பிள்ளை மனசு வெள்ளை மனசு

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 13, 2024
பார்வையிட்டோர்: 1,286 
 
 

வழமைபோல் ஸனாவை அவளது தாய் ஸாரா ஏசிக்கொண்டிருந்தாள். அவள் மேல் அத்துனை ஆத்திரம் கொண்டிருந்தாள். அவள் பதில் வார்த்தைகளை விடாமல் அமைதியாக கட்டிலில் சாய்ந்து படுத்திருந்தாள். ஸனா நல்ல பண்பான பிள்ளை. ஆறாம் வகுப்பில் கல்வி கற்றுக் கொண்டிருந்தாள். அவளது பெற்றோருக்கு அவள் மாத்திரமே பிள்ளை. அதனால் அவளது தந்தை அவள் மேல் அளவுகடந்த அன்பு வைத்திருந்தார். அதிகம் செல்லமாய் வளர்த்தார். ஆனால் அவளது தாய் கண்டிப்போடு கூடின பாசத்துடன் அரவணைத்தாள்.

ஸனா எல்லாவற்றிலும் கெட்டிக்காரி. இளகிய மனம் கொண்டவள். யாவரையும் மதிக்கக் கூடியவள். துடிப்பானவளாக துருதுருவென்று இருப்பாள்.

அவளது தாயின் கவலையெல்லாம் அவள் பொறுப்பு அறிந்து வளர வேண்டும் என்பதுதான்.

அவள் பணத்தின் பெறுமதி தெரியாமல் வளர்வதை நினைத்து தாய் ஸாரா வருந்தினாள். ஒரே பிள்ளையாதலால் அவள் ஆசைப்பட்டதையெல்லாம் வாங்கி வந்து கொடுப்பார் அவள் தந்தை ஷம்ஸ்.நாளுக்கு நாள் ஏதாவது ஒருபொருளை தொலைத்துவிட்டு வந்து வாங்கிக் கேட்பாள் ஸனா. ஆனால் அடம்பிடிக்க மாட்டாள். கேட்டது கிடைக்கும் என்ற நம்பிக்கை அவளுக்கு. பேனா, பென்சில், கலர்பெட்டி, தண்ணீர் போத்தல், ரூலர், குடை என்று இன்னும் நிறைய பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம் அவள் தொலைக்கும் பொருட்களை..

ஷம்ஸ் ஒன்றும் செல்வந்தரல்ல. இருந்தாலும் வறுமை என்று சொல்லுமளவுக்கு கஷ்டம் இருக்கவில்லை அவர்களுக்கு. தங்குவதற்கு அழகான சிறிய சொந்த வீடு, வயித்துப் பிழைப்புக்கு சிறியதாக புடவைக்கடை. அதுவும் கூலிக்கடை.வாழ்க்கை எந்தவிதமான நெருக்கடியுமில்லாமல் நல்ல விதமாகத்தான் போய்க்கொண்டிருக்கின்றது. அதனால்தான் எந்தக் குறையும் வைக்காமல் மகளின் தேவைகளை நிறைவேற்ற முடிகின்றது.இப்படி மகள் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்றை வாங்கிக் கேட்கும் போது ஷம்ஸ் அமைதியாக இருந்தது ஸாராவால் பொறுக்க முடியாமல் இருந்தது. ‘நீங்க ஓவரா உங்க மகளுக்கு செல்லம் குடுக்குற..’என்று அடிக்கடி கூறுவாள்.இன்றும் அப்படித்தான்
அவள் தந்தையிடம் போனில் கதைத்திருக்கிறாள்.  வேலை முடித்து வரும் போது தனக்கு தண்ணீர் போத்தல் வாங்கிவருமாறு..

மூன்று நாட்களுக்கு முன்னால்தான் புது போத்தல் வாங்கிக் கொடுத்தது .அதற்குள்ளா?  தொலைத்து விட்டாள்.  தாய் ஸாராவுக்கு கோபம் தலைக்குமேல் ஏறியது. அதனால்தான் ஸனாவை கண்டபடி நிறையவே ஏசிவிட்டாள்.  ஆனால் ஸனா அமைதியாகவே இருந்தாள்.

தாய் ஏசியது கூட அவளுக்கு கவலையளிக்கவில்லை.தாயிடம் ஏச்சு வாங்குவது அவளுக்கு என்ன புதுசா?

அப்படியே ஏச்சுப் பேச்சுக்களை காதில் வாங்கியவாரு உறங்கிப்போனாள். தனது மகளை நன்றாக ஏசிவிட்டோமே என்ற வருத்தம் அந்த தாயுள்ளத்திற்கும் இருக்கத்தான் செய்தது. ஸாரா மனதினால் வருந்தினாள்.

வீடு வந்துசேர்ந்த ஷம்ஸ்ஸின் கண்கள் அவரது செல்ல மகளைத்தான் முதலில் தேடின.எப்போதும் வேலைமுடித்து வீடு வரும்போது வீட்டின் முன்ஹோலிலையே உட்கார்ந்து தன்வருகைக்காக காத்திருக்கும் அன்பு மகள் தன் கண்களில் படாதிருந்தது என்னவோ போலிருந்தது.

“ஸாரா   மக தூங்கிட்டாளா? “என்று மனைவியைக் கேட்டார்.

“ஆமா ஆமா தூங்கிட்டாள்” என்றாள் ஸாரா கோபத்தோடு. அவள் கண்களில் அத்துணை கோபம் தெரிந்தது.

“என்ன ஸாரா  என் மகள ஏதாவது சொன்னியா? ” என்று கேட்ட கணவரிடம் “ஆமா  ஒங்கட மவள ஒன்னுமே சொல்லிடக் கூடாதே.அப்படியே வந்திடுவீங்களே என்னை கேள்வி கேட்க”என்றாள் ஸாரா.

“என்னமா செய்றது. இன்னம் சின்னப் பொண்ணுதானே அவ, ஏசினா விளங்கவா போவுது?  எல்லாம் சரியாயிடும். பொறுமையாய் இருப்போம் “என்றார்.

“இப்படியே சொல்லி சொல்லி அவளுக்கு செல்லம் குடுங்க  நல்லம் நல்லம்.”   என்று கூறியவள்  “அந்த போத்தல தாங்க. நான் இத அவக்கு கொடுக்கப் போறது இல்ல. என்கிட்டே  இருக்கட்டும். எதில சரி தண்ணி கொண்டு போவட்டும்.”என்றவாறு அவர் கையில் இருந்த போத்தலை எடுத்துக் கொண்டாள். பின்னர் அவ்விடத்தை விட்டு சென்றாள்.

மனைவியிடம் வாக்குவாதம் செய்து பயனில்லை என்று நினைத்து அவரும் அமைதியாகிவிட்டார்.

ஆனாலும் மகளை நினைத்து கலங்கினார்.

காலையில் மகள் கேட்பாளே! எதிர்பார்ப்பாளே!  என்று நினைத்த ஷம்ஸ்  ‘உண்மையை சொன்னால் என் தங்கம் புரிந்து கொள்வாள். அமைதியாகிடுவாள். ‘ மனதினால் தன்னை சமாதானப் படுத்திக் கொண்டார்.

இரவின் குளிர்மையால் சுருண்டு படுத்திருந்தாள் ஸனா. பக்கத்தில் இருந்த பெட்சீட்டை எடுத்து மகளை போர்த்திவிட்டு செல்ல முட்படுகையில் “வாப்பா வாப்பா”என்று முனுமுனுத்தது அவளது உதடுகள். தூக்கத்தில் தான் பேசினாள். கனவில் கூட வாப்பா வாப்பா என்று தன்னை எவ்வளவு அழகாக கூப்பிடுது மகள் மனதில் நினைத்துக் கொண்டார். மகளின் நெற்றியில் முத்தமிட்டு விட்டுஅவ்விடத்தை விட்டுச் சென்றார்.

மறுநாள் பாடசாலை கிளம்பும் போது போத்தல் பற்றி கேட்டாள் தந்தையிடம்.
உண்மை நிலையை எடுத்துக் கூறியதும்  மெளனமாகி விட்டாள். எதுவும் பேசவுமில்லை. கோபப்படவும் இல்லை.

பிளாஸ்டிக் குளிர்பான போத்தலில் தண்ணீரை நிரம்பிக் கொண்டு கிளம்பினாள் அவள்.இப்படியே வாரம் ஒன்றானது. அவள் உம்மாவிடம் எதுவும் கேட்கவில்லை. சண்டை போடவுமில்லை. எப்போதும் போல் அமைதியாக இருந்தாள். தாய்க்கு செய்யும் வேலைகளில் கூட எந்தக் குறையும் வைக்காமல் ஒத்தாசையாக இருந்தாள்.

ஸாராவுக்கு மகளைப் பார்க்கவும் பாவமாகத்தான் இருந்தது. என் மவள் தங்கமான பொண்ணு.வீட்டு வேலைகளில் பொறுப்பான புள்ள, என்ன செய்ய இந்த விசயத்தில் மட்டும் பொறுப்புடன் நடந்தால் நல்லா இருக்கும் என்று நினைத்து வேதனைப்பட்டாள். தண்ணீர் போத்தலை மகளிடம் கொடுத்து விட்டாள்.

சில நாட்கள் சென்றன.பாடசாலை சென்றிருந்தாள் ஸனா. சமையல் செய்து கொண்டிருந்தாள் ஸாரா. தொலைபேசி அலறியது. தூக்கினாள் அவள். மறுமுனையில் கேட்ட தகவலால் பதறிப் போனாள்.தலைசுற்றி மயக்கம் வருவது போல் இருந்தது. எப்படியோ சுதாகரித்துக் கொண்டவள்.கணவருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்து விட்டு வீதிக்கு வந்தாள். வழியில் சென்று கொண்டிருந்த ஆட்டோவைப் பேசி மகளின் பாடசாலைக்கு விரைந்தாள்.பாடசாலை கேட்டருகே நின்றிருந்த ஆசிரியர் ஒருவரிடம் தகவல் கேட்க பிள்ளையை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கூட்டிச் சென்றதாகச் சொன்னார் .உடனே ஆஸ்பத்திரிக்கு விரைந்தாள் அவள். அங்கே அவளுக்கு முன்னாடியே அவள் கணவர் வந்திருந்தார்.

சரிந்து போன வாழைபோல் நொடிந்து போய் உட்கார்ந்திருந்தார்.அவரின் அருகில் பிள்ளையை ஆஸ்பத்திரியில் சேர்த்த ஆசிரியைகள் இருவரும், ஆசிரியர் ஒருவரும் இருந்தார்கள். அவர்கள் ஆறுதல் கூறிக்கொண்டிருந்தார்கள். மகள் ஸனாவை ஐசியூவில் வைத்துள்ளதை அறிந்த  ஸாரா அதிர்ந்து போனாள். அவளுக்கு என்ன நடந்தது என்பதை ஆசிரியை ஒருவர் விலாவரியாகச் சொன்னாள். இரண்டாம் மாடியில் இருந்து கீழே இறங்கி வரும்போது பன்னிரண்டு படிகளில் இருக்கும் போது கீழே உள்ள கடைசிப் படிக்கு வேகமாக விழுந்தாலாம். அதுவும் இன்னொரு பிள்ளை ஓடி வந்ததால் இவள் மேல் மோதித் தூக்கி வீசப்பட்டாளாம். நெற்றி வெடித்து நிறைய இரத்தம் போனதாம். இதைக் கேட்டதும் அந்தத் தாயுள்ளம் தன்னிலை தடுமாறி மயங்கினாள். அவளை அங்குள்ளவர்கள் அவளது கணவருக்கு அருகில் அமர்த்தினார்கள்.சில மணிநேரம் அவர்களோடு இருந்த ஆசிரியர்கள் அங்கிருந்து விடைபெற்றுச் சென்றார்கள். டாக்டர் கூறிய வார்த்தைகள் ஷம்ஸ், ஸாரா தம்பதிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. பிள்ளை இன்னமும் கண்விழிக்க வில்லை எனவும், நன்றாக அடிபட்டதால் இரத்தம் அதிகமாக போயுள்ளதாகவும், இரத்தம் நிறைய ஏற்றவேண்டும் என்றும் மயக்க நிலை இப்படியே
நீடித்தால் ஹோமா நிலைக்கு தள்ளப்படலாம் என்றும் கூறப்பட்டது.

அவர்களது உயிர்,உலகம் எல்லாமே அவள்தான். சில நொடிகளில் தங்களது உயிர் தங்களை விட்டு நீங்கியது போலிருந்தது அவர்களுக்கு. இருந்தாலும் நம்பிக்கையை தளரவிடாமல் உறுதியாக இருந்தார்கள் அவர்கள் இருவரும். தங்களது அன்பு மகளை நல்லபடியாக காப்பாற்றித் தருமாறு உருக்கமாக இறைவனைப் பிரார்த்தித்தார்கள். அவர்களது பிரார்த்தனை வீண்போகவில்லை. ஸனா மயக்க நிலையில் இருந்து மீண்டு வந்தாள்.ஐசியூவில் இருந்து வார்ட்டுக்கு மாற்றினார்கள். தாய் ஸாரா பக்கத்தில் இருந்து கவனித்துக் கொண்டாள். தந்தை ஷம்ஸ் மூன்று வேலையும் வந்து போய்க் கொண்டிருந்தார். ஸனாவின் உடல் நிலை கொஞ்சம்  கொஞ்சமாய் தேறிவந்தது. மூன்று வாரங்கள் ஆஸ்பத்திரியில் இருந்தவள் டிஸ்சார்ஜ் ஆகி வீடு வந்து சேர்ந்தாள்.அவள் ஆஸ்பத்திரியில் இருக்கும் போது பாடசாலை ஆசிரியர்கள் ஓரிருவர் போனில் இவள் நிலைபற்றி ஷம்ஸ்ஸிடம் விசாரித்து தெரிந்து கொண்டார்கள். அவள் வீடு வந்த மறுநாளே அவளைப் பார்க்க பாடசாலை ஆசிரியர்கள் சிலரும் அவளின் தோழிகள் நிறையப் பேர்களும் தோழிகளின் சில பெற்றோர்களும் காலையில் இருந்து மாலை வரை வந்து கொண்டே இருந்தார்கள். வந்தவர்களில் சிலர் பிஸ்கட் பெகேட், பழங்கள் என்று எடுத்து வந்தார்கள்.அவளின் பெற்றோருக்கு தங்கள் மகளைப் பார்க்க இத்தனை பேர்கள் வந்தது ஆச்சரியத்தை கொடுத்தாலும் அதைவிட ஆச்சரியம் அளித்தது வந்த அதிகமான பெற்றோர் கூறிய விடயம் ‘உங்க மக ஆயிரத்தில் ஒருத்தி. தங்கமான பிள்ளை. நல்லவிதமாகத்தான் வளர்த்திருக்கீங்க.. எல்லாருக்கும் உதவுற மனசு.. யார் கவலையில் இருந்தாலும் அவளால் தாங்கிக் கொள்ள முடியாதாம். தன்னிடம் உள்ள எந்தப் பொருளாய் இருந்தாலும் இல்லாத பிள்ளைகளுக்கு கொடுத்து விடுவாளாம். வீட்டில ஒன்னும் சொல்ல மாட்டாங்களா’என்று கேட்டால் ‘யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க. தன் பெற்றோர்கள்தான் தன்னால் முடிந்த உதவியைச் செய்யும் படி 
கூறியிருக்கிறார்களாம்’ என்று அவள் சொல்வாளாம்.

உங்க மகள் செய்த நல்ல காரியம்தான் அவளுக்கு வந்த பேராபத்தில் இருந்து அவளை காப்பாற்றியிருக்கு. உங்க மக நிலையைக் கண்டு எங்க பசங்க எவ்வளவு துடிச்சாங்க தெரியுமா? நேரத்துக்கு தொழாத பிள்ளைங்க ஐந்து வேலையும் நேரத்துக்கு தொழுது ஸனாவிற்காக பிரார்த்திச்சாங்க தெரியுமா? என்று ஒவ்வொரு பெற்றோரும் கூறிய போது ஷம்ஸ், ஸாரா தம்பதிகள் வாயடைத்துப் போனார்கள். ஸாராவுக்கு இப்போது தான் புரிந்தது அவள் எதையும் தொலைக்கவில்லை என்பது.பெற்றவர்களுக்கு அவர்கள் முன்னிலையில் பெருமிதமாக இருந்தது.

அவள் அவர்களுக்கு நல்ல பெயரையே வாங்கித் தந்துள்ளால்!

எல்லோரும் சென்றதும் ஸாரா மகளை அழைத்தாள் “ஸனா.. ஸனா ” ஸனா உம்மா என்ன சொல்லப் போகிறாளோ என்ற பயத்துடன் வந்தாள்.

“வாம்மா இப்படி. ஏன்மா நீ எதையும் சொல்லல்ல? நீங்க உண்மைய சொல்லியிருக்கலாம்தானே? உம்மா இது தெரியாமல் எத்தனை முறை ஏசியிருக்கன். எதுக்குமா சும்மா ஏச்ச வாங்கின. ஸாரிடா ..என்ன மன்னிச்சிகோமா.. “என்று கூறியபடி தனது அன்பு மவளை அணைத்துக் கொண்டாள். “ஆமா ஒருநாளும் இல்லாதவாறு அம்மா மக கூட பாசமழையில் நனையிற”என்று கூறிய வாறு வந்தார் ஷம்ஸ். சிரித்துக் கொண்டே ஸாரா பதில் சொன்னாள் “நான் தப்பு பண்ணிட்டேன். என் மகள் சொக்கத் தங்கம்.. இது தெரியாமல் நான் அவள திட்டியிருக்கன். தவறா நினைச்சிருக்கன். அவள் பொறுப்பாகத்தான் வளர்ந்திருக்கிறாள். நம்ம வளர்ப்பு தப்பில்லை. அவட நல்ல குணத்தால நல்ல நண்பர்களை சம்பாதித்திருக்கிறாள். அவள் செய்த நல்லதுதான் அவளைக் காப்பாற்றியுள்ளது. அவளை நினைத்து பெருமப் படுறன் . நாங்க ரெண்டு பேரும் அல்லாஹ்வுக்கு நிறைய நன்றிக் கடன்பட்டுள்ளோம். ” என்று ஸாரா கூறிமுடித்ததும்,

“அது சரி ஏம்மா உம்மா ஏசிய போதெல்லாம் உம்மாக்கிட்ட உண்மைய சொல்லல்ல?” என்று கேட்டார் ஷம்ஸ். “வாப்பா நீங்கதானே சொல்லியிருக்கீங்க! வலதுகை கொடுப்பது இடதுகைக்கு தெரியாமல் கொடுக்கனும் என்று அதனால் தான் நான் யார் கிட்டயும் சொல்லவில்லை. “என்றாள் ஸனா. ஸாரா பெருமிதமோடு மகளைப் பார்த்தாள். மகளின் இரு பிஞ்சுக் கரங்களையும் எடுத்து தனது இரு கன்னங்களில் மாறி மாறி ஒற்றிக் கொண்டாள். அந்த சூழ்நிலமைக்கு ஏற்றாற்  போல் பக்கத்து வீட்டு வானொலியில் பழைய பாடல் ஒன்று ஒலித்துக் கொண்டிருந்தது ‘ எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கயிலே அது நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே…

(யாவும் கற்பனை)    

Print Friendly, PDF & Email

1 thought on “பிள்ளை மனசு வெள்ளை மனசு

  1. இந்த இணையம் என்னைப் போல்
    வளர்ந்து வரும் இளைய எழுத்தாளர்களுக்கு கிடைத்த
    பொக்கிஷம். இன மத வேறுபாடின்றி இந்த இணையம் செயல் படுவது மிக மிக பாராட்டுக்குரியது. எனது கதைகளை பதிவுசெய்து ஆதரித்து வருவதற்கு இதயம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *