புதிய விடியல்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 12,184 
 
 

அறைக்குள் தடுமாறிக் கொண்டே நுழைந்த பிரசன்னா, கட்டிலை நெருங்குகையில் நிதானித்தான்… “யார்… யார் இது?’ பால்கனியில் எரிந்த ஜீரோ வாட் பல்பின் ஒளிக்கீற்று, மூடிய கண்ணாடிக் கதவு வழியே லேசாக கசிந்து கொண்டிருந்தது அறை முழுவதும். கண்களை இடுக்கி பார்த்தான்… யாரோ படுத்திருப்பது, கோட்டோவியம் போல புலப்பட்டது. யோசனையுடனேயே, லுங்கிக்கு மாறியவன், “அட ஜென்னி… 8 மணி போல வந்தவள், சாப்பிட்டுக் கூட இருக்க மாட்டாளே…’ என நினைத்தான்.
“”ஹேய்… நீ ஆபிஸ் கெஸ்ட் அவுசுக்கு வந்திட்டேன்னு தெரிஞ்சதும் தான் உயிரே வந்தது; டேம் டயர்டுடா… இல்லேன்னா ரூம் தேடி அலையணும்ப்பா… நல்லா தூங்கணும்… தூக்கமேயில்லை!” என்று படபடத்தவள், ஏதோ கேட்க வாய் திறந்தவனை, “”உஸ்….” என்று உதட்டின் நடுவில் விரலை வைத்து எச்சரித்து, “”காலையில விவரமா பேசலாம்; தூக்கம் வருது,” என்று திரும்பிப் படுத்தாள்.
“ச்சே… மூணு பெக் உள்ளே போனதில் எல்லாம் மறந்து விட்டது… சாயப்பட்டறை கழிவு பிரச்னை தொடர்பா, சர்வே எடுக்க, 10 நாட்கள் ஊர் ஊராய் திரிந்து, வந்திருக்கிறாள்… ஹூம்… பாவம்…’ என்று யோசித்தவன், அவளையே மென்மையாகப் பார்த்துக் கொண்டிருந்தான். அறையின் இருட்டும், மங்கிய வெளிச்சமும், இப்போது கண்களுக்கு பழகி விட்டது.
புதிய விடியல்!வலது கையை மடித்து வைத்து, லேசாய், முழங் கால்களை குறுகிக் கொண்டு, குழந்தையை போல் தூங்கி கொண்டிருந்தவளையே ரசனையோடு பார்த்தவன், பெட்ஷீட்டை எடுத்து போர்த்தி, சுற்றி வந்து மறுபக்கமாய் கட்டிலில் படுத்தான்.
தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தவன், எப்போது தூங்கினானோ… “சுளீர்’ என்று முதுகில் விழுந்த அடியில் விழித்துப் பார்த்தவனுக்கு, ஜென்னி படுக்கையில் உட்கார்ந்து கொண்டிருப்பது புரிந்தது.
“”ஜென்னி… ஏய்…ம்…ம்…” என்று குழறியவன், அவள் கைகளை பிடித்து தன்னுடன் இழுத்து அணைக்க முயன்றான்.
இழுத்த இழுப்பில், அவனருகில் வந்துவிட்ட ஜென்னியின் உடல் முழுவதும் பிரசன்னாவின் ஆதிக்கத்தில் வந்து விட்டது. கவ்விப் பிடிக்க முனைந்த அவன் உதடுகளிலிருந்து தப்பிக்க, அவள் தன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
இறுக்கி பிடித்த அந்தக் கரங்களின் வலிமையான அணைப்பு இறுக, இறுக… ஜென்னி மெதுமெதுவே தன்னிலை இழக்க ஆரம்பித்தாள். எப்போதோ, பலப்பல ஜென்மங்களுக்கு முன், தன்னுள் முகிழ்ந்து முத்தெடுத்த அந்த இனிய சுகானுபவம், அவளை ஏதோ ஒரு இன்பத் தடாகத்தில் அமிழ்த்தியது.
இத்தனை வருடமாய் மறந்து போய் விட்டிருந்த ஒரு இனிய ராகம், உடலின் ஒவ்வொரு செல்லிலும் உயிர்ப்பைத் தந்து, உள்வரையும் சென்று உயிர்த்தெழுந்து உள்ளாடி நின்று, ஜீவ வீணையை மீட்டுவது போல தோன்றியது.
இரவில் பெய்த மழையை உள் வாங்கிச் சிலிர்க்கும் வேர்க்கால்கள் போல, இதழ்கள் பறவையின் சிறகுகளாய் துடிதுடிக்க, உடலும், உணர்வுகளும் காற்றில் மிதக்கும் பூவிதழ்கள் போல மிதந்தன.
கண நேரமா… யுகாந்திரமா…. நிசப்தமான மோன நிலையது…
ஜென்னி, சிலிர்ப்புடன், முழுசக்தியுடன் உடலை உதறி, கைகளால் அவன் நெஞ்சில் கைவைத்து, பலமாய்த் தள்ளி, தன்னை விடுவித்துக் கொண்டாள்.
“”ப்ளீஸ் ஜென்னி… ஒரு தரம்… ஒரே தரம்!” பிரசன்னா தெளிவில்லாமல், உளறினான். கைகள் உடலில் எங்கெங்கோ அலைந்தன. அவன் கைகளைத் தன் கைகளால் இறுக்கி பிடித்தவள், “”ஏய்… பிரசன்னா… சும்மாயிருக்க மாட்டே… இதென்ன புதுசாய்?”
“”பச்…. ஜென்னி… ஜென்னி…” கைகளை விடுவித்து கொள்ள முயன்றான்.
ஒரு நிமிடம் அவனை பார்த்தவள், கட்டிலை விட்டு இறங்க முயன்றாள்.
“”ஜென்னிம்மா!” என்றவாறே, கைகளை வளையமாக்கி அவள் இடுப்பை கோர்த்து தன் பக்கமாய் சரித்தவன், “”கமான் ஜென்னி… நான்தானே… நம்மைத் தவிர வேற யார் இருக்கா… எதுக்கு பயம்?”
“”நம்மைத் தவிர இன்னும் மூணு பேர் இருக்காங்க பிரசன்னா!”
சட்டென்று கைகளை தளரவிட்ட பிரசன்னா, “”மூணு பேரா… உளர்றீயா ஜென்னி?” என்றான்.
“”உளறலை… ஒண்ணு என் மனசாட்சி, ரெண்டு உன் மேல நம்பிக்கை வச்சு, உன் வீட்டுலே இருக்கிறாளே உன் மனைவி, மூணாவது நம்ம சிநேகிதம். ஐந்து நிமிஷ சுகத்துக்காக, இத்தனை வருஷ சிநேகிதத்தைப் பலியாக்கணுமா? இதெல்லாம் நடந்து முடிஞ்சப்புறம், உன்னை நானோ, என்னை நீயோ எந்த ஒரு விகற்பமும் இல்லாம பார்க்க முடியுமா… நிமிர்ந்து பேச முடியுமா? சொல்லு பிரசன்னா…
“”இல்லே… இப்ப… உனக்கு நான் தான் வேணும்ன்னு என்னை நீ கட்டாயப்படுத்தினா, நண்பனுக்காக, அவன் சந்தோஷத்துக்காக நான் விட்டுக் கொடுப்பேன். ஆனா, இது தான் நீ என்னை பார்க்கிற கடைசி ராத்திரியா இருக்கும்… உன் முகத்தில் அப்புறம் விழிக்க மாட்டேன்.
“”மனசுகள் சங்கமிக்கிற தோழமை உறவு வேற… உடல்கள் சங்கமிக்கிற உறவுமுறை வேற… இதுவரைக்கும், நாம, நம்ம உறவிலே தெளிவா, உறுதியா இருந்தோம்… அது நமக்கு கம்பீரத்தைத் தந்தது… இப்போ, இனி உன் முடிவு,” வார்த்தைகளை அழுத்தம் திருத்தமாக பேசினாள். முழங்கால்களை கையில் கட்டிக் கொண்டு, குறுகுறுவென அவனையே பார்த்தாள் ஜென்னி.
“ஏசி’யின் ரீங்காரம் மட்டுமே அறை முழுவதும் வியாபித்து நின்றது… சில நிமிடங்களுக்குப்பின், பிரசன்னா, முழங்காலின் மேல் கட்டிக் கொண்டிருந்த அவள் கைகளை பிடித்து, தட்டிக் கொடுப்பது போல வருடிக் கொடுத்து, மறுபுறமாய் திரும்பிப் படுத்தான்.
ஜென்னி தனக்குள் புன்னகைத்து, நிம்மதியாய் படுத்தாள். ஆனால், மனசுக்குள் அலையடித்தது. தனக்குத் தானே மறு அறிமுகம் செய்து கொள்வது போல, நினைவுகள் பல கிளை நதிகளாய் பிரவகித்தன…
“விரும்பிப் படித்த மானேஜ்மென்ட் படிப்பு. அது, இணைத்து வைத்த காதல்; அதன் பரிசாய் கிடைத்த கல்யாணம். திடீரென உயிரை விட்ட கணவன். சின்னஞ்சிறு கதையாக துவங்கும் போதே முடிந்து போன கல்யாண வாழ்க்கை!’ நெடுமுச்செறித்தாள் ஜென்னி.
பிரசன்னா தான் அவளை தேற்றினான். மூவருமே ஒன்றாய் படித்த நண்பர்கள். படிப்பு முடிந்ததுமே, பிரசன்னா தன் குடும்பத் தொழிலின் நிர்வாகத்தை கையில் எடுத்துக் கொண்டான். இருவரின் கல்யாணத்துக்கும் தோள் கொடுத்து நடத்தி வைத்ததே அவன்தான்.
பிசியான வேலை மும்முரத்திலும், ஒரே துறை என்பதால், நட்பின் மணம் மட்டும் குறையவில்லை. உள்ளார்ந்த அன்பின் விசாரிப்பும், சமயங்களில் சரியான உதவியுமா… ஒருவருக்கொருவர் பரஸ்பரம், தங்கள் சுய கவுரவம் கெடாதபடி, நட்பை வளர்த்துக் கொண்டனர். கண்ணுக்குத் தெரியாத நட்பின் வலிமையான இழைகளில் மூவருமே பின்னப்பட்டிருந்தனர்.
கணவனின் இழப்பில் திகைத்து நின்ற ஜென்னிக்கு தேறுதல் சொல்லி, இயல்பு நிலைக்கு மாற்றி, தன் நிறுவனத்திலேயே வேலையும் தந்து, தன் கண்ணெதிரிலேயே நிறுத்திக் கொண்டான்.
எத்தனை வருட நட்பு இது. எத்தனையோ முறை அவனுடன் தனியே பயணித்திருக்கிறாள்; தனியே தங்கியிருக்கிறாள். வேறாக ஒரு பார்வை பார்க்காதவன், இன்று மட்டும் என்ன ஆயிற்று… ஜென்னியின் வாழ்வில் பிரசன்னா, நண்பனாய், அமைச்சராய், சேவகனாய், ஆசிரியனாய், தந்தையாய் நின்றவன் இப்படி…
கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் ஜென்னி.
வெளிக் கதவை திறந்ததும், ஜிலீர் என்று முகத்தில் மோதியது ஊதக் காற்று. தலைப்பைத் தோள் வழியே இழுத்து விட்டுக் கொண்டாள். பாதம், “சில்’லென்று தரையில் பட்டதும், உச்சிவரை, “ஜிவு… ஜிவு’வென்றிருந்தது. சாம்பல் பூத்த வானம் வரவேற்றது. கண்ணெதிரில் தெரிந்த நீலகிரி மலை முகடு, “ஹாய்… ரிலாக்ஸ் ஜென்னி!’ என்று மவுனத் தொட்டிலில் இட்டது.
மாடிப்படி துவங்கும் இடத்தில் இருந்த கைப்பிடிச் சுவரைப் பிடித்தபடி, தெருவை பார்த்தாள். இன்னும் துயில் கலையாத வீதி, சோம்பல் போர்வை போர்த்தி, மிக ரம்மியமாக இருந்தது.
தோளின் மேல் கரம் ஒன்று விழுந்தது… திரும்பினாள் ஜென்னி…
“”சா… சாரி… ஜென்னி!” தப்பு செய்து விட்ட குழந்தையாய், குழைந்து குறுகி, அவளருகில் அமர்ந்தவன், மன்னிப்பு கேட்கும் பாவனையில் அவள் கைகளை பிடித்துக் கொண்டான்; அவள் மவுனமாயிருந்தாள்.
அவள் முகத்தை கைகளில் ஏந்தியவன், கண்களை நேரடியாக சந்தித்து, “”ப்ளீஸ்டா… தப்பு தான் ஜென்னி… எனக்கு என்னவோ… ச்சே!” இமைகள் தழைந்தன.
ஒரு நிமிடம்… ஒரே நிமிடந்தான்… பார்வைகள் சந்தித்து மீண்டன. இவன் எதை உணர்த்த முயல்கிறான்… ஜென்னி அவன் தோளில் தலை சாய்ந்துக் கொண்டாள்.
நிமிட நேரத் தடுமாற்றம்… இருவருக்குமே… நிமர்ந்து விட்டனர் இருவருமே! நிமிட நேர சபலத்தில் தங்களையும், தங்கள் தோழமையையும் தொலைத்து விடாமல், தங்களை நஷ்டப்படுத்திக்காமல், மீண்டு வந்து விட்டனர்.
ஜென்னி கண்களை மூடிய படியே, “”பிரசன்னா… உன் மீது மட்டுமே குற்றப்பத்திரிகை வாசிக்க முடியாது; நானும் தான் தவறி விழ இருந்தேன்… நானும் தான் உன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்!” என்று முணுமுணுத்தாள்.
“”இல்லை ஜென்னி… முழுத் தவறுமே என்னுடையதுதான்; உன்னையும் கஷ்டப்படுத்தி விட்டேன். யோகினி மாதிரி இருந்தவளை காயப்படுத்தி விட்டேன். நீ மட்டும் சுதாரிக்காமலிருந்திருந்தா… நினைக்கவே பயமா இருக்கு!” சிகரெட் ஒன்றை பற்ற வைத்துக் கொண்டான் பிரசன்னா.
“”நமக்கு, நாமே தருகிற, தந்து கொண்டிருக்கிற கவுரவத்தை, தொலைத்திருப்போம்… நட்பை குழி தோண்டி புதைத் திருப்போம்!” ஜென்னியின் இதழ்கள் மந்திர உச்சாடனம் போல வார்த்தைகளை உச்சரித்தன.
சூரியனின் முதல் ஆரஞ்சு ரேகை மலையின் பின்னாலிருந்து எட்டிப் பார்த்தது. மலை முகட்டின் விளிம்புகள் தங்க ரேக்குகளாய் பொலிந்தன… புத்தம் புதிசாய் ஒரு விடியல் எழுந்தது!

– ஏப்ரல் 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *