பிராயச்சித்தம்

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 24, 2014
பார்வையிட்டோர்: 13,137 
 

எனது மூன்றாவது அக்காவும் திருமணமான ஒரே வருடத்தில் விதவையானபோது எனது மொத்தக் குடும்பமும் மீள முடியாத பெருந்துக்கத்தில் மூழ்கியது. அதிலும் எனது தந்தை சித்த சுவாதீனம் இல்லாதவர் போல், திரும்பத்திரும்ப ஒரே வாக்கியத்தைச் சொல்லிப் புலம்ப ஆரம்பித்தார்.

எங்க அக்காவுக்கு நான் செஞ்ச பாவம், என் பொண்ணுங்க தலைல விழுந்திடுச்சே! சாபத்துக்கு ஆளாயிட்டேனே!

எனக்கு ஒன்றும் புரியவில்லை. எனது அப்பாவிற்கு விசாலம் என்று ஓர் அக்கா இருந்திருக்கிறார். அவரது கணவர் அம்மை கண்டு குளிர்ந்து போக, அக்கால வழக்கப்படி இளம் விதவையாகத் தன் பிறந்த வீட்டிற்கு வந்திருக்கிறார் அத்தை.

வந்த கொஞ்ச நாட்களில் இறந்து போனவரின் அஸ்தியைக் காசியில் கரைத்து விட்டு, ஆற்றில் இறங்கித் தலைமுழுகும் போது கால் இடறிப் பெரும் வெள்ளத்தில் என் அப்பாவின் கண்ணெதிரிலேயே கங்கையோடு கங்கையாகக் கலந்து விட்டாள் விசாலம் அத்தை.

எத்தனை முயன்றும் காப்பாற்ற முடியவில்லை. எத்தனை தேடியும் உடலைக்கூடக் கண்டுபிடிக்க முடியவில்லை. அஸ்தியுடன் சேர்த்து, அக்காவையும் கரைத்து விட்டு வெறுங்கையுடன் வீடு வந்தார் அப்பா.

இதெல்லாம் நானோ, என் மூன்று அக்காக்களோ பிறப்பதற்கு முன், அதாவது முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த கதை. சினிமாவிலும், கதைகளிலும் மட்டுமே நடக்கக்கூடிய ஒரு சம்பவம் எங்கள் வீட்டிலேயே நடந்தது எங்களுக்கெல்லாம் பேராச்சர்யம். இதுதான் விசாலம் அத்தை கதை.

விசாலம் அத்தைக்குப் பிள்ளை குட்டி என்று எந்த வாரிசும் கிடையாது. அவள் கணவன் வீட்டிலிருந்து வந்த ஒண்ணரை வேலி நிலத்தையும், அதாவது முப்பது மா, இன்னும் சரியாகச் சொன்னால், பத்து ஏக்கர் நிலத்தையும் இதுநாள் வரை அப்பாதான் சாகுபடி செய்து வருகிறார்.

அந்த வருமானத்தில்தான் எனது மூன்று அக்காக்களுக்கும் நகை, நட்டுச் செய்து, நல்ல இடங்களில் திருமணமும் செய்து கொடுத்தார். ஆண்டுக்கு ஒருமுறை வீட்டுத் தெய்வத்திற்குப் படைக்கும் போது புதுப்புடவை எடுத்து வைத்து, அந்த அத்தைக்கும் மறக்காமல் கும்பிடுவாள் அம்மா.

யதேச்சையாய் நடைபெற்ற ஒரு விபத்திற்கு, அசம்பாவிதத்திற்கு இத்தனை வருடங்கள் கழித்து எதற்கு, எதையோ முடிச்சுப் போட்டு அப்பா புலம்புகிறார் என்பதைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை.

எனது மூன்று சகோதரிகளுமே பட்டதாரிகள். மூவருமே வேலைக்குச் சென்று கை நிறையச் சம்பாதிப்பவர்கள்தான். மூவரையும் நல்ல நல்ல இடமாய்ப் பார்த்துத்தான் மணமுடித்துக் கொடுத்தோம்.

எனது பெரிய அக்கா கல்யாணமாகி சரியாக முதல் வருடமே திருமண நாளன்று, அவள் கணவன் லாரியில் அடிபட்டு இறந்து போனான். இரண்டாவது அக்காவிற்கு மறு வருடம் திருமணம். அவளது கணவன் பதினோராவது மாதத்திலேயே மார்பு வலி என்று நெஞ்சைப் பிடித்தவன் அடுத்த நிமிடம் பிணமாகி விட்டான்.

இரண்டு பேரும் தத்தம் வீடுகளிலேயே இருக்கிறார்கள். பிறந்த வீட்டிற்கு மூட்டை கட்டிக் கொண்டு வந்து விடவில்லை. அவரவர் உத்தியோகம், அவரவர் சம்பளம். மூன்றாவது அக்காவிற்குத் திருமணம் செய்யவே ரொம்ப யோசித்தார் அப்பா.

நீண்ட தயக்கத்திற்குப் பின், நான்கு ஆண்டுகள் கழித்து திருமணம் செய்து வைத்தோம். திருச்சியில் நல்ல குடும்பம். மாப்பிள்ளை பெரிய படிப்பு, நல்ல உத்தியோகம். ஏழு மாதங்கள் கூட முழுதாய் ஆகவில்லை. மார்கழி மாதம் மூன்றாவது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார் மாப்பிள்ளை.

என்ன காரணம் என்று தெரியவில்லை. வம்பு, சண்டை என்று சிறு பிரச்சனை கூட கணவன் மனைவிக்குள் கிடையாது. பின் எப்படி? நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. கடந்த பத்து நாட்களாக வீடு, வீடாகவே இல்லை. சதா துக்கம் கேட்டு வருபவர்களும், பிலாக்கண ஒலியுமாக சுண்ணாம்புக் காளவாய்க்குள் இருப்பது போல இருக்கிறது. அத்தனை புழுக்கம். அத்தனை வெம்மை.

சின்னக்காவிற்குத் துணையாக அம்மா திருச்சியிலேயே இருக்கிறார். இன்று நானும் அப்பாவும் மட்டும்தான் வீட்டில். வயல், சாகுபடி, தென்னந்தோப்பு, மாடு, கன்று, போர்வெல், வைக்கோல் போர் என்று எல்லாம் போட்டது போட்டபடி. அத்தானின் பதினாறாம் நாள் காரியம் முடிந்துதான் மீண்டும் ஒவ்வொன்றாய்ச் சரிப்படுத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டே வீட்டினுள் நுழைந்தேன். கூடத்து ஊஞ்சலில் உட்கார்ந்து விசாலம் அக்கா சாபம்தான் பலிச்சுடுச்சு என்று தனக்குத்தானே புலம்பிக் கொண்டிருந்தார் அப்பா.

என்னப்பா, இதுக்கு அர்த்தம்? கொஞ்சம் புரியும் படியாத்தான் சொல்லுங்க! என்ன பாவம்? என்ன சாபம்? என்று அவர் தோளை உலுக்கினேன். சுற்றும் முற்றும் பார்த்தார் அப்பா. நல்ல வேளை. துக்கம் கேட்டு இன்று யாரும் வந்து ஒப்பாரி வைக்கவில்லை. சமையல் செய்யும் சுந்தரி அம்மாவும் சமையலை முடித்து விட்டுக் கொல்லைக் கிணற்றுக்குப் போய்விட்டாள். இனி அவள் வருவதற்கு ஒரு மணியோ இரண்டு மணியோ ஆகும்.

அத்தைக்குக் கால் வழுக்கி கங்கைல விழுந்து இறந்ததற்கு நீங்க எப்படிப் பொறுப்பாவீங்க?

ஐயோ, உங்க அத்தை கங்கைல சாகலேடா! என்றார் அப்பா.

பின்ன?

காசில அஸ்தியை நல்லபடியாக் கரைச்சுட்டு, அடுத்து மதுராவுக்குப் போனோம். எங்க அக்காவுக்குக் கோயில், குளம், க்ஷேத்திராடனம்னா ரொம்ப ஆர்வம். மதுரால மூலைக்கு மூலை ஏகப்பட்ட கோயில்கள். உங்க அத்தையோட கவனம் அதுல இருந்தப்போ, என்னோட கவனம் வேறொண்ணுல இருந்துச்சு.

ஊர் முழுக்க விதவைகள். வயதான விதவைகள், நடுத்தர வயது விதவைகள், பால்ய விதவைகள், மொட்டை அடிச்ச விதவைகள், முக்காடு போட்ட விதவைகள். ஐயோ! எங்கே திரும்பினாலும் விதவைகள், விதவைகள். விசாரிச்சப்போதான் தெரிஞ்சுது, கிருஷ்ணன் பிறந்து வாழ்ந்த ஊரில் வந்து இருந்து, அவன் நாமத்தை உச்சரித்தபடியே இறந்து போனால் மோட்சம்னு நம்பிக்கையாம்!

அதனால, விரும்பி வந்தவங்க பாதி, வலுக்கட்டாயமாக் கொண்டு வந்து விடப்பட்டவங்க மீதி. வேற வழியில்லாம வந்தவங்கன்னு எப்படியோ அங்க வந்திடறாங்க. என் புத்திக்கு அப்பதான் அந்தக் கெட்ட எண்ணம் பொறி தட்டுச்சு. அக்கா இனி ஆயுள் முழுக்க எனக்குத் தேவை இல்லாச் சுமை. அவளை இங்கேயே இறக்கி விட்டுட்டா பாரமில்லாம இன்பமா வாழலாம். அவ பேர்ல இருக்கிற ஒன்றரை வேலி நிலம், அவ நகை நட்டு, ஊரில் இருக்கும் பெரிய ஓட்டு வீடு என்று சகலமும் எந்தச் சேதாரமும் இல்லாம எனக்கு வந்துடும்னு என்னென்னமோ தோண, அக்காவப் பார்த்தேன்.

அவ மௌனமா, கண் மூடித் தியானத்தில் இருந்தா. அக்கா நான் போய் சாப்பிட்டுட்டு, அப்படியே டிரெய்ன் டிக்கட்டும், உனக்குச் சாப்பாடும் வாங்கிட்டு வர்றேன். சாப்பிட்டுட்டு நாம ஊருக்குப் போவோம்னு சொன்னேன். என் அக்கா கண் திறக்காமத் தலையாட்டினா. புறப்பட்டு வந்த நான்தான் ரயிலேறித் தனியா ஊர் வந்து, அழுது, புரண்டு புதுக்கதை சொல்லி, சொந்த பந்தத்தை நம்ப வச்சுட்டேன். நான் நெனைச்ச மாதிரியே சொத்துப்பத்து கைக்கு வந்துச்சு. ஆனா, நிம்மதி என்னை விட்டு எப்பவோ போயிடுச்சு.

அக்கா கைல பணம், காசு எதுவும் கிடையாது. படிப்பறிவும், துணிச்சலும், வெளி உலக அனுபவமும் இல்லாதவ. நிர்க்கதியா என்ன பாடு பட்டாளோ! முழுசா நம்பினவளுக்கு, முழுசா துரோகம் பண்ணிட்டேன். அவ நினைச்சிருந்தா, பிச்சை எடுத்தாவது ஊர் வந்து சேர்ந்திருக்கலாம். இந்தப் பாவி முகத்தில் விழிக்கிறது மகா பாவம்னு முடிவு பண்ணிட்டா போலிருக்கு. அங்கயே இருக்காளோ, எங்க இருக்காளோ? இருக்காளோ, இல்லையோ? அப்பா முகத்தைத் துண்டால் மூடிக் கொண்டு தேம்பித் தேம்பி அழுதார். எனக்குப் பிரம்மை பிடித்தது போல் இருந்தது.

அத்தான் காரியம் முடிந்து வீட்டிற்கு வந்தோம். எனக்கு இருப்பாய் இருக்கவில்லை. எதையாவது செய்தால்தான் தீரும் போலிருந்தது. உள்ளுக்குள் சாமியாடிக் கொண்டிருந்தது. அத்தானின் அஸ்தி இருந்த சொம்பைத் தூக்கிக் கொண்டு திரிவேணி சங்கமத்தில் கரைக்கிறேன் என்று புறப்பட்டேன்.

அப்பா செய்த மோசடி பற்றி யாரிடமும் மூச்சு விடவில்லை. யாரும் எதுவும் சொல்லும் மனநிலையில் இல்லை. கல்யாணமாகாத இருபத்தைந்து வயது வாலிபன். வயதுக்கு மீறிய பக்குவத்தோடு நடந்து கொள்வதாகத் தோன்றியிருக்க வேண்டும்.

அப்பா மட்டும் நீயுமா? என்றார்.

பயப்படாதீங்க அப்பா, எந்த அக்காவையும் கூட்டிப் போகலை, நான் மட்டும்தான் போறேன். நீங்க பண்ணின பாவத்துக்குப் பிராயச்சித்தம் பண்ணாமத் திரும்ப வரமாட்டேன்! என்றேன் அவருக்கு மட்டும் கேட்கும்படி. உச்சந்தலையில் ஆணி அறையப்பட்டவர் போல் அப்படியே திகைத்துப் பார்த்தார் அப்பா. நான் புறப்பட்டு விட்டேன். முதலில் பிரவாகமாய் ஓடும் கங்கையில் ஹரிச்சந்திரா காட்டில் அஸ்தியைக் கரைத்து விட்டு, பண்டா கேட்ட தட்சணையைக் கொடுத்து விட்டு, முங்கிக் குளித்து விட்டு மதுரா நோக்கிப் புறப்பட்டேன். அப்பா முகச்சாயலில்தான் அத்தையும் இருந்தாள் அவளது கல்யாணப் புகைப்படத்தில். அது மட்டுமே உள்ள ஒரே ஆதாரம்.

இந்த ஜனவெள்ளத்தில் எப்படித் தேடப் போகிறோம்? தொலைத்த கடுகை சமுத்திரத்தில் தேடுவது போல், ஆகக்கூடிய வேலையா? அப்பா மோசம் செய்த இந்த முப்பத்தாறு ஆண்டுகளில் அந்த ஊர் மாறி இருக்குமா? என்னென்னவோ எண்ணியபடி மதுரா ரயில் நிலையத்தில் இறங்கினேன். சிக்கடிக்கும் வெண்ணெய் நாற்றமும், பான் கறை படிந்த பற்களும் எங்கும் நிறைந்திருந்து, இந்த ஊர் மாறப் போவதில்லை என்பதற்குக் கட்டியங்கூறுவது போல் முதலில் கண்ணில் பட்டது – ஒரு விதவைதான்.

தொடர்ந்து நடக்கும் பொழுது சிமெண்ட் மேடையில், நடைபாதைத் திண்டுகளில், அரசமர நிழலில், படித்துறைப் படிக்கட்டுகளில், சிறுசிறு கோயில் பிரகாரங்களில் என்று எங்கு பார்த்தாலும் கும்பல் கும்பலாய் அவர்கள்தான் தென்பட்டனர். அத்தனையும் சோகம் படிந்த முகங்கள்.

பல நூற்றாண்டு நிராசையும், ஏமாற்றமும், அவமானத்தின் சுவடுகளும், நிராகரிக்கப்பட்ட வலியும் வடுக்களாய்ப் பதிந்த முகங்களை, பிறந்த வீட்டாலும், நம்பிப் புகுந்த வீட்டாலும் வேண்டாம் என்று ஒதுக்கப்பட்டு இங்கே கொண்டு வந்து விடப்பட்ட உச்சபட்ச ஏமாற்றம், ஒவ்வொரு கண்ணிலும் கருவளையங்களாய்ப் பதிந்திருந்தன.

அப்பாவைப் போல ஆயிரம் ஆயிரம் ஆண்கள் செய்த பாவத்திற்கு எப்படி இவர்களிடம் மன்னிப்புக் கோருவது? அத்தனையும் ஒரே மாதிரி முகங்களாய், ஒன்றுக்கொன்று வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாததாய்த் தோன்றியது எனக்கு. எப்பேர்ப்பட்ட இழிவு நடந்திருக்கிறது பெண்மைக்கு? இதைவிடச் சிறுமைப் படுத்த முடியுமா பெண்குலத்தை? அத்தனை பேரையும் நிற்க வைத்து விழுந்து வணங்க வேண்டும் போல் ஆவேசம் தோன்றியது எனக்கு.

ஒவ்வொரு பாதத்திற்கும் பாதபூசை செய்து மன்னிப்புக் கோர வேண்டும். ஏதோ ஓரிடத்தில் யாரோ சப்பாத்தி விநியோகிக்கிறார்கள் என்று கேள்விப்பட்டவுடன் அங்கு இந்தக் கைம்பெண்கள் கூட்டம் முட்டி மோதிக் கையேந்துகிறது. பசி. கோயில் நடையில் பிரசாதத்திற்கு அடிதடி, சத்திர வாசலில் ஒரு கவளம் உணவிற்குத் தள்ளுமுள்ளு. ஒரு பெரிய நகரமே அனாதை ஆசிரமமாகவும், மாபெரும் திறந்தவெளி முதியோர் இல்லம் போலவும் தென்பட்டது.

பசியும், பயமும் எல்லா முகங்களிலும் தென்பட்டன. சாவு ஒன்றுதான் லட்சியம்; இந்த உலகத்தில் இருந்து அவமானப்படுவதை விட, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் கிருஷ்ணன் காலடி சேர்ந்து விட வேண்டும். ஒவ்வொரு உதடும் அதையே முணுமுணுத்துக் கொண்டிருந்தன.

எங்கு திரும்பினாலும் ஒரே காட்சி. ஒரே சோகம் படிந்த முகங்கள். நம்பிக்கை வறண்ட கண்கள். இவற்றில் அத்தையை எப்படி இனம் பிரிப்பது? இன்று இருந்தால் அத்தைக்கு அறுபத்திரண்டு வயது இருக்கும். அதே வயதில் ஆயிரக்கணக்கில் போராடிக் கொண்டிருந்தனர் பெண்கள். வேறு வழி இல்லாமல் வெட்கத்தை விட்ட கைகள், உயிர் வாழும் கடைசி முயற்சியாக யாசித்து நீண்டன.

ஓர் ஆயுளுக்கும் போதுமான சோக ரசம் எங்கும் ததும்பி ஓடியது. அங்குள்ள அத்தனை பேரும் அத்தைகளாகத் தோன்றினர் எனக்கு. இதில் என் அத்தையை மட்டும் தனியாக இனங் காண்பது முடியவே முடியாது என்ற பேருண்மை புரிந்து விட்டது எனக்கு.

நான்கு நாள் அலுக்காத நடையையும் தேடலையும் முடித்துக் கொண்டு தெற்கே போகும் எனது புகைவண்டிக்காகக் காத்திருந்தேன். இந்த ரயில் நிலையத்தில் நின்று செல்லும் அத்தனை ரயில்களும் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான கைம்பெண்களை அகதிகளாய் இவ்வூரில் இறக்கி விட்டு நிற்காமல் ஓடி விடுகின்றன. நான் உட்கார்ந்திருந்த சிமென்ட் திண்டிற்குப் பக்கத்தில், அப்போதுதான் குஜராத்திலிருந்து வந்த ரயில் இறக்கி விட்ட பெண். அவளும் இளம் விதவைதான். மிரண்டு போய் திக்குத் தெரியாமல் நின்றிருந்தாள்.

வைஷாலி, இதுதான் மதுரா. இனிமே இதுதான் உன் ஊர். கிருஷ்ண நாமத்தை ஜெபி. அவர்தான் கதி. உறவு இனி இல்லை. எல்லாம் பகவான்தான் என்று ஓர் ஆணும், பெண்ணும் அவசர கதியில் சொல்லி இறக்கி விட்டு விட்டு அதே ரயிலில் ஓடி ஏறிக் கொண்டனர். எனக்குத் தெரிந்த குஜராத்தியில் யூகிக்க முடிந்த அர்த்தம் இதுதான். அவர்கள் இருவரும் தாய்- தகப்பனா? மாமனார்- மாமியாரா? தெரியவில்லை. வைஷாலி, விசாலி, விசாலம் எல்லாம் ஒன்றுதான்.

மூன்று நாள் ரயில் பயணம் செய்து நான் என் கிராமத்தை அடைந்த பொழுது, இருள் இன்னும் அகலவில்லை. வீட்டு வாசலில் சாணம் தெளித்துக் கொண்டிருந்த அம்மா, வண்டி வந்து நிற்கவும், நிமிர்ந்து பார்த்தாள். ஒற்றைப் பிள்ளை பத்திரமாய் வந்து சேர்ந்ததில் அவளுக்குத் திருப்தி. பின்னாலேயே அப்பா வந்து எட்டிப் பார்த்தார்.

என்ன, அத்தையைக் கண்டு பிடிச்சிட்டியா? என்று அந்தப் பார்வை ஆர்வமுடன் கேட்டது. ம், கண்டு பிடிச்சுட்டேன் என்று ஆமோதிப்பாய்த் தலை அசைத்ததும், அப்பா ஓடிப்போய் வாசல் விளக்கைப் போட்டார். வண்டிக்குள் கை நீட்ட, கரம் பற்றி, வலது காலை பூமியில் அழுத்தி ஊன்றினாள் அப்பெண்.

அம்மா, இவ பேரு வைஷாலி; நம்ம விசாலம் அத்தை போல இருக்கில்ல பேரும், உருவமும்? இனிமே இவதாம்மா உன் மருமக! என்று சொல்லவும், அம்மா நம்பிக்கையுடன் அவள் கரம் பற்றிப் படியில் ஏற்றினாள்.

Print Friendly, PDF & Email

2 thoughts on “பிராயச்சித்தம்

  1. மிகவும் சிறப்பான கதை. வயதில் மூத்தவர்கள் பழமையில் பெருமை கண்டு, மனிதத்தன்மை இல்லாமல் சிலமுறை நடந்தாலும், இளையவர்கள் மாறிக்கொண்டிருப்பது ஆறுதலான விஷயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *