புதுச்சட்டை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 27, 2021
பார்வையிட்டோர்: 3,135 
 

(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நாளைக்குப் புதுவருடம்.

அவனுக்கு அழுகைதான் வருகிறது! அதோ …… குமார் தனது தந்தையுடன் காரிலே செல்கிறான். அவன் பெரிய கடைக் குச் செல்வான். புதுச்சட்டை , சப்பாத்து எல்லாம் வாங்குவான். பள்ளிக்கூடத்துக்கும் அதைப் போட்டுக் கொண்டு வருவான். ‘ஐயா வேண்டித்தந்த புதுச்சட்டை’ என்று புளுகுவான்.

அவனுக்கு அழுகைதான் வருகிறது.

அவனுக்கும் ஐயா வீட்டில் இருந்தால் எவ்வளவு நல்ல தாய் இருக்கும். அவர் சைக்கிளிலே சென்று புதுச்சட்டை வேண்டிவருவார். அவன் போடுவான்; “ஆனால் ஐயாதான் பொலீஸ் ஸ்டேசனில் இருக்கிறாரே….. பொலீஸ் பிடிச்சு ஐயாவை ஆறுமாசமாய் அடைச்சு வைச்சிருக்குது.”

– ‘ஐயா !…. ஐயா!…’ என நினைத்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழுதான். அந்த அழுகை நீடிக்கு முன்பே ஒரு சந்தோஷ உணர்வும் மேலிட்டது; நாளைக்கு ஐயா வருவாராம். இண்டையோடை மறியல் முடியுதாம். அம்மாதான் சொன்னா,

எல்லாம் அந்தக் குமாருடைய அம்மா செய்த வேலை தான். பணக்காரர்கள் எல்லோரும் கெட்டவர்கள். அப்படித்தான் அவனுக்குத் தோன்றுகிறது. ‘கடவுளே! அவையளுக்குக் காசோடை சேர்த்துக் கெட்ட குணத்தையும் படைச்சனியா?’ என்று நினைத்தான்.

அம்மா சொல்லுவா ; கடவுள் நல்லவராம். அவர்தான் எங்களையெல்லாம் படைச்சவராம். அவரை ஒவ்வொரு நாளும் கும்பிட்டால் நாங்கள் கேட்கிறதெல்லாம் தருவாராம்! ‘பணக்கார ஆக்கள் நெடுகலும் கும்பிட்டுக் கும்பிட்டுத்தான் காசு சேர்த்திருக்கினம் போலை ‘ என்று நினைத்தான். “அப்பூ .. சாமி! எங்களுக்கும் கன காசு தா …! குமார் அவையளுக்குக் குடுத்தது போலை வீடு, கார் எல்லாம் தா!” – அவனும் தான் ஒவ்வொரு நாளும் கும்பிடுகிறான். ஆனால், கடவுள் ஏன் கண் திறக்கிறாரில்லை? அவரும் பணக்காரருக்குத்தான் ‘சைட்’ பண்ணுறாரோ?

***

அவன் மூன்றாம் வகுப்பிற் படித்துக் கொண்டிருக்கிறான் – பெயரளவிற் தான். பள்ளிக்கூடம் என்றால் வேப்பங்காய்! காலமை விடியுமுன்பே அம்மா வந்து அவனைத்தட்டி எழுப்புவா :

“சின்னாம்பி !…டேய், எழும்படா !…. பள்ளிக்கு நேரம் போகுது”.

பிறப்புப் பத்திரத்தில் அவனுடைய பெயர் சின்னத் தம்பி. அது வீட்டிலே ‘சின்னாம்பி’ ஆக மருவியது. பள்ளிக் கூடத்தில் ஆசிரியர்களாலும் சக மாணவர்களாலும் ‘கறுவல்’ என்றுதான் அழைக்கப்படுகிறான். ஆக, அவனுக்குத் தனது சரியான பெயர் இன்னும் தெரியாது.

அம்மா எழுப்பும் பொழுது சினந்து கொண்டே எழும்புவான் : “நான் போகமாட்டன்…போணை;” அம்மா விட மாட்டா. ஏதாவது சமாதானம் சொல்லி அனுப்பி விடுவா. சில வேளைகளில் ‘நாரிமுறிய’ இரண்டு கொடுக்க வேண்டியும் வரும்.

மண் குந்தின் புழுதிகள் உடம்பு முழுவதும் ஒட்டியிருக் கும். “ஒரு இடத்திலை கிடந்து நித்திரை கொள்ளத் தெரியாது. நாலு பக்கமும் உழத்தினால் தான் உனக்கு நித்திரை வரும்” எனத் திட்டியபடியே, அம்மா வாளியில் தண்ணீர் எடுத்து மேலைக் கழுவி விடுவா. சட்டை போட்டு அனுப்பி விடுவா – வழக்கமான பழைய கசங்கிய சட்டைதான். பள்ளிக்கூடத்தில் மற்றப் பெடியளுடன் தன்னை ஒப்பிடும் பொழுது கூச்சமாயிருக்கும். அதனாற்தானோ என்னவோ, வாத்திமாரெல்லாம் அவனைக் கடைசி வாங்கில் தனியாகத்தான் இருக்கச் சொல்கிறார்கள். கடைசியிலே இருந்து விட்டால் அவனுக்கு வேறு பிராக்கு. வாத்தியார். அதையே சாட்டாக வைத்துக் கொண்டு, “கறுவல், வெளியாலை போய் வெயிலுக்கை நில்லடா!” என்று அனுப்பி விடுவார்; சின்னத்தம்பிக்கு பள்ளிக்கூடம் கசக்கும்.

***

பள்ளிக்கூடம் விட்டதும் குமாரினுடைய வீட்டு வழியாகவே சின்னாம்பி வருவான். குமார் தன் ஐயாவுடன் முதலிலே காரில் வந்து விடுவான்.

…குமாரினுடைய வீட்டு விறாந்தையில் ஒரு சின்ன வீடு வடிவாகக் கட்டப்பட்டிருக்கிறது. நிற நிற ரியூஸ்களால் அவன் அதைச் சோடித்திருக்கிறான். அது தானாம் குமாரும் தங்கச்சியும் ‘அம்மா ஐயா’ விளையாட்டு விளையாடுகின்ற வீடு. அவனுக்கும் அவர்களுடன் சேர்ந்து விளையாட ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால் … அம்மா அடிப்பாவே! அங்கே அவன் போகக் கூடாதாம். போனால், குமாரின் அம்மா அவனுக்கு அடிப்பாவாம். அப்படித்தான் குமாரின் அம்மா என்ன கூடாதவளா? போய்த்தான் பார்க்கலாமே?’

“குமார்… நானும் விளையாட வரட்டேடா?” என்ற வாறே உள்ளே போனான். கோயிலிலை விற்கிற சின்னச் சின்னப் பானை சட்டியெல்லாம் வைத்திருந்தார்கள். செவ்வரத்தம் பூவை நறுக்கி ஒரு சின்னச்சட்டியிலே போட்டு, ஓலை நெட்டிகளால் எரித்துக் கொண்டிருந்தாள் குமாரின் தங்கச்சி. இவனைக் கண்டதும், “சீ. சனியன், நீ வேண்டாம் போ!” என்று ஏசினாள். சின்னாம்பிக்கு மூக்கு முட்டக் கோபம் வந்தது. அவளுடைய முதுகில் அப்படியே ஓங்கிக் குத்த வேண்டும் போலிருந்தது.

“இல்லை…அவனும் வரட்டும்…அவன் தான் எங்கடை வேலைக்காரனாம். என்ன?” என்று தங்கையைச் சமாதானப்படுத்தினான் குமார். அவர்களுடைய ‘அம்மா ஐயா’ விளையாட்டில் அவன் வேலைக்காரனாகச் சேர்ந்து கொண்டான்.

‘டேய்! கறுவல், இந்தக் காரை ஒருக்காய்த் துடைத்து விட்டா’ என்று கட்டளையிட்டான் குமார். நல்ல வடிவான சின்னக் கார். பளபளத்துக் கொண்டிருந்தது. அவனது ஐயா வேண்டிக் கொடுத்த காராம். அதிலே ஏறி ஓட வேண்டும் போலிருந்தது அவனுக்கு.

“டேய் , குமார்…. ஒருக்காய் ஓடிப் பாக்கட்டேடா?” என்று கேட்டான். “டேய்! மூதேசி!….அம்மா ஐயா விளையாட்டிலை இப்பிடியே கதைக்கிறது?…நீ வேலைக்காரன். என்னை ஐயா எண்டெல்லோ கூப்பிட வேணும்” என்றான் குமார்.

“ஐயா!….இந்தக் காரை ஓடிப்பாக்கட்டா?”

“சரி!” என்று முதலாளிபாணியில் அனுமதித்தான் குமார். சின்னத்தம்பி காரினுள் ஏறி, அமத்தி உளக்கி ஓடினான். இன்பத்தின் எல்லையில் இருப்பது போன்ற உணர்வு!

அப்போது குமாரின் அம்மா வந்தாள் சிங்கம்போல: “இந்தக் கழுதையை ஏன் குமார் சேர்த்து விளையாடுறனீ?” என்று கர்ச்சித்தாள். அவனது இடது கையைப் பிடித்துத் தூக்கி, ‘தொப்’ என்று கீழே போட்டாள். அவன் பயந்து, அவளை நிமிர்ந்து பார்த்தான். அவள் மள மள வென்று அவன் முதுகிலே அடித்தாள். அவன் குளறத் தொடங்கினான்.

“இந்தக் கீழ்சாதி நாயளை ஏன் குமார் விறாந்தையிலை ஏற விட்டனீ?” – அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டாள். அவன் படியிலே தடக்குப்பட்டு விழுந்தான். அப்பொழுது கதிரையிலே படுத்திருந்த பெரிய நாயொன்று பாய்ந்து வந்தது. அவன் எழும்புவதற்கு முதலே, ‘அவுக்’ கெனக் கவ்வியது. ‘ஐயோ. அம்மா!” என்று ஈனமாக அவன் குளறத் தொடங்கினான். குமார் நாயை அதட்டினான்.

சின்னத்தம்பி அழுது கொண்டே வீட்டுக்கு நடந்தான். நாய் கடித்த இடத்திலிருந்து வழியும் இரத்தத்தைப் பார்த்து விக்கி விக்கி அழுதான். அம்மாவினுடைய சொல்லைக் கேட்காமல் போனபடியாற்தான் இவ்வளவும் நடந்தது என்று நினைக்க, பெரிய துக்கம் பொங்கிக்கொண்டு வந்தது. ‘அம்மா’ என்று குளறியவாறு வீட்டுக்கு வந்தான்.

அம்மா , என்னவோ ஏதோவென்று விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்தா. “‘என்ன ராசா?…என்ன நடந்தது?” என்று துடிச்சுப் பதைச்சுக் கேட்டா. சீலைத்தலைப்பினால் கண்ணீரையும் புழுதியையும் துடைத்து விட்டா.

“குமாரின்ரை அம்மா…அடிச்சுப்போட்டா…” சின்னாம்பியின் அழுகை அம்மாவைக் கண்டதும் இன்னும் கூடியது.

அம்மா சீறினா; பொங்கிவந்த ஆத்திரத்தைச் சின்னாம்பி மேலேயே தீர்த்தா!

“உன்னையெல்லே அங்கை போகவேண்டாமெண்டனான் ….மெய்ய?…. இனி அங்கை போவியே?….மெய்யடா?….சொல்லு!…இனி அங்கை போவியே?”

“ஐயோ!…போகையில்லையம்மா…அடியாதை யணை…” எனக் குளறியவாறே காலிலே கசிந்து கொண்டிருந்த இரத்தத்தைத் துடைத்தான்.

“என்னடா … உது?”

“அவையின்ரை நாய் கடிச்சுப் போட்டுது.”

அம்மாவுக்கும் அழுகை வந்தது. நாய் கடித்த இடத்திலிருந்து வழிந்த இரத்தத்தைத் துடைத்துவிட்டு சீலைத்துனியால் கட்டிவிட்டா .

“பொறு!…..அந்தத் தேவடியாளிட்டைக் கேட்டுக் கொண்டு வாறன்!” என்றவாறே வெளியேறினாள். சின்னாம்பியும் பின்னே ஓடினான்.

“மெய்யேணை? உனக்கு ஈவிரக்கம் இல்லையே?…ஏன் இந்தப் பிள்ளையை இப்பிடிப் போட்டு அடிச்சுக் கொண்டனீ?…உனக்குப் பிள்ளை குட்டியள் இல்லையோ?…”

“நளத்திக்கு வைச்ச வாய்க்கொழுப்பைப் பாரன்!…உன்ரை பிள்ளை பெரிய திரவியம் எண்டால் ஏன்ரி வீடு வீடாய் நக்க விடுறனீ…அவையளும் பெரிய ஆக்கள் எண்டு கதைக்க வந்திட்டினம்!…இதிலை நிண்டு ஊரைக் கூப்பிடாமல் போடி தோறை!”

நாய்கள் அமர்க்களமாகக் குரைத்தன.

சின்னாம்பி அம்மாவைப் பிடித்து இழுத்தான்; “வாணை…போவம்!” அம்மா மண்ணை அள்ளி வீசி, “நாசமாய்ப் போங்கோ” என்று சபித்தவாறே வந்தா. “பொறுங்கோ! உங்களுக்குக் காட்டித்தாறன்” என்று குமாரின் அம்மா ஏதோ சபதம் எடுத்தாள்.

***

சின்னத்தம்பியின் மனதிற்குள்ளிருந்து ஏதோ கிண்டியது. தங்களில் ஏதோ குறைபாடு இருப்பதாக அவன் நினைத்தான். பள்ளிக்கூடத்தில் தன்னைப் பின்வாங்கில் தனியாக இருக்கச் செய்வதற்கும், “கறுவலோடை சேரக்கூடாது” என்று சக மாணவர்கள் வாத்திமாரின் சொல்லைக் கேட்டு ஒதுங்கிக் கொள்வதற்கும் ஏதோ காரணம் இருக்கத்தான் வேண்டும். தான் குமாரின் வீட்டினுள் ஏறி விளையாடியதும் குமாரின் அம்மா பேய்போல நிற்பதற்கும் ஏதோ காரணம் இருக்கவே செய்கிறது. அம்மா கூட அடிக்கடி, “அங்கை போகாதை…. அவையள் அடிப்பினம்” என்று சொல்லுவா. அப்படியானால் அவவும் அந்தக் காரணத்தைத் தெரிந்து வைத்துக்கொண்டு தனக்குச் சொல்லாமல் மறைக்கின்றா போலும்! கால், கை , மூக்கு, கண் எல்லாம் தனக்கும் குமாருக்கும் ஒரே மாதிரித்தானே இருக்கிறது. குமாரைப் போலவே தானும் குரல் கொடுத்துக் கதைக்கிறான். தான் கொஞ்சம் கறுப்பு – அவ்வளவுதான்! ஆனால் அவர்களுடைய நாயும் கறுப்புத்தானே! அது வலு குசாலாகக் கதிரையிலே படுத்திருக்கிறது.

அம்மாவிடம் கேட்டான்.

“அம்மா!…ஏன் எங்களை ஒருத்தரும் சேர்க்கின மில்லை?”

“நாங்கள் கூடாத சாதி , அவையள் நல்ல சாதி. அது தான் சேர்க்கினமில்லை.”

அவனது மனம் இன்னும் குழம்பியது –

“சாதி எண்டால் என்ன?”

அப்பொழுது தான் அம்மாவினுடைய நெஞ்சிலும் அந்தக் கேள்வி இடித்தது. தன் புத்திக்கு எட்டியவரை சிந்தித்துப் பார்த்தாள்;

“…நாய்களிலை, அலிசேசன் நாய்…பறை நாய் எண்டு வெவ்வேறை சாதி இருக்கிறது தானே?….. கோழியளிலை யும் லைக்கோன் கோழி ….. பறைக்கோழி எண்டு சொல்லுறம் தானே?…. அது மாதிரித்தான் மனிசரிலையும்…”

அம்மா சொல்லி முடிக்கவில்லை. அவன் ‘டக்’ கென்று கேட்டான்:

“அப்படியெண்டால்…நாய்கள் எல்லாம் ஒண்டாய்ச் சேர்ந்து விளையாடுறது தானே?…கோழியளும் ஒண்டாய்த் திரிஞ்சு தீன் பொறுக்குது தானே?…”

அவனுடைய கேள்வி அம்மாவையும் குழப்பியது. அவன் இன்னும் ஏதோ சிந்தனைவயப்பட்டவன் போலச் சொன்னான்:

“நாய்கள்…கோழியள் மிருகங்களிலையெண்டாலும் கொஞ்சம் கொஞ்சம் வித்தியாசமிருக்கு …அப்பிடியிருந்தும் அதுகள் சேர்ந்து திரியுதுகள்….ஆனால் மனிசர் எல்லாரும் ஒரு மாதிரித்தானே?”

“இந்த முளையானுக்கு இருக்கிற புத்தியைப் பாரன்!” என்று அம்மா ஆச்சரியப்பட்டா. பின்னர்; “என்னவோ தம்பி…அவையள் தான் சேரக்கூடாதெண்டுகினம்…ஆர் கண்டது!” என பேச்சுக்கு முற்றுப்புள் வைக்கப் பார்த்தாள்.

“ஏன்?” என்று அவன் தொடர்ந்தான்.

“உன்ரை கொப்பர் மரத்திலை ஏறிக் கள்ளுச் சீவிற படியால்”

சின்னத் தம்பிக்கு ஆச்சரியம் மேலிட்டது. ஐயாவினுடைய வேலை அது. அவர் கள்ளுச்சீவி விற்காவிட்டால் இவனுக்குச் சாப்பாடு ஏது? கள்ளையும் அவையள் தானே குடிக்கினம்? எத்தனையோ முறை பல பெரிய மனிசர்கள் – இவன் வீடு தேடி வந்து தகப்பனிடம் ‘பிளா’ விலே கள்ளு வேண்டி உறிஞ்சி உறிஞ்சிக் குடித்ததை இவன் பார்த்திருக்கிறான். ஓராள் குடிச்ச பிளாவிலேயே எல்லாரும் சூப்பிக் குடிப்பதைப் பார்த்து இவன் ‘அரியண்டப்’ பட்டிருக்கிறான்.

“நாங்கள் அவையின்ரை விறாந்தையிலை ஏறக்கூடாது. அவையள் வீட்டிலை ஒண்டும் தொடக்கூடாது. எங்களாடை சேரக்கூடாது எண்டு சொல்லிப் போட்டுப் பேந்து எங்களிட்டையே வேண்டிக் குடிக்கினம்தானே?”

அம்மாவுக்கு அவனுடைய கேள்வி சங்கடமாயிருந்தது.

“அது ஒருத்தருக்கும் தெரியாமைத்தானே தம்பி குடிக்கினம்…நீ…போ!…உன்ரை வேலையைப் பார்” என்று முற்றுப்புள்ளி வைத்தாள்.

இருளுகின்ற நேரம் போல ஒரு ஜீப் வந்து சின்னத்தம்பியின் வீட்டிற்கு முன்னால் நின்றது. பொலிஸ்காரர்கள் தொப்புத் தொப்பென்று இறங்கி வந்தார்கள்.

“அடே!…முத்தையா!…”

“என்ன ஐயா?” என்றவாறே இவனுடைய ஐயா வெளியே போனார்.

“என்னடா?…நீங்களெல்லாம் பெரிய ஆக்களோ?…என்னடா சண்டித்தனம்?” என்றவாறே ஒருவன் ஐயாவினுடைய நெஞ்சிலே குத்தினான்.

“ஐயோ!….அடியாதையுங்கோ ஐயா…” என்று ஐயா கும்பிடத் தொடங்கினார். அந்த மடையன்கள், ஐயா கும்பிடக் கும்பிட பிடரியிலையும், நெஞ்சிலையும் குத்தினாங்கள். அம்மா அழுது கொண்டு ஓடினா. அவன் பிடித்து இழுத்தான். பயமாக விருந்தது. அவங்கள் அம்மாவுக்கும் அடித்துப் போட்டால் என்ன செய்வது?

ஐயாவை ஜீப்புக்குள்ளே தள்ளினாங்கள். ஒரு மூலையில் சுருண்டு விழுந்தார் அவர். சின்னாம்பியும் அம்மாவும் அழுது குளறத் தொடங்கினர். ஜீப் சென்று விட்டது.

பின்னர் வழக்கு நடந்தது. ஐயாவுக்கு ஆறு மாதம் மறியல் தீர்ந்தது. என்னத்துக்கென்றே அவனுக்குத் தெரியாது.

…ஐயா நாளைக்கு வருவாராம்.

அவனுக்கு எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது; ஐயா வருவார். அவனுக்குப் புதுச்சட்டை வேண்டித் தருவார். நாளைக்குப் புதுவருடத்துக்கு அவன் புதுச்சட்டை போடுவான்.

***

இன்று வருடப்பிறப்பு.

எல்லோரும் புதுச்சட்டைகளுடன் போகிறார்கள் , பச்சை, சிவப்பு, மஞ்சள் ! எவ்வளவு வடிவான சட்டைகள்! சின்னத் தம்பி நித்திரை முளித்தது முதல் வீட்டுவாசலிலேயே நிற்கிறான். இன்னும் முகங்கூட கழுவவில்லை. ‘ஐயா இப்ப வருவார்!’ பசிக்கிறது; சாப்பிடக்கூட மனம் வரவில்லை….புதுச்சட்டை?.

…குமாரும் தங்கச்சியும் நல்ல வடீவான புதுச்சட்டை போட்டுக்கொண்டு போகிறார்கள். இவனைக் கண்டதும், சப்பாத் துக்களை ‘டொக்கு டொக்’ என்று சத்தமிடும்படி தேய்த்து நடக்கிறார்கள். இவன் தனது கசங்கிப் போன மண்ணிறக் களிசானைப் பரிதாபமாகப் பார்க்கிறான். குமாரின் தங்கை, இவனைக் காட்டி ஏதோ கூறுகிறாள். இவன் ‘டக்’ என்று ஒரு மரத்துக்குப் பின்னால் ஒழித்துக் கொள்கிறான். ஒழித்து நின்று கொண்டே எட்டிப் பார்க்கிறான். அவர்கள் சிரிக்கிறார்கள். சின்னத்தம்பிக்கு அழுகை வருகிறது. கலங்கிய கண்களைத் துடைத்துக்கொள்கிறான்.

…அதோ ! தூரத்தில் ஐயா வருவது போலத் தெரிகிறது; ஆஹா…ஐயாவேதான்! சின்னாம்பி சிரித்துக் கொண்டே ஓடுகிறான். ஓடும் பொழுது அவிண்டு விழுந்த களிசானைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு ஓடுகிறான். ஓடிப் போய்..அப்படியே ஐயாவைக் கட்டியணைப்பான். அவர், அவனைத் தூக்கிக் கொஞ்சுவார். குளித்துவிட்டுப் போய் புதுச்சட்டை வேண்டி வருவார். அவனுக்குப் பிடித்த இரத்தச் சிவப்பு நிறத்தில் வேண்டிவருவார்.

‘ஐயா!…ஐயா!….’ ஆசை பொங்க அழைத்துக் கொண்டே ஓடுகிறான். ஐயாவைக் கட்டியணைத்து அவர் இடுப்பைப் பிடித்துக் கொண்டு தனது கால்களை உயர்த்தி அப்படியே தூங்குகிறான்.

ஐயா, அவனைத் தூக்கவில்லை? கொஞ்சவில்லை?

“சீச்சீ…தம்பி என்னிலை முட்டாதை அங்காலை போ!”

இதென்ன இது? ஐயாவும் மாறிவிட்டார்! ஐயாவைப் பார்த்துக் கொண்டே அவர் பின்னால் நடந்து செல்கிறான். சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம், கறுப்பு…இவன் கண்களில் நீர் திரையிடுகிறது.

தாடி வளர்ந்து, கண்கள் உள்ளே சென்று, இருமி இருமி…இரத்தமாகத் துப்புகிறார் ஐயா! வீட்டுக்கு வந்ததும், உள்ளே வரவில்லை. அம்மா ஓடிவந்தா –

“அன்னம்!…நான் இனி உங்களோடை இருக்கேலாது. கசம் பிடிச்சிட்டுது. இனிக் கசாஸ்பத்திரிக்குத்தான் போக வேணும்”.

– முற்றத்து மரத்திலே ஐயா சாய்ந்து கொண்டிருக்கிறார். ஒரு பேணியில் கோப்பி கொண்டு வருகின்றா அம்மா. அதைச் சிரட்டையில் ஊற்றிக் குடிக்கிறார் அவர். ஐயா, அவனுடைய வீட்டாலும் ஒதுக்கப்பட்டு விட்டாரா?

சிவந்து போன அவர் கண்கள் அவனைப் பார்த்த பொழுது சின்னத்தம்பி விம்மி விம்மி அழத்தொடங்குகிறான்.

…அவனுடைய கண்களும் சிவந்து விட்டன.

– பலாத்காரம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பாதிப்பு: 10-07-1977, ,தமிழ்ப்பணிமனை, யாழ்ப்பாணம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *