(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
கந்தப்பன் இப்பொழுது பெருங் குடிகாரனாகி விட்டான். வீரப்பனோடு சேர்ந்துகொண்டு பழகிய இந்தக் கெட்ட குணம் அவனை இன்று இறுகப் பிடித்துக்கொண்டது! முதலில் தனியே குடிக்கப்போக அஞ்சுவான்; அவன் கால்கள் கடைக்குள் எட்டி வைக்கக் கூசும்; “யாராவது பார்த்தால், மானம் போச்சே !” என்ற எண்ணம் அவனுக்கு உண்டாகும்! உண்மையில் வீரப்பன் இல்லாவிட்டால் அவன் அந்தப் பக்கமே போயிருக்கமாட்டான். இப்பொழுதோ கந்தப்பன் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கடைக்குள் நுழையப் பின் வாங்குவதில்லை. கந்தப்பன் பெருத்த குடிகாரனாகிவிட்டான் என்பது கிராமம் முழுவதும் தெரிந்து விட்டது.
சில வேளைகளில் அவன் குடிவெறியால் நடு வழியில் உருண்டு கிடப்பான். அப்போது அவனைப் பார்த்தவர்கள், “ஐயோ! சூது வாது தெரியாத இவனும் சேர்க்கையால் இப்படிக் கெட்டு விட்டானே!” என்று இரக்கப்படுவார்கள்.
கந்தப்பன் செங்காளிபாளையத்தில் ஒரு பண்ணையாள் கிடைக்கும் சம்பளத்தைக் கொண்டு தன் மனைவி, இரு குழந்தை களோடு சுகமாக வாழ்ந்து வந்தான். ஊரில் எல்லோரும் அவனை, ‘அப்பாவி’ என்று புகழ்ந்து பேசுவார்கள்.
கந்தப்பனுக்குக் காலை முதல் மாலைவரையில் பண்ணைக்கார னுக்குத் திருப்தி ஏற்படும்படி வேலை செய்யத்தான் தெரியும். கூலியைத் தன் மனைவி வேலாயியிடம் கொடுத்து விடுவான்; தனக் கென்று அவன் ஒரு காசுகூட வைத்துக்கொள்ள மாட்டான். வேலாயி வீட்டுக்கு எஜமானி; குழந்தைகளோடு கொஞ்சுவதும், பகலெல்லாம் உழைத்துக் களைப்புடன் திரும்பிவரும் கந்தப்பனை உபசரிப்பதுந்தான் அவள் வேலை. கந்தப்பன் தன் மனைவியின் அமுத மொழிகளால் சலிப்பெல்லாம் நீங்கிக் களிப்புறுவான்.
புதன்கிழமை செங்காளிபாளையத்திற்குச் சந்தை நாள். அன்று ஒருவரும் வேலைக்குப் போக மாட்டார்கள். சில கூலிக் காரர் அன்று தான் தலையில் இரண்டு செம்பு தண்ணீர் ஊற்றிக் கொள்வார்கள்; வேலாயி அதிகாலையிலேயே தன் கணவன், குழந்தைகளை எண்ணெய் தேய்த்துக் குளிக்கச் செய்து, பின்பு தானும் எண்ணெய் தேய்த்து முழுகுவாள். சூரியன் உதயமாக ஆக இன்பக் குடும்பம் தூய ஆடை உடுத்துக்கொண்டு, கற்பூரம் ஊதுவத்திகளோடு கோவிலுக்கு வந்துவிடும்; அவ்வூரில் சிவன், விஷ்ணு, மாரியம்மன் கோயில்கள் பக்கம் பக்கமாகவே இருந்தன. அவர்களுக்கு எல்லாம் கடவுள்தான்; சைவம், வைணவம் என்ற பெயரே தெரியாது. அவர்கள் மூன்று கோவி லுக்கும் சென்று வணங்குவார்கள்; கந்தப்பனுக்குக் கற்பூர ஆராதனை நடக்கும்போதும், மணிச் சத்தங் கேட்கும் போதும் கண்களில் நீர் பெருகிவிடும். வேலாயி, “என் கண்ணாட்டிகள் (கணவனும், பிள்ளைகளும்) சுகமாக இருக்க வேண்டும்” என்று மனமாறத் தொழுவாள்.
மாலை வேலாயி சந்தைக்குச் சென்று வீட்டுக்கு வேண்டிய செலவும்’ பிள்ளைகளுக்கு மிட்டாயும் கந்தப்பனுக்குக் கரும்பும் வாங்கி வருவாள். கந்தப்பனுக்குக் கரும்பைவிட அவள் அன்பே அதிகமாக இனிக்கும்.
ஆனால் இவையெல்லாம் குடிப் பேய் பிடிப்பதற்கு முந்திய நிகழ்ச்சிகள். இப்பொழுது எல்லாம் மாறி விட்டன. கந்தப் பனுக்குக் குடிப்பதற்கே கூலிப்பணம் கட்டுவதில்லை. வீட்டில் ராகிகூட இருக்காது; அதைப்பற்றி ” அவன் கவலைப்பட மாட்டான்; சில சமயம் வேலாயி, இரண்டணாவாவது கொடுக்கும் படி கெஞ்சுவாள். குடி மயக்கம் இல்லாவிட்டால் கந்தப்பன், இந்தா” என்று கொடுப்பான்; குடிமயக்கமாயிருந்தால் வேலாயிக்கு அடிதான் கிடைக்கும்.
இன்பம் குடிகொண்டிருந்த அக் குடும்பத்தில் வறுமை புகுந்துவிட்டது. வேலாயி உடல் மெலிந்து களையிழந்து வாடி விட்டாள். வீட்டில் இருந்த நகைகளை எல்லாம் விற்றாய் விட்டது. குழந்தைகளுக்குச் சரிவரச் சோறு போடுவதே இப் பொழுது முடிவதில்லை.
ஒரு நாள் மாலை பண்ணைக்காரன் கந்தப்பனிடம் நூறு ரூபாய் கொடுத்துப் பக்கத்து ஊரில் ஒருவனுக்குக் கொடுத்து வரும்படி சொன்னான். கந்தப்பன் போகும் வழியில் ஒரு கள்ளுக் கடை இருந்தது. அவன் அன்று காலை முதல் கையில் காசு இல்லாததால் குடிக்கவில்லை. கடையைக் கண்டதும் கந்தப் பனுக்குக் கால் அங்கே இழுத்தது. சற்றுநேரம் தயங்கினான். பண்ணைக்காரனுக்குத் தெரிந்தால் அப்புறம் வேலைக்கு வரவேண்டாமென்று சொல்லி விடுவானே என்ற பயமும் உண்டாயிற்று: ” உம் நாலணாவுக்கு குடித்துவிட்டுப் பிறகு யாரிடத்திலாவது வாங்கிக் கொடுத்துவிட முடியாதா?” என்ற எண்ணமும் நடுவே தோன்றியது. இதற்குள் அவன் கடைக்குப் பக்கமாக வந்துவிட்டான். “கந்தப்பா! வா வா, உன்னைப் பத்தித்தான். இவ்வளவு நேரம் பேசிக்கிட்டிருந்தேன்” என்று கடையில் உட்கார்ந்து கொண்டிருந்த வீரப்பன் கூப்பிட்டான்; “எங்கே, இப்படி இரண்டு கொண்டா; டேய் சாக்கணா!” என்று கூவினான் வீரப்பன். பண்ணைக்காரன் கட்டளை பறந்து விட்டது. கந்தப்பன் தன் நண்பனோடு சேர்ந்து குடி குடி யென்று குடித்துவிட்டான்.
கந்தப்பன் தள்ளாடிக் கொண்டு நடக்கிறான். எந்தப் பக்கம் போகிறான், ஏன் அங்கே போகிறான் ? ஒரு நிதானமும் இல்லை. பாதையை ‘அளக்கிறான்’. முகத்தில் களிப்புப் பொங்கு கிறது; ஒரு சிறு தெம்மாங்கு அவனை அறியாது வாயிலிருந்து கிளம்புகிறது.
கடையைவிட்டு ஒரு காடுகூடத் தாண்டவில்லை. அதற் குள்ளேயே கந்தப்பனுக்குக் கால் நிலத்தில் பாவவில்லை. அப்படியே திண்டாடி ஒரு கள்ளிப் புதர் அருகில் பொத்தென்று விழுந்தான். கெட்ட நாற்றத்தோடு அவன் வாயிலிருந்து கள் வழிந்தது. வேட்டி சரியாக இடுப்பில் இல்லை; மடிப்பையைக் காணோம்.
மறு நாள் காலை: கதிரவனோடு தூங்கிக் கதிரவனோடு விழிக்கும் பறவைகள் தங்கள் இணையுடன் உல்லாசமாகப் பேசிக் கொண்டிருக்கின்றன ; இன்துயில் நீங்கிப் புத்துயிருடனும் புது மகிழ்ச்சியுடனும் மரத்துக்கு மரம், கிளைக்குக் கிளை பறந்து திரி கின்றன. இயற்கைத்தேவி அருளிய மந்த மாருதத்தில் நீந்தி, உணவைத் தேடி உண்டு,ஊறும் தீஞ்சுவைத் தண்ணீரைப் பருகி வாழும் அப்பறவைகளுக்கு அடக்க முடியாத, மயக்கந்தரும் களிப்பும் கிடையாது; பின்பு அதனால் ஏற்படும் தளர்ச்சியும் கிடையாது.
மயக்கத்திலிருந்து தூக்கத்திற்குச் சென்று விழித்த கந்தப்பன் மிகுந்த குடியால் தளர்வுற்று அப்படியே படுத்துக் கொண்டு சற்று நேரம் இந்தக் காட்சியைக் கவனித்தான். அவனை அறியாமலேயே அவனுக்குச் சிரிப்பு வந்தது, புதிதாகத் தோன்றிய பகலவனும் சிரித்தான். மறு கணம் கந்தப்பனுக்குத் தன் மேலேயே வெறுப்புண்டாயிற்று.குடி பெருந்தீங்கு என்ற எண்ணம் திடீரென்று அந்தப் பறவைகளைப் பார்த்ததாலோ வைகறையின் வசீகரத்தாலோ அவனுக்கு ஏற்பட்டது.
இந்த எண்ணத்துடன் அவன் தன் வீட்டுக்குள் நுழைந் தான். இரவு பட்டினியாகையால் குழந்தைகள் இரண்டும் வயிறு ஒட்டிப் பிய்ந்த பாயில் படுத்துக் கொண்டிருந்தன. தூக்கமோ, பசிமயக்கமோ -குழந்தைகள் அவனைக் கண்டு ஒன்றும் பேச வில்லை. வேலாயி, இரவில் வெகு நேரம் தூங்காமல் அழுது கொண்டிருந்தபடியால் தலை நோவுண்டாக, பக்கத்து வீட்டுக் காரி கொடுத்த நாலு மிளகை அரைத்து நெற்றியில் தடவிக் கொண்டிருந்தாள். இக்காட்சியால் கந்தப்பனுக்கு அடக்க முடியாத துக்கம் வந்துவிட்டது. பழைய அன்பு, குடியில் வெறுப்பேற்பட்டவுடன் திரும்பிவர, அவன் வாய்விட்டுக் கதறினான்!
“இனிமேல் நான் இந்தப் பாழும் கள்ளைக் கையில்கூடத் தொடுவதில்லை” என்று தன் மனைவியின் முன் சத்தியம் செய்தான். அப்பொழுது தான் அவனுக்குச் சிறிது ஆறுதல் உண்டாயிற்று.
வேலாயி மறுபடியும் நல்ல நாட்களைக் காண ஆரம்பித் தாள். கந்தப்பன் தனது சத்தியத்தைக் கைவிடவில்லை. கூலிப் பணம் பழையபடி வேலாயி கையில் விழுந்தது. ஆனால் தொலைத்து விட்ட நூறு ரூபாயைக் கொடுக்க அடகு வைத்த தாலியை இன்னும் திருப்பவில்லை. வேலாயி கழுத்தில் தாலிக்குப் பதிலாக ஒரு சிறு நூல் சரடுதான் இருக்கிறது.
கந்தப்பன், தன்னை அவமானத்திலிருந்து காக்கத் தன் மனைவி தாலியை அடகு வைக்கத் துணிந்ததைக் கண்டு அவள்மேல் முன்னிலும் அதிக அன்பு கொண்டான். குடிப்பதில்லை, இது உறுதி” என்று பலமுறை சொல்லிக் கொள்ளுவான். அதோடு கிராமசேவையில் ஈடுபட்ட பல தொண்டர்கள் அக்கிராமத்தில் வந்து செய்யும் மதுவிலக்குப் பிரசாரத்தை அவன் தப்பாமல் கேட்பான். படிக்கத் தெரியாவிட்டாலும் பல சொற்பொழிவு களைக் கேட்டு அவன் மதுபானத்தின் தீங்கைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொண்டான்.
ஆனால் மதுபானம் தீங்கு என்ற உண்மையை உணர்ந்து அவன் அதைத் தொடாமல் இருக்கவில்லை ; சத்தியத்தைக் காப்பாற்றவேண்டும், குடிப்பதால் மனைவி மக்கள் துன்புற வேண்டியிருக்கிறது என்ற எண்ணங்களே அவனைக் குடிக்காம லிருக்கச் செய்தன.
கந்தப்பன் தனது உறுதியில் வெற்றிப் பெறுவதற்கு அரசாங் கத்தில் உண்டான ஒரு முக்கிய மாறுதலும் உதவி புரிந்தது. முதன் முதலில் காங்கிரஸ் ஆட்சி சென்னை மாகாணத்தில் ஏற்பட் டதும் சேலம் மாவட்டத்தில் மதுவிலக்கு அமுலுக்கு வந்தது. செங்காளிபாளையம் அந்த மாவட்டத்தில் இருந்ததால் அங்கு மதுக் கடைகள் மூடப்பட்டன. கந்தப்பன் குடியை அறவே மறந்துவிட்டான்.
காலம் மெதுவாக நழுவிக் கொண்டிருந்தது. அப்படி நழுவிய ஐந்தாறு ஆண்டுகளில் எத்தனையோ மாறுதல்கள் உண்டாயின. இரண்டாம் உலகப் போருக்குப் பின் இந்தியாவுக்கு சுதந்திரம் தருவதாகத் தெளிவான வாக்குறுதி கிடைக்காததால் காங்கிரஸ் ஆட்சியை விட்டு விலகிக்கொண்டது. பயங்கர யுத்தம் உலகத் தையே வளைத்துக் கொண்டது. சேலத்தில் மது அரக்கன் மறு படியும் தாண்டவமாடலானான்.
மறுபடியும் ஒரு புதன்கிழமை. கந்தப்பனுக்கு இப்பொழுது சம்பளம் சிறிது அதிகம். மத்தியானம் சுமார் இரண்டு மணிக்குக் கந்தப்பன் கூலிப்பணத்தை வாங்கிக்கொண்டு வந்தான். இத்தனை ஆண்டுகளாக மிச்சம் பிடித்த பணத்துடன் இதையும் சேர்க்கவே மொத்தம் 103 ரூபாய் இருந்தது. அதைக் கண்டு அவன் உள்ளம் பூரித்தது. “இனி அடகு வைத்த தாலியைத் திருப்பி விடலாம்” என்று அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு சந்தைக் குப் புறப்பட்டான்.
சந்தைக்குள் நுழைவதென்றால் கள்ளுக்கடையைத் தாண்டி வந்தாகவேண்டும்.
சந்தையன்று மக்கள் அதைப் பார்க்காது சென்றாலும் ஏழு நாளைய புளித்த கள் நாற்றத்தையாவது மூக்கில் ஏற்றிக் கொண்டு போய்த்தானாக வேண்டும். அதோடு வழக்கமாக அன்று கள் விலை சொப்பு ஓர் அணா ஆகிவிடும். “விலை சொப்பு ஒரு அணா என்று ஒருவன் திடுமம் அடித்துக் கொண் டிருப்பான்.
கந்தப்பன் கடையை அணுகியதும் பழைய நினைவு எப்ப டியோ உதயமாகிவிட்டது. நல்ல வெயிலில் இரண்டு மைல் களுக்கு மேல் நடந்ததால் அவனுக்கு மிகுந்த தாகம் உண்டா யிற்று. “தாலியைத் திருப்ப 100 ரூபாய் போதும்; சந்தைச் செலவுக்கு இரண்டு ரூபாய் வேண்டுமென்று வேலாயி சொல்லி யிருக்கிறாள். ஒரு ரூபாய் மீதி இருக்கிறதே, அதைச் சொந்தச் செலவிற்கு வைத்துக் கொண்டால் என்ன? இன்றைக்கு ஒரு நாள் மட்டும் மனமாரக் குடித்துவிட்டுப் பிறகு அதை நினைக் கிறதே இல்லை என்று இம்மாதிரி அவன் மனத்தில் நினைப்போடியது. களைப்பாறவோ என்னவோ அவன் சந்தைக்குள் நுழையாமல் கள்ளுக்கடைக்குப் பக்கத்தில் இருந்த ஒரு வேப்ப மரத்து நிழலில் உட்கார்ந்தான்.
கந்தப்பன் மறுபடியும் கள்ளைப் பற்றி நினைத்தான்: “விட்டது முதல் அதன் மேலேயே ஒரே பைத்தியமாக இருக்கிறது. இன்றைக்கு ஒரு நாள் குடிப்பதால் என்ன முழுகிவிடும்? நான் முன்னைப்போல் தினமுமா குடிக்கப் போகிறேன்? இந்த ஆசை யைத் தீர்த்துக் கொள்ள இன்றைக்கு மாத்திரம். மறுபடியும் இதைத் தொடுவதே இல்லை. மறுபடியும் கடையைத் திறந் திருக்கிறார்களே. ஒரு தடவை குடித்தால் என்ன கெட்டுப் போகும்? புதுக் கடையைக் கண்டது முதல் அதே நினைவாக இருக்கிறது. இன்றைக்கு மாத்திரம் குடித்துப் பார்த்துவிட்டு மறுபடியும் அதைத் தொடுவதே இல்லை. இன்றைக்கு மாத்திரம்; மறுபடியும் கிட்டக் கூட போவதில்லை என்று அவன் மறுபடி யும் உறுதியாகத் தீர்மானிக்கத் தொடங்கினான். ஆகக் கூடி ஒரு நாலணாக் காசு- இந்த ஆசை தொலையட்டும்” என்று முனகிக் கொண்டே கந்தப்பன் கடைசியாகக் கடைக்குள் நுழைந்து விட்டான்.
அன்று அவன் வேலாயியைப் பார்க்கவில்லை. புளித்த கள்ளை வெயில் நேரத்தில் ‘இன்றைக்கு மாத்திரந்தான்’ என்று நிறையக் குடித்ததனாலும், நெடுநாளாகக் குடிப்பழக்கம் விட்டுப் போனதாலும் அவனுக்குப் போதை மீறிவிட்டது. சந்தை சென்று திரும்பிய வண்டிக்காரன் ஒருவன் அவன் வழியில் தடு மாறுவதைக்கண்டு வண்டியில் தூக்கிப்போட்டுக் கொண்டு போய் அவன் வீட்டில் விட்டான்.
கந்தப்பனுக்குப் போதை தெளிவதற்குள் இருட்டிவிட்டது. முதலில் எங்கிருக்கிறோமென்றே அவனுக்குத் தெரியவில்லை. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நடந்தவையெல்லாம் நினைவிற்கு வந்தன. “வாக்குத் தவறினதுமல்லாமல், வேலாயிக்குத் தெரி யும்படி நடந்துகொண்டேனே ! யாரிடத்திலாவது அவளிடம் கொடுக்கும்படி இரண்டு ரூபாயை முதலிலேயே கொடுத்திருக்க வேண்டும்” என்று பலவாறு நினைத்துக் கலங்கினான். அப் பொழுதுதான் அவனுக்குந் தான் கொண்டுபோன ரூபாயைப் பற்றிய எண்ணம் வந்தது. மடியைத் தொட்டுப் பார்த்தான். பையைக் காணவில்லை.
சந்தையில் ஒரு செலவும் வாங்காமல் வேலாயி வெறுங் கூடையுடன் வீட்டுக்கு வந்தாள். * அடே அம்மா வந்துட்டா அம்மா! மிட்டாயி” என்று சத்தம் போட்டுக்கொண்டு சிறு வர்கள் ஓடிவந்தார்கள்.
கந்தப்பனுக்கு இதைக்கேட்கப் பொறுக்க முடியவில்லை. வேலாயியிடம் நடந்ததை ஒளிக்க அவன் இப்பொழுது கருதா மல் தனது மனதைக் கலைத்த கள்ளுக்கடையை ஒரு சிலந்திக் கூடு என மனதிற்குள்ளேயே சபிக்கலானான். அதே சமயத்தில் வேலாயியின் வாடிய கண்கள் அவன் கண்களைச் சந்தித்தன. “ஐயோ! கடையை மறுபடியும் திறந்துவிட்டு என் புத்தியைக் கெடுத்து விட்டார்களே! கடையில்லாவிட்டால் நான் புத்தி கெட்டு போயிருக்க மாட்டேனே” என்று அவன் கதறினான்.
– காந்தி வழிக் கதைகள் (சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் புனைந்த காந்தி வழி காட்டும் ஐம்பது சிறு கதைகளின் தொகுப்பு), தொகுப்பாசிரியர்: கே.ஆர்.கல்யாணராமன் “மகரம்”, முதற் பதிப்பு: மார்ச் 1969, தமிழ் நாடு காந்தி நினைவு நிதி, மதுரை-13.