கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 24, 2016
பார்வையிட்டோர்: 13,107 
 
 

வீடு முழுவதும் அலங்காரத் தோரணங்கள். வண்ண வண்ண பலூன்கள்.

கலர் விளக்குகள் கண் சிமிட்ட..

“ஹேப்பி பர்த் டே டு நேத்ரா’ என்கிற ஆங்கில தர்மாகோல் வாசகங்கள் பளிச்சிட…

“ஓ இன்று நேத்ராவின் பிறந்த நாள்’.

கற்பகத்தின் மகள் நேத்ரா.

பன்னிரண்டாம் ஆண்டு பிறந்த நாள். குறிஞ்சி மலர் பூத்தது போல் பூத்த மலர் நேத்ரா. கண் மலர் கற்பகத்தின் கண்ணம்மா மலர்.

பிறந்த நாள்அந்த ஹாலின் நடுமையத்தில் தலைக்கு மேலே கலர் காகிதங்கள்.

மின் விசிறி காற்றுக்கு ஏற்ப சலசலக்க, அலங்கரிக்கப் பட்ட டேபிளில் ஆர்டர் செய்து வரவழைக்கப்பட்ட ப்பேஸ்ட்ரீ கேக்கின் மீது சாக்லட் கவரிங்கில் வெனிலா வெள்ளை எழுத்துக்களில் “ஹேப்பி பர்த் டே டு நேத்ரா’ வாசகங்கள் ஐஸிங்கில் பொறிக்கப்

பட்டிருக்க, பன்னிரண்டு மெழுகுவர்த்திகள் காத்திருக்க இடை இடையே கேக்கில் பதிக்கப்பட்டிருந்த செர்ரி பழங்கள் எட்டிப் பார்க்க, உறவுகள் மொத்தமும் கைத் தட்டக் காத்திருந்த வேளை அது.

நேத்ராவின் சில குறிப்பிட்ட தோழிகள் மட்டுமே வந்திருந்தனர்.

நேத்ரா, ரெஸிடன்ஸி ஸ்கூலில் படிக்கிறாள். ஒவ்வொரு வருடமும் பள்ளி விடுமுறை இல்லாத நாட்களில் தான் அதுவும் தேர்வு நேரத்தில் தான் இவள் பிறந்த நாள் வரும். குறிப்பிட்ட சிலரைத் தவிர பாக்கி பேர் வருவது சிரமம். விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நேரத்தில் கேக், சாக்லட், பிஸ்கட் என்று எடுத்துப் போய் அந்தப் பள்ளி வளாகத்தையே தன் பிறந்த நாள் கொண்டாடும்படி செய்து விடுவாள்.

“”ஏம்மா என்னை இப்படி எக்ஸாம் சமயத்திலே பெத்தே? லீவு நாளா இருந்திருந்தா என் பிரண்ட்ஸ் அத்தனை பேரும் வந்திருப்பாங்க இல்லை”

ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் இவள் தன் தாயிடம் வழக்கமாகக் கேட்கும் கேள்வி தான் இது.

கற்பகம் சிரிப்பாள். அம்மாவிற்கு சிரிப்புத்தான் அழகு.

“”அம்மா நீ ரொம்ப அழகா இருக்கே. úஸா ப்யூட்டிபுல். ஏம்மா உன் கண்ணு போல என் கண் அத்தனை பெரிசா இல்லை?”

இதற்கும் கற்பகம் சிரிப்பாள். இது விளம்பரக் கேள்வியல்ல. விரும்பிக் கேட்கப்பட்ட கேள்வி என்பது அம்மாவுக்கும் தெரியும்.

“”நீ என் கண்ணம்மா… இப்போ கண் எப்படி இருந்தா என்ன?”

தாய்மைக்கு உரிய பரிவு. பிரதிபலனை எதிர்பாராத தாய்மை.

அதோ அதோ நேத்ரா வருகிறாள், தன் தாயின் கைப் பிடித்து வருகிறாள்.

புத்தம் புது பட்டுப் பாவாடை, அரை அடிக்கு ஜரிகை பார்டர் மஞ்சள் கலரில் அரக்கு பார்டர். முதல் நாள் தான் இவள் கடை கடையாகப் போய்ப் பார்த்து வாங்கிய தங்க லாங் செயின் வைர பெண்டண்ட்டுடன் ஓர் அம்பாள் விக்ரஹம் போல நேத்ரா நடந்து வருகிறாள். அடிக்கடி அவள் கண்களில் அணிந்திருக்கும் கண்ணாடி மட்டும் கழன்று விழுகிறது. அதைச் சரி செய்தபடி நடக்கிறாள் நேத்ரா. புதிய கண்ணாடி பிரேம். ஆப்டிகல்ஸ் போய் சரி செய்ய வேண்டும். நேரம் கிடைக்கவில்லை. இந்தப் பிறந்தநாள் விழாவை ஏற்பாடு பண்ணுவதற்கே நேரம் சரியாகி விட்டது.

அனைவரும் கை தட்ட கற்பகம் கனவு கலைந்தாள்.

பன்னிரண்டு மெழுகு வர்த்திகள் சுடர் விடுகின்றன.

பரந்தாமனும் கற்பகமும் ஆளுக்கு ஒரு பக்கம் நிற்க, அனைவரும் ஹேப்பி பர்த் டே வாசகம் கூறி கை தட்ட நேத்ரா கேக் வெட்டி முடிக்கிறாள்.

நேத்ரா சுற்றும் முற்றும் பார்க்கிறாள். இன்னும் இந்த மீனா பாட்டி வரவில்லை. பாட்டி எப்பவுமே லேட் தான்.

இவளைப் பள்ளியில் சேர்க்கும் போதும் லேட்டாகத்தான் வந்தாள்.

பாட்டிக்கு கிராமத்தில் பெரீரீரீய பண்ணை வீடு உண்டு. கிட்டத்தட்ட ஒரு குட்டி ஜமீந்தாரிணிதான் மீனா பாட்டி.

மாடு, பண்ணைத் தோட்டம்…. இவள் தன் தாயுடன் எப்போதாவது அங்கு போவாள். அந்த இயற்கை வளம். தென்னை மரங்களுக்கு சலசலத்து

ஓடும் வாய்க்கால் தண்ணீர். அதில் காலை நனைத்தபடி இருக்க இவளுக்கு ரொம்பப் பிடிக்கும். பூத்துக் குலுங்கும் தோட்டம். ரோஜாக்களும், மல்லிகைச் செடிகளும் செண்பக மலர்களும் கும்மென்று மணம் பரப்ப தோட்டக்காரர் பறித்துப் போடும் இளநீரை ஸ்டிரா வைத்துக் குடிப்பதும் இரட்டை மாட்டு வில் வண்டியில் பயணிப்பதும் இவளுக்கு மிகவும் பிடிக்கும்.

ஆனால் அம்மா அதிக நாட்கள் தங்க மாட்டாள்.

“”அப்பா காத்திருப்பார். உனக்கு ஸ்கூல் ஹோம் ஒர்க் இருக்கு” இப்படி ஏதாவது சொல்லி கிளம்பி விடுவாள்..

இந்தத் தடவை அம்மா வந்தாலும் வராவிட்டாலும் பாட்டியுடன் போய் ஆசை தீர தங்க வேண்டும். ஆனால் பாட்டியையே காணவில்லை.

“”கண்ணம்மா” அம்மா தான் கூப்பிட்டாள். இவளுக்கு வெட்கமாக இருந்தது. “”நான் பெரியவள் ஆயிட்டேன். இன்னமும் அம்மா என்னை இத்தனை பேர் எதிரில் கண்ணம்மான்னு கூப்பிடறாங்களே.” தனக்குள் நினைத்த நேத்ரா அம்மாவைப் பார்த்தாள்.

“”கண்ணம்மா உன் பிரண்ட்ûஸ கூட்டிட்டு டைனிங் ரூமுக்கு வா”

அனைவரும் ஒரே குரலில் “ஹேய்’ என்று கத்த அந்த இடத்தை உற்சாகம் தொற்றிக் கொண்டது.

நேத்ரா தன் கண்ணாடியைக் கழட்டி வைத்துவிட்டு விளையாடப் போனாள்.

இரவு மணி எட்டாகிவிட்டது.

இன்னமும் மீனா பாட்டி வரவில்லை. ஆயிரத்து ஓராவது தடவையாக பாட்டி ஏன் வரல்லை? என்று கேட்ட நேத்ரா விளையாடிய களைப்பில் அப்படியே ஹால் சோபாவில் உறங்கிப் போனாள்.

அந்த ஹாலில் இன்னமும் பிறந்தநாள் வாசனை மிச்சமிருந்தது. உடைந்த பலூன்களும் சிந்திய பதார்த்தங்களும். வேலைக்காரர்களும் விடைபெற்றுப் போய்விட்டனர்.

கற்பகம் தன் மகளையே அன்புடன் பார்த்துக் கொண்டிருக்க யாரோ காலிங் பெல் அடித்தார்கள். மகளின் தூக்கம் கலைந்துவிடக் கூடாதே என்கிற கவலையுடன் அவசரமாக வாசலுக்கு ஓடினாள் கற்பகம்.

வந்தது அம்மா தான்!

“”ஏம்மா இத்தனை லேட் பண்ணிட்டே பாவம் நேத்ரா தான் கேட்டுட்டே இருந்தா..”

அம்மா பேசவில்லை.

“”ஏம்மா… சீக்கிரமா கிளம்பி பொறந்த நாளுக்கு வந்திருக்கலாம் இல்லை?”

அம்மா வாய் திறந்தாள்.

“”ஆமா போ பெரிய பொறந்த நாள்”

“”ஏம்மா நேத்ரா மேலே உனக்கு இத்தனை கோபம்? கிராமத்தை விட்டுட்டு வான்னாலும் வர மாட்டேங்கறே. சரி டிபன் எல்லாம் இருக்கு”

“”நான் பார்ம் ஹவுஸிலே இருந்து வரும் போதே சாப்டுட்டேன்”

“”சரி… ஸ்வீட்டாவது”

“”சும்மா இரு. நீ போய்த் தூங்கு. நான் கொஞ்ச நேரம் டி வி பாத்துட்டு என் ரூமுக்குப் போறேன். பொண்ணோட பொறந்த நாளுக்கு ஓடி ஆடி வேலை செஞ்சிருப்பே”

அம்மா குரலில் ஒலித்த ஏளனம் புரிந்தது.

“”வயத்துலே பொறந்த குழந்தை ஊனமா பொறந்தா வேற வழியில்லை ஏத்துக்க வேண்டியது தான். ஆனா எங்கோ ஒரு அனாதை ஆஸ்சிரமத்திலே இருந்து தத்து எடுத்த குழந்தையை ஒண்ணரை கண்ணாகவா தத்து எடுத்துக்கணும்?”

“”உஸ்… மொள்ளப் பேசும்மா. நேத்ரா முழுச்சுக்கப் போறா”

“”இனிமே நான் என்ன புதுசா பேசப் போறேன் இத்தனை வருஷமா பேசினது தான்”

இனியும் தான் அங்கிருந்தால் அம்மா இதையே தான் பேசுவாள் என்று நினைத்த கற்பகம், நேத்ராவைத் தூக்கிக் கொண்டு தன் அறைக்குப் போனாள்.

அவளுக்கு அந்த நாட்கள் நினைவுக்கு வந்தன.

பெயர் தான் கற்பகம். வேண்டிய வரம் தரும் மரம். ஆனால் இவள் மலட்டு மரமாக இருந்தாள். திருமணமாகி பத்து வருடங்களுக்கு மேலாகியும் தாயாகும் பாக்கியம் இல்லை. எத்தனையோ மருத்துவ பரிசோதனைகள்… காத்திருப்புக்கள்

பூஜை புனஸ்காரம்.. தானம் தர்மம்… ஊஹும்… எதுவும் பலன் தரவில்லை.

அம்மாவும் தன் பங்கிற்கு யாகம், ஜோதிடம்,

பரிகாரம், கோவில் என்று தன் பணிகளைச் செய்து கொண்டிருந்தாள். கடைசியில் இவள் கணவரும் இவளும் அந்த முடிவுக்கு வந்தார்கள். ஓர் ஆர்பனேஜில் பெயரை பதிவு செய்து விட்டுக் காத்திருந்தார்கள். இரண்டு வருடக் காத்திருப்புக்குப் பிறகு அவர்களிடமிருந்து அழைப்பு வந்தது.

கணவரும் மனைவியும் ஓடினார்கள்.

ஒரு பெண் குழந்தை ஆறுமாதமே ஆனது. இன்னொரு குழந்தை ஆண் மகவு ஒரு வயதுக் குழந்தை.

ஆனால் இரண்டுமே மாற்றுத் திறனாளி குழந்தைகள். பெற்றோர்களால் கை விடப்பட்ட குழந்தைகள். பெண் குழந்தைக்கு பார்வை சரியில்லை. பிறக்கும் போதே கண்ணாடி. இப்போது சர்ஜரி செய்ய முடியாது. கண்ணாடி பவர் மாற்றி சொட்டு மருந்து போட்டு வந்தால் பன்னிரண்டு வயதில் சர்ஜரி செய்தால் கண் பார்வை நார்மலாகும் என்று மருத்துவ அறிக்கை கூறியது.

இன்னொரு குழந்தை போலியோவால் பாதிக்கப் பட்ட ஆண் குழந்தை.

இவள் அந்தப் பெண் குழந்தையைத் தொட்ட போது அது சிரித்தபடி இவள் கைகளைப் பற்றிக் கொண்டது. பெண் குழந்தை பாசமாக இருக்கும்.

இவள் அந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்.

அடிக்கடி கண்ணாடியைக் கழட்டி வீசி எறியும் அதோடு போராடினாள். அதன் அசிங்கம் துடைத்து அமுதூட்டி மருந்து தந்து செக்அப் போய் தன் தாய்மைப் பணியை தவமாவே நடத்தி வந்தாள். மற்றபடி நேத்ராவால் எந்தத் தொல்லையும் இல்லை. படிப்பில் முதலாவதாக வந்தாள். பள்ளி விழாக்களில் கலந்து கொண்டு பரிசுகளுடன் வந்தாள்.

குழந்தையைப் பார்க்க வந்த அம்மா தான் ஆடிப் போய் விட்டாள்.

“”போயும் போயும் ஒரு பார்வைக் குறையுள்ள குழந்தை தானா கிடைத்தது?”

மகளின் மீது இருந்த கோபம் நேத்ரா மீது வெறுப்பாக மாறியதும் இதனால் தான். ஆனால் நேத்ரா மீது தன் உயிரையே வைத்திருந்தாள். கற்பகம் நேத்ராவை தத்து எடுத்த நாள் தான் இவளைப் பொறுத்தவரை நேத்ராவின் பிறந்த நாள்.

ஏதேதோ யோசித்தபடி கற்பகம் உறங்கிப் போனாள்.

விடிந்தது.

கையில் பாலுடன் நேத்ராவின் அறைக்குள் நுழைந்த கற்பகம் திடுக்கிட்டாள்.

படுக்கை காலியாக இருந்தது. இந்தக் காலை வேளையில் நேத்ரா எங்கே போனாள்?

“”லீவுக்கு வந்தால் என்னை ஒன்பது மணிக்கு முன்னால் எழுப்பாதே. நான் லீவுலே வந்திருக்கேன்” என்று சொல்லும் நேத்ரா இந்தக் காலை நேரத்தில் எங்கே போனாள்? இரவு சாப்பிடாமல் உறங்கி விட்ட மகளுக்காக நேரத்தில் பால் எடுத்து வந்த கற்பகம் திகைத்தாள்.

வீடு முழுவதும் தேடிய கற்பகம் நேத்ராவைக் காணாமல் திகைத்து எதிரே வந்த தன் தாயைப் பார்த்து, “”அம்மா நேத்ராவைப் பாத்தியா?” என்று கேட்ட போது அம்மா திகைத்தாள்.

“”நே.. நேத்ரா நேத்திக்குக் கூட என் ரூமுக்கு வந்து” என்றவள் வாக்கியத்தை நிறுத்திவிட்டாள்.

“”என்னம்மா சொல்றே? நேத்ரா உன் ரூமுக்கு வந்தாளா? எப்போ?”

வேறு வழியில்லை. உண்மையைச் சொல்ல வேண்டிய கட்டாயம்.

நேற்று இரவு பத்துமணி சுமாருக்கு அரைத் தூக்கத்தில் இருந்த தன்னை யாரோ தொட்ட மாதிரி உணர்ந்து திடுக்கிட்டுக் கண் விழித்தாள் மீனா.

எதிரில் நேத்ரா.

“”நேத்ராவா? தூங்கல்லை?”

“”ஸாரிம்மா லேட்டாயிடிச்சு”

“”பாட்டி நான் உங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைச்சு தூங்கற மாதிரி இருந்தேன். ஆனா நீ நீங்க எனக்கு ஸர்ப்ரைஸ் கொடுத்துட்டீங்க.. பாட்டி. நான் யார் பாட்டி என்னைப் பத்தி… எல்லாம் சொல்லுங்க..” என்றவள் பெரிதாக அழ ஆரம்பிக்க..

பதறிப் போன மீனா அவள் கதையைக் கூற…

தன் தாய் சொன்னதைக் கேட்ட கற்பகம் கலங்கிப் போனாள்.

“”என்னம்மா இது குழந்தைகிட்டே என்ன சொல்றதுன்னு இல்லையா? அவ கோவிச்சுட்டு எங்கே போனாளோ? தெரியலையே..”

“”இல்லை அவ திடீர்ன்னு கேட்டதும் திகைச்சுப் போயிட்டேன்”

கற்பகம் கவலைப்பட்டாள். தன் கணவர் எழுவதற்குள் நேத்ராவைக் கண்டுபிடிக்க வேண்டும்.

“”இரு. இங்க தான் எங்கேயாவது இருப்பாள்.. வா… தேடிப் பாக்கலாம்”

இருவரும் வீதிக்கு ஓடினார்கள். பால்காரர்கள்.. பேப்பர்காரர்கள்.. குப்பை பொறுக்குபவர் எல்லோரும் கிடைத்தார்கள் ஆனால் நேத்ராவைக் காணவில்லை. “கடவுளே’

கற்பகம் மனத்துள் அழுதாள். பார்த்துப் பார்த்து கட்டிய மாளிகை இப்படி நொடிக்குள் பாழடைந்து விட்டதே.. யாரைக் குறை சொல்வது?

ஆலய மணி ஒலித்தது. இவளும் ஓர் அனாதை தான். அனாதைகளுக்கு ஆண்டவன் தான் துணை.

“கடவுளே… என் நேத்ராவைக் கண்டுபிடித்துக் கொடு’

இவர்கள் கோவில் வாசலை நெருங்க நெருங்க… அதோ அதோ..நேத்ரா யாரோ ஒரு சிறுவனுக்கு என்னமோ கொடுத்து கொண்டிருக்க…

“”நேத்ரா” என்று அலறிய கற்பகம் தன் கண்ணம்மாவைக் கட்டிக் கொண்டாள்.

“”என்னம்மா இப்படிப் பண்ணிட்டே? எங்கிட்டே சொல்லிக்காம”

பேசியவள் மகளின் பார்வையைப் பார்த்து அடங்கிப் போனாள்.

“நீ மட்டும் எங்கிட்டே எல்லாத்தையும் சொன்னியா?’ என்றது அந்தப் பார்வை.

“”போறுமா இன்னும் வேணுமா?” என்று நேத்ரா அந்தச் சிறுவனிடம் கேட்டபோது தான் கற்பகம் அவனைப் பார்த்தாள்.

கால்கள் இரண்டும் போலியோவால் சூம்பிக் கிடக்க ஒரு சக்கர வண்டியில் அமர்ந்தபடி கையில் நேத்ரா கொடுத்த கேக்குடன் அந்தச் சிறுவன் அமர்ந்திருந்தான்.

“”போதும் சிஸ்டர்” என்றான் அவன்.

“”அம்மா இவன் பேரு கண்ணனாம். பாவம் அப்பா அம்மா யாருமே இல்லையாம்.. இங்கே தான் வந்து பிச்சை எடுக்கறானாம். இவனை நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனா என்னம்மா? எனக்கு வீட்டிலே விளையாட யாருமே இல்லை. லீவுக்கு வந்தா நான் இவனோட வீடியோ கேம்ஸ் விளையாடுவேன்”

கற்பகம் திகைக்கிறாள். ஒரு வேளை இவன் அன்று இவள் புறக்கணித்த அதே போலியோ பையனோ? அவனும் இதே போல் எங்காவது பிச்சை எடுத்துக் கொண்டிருப்பானோ? ஒரு குழந்தைக்கு வாழ்வு கொடுத்ததாகப் பெருமைப் பட்டுக் கொண்டிருந்தாளே இவள். அந்தப் பெருமை எல்லாம் வெட்கத்திற்கும் வேதனைக்கும் உரியவை தானா?

மீனா பாட்டியும் பார்க்கிறாள்.

ஒரு மாற்றுத் திறனாளியைத் தன் நண்பனாக ஏற்கும் நேத்ராவின் மனம் இவளுக்கு இல்லையே. ஊனம் நேத்ராவின் கண்களில் அல்ல, இவள் மனத்தில் தான்.

நேத்ராவின் அருகில் வருகிறாள் மீனா.

அப்படியே அவளை இறுக அணைத்துக் கொள்கிறாள்.

– ஆகஸ்ட் 2015

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *