(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஆஹ்-ஹா! ஃபுல் ஹவுஸ் போல இருக்கே! ஒரு ஆளுக்கு ‘சீட்டு’ன்னா இத்தனை கூட்டம், இவ்வளவு ஆத்திரமா! (சிரிப்பு) நம்ம கஸ்டமர் அத்தனை பேரும் திரண்டு வந்துட்டாஹ போலிருக்கே! எல்லாம் காத்தய் யத் தேவர் ஏற்பாடு போலிருக்கு. கூட்டம் கூட்டிக் கும் மாளம் போடறதுலே அவருக்குத்தான் தனி குஷி. கலகலப் பான ஆசாமி. என்னதான் சீண்டுங்களேன் கோபமே வராது. மணல் பையாட்டம், எல்லோருடைய கோபம், ஆத்திரத்தையும், தாங்கிக்க அவர் மாதிரி ஆபீசிலே ஒரு ஆள் வேண்டியதுதான். ஃபேண்டா கான்ட்ராக்ட் அவரு எதிலேயும் அவர் லாபம் டையதுதானோ ? ஆனால் காணமாட்டார். கடைசியாகக் கணக்குப் பார்த்தால் அவர்தான் கோட்டை விட்டிருப்பாரு. காத்தய்யா ஏன் காத்திருக்கே? ‘கார்க் அவுட்’ ஆவட்டுமே! போணி நான் பண்ணணும்னு பாக்கரெயா? எனக்கு வேணாம். மார்லே சளி. வயசாயுடுத்தில்லே ! அதனால்தானே என்னை அனுப்பறாஹ!
அக்கவுண்ட் சார், நீங்கள் என்ன மாதவியா? மாலைக் கென்ன அவசரம். ஆட்டுக்குப் பூட்டி அனுப்பறாப் போல அறுபதிலே தான்கள பலியாச்சே! அதன் கொண்டாட்டந் தானே ஈதெல்லாம்! முன்னாலேதானே மாலை? பலியா னப்பறம் எதுக்கு? பொறுங்கோ, பொறுங்கோ, நான் பேசி முடிச்ச பிறவு யோசிச்சுப் போடுங்கோ. யோசனை தானாவே வந்துடும். நான் எல்லோரையும் ஒருமுறை. யார் யார் இங்கே, என்ன என்ன, ஏன் ஏன்னு கண்டுக் கறேன். எல்லாத்துக்கும் ஏன் உண்டு, தெரியுமில்லே !-
அட மாடச்சிகூட ஆஜரா? இன்னிக்கு நிச்சயமாக பாங்க் வாசலுக்குச் சாணி தெளிச்சிருப்பே. பெருக்கறது மொத்தம் இருபதுநாள் தேறாட்டாலும் சம்பளம் முப்பது நாளைக்கு. கட்டை விரல் மை வைக்க சம்பளப் பட்டியல் தேதி மட்டும் உனக்கு முன்கூட்டி எப்படித் தெரியுது? என் கையெழுத்து வேளைவரைக்கும் என் கண்ணிலேயே பட்டி யலைக் காட்டறதில்லை. ஏன் நிக்கறே குந்து. குந்தமாட் டையா? சரி நில்லு.
இதென்ன வெள்ளிப் பெருச்சாளியா? வாகனத்து மேலே உறை போட்டிருக்கு ! ஐய்யய்யோ ரேடியோவா? ஆளுக்கொத்தரா என் பெருமை அவங்க பெருமை பேசி முடிச்சப்புறம் கைத்தட்டல் நடுவே காமரா ‘க்ளிக்’ அடிக்க என் கையில் கொடுக்கத்தானே! இது யார் சதி? என்ன வேணும்னு என்னை முன்னால் கலக்கக் கூடாதா?
எனக்கு உடனே தேவை கபக்கட்டுக்கு நாட்டு மருந்து. எங்களுக்கே சொந்தமா அம்மி, ஆட்டுக்கல், ஒரு கயிற்றுக் கட்டில், கீழே உட்கார்ந்து உறவு மனுஷாளுக்கும், எனக் கும்பணம் பாக்கிப்பட்டவங்களுக்கும் விழுந்து விழுந்து கடுதாசு. எளுத ஒரு கணக்குப்பிள்ளை மேசை.
உங்களை இனிமேல் வாய்விட்டுக் கேட்க பண்டந்தானா இல்லை?
ஐயா, வேண்டாததைத் தொண்டையிலே திணிக்கா தீங்க. எனக்கு ரேடியோ வேணாம். என் வீட்டிலேயே நாலு இருக்கு கையிலே தூக்கிண்டு போற மாதிரி என் ஹிப்பி மவன்கள் போட்டா போட்டியிலே ஆளுக் கொண்ணு என் பணத்துலே தவணையிலே வாங்கி-இன் னும் தவணை தீரல்லே. ஆனால் எப்பவும் ‘ஆன்’ லேயே வெச்சிருக்காங்க. என் சம்சாரத்துக்குத் தனியா சமையல் மேடையிலே பாக்கட் சைசுல பாடிக்கிட்டேயிருக்கு. ‘சிலோன்’னுக்குத்தான் குழம்பு கொதிக்குதாம். சிலோன் குழம்பு, அட என் எசமானியம்மா இங்கே எப்போ வந்தா?
ஆரம்பத்திலேயே, கூட்டம் வேண்டாம்னு சிப்பந்தி களை கெஞ்சிக் கேட்டுண்டேன். ஆனால் அவங்க கேக்கல்லே. “ஏசண்டுக்கு ஏசண்டு நாங்கள் இப்படித்தான் செஞ்சுகிட்டு புது யூனி பாரம் போட்டுக்கிட்டு போட்டோ எடுத்து வீட்டிலே மாட்டிக்கிட்டு இருக்கோம்.”
“அப்பா, நான் சூட்டுக் கோட்டுப் போட்ட ஏஜண்ட் இல்லையே?'”
“நீங்கள் சொக்காயும் வேட்டியும்னா-அங்கவஸ்திரம் கூட இல்லே – நாங்கள் பாண்ட் போட்டுக்கல்லியா?”
அதற்கு மேல் அப்பீல் ஏது?
ஆகவே கூட்டத்தைக் கூட்டி இப்போ கோர்ட்டிலே நிக்கறோம்.
இந்த அம்மன் சன்னதி தெரு லாலாக் கடை அல்வாத் துண்டையும், நெய்க்கடலையும் தண்டனையாத் தின்னு
அதன்மேல், இன்னும் பாலின் பச்சை வாசனைகூடபோகாமல் பூபாலன் கடை அவசரக் காய்ச்சல் ‘பெசல்” காப்பியையும் விட்டுண்டே ஆகணுமா? ஆனால் எல்லாம் பேச்சு முடிஞ்சப்புறம்தான், நான் சொல்லிட்டேன்.
இன்று நான் ஒரு தீர்மானத்தோடு வந்திருக்கிறேன். இன்று முழுக்க முழுக்க என் பேச்சுதான். மத்தவங்களுக்கு இடம் கொடுக்கப் போவதில்லை. ஒத்திகை வைத்துக் கொண்டு வந்திருக்கும் கனவான்கள், பேச்சாளர் அனைவரும் உங்கள் தயாரிப்புகளை, பாவம், நடிப்பு உள்பட மறந்து விடுங்கள். இதுவரை நான் விட்டுக் கொடுத்ததெல்லாம் போதும் இது என் நேரம் இதில் யாருக்கும் பங்கு விடப்போவதில்லை. நான் எல்லோ ரோடும் பேசப் போறேன். எல்லோருடேயும் ஒரே சமயத் தில், இருக்கற நேரத்தில் பேசறது முடியற காரியமில்லை ஒப்புக்கறேன். ஆனால் பானை சோத்துக்கு ஒரு சோறு தொட்டுப் பாக்கரவன் தொட்டுப் பதம். தோளைத் பார்த்துக்கட்டும். இந்த நாளுலே தொட்டாலே பெரிசு. நெஞ்சு சுட்டால் இந்த நாளில் அதுக்கென்ன பேர்? தனித்தனியா பேரைச் சொல்லி பேரைக் கெடுத்துப் பானேன்னு நெனெச்சேன். ஆனால் இப்போ எல்லோ ரையும் பார்கறப்போ, மறுபடியும் எல்லோரையும் எப்போ பார்க்கப் போறேன்? மனம் மாறிப்போச்சு.
எப்படியும் நீங்க இங்கேதான். நான் எங்கேயோ? என் பேர் கெட்டால்தான் என்ன?
இதைச் சொல்றப்போ எனக்கு லேசாகக் கண்ணை மறைக்குது. கண்ணீரா? அந்தியா? அந்திலா? (அந்தில் பூச்சி). கண்ணுலே திடீர்னு சதை வளர்ந்து போச்சா? ஸ்விட் தெரியவில்லையே ! யாரேனும் விளக்கை-அட, சண்டை வாச்மேன் அய்யாவே போலீஸ்கார் உசரத்தில் நிக்காரே! ஐயா எப்போ வந்தீய? ஐயா, நீங்க நேரத்துக்கு வந்து இன்னிக்குத் தான்யா கண்டேன். இதுக்குநான் ஒரே வழியா வீட்டுக்குப் போறநாள் வரை காத்திருக் கலாச்சா? எல்லாரும் சிரிக்கிறீய. ஐயாவும் சிரிக்காரு, கறுப்பு திராட்சையிலே ரஸம் ஓடற மாதிரி, அவர் கன்னத்தில் சிவப்பு ஏறுவதும் ஒரு காக்ஷிதான். ஆள் வாட்டசாட்டம். என்னிக்குமே கம்பீரம்தான் என்னிக்குமே எனக்கு அவரைக்கண்டா அடிவயித்திலே கொஞ்சம் ‘ஐஸ்’ தான். ஏன்’ னு கேளுங்க. “கேக்கமாட்டீய; பேருக்குக் கேளுங்க. கேட்டால்தானே முழுப்பேச்சுக்குக் குஷி! வால் வளந்துட்டே போகும்! நீங்கள் இத்தனைபேரு கூட்டத்துக்கு வந்திருப்பது ஒரு குரலாச்சும் சாட்சியா காதுக்கு கேட்க வேண்டாமா? ஆ! அப்படித்தான் ‘ஏன்னு’ கேட்டது யார்? வாட்சுமேன் அய்யாவே! அது தான் முறை. சொல்லுதேன்; கேளுங்க.
எனக்கும் மாதத்தில் பாதி, ஆபீசில்தான் படுக்கை. உங்களுக்குத் தெரிஞ்ச விசயம். ஏன்? சிப்பந்திகள் கடியா ரத்தின் முள்ளைப் பார்த்துச் செய்து, குறையாவிட்ட வேலையை முடிக்கறது யாரு? ‘ஏன்’னு கேட்டா, “டைம் ஓவர் ஸார். இன்னும் அழுத்திக் கேட்டால் ”ஓவர் டைம்!” தோசையைத் திருப்பிப் போடு. மண் வளமோ, எண்ணெய் வளமோ. இந்த ஊரே தோசைக் குப் பேர்போனதாச்சே! அதுவும் செங்கோட்டைக் கல்லில் ஒரு சுத்து சுத்தினாலே, பிசுறில்லாமல் வட்டம் கல்லையடச்சுப் பட்டாபட்டமா அம்மையார் பாட்டி கதையிலே வருமே. எண்ணையே வேணாம். தண்ணிலேயே வார்க்கலாம், மெத்து மெத்துனு. எங்கேயோ ஆரம்பிச்சு, சுத்தி வளைச்சு எங்கேயோ வந்தூட்டேனா? ஏன்? என்னென்னவோ பேசறோம். தோசைக்கு இடமில்லாமல் போச்சா? வேளைக்கு நாலு அஞ்சு; ஒண்ணு சட்னி ஒண்ணு சாம்பார், ஒண்ணு ஊறுகாய் வண்டல், ஒண்ணு சுண்டக்கீரை, கடைசியில் மிளகாய்த்தூள் மேலே ஆடைத் தயிர் அப்பவும் இலையை மடிக்க மனசில்லை.
அப்போ, அப்படியே நான் ஓட்டி, கொடுத்தாலும் எச்-ஓ-விலிருந்து எனக்கு ஒலை விடறான்களே! “என் அனுமதியில்லாமல் கொடுத்ததால் இந்தத் தடவை உம் சம்பளத்தில் பிடிப்பு அடுத்ததடவை நடவடிக்கை. அதை யும் நான் நடு ஹாலில் தான் தேங்காய் உடைக்கிறேன், எல்லாரும் கேட்க, எனக்குத்தான் வெட்கம், மானம் பொத்தி வைக்கிறது ஒண்ணும் கிடையாதே! ஆனால் அதுபற்றியும் நம் நண்பர்களுக்கு அக்கறை கிடையாது. “பார்லிமெண்ட்டுவரை நீங்கள் தானே சார் (நீங்கள்னா நீங்களா, உங்கள் அதிகார வர்க்கம்) பதில் சொல்லணும்! எங்களுக்கு வேளைதான் கணக்கு. வேளை எங்கள் பொறுப்பு.”
ஆகையால், கவலையாலேயே தூக்கங்கெட்டு, தந்தி தபாலும், தொலைபேசியும் சமாளிக்க முடியாமல். நடுராத்திரியில் டைப்ரைட்டருடனோ லக்கங்களுடனோ போராடிக் கொண்டிருக்கையில், எதுக்கேனும் வாச்மேனை கூப்பிடாமல் இருக்க முடியுமா? அநேகமாய் அவர் கூப்பிட்ட குரலுக்கு இருக்கமாட்டார், சொல்லிக்கொண்டு போகும் கெட்ட பழக்கம் இருந்தால்தானே? கீழே கதவு படீர் சத்தம் கேட்டு, நான் கேட்டால், இப்பதான் சுக்கு வெள்ளம் குடிக்கப் போனேன்னு சிரிப்பார். நான்சொல்றதுதான் பதில்.
பதிலைச் சோதித்தால் உங்களுக்குத்தான் தொந்தரவு என்று அந்தச் சிரிப்புக்கு அர்த்தம். அவர் சிரிப்பில் எனக்கு. பல் என்ன எப்படியோ ஒரு மயக்கம் கண்டுபோச்சு. வரிசை! தேங்காய் உடைச்சாப்போல என்ன வெண்மை! எனக்கே இத்தனைக்கும் துலக்குவதுக்கு சாம்பல்தான். தெரியும் அப்படியே கூப்பிட்ட குரலுக்குச் சமயத்துக்குக் கேட்டபின் கட்டடத்துல இருந்தா குறட்டையைக் கலைக்க மனசு வருவதில்லை. த்தனையும் தாண்டிப் பதில் கொடுத்துப் படியேறி அவர் வரப்போதான் எனக் குப் பயம். பார்டர் வாடை, புரட்சிகளே எத்தனை நடந் திருக்கின்றன அதே சாக்கில்.
ஐயாமார்களே, நான் ஊருக்கு வந்த புதுசில் ஐயா வைப்பத்தி கதையெல்லாம் கேட்டிருக்கேன். ஆயுசு காலத் திலேயே கதாநாயகன் ஆவது ‘சாதா’ அல்ல என் கண் ணாலேயே பார்த்தேன். இந்த ஊரில் மதவெறிக் கலகத் தில் இந்த வட்டாரத்துக்குப் பலத்த கட்சி, கடைத்தெரு வுக்குத் தீ வைத்து சூறையாடினப்போ, ஐயாவின் தீரமும், தைரியமும், அமைதியும், வாசல்லே அவர் நின்னிருந்த உய ரமும் சொல்லப்போமா?
நான்தான் பிராம்மணன் தொடை நடுங்கி, வயத்தில் நெருப்பைக் கட்டிண்டிருந்தேன்.
“ஐயா, கவலையே படாதீங்க. என்னைத் தாண்டித் தான் நீங்க. என்னைத் தாண்டிடுவாங்களா? நடந்த தென்னவோ அப்படித்தான் ஊரே பத்தி எரிஞ்சது- (இதென்ன நான் சொல்லறது. உங்கள் ஊரைப்பத்தி உங்களுக்கே – பத்தவெச்சதும் நீங்கதான், அணைச்சதும் நீங்கதானே!) இது அஞ்சு வருஷத்துக்கு ஒரு தடவை அடிக் கிற காத்தாமே. அப்படித்தானா!-வாச்மேன் ஐயாவைத் தாண்டறத்துக்கு ஆள் ஏது? இது தவிர அவருக்கு ஆடை கொடுத்த ஐயா’ன்னு ஒரு பேர் உண்டாமே! யாரோ பிறவி மூளைக் கோளாறு ஒருத்தி ஆடையைக் காவாலிக் கூட்டம் ஒண்ணு உரிச்சு சிரிச்சப்போ, ஐயா உள்ளே புகுந்து தன் வேட்டியை அவிழ்த்து அவள் மேலே சுத்தி, அத்தனை பேரையும் வெறுங்கையாலேயே நச்சு நச்சென நச்சி ஓடவெச்சாராமே! ஈதெல்லாம் என்ன சாமானியமா’ ஆனால் அது என்னவோ தெரியல்லே என்னை மட்டும் ஏன் செத்த பாம்பாப் பார்த்துட்டார்?
செத்த பாம்புன்னு சொல்றோம். ஆனால் அது லேசாப்படலே எனக்கு. ஏன்னு கேளுங்க. என் அப்பா ஒரு தரம் பாம்பு அடிச்சுப் பார்த்தேன். பாம்புக்கோ கண் இமைக்கறதுமில்லே. மூடறதுமில்லேன்னு உங்களுக்குத் தெரியாததில்லே. அடிமேல் அடி விழ, அந்தக் கண்ணுலே வலி, திகைப்பு, அப்புறம் துயரம். இது எல்லாத்தோட, எல்லாத்தையும் தாண்டி ஒரு கேலி. ‘பாரு நான் செத்தாலும் முழிச்சிண்டிருக்கேன். இதெல்லாம் என் நெனப்புத்தான்னாலும் என் வரைக்கும் அது உண்டு தானே!
நான் வந்த புதுசில் ஊர் வளமாய் இருந்தப்போ, மலிவா கிடைக்கிறப்போ – நெல் பிடிச்சு (அது என்ன மலிவோ இன்றைக்கு நேற்று மலிவு என்கிற கணக்கில்) என் வீட்டில் எலி வேட்டை ஆட முடியாமல் இவரிடம் ஒப்படைச்சிருந்தேன். நான் வந்த ராசி, வானமும் வேளை கெட்டது. வயலும் காய்ச்சல் கண்டது. ஏழை, வயிறு கழுவ தாலியை அடகு வைக்கிறான். எங்கள் அரிசி டின்னும் காலி ஆயிட்டுது.
“ஐயா வாச்மேன், நெல்லை அரைச்சுக் கொண் டாங்க’ கொண்டு வந்தார். நெல்லுக்கும் திரிச்சு வந்த அரிசிக்கும் அளவு, அளவுமீறிக் குறையுது. எனக்குத் திகைப்பு. என் சம்சாரத்துக்கு அங்கலாய்ப்பு, வாச்மேன் ஐயாவுக்கு லேசான புன்சிரிப்பு: நான்தான் ஏற்கெனவே அதில் மயங்கிக் கிடக்கேனே. “நான்தான் இப்போ ஒப்புக்கிடறேனே. விதை நெல்லை வீட்டிலே சாப்பிட் டாச்சு. விளைஞ்சப்புறம் கொடுத்துக்கலாம்னு உங்கள் நெல்லில் எடுத்து வயலில் தூவிவிட்டேன். ஆனால் அது என் எண்ணமோ உங்கள் அதிர்ஷ்டமோ, மழையின் சூது, அத்தனையும் சாவியாய்ப் போச்சு. நான் எடுத்த தென்னவோ அஞ்சு மரக்கால்தான். நான் நெனச்சது ஒண்ணு; நடந்தது ஒண்ணு. ஒழுங்கா விளைஞ்சிருந்தா எடுத்த சோடை தெரியாமல் ஒண்ணுக்கு ஒன்பதா திருப்பியிருப்பேன். ஆனால் அடுத்தவன் சொத்துக்கு மரக்காலுக்கும் மூட்டைக்கும் ஒரே நியாயந்தான். நான் தான் ஒப்புகிடறேனே!’
ஆனால் நான் தை நெல்லாப் பாக்கல்லே. மரக்காலுக்கும், மூட்டைக்கும் வித்தியாசம் பார்க்கல்லே. எலிக்குப் பயந்து பெருச்சாளியிடம் கோட்டை விட்டதைப் பாக்கலே. தனியா வாச்மேன் ஐயா மேலும் நான் கோவம் கண்டு கொள்ள முடியாது. ஆனால் சமுதாயத்தில் நம்பி எப்படி எல்லாம் மோசம் போகிறோம். இந்த வயதில் துரோகத்தைச் செரிக்க முடியல்லே. இப்போத்தான், மனம் எல்லாரிடமும் ஆதரவு தேடுது. இதுலே ஒண்ணு கவனிக்கனும்.’ஐயா, யார் வீட்டுலேதான் எலி இல்லே’ன்னு ஐயா எதிர்வாதம் பண்ணியிருந்தால் நான் என்ன செய்ய முடியும்? நம்பித் தானே ஆவணும்! அதுலேதான் அவரையும் மீறி ஒரு நாணயம் பேசுதுன்னு கொள்றதா? அல்ல நியாயத்துக்கும் இப்போ நெஞ்சில அச்சமில்லேன்னு கொள்ளவா? அது தான் இன்னும் என் நெஞ்சைப் பிடுங்குது. ஆடை கொடுத்த ஐயாதான். எவ்வளவோ விஷயங்களில் பெரிய மனுஷன்தான். அவர் வெட்டி எத்தனையோ இளநீர் நான் சாப்பிட்டிருக்கேன். ஆனால் இதுமட்டும் ஏன் நெஞ்சில் முள் இடர்றது?
இத பாருங்க. எல்லோரும் கேட்டுக்கங்க இங்கே எல்லோருக்கும் தங்க மனசுதான். இல்லாட்டி இங்கே நான்
நான் இத்தனை நாள் ஒட்டியிருக்க முடியுமா? எனக்கு ங்கே ஒரு பெயர் நடமாடுது. எனக்குத் தெரியும்.’சாமி சுபாவத்திலே நல்லவர்தான். ஆனால் முன் கோபி. எல்லோரும் தன் பிள்ளையாட்டம் நம் நன்மைக்குத்தான் சொல்றாரு. திருப்பிக் கொடுக்க முடியாட்டியும் திருப்பிக் கொடுக்கணும்னு கெட்டி எண்ணத்தில் யாங்கிலே கடன் வாங்குங்க. நீங்க தவணை தப்பினால் கத்தாமல் என்ன செய்யன்னு? ஆனால் எந்தப் பிள்ளை இந்த நாளில் தகப்பன் பேச்சைக் கேட்குது சொந்தப் பிள்ளை கேட்குதா என்கிற வாழ்க்கையைப் பொது நியாயமாகவே கொணந் துட்டாங்க, அவ்வளவுதான், இதை நான் மாத்த எண்ணி னால் இதோ நின்ன இடத்துலேயே உங்க எதிரேயே மார் வெடிச்சு முடிஞ்சு போயிடனும். ஏற்கனவே கொஞ்சநாளா மார் படபடக்குது. நீங்க வேண்டிக்கிற வரை பொறுத்திருக்கமாட்டேன். இத பாருங்க, அடுத் தாப்போல நம்ப காத்தனாரை எடுத்துக்குவோம். நாலு சொல்லுக்கு இடையிடையே ‘ஐயா, நான் உங்க பிள்ளை மாதிரி’ன்னு சொருகிக்குவாரு. அவர் பேச்சில் கோட்டை விட்ட நேரத்தில் நான் கண்டவரை, அவர் எப்படி என் மகன் ஆவார்? எனக்கு அஞ்சு வயசுதான் சின்னவர் ஆனா ரிகார்டில் அவருக்கு எப்பவோ வயசு நாற்பதிலேயே நின்னுபோய் முள் நகரமாட்டேங்குது. ஏன்னு அவரும் பதில் சொல்ல முடியாது. அவரும் ஆயுசில் பாதிக்குமேல் தள்ளியாச்சு, எழுத்து வாசனையே இல்லாமே. இப்பத்தான் ஒரு வருடமா இடையன் கொம்பாட்டம் கையெழுத்து மட்டும் சம்பளப் பட்டியிலே போடறாரு. இதுக்கு ‘பெசலா’ இங்கீசு கத்துக்கிட்டாராம்.
“அப்பா காத்தய்யா அந்த மே மாசத்து ரிஜிஸ்டரை கொண்டு வாயேன் !” ‘இதோ’ன்னு சொல்லிட்டு மறைஞ் சுடுவான்.மே. அஞ்சாம் மாதமா? ஆறாம் மாதமா ? பச்சை அட்டையா? சிவப்பு அட்டையா? என்று கண்டு பிடித்துக் கொடுக்க எனக்குத் தலைமறைவாய் அவர் ஒரு கிளை ஆபீஸ் நடத்தறார். என் கையில் ரிஜிஸ்டரை அவரேதான் கொண்டு வந்து கொடுப்பார். இதுபோல் காத்தனாருக்குத் தனி சர்வீஸ் செய்து அவர் தலையில் எத்தனை காப்பி, எத்தனை நெய்க் கடலை, அல்வாத் துண்டுகூட அரைத்திருக்குமென்று எனக்கு தெரியாதென்று அவர் நினைத்திருக்கிறார். சிரிக்கிறீங்க. அவர் தலையை அரைச்சவங்களும் சேந்து சிரிக்கிறீங்க, சிரியுங்க, சிரிக்காமல் என்ன செய்வது?
“காத்தய்யா எங்கே! இப்பக் குரல் கொடுத்தாரே ?” “ஸ்டேட் பாங்க் போயிருக்காரு’ன்னு பதில் கிடைக்கும்.
நான் அப்படி நினைத்துக்கொள்ள வேண்டியதுதான். ஒரு நாள் எங்கேயோ நான் ஆபீஸ் வேளையில், ஆபீஸ் ஜோலியாய் வெளியே போய் வருகையில், காத்தனார் அவரது தென்னங்கொல்லையில் கமலை ஏத்தம் இறைத் துக் கொண்டிருக்கிறார். காக்கி யூனிபாரம் ஒரு தென்னை மட்டையில் தொங்குது. எனக்குக் கோபம் மூக்கைப் பொத்துக் கொண்டு வந்தது. வரலாமா? அது என் தப்புதான், கோபம் என்னுடையதுதானே! ஆபீசுக்கு, வரலாம்; மணியை எட்டுத்தரம் அடிக்கலாம். ‘அவன் எங்கே எங்கே’ என்று எரிந்து விழலாம். வந்தவுடன் ஒரு ‘மெமோ’ கொடுக்கலாம். அவ்வளவு தானே ! ‘மகன்’ கிணுங்கினால்தானே ! வாங்கிக்கொண்டு, ஐயா நான் உங்க மகன்மாதிரி; ‘மெமோ’ வில் என்ன கேட்டுருக்கீய, படிச்சு காட்டுஹ. பதிலையும் நீங்களே எழுதிக் கொடுங்க.”
காத்தனார் அப்பளக் குடுமியிலிருந்து இங்கே உத்யோ கத்துக்கு வந்துவிட்டார். அன்னியிலேந்து அவர் நடத் தும் அமுலை நேத்து வந்த நான் மாத்த முடியுமா? மாத்த ஆசைப்படலாமாங்கறதே இப்பத்தானே தெரியுது. மத்தபடி அவரைப்போல் பண்பும் இங்கிதமும் தெரிந்தவர் இங்கேயாரும் இல்லை என்றே நான் சொல்லுவேன்- அவர் ஏதோ கணக்கு வெச்சிருக்கார். தீபாவளிக்கு ஒரு பெரிய ஆப்பிள். பொங்கலுக்கு எம் பொண்ணுக்கு, ஆச்சிக்கு தனித்தனி மண்டையாகத் தேங்காய், வெல்லம். மஞ்சள் கொத்து, வெற்றிலை.
“காத்தையா ஈதெல்லாம் ஏதுக்கு?”
“ஐயா, நான் உங்க மகன் மாதிரி. இதைக் காரணம் காட்டி யாரேனும் பெட்டிசன் போட்டா நான் பாத்துக்கிறேன். நான் உங்களுக்கு லஞ்சம் கொடுக்க நீங்கள் நல்லதோ, கெட்டதோ எனக்கு என்ன செய்ய முடியும்?”கட்டப் பாறைக் கேள்வி.
அடஅடே பிள்ளைவாள் வாங்க. எப்போ வந்தீய? எப்படி இதுவரை உங்களை நான் பாக்கல்லே. சீவல் வைச்சிருக்கேயளா? கொடுங்க. உங்ககிட்ட இல்லாமே போமா? மொத மொதல்லே கிணறு வெட்ட லோன் கேக்க வந்தீயளே, அப்போ உங்ககிட்ட தாம்பூலம் வாங்கிப் போட்டுண்டேன். அது மறக்குமா? நீங்க ஜரிகையாட்டம் சீவியிருந்த, அதுவும் எப்படி வெறும் பேனாக் கத்தியிலே, இவ்வளவு ஜோரா?- சீவலைப் பார்த்து மோஹப்பட்டுத் தான் கேட்டேன். நீங்க எச்சரிக்கை செய்தீய. ‘சாமி’ வெறும் பாக்கும் வெச்சிருக்கேன். பச்சைப் பாக்கு ஒரு சமயம்போல எல்லோருக்கும் ஒத்துக்காதுன்னு. ஆனால் நான் துவர்ப்புக்கு ஆசைப்பட்டேன். ஆனால் முதல் வெத்திலையே எப்படி மாருக்குக் கீழ் இறங்காமல் திக்கு முக்காடிப் போச்சு! எதிரே கருப்பண்ண ஆச்சாரி கடை திறந்திருந்ததோ பிழைச்சேன். அ.து பாஷாணம் கலந்ததோ, கணப்புச்சட்டிக் கையை களுவினதோ, இரண்டு முழுங்கு குடிச்சப்புறம்தான் மூச்சு திரும்பித்து.
ஆபத்துக்குத் தோஷமில்லை. சுட்ட பொன்னும் கலந் திருக்குன்னு ஆச்சாரி தைரியம் சொன்னார். நினைப்பிருக்கா?
பிள்ளைவாள், துவர்ப்பும், கசப்பும், எவ்வளவு கிட்டக் கிட்ட பாத்தையளா? அப்போ எங்கே தெரியுது. எல்லாம் முறையாகத்தான் செஞ்சோம். அப்பப்போ ‘வெச்சர்’ நீங்கள் செலவுக்கு காட்டினீய, நானும் ரூல்படி கட்டம் கட்டமாத்தான் பட்டுவாடா பண்ணினேன். ஆனால் கிணத்து வேலையை நான் அப்பப்போ வந்து கவனிக்கல்லே. என்னோட பல ஜோலி திருகு வலியிலே எட்டு மைல் வந்து வந்து எப்படிப் பாக்க? நம்பிக்கை யிலும், ‘குன்சுலேயும் தானே பாதி காரியம் பாத்துக்கிட்டு போகவேண்டியிருக்கு. ஆனால் ஆறு மாதம் பொறுத்து எனக்கு என்னவோ இடது கன்னம் பளிச் பளிச்சுன்னு துடிக்குது. கெட்டியாப் பிடிச்சுக்கறேன். பிடிக்கு அடியிலே வெடுக்’குன்னு உதறுது. அது அது தன் நுட்பத்தைக் காண்பிக்குது. என்ன செய்ய? காரைப் போட்டுக்கிட்டு வந்தேன். செவ்விள நீர் வரவழைக் கிறீங்க. சீவறீங்க. பொக்கறீங்க. இரண்டு கையாலும் ஏந்திக் கொடுக்கறீங்க. ஆனால் கிணத்தைப்பத்தி பேச மாட்டீங்கறீங்க. அதுக்காக என் கன்னம் என்னை விடுதா? காரிலேயே வயல்காட்டுக்குப் போனோம்
ஆனா நீங்க மொதமொதல்லே தோண்டப் போறதா சொன்ன இடத்துலே கிணத்தைக் காணோம். கண்ணைக் கசக்கறேன். கிணத்தைக் காணோம். எனக்கு வயத்துலே புளியைக் கரைச்சுது. அலாவுதீன் அற்புததீபம் தூக்கிப் போயிடுச்சா? அதுதான் சம்சாரி, என் பாவம் பாத்துத் திரும்பக் கொண்டு வந்து வைக்கணும். காவிப்பல்லை நீங்க அப்போ செக்கச்செவேல்னு என்னவா காண்பிச்சீங்க?
“சாமி, கடன் வாங்கின பணத்தை நான் கையாடி உல்லே. ஏற்கெனவே இன்னொரு கிணத்தை ஆழப்படுத் தவும், அகலப்படுத்தவும் அதுலே போட்டிருக்கேன். எதுலே போட்டா என்ன? அந்தக் கிணறு இந்த அஞ்சு வருடத்திலே ஒரு லட்ச ரூவாயை முளுங்கியிருக்கு.
“பத்து வருடத்துக்கு முன்னாடி ஒரு பைராகி சொல் லிட்டுப் போன வார்த்தையை இன்னும் நம்பிக்கிட்டு இருக்கேன். ‘டே கந்தப்பா, உன் கிணத்துலே புதையல் இருக்கு. ஆனால் அதை நான் உனக்குக் காட்டப் போவ தில்லை. உறையைச் சுத்தி ஏதோ ஒரு ஊசி முனையில் உன் கடப்பாறை படக் காத்திருக்குடா ஒரு ஊத்து. அதைத் தட்டினதும் உன் குடும்பத்துக்கு இன்னும் எட்டு தலைமுறைக்கு பாலாய்த்தான் பொங்கப் போவுது. அதைக் கண்டுபிடி! கண்டுபிடி!! கண்டுபிடி!!! கடவுளா யிருந்தால் அவரே உனக்குக் காட்டிக் கொடுப்பார். ஆனால் நாங்கள் கடவுளின் தூதுவர்கள். நாங்கள் கை காட்டியாய்த்தான் நிக்க முடியும். உங்களுக்கு முன்னால் எங்க கண்ணுக்குத் தெரிஞ்சாலும், எங்களுக்கு இஷ்டமா யிருந்தாலும் தண்ணியும் உபயோகமில்லை; புதையலும் பிரயோஜனமில்லை. அதனால் நீயே கண்டுபிடி! கண்டு பிடி!! கண்டுபிடி!!!
“அவர் ஆவேசத்தை என்னில் பொறி வெச்சுட்டுப் போயிட்டாரு. அன்னிலிருந்து கிணத்துக்கும் பசி தீரல்லே. எனக்கும் வேளை வரல்லே. ஆனால் சாமி, இந்தத் தடவை மிளகாய் ஒழுங்கா காச்சால் – குவிண்டால் ஆயிரத்து ஐநூறு தெரியுமில்லே? பாங்க் கடனைப் பத்து தடவை திருப்பலாம்”.
நெறி தவறி நடக்கறவங்களுக்குத்தான் மனசையும் சுருக்க சமாதான பண்ணிக்கவும் முடியுது. நான்தான் கொட்டு கொட்டுன்னு, ராவு இல்லே பகல் இல்லே தப்புப் பண்ணினவன் மாதிரி, மேட்டைப் பாத்து முழிச்சுக்கிட்டு கிடக்கேன்.
“சாமி ஊருக்கு வந்த புதுசிலே முருகன் கோயிலுக்கு விடற துள்ளுக்குட்டியாட்டம்- என்ன சதைப்பிடிப்பா, துடிப்பா, மேனி தக்காளியாட்டம் தகதகன்னு இருப்பார். இங்கு வந்து உடம்பு உடைஞ்சே போயிட்டாரே !” ஏன்யா உடையாது, இந்த மாதிரி கரடியை நாலு மூலையிலும் பிடுங்கினால்? தைைய ஒழுங்கா தலையணையில் சாச்சு எங்கு படுத்தேன்?
சரி இன்னிக்கு செங்கோலைக் கீழே வெச்சாச்சு. இதே நேரம் நாளைக்கு நான் பஜாரிலே நடந்து போறேன் எதிரே எவர்சில்வர் பாத்திரக் கடையிலே நுழையறேன்: ‘ஐயா நாடாரே, மூணு நாளா அதோ அந்த எண்ணெய்க் கிண்ணத்தைப் பார்த்து ஆசைப்பட்டிட்டு இருக்கேன். ஏதோ என்னால் ஒரு சமயமில்லாட்டி ஒரு சமயம் உங்க வியாபாரத்திலே சகாயம் செஞ்சிருப்பேன். சும்மாத்தான் கொடுங்களேன், நேத்திக்கு கேட்டாலஞ்சம். இன்னிக்கு கேக்கறேன் ஆசைமேலே!” நாடார் என்ன பதில் சொல்வார் தெரியுமா? “சாமி, நேத்திக்கு கேட்டிருந்தா கண்டிப்பாக கொடுத்திருப்பேன். எண்ணெய்க் கிண்ணி என்ன? பாய்லரே கொடுக்கலாம்? நாங்களும் அததுக்கு ஒரு கணக்கு வெச்சிருக்கோமில்லே. ஆனால் நீங்க வளைஞ்சே கொடுக்கல்லே. எங்களுக்கு லஞ்சமாக் கொடுக்கத்தான் கட்டுப்படியாகும். ஆனால் ஒரு எண்ணை முட்டை கூட விலையில்லாமல் கொடுக்கக் கட்டுப்படி ஆவாதுங்களே?’
சாமி ஒண்ணு சொல்றேன், நீங்க நாலு போனவங்க. நான் இன்னும் ஊர் எல்லையைத் தாண்டின வனில்லை. உங்களுக்கு இன்னும் தெரியல்லே, எங்களுக்குத் தெரியும். இமயத்திலிருந்து குமரிவரை மனிதனின் அடிப் படை சுபாவம் ஒண்ணேதான். நீங்கதான் தெனாலி ராமன் கதை மாதிரி மாத்தணும்னு பாக்கறீய. அது ஒரு நாளும் நடக்காது. உங்களையே பாத்துக்குங்க. களங்கம் இல்லாதவங்க யாரு? நீங்க வந்ததுக்கு இப்போ ரத்தக் கொதிப்பில் உங்க முகத்தில், உடம்பில் எத்தனைக் கருப் புப்புள்ளி கூடி இருக்கு. நிறத்துக்கே இப்படி ஆச்சுன்னா நெஞ்சில கறுப்பை அறிய நீங்களும் நானும் யாரு?
சரி. எங்கேயோ ஆரம்பிச்சு எங்கெங்கேயோ போய் இங்கே வந்து நின்னுட்டேன். இல்லை நானா நிறுத்தி கிட்டேன். நின்னுடணுமில்லே! ஐயா நான் போன போக்கில் பசும்புல்லை மேஞ்சிருப்பேன். பயிர்லே வாய் வெச்சிருப்பேன். பழையதுப் பானையை முட்டி உடைச் சிருப்பேன். என்னிடம் கறந்து நீங்க காய்ச்சி வெச்ச பாலை நானே குடிச்சிருப்பேன். நான் கோவில் மாடு.
இனிமே நீங்க எனக்கு மாலை போடறது யோசனை தானே. சில முகங்கள் சுணங்கிப் போச்சு. அதெல்லாம் என் சொல்சுட்ட முகங்களா? உங்க மேலே எனக்கு கோபம்னு நீங்க கோவப்படாதீங்க. நான் இப்போ பேசினதெல்லாம் இந்த மூணு வருடமா நெஞ்சில், புழுதி ஏறி மக்கிப்போன ஏடுகளை, ஓலைச் சுவடுகளை தட்டி கொட்டித் திரும்ப அடுக்கிக்கிட்ட மாதிரி. அவ்வளவுதான். மறுபடியும் புழுதி, மறுபடியும் மக்கல் மறுபடியும் அடுக் கல். என்னால் மாலை இல்லாம இருக்க முடியும். சுவடி இல்லாம இருக்க முடியாது. சுவடி தான் சுவடு காட்டி. இந்த வயசில் சுவடுகாட்டும் சுவடிதான் எனக்குத் துணை.
மாலையில் வண்டு மொய்க்குது. வதங்கிப் போறதுக்கு முன்னாடி லக்ஷ்மி படத்துக்காவது போடுங்க. பிறகு உங்க இஷ்டம். ஆண்டவன் அயனைத் தேடுவதானால் யாருக்குக் கட்டும். இப்படித்தான் வாடின பூ, வதங்கின பழம், காய்ஞ்ச சருகு. அவனுக்கு, இனி என் மாதிரிக்குப் பிழைப்பு, சரி. எல்லோருக்கும் போய் வாரேன்.
பிள்ளைவாள் அந்தச் சீவலை தள்ளுங்களேன் இந்தப் பக்கம்!
– த்வனி (சிறுகதைகள்), இரண்டாம் பதிப்பு: செப்டம்பர் 1990, ஐந்திணைப் பதிப்பகம், சென்னை.