புதுப் பெண்சாதி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 13, 2012
பார்வையிட்டோர்: 9,259 
 
 

கொழும்பிலே ரயில் ஏறும்போது பத்மலோசனிக்கு தன்னுடைய பெயர் இனிமேல் பயன்படாது என்பது தெரியாது. அவள் கணவனைத் தேடினாள். அவன் மும்முரமாக இரண்டு பெரிய பெட்டிகளையும் அவனுடைய வயதிலும் பார்க்க கூடிய வயதான ஒரு சூட்கேசையும் ஏற்றிக்கொண்டிருந்தான். அவர்களுக்கு கல்யாணம் முடிந்து ஒருநாள்தான் ஆகியிருந்தது. அவளுடைய தாலி வட்டமாக தொங்கியது. கண்ணுக்கு மை பூசியிருந்தாள். தலையிலே மல்லிகைப்பூ. பெருவிரலைப் பார்த்தபடி இருந்தாலும் அடிக்கடி தலையை நிமிர்த்தி கணவன் என்ன செய்கிறான் என்பதையும் பார்த்தாள்.

அவன் கறுப்பாக, நெடுப்பாக முறுக்கிய கயிறுபோல இருந்தான். அவளுக்கு மீசை பிடிக்காது ஆனால் அவனுடைய மீசை வசீகரமாக இருந்தது. மெல்லிய பச்சை நீளக்கை சேர்ட்டை சுருட்டி சுருட்டி புஜத்தின் தசைநார்கள் உருளும் இடத்தில் விட்டிருந்தான். அவளுடைய அம்மா அவளுக்கு சொல்லிவிட்டது ஞாபகத்துக்கு வந்தது. ‘உன்னுடைய புருசனுக்கு பெரிய படிப்பொன்றும் இல்லை. கிராமத்தில் கடை வைத்திருக்கிறான். நீ எந்தச் சமயத்திலும் உனக்கு படிப்பு இருக்கு என்றோ, இங்கிலீஷ் தெரியும் என்பதையோ காட்டிவிடாதை.’ ஸ்டேசனில் டிக்கட் கொடுத்த ஆள் மீதிப்பணத்தை சரியாகத்தான் எண்ணி கொடுத்திருக்கிறார். எட்டத்தில் நின்ற அவளுக்கே அது தெரிந்தது. ஆனால் கணவன் சரியில்லை என்று கணக்கை திரும்பவும் கேட்டு அவன் விளக்கவேண்டியிருந்தது. இவன் எப்படி கடை வியாபாரத்தை கவனிப்பான் என்று நினைத்தபோது அவளுக்கு மலைப்பாக விருந்தது.

அடுத்தநாள் காலை கொக்குவில் ஸ்டேசனில் அவர்கள் இறங்கியபோது அவர்களை வரவேற்க ஒருவருமே இல்லை. துண்டு துண்டாகச் சிதறிய வானம்; வட்டு முறிந்த பனைமரங்கள்; மஞ்சள் நிற புற்கள்; உடைந்துபோன மரவேலி. அந்த இடத்திற்கு முற்றிலும் பொருத்தமில்லாமல் அவள் செங்குத்தாக நின்றாள். கீழே குனிந்து செருப்பு வாரை பின் குதியில் இழுத்துவிட்டாள். மறுபடியும் குனிந்து அடுத்தகால் வாரையும் சரியாக்கிவிட்டு நிமிர்ந்தபோது அந்த ஊர் சிறுவர்கள் அவளை சூழ்ந்துகொண்டார்கள். எல்லோரும் அவளையே அதிசயமாகப் பார்த்தார்கள். ஒரு சிறுவன் கத்தினான். ‘ராமனாதனுக்கு புதுப் பெண்சாதி.’ அவ்வளவுதான். அந்தக் கணத்திலிருந்து அவளுடைய முழுப்பெயரை சொல்லி அழைப்பதற்கு யாருமே இல்லையென்று ஆகிவிட்டது.

விற்போரில் வென்ற அரசகுமாரியை அழைத்துவருவதுபோல ராமனாதன் முன்னே நடக்க அவள் பின்னே தொடர்ந்தாள். சாமான் தூக்கிகள் அவளுக்கு முன்னாலும், சிறுவர்கள் பின்னாலும் போனார்கள். அது பெரிய ஊர்வலம்போல அமைய ஊர்ப்பெண்கள் வேலிக்கு மேலால் எட்டிஎட்டிப் பார்த்து அதிசயித்தார்கள். குதிச்செருப்பு பெண் ஒருத்தி அவர்கள் கிராமத்து ஒழுங்கையில் ஏதோ சகாயம் செய்யப்போவதுபோல நடந்து வந்தது அதுவே முதல் தடவை. அவர்கள் ஊரில் இப்படி அழகான பெண் இல்லை. அவளுடன் படித்த ஒரு மாணவன் அடிக்கடி சொன்னதை நினைத்துப் பார்த்தாள். ‘இவ்வளவு அழகையும் நீ ஒருத்தியே வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறாய்?’ மெல்லச் சொண்டுக்குள் வந்த சிரிப்பை அடக்கினாள்.

ராமனாதன் இரண்டு நாட்களாகக் கடையை திறக்கவில்லை. புதுப் பெண்சாதி மயக்கத்தில் இருக்கிறான் என்று ஊரில் பேசிக்கொண்டார்கள். மூன்றாம் நாள் கடையை திறந்து பழையபடி வியாபாரம் செய்ய ஆரம்பித்தான். அந்தக் கிராமத்தில் அது ஒன்றுதான் பலசரக்குக் கடை. அத்துடன் பள்ளிக்கூடச் சாமான்கள், சோடா, சிகரெட், பத்திரிகைகள் என்று எல்லாம் அங்கே கிடைக்கும். காலை ஆறுமணிக்கு பலகைகளை ஒவ்வொன்றாக அகற்றி அவன் கடையை திறந்தால் இரவு எட்டுமணிக்கு பூட்டிவிட்டு வீட்டுக்கு போவான். வீடு வசதியாக கடைக்கு பின்னால் இருந்தது.

முதல் ஆறுமாதம் புதுப் பெண்சாதியை பார்க்க அந்த ஊர்ப் பெண்கள் வந்தபடி இருந்தார்கள். அவள் வார்த்தைகளை விழுங்கி விழுங்கி பேசும் அழகைப் பார்க்க சிலர்; விரித்த அவள் தலைமுடி காற்றில் தேசியக்கொடி போல பக்கவாட்டில் பறக்கும் அழகைப் பார்க்கச் சிலர். பக்கத்து வீட்டுக்காரி அவளை ‘புதுப்பெண்சாதி’ என்றுதான் கூப்பிட்டாள். சாமான் விற்க வருபவர்கள் ‘புதுப்பெண்சாதி அம்மா’ என்றும், சிறுவர்கள் ‘புதுப்பெண்சாதி அக்கா’ என்றும் அழைத்தார்கள். அவளுக்கு தன் பெயர் மறந்துகொண்டு வந்தது.

வந்த சில மாதங்களிலேயே புருசனுடைய கடை நட்டத்தில் ஓடுவது அவளுக்கு தெரிந்துவிட்டது. அவனுக்கு ஒரு கணக்கும் எழுதிவைக்கத் தெரியாது; வாசிப்பதுகூட எழுத்துக்கூட்டித்தான். பட்டணத்துக்கு மினக்கெட்டுப்போய் சாமான்கள் வாங்கிவந்து கொள்விலையிலும் குறைந்த விலைக்கு விற்பதைப் பார்த்து அவள் திகைத்திருக்கிறாள். ஒருநாள் கதையோடு கதையாக ‘நானும் உங்களுக்கு கடையில் உதவியாக இருக்கிறனே’ என்று கேட்டாள். புருசன் பாம்பு கொத்தியதுபோல திடுக்கிட்டு ‘சீச்சீ, அப்படியெல்லாம் செய்யக்கூடாது, உமக்கு ஒன்றும் தெரியாது’ என்று சொல்லி கதையை முடித்துவிட்டான்.

ஒருநாள் அதிகாலை முன் வீட்டுக் கிழவிக்கு ஒரு தந்தி வந்தது. கிழவி தந்தியை உடைக்காமல் அதை தலைக்குமேல் பிடித்துக்கொண்டு செட்டை முளைத்த கறையான்போல அங்குமிங்கும் ஓடினாள். இங்கிலீஷ் தெரிந்த ஒருத்தரும் அகப்படாததால் பள்ளிக்கூடம் திறக்கட்டும், யாராவது வாத்திமார் வந்ததும் படிக்கலாம் என்று சொன்னார்கள். கிழவி ஆவென்று அழுது புலம்பத் தொடங்கினாள். இவள் புருசனிடம் ‘நான் படித்துப் பார்க்கட்டா?’ என்று கேட்டாள். ‘நீரா, உமக்கு வாசிக்கத் தெரியுமா?’ என்றான் கணவன். ‘கனக்கத் தெரியாது, ஆனால் முயற்சி பண்ணலாம்’ என்றாள். அவன் அனுமதி கொடுத்ததும் தந்தியை பிரித்து வாசித்துவிட்டு சிரித்தாள். ‘ஆச்சி, பயப்பிடாதை. உன்ரை மகளுக்கு ஆண்குழந்தை பிறந்திருக்கு, நீ பாட்டியாகிவிட்டாய்’ என்றாள். பிள்ளை பிறந்த புதினத்தை விட புதுப்பெண்சாதிக்கு ஆங்கிலம் தெரியும் என்பதுதான் அன்று ஊர் முழுக்க பேச்சு. ராமனாதன் ஆச்சரியத்தோடும் பெருமையோடும் அவளைப் பார்த்தான். அவள் படித்த பள்ளிக்கூடத்தில் ஆங்கிலத்திலும் கணித்தத்திலும் அவள் முதல் பரிசு பெற்றதை அப்பவும் அவனிடம் சொல்லவில்லை.

மணமுடித்து இரண்டு வருடங்களாகியும் ராமனாதனுக்கு ஏதோ பிரச்சினை இருந்தது. அவள் அழகு அவனைக் கூச வைத்தது. அவளுக்கு அவன் ஏற்றவனில்லை என்ற எண்ணம் ஆரம்பத்திலிருந்தே அவனிடம் இருந்தது. அவளை நெருங்கிய அடுத்தகணமே சிறுபையன்போல உணர்வான். கறுப்பாக திரண்டு கிடக்கும் அவள் கண்களை அவனால் நேராகப் பார்க்கமுடியாது. சற்றுமுன் பூச்சி கடித்ததுபோல வீங்கியிருக்கும் உதடுகளை அவள் செல்லமாகத் திறந்து பேசும்போதெல்லாம் மனதைக் கிளறும். சிலவேளைகளில் அவனுக்கு அடிக்காலில் தொடங்கி நடுக்கம் ஏறிக்கொண்டு வரும். அவனால் அவளை அணுகமுடியவில்லை.

ஒருநாள் இரவு அவள் சொன்னாள். ‘நான் உங்களுக்கு புத்தி சொல்லுறன் என்று நினைக்கக் கூடாது. கடையிலே விற்கிற சாமான்களுக்கு சங்கேத எழுத்தில் விலை ஒட்டி வைப்பம். விற்கும்போது பொருளில் எழுதிய விலையிலும் கூடிய விலைக்கு விற்கவேணும். இந்த முறையில் நட்டமே வராது.’ பேசி முடிந்த பிறகும் அவள் வாய் மெல்லிசாய் திறந்து அவன் சொல்லும் பதிலை உள்வாங்கக் காத்திருந்தது. அன்று ராமனாதன் களைத்துப்போய் இருந்ததால், பிச்சைக்காரர்களுக்கு தர்மம் செய்யும் முகத்தை அணிந்து ‘சரி, செய்யும்’ என்று சொல்லிவிட்டு படுத்து தூங்கிவிட்டான்.

அன்றிரவு விளக்கை கொளுத்திவைத்து அந்த வெளிச்சத்தில் உட்கார்ந்து ஒவ்வொரு சாமானாக எடுத்து விலைக்குறிப்பு எழுதினாள். அந்தக் குறிப்புகள் ‘கத்ண்’ என்றும் ‘இதுஎ’ என்றும் இருந்தன. ஒவ்வொரு சங்கேத எழுத்துக்கும் ஓர் எண் இருந்தது. எந்த எழுத்துக்கு எந்த எண் என்பதை ஞாபகம் வைப்பதற்காக பத்து எழுத்து வாசகம் ஒன்றையும் தயாரித்தாள். இரவு ஒரு மணிக்கு ராமனாதன் உருண்டு படுத்தபோது தன் மனைவி கைவிளக்கு வெளிச்சத்தில் குனிந்து குனிந்து எழுதிக்கொண்டிருப்பதை பார்த்து மறுபடியும் திரும்பிப் படுத்தான்.

காலை எழும்பியவன் திடுக்கிட்டுவிட்டான். அவன் மனைவி மாற்றமில்லாமல் அதே இடத்தில் அமர்ந்து, அதே மாதிரி குனிந்து, கீழேவிழுந்த தலைமுடியை ஒருகையால் பிடித்தபடி எழுதிக்கொண்டிருந்தாள். ஒரு முழு இரவு அவள் தூங்கவில்லை. அவனால் நம்ப முடியவில்லை. மனதில் ஏதோ உருகி ஓடியது. அருகே வந்து அவள் கன்னத்தை தொட்டு ‘பத்மி’ என்றான். அவன் அவளை அப்படி என்றுமே அழைத்ததில்லை. அவள் நிமிர்ந்துகூடப் பார்க்கவில்லை. அவளுக்கு வெடித்து அழுகை வந்தது. கார் கண்ணாடி துடைப்பான்போல இரண்டு கைகளாலும் மாறி மாறி கன்னத்தை துடைத்தாள். அப்படியும் நிற்காமல் கண்ணீர் பெருகி வழிந்து கன்னத்தை நனைத்தது. ‘அழாதேயும், அழாதேயும்’ என்று ராமனாதன் அவளை அணைத்தான். அன்றைக்கு இரண்டு மணி நேரம் தாமதமாக கடையை திறந்தவன், வீரகேசரி பேப்பர் முன்பக்கத்தில் பெரிய எழுத்தில் அவன் பெயர் அச்சாகியதுபோல அன்று முழுக்க மகிழ்ச்சியில் திளைத்தான்.

மத்தியான நேரங்களில் அவன் சிறிது கண்மூடி இளைப்பாற அவள் வியாபாரத்தை கவனித்தாள். அந்தக் கடையில் அதிகமாக விற்றது யானை மார்க் சோடாவும், த்ரீரோசஸ் சிகரெட்டும்தான். அவள் விலைச்சீட்டைப் பார்த்து விலைசொல்லி வியாபாரத்தை சுறுசுறுப்பாக கவனிப்பாள். அவளைப் பார்க்க சுழட்டிவிட்ட பம்பரம்போல இருக்கும். கடை பூட்டும் நேரம் மறுபடியும் அவள் வந்து உதவி செய்வாள். விளம்பரத் தட்டிகளை மடித்து, சிகரெட் பற்றவைக்கும் நெருப்புக் கயிற்றை அணைத்து சுருட்டி உள்ளே வைப்பார்கள். ஒவ்வொரு பலகையாக அடுக்கி, கடையை மூடி ஆமைப்பூட்டைப் போட்டு பூட்டுவார்கள். ஒருநாள் அவள் கணக்குப் பார்த்துவிட்டு ‘இன்றைக்கு லாபம் ரூபா 50.40. ஆகக்கூடிய லாபம் கிடைத்த நாள்’ என்று சொல்லி சிரித்தாள். ‘எப்படி அத்தனை சரியாக சொல்கிறீர்?’ என்று ஆச்சரியமாகக் கேட்டான். ஏதோ பழைய காலத்து சினிமா கதாநாயகி பெயரை நினைவுக்கு கொண்டுவருவதுபோல கண்களைச் சொருகி, இரண்டு கைகளையும் ஒரு கன்னத்தில் வைத்து யோசித்தாள். பின்னர் ‘எண்ணும் எழுத்தும் தெரிந்தால் எதுவும் செய்யலாம்’ என்றாள். அவள் வார்த்தைகளை விழுங்கி விழுங்கி பேசும்போது அவனுக்கு அவளையே விழுங்கிவிடலாம்போல தோன்றும்.

மணமுடித்து சரியாக 13 வருடம் கழித்து அவர்களுக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தது. அற்புதமாகப் பிறந்த குழந்தைக்கு அற்புதம் என்று பெயர் சூட்டினார்கள். அப்பொழுதுகூட அவளை புதுப் பெண்சாதி என்றே அந்த ஊர்ச்சனங்கள் அழைத்தார்கள். அற்புதத்துக்கு 10 வயது நடந்தபோது ஒருநாள் கணவன் மாரடைப்பில் இறந்துபோனான். அவள் சோர்ந்துபோகவில்லை. பொறுப்புகள் கூடியபோது விவேகமும் கூடியது. அவளுடைய ஒரே பெண்ணை படிப்பித்து வளர்த்து ஆளாக்கவேண்டும் என்பதுதான் அவளுடைய லட்சியமானது.

கடையில் வியாபாரம் முன்னெப்பொழுதும் இல்லாதமாதிரி நல்லாய் நடந்தது. வாத்திமாரும் அந்தப் பள்ளிக்கூடத்தில் படித்த பிள்ளைகளும், பிறத்தியாரும் கடைப் பொருட்களில் எழுதி ஒட்டியிருக்கும் சங்கேத வார்த்தைகளை உடைக்கப் பார்த்தார்கள். முடியவில்லை. அற்புதத்தை கேட்டு தொந்திரவு செய்தார்கள். அது அவளுக்குகூட தெரியாது. பள்ளிக்கூடத்தில் கணிதம் படிப்பிக்கும் வாத்தியார்கூட முயன்று பார்த்து தோல்வியடைந்தார். புதுப்பெண்சாதி மிகத் திறமையாக சங்கேத வார்த்தைகளை உண்டாக்கியிருக்கிறாள் என்று பேசிக்கொண்டார்கள்.

ஒருநாள் காலை அற்புதத்தை காணவில்லை. தாயைப் போலவே மகளும் அழகாக வருவதற்கு திட்டம் போட்டிருந்தாள். பின்னலைப் பின்னி தொங்கவிட்டு அதற்குமேல் அரைத்தாவணியை எறிந்திருப்பாள். ஒரு பிணம் பொதுக்கிணற்றிலே மிதப்பதாக செய்தி வந்தபோது ஒருவரும் நம்பவில்லை. 17 வயது நடந்துகொண்டிருந்த அற்புதம் தற்கொலை செய்திருக்கிறாள். சோதனைக்காக அதிகாலை எழும்பி மும்முரமாகப் படித்துக்கொண்டிருந்தவளுக்கு ‘இன்னொரு வாய்’ ‘இன்னொரு வாய்’ என்று சொல்லி இரண்டுநாள் முன்புகூட அந்த தாயார் சோறு தீத்தியிருக்கிறாள். எதற்காக தற்கொலை செய்துகொண்டாள் என்பது அவளுக்கு விளங்கவில்லை. அற்புதம் ஓர் இயக்கப் பெடியனை காதலித்தாள். அவன் வடமராட்சிப் போரில் இறந்துவிட்ட செய்தி கிடைத்து அவள் உயிரை விட்டிருக்கிறாள். ஊரிலும், அவள் படித்த பள்ளிக்கூடத்திலும் இந்தக் கதை எல்லோருக்கும் தெரிந்திருந்தது. பெற்ற தாயாருக்கு தெரியவில்லை. 13 வருடம் காத்திருந்து, 17 வருடம் வளர்த்த மகளுக்கு தாய் ஒரு பொருட்டாகத் தோன்றவில்லை. மூன்று மாதமே பழகிய ஒரு போராளிக்காக கிணற்றிலே குதித்துவிட்டாள்.

மகள் இறந்தபிறகு அவள் கடையை திறக்க மறுத்துவிட்டாள். இனி யாருக்கு என்ன சீவியம் என்று அரற்றினாள். ஊர்ச் சனங்கள் வற்புறுத்தியபடியால் மறுபடியும் கடையை திறந்த அன்று அது எதிர்பாராதவிதமாக மறக்க முடியாத ஒரு நாளாக அமைந்தது. 30 ஜூலை 1987. லெப் ஜெனரல் திபேந்தர் சிங் தலைமையில் இந்திய அமைதிப் படை இலங்கையில் இறங்கிய நாள். அவளுடைய கடை விழாக்கோலம் பூண்டது. வந்தவர்களுக்கெல்லாம் யானை மார்க் சோடா உடைத்துக் கொடுத்தாள். ஆண்களுக்கு த்ரீரோசஸ் சிகரட்டுகளும், பள்ளிப்பிள்ளைகளுக்கு இனிப்பு, பென்சில், அழிரப்பர்களும் இலவசமாக வழங்கப்பட்டன. புதுப்பெண்சாதி கடையில் அன்று கொண்டாட்டம் இரவு நடுநிசிவரை நீண்டது.

ஊரடங்குச் சட்டம் நடைமுறையிலிருந்த ஒருநாள் அவள் அன்றைய கணக்குகளை அவசரமாக முடித்துவிட்டு கடையை பூட்டிய சமயம் திடுதிப்பென்று இந்திய ராணுவ வாகனம் ஒன்று வந்து நின்றது. ஒரு பட்டாளக்காரன் மாத்திரம் தொப்பென்று குதித்து எட்டு வாழைப்பழங்களை பிடுங்கிக்கொண்டு, நாலு ரொட்டியும், ஒரு த்ரீரோசஸ் பக்கட்டும் வாங்கினான். முட்டைப் படம் போட்ட போத்தலைச் சுட்டிக்காட்டினான். அடித்தொண்டையில் விநோதமான சத்தம் உண்டாக்கும் ஒரு மொழியில் ஏதோ வினவ இவளும் யேஸ் யேஸ் என்று தலையாட்டினாள். அவன் காசு எவ்வளவு என்று சைகையில் கேட்க, இவள் அதே சைகையில் வேண்டாமென்றாள். அவன் மறுத்து காசை நீட்டியதும் அவள் விலைக்குறிப்புகளைப் படித்து ஒரு துண்டுக் காகிதத்தில் கணக்கு எழுதிக் காட்டி சரியான காசைப் பெற்றுக்கொண்டாள். சாமான்களுக்கு காசு கொடுத்தது இந்திய ராணுவத்தின் மதிப்பை அவளிடம் உயர்த்தியது. அந்த மதிப்பு 24 மணிநேரம்கூட தாக்குப்பிடிக்கவில்லை.

அடுத்தநாள் அவள் கடையை மூடும் நேரம், முதல் நாள் போல ஒரு வாகனம் வேகமாக வந்து பிரேக்போட்டு நின்றது. ஆனால் வாகனத்தில் இருந்து குதித்தவன் நேற்று வந்தவன் அல்ல.
அதிகாரம் செலுத்தி பழகிய முகம். நீலத் தலைப்பாவும் மீசையும் வைத்த ராணுவ அதிகாரி. அவளைப் பேசவிடாமல் பகையுணர்வுடன் இழுத்து வாகனத்தில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார்கள். அதற்கிடையில் ஊர்ச்சனம் கூடிவிட்டது. தன்னை ஏன் பிடிக்கிறார்கள், எதற்காகக் கூட்டிச் செல்கிறார்கள் என ஒன்றும் அறியாது திகைத்துப்போய் நின்றவள் பக்கத்துவீட்டுக்காரியிடம் கத்திச் சொன்னது ‘ராசம்மாக்கா, என்ரை ஆடு, என்ரை கோழிகள், பத்திரம்’ என்பதுதான்.

முட்டைப்படம் போட்ட ஷம்பூவை சாப்பிடலாமா என்று பட்டாளத்துக்காரன் கேட்டிருக்கிறான். மொழி புரியாமல் இவள் ஓம் என்று பதில் சொல்லியதைக் கேட்டு அவன் அதைச் சாப்பிட்டு பேதியாக்கி படுத்த படுக்கையாகக் கிடந்தான். அதற்காக அவளை விசாரணைக்கு பிடித்துச் சென்றார்கள். மொழிபெயர்த்தவர் சொல்லித்தான் இது அவளுக்கு தெரியும். தான் நிரபராதி என்பதை அவள் பலதடவை விளக்கி கூறியும் அது பலனளிக்கவில்லை.

ஆறுமாதமாகியும் புதுப்பெண்சாதி ஊருக்கு திரும்பவில்லை. அவளுடைய கடையும் திறக்கவில்லை. ராணுவம் பிடித்துப் போனவளுக்கு என்ன நடந்ததென்பது ஒருத்தருக்கும் தெரியாது. கோழிக்கு உணவு போட்டவர்கள் ஒருநாள் கோழியை உணவாக்கினார்கள். ஆட்டுக்கு உணவு போட்டவர்கள் ஒருநாள் ஆட்டை உணவாக்கினார்கள். ஒரு நாள் இரவு யாரோ பின் கதவை உடைத்து கடைக்குள்ளே புகுந்து அரிசி, பருப்பு என்று திருடிப்போனார்கள். அதை தொடர்ந்து மா, உப்பு, சர்க்கரையும் மறைந்தது. விரைவில் சோடா, த்ரீரோசஸ், சுருட்டு, முட்டைப்படம்போட்ட ஷம்பூ, பென்சில், கொப்பி, அழிரப்பர் எல்லாமே களவு போயின. கடைசியில் எஞ்சியது கணக்குப் புத்தகம். அற்புதம் இறந்தபோது பேப்பரில் வந்ததை வெட்டி சுவரில் ஒட்டிவைத்த படம். கைதான அன்று கடைசியாகக் கிழித்த நாள்காட்டி. அது திங்கட்கிழமை, 1989 மார்ச் 20 என்று காட்டியது.

தெற்கே ஒரு பெயர் தெரியாத ஊரிலிருந்து 32 வருடங்களுக்கு முன்னர் மணமுடித்து இந்த கிராமத்துக்கு வந்த புதுப் பெண்சாதியை எல்லோரும் மறந்துவிட்டர்கள். ஒருநாள் போரிலே வீட்டை இழந்த இளம் தம்பதியினர் கடையினுள் புகுந்து அதை சொந்தமாக்கினர். ஈரத் துணியால் தரையை சுத்தம் செய்த பெண் ஒவ்வொரு பலகையிலும் ஒவ்வொரு எழுத்து எழுதியிருப்பதை படித்தாள். பத்து பலகைகள், பத்து எழுத்துக்கள். எ ண் ணெ ழு த் து இ க ழே ல். சிறிது தயங்கிவிட்டு அந்த இளம் மனைவி கையிலிருந்த துணியால் அதை அழுத்தமாகத் துடைத்து அழித்தாள்.

– 2010-02-13

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *