புதிய வெள்ளிப் பாதசரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 30, 2023
பார்வையிட்டோர்: 2,371 
 

(2001 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சிவன் ஆலயத்தில் பூர நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய சுப முகூர்த்தவேளையில் தாலி கட்டி ‘நித்தியமங்களா’ கல்யாண மண்டபத்தில் மதியபோசன விருந்துக்கு ஏற்பாடாகியிருந்த விவாக வைபவம் அது….

வெளிநாட்டு மாப்பிள்ளையாதலால் எதிலுமே குறை என்று இல்லாமல் எல்லாக்காரியங்களுமே கனகச்சிதமாக நடந்தேறிக் கொண்டிருந்தன.

மாப்பிள்ளையும் மணமகளும் மணவறையில் அமர்ந்திருக்க….புரோகிதரின் மந்திர உச்சாடணத்துடன் தவில் ஓசையும் நாதஸ்வர இசையும் கலந்துவர…… ஓம குண்டல நெய் வாசனையும் பத்திமணமும் காற்றில் பரவி வர… எல்லாமேதேவலோக காட்சிகளாக விரிந்து கொண்டிருந்தன…

புரோகிதருக்கு அடுத்தபடியாக விவாகம் போன்ற மங்கள கருமங்களின் விதி முறைகளை நன்கு தெரிந்து வைத்திருப்பவரும்…’அது பிழை…இப்படிச்செய்யுங்கோ ‘ என்று கூறி அதிகாரம் செய்யுமளவுக்கு வளர்ந்து வருபவருமான ‘வீடியோக்காரர் தனது கருமத்தை மிகவும் நேர்த்தியாக நிறைவேற்றிக் கொண்டிருந்தார்.

அவ்வூர் பிரமுகர்களில் ஒருவரான செல்லையரும் தனக்கு விடுக்கப்பட்ட இருசாரார் அழைப்பை ஏற்று பாரியார் சகிதம் வந்த இடத்தில் தனது பால்ய நண்பன் ராஜசேகரத்தையும் மனைவியையும் எதிர்பாராத விதமாக சந்தித்துக் கொண்டதில் அகமிக மகிழ்ந்து அவர்களை தமது மனைவிக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

செல்லையர் பிடிவாதக்காரர். மனைவி பிள்ளையில் பாசம் மிகக் கொண்டவர். நாட்டுப் பற்றும் அதிகம் எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே…..’ என்று இளம் சமுதாயம் நினைந்துருக வாழ்ந்து காட்டி வருபவர்.

ராஜசேகர் பெரும் தனவான். அமைதியான போக்கைக் கடைப் பிடிப்பவர். நகைச்சுவை உணர்வு மிகுந்தவர். செல்லையரின் எளிமை; உணர்சி பூர்வமான செயற்பாடுகளால் கவரப்பட்டவர். கண்ணபகவானின் நட்புக்கு இருவரும் எடுத்துக் காட்டானவர்கள்!

“ஊரிலை இருந்த காலத்திலை ஒரு பொங்கல்… தீபாவளி… கோயில் திருவிழா என்று சந்தித்து நட்பையும் உறவையும் வளர்த்தம். அதெல்லாம் பழையகதை. இப்போ எவர் எவருக்கோ நடக்கின்ற கலியாணவீடு அல்லது எவரோ ஒருத்தருடைய மகளின் சாமத்தியவீடு என்று வரும்போதுதான் எதிர் பாராதவிதமாக சந்திக்கக்கூடியதாக இருக்கின்றது” செல்லையர் குறைப்பட்டுக் கொண்டார்.

“அதைவிடும் செல்லர்…பிள்ளைகுட்டிகளைப் பற்றி சொல்லும். நாங்கள் ஒரே சமூகம். ஒரே ஊரைச் சேர்ந்தனாங்கள். இண்டைக்கு தேசாந்திரம் அலைந்து திரிந்தாலும் உறவு கொண்டாட வேண்டியவர்கள்.” ராஜசேகர் செல்லையருடனான பால்ய காலநட்பை அவ்விதம் கூறி நினைவு கூரவும் செல்லையர் பதில் கூறினார்.

“எனக்கு ஒரே பையன். பதினெட்டு வயதிலை இலண்டன் போனவன். இப்போ இருபத்தியெட்டு வயது”

“கலியாணம் முடித்து விட்டாரோ?” சேகரின் மனைவி உரையாடலில் கலந்து கொள்வதற்கு அக்கேள்வி உதவியதாயினும் அவளுடைய உள்ளக்கிடக்கையிலிருந்து அவ்வினா எகிறித்தான் குதித்துவிட்டது! பெண்ணைப் பெற்றவர்களுக்குத்தான் எத்தனை மனங்கள்!

“என்ன அப்படிக் கேட்டுப் போட்டியள். அவர் சின்னப் பிள்ளை. மற்றது நாங்கள் தான் இனிமேல் பார்த்து இங்கிருந்து ஒரு பெண்ணை அனுப்பிவைக்க வேணும். அவராக ஒரு முடிவு எடுக்கின்ற மாதிரி நாங்கள் அவரை வளர்க்கவில்லை.”

நல்ல குணசாலியும் உயர் தொழில் புரிபவனுமான ஒரு மாப்பிள்ளையை தயார் நிலையில் வைத்திருக்கும் பொற்றோர்களுக்குரிய ‘செட்டுடன் ‘செல்லையரின் மனைவியிடமிருந்து பதில் வந்தது.

மணவறைக் கருமங்கள் நகர்ந்து கொண்டிருந்தன. ஏதோ ஒரு ஒழுங்கு முறையில் மந்திர உச்சாடணமும் மணி ஓசையும் தவிலுடன் நாதஸ்வர இசையும் மாறி மாறியும் ஒன்றிணைந்தும் ஒலித்தன. ஐயரின் தலை அசைப்புக்களை கவனத்துடன் அவதானித்து ஒவ்வொரு தேங்காயையும் மிக மிகப் பக்குவமாக உடைத்துக் கொண்டிருந்தார் ஒரு முதியவர். தான் நன்றாகத் தேங்காய் உடைப்பதில்தான் புதுமணத் தம்பதிகளின் எதிர்கால இல்லற வாழ்க்கை தங்கியுள்ளதாக அவர் நம்பினார்.

செல்லையர் அங்கு நடப்பன அனைத்தையும் அக்கறையுடன் அவதானித்துக் கொண்டிருந்தார். ஆனாலும் அவருக்கு ஒரு விடயம் மட்டும் நெருஞ்சியாக மனதில் தைத்தது. அதை வெளிப்படையாகவே சேகருக்கு கூறினார். “மாப்பிள்ளைக்கு நாற்பத்தியாறு வயது. மணமகளுக்கு நாற்பத்தியைந்து வயது. இந்தக் கலியாணம் இருபது வருடங்கள் முன்னராக நடந்திருக்க வேண்டிய சிறப்பை மறைப்பதற்காக இங்கு என்னென்னவோ தேவையில்லாத விடயங்களுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கப்படுவது போல உள்ளது”.

அனைவருக்கும் குளிர்பானம் பரிமாறப்படுகின்றது. அந்த நேர தாகத்திற்கு அவசியமாகத்தான் தெரிகின்றது. ஆனால் உபவாசம் இருந்து வழிபாடு இயற்றும் கோயில்…. வருமானம் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டு விட்டால் விட்டுக் கொடுப்பனவுகளையும் மேற்கொள்ள வேண்டும் போலும்!

செல்லையர் சுட்டிக் காட்டியவிடயம் சேகரின் நெஞ்சையும் பிழிந்தது. குறுகிய எதிர்காலம் கண்முன்னால் தெரிகிறது…. இளவயது மணமக்களுக்கு மணவறையில் இருக்கக்கூடிய படபடப்பு….ஆர்வம்…. கவர்ச்சி…வேகம்…எதனையும் காணமுடியவில்லை . ஐயரின் செயற்பாடுகள் கூட சிலசமயங்களில் ஏனோதானோ என்றிருக்கின்றது. முகூர்த்த நேரம் தப்பிப்போய்க் கொண்டிருப்பது கூட எவருக்கும் பெரிதாகத் தெரியவில்லை.

புதிய கூறை மாற்ற மணமகள் எழுந்து செல்கின்றாள். மணவறை செயற்பாடுகள் ஸ்தம்பிக்கின்றன.

சேகர் கூறினார்……“லேட்மறீச்” என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.உரிய வயது கடந்து விவாகம் செய்தல், வாழ்க்கையை மனம் போன போக்கில் அனுபவித்து முடித்துவிட்டு இறுதிக் காலத்தில் நிரந்தர துணைதேடும் வெளிநாட்டுக் கலாசாரம்! எங்களுடைய சமுதாயத்தில் பிள்ளைகளுக்கு விவாகம் தாமதமாவதற்கு காரணங்கள் வேறு. ஒரு ஆண் தனது சகோதரிகளைக் கரை சேர்ப்பதற்காக காலம் பூராகவும் கஷ்டப்பட்டு உழைக்கின்றான். ஒரு பெண் உரிய மாப்பிள்ளைக்கு வேண்டிய வரதட்சணையை பெற்றோரும் உடன்பிறப்புகளும் தேடும்வரை பொறுமையுடன் காவலிருக்கின்றாள். எமது கலாசாரம் எமது குழந்தைகள் மீது ஏற்றிவைத்துள்ள சுமை இவை”

“உண்மைதான்!” செல்லையர் தலையை வேகமாக ஆட்டியபடி தொடர்ந்தார்…..”ஒரு ஆணும் பெண்ணும் மனதால் இணைவதற்கு அவர்களுடைய இளமையும் ஆரோக்கியமும்தான் பிரதானம்! பச்சைப்படியான சில உண்மைகளைத்தான் எம்முன்னோர் ‘காலத்திலை பயிர் செய்’ என்று சுருக்கமாகவும் கௌரவமாகவும் கூறியிருக்கிறார்கள்”

“ஓம் ஓம். சேகர் தனது ஆதங்கத்தை வெளிப்படையாகவே கூறினார்…… இந்தத் தவறை நாங்களும் எமது பிள்ளைகளுக்கு இழைத்துவிடுவோமோ என்பதுதான் எனது இப்போதைய பயமாக இருக்கின்றது.”

இப்போ செல்லையரின் மனைவி குறுக்கிட்டாள்….. “ஏன் உங்களுக்கு எத்தனை பிள்ளையள்?” சேகரின் மனைவி இப்படியானதொரு கேள்வியை வெகுநேரமாக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். எனவே உடனே பதில் கூறினாள்….. “எங்களுக்கு ஒரே மகள் தான். ‘கம்பஸ்ஸில்’ இறுதிவருட பரீட்சை எழுதிக் கொண்டிருக் கின்றா….. நாங்கள் மூச்சுவிடு என்று சொன்னால் தான் மூச்சு விடுவா.” அப்படி வளர்த்திருக்கிறம்.

விலை உயர்ந்த புதிய கூறை அணிந்து மணமகள் வரவும் வீடியோ உட்பட அங்கு தயார் நிலையில் இருந்த தவில்காரரும் நாதஸ்வரகாரரும் தமது பங்கை செயலில் காட்ட தொடங்கினார்கள். மணவறை செயற்பாடுகள் சூடு பிடித்தன…

‘கம்பஸ்ஸில்’ இறுதி வருட பரீட்சை எழுதுகின்ற பிள்ளைக்கு இருபத்தி நான்கு வயதென்றாலும் வரும். எங்களுடைய மகனுக்கு பொருத்தமான பிள்ளையாகத்தான் இருப்பாள்’ என்ற எண்ணம் செல்லையரின் மனைவிக்கு ஏற்பட்ட அதேசமயம்…

‘எங்களுடைய கலாசாரப்படி நாலுவயதுக்கும் ஆறு வயதுக்கும் இடைப்பட்ட வயது வித்தியாசம் ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கவேணும்…வெளிநாட்டு மாப்பிளை கிடைச்சிருக்கா…எப்படியெண்டாலும் இந்த இடத்தை விட்டு விடக்கூடாது.’ இப்படித்தனக்குள் தீர்மானித்துக் கொண்டாள் சேகரின் துணைவியார்.

பிள்ளைகளுக்கு விரைவில் விவாகம் செய்து வைத்துவிடவேண்டும் என்ற தவிப்பும் பொறுப்பும் தாய்மாருக்குத்தான் அதிகம். கலியாண விடயத்தில் காதல் கத்தரிக்காய் என்று தனது பிள்ளை போனாலும் தாய்மார் இரகசியமாக ‘சப்போர்ட்’ பண்ணிவிட்டு ஒன்றும் தெரியாத மாதிரி இருந்துவிடுவினம்! எங்களுடைய கலாசாரத்தின் அழகே தனியானது தான். வெளிநாட்டிலை பெண்கள் நாளொரு கணவன் பொழுதொரு தோழன் என்று சுற்றுமாற்போலவா…..?

எங்களுடைய பெடிச்சிகள் ஒரு வாலிபுனிலை கண் வச்சிட்டாளவை யென்றால் பார்வையாலேயே அவனைக் கட்டிப்போட்டு விடுவாளவையல்லவா…..? தம்பியர் பின்னால் போக வேண்டியது தான்.

செல்லையர் இன்னும் தான் தனது மன உழைச்சலி லிருந்து மீளாதவரர்க மணவறையை முறைத்துப் பார்த்தபடி இருந்தார்.

அவரது தலை போகுமாற் போன்ற கவலையெல்லாமே இந்தப் பெண்ணினுடைய வாழ்க்கை வீணடிக்கப்பட்டு விட்டதென்பதுதான். இருபது வயதில் இந்த பெண்ணுடைய கவர்ச்சியும் துடிப்பும் எப்படி இருந்திருக்கும்…! எத்தனை இளைஞர்கள் இவளுடைய கடைக்கண் பார்வைக்காக ஏங்கித் துடிச்சிருப்பாங்கள்.!

புதுவிருந்து பறிமாறப்பட்ட வாழையிலை……. அப்போதெல்லம் ருசிப்பதற்கு பலர் தவம் கிடந்தார்கள். இந்த சமூகம் தடுத்து விட்டது. இப்போ விருந்தெல்லாம் சோடை போய் வாழை இலையை தூக்கி எறிய வேண்டிய நிலையில் பந்தி வை என்கிறார்கள். வாழை இலைக்கோ பெரிய கவலை. விருந்து பரிமாற என்னிடம் என்ன இருக்கின்றது?

செல்லையருடைய கண்களில் நீர்த் திவலைகள். சேகர் பல வருடகாலமாக செல்லையரை புரிந்து வைத்திருப்பவர். உடல் ரீதியில் வைரக்கட்டை….. மனத்தளவில் சின்ன விசயத்திற்கும் கலங்கிப் போகும் சுபாவம் கொண்டவர்.

”என்ன செல்லர்…..தாலி கட்டு நடக்குது… இப்பபோய் அழுவதா….. கண்களைத் துடையும்”

அப்போதுதான் செல்லையர் நனவுலகத்திற்கு வந்தார்.

“மச்சான் நீ எனக்கு ஒரு உதவி செய்யவேணும்…… உன்னுடைய பெடிச்சியை என்னுடைய மகனுக்கு மணமகளாக தரவேண்டும்” செல்லையர் ‘நன்றாகத்தான் உணர்ச்சி வசப்பட்டுப்போனார்.

வெளிநாட்டில் இருக்கும் தனது மகன் வெள்ளைக்காரி ஒருத்தியை இரகசியமாக திருமணம் செய்திருந்தாலும் இவருக்கு தெரியவர நியாயமில்லை! ஆனால் அவருடைய தேகத்தில் அந்த இளமைக் காலத்து உரம் இன்னும் நிலைத்திருப்பது போல மனதிலும் உறுதியும் வைராக்கியமும் பளிச்சிடத்தான் செய்தன.

அதே மன உறுதிக்கும் வைராக்கியத்திற்கும் சோடை போகாமலும் தன்னுடைய மகள் ‘கம்பஸில்’ எவனுடனாவது தொடுப்பாக இருக்கமாட்டாளா என்ற சந்தேகம் கிஞ்சித்தேனும் இல்லாமல் சேகரும் வாக்குக் கொடுத்தார்……. மச்சான்…… என்னுடைய பெடிச்சிக்கும் உனது மகனுக்கும் இதே விவாகமண்டபத்திலை கலியாணம் நடத்துறம்.”

தாய்மார் இருவருக்கும் பெரும் திகைப்பு……! ஏதோ அந்தக் காலத்திலை பெற்றோருக்குத் தெரியாமல் வருகிற சனியோ ஞாயிறுதினம் வல்லை வெளிதாண்டி நெல்லியடி போய் ‘செக்கண்டஷோ’ படம் பார்க்கிறம் என்று சபதம் எடுத்த மாதிரி இருந்தது அந்தப் பேச்சு!

அறுகரிசி போட்டு தம்பதியினரை ஆசீர்வதிக்க தொடங்கியிருந்தார்கள். செல்லையரும் சேகரும் பங்குபற்றினர்.

“என்னுடைய மனுஷிக்கும் உந்தப் பெண்ணுக்கும் பெரிய வயது வித்தியாசம் என்று இருக்கப் போவதில்லை. இண்டைக்கு நானும் மனுஷியும் தனிமையிலை எதைக் கதைக்கிறோமோ அதைத் தான் உந்தச் சோடியும் முதலிரவிலை கதைக்கப் போகினம்”.

செல்லையர் நன்றாகத்தான் மனம்நொந்து போனார். முடியுமென்றால் கேடுகெட்ட இந்தச் சமுதாயத்தை தனது நிமிர்ந்து பரந்த தோளில் தூக்கி சுழற்றி சாக்கடையில் எறியும் அளவிற்கு அவரது கொதிப்பு இருந்தது. –

சேகருக்கு நகைச்சுவை உணர்வு வந்துவிட்டது….“அது சரி…..உமக்கு கொஞ்சம் ”பிறசர்” குணம் இல்லாமல் போகாது. அவையளும் போய் பஞ்சணையில் அமர்ந்தபடி தங்களுக்கு இருக்கிற நோய் நொடிகளைப் பற்றித் தான் அளவளாவப் போகினம். இந்த வயதுக்கு ‘கொலஸ்ரோல்’ ‘பிறசர்’, ‘டயபிற்ரீஸ்’ என்று எல்லா நோயும் வந்து விடுமே.” செல்லையர் தனக்குள் எழுந்த சிரிப்பை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

நித்யமங்களா விவாக மண்டபத்தில் மதிய போசன விருந்து அமர்க்களமாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து மணமக்களுக்கு பரிசுப்பொருட்களை வழங்கி இரண்டு தம்பதியினரும் அவர்களுடன் இணைந்து நின்று ‘வீடியோ’ எடுத்துக் கொண்டமை அப்போ எவர்க்கும் வித்தியாசமாகத் தெரியவில்லை.

ஆனால் ஒரு மாதகாலம் கூட ஆக முன்னர் அதே சிவன் கோவில் விவாக மண்டபத்தில் அமிர்த யோகமும் ஏகாதசித் திதியும் பூராட நட்சத்திரமும் துலாம் லக்கினமும் கூடிய சுப முகூர்த்த லேளையில் அவர்களுடைய பிள்ளைகளுக்கு விவாகம் இனிதே நடந்தது.

ஐயர் பயபக்தியுடன் மந்திரம் சொன்னார்…விருந்தினர் அமைதியுடன் மணமக்களை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மணப் பெண்ணின் இளமையின் மதமதப்பையும் மணமகனின் வாலிப மிடுக்கையும் ‘வீடியோ’ படப்பதிவு செய்து கொண்டிருந்தது.

விவாகம் முடிந்து ஓரிரு வாரங்களிலேயே வெருகலம்பதி சித்திர வேலாயுத சுவாமி ஆலய மகோற்சவம் பெரும் எடுப்பில் நடாத்தப்படவிருந்தது. கிழக்கின் இரு பிரதேசங்களை இணைத்து நிற்கும் பாரம்பரியம் மிக்க வெருகல் கிராமத்துக்குரிய பெரும் சிறப்பு மகாவலி கங்கை இங்கு கடலுடன் சங்கமிப்பதுதான்! அந்நாட்களில் பழமை மிகு வெருகல் ஆலயத்திற்கு நேர்த்தி வைத்து தூர இடங்களிலிருந்து வண்டி கட்டிவரும் பக்தர்கள் கங்கையில் களை தீர்த்து மரநிழல்களில் ஆறி திருவிழா கண்டு திரும்புவர். திருவிழா நாட்களில் பல இடங்களில் இருந்து அங்கு வரும் பல நூறுகடைகளில் பொருட்களை வாங்கும் உள்நோக்கத்துடன் பெற்றோரை அண்டி வரும் சிறுவர்கள்… கணவனை அழைத்து வரும் இளநங்கையர்கள் ஏராளம்…! ஏராளம்…! வெருகல் திருவிழா பற்றித்தான் எங்கும் பேச்சு…

“என்ன சொல்லுறீங்க…வெருகல் முருகன் கோயில் திருவிழாவை நான் பார்க்க வேண்டும்.” அவள் புதுமணமகளுக்குரிய செல்லத்துடன் கணவனுடன் அடம்பிடிக்கத் தொடங்கினாள்…செல்லையர் கவனமும் திரும்பியது…

வெருகலுக்கு லோஞ்சில் போவதென்றால் பாதளாமலை கடற்பிரதேசம் தாண்டி போக வேண்டும். கடுமையான காற்றுக் காலமானதால் பயங்கர அனுபவங்களையும் எதிர்நோக்க வேண்டிவரும். சுமார் எட்டு வருடங்களுக்கு முன்னர் (25.01.1993 ல் பாதளமலை கடற் பிராந்தியத்தில் பயணிகள் ‘லோஞ்சு’ ஒன்று மூழ்கியதில் நூற்றுக்கு மேற்பட்டோர் பலியாகினர்.) நடந்த சம்பவத்தையும் மறப்பதற்கில்லை. வெருகல் ஆற்றில் முதலைக்கு இரையாகிய சாரதி பற்றிய செய்தியை தந்தை கூறக் கேட்டிருக்கின்றான். (1973 அளவில் மட்டக்களப்பு ‘பஸ்டிப்போ ‘ சாரதி ஒருவர் இரவு பஸ் நிறுத்துகையின்போது ஆற்றில் குளிக்கச் சென்ற இடத்தில் முதலைக்கு இரையானார்.)

செல்லையர் தனது மகன் தனது மருமளுக்கு என்ன முடிவு கூறப் போகின்றான் என்று அறிந்து கொள்வதற்காக காதைத் தீட்டிக் கொண்டார். அவன் மிக மிக சாதாரணமாக கூறினான்…

“சரி… போய்விட்டால் முடிந்தது!”

செல்லையருடைய கண்களில் பனித்த ஆனந்தக் கண்ணீரை இமைகள் இரண்டும் வெட்டி மறைத்தன…

அவர் நல்லம்மாவை கைப்பிடித்த அந்த ஆரம்ப நாட்களில் மாட்டு வண்டி கட்டி அவளைப் பட்டுப் புதுச் சேலையுடன் வல்லிபுர ஆழ்வார் கோயிலுக்கு அழைத்துச் சென்றமையும் அவர் வாங்கிக் கொடுத்த வெள்ளிப் பாதசரங்களில் ஒன்றை அவள் தொலைத்தமையும் அதற்காக அவர் அவளை ஏசியதும்…அப்படி ஏசியதனால் அவருள் எழுந்த மனப்போராட்டமும்…கட்டிளம் காளையான அவரும் கட்டழகியான அவளும் அந்த பயங்கரமான வல்லை வெளியை நடுச்சாமத்தில் தனித்து தாண்டிய இளமை மிடுக்கும் நேற்று நடந்தவை போல அவர் மனக்கண் முன் விரிந்தன.

நன்றியுடன் நினைவு கூரல்:- இலங்கையர்கோன்.

– ஞானம் – நவம்பர் 2001, ஸ்திரீ இலட்சணம், முதற் பதிப்பு: அக்டோபர் 2002, ஈழத்து இலக்கியச் சோலை, திருக்கோணமலை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *