கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 3, 2024
பார்வையிட்டோர்: 1,227 
 
 

சிவந்து கிடந்த வானத்தில் மேகமூட்டங்களின் நடுவே பறந்து போகும் பறவைகளின் கீச்சொலிகளுக்கு மத்தியில் என் மனம் அந்த ரைஸ்மில்லைக் கடந்து போகையில் ‘திக் திக்’ என்றிருந்தது. ரைஸ்மில்லிலிருந்து வரும் அரவைஒலி என் காதுகளைக் குடைந்து செவிப்பறையின் அறைகளில் சென்று சிலிர்ப்பை உண்டு செய்தது.

பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்குச் செல்லும் எனக்கு, பள்ளிக்கூடம் முடிந்ததும் சிறைக்குள்ளிருந்து வெளிவரும் கைதியின் மகிழ்ச்சி போல மனம் மகிழ்ந்தாலும் இந்த ரைஸ்மில்லைக் கடந்து போகையில் ஏற்படும் பயம் மனதிலிருந்து போக வெகுநேரம் ஆகிறது. வீட்டில் அம்மா இன்றைக்கு என்ன தீம்பண்டம் வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை. வீட்டிற்குப் போனதும் பைக்கட்டை வீசிவிட்டு, முகம், கை, கால் கழுவி காபி குடிக்கவேண்டும். பிறகுதான் எல்லாமே. இப்பொழுதெல்லாம் படி படியென்று பிள்ளைகளைப் பாடாய் படுத்துகிறார்கள். நான் அப்படி வளரவில்லை. அப்பாவும் அம்மாவும் படிப்பதற்கு என்னைக் கட்டாயப்படுத்தியதில்லை. விருப்பமிருந்தால் நானாக பைக்கட்டை எடுத்துப் படிக்க அமருவேன். இல்லையென்றால் ஒரே விளையாட்டுதான். நேரமானதும் இரவு சாப்பிட்டுவிட்டு நிம்மதியான உறக்கம். இப்படித்தான் என் பள்ளிப் பருவ காலங்கள் கழிந்தன.

மறுநாள் காலை பாட்டு டீச்சர் சொல்லிக் கொடுத்த “அலைபாயுதே கண்ணா என்மனம் அலைபாயுதே” என்ற பாடலை பாடிக்கொண்டே புத்தகங்களைப் பையில் அடுக்கினேன். அம்மா வேகமாக வந்து,

“மலர் இன்னிக்கு சாயந்தரம் ரைஸ்மில்லுக்குப் போய் கொஞ்சம் அரிசி தாரேன் அரைச்சிட்டு வர்றியா” என்றாள்.

“போம்மா. என்னால முடியாது. அண்ணனை அரைச்சிட்டு வரச்சொல்லு. அவன் சும்மாதான இருக்கான்” என்றேன். அண்ணன் உடனே,

“நீ என்னடி பண்ற. வெட்டி முறிக்கிறியா. நீ போய்ட்டு வரவேண்டியதுதான?” என்றான்.

“என்னால முடியாது. எனக்கு நிறைய வேலையிருக்கு. வீடு கூட்டணும். பாடம் எழுதணும். அண்ணனைப் போகச்சொல்லும்மா” என்றேன்.

“அம்மா அவ சும்மா சொல்றா. நேத்து விளையாடிட்டு தான இருந்தா. அவளப் போகச் சொல்லு” என்றான் அண்ணன். அம்மா,

“டேய் அவ சின்னப்பொண்ணு. நீ போய்ட்டு வாயேண்டா” என்றாள்.

“அம்மாவே சொல்லிட்டாங்க. நீதான் போகணும்” என்றேன் நான்.

“யார் சொன்னாலும் என்னால போகமுடியாது. நான் பத்தாம் வகுப்பு. படிக்கிறதுக்கு நிறைய இருக்கு” என்றான் அண்ணன்.

”போடா. நான் போக முடியாது” என்று சொல்லிவிட்டு கையில் அகப்பட்டால் தலையில் குட்டுவான் என்பதால் பைக்கட்டை எடுத்துக்கொண்டு வேகமாக பள்ளிக்கூடத்துக்கு ஓடினேன். இன்னொரு பக்கம் மனம் சாயந்தரம் அம்மா ரைஸ்மில்லுக்கு நம்மைத்தான் அனுப்புவாளோ,

ஐயையோ அந்தச் சத்தத்தைக் கேட்டாலே மனது என்னவோ செய்கிறதே? எப்படிச் சமாளிப்பது என்று நினைத்துக் கொண்டே நடந்தேன்.

பள்ளிக்கூட வாசலை மிதித்ததும் கமலா டீச்சரின் முகம் கண்முன் வந்து சென்றது. வரலாறு வகுப்பு வந்தாலே பாதிப்பேருக்கு பயத்தில் பீதிதான். இந்தக் கமலா டீச்சர் மட்டும் ஏன் பிள்ளைகள இப்படி அரட்டுறாங்க? இவங்களுக்கு பிள்ளையே கிடையாதா? இவங்க பிள்ளையையும் இப்படித்தான் அரட்டுவாங்களா? ஐயோ பாவம் என்று நினைத்துக் கொண்டே பள்ளிக்கூடத்திற்குள் நுழைந்தேன். நேத்து கமலா டீச்சர் எதுவும் வீட்டுப்பாடம் கொடுத்தாங்களா? செஞ்சோமா என்று யோசித்துக் கொண்டே என் வகுப்பிற்குள் சென்று உட்கார்ந்தேன். தோழி கற்பகம் பக்கத்தில் வந்து,

“ எல்லா வீட்டுப்பாடங்களையும் செஞ்சிட்டியா? உன்னோடத காட்டு” என்றாள். “இந்தா” என்ற என்னுடைய நோட்டை எடுத்துக் கொடுத்தேன். வாங்கிப் பார்த்தவள்,

“ஐயையோ ஏண்டி கமலா டீச்சர் கொடுத்த வீட்டுப் பாடத்த செய்யல. டீச்சர் வந்து அடிக்கப் போறாங்கடீ. என்ன பண்ணப் போற” என்றாள். எனக்கு உடனே பகீர் என்று அடிவயிற்றில் புளியைக் கரைத்தது. ஐயையோ இந்தம்மா பிரம்பை எடுத்து அடிக்குமே? என்று உள்ளுக்குள் உதறல் எடுத்தது. என்னுடைய முகத்தைப் பார்த்த கற்பகம்,

“சரி பயப்படாத பார்த்துக்கலாம்” என்றாள். இருந்தாலும் என் மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்தது. பயத்தில் பாத்ரூம் வருவது போல் இருந்தது. வகுப்புகள் ஆரம்பித்துப் போய்க்கொண்டிருக்க ‘கமலா டீச்சர் வகுப்பு கடைசிதான’ என்று மனதிற்குள் ஒரு பெருமூச்சு எழுந்தது. வகுப்புகள் முடிந்து மதியம் சாப்பிட உட்கார்ந்தோம். எனக்கு பயத்தில் அம்மா கொடுத்த சோறு தொண்டைக்குள் இறங்கவில்லை. கற்பகம்தான் சமாதானப்படுத்தினாள். “கமலா டீச்சர் கேட்டா உனக்கு வயித்துவலின்னு சொல்லிரு” என்றாள். ‘அதுவும் நல்ல ஐடியாதான். உடம்பு சரியில்லை என்று சொன்னோம்னா அடிக்கமாட்டாங்க’ என்று மனதிற்குள் எனக்கு நானே சமாதானம் செய்து கொண்டேன். ஏழாவது படிக்கும் எனக்கே இவ்வளவு சோதனையா? அண்ணன்லாம் எப்படித்தான் சமாளிக்கிறானோ? தெரியலையே என்று மனம் ஓடியது.

கமலா டீச்சர் வகுப்பு நேரம் வந்தது. வகுப்பு ஆரம்பித்து பத்துநிமிடம் ஆகியும் டீச்சர் வராததால் கிளாஸ் லீடர் எழுந்து டீச்சரைக் கூப்பிட ஸ்டாப் ரூம் சென்றாள். எனக்கு இருப்புக் கொள்ளாமல் டீச்சர் வாறாங்களா? என்று எட்டிப்பார்த்தேன். ஐந்து நிமிடம் கழித்து எங்க கிளாஸ் லீடர் சுதா மட்டும் வந்தாள். எனக்கு உள்ளுக்குள் ‘அப்பாடா’ என்றிருந்தது. சுதா வந்தவுடன்,

“டீச்சர் வரலையா“ என்றேன். அவள் உடனே,

“டீச்சர் இன்னிக்கு லீவாம். நம்மள அமைதியா கிளாஸ் டீச்சர் படிக்கச் சொன்னாங்க” என்றாள். என்னையும் அறியாமல் “ஏ” என்று மகிழ்வோடு எழுந்து நின்று கூக்குரலிட்டேன். உடனே சுதா,

“யாரும் சத்தம்போடக்கூடாது. அமைதியா உட்காருங்க. பேசுறவங்க பேர் எழுதப் போறேன்” என்றாள். நான் மகிழ்ச்சியோடு கற்பகத்தின் அருகில் போய் அமர்ந்து பாட்டுக்குப் பாட்டு விளையாட ஆரம்பித்தோம். அவள் ஒரு பாட்டின் தொடக்க எழுத்தை நோட்டில் எழுத, நான் அதைக் கண்டுபிடிக்கவேண்டும். இப்படியாக அன்றைய பொழுது மகிழ்ச்சியாகக் கழிந்தது.சாயந்திரம் பள்ளி விட்டுப் போகையில்தான் வீட்டில் அம்மா ரைஸ்மில்லுக்குப் போகச் சொன்னது நினைவு வர,

“கற்பகம் எனக்கு ஒரு உதவி செய்வியா? இன்னிக்கு ரைஸ்மில்லுக்குப் போகணும். எனக்குக் கூட வந்து மாவு அரைச்சு வாங்கித் தருவியா?” என்றேன். கற்பகம்

“போடீ வேற வேலையில்லையா? ரைஸ்மில்லுக்குப் போக என்ன பயம்? இதுக்கு ஒரு ஆளா? நான் வீட்ல என்ன சொல்ல” என்றாள்.

“ப்ளீஸ்டீ படிக்கப் போறேன்னு சொல்லு” என்றேன் நான்.

“ஸ்கூல் விட்டோன்ன படிப்பா. பொய் சொல்லாதன்னு சொல்வாங்க” என்றாள்.

“அத்தைட்ட நான் வந்து உண்மையவே சொல்றேன். விடுவாங்க” என்றேன் நான்.

இப்படியாக இன்றைய பொழுது எப்படியோ பிரச்சினையில்லாமல் கழிந்தது. நாளைக்குப் பொழுது எப்படி இருக்கப் போகுதோ? என்று தனக்குள் எண்ணியவாறே மலர் வீட்டிற்குச் சென்றாள். பள்ளிப்பருவம் என்பது மலருக்கு மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் போனாலும் அவ்வப்போது இப்படித்தான் பீதியைக் கிளப்பியது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *