊறிய அவரால் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தந்தைக்கும் மகனுக்கும் இடையே பாரதப்போர் மூண்டது. ஏற்கனவே தந்தை மேல் கலைவாணனுக்கு இருந்த வெறுப்பு இப்போது மேலும் அதிகரித்தது.

தந்தை சொல்லை மீறி, மோனிகாவைப் பதிவுத் திருமணம் செய்து கொண்டு இனிதே இல்லறத்தை நடத்த முடிவு செய்தான் கலைவாணன். இதில் அதிகம் பாதிக்கப்பட்டவள் பார்வதி தான். ஒரு பக்கம் கட்டிய கணவர். மறுபக்கம் பெற்றெடுத்த பிள்ளை. நெற்றியில் கணவரையும் நெஞ்சினில் பிள்ளையையும் சுமந்து இரு தலைக்கொள்ளி எறும்பு போல் காலத்தை ஓட்டினாள் அவள்.

பார்வதியின் வேதனையைக் கட்டிய கணவர் பழனி வாத்தியாரும் அறியவில்லை. பெற்றெடுத்த மகன் கலைவாணனும் உணரவில்லை. காதல் என்ற பிடியில் சிக்கிய கலைவாணன் தான் காதலித்த பெண்ணையே மணக்கும் நோக்கில் வீட்டை விட்டு வெளியேறினான். தன் ஒரே மகன் என்றும் பாராமல் அவன் கல்யாணத்தை முன் நின்று நடத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவராய்ப் பழனி வாத்தியார் வாளாதிருந்தார். இருவரும் அவரவர்கள் கொள்கையில் பிடிவாதமாய் இருந்தனர். வயதான காலத்தில் பெற்றோரை மதிக்க வேண்டும் என்று கலைவாணனும் நினைக்கவில்லை. வயசுப் பையனின் ஆசையை நிறைவேற்ற விட்டுக் கொடுக்க வேண்டும் என்று பழனி வாத்தியாரும் துணியவில்லை. அதன் முடிவு கலைவாணன் வீட்டை விட்டு வெளியேறினான்.

5

மோனிகாவின் கண்களைக் தூக்கம் தழுவ மறுத்தது. பக்கத்தில் படுத்திருந்த கலைவாணனைத் தட்டி எழுப்பினாள். “என்னங்க தூக்கமா?’ என்று வாஞ்சையுடன் கேட்டாள். பாதி தூக்கத்தில் இருந்த கலைவாணன் “மோனி என்ன விஷயம்?” என அன்போடு கேட்டான். “நான் சொன்னேனே. அந்த விஷயத்தை உங்க அம்மாகிட்ட சொல்லிட்டீங்களா?” ஏக்கத்தோடு கேட்டாள். அவன் கூறும் பதிலைக் கேட்கும் ஆவல் அவள் கேள்வியில் தொனித்தது.

அவளை ஏமாற்ற அவன் விரும்பவில்லை. அதே சமயத்தில் உண்மையைச் சொல்லி அவள் மனத்தைப் புண்படுத்தவும் அவன் விரும்பவில்லை. படுக்கையிலிருந்து மெல்ல எழுந்தான் கலைவாணன். கணவன் எழுவதைக் கண்டு தானும் எழுந்தாள் மோனிகா.

“இங்கே பார் மோனிகா அம்மாகிட்ட இந்த விஷயத்தைச் சொல்றதால மட்டும் நாம ஒன்று சேர்ந்திட முடியுமா? என் அப்பாவைப் பற்றி உனக்குத் தெரியாது. அவர் தான் பிடிச்ச முயலுக்கு மூனே காலுனு வாதிடுறவரு. அதனால்….”

அதற்கு மேல் கலைவாணனால் பேச முடியவில்லை. அவன் மௌனமானான். மோனிகாவின் விசும்பல் ஒலி மெல்ல அவன் காதுகளுக்குக் கேட்டது. மனைவியின் பக்கம் பார்வையைத் திருப்பினான். அவள் கண்களைத் துடைத்துக் கொண்டிருப்பது தெரிந்தது. மனைவியின் தலையைக் கோதிவிட்டான். அவள் அவனை ஏக்கத்தோடு பார்த்தாள்.

“இந்த மாதிரி நேரத்துல நீ கலங்கலாமா? அது என் பையனுக்கு நல்லதில்லையே” என பொய்க்கோபத்துடன் கலைவாணன் அவளைக் கடிந்து கொண்டான். அந்தக் கண்டிப்பு அவளுக்கு இதமாக இருந்தது. ஒருவித இன்பத்தை ஏற்படுத்தியது. இப்படி ஏதாவது சமாதானத்தைக் கூறிப் பேச்சைத் திசை திருப்பி விடுவதில் கலைவாணன் கை தேர்ந்தவன். அவளுக்கு அது நன்கு தெரியும். அதனால் அவன் போக்குக்கே பேசவிட்டாள்.

அவளை மெல்ல கட்டித் தழுவியபடி “மோனிகா நாளைக்கு அம்மாகிட்ட இந்த விஷயத்தைச் சொல்றேன். நீ கவலைப்படாம தூங்கு” என அவளைத் தூங்க வைத்தான். அவளும் தூங்குவதுபோல் பாவனை செய்தாள்.

கலைவாணன் மோனிகா திருமணம் புரிந்து ஓராண்டுக்கு மேலாகிறது. இந்த ஓராண்டில் ஒருமுறை கூட தன் மாமியாரும் மாமனாரும் வந்து பார்க்கவில்லையே என்ற ஏக்கம் மோனிகாவுக்கு இருக்கவே செய்தது. தன்னால் பிரிந்த இந்தக் குடும்பம் தனக்குப் பிறக்கப் போகும் குழந்தை மூலமாக ஒன்று சேர வேண்டும் என அவள் ஒவ்வொரு நாளும் தெய்வத்தை வேண்டிக் கொண்டிருந்தாள். அந்தத் தெய்வம் என்று தான் கண் திறக்குமோ தெரியவில்லை?

கார் விபத்து ஒன்றில் பெற்றோரை இழந்த மோனிகா தன் பாட்டியின் ஆதரவில் வளர்ந்தவள். அதனால் தாய் இல்லாத குறை அவள் மனத்தில் பெரும் வடுவாக மாறி இருந்தது. கலைவாணனின் பழக்கம் ஏற்பட்டபோது அவன் தாயைப் பற்றி அவன் சொல்லக் கேட்டிருக்கிறாள் அவள். அப்போதெல்லாம் தனக்கு ஒரு தாய் கிடைத்துவிட்டாள் என்றே அவள் பூரிப்படைந்தாள். ஆனால் பழனி வாத்தியரைப் பற்றிக் கலைவாணன் சொன்னபோது தன் அடி வயிற்றில் யாரோ புளியைக் கரைப்பது போல் இருந்தது அவளுக்கு. இருப்பினும் அவரை எப்படியும் தன் அன்பால் கவர்ந்து விடலாம் என மனக்கோட்டை கட்டினாள்.

பெற்றோரை எதிர்க்கக் கலைவாணன் துணிந்தபோது “வாணன் நாம பிரியறது தான் நம்ம இரண்டு குடும்பத்திற்கும் நல்லது என நான் நினைக்கிறேன்” என மோனிகா பின் வாங்கியது தான் தாமதம் கலைவாணன் அவளை வாய்க்கு வந்தபடி திட்டித் தீர்த்துவிட்டான். அவள் எதற்கும் வாயைத் திறக்கவே இல்லை. அடைமழை பெய்து ஓய்ந்தது போல் கலைவாணன் பேசி முடித்த பிறகு “வாணன் பேசி முடிச்சிட்டீங்களா? என்னை மலருக்கு மலர் தாவும வண்டுனா நினைச்சிட்டீங்க. உங்க குடும்பத்துல என்னால் பிளவு ஏற்படக்கூடாதுனு தான் நான் ஒதுங்கிப் போக நினைச்சேன். மற்றபடி நானும் நல்ல குடும்பத்துலேந்து வந்தவ தான்” என அழாக் குறையாகக் கூறியபோது தான், கலைவாணன் தன் தவற்றை உணர்ந்தான்.

நரம்பில்லாத நாக்கு எப்படியெல்லாம் பேச வைத்துவிட்டதை அறிந்தான். அதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டான். அப்போது தான் மோனிகாவின் அன்பு உள்ளததை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. எக்காரணத்தைக் கொண்டும் அவளைக் கைவிடக் கூடாது என்று முடிவு செய்தான். இதனால் தந்தையை எதிர்த்து வீட்டை விட்டு வெளியேறினான். தாய் அன்பையும் புறக்கணித்தான். காதலுக்குத் தான் எத்துணை வலிமை!

6

கோவிந்தசாமி கல்யாண மண்டபம் அன்று விழாக் கோலம் பூண்டிருந்தது. மக்கள் கூட்டம் அரங்கம் முழுவதும் நிரம்பி வழிந்தது. கல்விமான்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ மணிகள் என மக்கள் வெள்ளம் போல் அலை கடல் எனத் திரண்டு வந்திருந்தது மதிவாணருக்குப் பெருமையாக இருந்தது. தான் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிக்கு மக்கள் பேராதரவு அளித்ததை எண்ணி அவர் ஆனந்தக் கடலில் நீந்தினார் மதிவாணர்.

அந்நிகழ்ச்சிக்கு முத்தாரமாய் அமைந்த பழனி வாத்தியாரின் சொற்பொழிவு மன நிறைவு அளிக்கும் வகையில் அமைந்திருந்தது. மதிவாணரைப் போல பலரும் பழனி வாத்தியாரின் பேச்சை மெய்ம்மறந்து ரசித்தனர். பழனி வாத்தியார் தன் பேச்சை முடித்தபோது அரங்கமே கரவொலி எழுப்பித் தங்களது பாராட்டைத் தெரிவித்தது. அந்தக் கரவொலி பழனி வாத்தியாருக்கு டானிக் குடித்தது போல் உற்சாகமாக அமைந்தது.

மேடையிலிருந்து கீழே இறங்கிய பழனி வாத்தியாரிடம் “சார் ரொம்ப அருமையான சொற்பொழிவு. ஆழமான கருத்து. இடையிடையே நகைச்சுவை. நீண்ட நாள்களுக்குப் பிறகு ஒரு நல்ல உரையைக் கேட்ட திருப்தி மக்களுக்கு. ரொம்ப நன்றி சார்” என வாய் நிறைய வாழ்த்தினார் மதிவாணர். தான் கஷ்டப்பட்டது வீண்போகவில்லை. தான் நினைத்தது போலவே, பழனி வாத்தியார் வாக்களித்தபடி விழாவுக்கு வந்து மனநிறைவளிக்கும்படி பேசிப் பாராட்டைப் பெற்றுவிட்டார் என எண்ணிப் பூரித்தார் மதிவாணன்.

இருக்கையில் வந்து அமர்ந்த பழனி வாத்தியார், பின்புறத்தில் யாரோ இருவர் தன்னைப் பற்றி விமர்சிப்பதைக் கேட்டு அப்படியே சிலை என அமர்ந்தார்.

“எல்லாம் நேரம் தான் பார்த்தீயா? யாரு என்ன பேசனும்கிற விவஸ்தையே இல்லாம போயிட்டு”

“ஏன் அப்படிச் சொல்றீங்க?”

“பின்னே என்னப்பா? இளைஞரும் தமிழ்ப்பண்பாடும்கிற தலைப்பைப் பேசறதுக்குப் பொருத்தமான ஆள் வேற யாரும் கிடைக்கலையா?”

“வாத்தியார் நல்லா தானே பேசினாரு”

“ஆயிரம் தான் பேசட்டும். சொந்த வாழ்க்கையில் கோட்டை விட்டுட்டாரே.”

“நீ என்னப்பா சொல்றே?”

“இப்போ பேசினாரே அந்தப் பெரியவரோட மகன் சீனத்தியைக் கட்டிக்கிட்டான். நம்ம இனத்துல பொண்ணுக்கா பஞ்சம்.”

“இப்படித்தான் ரொம்ப பேரு சொல்றது ஒன்னு செய்றது ஒன்னா இருக்குது.”

“தமிழ்ப் பண்பாடு. கலாச்சாரம்னு வாய்க்கிழியப் பேசறவங்க தான் இப்படியெல்லாம் நடந்துக்குவாங்க.”

“ஆமாம் ஆமாம். இவங்க எல்லாம் ஊருக்குத் தான் உபதேசம் பண்ணுவாங்க.”

வம்புப் பேச்சுக்குப் பின் கொல்லென்ற சிரிப்பொலி கேட்டது. பின்னால் அமர்ந்திருந்த இருவர் தன் காதுபடவே பேசியது பழனி வாத்தியாரின் உள்ளத்தைச் சுருக்கெனக் குத்தியது. நரம்பில்லாத நாக்கு எப்படி வேண்டுமானாலும் பேசட்டும் என்று சொல்லி அதை விட்டுவிட முடியாது. அதற்காக அவர்களிடம் சண்டை போடவும் முடியாது. தனக்கு இப்படி ஓர் அவமானத்தை ஏற்படுத்திய கலைவாணன் மீது அவருக்குக் கோபம் வந்தது. எப்படித் தலை நிமிர்ந்து வாழ்ந்தவர் இப்படித் தலை குனியும்படியாய்த் தன் மகன் வைத்துவிட்டானே என மனம் வெதும்பினார். அதன் பின் அவர்கள் பேசியது எதுவும் பழனி வாத்தியாரின் காதில் விழவில்லை.

தமிழ்ப் பண்பாடு என மூச்சுக்கு மூச்சு பேசி வந்த பழனி வாத்தியார், தன் மகன் ஒரு சீனப் பெண்ணைத் திருமணம் புரிந்தது முதல் பொது நிகழ்ச்சிகளைத் தவிர்த்தே வந்தார். இதற்குக் காரணம் பல சந்தர்ப்பங்களில் அவர் மனம் புண்படும்படி பிறர் கேவலமாகப் பேசுவதை அவர் கேட்டிருப்பதே ஆகும். அந்தக் குதர்க்கப் பேச்சைக் கேட்கும் சக்தி அவருக்கு இல்லை. தன் குடும்பத்தில் ஏற்பட்ட அசம்பாவிதத்திற்குப் பிறகு இப்படிப்பட்ட பொது நிகழ்ச்சிக்குச் செல்வதைத் தவிர்த்தே வந்தார். ஆனால் மதிவாணர் தன்னை மதித்து வீடு தேடி வந்து கேட்டுக் கொண்டதற்காக அவர் இதற்குச் சம்மதித்தார். தனக்கு இப்படி ஓர் அவமானம் தன் மகனால் ஏற்படும் என அவர் எதிர்பார்க்கவில்லை. காலம் கடந்தாலும் இன்னும் சிலர் அதை மறுக்காமல் ஞாபகம் வைத்துக் கொண்டு அசை போடுகிறார்கள். அதைத் தடுக்க யாரால் முடியும்?

7

நினைக்க நினைக்க பார்வதிக்கு ஆச்சரியமாக இருந்தது. வெறும் ஆச்சரியம் இல்லை. இனிக்கும் ஆச்சரியம். கலைவாணன் தந்தையாகிவிட்டான். அவன் பிறந்தது. வளர்ந்தது, படித்தது. எல்லாம் நேற்று நடந்ததுபோல் இருந்தது பார்வதிக்கு. ஆனால் இன்று அவனும் ஒரு பிள்ளைக்குத் தந்தை. அதற்குள் இவ்வளவு நடந்துவிட்டது. இவை எல்லாவற்றிற்கும் மேலாகத்தான் பாட்டி ஆகிவிட்டதை நினைக்கும்போது அவளால் தன் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கண்களிலிருந்து நீர் ஆறாகப் பெருகியது. இந்த விஷயத்தைக் கலைவாணன் தொலைபேசி மூலம் தெரிவித்தபோது அவள் அப்படியே பூரித்துப் போனாள்.

இந்த இனிப்பான செய்தியைத் தன் கணவரிடம் சொல்லத் துடித்தாள். அவர் பள்ளிக்குத் தொலைபேசி மூலம் தெரியப்படுத்தலாமா? ஒரு கணம் யோசித்தாள். மறுகணம் அவள் உள்ளேயே புதைந்துள்ள ஒரு வித பயம் அவளை ஆட்கொண்டது. உடல் இலேசாக நடுங்கியது. அதனைக் கட்டுப்படுத்திக் கொண்டாள். சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தாள். மணி பத்தரை. எப்படியும் இன்னும் மூன்று மணி நேரத்தில் அவர் வந்துவிடுவார். இந்தச் செய்தியைச் சொல்லி அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்த வேண்டும்.

எப்போதும் குதிரை வேகத்தில் செல்லும் கடிகாரம் அன்று ஆமை வேகத்தில் செல்வது போன்ற உணர்வை ஏற்படுத்தியது பார்வதிக்கு வழி மேல் விழி வைத்த வண்ணம் கண் இமைக்காமல் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தாள். இன்னும் சிறிது நேரத்தில் அவர் வந்துவிடுவார். வந்ததும் முதல் வேலையாக அவர் வாய்க்கு இனிப்பு வழங்க வேண்டும். அதற்காக இன்று காலை அவள் செய்த கேசரியை வெட்டி ஒரு தட்டில் அழகாக அடுக்கி வைத்தாள்.

வழக்கத்திற்கு மாறாக அவள் செயலில் ஒரு வேகம் இருந்தது. கண்ணாடி முன் நின்று தன்னை அலங்கரித்துக் கொண்டாள். இயற்கையிலேயே பார்வதி நல்ல அழகி. மாநிறம். பார்ப்பவரைச் சுண்டி இழுக்கும் வசீகர முகம். வயதாகி விட்டதால் இங்கொன்றும் அங்கொன்றுமாகச் சில நரைகள் தோன்றத் தொடங்கின. இருப்பினும் அந்த நரை அவள் அழகைக் கூட்டியதே ஒழிய அது அவள் அழகைக் குறைத்துக் காட்டவில்லை. பாட்டியாகிவிட்ட அந்த நினைப்பே அவள் அழகை இன்னும் பன்மடங்காக மெருகூட்டியது.

தலைப் பிரசவம் ஒரு பெண்ணுக்கு மறுபிறவி போன்றது என்பார்கள். இந்தச் சமயத்தில் மோனிகா அருகில் இருந்து அவளுக்குச் சேவை செய்ய முடியவில்லையே என்ற நினைப்பே பார்வதியைச் சுட்டெரித்தது. கணவர் வீட்டிற்கு வந்ததும் விஷயத்தைக் கூறி, மருத்துவமனையில் இருக்கும் தன் மருமகளையும் பேரனையும் பார்க்கச் செல்ல வேண்டும் என்ற துடிப்போடு காத்திருந்தாள்.

சுவர்க்கடிகாரம் டாண்…டாண்… என்று மூன்று முறை அடித்து ஓய்ந்தது. மணி மூன்று என்பதை அறிந்திருந்தும் அதை நிச்சயிக்கும் நோக்கில் வரவேற்பறையில் இருந்த சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தாள் பார்வதி. அதைப் பார்த்த மறுகணமே அவள் விழி வாசலை எட்டிப் பார்த்தது. “ம்… அவரை இன்னும் காணோம்” என்று பெருமூச்சுவிட்டாள். நேரம் ஆகிக் கொண்டே இருந்தது. பொறுமை இழந்த நிலையில் குட்டி போட்ட பூனை போல குறுக்கும் நெடுக்குமாய் நடந்தாள்.

கதவு திறக்கும் ஒலி கேட்டது. அவர் வந்துவிட்டார் என்ற நினைப்பே பார்வதியைத் துள்ளிக் குதிக்க வைத்தது. இருப்பினும் தன் ஆவலைக் கட்டுப்படுத்தியவளாய்ச் சமையலறையில் ஏதோ வேலை செய்வது போல் பாவனை செய்தாள். வீட்டிற்குள் நுழைந்த பழனி வாத்தியார் நேரே தன் கைகளையும் கால்களையும் கழுவக்

கழிவறைக்குச் சென்றார். அவர் தன் கடன்களைச் செய்யும் வரை பார்வதி பேசாது காத்திருந்தாள்.

பழனி வாத்தியார் எல்லாவற்றையும் முடித்துவிட்டு நேரே வரவேற்பறைக்குச் சென்றார். வழக்கமாக அங்கிருந்த செய்தித்தாளை எடுத்துப் படிக்கத் தொடங்கினார். சுவையான தேநீரையும் கேசரியையும் கொண்டு வந்து அவரிடம் நீட்டினாள் பார்வதி. வழக்கத்திற்கு மாறாக தன் மனைவி தன்னை அலங்கரித்துக் கொண்டிருப்பது பழனி வாத்தியாருக்கு ஆச்சரியமாக இருந்தது. விஷயத்தை அறிய “இன்னைக்கி ஏதும் விசேஷமா?” எனக் கேட்டார்.

தான் எதிர்பார்த்தபடியே கணவர் விசாரித்தது பார்வதிக்கு மகிழ்ச்சியாக இருந்தது. பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல் உள்ளம் மகிழ்ந்தாள். “நீங்க தாத்தா ஆயிட்டீங்க. கலைவாணன் போன் போட்டான். ஆண் குழந்தையாம். உங்களுக்குப் பேரன் பொறந்திருக்கான்” மகிழ்ச்சி பொங்கப் பார்வதி கூறினாள். “உன் பேரன்னு சொல்லு. இதுல என்னைச் சம்மந்தப்படுத்தாதே” கோபத்தோடு கத்தினார். “இன்னுமா நீங்க பழயதை மறக்கலை? என்ன இருந்தாலும்…” அவள் சொல்லி முடிக்கவில்லை. “இந்தக் கட்டை வேகுற வரைக்கும் நான் எதையும் மறக்க மாட்டேன்” எனக் கூறி அவள் வாயை அடைத்தார். “நமக்குள்ள ஆயிரம் வருத்தம் இருக்கலாம். அதுக்காக அந்தப் பிஞ்சுக் குழந்தையைப் பழி வாங்குறது நியாயமா? அந்தச் சிசு என்ன பாவம் பண்ணது?”

“அவனுக்கு மகனாப் பொறந்தது தான் அது செய்த பாவம்.”

“நல்ல காரியம் நடக்கும்போது பிரிஞ்ச குடும்பம் ஒன்னு சேரும்னு சொல்வாங்க.”

“பிரிஞ்ச குடும்பம் நல்ல காரியம் நடக்கும்போதும் சேரலாம். துக்க காரியம் நடக்கும் போதும் சேரலாம். என் இலவுக்குப் பிறகு வேணும்னா ஒன்னு சேருங்க.”

பழனி வாத்தியார் இப்படி அனல் தெறிக்கும் வார்த்தையைக் கக்குவார் எனப் பார்வதி சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அவள் கோவென்று அழுதாள். இந்த வார்த்தை அவளை மட்டுமல்ல அவரையும் எவ்வளவு தூரம் பாதிப்படையச் செய்யும் என்பதைப் பழனி வாத்தியார் அப்போது அறிவாரா? ம்ஹும் மாட்டார்.

8

படுக்கையறையில் நித்திரை புரிபவர் போல் கண்களை மூடியபடி அவர் கிடத்தப்பட்டிருந்தார். வெள்ளை விரிப்பால் கழுத்து வரை மூடி விட்டிருந்தார்கள். நெற்றியில் பட்டையாக விபூதி. தலைமாடில் கட்டையாக ஊதுவத்தி புகைந்து கொண்டிருந்தது. அதன் மணம் துக்க வீட்டின் நினைவை நெஞ்சில் நெருடியது. தலைமாட்டில் ஒரு தட்டில் யாரோ தேங்காய் உடைத்து வைத்திருந்தனர். ஒரு குத்து விளக்கு பளிச்சென்று எரிந்து கொண்டிருந்தது. ஒரு வெண்கலச் செம்பில் வண்ண மலர்களைச் செருகி வைத்திருந்தனர்.

பழனி வாத்தியாரைக் கண்டதும், “சார் அப்பா என்னை அனாதையாக்கிட்டுப் போயிட்டாரு” என ஓவென்று மாலதி கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களின் உள்ளத்தை மேலும் உலுக்கியது. உறவினர்களும் நண்பர்களும் சோகமே வடிவமாய்க் கண்களைத் துடைத்துக் கொண்டும், மூக்குகளை உறிஞ்சிக் கொண்டும் காட்சியளித்தனர். துன்ப எண்ணங்களை இறக்கி, மனத்தை இறுக்கிக் கொண்டு கடவுளை மௌனமாகப் பிரார்த்தனை செய்து கொண்டு செல்வரத்தினத்தின் கால்கள் அருகே வந்து நின்றார் பழனி வாத்தியார். அமைதி நிலவிய அந்த முகம் அவர் கண்களைப் பனிக்கச் செய்தது. மரக்கட்டை போல் உணர்வற்றுச் சில்லிட்டுப் போன அவரது கால்களைத் தொட்டுக் கும்பிட்டார்.

தன்னோடு ஆசிரியர் பணியைத் தொடங்கிய தன் நணபர் செல்வரத்தினம் இப்போது உயிரோடு இல்லை. அந்த நினைப்பே பழனி வாத்தியாரை நிலைகுலையச் செய்தது. அதற்கு மேல் அவரால் அங்கு நிற்க முடியவிலலை. தன் நண்பரின் மகள் மாலதியின் தோள்களுக்கு ஆதரவாக அவள் அருகினில் போய் அமர்ந்தார். மாலதியின் பக்கத்தில் பெண்களுக்கு மத்தியில் அமர்ந்திருந்த செல்வரத்தினத்தின் மனைவி “என்னை இப்படி அம்போனு விட்டுட்டுப் போயிட்டாரு. நான் இனி என்ன செய்வேன்?” என வந்தவர்களிடம் குறைபட்டுக் கொண்டது காதில் விழுந்தது.

“நேற்று கூட நல்லா தான் இருந்தாரு. திடீரென இப்படி மண்டையைப் போட்டுட்டாரு.’

”தலைவலினு சொல்லி ஒரு நாள் கூடப் படுத்தது இல்லை. அவ்வளவு ஆரோக்கியமானவரு.”

“இந்த வயதிலும் எவ்வளவு சுறுசுறுப்பா இருப்பாரு தெரியுமா?”

“யார் கண் பட்டதோ தெரியலை?”

“எல்லாம் விதி. அதை வெல்ல யாரால முடியும்?”

இப்படி ஆளுக்கு ஆள் இங்கொரு மூலையிலும் அங்கொரு மூலையிலும் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். மாலதி மட்டும் ‘அப்பா… அப்பா…” என மெல்ல முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.

நேரம் ஆக ஆக வீடு முழுவதும் உறவினர் கூட்டம் வழிந்து கொண்டிருந்தது. வெகு தொலைவிலிருந்து விடியாத காலையிலேயே வந்திருந்த பலர் களைப்புடன் காணப்பட்டனர். அவர்களுக்கு வழி விடும் வகையில் பழனி வாத்தியார் அங்கிருந்து விலகி வெளியே வந்தார். துக்க வீட்டார்கள் அமர வெளி வராந்தாவில் சில வாடகை நாற்காலிகள் வரிசையாகப் போடப்பட்டிருந்தன. அங்கே போய் அமர்ந்தார் பழனி வாத்தியார்.

“பாடியைத் தூக்க எப்படியும் மூனு மணியாயிடும். அதற்குள் வயிற்றுக்கு ஏதாவது கொஞ்சம் போட்டுட்டு வரலாம். தம்பி நீங்களும் வாங்க” என ஒரு பெரியவர் பழனி வாத்தியாருக்கு எதிரே இருந்த ஒரு வாலிபரை துணைக்கு அழைத்தார். சிறிது நேரத்தில் இருவரும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டனர்.

செல்வரத்தினத்தை நினைக்கையில் பழனி வாத்தியாரின் உள்ளத்தை யாரோ கசக்கிப் பிழிவது போல இருந்தது. தன்னோடு ஆசிரியர் பணியை ஒன்றாகத் தொடங்கியவர். தனக்கும் அவருக்கும் கூடக்கூடப் போனால் ஒன்று அல்லது இரண்டு வயது வித்தியாசம் இருக்கும். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் இருவரும் சேர்ந்தே எங்கும் செல்வது வழக்கம். அப்படிப்பட்ட நெருக்கமான நட்பு அவர்களுக்கிடையே இருந்தது. அவர் இந்த உலகத்தை விட்டுச் சென்றுவிட்டார் என்பது நம்ப முடியாத ஒன்றாகப் பழனி வாத்தியாருக்குப் பட்டது.

உற்ற நண்பன் உயிர் விட்டது அவருக்குப் பேரிழப்பாக இருந்தது. அதைக் காட்டிலும் தனக்கும் வயதாகிவிட்டது. தான் இன்னும் வாலிபர் இல்லை என்பதை உணரத் தொடங்கினார் பழனிவாத்தியார். மரணத்தின் பயம் அவரை மெல்ல ஆட்கொண்டது. செல்வரத்தினத்தின் ஈமச் சடங்கில் அவர் பிள்ளைகள் யாவரும் கலந்து கொண்டனர். அவர் குடும்பத்திலும் பல சண்டை சச்சரவுகள் நிகழ்ந்ததுண்டு. அதை அவரே பலமுறை தன்னிடம் சொல்லி வருத்தப்பட்டுள்ளார். அப்போதெல்லாம் பழனி வாத்தியார் ‘தந்தை’ என்ற அதிகாரத்தைப் பலவந்தமாகப் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லுவார். அப்போதெல்லாம் “ம் இது நம்ம காலம் இல்லை பழனி. நாம தான் கொஞ்சம் விட்டுக் கொடுக்கனும். நமக்கும் வயசாகுதுல. பிள்ளைங்க தயவு நமக்குத் தேவை பழனி” என்பார்.

சில சமயங்கில் “எப்படித் தான் உன்னால இப்படிக் கல் மனசா இருக்க முடியுதோ தெரியலைப்பா. என்னால உன் மாதிரி இருக்க முடியாது” எனப் பழனி வாத்தியாரின் குறையை நாசுக்காக சுட்டிக்காட்டுவார் செல்வரத்தினம். ஆனால் பழனி வாத்தியார் அதனை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. அப்படிப்பட்டட தன் அந்தரங்கங்களைப் பகிர்ந்து கொண்ட நண்பர் இப்போது உயிரோடு இல்லை. துக்கம் அவர் தொண்டையை அடைத்தது. ஆண்டாண்டுதோறும் அழுது புரண்டாலும் மாண்டவர் உயிர் பிழைப்பாரோ?

9

சில தினங்களாகவே பார்வதிக்கு இருந்த இடுப்பு நோவு அன்று சற்று அதிகமாகவே காணப்பட்டது. அத்துடன் நல்ல காய்ச்சல். சாதாரண காய்ச்சல் என்றே பழனி வாத்தியாரும் சர்வ சாதாரணமாக நினைத்திருந்தார். மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு டாக்டர் கூறியது அவரை நிலைகுலையச் செய்தது. பார்வதியின் சிறுநீரகங்கள் இரண்டும் செயல் இழந்து விட்டன. தாய்க்கு ஏற்பட்ட நோயைப் பற்றித் தனயனுக்குக் கூறலாம் என்றால் அவனால் தான் அடைந்த அவமானம் அவரை ஆட்டிப் படைக்க, அவருக்கே உரிய வீம்பு குணம் அதைப் பற்றி மகனிடம் மூச்சுவிடத் தடையாக இருந்தது.

இன்பதுன்பம் நிறைந்தது தான் வாழ்க்கை. நமக்கு மிகவும் வேண்டியவர்களுக்கு ஏதேனும் ஏற்பட்டால் தான் நம்மால் பிறரைப் பற்றிச் சிந்திக்க முடியும். இதுநாள் வரை தன்னைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்த பழனி வாத்தியார் இன்று தான் முதன் முதலாகத் தன் மனைவி பார்வதியைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினார். தன்னைக் கை பிடித்த நாள் முதலாய் அவள் அவருக்கு ஆற்றி வந்த கடமைகள் அவர் கண் முன்னே வந்து நிழலாடின.

இந்தியாவில் திருமணத்தை முடித்த கையோடு தன்னுடன் வாழச் சிங்கப்பூருக்கு வந்தவள், இதுவரை எதையும் தன்னிடம் கேட்டதில்லை. அவராக ஏதாவது வாங்கிக் கொடுத்தால் முக மலர்ச்சியுடன் அதைப் பெற்றுக் கொள்வாள். தன் கருத்தை அவள் வெளியிட்டதே இல்லை. அதை விட அதற்கு அவர் இடம் அளித்ததில்லை என்று தான் சொல்ல வேண்டும். கலைவாணன் சொந்தமாகத் திருமணம் செய்ததைக் கேள்விப்பட்டு வேதனையடைந்தாள். அப்போது கூட, தான் அந்தத் திருமணத்திற்குச் செல்ல வேண்டும் என அவள் கேட்டது கிடையாது. அப்படியே அவள் கேட்டிருந்தாலும் அவர் அதற்குச் சம்மதம் அளித்திருப்பாரா?

ஆனால் அவள் தன் பேரனைப் பார்க்க விரும்பியதை மட்டும் பழனி வாத்தியாரால் அவ்வளவு எளிதில் மறக்க முடியவில்லை. அதற்காக அவள் தயார் ஆன நிலையையும், அந்த மகிழ்ச்சியைக் கொண்டாட அவள் கேசரி செய்ததையும் அவ்வளவு எளிதில் மறக்கக்கூடிய சமாச்சாரமா என்ன? தான் ஏன் அவ்வளவு பிடிவாதமாக நடந்து கொண்டோம்? கொஞ்சம் விட்டுக் கொடுத்திருக்கலாமே?

“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது”

எவ்வளவு அழகான குறள். தாம்பத்திய வாழ்வின் சிறப்பியல்பை எடுத்துக்கூறும் குறள். இதை எத்தனை முறை படித்திருக்கிறோம். மாணவர்களுக்கு எத்தனை முறை சொல்லிக் கொடுத்திருக்கிறோம். ஆனால் அதை மறந்தது ஏன்?

இந்த உலகத்தை ஆளும் சிவபெருமான் கூடத் தன் சரீரத்தின் ஒரு பாதி தன் மனைவி என்று எவ்வளவு அழகாக எடுத்துரைத்தார். தாம்பத்திய வாழ்வில் அடி எடுத்து வைக்கும் இருவருக்குள் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை வேண்டும். ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு சரிசமமாக நடத்த வேண்டும். உலகிற்குத் தான் இந்த உபதேசமா? தனக்கு இல்லையா? முதன் முதலாக அவர் உள்மனம் அவரிடம் பேசியது.

தான் அன்று கூறிய சுடு சொல் தன்னைப் பாதிப்பதற்குப் பதிலாகத் தன் மனைவியைப் பாதித்து விட்டதோ என எண்ணிக் கண் கலங்கினார். கலைவாணன் வீட்டை விட்டுச் சென்ற போது கலங்காத அவர் இப்போது தான் தன் இயலாமையை எண்ணி வருந்தினார். பார்வதிக்கு ஏதாவது நேர்ந்தால் இனி தான் உயிர் வாழ்வதில் எந்தப் பயனும் இல்லை என்று அவர் உள்மனம் அவருக்கு எச்சரிக்கை விடுத்தது. இப்போது தான் அவரின் உள்ளத்தைப் பயம் கௌவத் தொடங்கியது. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா?

10

பௌர்ணமி நிலவின் ஒரு பகுதியை வெட்டிப் படுக்கையில் கிடத்தினால் போல் உறங்கிக் கொண்டிருந்தாள் பார்வதி. ஒரு பக்கம் சற்றே ஒருக்களித்து ஒரு கையைக் கன்னத்திற்கடியில் வைத்து அமைதியாய்ப் படுத்துக் கொண்டிருந்த பார்வதியை யார் கண்டாலும், “இந்த வயதான காலத்திலும் ஆகா! எப்பேர்ப்பட்ட பேரழகு” என்று வியக்காமல் இருக்க மாட்டார்கள்.

பார்வதிக்குச் சற்றுத் தள்ளி அமர்ந்து, உறங்கும் மனைவியை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த பழனி வாத்தியாருக்கு அவள் அழகோ, இல்லை படுத்திருந்த பாங்கோ உள்ளத்தில் உறைக்கவில்லை. “என் அன்பு மனைவி இந்த ஆறு மாதக் காலத்தில் எவ்வளவு இன்னல்களை அனுபவித்திருக்கிறாள்” என்ற நினைப்பே அவரை நிலை கொள்ளாது ஆட்டிப் படைத்தது.

தன்னால் தான் இந்தக் குடும்பமே இயங்குகிறது என மார்தட்டிக் கொள்ளும் அவர் இந்த ஆறு மாதக் காலத்தின்போது தான் தன்னிடம் எதுவும் இல்லை. தன்னுடைய பலமே தனது மனைவி என்ற உண்மையை உணர்ந்திருந்தார். இந்த முப்பது வருட கால தாம்பத்திய வாழ்வில் அவர் கண்ட உண்மை இது. ஆனால் அதை ஏற்றுக் கொள்ள அவர் மனம் ஏனோ தயங்கியது. வணங்காமுடி பரம்பரையைச் சேர்ந்தவராயிற்றே

அவர்? அவ்வளவு சீக்கிரத்தில் வளைந்து கொடுத்து விடுவாரா என்ன?

”உம்” என்ற பெருமூச்சு விட்டவாறு சுற்றும் முற்றும் பார்வையை ஓடவிட்டார் பழனி வாத்தியார். அது இரு நோயாளிகளைக் கொண்ட சிறிய அறை. இரு படுக்கைக்கு மத்தியில் ஒரு சிறிய திரை. ஆனால் அந்தத் திரை விலகப்பட்டிருந்தது. அதனால் அடுத்த படுக்கையில் நடப்பது நன்றாகவே தெரிந்தது பழனி வாத்தியாருக்கு. வெண்புறாக்கள் போன்று நர்ஸ்கள் அந்த அறையை வலம் வந்து கொண்டிருந்தனர். டாக்டர்கள் அங்கும் இங்கும் நடமாடித் தங்கள் கடமையில் கண்ணுங் கருத்துமாக இருந்தனர்.

தன் மனைவிக்குப் பக்கத்துப் படுக்கையில் படுத்திருந்த அகமதுவைப் பார்க்கையில் பழனி வாத்தியாருக்குப் பரிதாபமாக இருந்தது. நேற்றிரவு மூச்சு விட முடியாத நிலையில் இங்கு வந்து சேர்ந்தவன் தான் அகமது. மூன்று வயது பாலகன். மருத்துவமனையிைல் தங்குவது அவனுக்குப் புது அனுபவம் போலும். அதனால் இரவு முழுவதும் அவன் படுத்திய பாடு கொஞ்ச நஞ்சமல்ல. பாவம் அவன் தாய் அமீனா மிகவும் சிரமப்பட்டாள். இருப்பினும், பொறுமையின் சிகரமாய் அவள் செயல்பட்ட விதம் பழனி வாத்தியாரின் நெஞ்சை நெகிழ வைத்தது. இப்போது கூடத் தன் மகன் அகமதுவை மடியில் –கிடத்திப் புட்டிப்பாலை அவனுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தாள் அவள். அந்தத் தாயின் கண்களில் தான் எத்தனை பாசம்! முகமே இப்படி அன்புக் கடலாய் இருக்கிறதே! திடீரென்று எங்கே என்றோ படித்த கவிதை ஒன்று பழனி வாத்தியாரின் நினைவுக்கு வந்தது.

“மடியில் படுத்திருக்கும் பிள்ளைக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தாளாம் ஒரு தாய். பால் குடிக்கும் உற்சாகத்தில் அந்தப் பிள்ளை தன் கையையும் காலையும் ஆட்டிக் கொண்டிருந்ததாம்.

ஆட்டிய வேகத்தில் பாதத்தின் நுனி, குனிந்து கொண்டிருந்த தாயின் முகத்தில் பட்டுவிட்டதாம். அதனால், கீழ் உதட்டைப் பற்கள் கிழிக்க இரத்தம் இலேசாகக் கசிந்ததாம். இரத்த வாடையும் அடித்ததாம். வலியும் ஏற்பட்டதாம். தாய் கசிந்த இரத்தத்தைத் துடைக்கவில்லையாம். வலியையும் பொருட்படுத்தவில்லையாம். என் பல் பட்டு என் பிஞ்சு மகனின் கால் புண்ணானதோ என்று பதறிப்போய்ப் பிள்ளையின் காலைப் பார்த்தாளாம். தாய்ப் பாசத்திற்கு இது ஒரு சிறு உதாரணம். அதற்கு ஈடு இணை எதுவுமில்லை” என்று எழுதியிருந்தாராம் அந்தக் கவி.

இது பழனி வாத்தியாரின் நினைவுக்கு வந்தது. அவர் பார்வை மனைவியின் பக்கம் திரும்பியது. அங்கே அவள் அமைதியாய் உறங்கிக் கொண்டிருந்தாள். அவள் முகத்திலும் அதே தாய்மை உணர்வு: படர்ந்திருந்தது. ஆனால், அதில் ஒருவித சோகம் இழையோடியது. அந்தச் சோகத்திற்குக் காரணம் அவருக்கே நன்கு தெரியும். இருப்பினும், அவருக்கே உரிய பிடிவாத குணத்தால் மனைவியின் சோகத்தைக் களைய அவர் மனம் இடந்தர மறுத்தது.

11

“மிஸ்டர் பழனி” என்ற குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தார் பழனி வாத்தியார். அங்கே டாக்டர் ஜேம்ஸ் வழக்கமான புன்முறுவலுடன் அவரை நோக்கி வந்து கொண்டிருந்தார். சிரித்த முகம். சற்றே காதில் ஓடின நரை. அமைதியான பார்வை. அவரோடு ஒரு சீன இளைஞனும் உடன் வந்து கொண்டிருந்தான். அவன் இராணுவச் இராணுவச் சீருடை அணிந்திருந்தான். வயது இருபதிருக்கும். ”அவன் யார்? டாக்டர் ஏன் அவனை அழைத்து வந்திருக்கிறார்?” பழனி வாத்தியாருக்குக் குழப்பமாக இருந்தது.

“மிஸ்டர் பழனி இந்தப் பையனோட தந்தை கார் விபத்துல மரணமடைஞ்சிட்டாரு. அவர் கிட்னியைத் தானம் பண்ண அவர் குடும்பம் முடிவு செய்திருக்கு. எங்க பட்டியல்படி அவரோட கிட்னியப் பெறப் போற அதிர்ஷ்டசாலி உங்க மனைவி தான்.”

“என் அப்பாவோட கிட்னி உங்க மனைவியைக் காப்பாற்ற உதவும்னா அதைவிடச் சந்தோஷம் எனக்கு எதுவுமில்லை. இது அவரோட ஆத்மா, சாந்தி அடையறதுக்கு ஒரு நல்ல வழி.’

டாக்டரும் சீன இளைஞனும் மாறி மாறிப் பேசினர். தன் காதுகளையே நம்ப முடியாதவராய்த் திக்குமுக்காடிப் போனார் பழனி வாத்தியார். வார்த்தைகள் வெளி வர மறுத்தன. பழனி வாத்தியார் மௌனமாய் நின்றார். தன்னை அறியாமல் அந்த இளைஞனின் கைகளைப் பற்றினார். அவன் இதமாய் அவர் முதுகில் தட்டிக் கொடுத்தான். ஆனால், உள்ளத்தில் ஏற்பட்ட வடுவை ஆற்ற முடியாதவராய், வேதனை தாளாது, அவர் கண்கள் குளமாயின. அந்தச் சீன இளைஞன் ஓவென எள்ளி நகையாடிய வண்ணம் அவர் முன்னே விசுவரூபம் எடுப்பது போல் காட்சியளித்தான்.

சீனப் பெண் என்பதற்காகத் தன் மருமகளை ஏற்கத் தயங்கிய பழனி வாத்தியாரின் முகத்தில் யாரோ கரி பூசுவதுபோல் இருந்தது. அன்று தான் வெறுத்த – தன் மருமகளாய் ஏற்றுக் கொள்ள மறுத்த அதே சீன இனத்தவரின் சிறுநீரகம் தான் இன்று தன் அன்பு மனைவியைக் காப்பாற்றப் போகிறது என்று நினைக்கையில் அவர் தலையில் ஆயிரமாயிரம் சாட்டையடிகள் விழுந்த வண்ணமாய் இருந்தன.

சாதி இரண்டொழிய வேறில்லை எனத் தன் மாணவர்களுக்குப் பாடம் சொல்லித் தரும் தான், இவ்வளவு கேவலமாக நடந்து கொண்டதை எண்ணி வெட்கப்பட்டார். படித்திருந்தும் அறியாமை எனும் இருளில் தான் இதுநாள் வரை இருந்ததை நினைத்து வேதனைப்பட்டார். சாதி வெறி தன் கண்ணை மறைத்து ஆட்கொண்டதை உணர்ந்து தன் மீதே அவர் வெறுப்புக் கொண்டார்.

கைபிடித்தவளைக் கண் கலங்காமல் பார்த்துக் கொள்வதே கணவனின் கடமை என்று அறிந்த அவர், இதுநாள் வரை தன் கடமையை மறந்து, கல் நெஞ்சக்காரனாக நடந்து கொண்டதை எண்ணும்போது… சேச்சே! அதற்கு மேல் அவரால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. தமிழவேள் அவர்களுடன் தான் நட்புக் கொண்ட காலத்தில் சாதி இல்லை மதம் இல்லை என வாய்க் கிழியத் தான் பேசியதெல்லாம் அவர் மனக்கண் முன் வந்து நின்றது. “தேவர், பிள்ளை, நாயுடு எனப் பட்டப்பெயர் வைத்துக் கொள்ளக் கூடாது. நாம் எல்லோரும் ஓரினம். ஒரு தாய் மக்கள். நம்ம உதிரத்துல ஓடுற இரத்தத்தின் நிறம் சிவப்புனு” மார்தட்டிப் பேசிய அந்தப் பழனி வாத்தியார் எங்கே? சீனப் பெண் மருமகள் என்றதும் பையனை வீட்டை விட்டுத் துரத்திய இந்தப் பழனி வாத்தியார் எங்கே?

அப்படியென்றால் தமிழவேளுடன் தான் பழகியது பேசியது எல்லாம் போலி தானா? இதுதான் தன்னுடைய உண்மை சுரூபமா? இல்லை… இல்லை… தான் தமிழவேளுடன் பழகியது உண்மை. அதில் போலித்தன்மை துளி கூடக் கிடையாது. அப்படியென்றால் நான் ஏன் மாறினேன்? என்னை மாற்றியது யார்?

பாடம் போதிக்கும் ஆசிரியர் பாமரரைப்போன்று நடந்து கொண்டது ஏன்? அவர் மனத்தில் புதைந்திருந்த சாதி என்ற மதப்பேய் அவரை விட்டு மெல்ல மெல்ல அகன்றது. அவரை அறியாமல் அவர் அழுதார். அவர் கண்களிலிருந்து வழிந்தோடிய கண்ணீர் பார்வதியின் கைகளில் தெறித்தது. அந்தப் பரஸ்பரம் பட்டுக் கண் திறந்தாள் பார்வதி.

“என்னங்க எப்போ வந்தீங்க?’

“இப்ப தான் பார்வதி”

“என்னங்க ஏன் அழுறீங்க? டாக்டர ஏதும்…”

“நீ நினைக்கிற மாதிரி ஒன்னும் இல்லை பார்வதி. நமக்கு ஒரு டோனர் கிடைச்சிட்டாரு. டாக்டர் ஆப்ரேஷனுக்குத் தயாரா இருக்கச் சொன்னாரு”

இதைப் பார்வதி சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆண்டவர் தன் மீது கருணை காட்டிவிட்டார் எனப் பூரித்தாள். ‘நம்பினார் கெடுவதில்லை. இது நான்கு மறை தீர்ப்பு’ அல்லவா? இந்த மகிழ்ச்சியான செய்தி பார்வதியைத் திக்குமுக்காட வைத்தது. அவள் முகத்தில் தோன்றிய நம்பிக்கையொளி அவள் வாழ வேண்டியவள் – மகன், மருமகள், பேரன் இவர்களோடு வாழ வேண்டியவள் என்பதைச் சொல்லாமல் சொல்லியது.

அவளை மேலும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கச் செய்திட, “சரி பார்வதி. நான் போய்க் கலைவாணனையும் மோனிகாவையும் அழைச்சிட்டு வரேன்” என்று பழனி வாத்தியார் சொன்னார். அவள் காதுகளையே அவளால் நம்ப முடியவில்லை. அவள் தட்டுத் தடுமாறி, “என்ன சொல்றீங்க? மகனையும் மருமகளையுமா?’ என்ற அவள் கேள்வியில் அழுத்தம் தெரிந்தது. ஆம் என்பதற்கு அடையாளமாக அவர் தலையை ஆட்டினார்.

சட்டென்று அவர் நினைவுக்கு அன்று காலையில் அவர் தன் வகுப்பு மாணவர்களுக்குக் கற்பித்த மகாகவி பாரதியாரின் பாடல் வரிகள் நினைவுக்கு வந்தன.

“வெள்ளை நிறத்தொரு பூனை – எங்கள்
வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளை பெற்றுதந்தப் பூனை – அவை
பேருக்கொரு நிறமாகும்
சாம்பல் நிறமொரு குட்டி- கருஞ்
சாந்து நிறமொரு குட்டி
பாம்பு நிறமொரு குட்டி – வெள்ளைப்
பாலின் நிறமொரு குட்டி.”

அவரை அறியாமல் அவர் வாய் அந்தப் பாடலை முணுமுணுத்தது. அந்தக் குரலில் இருந்த மிடுக்கு இனிப் பழனி வாத்தியார் தமிழை மட்டும் போதிக்கும் தமிழ் வாத்தியார் அல்ல. தமிழோடு சேர்த்து மனித நேயத்தையும் கற்பிக்கும் ஒரு ‘புது வாத்தியாராக’ அவள் கண்களுக்குக் காட்சியளித்தார். அந்தக் களிப்பில் ஒன்று சேரவிருக்கும் தன் குடும்பத்தை எண்ணி ஆனந்தக் கண்ணீர் வடித்தாள் அந்த அன்புத்தாய் பார்வதி.

– தேடிய சொர்க்கம், முதற்பதிப்பு: பெப்ரவரி 2011, தமிழ்க் கலை அச்சகம், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *