பிளாக் அண்ட் ஒயிட் அம்மா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 18, 2012
பார்வையிட்டோர்: 10,350 
 
 

அம்மா வளையவரும் அரவம் வீட்டில் கேட்கவில்லை.

ஏதோ உள்ளுணர்வு உந்த விசுக்கென்று படுக்கையை விட்டு எழுந்தாள் ஜனனி.சுற்றும் முற்றும் பார்த்தாள்.அப்பாவின் குரல்தான் கேட்டது.வந்த நாளிலிருந்து அம்மாவின் அருகாமை தேவைப்படுகிறது.இந்த அருகாமை ஏக்கம் திருமணம் நிச்சயம் ஆன பின்புதான்.ஏன் இது?அவளுக்கே புரியவில்லை.திருமணத்திற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது.

இத்தனைக்கும் அம்மாவைப் பிரிந்து டெல்லியில்தான் கை நிறைய சம்பளத்தில் வேலை.பத்து நாள் லீவில் வந்திருக்கிறாள்.

”ஏய் அம்மா..!அம்மா…!”என்று கூப்பிட்டவாறே சமயலறைக்குப் போனாள்.

ஸ்டவ்வின் மேல் ”உஸ்ஸ்ஸ்ஸ்” என்று குக்கரின் சத்தம்.வெயிட்டை ஸ்பூனால் மென்மையாகத்தட்டி ”கீப் கொயட்” என்றாள்.

மற்ற அறைகளிலும் தேடிப் பார்த்துவிட்டு இல்லாமல் டிவி ஸ்டாண்டை நோக்கி வந்தாள்.டிவி ஸ்டாண்டின் மேல் இருந்த அம்மாவின் பிளாக் அண்ட் வொயிட் கல்யாண போட்டோவைப் பார்த்தாள்.இதை எப்போது வைத்தாள்.மனசு பரவசமாயிற்று.

அப்பாவித்தனமும் அழகும் முகத்தில் (கல்யாண)சந்தோஷமும் கொள்ளையாக இருந்தாள்.

”ஏ பிளாக் அண்ட் ஒயிட் அம்மா ஒன்ன பாத்தா பொறாமையா இருக்கு” அம்மாவிற்கு முத்தம் கொடுத்துவிட்டு திரும்பிப் பார்க்கவும் அம்மா உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.

”ஏய் அம்மா..! எங்க தொலஞ்சுப் போயிட்டா..” கத்தினாள்.

“என்னடி ஆச்சு ஒனக்கு.ரொம்ப கிறுக்குப் புடுச்சா போலத்தான் என் பின்னாடி சுத்தற”

சிரித்தாள் அம்மா.சிரிக்கும் போது மேல் உதடு சற்று பட்டையாகி பற்களோடு ஒட்டி வசீகரமாக இருக்கும்.யாராக இருந்தாலும் வசியப்பட்டு பதிலுக்கு புன்னகைக்காமல் இருக்க முடியாது.

“அம்மா.. நைட்டு டிஸ்கஸ் பண்ணினமே.!கல்யாணத்துக்கு அப்பறம் நீயும் அப்பாவும் என்னோட டெல்லில செட்டில் ஆவறதப் பத்தி… அது…!”

இடுப்பில் கைவத்தபடி ஜனனியை முறைத்தவாறு நின்றாள் அம்மா.

“அதெல்லாம் நடக்காத கத.கொழந்த பொறந்த பிறகு பாத்துகிடறத்துக்கு வேண ஒத்தாசயா ஒரு வருஷம் இல்லாட்டி ரெண்டு வருஷம் இருக்கலாம்.ஆனா பர்மனெண்டா நாட் பாசிபிள்.நீயே ஆள் வச்சு பாத்துகிட்டு ஆபிஸ் போக வேண்டிதான்”

”ப்ச்.. போம்மா”

“க்கும்.இங்க இருந்ததான் நான் பிளாக் அண்ட் வொயிட் அம்மாவா இருக்க முடியும்”

“ பின்னிட்ட மிஸஸ் விசாலாட்சிமுருகானந்தம்.சூப்பர் சிக்ஸ்”

ஜனனி வீடு அதிர சிரித்தாள்.

“இன்னும் குளிக்கலயா?சீக்கிரம் குளி.எல்லாரும் ஒண்ணா உக்காந்து சாப்டலாம் பின்னாடி பேசலாம்” பேச்சை மாற்றி செருப்பை ஸ்டாண்டில் உதறும்போது கணுக்காலில் கொலுசு சிணுங்கியது.

அம்மாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள்.புதுப் புடவை அம்மாவை தனியாக எடுத்துக் காட்டியது.

அம்மா ரொம்ப குண்டும் இல்லை ஒல்லியும் இல்லை.ஐம்பதை நெருங்கும் வயதிலும் கட்டு விடவில்லை.அளவான மார்பகங்களும் பின் பக்கமும் ரொம்ப புடைக்காமல் புடவைக்குள் கச்சிதமாக அடங்கி கவர்ச்சியாக இருந்தாள்.

ஜனனியை விட கூடுதல் நிறம். தலையில் ஒரு நரை கிடையாது.பூச்சரம் எப்போதும் இருக்கும்.உடுத்தும்உடைகள் அனாவசியமாக எங்கும் அசக்கு புசக்கு என்று தொங்காது.

பிளாக் அன்ட் வொயிட்டில் இருக்கும் அதே எளிமை நேரிலும் தெரியும். எப்போதும் புடவைதான்.ஜனனி வந்ததிலிருந்து புதுப் புடவைகள்தான் நிறைய உடுத்துகிறாள்.

மூன்று நாளாக அம்மாவை கவனிக்கிறாள்.

பளிச்சென்று வெளியே போகிறாள் வருகிறாள்.அம்மா இப்படி அடிக்கடி வெளியே போவது ரொம்ப குழந்தைத்தனமாகப்பட்டது.அதே சமயத்தில் பிடிக்கவும் செய்தது.

போகும்போது கையில் விதவிதமாக குட்டி பர்ஸ் அல்லது ஹேண்ட்பேக். செல்போன்.ஏதோ யோசித்தப்படி திரும்பி வருவாள்.மீண்டும் போவாள்.சில சமயம் அப்பாவுடனும் போவாள். வெளியே போகாத தருணங்களில் இருவரும் ஏதோ அசட்டுத்தனமாகச் சிரித்துப் பேசியபடி புழங்குகிறார்கள்.விடிய விடிய தன்னுடன் அரட்டை.

ஒரு குறைச்சலும் இல்லை அம்மாவிற்கு.இதே அப்பாவித்தன முகத்துடன் மூத்த அக்காக்கள் இருவருக்கும் திருமணம் செய்து செட்டில் ஆக வைத்துவிட்டாள்.

அம்மாவைப் பார்க்கப் பார்க்க பொறாமைதான் தலையில் ஏறியது.

.“ ஏய்…பிளாக் அண்ட் வொயிட் அம்மா விசாலாட்சிமுருகானந்தம்! எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்ல நாம ரெண்டு பேரும் மாத்திக்கலாமா?நீ இடத்துக்கு வா நா உன்னோட இடத்துக்குப் போறேன்”

”என்னாங்க எனக்கு திருஷ்டி சுத்திப்போடுங்க.உங்க பொண்ணு எம் மேல காண்டு வச்சிட்டா.குல தெய்வம் ராஜராஜேஸ்வரி எல்லாத்தையும் பொடிபொடியாக்குமா” மேல் நோக்கிக் கைகூப்பிவிட்டு “சீக்கிரம் குளிச்சிட்டு வா.. சூப்பர் சாப்பாடு இன்னிக்கு”.

ஜனனி குளித்துவிட்டு வந்தாள்.அப்பா, ஜனனி, அம்மா மூவரும் சாப்பிட உட்கார்ந்தார்கள்.

”நானும் வேலைக்குப் போனாதான் சமாளிக்க முடியும்.ஒரு ஸ்டேட்டஸ்ஸோட இருக்க முடியும்.இவ்வளவு சம்பளத்த எப்படி விட்றது”கெஞ்சலாகக் கேட்டாள்.

” இதே பல்லவிதான் திருப்பி திருப்பிப் பாடற.ஒரு வருஷம் இல்லாட்டி ரெண்டு வருஷம் கூட இருந்து குழந்தையப் பாத்துக்கலாம்.அப்படியே கத்துக்கிட்டு நீ டேக் ஓவர் பண்ணிக்க அவ்வளதான்.இது ஒண்ணும் பிரம்ம வித்த இல்ல”

”நீனும் அதே பல்லவிதான் பாடறே”

“வேற எதுவும் மாத்திப் பாடமுடியாது.இதான் உண்மை.” அம்மா எழுந்து சமயலறைக்குப் போனாள்.

“புரியதும்மா.புரியாம இல்ல.கல்யாண நிச்சியம் ஆனதிலிருந்து என்னவோ ஒரு பயம். ஒரு செண்டிமெண்ட்.சரிம்மா..நீயும் அப்பாவும் வந்து மூணு வருஷம் அப்படியே எக்ஸ்ட்ரா ஒரு அரை வருஷம் இருந்து கொழந்த பொறந்தா பாத்துக்கோ.ஓகே வா”

“ஓகே …ஓகே டபிள் ஓகே” அம்மாவும் அப்பாவும் குரல் கொடுத்தார்கள்.

கல்யாணமும் நடந்தது.குழந்தையும் பிறந்தது. டெல்லியில் இப்போது அப்பாதான் குழந்தையைப் பார்த்துக்கொள்கிறார்.

அம்மா கல்யாணத்திற்கு முன்பே பிளட் கேன்சரில் இறந்து போனாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *