கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 14, 2020
பார்வையிட்டோர்: 4,883 
 
 

(இதற்கு முந்தைய ‘ஓசி பேப்பர்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது ).

பட்ட காலிலேயே படும் என்கிற மாதிரி ஏற்கனவே ஐயர் வீட்டில் ஓசி பேப்பர் வாங்கிக்கொண்டு வந்து தந்து கொண்டிருந்த கதிரேசனுக்கு, தகப்பனுக்கு பீடிக்கட்டு வாங்கிக் கொடுக்கிற வெட்கங்கெட்ட வேலையும் புதிதாக வந்து சேர்ந்துவிட்டது.

ஒரேயொரு வித்தியாசம். ஓசி பேப்பர் வாங்கித்தரும் வேலை சாயந்திரம் பள்ளி விட்டு வந்ததும்; பீடிக்கட்டு வாங்கிக் கொடுக்கும் வேலை காலையில் பள்ளி போவதற்கு முன். இந்த இரண்டு வேலைகளிலும் கதிரேசனுக்குத்தான் உணர்ச்சிகளின் நெரிசல்.

மச்சக்காளைக்கு இதெல்லாம் தன்னுடைய மகனை ரொம்ப இயல்பாக; ரொம்ப சாதாரணமாக உரிமையோடு வேலை வாங்குகிற சின்னக் குடும்ப விஷயம்! அதற்குமேல் எதுவும் கிடையாது அவருக்கு. தினமும் காலையில் பெருமாள் கோயிலுக்குப் பின்னால் இருக்கும் சம்சுதீன் கடைவரை போய் இரண்டு கட்டு சொக்கலால் ராம்சேட் பீடி வாங்கி வரும்போது கதிரேசனுக்கு உடம்பும் மனசும் அருவருப்பில் கூசிப் போவதெல்லாம் மச்சக்காளைக்கு கனவில்கூட வந்திராத சமாச்சாரங்கள்!

பார்ப்பதற்கே அருவருப்பான பீடியை கதிரேசன் வாயால் கேட்டு, கையால் தொட்டு தினமும் வாங்கிவர வேண்டியிருந்தது. சம்சுதீன் கடையில் போய் முதல்நாள் ‘இரண்டு கட்டு சொக்கலால் பீடி’ என்று கேட்கவே அவனுக்கு வாய் கூசியது. பீடிக் கட்டுகளை வலது கையில் எடுத்து வராமல் இடது கையால்தான் கொண்டுவந்தான். தினமும் அப்பாவிடம் பீடியைக் கொடுத்ததும் ஓடிப்போய் முதல் காரியமாக கையை நன்றாகக் கழுவி துடைத்துக்கொண்ட பிறகுதான் பள்ளிக்கு கிளம்பிப் போவான்.

கையைக் கழுவாவிட்டால் ரொம்ப நேரத்திற்கு பீடி நாற்றம் இருந்து கொண்டிருக்கும். கழிப்பறையிலும் வீட்டிலும் நின்றந்து போயிருந்த பீடி நாற்றம் தன்னுடைய கைக்கும் வந்துவிட்டது கதிரேசனுக்குத் தாங்க முடியாததாக இருந்தது. தினமும் பீடி வாங்கிக் கொடுக்கிற வேலையைச் செய்ய அவமானமாகவும் இருந்தது.

ஒருநாள் பீடி வாங்கிக் கொடுக்கிற வேலை தனக்குப் பிடிக்கவில்லை என்பதை கதிரேசன் அம்மாவிடம் சிறிய தயக்கத்துடன் சொல்லிப் பார்த்தான். பிரயோஜனமில்லை. அவள் புருஷனின் தீவிர பக்தை. புருஷன் சொன்னால் அவனுக்காக பீடியை புகைத்துக் காட்டுகிற அளவுக்கு உயிருக்கு உயிரான பக்தை!!

“ரொம்பத்தான் பெரிய இவன் மாதிரி அலட்டாதே! பெத்தவன் சொல்ற வேலையை செய்துகிட்டு கிட” என்பதற்கு மேல் பெற்றவளிடம் இருந்து கதிரேசனுக்கு ஆதரவோ அல்லது ஒரு இதமான வார்த்தையோ மருந்துக்குக் கூட கிடைக்கவில்லை. கஷ்டம்தான் இதெல்லாம் கதிரேசனுக்கு… பீடி வாங்கிவந்த கையையாவது கழுவிவிட முடிந்தது அவனால். ஆனால் அம்மாவின் இந்த அலட்டலான வார்த்தைகளைத்தான் ஞாபகத்தில் இருந்து அவனால் துடைத்தெறிய முடியவில்லை.

இப்படியே செய்வதற்கும் பிடிக்காமல், பிடிக்கவில்லை என்பதைச் சொல்லவும் முடியாமல் கதிரேசன் கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்கு தகப்பனுக்கு பீடி வாங்கிக் கொடுக்கிற வேலையை செய்து கொண்டிருந்தான்.

தெரு முனையில் இவனுடைய தலையைப் பார்த்ததுமே சம்சுதீன் தயாராக இரண்டு கட்டு சொக்கலால் பீடியை எடுத்துத் தட்டில் வைத்துவிடுவான். அந்த அளவுக்கு கதிரேசன் சம்சுதீன் கடையில் ஒரு பீடி வாடிக்கையாளன் ஆகியிருந்தான்! இது அவனுடைய தலையில் இருந்த அவமான கிரீடத்தில் செருகப்பட்ட மற்றொரு இறகு! ஒருநாள் சம்சுதீன் இந்த கிரீடத்தில் இன்னொரு இறகை சொருகிய போதுதான் பிரச்னையாகிவிட்டது.

கதிரேசன் வழக்கம்போல அன்று காலையில் பீடிக்கட்டு வாங்கப் போனான். அவனுடைய கையில் அதற்கான காசு தயாராக இருந்த மாதிரி சம்சுதீன் கடையில் இரண்டு பீடிக்கட்டு தயாராக இருந்தன. கதிரேசன் காசைத் தட்டில் வைத்துவிட்டு பீடிக்கட்டை இடது கையால் எடுத்துக்கொண்டு வேகமாகத் திரும்பியபோது “ஒரு நிமிஷம் நில்றா கதிரேசா” என்ற சம்சுதீன் குரல் அவனை தடுத்து நிறுத்தியது. கதிரேசன் மிகவும் வெறுமையாக சம்சுதீனைப் பார்த்தான்.

“நான் இப்ப கேக்கறதுக்கு மறைக்காம நெசத்தைச் சொல்றியா?”

கதிரேசன் பதில் ஏதும் சொல்லாமல் சம்சுதீனைப் பார்த்தான்.

“இந்த ரெண்டு பீடிக்கட்டையும் உங்க அப்பாகிட்டே குடுக்கிறதுக்கு முந்தி ஒண்ணு ரெண்டு பீடியாவது இதுல இருந்து நீ பிடிச்சிப் பாக்கறதுக்காக எடுத்து வெச்சிப்பேதானே?”

பற்ற வைத்த பீடியை முகத்தில் எறிந்தாற்போல இருந்தது கதிரேசனுக்கு. இந்தக் கேள்வியை சம்சுதீன் சிரித்துக்கொண்டே வேறு கேட்டான். கதிரேசனுக்கு இது வெறும் கேள்வி இல்லை. பலமாக கன்னத்தில் விழுந்த பெரிய அறை. அறை வாங்கியவனின் முகம் எப்படிக் கன்றிச் சிவந்து போய்விடுமோ அப்படிச் சிவந்து போய்விட்டது கதிரேசனின் முகம். அந்தச் சிவப்பு உடனே அவனின் கண்களிலும் படர்ந்து விட்டது.

அடுத்த நிமிடம் கதிரேசன் பன்னிரண்டு வயதுப் பையனாக இல்லாமல் இருபத்திரெண்டு வயது இளைஞனாக சரேலென மாறி நின்றான்.

“இந்த மாதிரி நக்கலா கேக்கிற வேலையெல்லாம் வச்சிக்காதீங்க. பீடியைப் பிடிக்கவும் மாட்டேன். அதைப்போய் திருடவும் மாட்டேன். ஞாபகத்துல வச்சிக்கோங்க. செத்தாலும் இனிமே உங்க கடைக்கு எதுக்காகவும் வரமாட்டேன்.”

இப்படிச் சொல்லிவிட்டு கதிரேசன் பீடிக் கட்டுகளோடு வேகமாக நடந்துவிட்டான். அவனுக்குள் உணர்வுகள் படபடப்பாகி விட்டிருந்தன. அவமானத்தைத் தாங்க முடியாமல் எல்லா உணர்வுகளும் அவனுள் துடித்துக் கொண்டிருந்தன. பீடி பிடிப்பது மச்சக்காளைக்கு அருவருப்பு அற்ற காரியமாக இருக்கலாம். பீடி விற்பது சம்சுதீனுக்கு அவமானமில்லாத தொழிலாக இருக்கலாம். அனால் கதிரேசனுக்கு இரண்டுமே கேவலமானது. அதற்கும்மேல் கடையில் போய் பீடி வாங்கி வருவது என்பதும் அவனுக்கு வேதனையான வேலைதான். அதனால் கதிரேசன் இந்த வேலையைச் செய்ய மாட்டான். மானம் போகிற மாதிரியான கேள்வியை சம்சுதீன் கேட்டுவிட்ட பிறகும் அந்த வேலையை அவன் செய்து கொண்டிருந்தால் அதைவிடக் கேவலமான விஷயம் எதுவும் கதிரேசனின் வாழ்க்கையில் இருக்க முடியாது.

இத்தனை உணர்வு வேகத்தின் முடிவோடு கதிரேசன் வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தபோது பள்ளியில் அவனுடன் படிக்கும் செந்தில் எதிரில் வந்தான். உடனே இடது கையில் இருக்கும் பீடிக்கட்டை எப்படி அவனின் பார்வையில் இருந்து மறைப்பது என்பது தெரியாமல் கதிரேசன் முழித்தான். ஆனால் அதற்குள் செந்தில் பீடிக் கட்டுகளைப் பார்த்துவிட்டான்.

“என்னடா கதிர், பீடி வாங்கிட்டுப் போறே, யாருக்குடா?”

கதிரேசனுக்கு பதில் சொல்லப் பிடிக்கவில்லை. சில வினாடிகள் மிக மெளனமாக செந்திலைப் பார்த்துவிட்டு வேகமாக கடந்து சென்றான். அவனுடைய எரிச்சல் அதிகமாகிவிட்டது.

செந்திலுக்கு ஓட்டை வாய். கொஞ்ச நேரத்தில் கதிரேசன் பீடி வாங்கிக்கொண்டு போகிற விஷயத்தை பள்ளி பூராவும் சொல்லிவிடுவான். உடனே சக மாணவர்கள் கதிரேசன் பீடி பிடிக்கிறான் என்கிற மாதிரி அவனைப் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். இதுதான் அவனின் மனதை மேலும் வேகப்படுத்தி விட்டது.

அந்த வேகத்தோடு அவன் வீட்டிற்குள் நுழைந்தபோது நேற்று வாங்கியதில் மிச்சமாக இருந்த கடைசி பீடியை சுகமாகப் பிடித்தபடி மச்சக்காளை ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தார். அவரைச்சுற்றி புகையும் நெடியும் சூழ்ந்திருந்தன. கதிரேசன் பீடிக்கட்டை வேகமாக ஊஞ்சலின் மீது வைத்தான். மச்சக்காளை பீடிப் புகையை இழுப்பதை நிறுத்திவிட்டு மகனைப் பார்த்தார்.

“என்னலே என்னைக்கும் என் கையில் குடுக்கிற பீடியை புது வழக்கமா ஊஞ்சலில் வைக்கிறே?” என்றார் இளக்காரமாக.

கதிரேசன் அப்பாவை குரோதத்தோடு பார்த்தான். சட்டென அவனின் உணர்வுகள் பன்னிரண்டு வயதுச் சிறுவனுக்கு உரியதாக இல்லாமல் இருபத்திரெண்டு வாலிபனுக்குப் போன்றதாய் முறுக்கேறியது.

“இனிமே என்னை ஒரு நாளும் பீடி எல்லாம் வாங்கச் சொல்லாதீங்க… வேற யாரையாச்சும் போய் வாங்கியாரச் சொல்லுங்க…”

மச்சக்காளை திகைத்துப்போய் மகனைப் பார்த்தார்….

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *