கதையாசிரியர்:
தின/வார இதழ்: அமுதசுரபி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 16, 2021
பார்வையிட்டோர்: 5,197 
 
 

அந்தப் பள்ளியில் நவநீதன் வாங்கி வந்த அபுடவையைப் பற்றித்தான் பேச்சாக இருந்தது. ‘டார்க் மெரூன்’ கலர் பட்டுப்புடவை அனைத்து ஆசிரியைகளையும் கவர்ந்தது.

“சூப்பர் செலக்ஷன் சார்… இந்தப் புடவையைப் பார்த்ததும் உங்கள் மனைவி அசந்துருவாங்க…” என்று சாவித்திரி டீச்சர் கூறும்போது, நவநீதனுக்குப் பெருமையாக இருந்தது.

“புடவையை நன்றாகத் தேர்வு செய்திருக்கீங்க… உங்க மனைவியையும் அப்படித்தானே தேர்வு செய்திருப்பீங்க…? அவங்களைப் பார்க்கணும் சார்…” என்றாள் கமலம் டீச்சர்.

“என் மனைவி மைதிலி அழகானவள், அறிவுள்ளவள்….. அவளும் ஆசிரியையாகப் பணிபுரிந்தவள் தான். இப்போதுதான்….”

“இப்போது, குடும்பப் பொறுப்பை அவங்க மீது சுமத்தி, வீட்டில் உட்கார வெச்சுட்டீங்க – – – – அப்படித்தானே? பெண்களுக்குச் சம உரிமை கொடுங்க சார்…… எத்தனை தடைகளைக் கடந்து இந்தப் பதவிக்கு வந்திருப்பாங்க… அவங்களை ஏன் நான்கு சுவற்றுக்குள் அடக்கப் பார்க்குறீங்க? சுதந்திரம் கொடுங்க சார்….” என்றாள் பிரியாமணி.

“நீங்க சொல்றது சரிதான் டீச்சர்….. ஆனால் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு பழக்க வழக்கங்கள் இருக்கிறது…. பிறந்த வீட்டில் சுதந்திரமாக வாழ்ந்திருக்கலாம்…. புகுந்த வீட்டுக்கு வந்ததும் கௌரவம் அந்தஸ்துன்னு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது…. அதனால் அவர்கள் வளர்ச்சி தடைபட்டுப்போகிறது….” என்றாள் சாவித்திரி.

அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டு புன்முறுவலோடு நின்றான் நவநீதன். அவன் மனைவியை அடக்கியாளும் எண்ணம் கொண்டவனல்ல மனைவியின் அன்புக்குப் பாத்திரமானவன்.

“நீங்க பரவாயில்லை நவநீதன்….. என் கணவர் ஒண்ணுக்கும் லாயக்கில்லாதவர்…. ஒரு பனியன் ஜட்டி கூட சரியான அளவில் எடுக்கத் தெரியாது…. அவரையும் கட்டிட்டு அவஸ்தைப் படுறேன்….” என்று குறைப்பட்டுக் கொண்டாள் அமிர்தம்.

அப்போது சாரங்கன் குறுக்கிட்டு, “நவநீதன்…. இனி புடவை வாங்கினால் இங்க வெச்சுப் பார்சலைப் பிரிக்கவேண்டாம்….. என் போன்றோருக்கு அவமானமாக இருக்கு…..” என்று கூற, அனைவரும் சிரித்தனர்.

“நாளை நம் பள்ளியின் இளநிலை ஆசிரியர் அருண்குமாருக்குத் திருமணம்…. எல்லோரும் பேமிலியோட வந்துருங்க…” என்றார் சாரங்கன்.

“நவநீதன்….. உங்கள் மனைவியை இந்தப் புடவையில் பார்க்கணும்….” கண்டிப்புடன் கூறிவிட்டுச் சென்றாள் கமலம்.

திருமணவிழாவுக்கு அனைத்து ஆசிரியர், ஆசிரியைகளும் குடும்பத்துடன் வந்திருந்தனர். நவநீதன் மட்டும் தனிமையில் வந்திருந்தான்.

“என்ன நவநீதன்….. உங்க மனைவியைப் பார்க்க ஆவலோடு காத்திருந்தோம்…… ஏமாத்திட்டீங்களே……”

“அது….. வந்து… முக்கியமான ரிலேஷன் வந்துட்டாங்க….. அவங்களை கவனிக்கணுமே….”

நவநீதன் இந்தப் பள்ளிக்கு வந்து ஆறுமாதங்கள் ஆகிறது. அதன் பிறகு எத்தனையோ விழாக்கள், உல்லாசப் பயணங்கள்….. எதிலும் அவன் மனைவியோடு கலந்துகொண்டதில்லை. ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லி சமாளித்து விடுவான்.

மனைவியை அறிமுகப்படுத்துவதில் அவனுக்கென்ன சிரமம்….. ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி…. என்பது தான் அனைத்து ஆசிரியர்களுக்கும் வருத்தம்….. சுதந்திர தினம் நெருங்கிக் கொண்டிருந்தது. இந்த ஆண்டு பள்ளியில் சுதந்திர கொடியை ஏற்றுவதற்கு எந்த வி.ஐ.பி.யை அழைப்பது என்பது பற்றி பள்ளித் தாளாளர் ஜானகியின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

“ஆண்டு தோறும் நம்பள்ளிக்கு அரசியல் தலைவர்களையும், இலக்கியவாதிகளையும், சுதந்திரப் போராட்டத் தியாகிகளையும் அழைத்து விழாக்களை நடத்தியுள்ளோம்….. இந்த ஆண்டு புதுமையாக எதாவது செய்யவேண்டும் என்பது என் விருப்பம்.” என்று கூறினாள் கமலம்.

“அப்படி என்ன புதுமை செய்ய நினைக்கிறீங்க?” எனக் கேட்டார் பள்ளித் தாளாளர் ஜானகி.

“நாம் எளிதில் அரசியல் தலைவர்களையும், இலக்கியவாதிகளையும் பார்த்து விடலாம்…… ஆனால் இந்த வி.ஐ.பி. யை அவ்வளவு எளிதில் பார்க்கமுடியாது….. அவரை வைத்துக் கொடியேற்றினால் என்ன?” “யார் அந்த வி.ஐ.பி.?”) “அது வேறு யாருமில்லை … நம் பள்ளியின் ஆசிரியர் நவநீதனின் மனைவிதான்…..” என்று கமலம் கூறியதும், அனைவரும் சிரித்தனர். அது நகைப்புக்குரிய விஷயமாக இருந்தாலும், இதுவரை நவநீதனின் நழுவலுக்கொரு முற்றுப்புள்ளி….அனைவரும் ஒருமித்த கருத்தாக ஏற்றுக்கொண்டனர். நவநீதனும் அதற்குச் சம்மதித்தான்.

வீட்டுக்குச் சென்று மைதிலியிடம் கூறினான். மைதிலியும் மறுப்புக் கூறாமல் ஏற்றுக்கொண்டாள்.

“எங்கே நீ மறுத்து விடு வாயோ என்று நினைத்தேன்…..”

“மற்ற விழாவாக இருந்தால் மறுத்திருப்பேன்…. இது பள்ளி விழாவாயிற்றே…. மறுக்க முடியுமா? அங்கு வந்து பள்ளிக் குழந்தைகளின் முகத்தைப் பார்த்தால்….. என் மனசுக்கு ஆறுதலா இருக்கும்…..” என்று கூறிய மைதிலி, கண்களை மூடி நிம்மதிப் பெருமூச்செறிந்தாள்….

சுதந்திரத்தினத்தன்று பள்ளி வளாகம் அலங்காரத் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

கொடிக் கம்பத்தில் மூவண்ணக் கொடி மடித்துக் கட்டியிருந்தனர். ஆசிரியர், ஆசிரியைகளும், மாணவ, மாணவிகளும் கொடிகளைக் குத்திக்கொண்டு அணிவகுத்து நின்றனர்.

“அந்த வி.ஐ.பி. வருவாரா?” என்று திவாகர் கேலியாகக் கூற, “தப்ப முடியாது திவாகர்…… கமலம் டீச்சர் கிடுக்குப்பிடி போட்டுட்டாங்க….. எப்படியும் வந்து தான் ஆகணும்….” என்றார் சாரங்கன்.

அப்போது அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வண்ணம் ஒரு வேன் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய நவநீதன் வீல்சேர் ஒன்றை இறக்கி வைத்தான். பிறகு வேனில் முன்பகுதியில் அமர்ந்திருந்த மனைவி மைதிலியை மெதுவாகத் தூக்கி வீல்சேரில் அமரவைத்துத் தள்ளிக் கொண்டு வந்து கொடிமரத்தின் அருகில் நிறுத்தினான்.

அனைவர் முகத்திலும் அதிர்ச்சி….. அனுதாப அலைகள்….

இவர்தான் நவநீதனின் மனைவியா……. அந்த ‘மெரூன் கலர்’ புடவையில் சினிமா நடிகைபோல் இருக்காங்க… ஆனால்….. கால்… அனைவரும் ஸ்தம்பித்து நின்ற வேளையில், அனைவரையும் வணங்கிய மைதிலி பேச ஆரம்பித்தாள்…….

“நீங்கள் எல்லாம் என்னைப் பார்க்க விரும்பி, என் கணவரிடம் தெரிவித்து, அவர் வந்து என்னிடம் கூறும்போதெல்லாம் நான் மறுத்திருக்கிறேன். அதனால் என் கணவர் மீது கூட நீங்கள் சந்தேகப்பட்டிருப்பீர்கள். அவர் மீது எந்தத் தவறும் இல்லை. அதற்கு முக்கிய காரணம் நான்தான்.

“இந்த விழாவுக்கு அழைத்திருக்கிறார்கள் என்று என் கணவர் கூறியதும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டேன்.

“என் தாத்தா, சுதந்திரப் போராட்டத் தியாகி, என் சகோதரன்….. நம் நாட்டின் எல்லைப் பாதுகாப்புப்படை வீரர். நான் ஆசிரியப் பணியைத் தேர்வுசெய்தேன். பணியும் கிடைத்தது.

எனது மாணவர்கள் நூறு சதவீதம் மதிப்பெண் பெற்றார்கள். ஆனந்தமாகவும், உற்சாகமாகவும் பணி தொடர்ந்தது.

இரண்டு பேருந்துகளில் கல்விச் சுற்றுலா சென்றோம். கொடைக்கானலில் இயற்கைகளை ரசித்தோம். மாணவிகள் உற்சாகமாகப் புல் வெளியில் விளையாடிக்கொண்டிருந்தபோது, அந்த சம்பவம் நடந்தது.

சமூக விரோதிகள் ஒரு மாணவியைக் கடத்த முயன்றபோது, அந்த மாணவி காப்பாற்றுங்கள்…. என கத்தினாள்.

“அவளை விட்டு விடுங்கள்…..” – கத்திக்கொண்டே ஓடினேன். அதற்குள் காரில் ஏற்றுக்கொண்டு போய் விட்டார்கள். நான் செய்வதறியாது துடித்தேன்.

“அரை கிலோமீட்டர் தூரம் சென்ற அந்த கார், ஒரு திருப்பத்தில் திரும்பி கீழ்ச்சாலையில் வருவதைப் பார்த்ததும் எனக்குள் ஒரு வெறி…. அந்தக் காரை எப்படியாவது தடுத்தாகவேண்டும்…. மலையில் உருண்டு…. சாலையில் பொத்தென்று விழுந்து…. நான் சுதாரித்து எழுவதற்குள் அந்தக் கார் என் கால்களில் ஏறிச்சென்றது….”

அந்த மாணவியைக் காப்பாற்றுங்கள்….. பிரக்ஞை உள்ள வரை கத்தினேன்…….. மருத்துவமனையில் கண்விழித்தேன். என் கால்களை அகற்றியிருந்தார்கள்.

“அந்த மாணவி என்ன ஆனாள் எனக் கேட்டேன்…. அந்த மாணவி பழச்சாறு நிறைந்த கிளாசை என்னிடம் நீட்டினாள். ஆனந்தக் கண்ணீர் பெருகியது. அவளது கரங்களைப் பற்றிக்கொண்டு கதறினேன். யானை வாய்க்குப் போன கரும்பு….

“விபத்து நடந்தபோது….. நான் கத்தியதும், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அந்த காரை மடக்கி, மாணவியைக் காப்பாற்றியிருக்கிறார்கள்…..

“அந்தச் சம்பவம் தான் என்னை நான்கு சுவற்றுக்குள் முடக்கிவிட்டது.”

மைதிலி மட்டுமின்றி, அனைவரும் கண்களைத் துடைத்துக் கொண்டனர். அனுதாபப் பார்வைகள்.

அப்போது ஜானகி குறுக்கிட்டு “நாமெல்லாம் இதுவரை நமது பள்ளி ஆசிரியர் நவநீதனின் மனைவி மைதிலி ஒரு குடும்பப் பெண்ணாகத்தான் கற்பனை செய்து பார்த்தோம்….. ஆனால் மைதிலி எவ்வளவு பெரிய தியாகத்தைச் செய்திருக்கிறார் என்பதை நினைக்கும்போது, உள்ளம் நெகிழ்கிறது…..” “நவநீதன், மைதிலிக்கு நல்ல கணவராகவும், உற்ற நண்பராகவும், ஊன்றுகோலாகவும்

இருக்கிறார் என்பதை நினைக்கும்போது பெருமையாக இருக்கு ….”

ஒரு கோழி தன் குஞ்சுகளைக் காப்பாற்ற, தன்னால் முடிந்தவரை உயரே பறந்து, அந்தப் பருந்தைத் தாக்க முயற்சிக்கிறது …….. மாணவர்களுக்கு ஆசிரியர்களின் அரவணைப்பு முக்கியம்.

“தன் மாணவியைக் காப்பாற்ற மைதிலி எடுத்துக்கொண்ட முயற்சி. துணிச்சல் பாராட்டுக் குரியது. அப்பாவி மாணவிகளின் எதிர்காலம் காமுகர்களின் பிடியிலிருந்து காப்பாற்றப்பட வேண்டுமென்றால்…

மைதிலியைப் போன்ற புதிய சக்திகள் உருவாக வேண்டும்.”

“மைதிலி…. நீங்கள் நான்கு சுவற்றுக்குள் முடங்கிவிடக்கூடாது…. இன்னும் எத்தனையோ மாணவிகளை நீங்கள் காப்பாற்ற வேண்டியுள்ளது. அவர்களுக்கு நல்ல கல்வியைக் கற்பிக்க, பாரதிகண்ட புதுமைப் பெண்ணாய் வாருங்கள்….”

“மீண்டும் உங்கள் கல்விப்பணியைத் தொடர, எம்பள்ளி இருகரம் கூப்பி வரவேற்கிறது…..” கரவொலி விண்ணைத் தொட்டது. மைதிலி அன்பு மழையில் நனைந்தாள். கைகூப்பி நன்றி தெரிவித்தாள். அவளுக்குள் புதிய சக்தி உருவெடுத்தது…. கொடியேற்றி வைத்து ‘ஜெய்ஹிந்த்….’ என உணர்ச்சியுடன் கத்தினாள்.

அந்த மூவண்ணக் கொடியைப் போல், உற்சாகத்தில் மைதிலியின் மனமும் சிறகடித்துப் பறந்தது.

– மார்ச் 2018

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *