பிராயச்சித்தம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 10, 2024
பார்வையிட்டோர்: 1,262 
 
 

(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

உச்சி வெயில், அவள் நடுக்கூடத்தில் படுத்திருந்தாள். வாசற்புறம் மூங்கில் கவான் மேல் படர்ந்த கொடியின் இலை சந்துகளிலும் அங்கிருந்து நேர-அதுதான் மாம்பலம் வீடு களுக்கே ஓர் அந்தரங்கம், தனிமை கிடையாதே, ரயில் வண்டி மாதிரிதானே – கொல்லைப்புறத்தில் யானைக் காதுகள் போல் ஆடும் வாழையிலைகளின் பச்சையிலும் கானல் கண கணத்தது, 

கொல்லை ரேழியில் இரண்டு அம்மாளும் காலை நீட்டி விட்டார்கள். அங்கு வாழை வழி தென்னை வழி வடி கட்டி வரும் தென்றல் ‘ஜில்’லாகி மூடிய இமைகளின் உட்புறத்தின் எரிச்சலையும் நெற்றி வேர்வையையும் ஒற்றி எடுத்தது. 

மாதம் முதிர முதிர, தூக்கம் அறவே கெட்டுப் போச்சு, இரவு முழுதும் படுக்கையில் புரண்டு புரண்டு விடி நேரத்துக்கு மிளகாயைத் தீற்றினாற்போல் இந்தக் கண்ணெரிச்சல்தான் மிச்சம். பெற்றவள் என்னதான் தனக்கு வாரிசாய்ச் சமைத்து உழைத்தாலும், புக்ககத்தில் இருக்கையில் ஓர் எச்சிலாவது இடாமல், தேய்த்த பாத்திரங்களைக் கழுவி எடுத்து, வடித்து அடுக்காமல் இருக்க முடியுமா? 

“உடம்பை நன்றாய் வளைத்துக் குனிந்து நிமிரு. மாமியார் சொல்றது இப்போ வேம்பாக இருந்தாலும் இடுப்புவலி எடுக்கறப்போ கிழவி நல்லதுக்குத்தான் சொன்னாள்னு மனசு ஒரு தரமேனும் நினைக்காமல் போகாது. நினைக்காவிட்டால் அது மனமில்லை” 

ஐயே, இந்தப் பெரியவர்களின் பெரிய தனமே! சிங்காரச் சொல்லே! 

”ஏற்கெனவே பட்டது போதும், இந்தத் தடவையும் கிராமத்தில் மருத்துவச்சியிடம் மாட்டிக்கொள்ள வேண்டாம். பிரசவம் இங்கேயே நடக்கட்டும்” என்று தனக்கு துணைக்கும் தங்களுக்கு வேலைக்கும் பங்கமில்லாமல், அம்மாவை இங்கு வரவழைத்து விட்டார்கள். 

ஆனால் யார் வந்தால் என்ன? யார் ஆதரவிலும் ஆறுதல் காணும் நிலையை அவள் உதரம் கடந்தாகிவிட்டது. அதன் உலகத்துள் அது அவளை விழுங்கிக் கொண்டிருந்தது, நாள் ஆகஆகப் பெரிதாகிக்கொண்டே வரும் வயிற்றின் கனத்தில் கீழ் அமிழ்ந்து கொண்டேயிருந்தாள். மற்றெது பற்றியும் அக்கறையிழந்தாள். 

இல்லாவிடில், அவளால் ஒரு நிமிஷம் படுத்த இடத்தில் இப்படிக் கிழித்த நாராய்க் கிடக்க முடியுமா? எதையேனும் தட்டிப் பெருக்கி. எடுத்து, அடுக்கிக் கொண்டிருக்க மாட்டாளா? 

“சும்மா துடைச்சிண்டேயிருந்தால், துடைச்சிண்டே போயிடும், துடைக்காதே. உன் சுத்தத்துக்கும் ஒரு அத்து உண்டு” என்று மாமியார் எரிந்து விழுவார். 

“நீ கறுப்பு நாயை வெள்ளை நாயாக்கச் செலவழிக்கும் புளிக்கும் சோப்புக்கும் ஒரு புளியந்தோப்பும் பாக்டரியும்தான் கட்டுப்படியாகும். ஆனால் உன் சுகத்துக்கு ஈடுகொடுக்கும் அந்தஸ்து எனக்கு இல்லையே!” என்று அவள் கணவன் கேலி செய்வான். யார் என்ன வேணுமானாலும் சொல்லிக் கொண்டு போகட்டும் என்று இருந்தவளுக்கு, இப்போது எது எப்படி வேணுமானாலும் போகட்டும் என்ற நிலை வந்து விட்டது. 

அவள் இப்போது வேண்டியதெல்லாம், இமை கொட்டினால் போதும், தன்னை மறந்த நித்திரையில் ஒரு நிமிடமேனும் தன்னை மறந்தால் அதுவே சுகம். 

பஞ்சணையில் தூக்கமில்லை. தூக்கமேதான் பஞ்சணை: மல்லிகைக் குவியலில் புதைவது போன்ற நித்திரையில் ஆழத்தில் அழுந்தும் இன்பக் குளுமை, வெள்ளை விழி மேட்டில் ஊசியால் கிறுக்கினாற் போன்று கிளைபிரிந்து தெறிக்கும் செந்நரம்புக் கொடிகள் தம் எரி குளிர்ந்து படிப்படியாய் அடங்கும் இரவு……. 

தூக்கம்தான் சுவர்க்கம். 

அரை மயக்கத்தில் விழிகள் செருகின. 

வெயிலின் வண்மையில் நேரமே உருகிக் கொண்டிருந்தது. 

குடித்தனக்காரக் குழந்தைகள் மாடியில் ஓடியாடும் ‘திடும் திடும்’. 

அவள் கத்தக் கத்த, அதுகள் கீழே வந்து, பென்சிலிலும், கரிக் கட்டியிலும் சுவரில் கிறுக்கியிருக்கும் கோடுகள். 

சுவரில் படபடக்கும் ஷீட் காலண்டரில் தேதிகள்.

சமையலறையில் பூனை ஏதோ பண்டத்தை உருட்டும் ஒலி. 

கொல்லை ரேழியிலிருந்து கிளம்பி விட்ட மாமியாரின் குறட்டை. 

கிணற்றடியில் பிடிசுவர் மேல், தொட்டி ஜலம் காட்டும் நிழலாட்டம். 

கொலுப் பெட்டியடியில் எலிகள் “கீச் கீச்” சத்தம்.

கொடியில் புடவை, 

உடலுக்கு நேர் காற்றில் மிதக்கும் மின்சார விளக்கு. 

எல்லாம் தம்தம் தனித்தனி அடையாளங்கள் குலைந்து, ஓரே மொத்தாகாரமான உடைப்பின் பெருக்காய்த் தோன்றின. தன்னையழுத்தும் வயிறு கனம் தளர்ந்து, தன் கனமுமிழந்து, இறகு இலேசில் தான் மிதப்பது காற்றிலா தூக்கத்திலா? 

இந்த நெகிழ்ச்சி நிலையில் தான் அந்தச் சத்தம் அவளை எட்டிற்று. 

அது நேரிடையாய் வந்து அவள்மேல் மோதவில்லை. தான் உணர்ந்த இந்தப் பேருருகலின் தொப்புளிலிருந்து இழை நூற்றபடி வெளிவந்து கொண்டேயிருக்கும் ஒரு நுட்ப ஓசை. காற்று தன்னைத்தானே கடைந்து கொள்ளும் ஒரு சுழிப்பு, வெளியேறிய மூச்சு, திரும்ப உள்ளுக்கு வாங்கும் வழி பிசகி, மிரண்டு, திசை தப்பித் தவிப்பதுபோல் ஒரு ரீங்காரம் வீங்கிக்கொண்டே உள் வந்து கூட்டத்தில் கிறுக்கிவட்ட மிட்டது. 

இப்போதெல்லாம் தன்னை அடிக்கடி வருத்தும் வாந்திக்கும் குமட்டலுக்கும் முன்னறிவிப்பாய், கண்ணி ருட்டலில் காதின் ‘குப்படைப்பென்று முதலில் நினைத்தாள். 

இல்லை, தன் வயிறுதான் விரிசல் காண்கிறதா? 

தொப்புளைத் திருகிக்கொண்டு கிளம்பிய பயங்கரத்தில், மயக்கத்திலிருந்து வெடுக்கென விழித்துக் கொண்டாள். 

”ரொய்ஞ்ஞ்ஞ்_” 

அவள் பயத்துடன் அவளைப் பிணைக்க மேலும், மேலும் அவள்மேல் விழும் கயிறுபோல் சத்தம் அவளைச் சுற்றி வளைத்தது. கண்களைக் கசக்கிக்கொண்டு முழு விழிப்பை அடையுமுன் அவளை விட்டகன்று வெளியேறி, எட்ட எட்ட ஓய்ந்து மறைந்தும் போயிற்று. 

சே, என்னகோரமான கனவு! அல்லது நினைவா? உள் பலத்தை வருவித்துக்கொண்டு சோம்பலை உதறி, வெடுக் கென்று எழுந்து, சுறுசுறுப்பாய் அலமாரிச் சாமான்களைத் தட்டிக் கொட்டி அடுக்க ஆரம்பித்தாள். 

வெறும் நினைவேதானானாலும் அதன் அதிர்ச்சி வயிறு நொந்தது. அதிலேயே நினைப்பை ஓடாது தடுக்கக் காரியத் தில் முழு மனத்துடன் முனைந்து விட்டாள். 

சே, என்ன மனுஷனோ, கலைப்பதேதான் கருத்தாய் அது என்ன வீம்போ? இவர் க்ஷவர செட்டைத்தான் அதன் இடத்தில் வைத்திருக்கிறேனே, என் குங்குமம், 

குங்குமம், சாந்து, பவுடர், சீப்பு. கண்ணாடி மூலையில் இவருக்கு என்ன வேலை? எல்லாத்தையும் தலைகுப்புறத் தள்ளி, கீழே சிந்தி மசியைக் கொட்டி – இந்த அக்கிரமம் எங்கே அடுக்கும்? கேட்டால் அதற்குத் தனியா ஒரு கோணல் சிரிப்பு, “அதான் அடுக்காசுரி, நீ இருக்கியே!” என்று ஒரு கிண்டல். 

அம்மாவும் பிள்ளையும் தங்களுக்குள்ளே ஆயிரம் பரிமாறிக் கொள்கிறார்கள், அடுக்கினதைக் கலைக்காமல் ஒழுங்காய் வைக்கக்கூடாதா? ‘வேஷ்டி விளிம்பைச் சேற்றில் தோய்த்துக்கொண்டு வராமல் இருக்கக் கூடாதா?’ என்று பிள்ளையை நான் ஒரு வார்த்தை கேட்டு விடக்கூடாதாம். தூணில் கயிற்றை அணைந்து, அதில் மத்தை மாட்டித் தயிரைக் கடைந்துகொண்டே பொருமுகிறார். 

“ஆமாம், அவன் தங்க ஊசிதான், கண்ணைக் குத்திக்கத் தான் குத்திக்கணும் போ! வா வா, இந்தச் சுத்தத்தின் நேர்த்தியெல்லாம் கையில் ஒண்ணு ஏந்திண்டபின், இந்தக் கண்ணாலே, இந்தச் சதை வளர்ந்த கண்ணாலே பார்க்காமலா போகப் போறேன்! என்னை இன்னும் ரேழியில் தூக்கிப் போட்டு விடவில்லை. அதுக்குள்ளே,சந்து முனையில், பாசக் கயிறுடன் யமன் எனக்காகக் காத்துண்டும் இல்லை,” 

“பாரேன், அழுகையா வரது, புஸ்தகங்கள் அத்தனையும் இப்பவே ஒரே மூச்சில் படிச்சு முடிச்சுடறாப் போல் தான் ஒரே தோசைக் கடை-” 

சட்டெனக் கையில் புத்தகங்களை ஏந்தினபடி, அடுக்கலில் தடைப்பட்டு நின்றேன். அலமாரிக் கூரையில் சுவர்கள் முட்டு மூலையில் மண் கூடு கட்டியிருந்தது. 

செவி ஆவி பறந்தது. கையில் என்ன கிடைத்ததென்று கூடப் பார்க்கவில்லை. அது கோணி ஊசியோ,கொண்டை ஊசியோ, நீள ஆணியோ, ஒடிசல் கம்பியோ- ஆத்திரத் துடன் சுரண்டி, ஒரு துண்டுக் காகிதத்துள் தள்ளி. வாசலுக்குக் கொண்டு போனாள். அளளுக்கென்றே காத்திருந்தாற் போல் எதிர்க் காற்று, திட்டாய்க் கிளம்பி, கைக் காகிதத்தைப் பிடுங்கி அவள் மேலேயே கேலியில் வீசியிறைத்தது. 

அருவருப்பில் உடல் குலுங்கிற்று. கண்ணைக் கசக்கிக் கொண்டு நின்றாள். விழியோரங்களில் கோபக் கண்ணீர் உறுத்திற்று. கோபம், அவமானம். அலுப்பு. யார் மேலும் எதன் மேலும் நியாயமற்ற, பயனற்ற சீற்றம் எல்லாம் ஒருங்காய் அவளை அழுத்தின. 

இப்படிக் கையாலாகாமல் போய்விட்டேனென்று காற்றுக்குக்கூட எளக்காரமாய் இருக்கிறேன். நான் யாருக்குத்தான் மதிப்பு? 

ஆனால் இந்தக் கீழ் வாடைக் காற்றுக்கு இன்று என்ன தான் குஷியோ? மேலும் மேலும் அவள் மேல் அலை மோதிற்று, துகில் உடலின் மேடு பள்ளங்களில், சிதறிய முகில்போல் ஓட்டிக் கொண்டது. கூந்தல் கலைந்து நெற்றி ஓரங்களிலிருந்து பிரிகள் தப்பி முகத்துள் மோதி அலைந்தன. அவைகளை ஒதுக்கக் கைகளைத் தூக்குமுன் காற்று மேலாக்கைத் தோளிலிருந்து பிடுங்கிற்று. 

“யார் என்னைப் பற்றி என்ன வேணுமானாலும் நினைத்துக்கொள்ளுங்கள். எனக்கு யாரைப் பற்றியும் மதிப்பில்லை. எவர் ஆத்திரமும் என்னை ஒண்ணும் பண்ண முடியாது, தெரியுமா? என் இச்சையின் மிச்சம் தான் எல்லாம். தெரிஞ்சுதா? என் சீண்டலை உன்னைக் கொண்டவன்கூடத் தடுக்க முடியாது. தெரிஞ்சுதா? ஹெஹஹே!” என்று கேலியாடிற்று. 

தெருவில் ஒரு கோழி தன் குஞ்சுகள் புடை சூழச் சென்றது. இரை தேடலில் நொடிக்கு நொடி அதன் கழுத்து ஒயிலாய்க் குலுங்கிற்று. அலகு நாசூக்காய்க் குப்பையைக் கிளறிற்று. 

காற்றின் அலைப்பில் ஒன்றிரண்டு குஞ்சுகள் உருண்டன. தாய் அலறி அவைகளை அணைக்கக் சிறகுகளை விரித்தபடி அதன் முன்னிரண்டடியிலிருந்து குலுங்கக் குலுங்க வேகமாக ஓடோடி வந்தது, 

ஒரு நிமிடம் அந்தக் காட்சியில் தன்னை மறந்து நின்றாள். திடீரென்று அவளுக்குத் தோன்றிற்று. தாய்க் கோழியின் சிறகின் மேல் வெறித்த பார்வையை அங்கிருந்து பெயர்க்க முடியவில்லை என்று. உடல் இமை நேரத்தில் பாதி நேரம் அற்புதமான அமைதியில், சொட்டாய்த் துளும்பி நின்றது, அடுத்தாற்போலேயே புயல் புகுந்தது. 

மேலே தண்டவாளம் விழுந்தாற் போன்று வலி, திடீரென்று விலாவை முறித்தது. நிலை வாசலின் மேல் சாய்ந்தபடியே சரிந்து குன்றி இரு கைகளாலும் இடுப்பைப் பிடித்துக்கொண்டாள். உடல் இடுப்புக்கு மேல் இடுப்புப் பூட்டில் மத்துக் கடைந்தது. முகத்தில் வேர்வை கொப்புளித்தது. 

”ரொய்ஞ்ஞ்ஞ்-” 

எட்டு விமானங்கள் அணிவகுத்துப் பறந்தாற் போல், மறுபடியும் காதைப் பொளியும் அதே ரீங்காரம். வலியில் மலர்ந்த விழிகள், மேனோக்கி ஆகாயத்தில் விமானங்களைத் தேடின. ஆனால் அங்கு நீலம்தான் வெறிச்சிட்டுத் துலங்கிற்று. 

மேலும் மேலும் அந்த வெண்கல நாதம் அவள்மேல் கூடு பின்னி அவளை மூடிற்று. 

“அம்மா!” 

தொண்டையில் அலறல் உருக்கூட்ட முழு வேகத்துடன் முயன்றது தான் அறிவாள். உடனேயே நினைவு தப்பி விட்டது. 


தும்பை வெள்ளை தரித்துப் பால் ஒழுகும் சிரிப்புடன் உருவங்கள் வளைய வருகின்றன. அவள் கை நாடியை ஒரு நர்ஸ் பற்றுகிறாள். ஒருத்தி ஒரு பேஸினை’த் தூக்கிக் கொண்டு வருகிறாள். அதனின்று ஆவி பறக்கிறது. இன்னொருத்தி, நீலக் காகிதத்துள் சுருட்டிய பஞ்சுடன் வருகிறாள். 

திடீரென ஒரு வீறல், பக்கத்தறையிலா, தான்தானா வலியின் மீறலில், தன் வலியா பிறர் வலியா, யார் வலி என்றுகூடக் கண்டுகொள்ள முடியவில்லை. இது பூமியின் வீறல், தன்னுள் நேர்ந்து கொண்டிருக்கும் பூகம்பம், இதில் நான் உயிரோடிருக்கிறேனா செத்து விட்டேனா? செத்து விட்டால் எங்கிருக்கிறேன்! மறுபடியும் அதைத் திறந்த வாயி லிருந்து அவள் கூந்தலைப் பிடுங்கிக்கொண்டு “வ்றீச்’சென்று ஒரு புதுக் குரல் கிளம்பியது, 

”இதோ’ கண்ணைத் திறந்து பாரம்மா! ஆணாய்த் தான் பெத்துக்கிட்டே போ! தொடையிலே மச்சம் பாரு ரொம்ப அதிர்ஷ்டம்!” அவள் குழந்தையைப் பார்க்கக்கூட வில்லை. குஞ்சுக் கைசளும் பஞ்சு வாயும் மார்பில் அழுந்தி யதுமே பரவசம் தாங்காது மூர்ச்சையாகி விட்டாள். 

இருவரும் ஒருவரையொருவர் முகம் காணாமலே ஒரு வரில் ஒருவர் கலந்து இருந்தோம். இருவர் பிரிவின் ஒரு மித்த உச்சரிப்பாய் நேர்ந்து விட்டேன், 

திடுக்கென விழித்துக் கொண்டாள். கால்மாட்டில் கட்டிலோடு கட்டிய தொட்டிலில் குழந்தை உறங்கிக் கொண்டிருந்தது. 

செவியண்டை வந்து ஓதியது யார்? உடல் புல்லரித்தது, அச்சொற்கள் நெஞ்சின் அடி வேர்களில் ஓடி ஒளிந்து விளை யாடும் இன்பம் தாங்காது மார்பு மடை யுடைந்து திரும்பத் திரும்பப் பெருக்கெடுத்தது 

மறுநாள் காலையில்தான் அவள் கணவன் காப்பியுடன் வந்தான். அவன் வரும்போது அவள் குழந்தையை அணைத் துக் கொண்டிருந்தாள். அவனைக் கண்டதும் குழந்தையை அவனிடம் பெருமகிழ்ச்சியுடன் நீட்டினாள். அவள் கண்கள் ஒளி வீசின. 

“இருவர் பிரிவின் ஒருமித்த உச்சரிப்பாய் நேர்ந்திருக்கும் நம் செல்வனைப் பாருங்கள். 

“ஏதேது, குழந்தைக்குக் கொசுராய்க் கவிதையும் பிறந்தி ருக்கிறாற் போலிருக்கிறது…!” 

“ஏன், கையில் தான் வாங்குங்களேன்! தொட்டால் ஒட்டிக் கொள்ளுமா? அப்படியே ஒட்டிக் கொண்டாலும் வீட்டுக்குப் போய் ஸ்நானம் பண்ணினால் போகிறது!” அவள் ஏந்தலில் குழந்தை கையையும் காலையும் முறித்து பெரி தாய்க் கோட்டுவாய் விட்டது. பால் மயக்கம். 

அவன் முகத்தில் இலேசாய் அருவருப்பின் ரேகை நெளிந்தது. புழு! புழு! இது வரும் என்று நினைத்தேனா? வரணும் என்று வேண்டினேனா? அவன் கண்கள் திகைப்பில் சலித்தன. 

“நான் தொடும் வேளை வர இன்னும் நாள் இருக்கிறது. என்ன, இதற்கு வாய் இப்பவே உன்னைவிடப் பெரிதாகக் கிழியும் போலிருக்கிறதே…!” 

”ஏன் உங்களுக்கு வாய் சின்னதோ? அந்தக் குடமிளகாய் மூக்கைப் பாருங்களேன். எல்லாம் உங்கள் அச்சுத்தான்!” 

”பின்னென்ன, உன் மாதிரி ஜடாயுவாய் இருக்கணுமா?” 

“என் மூக்குக்கென்ன?” தன் மூக்கை ஒரு தடவை இழுத்துப் பார்த்துக் கொண்டான். ”மூக்குக்கு என்னைக் கொண்டிருந்தால் எல்லாம் நன்றாய்த்தான் இருக்கும்!” 

“அப்போ இப்போ நன்றாயில்லையா?” அவன் முகம் விழுந்தது. தொடப் பிடிக்கவில்லை; ஆனால் தன் மூக்கை அவள் செய்யும் கேலி குழந்தையையும் தாக்குவது பொறுக்க வில்லை, அவன் நெஞ்சு நசிவலைக் கண்டு கொண்டுதானோ என்னவோ அவள் புன்னகை புரிந்தாள். 

“காக்கைக்கும்…..” 

“காக்கை யார்? எப்படியும் நிறம் உன்னைவிட நான் ஒரு மாற்று கூடத்தான்.” 

“இருந்துக்கோங்களேன்! அதுவும் என் பெருமைதான். எப்படியிருந்தால் என்ன? கறுப்போ, சிவப்போ நம்முடையது நமக்கென்று ஒண்ணு…” எனப் பெருமூச்செறிந்தாள். 

அவள் அப்படிச் சொன்னதும் அவன் முகத்தில் ரத்தம் குபுகுபுத்து முகம் செந்தழலாகியது. அவள் கையை அவன் கை பற்றியது, மூச்சுத் திணறிற்று! 

“நான் …நான்…நீ… நீ சின்ன உசிர். பெரிய உசிர், இரண் டில் இப்போ நீதான் எனக்கு முக்கியம்.” 

நெஞ்சத்தின் தந்திகள் எப்படியெல்லாம் அமுங்குகின்றன! என்னென்னவெல்லாம் பேசுகின்றன. 

அவள் மடியில் சின்ன உயிர், அங்கங்களை அசைத்து கழுத்தை முறுக்கிக் கொண்டது. அதன் முகம் ஜன்னலின் வெளிச்சத்துக்குத் திரும்பியது. கறுகறுவென மயிர் அடை யாய் நெற்றியில் வழிந்தது. நிலைபெறாத வெறிச்சிட்ட பார்வையில் இமையின் கீறல்கள் அகன்றன, வெளியே கவிந்த வானத்தின் நீலத்தில் கடுகளவு வழித்துத் தீட்டினாற் போல் விழிகளின் பொறி நீலம், வெளி நீலத்தை அடையா ளம் கண்டு கொண்டதோ என்னவோ குழந்தை அந்தப்பக்கம் திரும்பியபடி உறக்கத்தில் ஆழ்ந்தது. 

உறக்கம், விழிப்பு, சின்ன உயிர், பெரிய உயிர்,நீ, நான், வித்தியாசங்கள் எதுவும் அதற்கு இப்போதைக்குத் தெரியாது. 

அது உறங்குவதைப் பார்த்தபடி இருவரும் தம்மை மறந்தனர். 

அது குழந்தையா? அவர்கள் குழந்தையா? 


யாரோ தோளைப் பிடித்துக் குலுக்கினாற்போல் திடுக் கென விழித்துக் கொண்டாள், தூக்க அயர்வில், வேளையின் மந்தாரம் மாலையா, காலையா தெரியவில்லை. ஆஸ்பத் திரியினின்று வந்தாயிற்று. ஆனால் பெற்ற சிரமம் இன்னும் தீரவில்லை. சுமந்தபோது இழந்த தூக்கம் சுமை இறங்கிய தும் வட்டியோடு வந்தது. 

பூம்ரொய்ஞ்ஞ்ஞ்- 

சுவர்களுக்கும் உயிர் உண்டோ? தனக்கு நரம்புகள் அனைத்தும் அமர்ந்திருக்கும். இந்தச் சமயத்தல்தான் சுவர் களுள் துடிக்கும் அவைகளின் உயிர்த்தாது கேட்குமோ? பூமியின் உயிர்ப்பு. படுக்கையைத் தாண்டி முதுகுத் தண்டில் விறுவிறுப்பதுபோல் தோன்றிற்று. பீதி பற்றிக்கொண்டது. எழுந்து உட்கார்ந்தாள். சத்தம் அலமாரியிலிருந்து வந்தது, அலமாரிக் கூரையில் சுவர்கள் முட்டு மூலையில் மொய்த்துக் கொண்டிருந்த இடத்திலிருந்து அது புறப்பட்டுக் கொண்டி ருந்ததை அப்போதுதான் கண்டாள். பிடரி சிலிர்த்தது, அவளைக் கவ்விய பயத்தின் கண்ணிருளில் அதன் உரு பளிச் சென்று பிதுங்கிற்று. 

பெரிதும் சிறிதுமாய் ஒட்டிக் கொண்ட இரண்டு ரத்தச் சொட்டுக்கள், தலையும் உடலும் சிவப்புக் குரூரத்தில் தெறித்த கணுக்கள், பிய்ந்த சரிகைத் துணுக்குகள் போன்ற சிறகுகளின் கனவேகத்தின் விறைப்பு. அதன் நடுவே அந்த ரத்தில் அது அலை மிதந்தது, வளைந்த கொடுக்குகள் முகத் தினின்று துருத்திக் கொண்டு நின்றன. ரம்பத்தினின்று உதிரும் மரத்தூள் போல் அதன் ரீங்காரம் துருவிக் கொட்டும் தொனிப் பொடி மேலும் மேலும் அவள் மேல் சொரிந்து அவள் உருமழுங்கிய பிண்டமாய்த் தன் இடத்தில் ஒடுங்கினாள், 

மீண்டும் ஒரு சக்கரம் அடித்துவிட்டு, அது ஜன்னல் வழி வெளியே சென்று விட்டது. அந்தச் சத்தம் தூரத்தில் ஓய்ந்த பின்தான், அவளுக்கு உயிர் திரும்பிற்று. 

அலமாரியில் அதற்கென்ன வேலை? தேன் சீசாவை மூட மறந்து விட்டேனா? 

எழுந்து பார்த்தபின்தான் தெரிந்தது. அலமாரி மூலை யில் சிரங்கு போல் முடிச்சிட்டுக் கொண்டு மண்கூடு படர்ந்தி ருந்தது. அருவருப்பின் சீற்றம் திகுதிகுவென மண்டைக்குப் பாய்ந்தது. உச்சி மண்டையுள் நரம்புகள் தீய்ந்து கருகும் நெடியில் மூக்கு நுனி துடித்தது. அந்த அருவருப்பைக் காட்டி லும் பயங்கரம் ஒன்று நினைவில் புரண்டது. 

குழந்தை! 

ஒரு காகிதத்தைத் தேடி அலமாரியில் அவர் சாமான்களுடன் அடுக்கியிருக்கும் பேனாக் கத்தியால் நெம்பிப் மண் இலேசில் கழல பெயர்த்து. காகிதத்துள் தள்ளினாள். வில்லை. கெட்டித்துப்போயிருந்தது அடையாளம் அழியும் வரை சுவரை நன்றாய்க் கீறிச் சுரண்டித் தூளையும் காகிதப்தில் சேர்த்தாள். ஜன்னலுக்கு வெளியே கொட்டுகையில் ஜன்னல் சீம்பியில் கையிடித்து கூட்டின் சீள்கள் கீழே சிதறின. அவைகளினூடே ஒரு பச்சைப் புழு நெளிந்தது. வயிற்றைக் குமட்டியது. 

“என்ன பண்ணறே?” 

தூக்கிப் போட்டது. திருட்டில் கையும் களவுமாய் அகப்பட்டுக் கொண்டாற்போல் திருதிருவென விழித்தாள். ஒரு வேளை அலமாரிச் சாமான்களையெல்லாம் நான் இன்னும் தொடக் கூடாதோ? 

“ஒண்ணுமில்லேம்மா. அலமாரியில் செல்லு கட்டியிருந்தது. அதை…”

”செல்லா? குளவிக் கூடுன்னா அது? அட ராமா. என்ன பண்ணினே? அழிச்சூட்டியா?” 

”ஆமாம்!” அழித்தால் என்ன? இந்த வீட்டில் தொட்டதற்கெல்லாம் சாட்சிக் கூண்டுதானா?” கன்னங்கள் குறுகுறுத்தன. 

“ஆமாவா? யாராவது குளவிக் கூட்டைப் போய் அழிப்பாளா? வீட்டில் குளவி கூடு கட்டினால் வூட்டுக்கே நல்லதுன்னு உனக்கு யாரும் சொல்லித் தந்ததில்லையா? கிராமத்திலிருந்துதானே வந்திருக்கே? பேரன் பிறந்தான் கூடவே குளவியும் கட்டியிருக்குன்னு மகிழ்ந்திண்டிருந்தேன். நீ வீட்டுக்கு வந்ததும் வராததுமாய் உன் சுத்தத்தைக் கொண்டாட ஆரம்பிச்சுட்டாயாக்கும் – துடைச்சுப் பெருக்கற சுத்தத்தை!’ 

“சுத்தத்துக்கில்லேம்மா. குழந்தையைக் கொட்டிவிட்டால் என்ன செய்கிறது?” 

“ஏண்டி பெண்ணே! நீ கிராமத்திலிருந்து தானே வந்திருக்கே? உன் ஊரிலே மனிதர்கள் வீட்டில் வாழும் பாம்போடு குடித்தனம் பண்ணல்லியா? அது உன்னை என்ன பண்ணித்து? நாமே நல்லதுக்குப் பிறந்தவாயில்லே, இந்தக் கண் இன்னும் என்னென்ன அக்கிரமங்களைக் காண இருக்கோ? இந்தக் கட்டை, பூச்சி பொட்டிலிருந்து யார் யார் சாபத்தை வாங்கிக் கட்டிக்கணும்னு இருக்கோ-” 

பயம் வயிற்றுக்குள் பனிக்கட்டிபோல் திரியாயிறங்கிற்று. தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை வாரி யிறுகக் கட்டிக் கொண்டாள். அதன் அழுகுரல் அவளுக்குத் தேவையாக இருந்தது. 


அதன் வருகையை வெகு தூரத்திலேயே அறிந்து கொண்டாள், அதன் வருகைக்கு, தீர்ப்பின் விதிப்புக்குக் காத்திருக்கும் கைதி போல் காத்திருந்தாள். 

கதவுகளைத் திறந்து வைத்தால் கூடம், மூடி விட்டால் அறை, அதிலும் மரஸ்கிரீன்’ நிறுத்திப் பாதி யிடம் தடுத்த ஒதுக்கம். குறிப்பிட்ட வேளைகளில் குறிப் பிட்ட உணவு, குடிஜலம்கூட அளந்துதான். தடுத்த இடம் தாண்டி நகர முடியாது. அவள் சிறை தான் இருந்தாள், 

இன்றைக்கென்று விடிவிளக்கு வேறு ‘மக்கர்’ பண்ணிற்று. நாணின் அதிர்வுடன் அது உள் நுழைந்ததும் விளக்கு குப்பென்று அணைந்து போயிற்று. 

கும்மிருள். 

ரீங்காரம் வெள்ளமாய்ப் பெருகி இருளை நிறைத்தது. 

குழந்தை மேல் பலமாய்த் துணியைச் சுற்றி இறுக அணைத்தபடி இருளில் ஓசைச் சுழல் வழியே முகம் திரும்பித் திரும்பி. தான் இழைத்த பழிக்கு என்ன நேரப் போவது என்று அறியாமல், என்ன நேரிடினும் குழந்தையை விட்டுத் தனக்கு என்ன நேரிடினும் நேர்வதற்குக் காத்திருந்தாள். எது நேரிடினும் அது சம்மதமே; நியாயமுமே. அவள், இழைத்த பழியே உருவாய்ப் பிதுங்கி, முகம் கூறிட்டு அவளைத் தேடுகிறது. 

இருளில் கண்கள் தொடர முடியுமா அந்த ஓசையின் வளைவுகளை, வளைவுகளின் நுட்ப அழகுகளை, செவி எப்படிப் பளிச்சென்று பார்க்க முடிகிறது, பருக முடிகிறது! தம்பூரை மீட்டினாற்போன்ற உருகோசையில் நினைவு ஒன்றுபட்டு அந்தத் தேடலின் தவிப்பில் நெஞ்சு முங்கி முங்கி எழுகையில். தன் தன்மையே துவங்கித் தனிப் பரவச மடைந்தாள். தானும் அத்துடன், அதன் தேட லோடிழைந்தாள். 

கோபங்கள். கோபங்களின் அடிவாரமாம் பயம். பயத்தை மறைக்கத் தைரியம், தைரியத்துக்கு அலங்காரமாய்ச் சிரிப்பு, பீதிகள், பொய்மைகள்,சுத்தங்கள், அசுத்தங்கள் அருவருப்புகள் யாவும் தடம் தடமாய்ப் பட்டையுரிந்து. சுற்றி உதிர்ந்த சருகுகளின் நடுவே ஒன்று-ஒருணர்வுதான் நெருப்புத் துண்டாய்த் தனித்து நின்று சூழ்ந்த இருளை எரித்து நெஞ்சுகள் – எங்கென்று தெரியவில்லை – ஏதோ ஓர் இடத்தை – எவ்வளவு  பெரிதென்று தெரியவில்லை,  எவ்வளவோ – பெரிது – ஒளிமயமாகிற்று. 

“பூம்ரொய்ஞ்ஞ்ஞ்”- 

இது தன் கூட்டை இழந்த வெறுங் குளவியின் கூவல் அல்ல. பூமியின் ஆதார சுருதி. தானும் சுற்றிக் கொண்டு, தன்னையும் சுற்றிக்கொண்டு சின்ன உயிர்,பெரிய உயிர், தாயினின்று புழு வரை தான் தாங்கும் எவ்வுயிரும் தன்னோடு சுற்றிக்கொண்டு, தான் தேடுவது இன்னதென்று அறியாத திகைப்பில், பூமியின் ஒயாத இயக்கத்தின் ஏக்கம்,

அந்த படிப் படுகையில் அவள் தேய்ந்ததும் அதற்கென்றே அவளுக்கென்றே காத்திருந்தாற்போல், அங்கிருந்து, அவளிலிருந்து அவளைப் பட்டை யுரித்தாற்போன்று ஒரு வீரல் புறப்பட்டது. 

அலறிப் புடைத்துக்கொண்டு மாமியாரும் தாயாரும் ஓடி வந்தனர். 

மாடியில் ‘திடும் திடும்’. 

அக்கம் பக்கத்தில், எதிரே, வாசலில், கூட்டமாய்க் குரல்கள், யாரோ கூடத்து ‘ஸ்விட்சை’ப் போட்டனர். 

கண்களை இறுக மூடியவாறு. உட்கார்ந்த நிலையிலேயே அவள் உடல் மருள் கண்டாற்போல் ஊஞ்சலாடிற்று. மடியில் குழந்தை நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருந்தான். 

அவள் கணவன் அவளைத் தோளைப் பிடித்து உலுக்கி அதட்டினான். அவனுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது கோபம் கோபமாய் வந்தது. மானம் போகிறது. 

ஆனால் அவள் கனவு கலையவில்லை. அவள் கனவில் அவள் என்ன கண்டாளோ. புன்னகையில் கன்னங்கள் குழிந்தன. முகம் ஒளி வீசி வாய் குழறிற்று. அவளுக்குச் சம்பந்த மற்றவைபோல், தாம் ஒலிப்பட அவளை உபயோகம் கொள்வதுபோல் வார்த்தைகள் வெளிவந்தன, 

“சின்ன உயிராம். பெரிய உயிராம் எல்லாம் பேருயிரின் பரவல்!” 

அவள் வலது கன்னத்தில் முத்திரை பொறித்தாற்போன்று சிவப்பாய் இரண்டு பதிவுகள் தெரிந்தன.

– தயா (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: செப்டம்பர் 1993, வானதி பதிப்பகம், சென்னை.

லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (30 அக்டோபர் 1916 – 30 அக்டோபர் 2007) தமிழ் எழுத்தாளர். இவருடைய முன்னோர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய பெயரை லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பதன் சுருக்கமாக ல.ச.ரா என்ற பெயரில் எழுதிவந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *