பிரார்த்தனை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 205 
 
 

(1976 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காலம் பங்கான் தொழிற்சாலையிலிருந்து பீறிட்ட அலறலில் என் சுயமான நித்திரைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு, படுக்கையிலிருந்து துள்ளி எழுகிறேன். விடிகாலை விழிப்பினுடே அன்றைய கடமையுணர்வு உந்தித் தள்ளுகிறது. வியாபா ரத்திற்குப் போக வேண்டும் என்ற நினைவு இதயத்தை நிறைக்க வாஞ்சையோடு எனது டேஸ்ட், கரத்தையை வெறிக்கிறேன். இந்தத் தள்ளுவண்டியும். அன்பு மனைவியும் தான் என் இன்ப உலகம். பகல் பொழுது தள்ளுவண்டியோடு பாதையில் கழிந்து விடும். இரவுப் பொழுதோ…?

இந்தத் தள்ளுவண்டியின் மீது எனக்கு அதீத விருப்பம். ஒரு நாளைக்குப் பலதடவை என்கைகளால் அது துடைக்கப் பட்டு, பளிச்செனத் துலங்கும். இதன் ஆதரவில் தானே நான் யாருக்கும் அடிமையின்றி தன்மானத்தோடு வாழ்ந்து கொண்டி ருக்கிறேன். முதலாளிகளின் இரக்கமற்ற கெடுபிடிகளுக்கு ஈடு கொடுத்து ஹோட்டல்களில், எருமை மாடாய், உழைத்த காலங்கள் மனதில் தோன்றி விழிகளை நனைக்கச் செய்கின்றன.

கடலை, வண்டி தள்ளுவதால் என்னிடம் விஷயம் இல்லை என்று யாரும் அர்த்தம் கொள்வது தப்பு! எனக்கு அரசியல், இலக்கியம் என்று பல விஷயங்கள் புரியும். நடைபாதையில் என் முன்னால் நிழலாய் விரியும். எண்ணி றைந்த காட்சிகளை, அற்பமான மனித ஊடுருவல்களைச் சொற்களாக்கி உருவம் கொடுத்திருந்தால், நானும் எப்போதோ ஒரு எழுத்தாளன் ஆகியிருப்பேன். மற்றவர்களின் விவகாரங்க ளுக்கு உருவம் கொடுப்பது கிடக்கட்டும். என்னுடைய பிரச்சி னைகளுக்கே தீர்வு காண முடியாது நான் தவிக்கும் போது…

அப்படியென்ன தலை போகிற பிரச்சினை?

வாழ்க்கையென்பது – பிரச்சினை – பிரச்சினைகளே வாழ்க்கை. பிரச்சினைகளும் தேவைகளும் இல்லாத வாழ்க்கை எங்கிருக்கிறது? இந்த நடைப்பாதை அனுபவங்களை இறை மீட்டிப் பார்ப்பதே ஒரு சுவையான விவகாரம் தான். என் மனைவி அவள் கைப்படவே, செய்த பல நிறங்களிலான இனிப்புப் பண்டங்களை, என் முன் கொண்டு வந்து வைக்கிறாள்.

எப்போதும் அதிகம் பேசாமல் மௌனமாகச் சிந்திக்கும் சுபாவம் எனக்கு. என் குணமறிந்து அவளும் என்னோடு அப்படித்தான் நடந்து கொள்வாள். அவற்றை வாங்கி அடுக் கும் சாக்கில், அரைக் கண்ணால் அவளை நோட்டமிடுகிறேன். பருவத்தின் போதையேறிய கட்டுடல், அவளுக்கு. காலைப் பொழுதானபடியால், உடையும் கேசமும் கலைந்திருந்தன. அலங்கராமில்லாமலே, அந்தத் தோற்றத்தில் அபரிமிதமான பொலிவும் சௌந்தரியத்தின் கவர்ச்சியும், குடிகொண்டிருந் தது. வேலையை எல்லாம் ஒரு பக்கத்தில் போட்டுவிட்டு, அவளையே பார்த்துக் கொண்டிருக்கலாம் என்று மனம் தவிக்கிறது.

மனைவியைப் பார்த்து இப்படி பலரறிய எட்டமான வர்ணனையா? என்று யாரும் மண்டையை குழப்பிக் கொள்ள வேண்டாம். இராமாயணத்தில் சீதையின் அழகை பக்கம் பக்கமாக கம்பர் வர்ணிக்கும் போது…? இந்த டேஸ்ட் கடலை, விற்கும் ரஹீம், ஆபிதாவின் அழகை வர்ணிப்பதால், கிழக்கு வங்காளப் புயல், ஒன்றும், ஈழ நாட்டுக்குள் சீறிக்கொண்டு வந்து விடாது.

அந்த அடர்ந்த புருவங்களுக்குக் கீழே துள்ளும் பெரிய கண்களில் மட்டும், எப்போதுமே ஒரு நித்தியமான ஏக்கம். அந்த ஏக்கத்தின் தாற்பரியத்தில் விகசிக்கும் சோக உணர்ச்சியை என்னால் உணர முடிகிறது. காரணம் நான் மனிதன். அவள் கொடுத்த தேனீர் இதயத்தை சூடேற்றிச் சுறுசுறுப்பாக்குகிறது. அந்த ஏக்கமிழையும் விழிகளுக்குள் மகிழ்ச்சிப் பொய்கை துள்ளாதா என்ற ஆவலில், அவளைத் தோல்வியோடு வெறிக்கிறேன்.

“இண்டைக் கெண்டாலும் நேரத்தோட யாவாரத்த முடிச் சிட்டு, நான் சொன்ன விஷயத்தை விசாரிச்சிட்டு வாங்க!” வார்த்தைகளில் வாஞ்சை குழைந்தன. புறப்படும்போது நறுக் கென்று இதை ஞாபகமூட்டுவாள் என்று நான் எதிர்பார்க்க வில்லை . – ”எவ்வளவு தான் ஆசையா ஈர்ந்தாலும், புள்ள ஒன்ட எடுத்து வளர்கிறதாலே எங்கட கல்பு நிறைஞ்சுடுமா ஆபிதா?” அவள் மௌனத்தோடு புன்முறுவலித்தாள். இறைநாமம் கூறிய வண்டியை பாதைக்கு நகர்த்துகிறேன். சே! தேனீர் குடித்த வாய், பழக்கப்பட்ட எதையோ கேட்கிறது. சட்டைப் பாக்கெட்டில் கையை விட்டு, ஒரு ஜனதா பீடியை, எடுத்துப் பற்றவைத்து நெஞ்சார புகையை இழுத்து வெளியே ஊதுகி றேன். கவலைகளையும் இப்படி ஊதிவிட முடியுமென்றால்…?

என் வண்டி புறப்படத் தயாராகி விட்டது. வண்டி மட்டுமா நானுந்தான். அது தெரிந்து அவள் புடவைத் தலைப்பை தலையிலிட்டவாறு ‘அல்லாட காவல்!’ என்று விடை கூறுகிறாள். அந்த ஏக்கம் நிறைந்த விழிகள், அந்த ஏக்கத்தின் உட்பொருள், எளிதில் திருப்தி கொண்டு விடுவதில்லை. அது உருகிக் குழைந்து என்னைத் தாய்மையடையச் செய்யுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தது.

ஆபிதாவின் நிறைவேற மறுக்கும் அந்த ஆசை எனக்கு மட்டும் இல்லையா? அன்று அழகிய ஒரு சிறு குழந்தையோடு பஸ்தரிப்பில் கடலை வாங்க வந்தாளே, ஒரு சிங்களப் பெண். அந்தக் குழந்தையின் கன்னத்தைச் செல்லமாகத் தட்டி கொஞ்சி விட்டு, அந்த பெண்ணை ஆபிதாவாகக் கற்பனை செய்து மகிழ்ந்தேனே… அந்தக் கணம் என் விழிகளைக் கலங்க வைத்ததே. அது இன்னும் நினைவுத் திரையிலிருந்து நீங்க மறுக்கிறது.

காலை வியாபாரம் பெரும்பாலும் கள்ளுக்கடை அருகில் தான். வண்டிக்குள் வைத்திருந்த சிறு பீங்கானில் சில்லறை நிறைகின்றன. நோட்டுக்கள் வந்து சேரப் பொழுது சாயலாம்.

‘தலுபொத்த’ கள்ளுக்கடை பக்கத்தில் அடிக்கடி திக்விஜயம் செய்யும், பட்டானி, என்ற மலையாளக் கிழவனை, அறியாதவர்கள் மிகச் சிலரே. அவர் ஓசியில் கள்ளடித்து விட்டு கடனில் கடலை கொரிக்க வருவார். அவரது கடன்கள் நாளுக்கு நாள் நீண்டு கொண்டு போனாலும், நான் அதட்டிக் கேட்பதில்லை. அவர் ஒரு வாழ்ந்து கெட்ட, ஆத்மா என்பதால் சற்று விட்டுப் பிடிக்கிறேன்.

“நிங்களுக்கு ஞான் எத்தர, காசு தரான் உள்ளது? வருன்த ஆழ்ச்சா ஒக்கத் தராம்’. அவரது இந்தப் பீடிகை கடனை மேலும் ஏற்றவே அல்லாது வேறில்லை என்பது எனது அனுபவம். எனக்குத் தெரிந்த மலையாளத்தில்,

‘கிட்டும்பலு தந்தா மதி, பட்டானி! செறிய கணக்கல்லே உள்ளது’ என்று அவர் தலையில் ஐஸ் வைப்பேன். கேரளாவில் அவரது குடும்பம் மனைவி, மக்கள் பற்றி, கிழவர் அடிக்கடி கூறுவார். மனதின் வலிகளை மற்றவர்களிடம் சொன்னால் வேதனை குறையலாம். மணமாகி ஐந்தாண்டுகள் ஆகியும் குழந்தை இல்லேயே என்ற எனது ஊமைக் காயத்தை, பட்டானியிடம் புட்டு வைப்பதால் எனது ஆதங்கம் குறையாதா என்று எண்ணினேன்.

எனது அரைகுறை மலையாள நாவன்மையில் எனது காயங்களை பட்டானி புரிந்து கொண்டார்.

‘ஆ – விஷயம், மனுஷன்டே கையில் இல்லல்லோ . ஈஸ்வரன் விஜாரித்தால், சாதிக்கான் வையாதது ஈ லோகத்தில் ஏதெங்கிலும் உண்டோ?’

தலுபொத்த ஓசிக் கள்ளின் மூலம் உந்தியெழுப்பப் பட்ட தத்துவார்த்தத்தை, பொட்டென உதிர்த்து விட்டு, என் மூலம் பெற்ற பொரிக் கடலையை நறுக்கென கொரித்தார். கிழவனின் வார்த்தைகளில் எனக்கு முரண்பாடு எதுவுமில்லை. இருந்தால் இறைவா எனக்கொரு வாரிசைத் தந்தருள் என்று ஐவேளை தொழுகையின் போதும் மானசீகமாகப் பிரார்த்திப்பேனா?

நீண்ட தூரம் சுற்றியடிக்க வேண்டும் என்ற உந்துதலில் சிலாபம் வீதி வழியாக பெரியமுள்ளைச் சந்தியைத் தாண்டி, நகருகிறது எனது தள்ளுவண்டி. சந்தியில் புதிய ரேஸ் பரம்ப ரையினருக்குள். ஏதோ ஒரு குதிரையின், நோவெயர், பற்றிய வாக்குவாதம் உச்சஸ்தாயியில் ஒலித்து, என் காதுகளுக்குள் பச்சை மட்டையால் அடிப்பதைப் போல் உறைத்தது.

பகல் பதினொரு மணி தாண்டி விட்டது. எரிக்கும் – வெய்யிலில், நீர்கொழும்பு புதிய ரெஸ்ட் ஹவுஸ்ஸை அடுத்த பாதையில் திரும்பி, மீபுர, தியேட்டர் பக்கம் எனது நடை தொடர்கிறது. தூரத்தில் கடற்கரை மணலில் கண்ணாடித் துகள்கள் ஆயிரமாயிரம் மின்னுவதைப் போன்றதொரு பிரமை.

தூரத்தில், கடற்கரையில், மீனவர்களின் மகிழச்சிக்குரிய – கவலைக் குரிய அர்த்தமுள்ள – அர்த்தமற்ற – கூப்பாடுகள் – அந்த இடத்தின் தனித்துவத்தையும், மீறிப் பரவலாகக் கிளம்புகின்றன. வலையில் இருந்து கூடைக்கு எடுத்துப் போகும் மீன்களில், தங்கள் சகல கவனத்தையும் செலுத்திய காக்கைகள். அந்தரத்தில் வீர்ரெனப் பறப்பதும், பின், சக்கர வட்டத்தில், கட்டுமரங்களில் அமர்வதும், புதுமையான, ஆனால், பழகிப்போன சுவாரஸ்யமிக்க காட்சி.

அன்று பகல் காட்சி இல்லாத படியால், மீபுர தியேட்டர் ஆளரவமற்று வெறுமை தட்டிப்போய் கிடக்கிறது. அந்தத் தனிமைக்கு ஒரு துணை போல ஒரு இவள், அந்த அறுந்து போன கம்பிவேலிக்குப் பக்கத்தில் இருந்து பிரபஞ்சத்தையே விலைக்கு வாங்கிவிட முற்படும் படியான, பார்வையுடன் நின்று கொண்டிருந்தாள். பின்னால் அதையொட்டிய, செம் மண் பாதையில் சில விடலைக் குஞ்சுகள் விசிலடித்துக் கொண்டு வந்தன. நான் என் பார்வையை கொட்டுவா பிட்டனி, பக்கம் திரும்பினேன். தூரத்தில் பெட்டை நாயைச் சுற்றி பல ஆண் நாய்கள் வட்டமிட்டுக் கொண்டிருந்தன.

அதில் ஒன்று, சந்தோஷ மிகுதியால் அல்லது பொறுமை – யின்மையால் ஊளையிட்டது. என்கைகால்கள் குத்தி வலிக்க ஆரம்பித்தன. சோர்வோடு சில்லறைகளை எண்ணுகிறேன். ஒரு குறிப்பிட்ட தொகைக்கு – இன்னும் கொஞ்சமே குறைவு. முன்னக்கரை பாலத்தின் பக்கமாகச் சென்று திரும்பி, மறுபடியும் டவுனுக்குள், பிரவேசித்து, கடற்கரை வீதிவழியாக குடாப்பாடு சந்தியால் அபயசிங்கபுர-த்தில் இருக்கும் எனது வீட் டிற்கு வந்து சேர, துண்டு விழும் சொட்சமும் சேர்ந்து விடும்.

அன்றையப் பொழுது எப்போதும் போல் தான் விடிந்தது. ஆனால் ஒரு புதுமையை உள்ளடக்கிக் கொண்டு – எப்போதும் போல் அன்றும், என் தலைமாட்டுக்கு கோப்பி வரும் என்று, விழித்தும் கண்ணை மூடிக்கொண்டிருந்த, எனக்கு ஏமாற்றம் காத்திருந்தது.

அவள் படுத்திருந்தபடியே வாந்தி எடுத்துக் கொண்டிருந் தாள். அந்தச் சப்தம், என் விடிகாலை அமைதியைக் குலைத்தது.

காலம் உப்பாகக் கரைகிறது.

நான் என் நடைபாதை இன்பத்தை, சில்லறை எண்ணி வாழ்வை நிர்ணயிக்கும், விஷயத்தை ஒத்திப்போட்டுவிட்டு, அவளை அழைத்துக் கொண்டு டொக்டரிடம் போனேன். டொக்டரைக் காணும் வரையில், பதறிப்போயிருந்த எனக்கு அங்கு, ஜாதிக்க சம்பத் சுவிப்பொன்று கிடைத்ததைப் போன்று மகிழ்ச்சி காத்திருந்தது. நான் வாப்பாவாக போகிறேனாம்! இன்னும் சொல்லப் போனால் என் ஆபீதா தாயாகப் போகிறா ளாம். என்ற சேதி அறிந்து துள்ளிக் குதிக்கிறேன். அவள், இது காறும் கவிந்திருந்த சோக மூட்டம் கலைத்து, ‘மகிழ்ச்சிப் பொலிவில் விழிகளை இதமாகத் திறந்தாள். மாதங்கள் ஜம்போ ஜெட்டாய் விரைந்தன.

அன்றைய இரவு அவளுக்கு வலி கண்டது. நான் சிறுகச் சிறுக சேமித்த பணத்தோடு அவளை நர்ஸிங் ஹோமில் கொண்டு போய்ச் சேர்க்கிறேன். குழந்தை ஆணா – பெண்ணா என்றறிய குட்டிபோட்ட பூனையாய் நர்ஸிங் ஹோம் வராந்தா வில் உலாவுகிறேன்.

சில கணங்களில் டொக்டர் வந்து சொன்ன சேதி என் தலையில் இரும்பால் அடிப்பதைப் போன்றிருந்தது.

என் மனைவி ஒரே சூலில், மூன்று பெண் குழந்தைகளைப் பெற்று விட்டாளாம்.

இறைவன் இந்த விஷயத்தில் மட்டும்தானா தாராள மனப்பான்மையில் நடந்து கொள்ள வேண்டும்?

– 1976 – மல்லிகை நீர்கொழும்பு மலர் – மீறல்கள், மல்லிகைப் பந்தல் வெளியீடு, முதற்பதிப்பு: நவம்பர் 1996

பேராசிரியர் எம்.எஸ்.எம் அனஸ் - 12 May 2013 மு.பஷீரின் ‘இது நித்தியம்’ என்ற சிறுகதைத் தொகுதி அவரது நாலாவது சிறுகதைத் தொகுதியாக அவரது சொந்த கல்ஒழுவைக் கிராமத்தில் வெளியிடப்படுவது இலக்கிய உலகுக்கும் கல்ஒழுவைக் கிராமத்திற்கும் மறக்க முடியாத வரலாற்று நிகழ்வாகும். ஏற்கனவே மீறல்கள் (1996), தலைமுறை இடைவெளி (2003), நிஜங்களின் வலி (2005) என்று ஒரு சீரான இடைவெளியில் அவரது தொகுப்புக்கள் வெளிவந்து 4வது வெளியீடாக ‘இது நித்தியம்’…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *