புதுமைப் பெண்களடி!

0
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 10, 2024
பார்வையிட்டோர்: 488 
 
 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“சிற்றுண்டி கொண்டு வாம்மா, பாரதி!”

பாரதி சிற்றுண்டியை எடுத்துவந்து தந்தாள். அவளைத் தன் அருகில் உட்கார வைத்துக்கொண்டாள் மாமி. மணக்க மணக்கக் கேசரியும், பஜ்ஜியும் பண்ணியிருந்தாள் ஜானகி. சிற்றுண்டியின் நடுவே, “பாரதி பார்க்கின்ற வேலை, சம்பளம், சொந்தவீடா, சமைக்கத் தெரியுமா? பாடத்தெரியுமா?” இப்படிப்பட்ட கேள்விகள்.

பாரதிக்கு நடுத்தர வயதைக் கடந்தபின், பெண் பார்ப்பது, கேள்வி கேட்பது இதெல்லாம் பிடிக்கவில்லை: “எல்லாம் தரகரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டுதானே வந்திருக்கிறார்கள்? பாடத் தெரிந்தால் மட்டும் என்ன? மேடையேறிக் கச்சேரி செய்ய அனுப்பப் போகிறார்களாக்கும்? – பாரதி மனதுக்குள் நினைத்துக்கொண்டாள்.

“சுமாராப் பாடுவ… கேள்வி ஞானம்தான் “என்றாள் ஜானா” சமையல் எல்லாம் நன்னாச் செய்வா, படிப்பு, படிப்புனு நிரம்ப ஆசை அவளுக்கு!” “என்ன படிச்சா என்ன ? அவாவா வீட்டு அடுப்பங்கரையை அவாஅவா தானே பார்த்துக்கணும் ?”

“வங்கியிலே பெரிய அதிகாரியாக இருக்கலாம். ஆனா, எங்க வீட்டுக்கு வந்தா, அடுப்பங்கரை வேலையை முடிச்சிட்டுத்தான் அலுவலகம் போகணும்கிற எச்சரிக்கையோ?”

“பெண்ணைப் பிடிச்சிருக்கு மேற்கொண்டு பேசலாமா?”

இந்த, “மேற்கொண்டு” என்பதில், உங்கள் பெண்ணைக் கருணையுடன் எங்கள் வீட்டுக்கு அழைத்துக்கொள்ள எத்தனை பவுன் நகை, எத்தனை கிலோ வெள்ளி, ஒரு வெள்ளிப்பாத்திரக் கடை, ஒரு துணிக் கடை, கல்யாணம் நடத்த வேண்டிய மண்டபம், சபை நிரக்க, ஊர் மெச்சச் செய்ய வேண்டிய கல்யாணம், பையனின் நண்பர்களை, நகரத்தின் சிறந்த உணவு விடுதியில் தங்க வைத்துக் ‘கவனித்து’ பெருமையைக் காக்கவேண்டியது. இத்தனையும் அடக்கம் என்று பாரதிக்குத் தெரியும்!

ஒரு மஞ்சள் கயிற்றைப் பாரதியின் கழுத்தில் பையன் கட்டுவதற்காக. அவள், பெற்றோர் கட்ட வேண்டிய “கப்பம்” பற்றி ஒரு மகாராணியின் கம்பீரத்துடன் மாமி பேசிக்கொண்டிருந்தாள்.

“பையன் விருப்பம் என்னவோ ?” என்றார் அப்பா. “எங்கள் பெண்ணையும் கேட்க வேண்டும்!” என்று உணர்த்துகிற மாதிரி அப்பா சாடையாகக் கேட்டதில் பாரதிக்கு மகிழ்ச்சி.

“எனக்குப் பிடிச்சிருக்குன்னாலே, அவனுக்கும் பிடிச்ச மாதிரிதான். எங்க பையனைப் பத்தி நானே பெருமையாகச் சொல்லிக்கக்கூடாது. நான் கிழிச்ச கோட்டைத் தாண்டமாட்டான். அவ்வளவு பயபக்தி, மரியாதை!”

பாரதி தன் மனத்துக்குள் சிரித்துக்கொண்டாள். “தன் வாழ்க்கைப் பிரச்சினையில்கூடச் சுதந்திரமாகப் முடிவெடுக்க முடியாமல், பூம் பூம் மாடு மாதிரித் தலையாடுவதற்குப் பெயர் பயம்-பக்தி-மரியாதை!”

“பையனைக் கேட்கணுமா? அவன் முகத்தைப் பார்த்தாலே தெரியல்லையா?” வழிந்தார் மாமா. பையன் ஒன்றும் பேசாமல் ஓர் அசட்டுச் சிரிப்புச் சிரித்து வைத்தான்.

பாரதிக்கு இரக்கமாக இருந்தது. “இப்படி எத்தனை பெண்களைப் பார்த்து வழிந்துவிட்டுப் பின் அம்மா கேட்கும் காணிக்கையைப் பெண் வீட்டினரால் செலுத்த முடியாமல் நின்று போய் இருக்கிறதோ?”

“அப்பா!” என்று கூப்பிட்டாள் பாரதி.

“இங்கு என் விருப்பம் முக்கியமில்லையா? ஏதோ கத்தரிக்காய் நன்னா இருக்கு – ஒரு கிலோ போடு என்பது போல் மேற்கொண்டு பேச ஆரம்பித்துவிட்டார்களே!” என்று எண்ணினாள் பாரதி.

“என்னம்மா, பாரதி, உனக்கு ஏதாவது கேட்கணுமா?” என்றாள் மாமி.

“ஆமாம் மாமி, உங்களோடே சிறிது பேசலாமா?”

“தாராளமா என்ன கேக்கணுமோ, தயங்காமக் கேளு,பாரதி! நமக்குள்ளே என்ன? என்று மாமி வெளிப்படையாகச் சொன்னாலும், எங்கேயோ பிசிறு தட்டறதே! பையனைப் பிடிக்கல்லைனு சொல்லிடுவாளோ ? தலை பாதி வழுக்கை-பாதி நரை பையனுக்கு நிறத்துக்கு அப்பாவைக் கொண்டுட்டான். அட்டைக்கரி – வயசும் நாற்பதாச்சு – பெண்ணுக்கும் முப்பதைத் தாண்டியாச்சே! பிடிக்கல்லைனு சொல்லிடுவாளோ?” என்று உள்ளூரப் பயம்.

”உனக்கு யோசிக்கச் சிறிது காலம் அவகாசம் வேணுமா? என்றாள் மாமி.

“அதெல்லாம் ஒண்ணும் இல்லை, மாமி – நானும் எங்கப்பா, அம்மா பேச்சைத் தட்டமாட்டேன். எனக்கு எது நல்லதுன்னு பெத்து வளர்த்த அவாளுக்குத் தெரியாதா?” இதுவரை கவலையாக இருந்த ஜானாவின் முகமும், மாமியின் முகமும் மலர்ந்தன.

“எனக்கு எது நல்லதுன்னு அவா பார்க்கிற மாதிரி, அவாளுக்கு எது நல்லதுன்னு நான் பார்க்க வேண்டாமா? இப்பச் சீர்வரிசைனு ஏதோ பேசினேள்…”

“ஆமாண்டிம்மா – எல்லாம் தீரத்தெளிய முன்னாடி பேசிக்கிறது நல்லதில்லையா ? நான் எதுவும் தேங்காய் உடைச்ச மாதிரிப் பட்டுனு பேசிடுவேன். எதிரே ஒண்ணு, மறைவிலே ஒண்ணுன்னு பேசத் தெரியாது. நாங்க பரம்பரை பரம்பரையாச் சங்கர மடத்துத் தொடர்பு கொண்டவர்கள். வரதட்சிணைங்கிற பேச்சே எடுக்கப் படாதுன்னு சொல்லிட்டேனே? மத்தபடி எங்க பெருமைக்குத் தகுந்தபடிக் கல்யாணம், சீர் எல்லாம் சபை நிரக்கச் செய்ய வேண்டாமா?”

“நீயும் இத்தனை நாளாச் சம்பாதிக்கறே. உன் அம்மா பாத்துப் பாத்து வாங்கி வெச்சிருப்பாளே?”

“இல்லை மாமி! எனக்கு நகை போட்டுக்கவே பிடிக்காது. வெள்ளிப்பாத்திரம் வெளியே எடுத்து ஆள முடியறதா ? எங்கள் இரும்புப் பெட்டியிலிருந்து உங்க இரும்புக் பெட்டிக்கு வந்து தூங்கப் போறது. அந்தக் காலத்துலே பெண்களுக்கு வேலை கிடையாது. படிப்புக் கிடையாது, அதனாலே ஒரு சொத்தா இதையெல்லாம் கொடுத்தா. இப்ப என்னையும் ஒரு பிள்ளைக்குச் சமமா எங்கப்பா படிக்க வெச்சிருக்கார்.”

“வேலைக்கு போறேன். கை நிறையச் சம்பாதிக்கிறேன். என் அப்பா, அம்மாவுக்கும் வயசாச்சு, உடம்பும் சரியில்லை. எங்கக்காக்கள் கல்யாணம், அண்ணா படிப்பு, என் படிப்புனு எல்லாத்துக்கும் போனது போக மிஞ்சினது இந்த வீடு ஒண்ணுதான் – இதை வித்துத்தான் நீங்க சொன்ன தங்கம், வெள்ளி எல்லாம் வாங்கணும். தேவையா? வயசான காலத்துலே அவாளுக்குத் தங்க ஒரு நிழல் வேண்டாமா?”

இத்தனை நாளா நீங்க பாத்திரம் இல்லாமலா சமைச்சுச் சாப்பிடறேள்? கல்யாணம்னு ஆனா, உங்காத்துலேதானே நான் வந்து இருக்கப்போறேன் ? நீங்க சமைக்கிறதிலேயே ஒரு பிடி கூடச்சமைச்சு சாப்பிடப்போறோம். அதுக்கு எதுக்கு ஒரு எவர்சில்வர் கடை? நான் சம்பாதிக்கிறதையெல்லாம் ஒரு பைசாக்கூட எடுக்காமல் வங்கியிலே போட்டுக் கல்யாணச் செலவுக்குன்னு சேத்துண்டு வரா எங்கம்மா.”

“ஏதாவது கோயில்லே எளிமையாகக் கல்யாணத்தை முடிச்சுண்டு, நிரம்ப நெருங்கிய உறவுக்காராளுக்கும், சிநேகிதர்களுக்கும், வீட்டிலேயே எளிமையாச் சாப்பாடு போடலாம். எல்லாச் செலவையும் இரண்டு பேரும் சமமாப் பகிர்ந்துக்கலாம். இதுதான் என்னோட வேண்டுகோள்!” என்றாள் பாரதி.

அப்பா ஆச்சரியத்துடனும், அம்மா கோபத்துடனும், பார்க்க, “என்கிட்டே இல்லாத நகையா? பாத்திரமா? என் பிள்ளைக்குக் கோடி கோடியாகச் செய்ய வரிசையிலே நிக்கறா. முடிச்சுட்டியா? இன்னும் ஏதாவது பாக்கி இருக்கா?” என்றாள் மாமி சீற்றமுடன்.

“இன்னும் ஒண்ணுதான் பாக்கி. அதையும் சொல்லிடறேன். கல்யாணத்துக்குப் பிறகும் என் சம்பளத்தில் பாதியை எங்கப்பாவுக்குக் கொடுக்க நீங்கள் அனுமதி தரணும்!” என்றாள் பாரதி.

பையனின் முகத்தில் குழப்பம். மாமி முகத்தில் சீற்றம். ஜானுவின் முகத்தில் தவிப்பு. அப்பாவின் முகத்தில் வியப்பு. மாமாவின் முகம் மட்டும், எந்த உணர்ச்சியையும் கண்டுபிடிக்க முடியாமல், வெறும் கல்லாக இருந்தது. “சீ! மனிதன்! தும்மல் வந்தாக்கூட, மாமியைக் கேட்டுண்டுதான் தும்முவார் போல் இருக்கு!”

“டே, இராமு – இந்த இடம் நமக்குச் சரிப்பட்டு வராதுடா எழுந்திரு. ஏதோ ஜாதகம் நன்னாப் பொருந்தறதுன்னு ஜோசியர் சொன்னாரேனு வலுவில் வந்தா, மட்டமாப் போச்சு – மரியாதை தெரியாத குடும்பம்! பொம்பளைக்கு இப்படி ஒரு வாயா? பெண்ணை வளர்த்திருக்கிற இலட்சணமா இது ? வாயாடி”

“ஏன்னா, ஏன் இன்னும் மோட்டுவளையைப் பாத்துண்டு உட்கார்த்திருக்கேள்?”

மாமி போட்ட போடில், மாமாவும், பையனும் எழுந்து ஓடக், கூடமே காலி!

“என்னடி, பாரதி, இப்படிப் பேசிட்டே ? நல்ல இடம், நல்ல மனிதர்கள் என்று தரகர் சொன்னார். முன்னே, பின்னே ஆனாலும், வீட்டை வித்தாவது இந்தக் கல்யாணத்தை முடிச்சுடலாம்னு ஆசையா இருந்தேன். இப்படி எடுத்தெறிஞ்சு பேசி விரட்டிட்டியேடி!” என்றாள் ஜானு துக்கம் பொங்க. பாரதி மெதுவாகச் ஜானுவின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்.

நரைத்துப் பிசிராகப் பறக்கின்ற கூந்தல். ஒட்டிய தாடை. ஒழுங்கான பல் வரிசை. கூர்மையான கண்கள். செதுக்கினாற் போன்ற மூக்கு. ஒடித்து மடியில் கட்டிக்கொள்ளலாம் போன்ற உடல் வாகு. பொன்முலாம் – அந்த முகத்தில் தீச்சுடர் போல் பிரகாசமாக மின்னியது நெற்றிக் குங்குமம்தான்!

“ஓ-ஒரு காலத்தில் அம்மா எவ்வளவு அழகாக இருந்தாள்?”

கண்களில் பெருகிவிடுவேன் என்று பயமுறுத்திய கண்ணீரை அடக க்கிக்கொண்டு வலுவில் சிரிப்பை வரவழைத்தவளாய்ச், ஜானுவின் மெலிந்த கைகளைப் பற்றிக்கொண்டாள்.

“இவாளாம்மா நல்ல மனிதர்கள்! பணத்தாசை பிடித்த பேய்கள்! நான் நன்னாச் சம்பாதிக்கிறேன்னு தெரிஞ்சு, இன்னும் இருக்கிறதையும் சுருட்டிக்கணும்னு, இவ்வளவு நாளாச் சம்பாதிச்சிருக்கியேனு! கேக்கறாளே, அசிங்கமா இல்லை? உன் உடம்பை உழைச்சு வீட்டுச் செலவுக்கு வருமானம் பண்ணிண்டு,நான் கொண்டு வரதை நீ வங்கியிலே போடறது. எனக்குத் தெரியாதுன்னு நினைச்சியாம்மா?”

உன்னோடே நான் சண்டை போடணும்னு வந்த சினத்தை அடக்கிண்டேன். இரண்டு பேரும் வயசானவா-உடம்பு சரியில்லை. ஒரு மருத்துவமனை அவசரம்னா உதவும்னு பேசாமல் இருந்தேன். அப்படியெல்லாம் நீ சேமிச்ச காசை இவா வரட்டுக்கௌரவத்துக்குக் கல்யாணச் செலவுங்கிற பேரில கரியாக்கணுமா? அவா சுயரூபத்தைத் தோலுரிச்சிக் காட்டத்தான் அப்படிப் பேசினேன். ஏம்பா, பேசாம இருக்கேள்? என் மேல் சினமா?”

“உன் மேலே சினமா? அசத்திட்டேம்மா! டாண்டாண்ணு ஒரோர் அம்பு எடுத்து வீசினயே, அத்தனையும் உண்மைதாம்மா. நான் இன்னும் அந்த வியப்பிலிருந்து மீளவே இல்லை, போ!”

“எல்லாம் நீங்க கொடுக்கிற இடம் தான். இப்பவே வயசு முப்பதாச்சு. அவள் சம்பளத்துலே கல்யாண நெனப்பே இல்லாமல் சொகுசா வாழறோம்னு ஊரிலே பேச ஆரம்பிச்சாச்சு. உன்னை ஒத்தவாள்ளாம் கல்யாணம் பண்ணிண்டு, குடும்பம், குழந்தைனு நிலை ஆயாச்சு! என் பாவம்! எந்தக் காலத்துலே உனக்குக் கல்யாணமாகிப் பேரன், பேத்தின்னு கண்ணால் பார்க்கப் போறேனோ?” ஜானு அழ ஆரம்பித்தாள்.

“அம்மா. தயவுசெய்து… அழாதேம்மா. இருக்கிற வீட்டை வித்துட்டு அப்பாவோட, வயசான காலத்துல ஒண்டுக் குடித்தனம் போவியாம்மா?… அப்படி உன்னை அனுப்பிட்டு, நான் அவாத்துலே போய் நிம்மதியா வாழ்வேன்னு நெனைக்கிறியாம்மா? நீங்களும்தான் என்னை இவ்வளவு தூரம் வளர்த்துப் படிக்க வெச்சு ஆளாக்கினீங்க நீங்க கொடுத்த படிப்புல வர்ற சம்பளத்துலே பாதி உங்களுக்குத் தரணும்னு சொன்னேன்.”

“பிள்ளையானா என்ன, பெண்ணானா என்ன, அம்மா? எனக்கும் உங்களைப் பாத்துக்கிற கடமை உண்டு. வாழ்க்கைக்குக் கல்யாணம் அவசியம்தான். ஆனால், அதுவே வாழ்க்கை ஆயிடாது. வாழ்க்கையில இன்னும் எத்தனையோ அழகான செய்திகள் இருக்கும்மா. என் எண்ணங்களைப் புரிஞ்சிண்டு என்னை, எனக்காக மட்டுமே ஏத்துக்கிற ஒரு மனிதன் வரச்சே நான் கல்யாணம் பண்ணிக்கிறேன், சரியா ? என்று தாயின் கண்ணீரைத் துடைத்தாள் பாரதி.

“விடு பாரதி, புலம்பினாத்தான் அவள் பாரம் தீரும்!” என்றார் அப்பா. அவர் ஊரில் தலைமை ஆசிரியராக, உள்ளூர்ப் பள்ளியில் இருந்தார். நாலு பெண்கள். ஒரு பையன். குழந்தைகள் படிப்புக்காகக், ஊரில் இருந்த வீட்டை விற்றுவிட்டுச் சென்னையில் இந்த வீட்டை வாங்கிக்கொண்டு வந்தார். பரம்பரை நிலங்களை இரண்டு பெண்களின் கல்யாணம் விழுங்கிவிட்டது.

பையன் நன்றாகப் படித்து ஒரு நல்ல அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்தான். அவனுக்கு அடுத்த தங்கை, இந்திரா படித்து முடித்திருந்தாள். அவளுக்கும் கல்யாணம் முடித்துவிட்டுப், பிறகு பையனுக்கும் பண்ணிவிடலாம். பாரதி கல்வி உதவித் தொகை வாங்கி நன்றாகப் படித்ததால், மேற் படிப்புக்குச் சேர்த்திருக்கார். படிப்பு முடிந்து வேலை பார்க்க ஆசை அவளுக்கு.

போகட்டும். இந்தக் காலத்தில் வேலை பார்க்கிற பெண்ணாகத்தானே கேட்கிறார்கள்?

சம்பாதிப்பது அவள் கல்யாணத்துக்கும் உதவுமே என்பது அவர் எண்ணம். ஆனால், இந்திராவுக்குக் கல்யாணம் முடியும் வரை பையன் பொறுத்திருக்கவில்லை. அவன் படிப்பும், திறமையும் பார்த்து அலுவலக முதலாளி தன் பெண்ணை அவனுக்கு மணம் முடித்து வைத்துவிட்டார்.

பையனுக்கு வருகிற நல்ல சம்பந்தத்தைத் தடுக்க விரும்பவில்லை என்றாலும், ஜானுவுக்கு இந்திரா கல்யாணத்தை முடித்துவிட்டுச் செய்யலாமே என்று. இவர்கள் விருப்பத்தையும், அனுமதியையும் யாரும் கேட்கவில்லை. சும்மா ஒரு தகவல், அறிவிப்பு, அவ்வளவுதான்.

நகரிலேயே பெரிய மண்டபத்தில் கல்யாணம். பத்திரிகை மட்டும் தபாலில் வந்தது. ஜானு மனம் கேட்காமல் தாலிக் கொடி, திருமாங்கல்யம் எல்லாம் வாங்கிக்கொண்டு போனாள். வயசுக்கு வந்த பெண் இருக்கையில் இவன் அவசரப்பட்டுவிட்டானே என்ற எண்ணம் இராசாராமுக்கு இருந்தாலும் ஜானுவின் மனம் நோகக்கூடாதே என்று எல்லாரும் போனார்கள். யாரும் அவர்களைக் கண்டுகொள்ளவில்லை.

ஒரு வாரம் கழித்துப் பையன் மட்டும் வந்தான். ஒரே பெண். அவளை விட்டு மாமியார், மாமனார் இருக்கமாட்டார்களாம். “ஒரு மாதத்தில் அலுவலக வேலையாக அமெரிக்கா போக வேண்டி இருக்கும். மனைவியும் வருகிறாள்” என்றான்.

“அமெரிக்கா போனால் மட்டும் எப்படிப் பிரிந்திருப் பார்களோ?” என்று கேட்கத் துடித்தாலும் அடக்கிக்கொண்டாள் ஜானு. பேசினால் ஏதாவது கடுமையாகப் பேசிவிடுவோமோ என்ற பயம். காபி கொண்டு வந்தாள்.

“காபி வேண்டாம்மா. சில்லுனு ஏதாவது பழச்சாறு இருந்தாக் குடிக்கலாம்.” அண்ணாந்து பார்த்தபடிச் சட்டைக்குள் “ஸ்” என்று ஊதிக் கொண்டான்” இது என்ன அவன் மாமனார் வீடா, சமையல் கட்டிலும் மின்விசிறி சுற்ற? அங்குச் சமையற்கட்டுக்குக் கூட ஏன் போக வேண்டும்: குளிர்சாதன அறையில் இருந்து இடைத்தொடர்புத் தொலைபேசியில் சொல்லிவிட்டால், கண்ணாடிக் குடுவையில் வெளிப்புறம் வியர்த்திருக்கப், பழச்சாறு இவனைத் தேடிவரும்” இப்படி அவள் சிந்தனை ஓடியது.

இதே திருவல்லிக்கேணிச் சந்து வீட்டில் போன வாரம் வரை இருந்தவன்தானே ? எதோ அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்தவன் மாதிரி, போகும் முன்பே வெயில்னு, அலுத்துக்கிறான். ஆகாயத்தை அண்ணாந்து பார்க்கிறான். மாமனார் வீட்டுக் குளிர்சாதன மோகமோ? என்று ஜானு தனக்குள் நினைத்துச் சிரித்துக்கொண்டாள்.

மண்பானை வைத்திருந்த மணலுக்குள் செருகி வைத்திருந்த எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து கொடுத்தாள். குடித்துவிட்டுக் கிளம்பியோது இராசாராம் எதிரே வந்தார். ஏதோ அலுவலகம் போகின்ற போது சொல்லிக்கொண்டு போவது போல, “வரேம்பா” என்று கையசைத்துவிட்டுப் போய்விட்டான்…

ஒரு மாசம் கழித்துத் தொலைபேசி வந்தது. “அன்று இரவே அமெரிக்கா கிளம்புவதால் நிரம்ப வேலை இருக்கிறது நேரில் வரமுடியவில்லை” என்று சொன்னான். இவர்களில் யாரும் போகவில்லை. பிறகும், ஒரு தொலைபேசியோ, கடிதமோ கிடையாது. பெண் பிறந்திருக்கிறாளாம். அவள் மட்டும் குழந்தையுடன் வந்திருக்கிறாளாம். எல்லாம் பிறர் சொல்லித்தான் தெரியும்.

“ஏன்னா வாயைக் கட்டி, வயித்தைக் கட்டி, எப்படியாவது இவனைப் படிக்கவெச்சால், இவனால் நம்ம குடும்பம் விளங்கும்னு எவ்வளவு துன்பப்பட்டுப் படிக்கவெச்சோம் ? வேலையும் அதனாலேதானே கிடைச்சது ? சிறிது கூட வயசான காலத்துலே நமக்கு ஆதரவு யாருன்னோ, அவனுக்கும் கீழே இருக்கிற தங்கைகளைப் பத்தியோ நெனச்சுப் பார்த்தானா? சீ! கொஞ்சம் கூட நன்றியில்லாம…” என்று விம்மினாள் ஜானு.

மெலிந்து போன அவள் கைகளை ஆதரவாகத் தட்டிக்கொடுத்தார் அவர்.

“அவசரப்பட்டு எதுவும் சொல்லிடாதே, ஜானு, நீ அவனைப் பெற்றத் தாய். நீ மனசுலே துயருடன் ஏதாவது சொன்னா, அது பலிச்சிடும். நம் கடமை அவனைப் படிக்க வெச்சோம். அவன் கடமையை அவனாக உணரணும். எதுக்கு அழறே? அசடு, நமக்கு அஞ்சும் பெண்ணுனு நெனச்சுக்கோ. பெண்கள் நம்மை விட்டுப் போன போது மகிழ்ச்சியுடன் தானே அனுப்பினோம்?” என்று தேற்றினார்.

என்ன சொல்லியும் சமாதானமாகவில்லை ஜானுவுக்கு. மகன் தலையெடுத்து இந்திரா கல்யாணத்தை முடிக்கலாம் என்ற எண்ணம்

கனவாயிற்று. ஓய்வுக் காலப் பணத்துடன் ஜானுவின் நகைகள், பாத்திரங்கள் என்று இந்திராவின் கல்யாணம் முடிந்தது. பாரதி மேற்படிப்புப் படித்துக் கொண்டிருந்தாள். இனிக் குடும்பத் தேர் ஓட வேண்டுமே?

காலையும், மாலையும் சில தனிப்பயிற்சிகள். காலை பத்து மணியிலிருந்து ஐந்து வரை மளிகைக் கடையிலே எழுத்தர் வேலை. அந்தச் சலுகையில் கடையில் முன்னதாகச் சாமான்கள் வாங்கித், தங்கும் விடுதியில் தங்கியுள்ள சில பையன்களுக்குச் சாப்பாடு அனுப்பினாள். இரவில் சப்பாத்தி, கூட்டு, ஞாயிற்றுக் கிழமைகளில் வேலைக்காரியிடம் அனுப்பிவிடுவாள்.

தனிப்பயிற்சிக்கு வருகின்ற பையன்களில் அவர்களின் அம்மாவும் வேலைக்குப் போனதால் சாப்பாடு பிரச்சினையாக இருந்தது. பையன்கள் மூலம் கேள்விப்பட்டுச் சாப்பாடு தவிரத் தின்பண்டங்கள், அப்பளம், வடகம், வற்றல் என்று வாங்கிக்கொண்டு வேண்டியவர்களுக்கும் பரிந்துரை செய்து வாங்கிக்கொடுத்தனர். வியாபாரம் விரிந்தது.

அவர்களுக்குக் குறைந்த விலையில் சுவையான வீட்டுச் சாப்பாடு. ஜானுவுக்கும் இலாபம்தான். வீட்டை இரண்டாகத் தடுத்து ஒரு பகுதியை வாடகைக்கு விட்டிருந்தாள். அதில் குடியிருந்த உமா, ஜானுவுக்கு உதவியாக எல்லாம் செய்து கொடுத்தான். நல்ல வேலையில் இருந்த அவள் கணவன் அலுவலகம் அடைப்பில் இருந்து திறப்பதாகத் தெரியவில்லை. துன்பப்படுகின்ற அவனது குடும்பத்துக்குத் தனக்கு வந்த இலாபத்தில் பாதியைச் சம்பளமாகக் கொடுத்தாள்.

மொத்தமாகச் செய்வதால் சாப்பாடு போன்ற எல்லாம் அவளுக்கும் கிடைத்தது உதவியாக இருந்தது, மாவு அரைப்பது, வீடுகளில் கொண்டு கொடுப்பதெல்லாம் உமாவின் கணவன் செய்து தந்தார்.

பாரதிக்கு அம்மா இப்படி உழைப்பது கண்ணில் இரத்தம் வரவைத்தது, படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குப் போவதாகக்கூட அம்மாவுடன் சண்டை போட்டாள்.

“என்னடி, பாரதி நான் செய்யாத வேலையா? கல்யாணமாகி வந்ததிலிருந்து மூணு மச்சினன், நாலு நாத்தனார்னு கூட்டுக் குடும்பம். அப்புறம் பசங்கள் என்னிக்கும் ஆழாக்கு வெங்கலப்பானை வெச்சு நான் சமைச்சதில்லை. நீ கல்லூரிக்குப் போயிடறே. அப்பா தனிப்பயிற்சி இல்லாட்டாக் கடைன்னு, போயிடறார் எனக்கும் பொழுது போக வேண்டாமா?

அந்தப் பெண் உமாவும் அதிகம் படிக்கவில்லை, வெளியிலே வேலைக்குன்னு போகமுடியாது. பசங்க வேறே சின்னது. அவளுக்கும் உதவியா இருக்கு. குடும்பம் இல்லாத பையன்கள். வேலைக்குப் போறவாளுக்குச் சௌகர்யம். நமக்கும் பணம் வரது. நீ எதைப்பத்தியும் கவலைப்படாமல் படி. உன்னை ஒரு நல்ல இடத்துலே கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டா எங்கள் இரண்டு பேருக்கும் கடைச் சம்பளமே வெள்ளம். காலை நீட்டிண்டு மகிழ்ச்சியாகச் சாப்பிடுவோம்”

சமாதானம் செய்தாள் ஜானு.

“இருக்கட்டும். படித்து முடித்து எனக்கு முதலில் நல்ல வேலை கிடைக்கட்டும். பிறகு, கல்யாணம் பற்றி யோசிக்கலாம்” என்றாள் பாரதி. கல்யாணம் என்றாலே வெறுப்பாக இருந்தது பாரதிக்கு.

தவமிருந்து பெற்ற பிள்ளை “டாட்டா’ காட்டிவிட்டு அமெரிக்கா போய்விட்டான். மற்ற பெண்களோ சுருட்டிக்கொண்டு போகத்தான் பிறந்தகம் என்று இருக்கிறார்கள். இந்திரா வீட்டில் ஆடிக்குக், கார்த்திகைக்கு என்று கலவை இயந்திரம், அரைவை இயந்திரம் என்று ஏதாவது புதிது புதிதாகக் கேட்டுக் கொண்டிருக்கப் பாரதியும் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டதால் தவணை முறையில் வாங்கித் தந்தாள்.

“அவளுக்கு வாங்கி இருக்கிறீர்களே. எங்களுக்கு எதுவுமே வாங்கித் தரவில்லை. தம்பி கல்யாணத்துக்குக்கூட எதுவுமே வாங்கித் தரவில்லை. எதுவுமே சீர் செய்யவில்லை என்று கேட்டு வாங்கிப் போனார்கள். இவர்களா நாளை கல்யாணமென்றால் பாரதிக்குச் செய்யப் போகிறார்கள் ? ஜானு பொருமுவாள். அப்பா சிரிப்பார். பாரதி சமாதானம் செய்வாள். போகட்டும்மா. அவாளும் என் அக்காக்கள்தாமே?

“நானும் கல்யாணம் செய்துகொண்டு போய்விட்டால், அப்பா, அம்மாவின் கதி?” வேலை நிரந்தரம் ஆனதும் ஜானு வரன் பார்க்க ஆரம்பித்த போது பாரதியின் மனத்தில் எழுந்த கேள்வி இது. அதனாலேயே வரதட்சிணை கொடுக்கக்கூடாது என்று ஒரு கட்டளை. இதனால் வரன்கள் வருவதே நின்று விட்டது.

இப்போது வரதட்சிணை வேண்டாம் என்று வந்தவர்களும், மற்ற கட்டளைகளைக் கேட்டு ஓடிவிட்டார்கள். அம்மாவுக்கு இரத்தக் கொதிப்பு, அப்பாவுக்கு நீரிழிவு நோய். இந்த வயதிலும் அவர்கள் வேலை செய்து, அவள் சம்பளத்தைத் தனியே சேமித்து வருவது, அதுவும் அவள் கல்யாணச் செலவுகளுக்காக, அவளுக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. எவ்வளவு சொல்லியும் அவர்கள் இருவரும் கேட்கவில்லை.

இந்த நிலையில் எனக்குக் கல்யாணம் அவசியம்தானா? முதலில் அப்பா, அம்மா உடல் நலம்தான் முக்கியம்.

மறுநாள் மாலை தனிப்பயிற்சிப் பையன்களுக்குத் தேர்வு வருவதால் மாதிரிக் கேள்வித்தாள் தயாரிப்பதில் ஈடுபட்டிருந்த இராசாராம், மூன்று சக்கர வண்டியின் சத்தம் கேட்டு வாசலுக்கு வந்தார். பாரதிதான் ஒரு சின்னப் பையனை மூன்று வயதிருக்கும், கீழே இறக்கிவிட்டு, மூன்றுசக்கர வண்டிக்கு வாடகை கொடுத்தாள்.

“வருண், தாத்தாவுக்கு வணக்கம் சொல்லு!”

வெட்கத்துடன் அவள் காலைக் கட்டிக் கொண்டிருந்த வருண்,நிமிர்ந்து “வணக்கம்” என்றான்.

“வர்ஷா தாத்தாவுக்கு வணக்கம் சொல்லும்மா!”

தன் குட்டிக் கைகளைக் குவித்து வணக்கம் என்று மழலையில் கொஞ்சியது வர்ஷா

சில சமயம் பாரதி இப்படி யாராவது குழந்தைகளுடன் வருவதுண்டு. அலுவலகத் தோழிகள், வீட்டில் கவனிக்க யாரும் இல்லாதவர்கள். உடல் நலம் குழந்தைகளுக்குச் சரியில்லாமல் இருந்தும், விடுப்பு இல்லாததால் அலுவலகம் போக வேண்டிய கட்டாயமோ, வெளியூர் போக வேண்டிய சூழ்நிலையோ நேர்ந்தால், பாரதி குழந்தைகள் பொறுப்பை ஏற்றுக் கொண்டு அவர்களை அனுப்பி வைப்பாள். அவர்களும் நிம்மதியாகப் போய் வருவார்கள்.

பாரதி அலுவலகம் போனாலும் ஜானுவும், உமாவும் கவனித்துக்கொள்வார்கள். அது – போல இப்பொழுதும் அழைத்துவந்திருப்பாள்.

எப்பவும் வாசல் திண்ணையிலேயே தன் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கின்ற ஜானுவைக் காணாமல் வியப்பாக இருந்தது பாரதிக்கு. வண்டியை நிறுத்து முன், உணவுப்பை, கைப்பை இவற்றை வாங்கிக்கொண்டு, பாரதி நடையில் வண்டியை நிறுத்திவிட்டு வருமுன் காபியோடு கூடத்தில் நிற்பாள்… இன்று?

தாத்தாவோட ஜுலா ஆடு, வருண், வர்ஷா இதோ வந்துட்டேன்.

குழந்தைகளை இராசராமுடன் அனுப்பிவிட்டு, முற்றத்தில் இறங்கி வாளியில் நிரப்பி இருந்த நீரைக் கால்களில் விட்டுக்கொண்டு முகம் கழுவியபின், கொடியிலிருந்த துண்டை உருவி முகத்தைத் துடைத்தபடிக் கூடத்துக்கு வந்தாள்” கூ ஜிகு ஜிகு இரயிலே!” என்று குழந்தைகளுக்குச் சரியான உத்சாகத்துடன், அந்த ஊஞ்சலையே தொடர்வண்டியாக மாற்றி விளையாடிக் கொண்டிருந்தார் இராசாராம். நறுமணப் பொடியை முகத்தில் அப்பியபடி, “அம்மா எங்கே?” என்று பாரதி சைகையில் வினவத் தோளைக் குலுக்கி முகத்தை சுளித்துச் சமையலறைப் பக்கம் கை காட்டினார்.

“ஒ, சினமா? ஒட்டுப்பொட்டை ஒட்டிக்கொண்டு, தலையை வாரியபடி உள்ளே எட்டிப் பார்த்தாள். ஜானு ஒரு மூலையில் சுருண்டு படுத்திருந்தாள்.

உமா மேடையைச் சுத்தம் பண்ணிக் கொண்டிருந்தாள். வேலைக்காரி தேய்த்துவிட்டுப் போன பாத்திரங்கள் சீராக அடுக்குப்பேழையில் அடுக்கப்பட்டிருந்தன. இரவுக்கு வேண்டிய சமையல், தின்பண்டங்கள் எல்லாம் செய்து மூடி வைக்கப்பட்டிருந்தன.

“காபி குடிக்கறியா, பாரதி?” என்றாள் உமா.

“நான் கலந்துக்கறேன். நீங்க அந்தப் பசங்களுக்குக் கொரிக்க ஏதாவது கொடுங்கோ.’

பாரதியிடமும் ஒரு தட்டைக் கொடுத்துவிட்டுப் போனாள். தீடீரென்று பேச்சுக்குரல் கேட்டு விழித்துக் கொண்ட ஜானு திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தாள்.

“ஏம்மா, உடம்பு ஏதும் சரி இல்லையா ? இல்லாட்டி என் மேல் சினமா ? சாயங்கால வேளையில் படுத்துக்கமாட்டியே!”

“உடம்புக்கு ஒண்ணும் இல்லை. நன்னாத்தான் இருக்கு. நீ எப்ப வந்தே. நீ வந்ததுகூடத் தெரியாம உயிரற்ற பொருள் போலத் தூங்கி இருக்கேனே. காபி குடிச்சியா?”

இன்னும் இல்லை. பால் பாத்திரத்தில் பால் சூடாகக் காய்ச்சி இருக்கேன். வடிக்கட்டியில் காபிக்குழம்பு இறங்கிண்டிருக்கு. எத்தனை நேரமானாலும் உங்கள் கையால காபி கலந்து குடிச்சாத்தான் பாரதிக்கும் நிறைவு உங்களுக்கும் மகிழ்ச்சி. கலந்து கொடுங்கோ. நான் வரட்டுமா?” என்று கிளம்பினாள் உமா.

‘பாத்திரத்திலே பசங்களுக்குச் சிற்றுண்டி போட்டு வெச்சிருக்கேன். எடுத்துண்டு போ, உமா, கூடமாட ஒண்ணும் செய்ய முடியாமல் கண்ணை அசத்திடுத்து. பாவம், தனியா எல்லாம் பண்ணியிருக்கியே. எழுப்பப்படாதாடி என்றபடிப் பாத்திரத்தைக் கொடுத்தாள் ஜானு.

“எதுக்கு எழுப்பணும்!” நீங்களே படுத்துக்கமாட்டேள். ஏதாவது உடம்பு சரி இல்லையோனு பயமா இருந்தது. கிளம்பிட்டேன். நீங்க முழிச்சிண்டது தெரிஞ்சதும் உடம்புக்கு ஒண்ணுமில்லையேனு விசாரிச்சுட்டுப் போவோம்னு வந்தேன்.’

உமா தன் பகுதிக்குக் கிளம்பினாள். பாரதியும் அவளுடன் பேசியபடியே கூடத்துக்கு வரக்காபியுடன் ஜானுவும் வந்தாள்.

“இப்ப ஒரு நிலையம் வந்திருக்காம். அஞ்சு நிமிடம் இங்கே தொடர்வண்டி நிக்குமாம்”

ஊஞ்சலை நிறுத்திக் குழந்தைகளை இறக்கிவிட்டதும், அவை பாரதியிடம் ஒடி வந்தன. அவள், “வருண், வர்ஷா, பாட்டி பாரு!” என்றதும் அவள் சொல்லாமலே, “வணக்கம்” என்றன இரண்டும்.” வாடா இராசா,

வாடி கண்ணம்மா!” என்று கைகளை நீட்டியதும் வேற்று முகம் இல்லாமல் வந்து ஒட்டிக்கொண்டன. உடல் சிலிர்த்தது ஜானுவுக்கு.

வழக்கம் போல் சிநேகிதியின் குழந்தைகளை அழைத்து வந்திருப்பதாகவே ஜானுவும் நினைத்தாள். “ஓ! பாரதிக்குதான் குழந்தைகள் மேல் எவ்வளவு ஆசை! காலாகாலத்துலே எல்லாம் ஆகி இருந்தா, இப்ப இதைவிடப் பெரிசா இரண்டு பசங்க காலைச் சுத்திண்டிருக்கும்.

“அந்தப் பெருமாள்தான் கண்ணைத் திறக்கல்லையே?”

“தொடர்வண்டி கிளம்பப் போறது. நிலையத்தில் எறங்கினவாள்ளாம் ஏறலாம்.”

குழந்தைகள் ஓடி வரப் பக்கத்துக்கொருவராக உட்கார வைத்துக்கொண்டு ஊஞ்சலை உந்தக் கீழே பதிந்த கால், பாரதியின் பேச்சுக்கேட்டு நின்றது.

“பேரன், பேத்தியை இந்தப் பிறவிலேயே பார்ப்போமான்னு காலையில் குறைப்பட்டுண்டியே! இந்தப் பேரன், பேத்தியைப் பிடிச்சிருக்காம்மா உனக்கு?” என்றாள் பாரதி சிரித்தபடி.

“என்னடி பேத்தறே? யார் வீட்டுக் குழந்தையோ, உன் வயிற்றில் பிறந்தது ஆகுமா? நாளைக்கே அவா அம்மா வந்தா ஓடிப் போயிடும்தானே?”

இவா இரண்டு பேரும் அப்படிப் போகமாட்டா. உன்னோடதான் இருப்பா. ஏன்னா, கூட்டிண்டு போக அம்மாவோ, அப்பாவோ, வேறு யாருமே இல்லாத குழந்தைகள் இவா ! என் வயித்துலே பிறந்தாத்தானா? மனசுதாம்மா காரணம் எல்லாத்துக்கும். அம்மா! நான் முடிவாச் சொல்றேன் கேட்டுக்கோ!”

“இனிமே எனக்குக் கல்யாணங்கிற பேச்சே, இந்த வீட்டிலே பேசப்படாது. உங்க இரண்டு பேரையும் தனியாவிட்டுட்டு, நான் கல்யாணம் பண்ணிண்டு போறதா இல்லை. என்னை உன் பெண்ணா நினைச்சுக்காமப், பிள்ளையா நெனச்சுக்கோமா’

இவா மாதிரி நூத்துக்கணக்கான குழந்தைகள், “நந்தவனத்திலே பெத்தவா யாருன்னு தெரியாமல் வளர்ந்துண்டிருக்கா. என் சிநேகிதி ஒருத்தி அஞ்சு ஆண்டாகியும் குழந்தை இல்லைன்னு இது போலக் குழந்தையை எடுத்து, வளர்க்கறா. அவளோடு இரண்டு மாசம் போன பழக்கம், இப்ப நேரம் கிடைச்சபோதெல்லாம், குழந்தைகளைப் பார்த்து ஏதாவது வாங்கிக்கொடுத்துட்டு விளையாடிட்டு வருவேன்.”

“சிறிது நாளாகவே இந்தக் குழந்தைகள்லே இரண்டு குழந்தைகளை நாம் எடுத்து வளர்த்தா என்னன்னு தோணிண்டே இருந்தது. நீ காலையில் கேட்டதும் அது உறுதியாச்சு. அதுதான் கூட்டிண்டு வந்தேன். உனக்கு இவாளைப் பிடிச்சிருக்காம்மா?”

“அவாளுக்கென்னடி, பாரதி. குழந்தையும், தெய்வமும் ஒண்ணுன்னு பெரியவா தெரியாமலா சொல்லியிருக்கா ? ஆனால், ஊரும், உலகமும் என்ன சொல்லும்னு யோசிக்சுப் பார்த்தியா? கல்யாணம்னு ஆகாமல் குழந்தையைப் பெத்துண்டு, தத்து எடுத்ததுன்னு மூடி மறைக்கிறதா வம்பு பேசுமேடி! எங்களுக்காகக் கல்யாணமே வேண்டாம்னு. வர சம்பந்தமெல்லாத்தையும் ஏதாவது சொல்லித் தட்டிக் கழிக்கிறியே?”

“நாங்கள் எத்தனை நாள் நிரந்தரமாக இருக்கப் போறோம்? நாங்கள் கண்ணை மூடறதுக்குள்ளே உனக்கு எங்கக் கடமையைச் செய்ய வேண்டாமா? மத்தவா கடமையெல்லாம் முடிச்சாச்சு. எங்களுக்கப்புறம் உனக்கு யார் இருக்கா?”

கதறிவிட்டாள் ஜானு.

“அழாதேம்மா. உனக்குக் கடமை இருக்கிறது போல எனக்கும் உங்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கு. உங்களை ஆயுசுள்ளவரைக்கும் துன்பம் இல்லாமல் நன்னா வெச்சுக்க வேண்டியது என் கடமை. நேத்து வந்தவாகிட்டே வாய்த்துடுக்காப் பேசிட்டேன்னியே. அவாளிட்டேருந்து இன்னிக்கு அலுவலகத்துக்குத் தொலைபேசி வந்தது…

“என்னடி என்ன சொன்னா?” என்றாள் பதற்றமாக ஜானு.

“எந்த வீட்டை விற்று அவா கேட்ட தங்கம், வெள்ளியெல்லாம் வாங்கலாம்னு நெனச்சியோ அந்த வீட்டை அவா பேருக்கு எழுதித் தந்துடணுமாம். வித்து மடிப்பாக்கத்துலே வாங்கி இருக்கிற நிலத்திலே பெரிசா வீடு கட்டிக்கறாளாம். இதுக்கு ஒத்துண்டா, நீங்க இரண்டு பேரும் அவாத்தோட அதாவது, என்னோடு வந்து இருக்கலாமாம். வீட்டோட வந்துட்டா, சம்பளத்தில பாதி கொடுக்க வேண்டாமே! மத்தபடி எல்லாம். அவா கேட்ட மாதிரிச் செய்யணுமாம்.”

உடல் நடுங்கக் கண்ணீர் பெருக!” நீ என்னடி சொன்னே? என்றாள் ஜானு.

“ஏன்? உங்க வீட்டிலே சமையல்காரியையும், தோட்டக்காரனையும் நிறுத்திட்டீங்களா? மன்னிக்கவும்! நான் அந்த வீட்டைக் கொடுக்கிறதா இல்லை. நான் அதிலே ஆதரவில்லாத வயசான பெற்றோர்களுக்கும், பெற்றோர் யாருன்னே தெரியாத குழந்தைகளுக்கும் புகலிடமா மாத்தப் போறேன். நீங்க கூடத் தேவையானா, கண்டிப்பாத் தேவை வரும். முன்பதிவு பண்ணிக்கலாம். உங்களுக்குத்தான் முதல் இடம்னேன். பேச்சு, மூச்சே இல்லை. தொலைபேசியே உடைஞ்சு போற மாதிரி வெச்சுட்டா!”

இராசாராமுக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை.

“பாரதி – ஒன்று சொன்னாய் – அதுவும் நன்றே சொன்னாய்!” என்று பாராட்டினார்.

”இனிமே உனக்கு இந்தப் பேரன், பேத்தியைப் பார்த்துக்கிற வேலைதான். உன் சமையல்கூட வேலையை உமா அக்காகிட்டே விட்டுட்டு நீ ஓய்வாக இரு. உன் அனுபவம் ஆலோசனையோட அக்கா அதை நடத்தட்டும். நமக்கும் சாப்பாடு அக்காதான் தரப்போறா.

தன் மனசுக்குப் பிடிச்ச தனிப்பயிற்சியை மட்டும் வெச்சிண்டு, மத்ததை எல்லாம் விட்டுடலாம். மளிகைக் கடை வேலையைச் செட்டியாரிட்டேச் சொல்லி உமா கணவனுக்கு வாங்கித் தரட்டும். போற போக்கைப் பார்த்தா அவரது நிறுவனம் மீண்டும் திறக்கிற வழியாகத் தெரியவில்லை. உங்கச் சாப்பாட்டுக் கூடமும் நிரம்ப வளர்ந்து போச்சு, அவர் உதவியில்லாமச் சமாளிக்க முடியாது.

“உங்கள் இரண்டு பேருக்கும் கட்டாய ஓய்வு. சரியா? நான் போய் உமா அக்காகிட்டே பேசிட்டு வரேன். பசங்களை அழைச்சிண்டு எல்லாரும் கோயிலுக்குப் போயிட்டு வருவோம், பசங்க நன்னாப் பழகிப் போச்சுன்னா, சில நடைமுறைகளை முடிச்சிட்டு, எப்பவும் நம்மோட வெச்சிக்கலாம் கிளம்பும்மா!”

உமாவின் இருப்பிடத்தை நோக்கி நடந்தாள் பாரதி குழந்தைகளுடன்.

“ஏன்னா உங்க பெண் என்ன சொல்லிட்டுப் போறா, பார்த்தேளா?”

திகைத்துப்போய் ஊஞ்சலில் உட்கார்ந்திருந்த இராசாராம் சிரித்தார்.

“ஏன்,ஜானு உங்க பெண்ணுனு சொல்றே ? நம்ம பெண்ணுன்னு சொல்லுடி!”

“ஏன்னா, இப்படி இவள் கல்யாணமே வேண்டாங்கறா? எனக்கென்னவோ பயமாயிருக்கு!” விசும்பினாள் ஜானு.

“அசடே! ஏண்டி பயப்படணும் ? பெருமைப்படு ! இப்படி ஒரு பெண் நம்ம வயத்துலே வந்து பிறந்திருக்கேன்னு. அவள் பாரதி கண்ட புதுமைப் பெண்! கல்யாணம், குடும்பம், குழந்தைன்னு சுயநலத்தோட ஒரு குறுகின வட்டத்திலே, நொண்டியடிக்கப் பிறந்தவள் இல்லேடி என் பெண்ணு!”

இரவில் முத்துப்போல மினுக்கி, உதயசூரியனின் ஒளியை வாங்கி வைரம் போல் ஒளிர்ந்து பிறகு அதிலேயே கரைஞ்சு போயிடற பனித்துளி இல்லைடி அவ ! கசலவிதமான அழுக்குகளையும், பாவங்களையும், தன் தீக்கண்களால் சுட்டுப் பொசுக்கற சூரியன்டி அவ! ஞானபானு!

“காலையில் அரும்பி இரவில் மலர்ந்து விடியலில் வாடி உதிர்கின்ற அடிமட்டப்பூ இல்லடிே. பன்னிரெண்டு ஆண்டுக்கு ஒரு முறை அரிதாக மலர்ந்து மணம் பரப்புகின்ற குறிஞ்சி மலர். இன்னுமா உன் அஞ்ஞானம் அழியவில்லை? தெளிவு பிறக்கவில்லை?”

ஆவேசத்துடன் பேசிய இராசாராம், தன் கண்களைத் துடைத்ததோடு, அவள் கண்ணீரையும் துடைத்தார்.

உமாவின் இருப்பிடத்தில் இருந்து குழந்தைகளுடன் வந்துகொண்டிருந்த பாரதி பளிச்சிடுகின்ற பட்டுப் புடைவையில், கையில் அர்ச்சனைக்கு வேண்டிய பொருள்களுடன் நின்றுகொண்டிருந்த அம்மாவைக் கண்டதும் ஓடி வந்து கட்டிக்கொண்டாள்.

இந்தத் தெளிவைக் கொடுத்த தந்தைக்குக் கண்களாலேயே நன்றி சொன்னபடி இருவரையும் வணங்கினாள் பாரதி.

“நூறாயுசாக நான்னாயிருடி பாரதி! உன்னை மாதிரி பாரதிகள் நூத்துக்கணக்குலே வரணும். உன் கனவு நனவாகணும்!” என்று வாழ்த்தினாள் ஜானு.

– கோதா பார்த்தசாரதி, சென்னை-101.

– மனங்கவர் மலர்கள், முதற் பதிப்பு: ஜூன் 2005, சிங்கைத் தமிழ்ச் செல்வம், சிங்கப்பூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *